கிட்டுவைக் கொலை செய்வதற்கான எமது திட்டம் தனிநபர் பயங்கரவாதமே
தமிழீழ விடுதலை இயக்கம் (TELO) போராளிகளை கொன்றொழித்து தமிழீழ விடுதலை இயக்கத்தை (TELO) அழித்தொழிப்பதில் "வெற்றி" பெற்றிருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) தமது ஜனநாயக மறுப்பையும் பாசிசத்தன்மை கொண்ட போக்கையும் வெளிப்படுத்திக் கொண்டிருந்த அதேவேளை அத்தகைய செயற்பாடுகளை சமூகத்தின் அனைத்துப் பகுதியினர் மீதும் தொடர்வதை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தனர். ஆனால் ஈழவிடுதலைப் பேராட்டத்தின் மீதும் மக்கள் மீதும் உண்மையான அக்கறை கொண்டவர்களும் ஜனநாயக, முற்போக்கு சக்திகளும் தமிழீழ விடுதலைப் புலிகளின்(LTTE) ஜனநாயக மறுப்புக்கும் பாசிசப் போக்குக்கும் எதிராகப் போராட முன்வந்தனர். தமிழீழ விடுதலை இயக்க (TELO) அழிப்பைக் கண்டித்து ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (EPRLF) யாழ்ப்பாணத்தில் கண்டன ஊர்வலத்தை மேற்கொண்டது. தமிழீழ விடுதலைப் புலிகளின் (LTTE)ஜனநாயக விரோத, மனித உரிமை மீறல்களைக் கண்டித்தும் ஜனநாயகத்தை வலியுறுத்தியும் பல்வேறு அமைப்புக்கள் அறிக்கைகளை வெளியிட்டன. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்குள் தமிழீழ விடுதலைப் புலிகளால் (LTTE) மேற்கொள்ளப்பட்ட அத்துமீறிய செயற்பாடுகளைக் கண்டித்தும், ஜனநாயக விரோதப் போக்கைக் கண்டித்தும் "யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் குழு"வினர் தமது துண்டுப்பிரசுரத்தை வெளியிட்டிருந்தனர்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் (LTTE) அனைத்து ஜனநாயக விரோத செயல்களுக்கும் பாசிசப் போக்குக்கும் எதிராக வெகுஜன போராட்டங்களும் மாணவர் போராட்டங்களும் வெளிப்பட்டுக் கொண்டிருந்தன. ஆனால் ஆயுதபலத்துடன் திகழ்ந்த தமிழீழ விடுதலை இயக்கத்தையே (TELO) அழித்து "வெற்றிக்கொடி" நாட்டிவிட்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு (LTTE) இத்தகைய ஊர்வலங்கள், போராட்டங்கள், அறிக்கைகள் போன்ற வெகுஜனப் போராட்டங்கள் எதுவும் ஒரு பொருட்டாக இருக்கவில்லை. மாறாக, தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE)தமது குறிக்கோளில் - ஜனநாயகத்தை மறுத்தல், தாமல்லாத அனைத்தையும் அழித்தொழித்தல் என்ற குறிக்கோளில் - தமது முழுக்கவனத்தையும் செலுத்தத் தொடங்கியிருந்தனர். ஈழவிடுதலைப் போராட்டத்தில் பெரும் பங்காற்றிக் கொண்டிருந்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் மத்தியிலிருந்து எழுந்துவரும் ஜனநாயக மறுப்புக்கு எதிரான போராட்டத்தை முளையிலேயே கிள்ளி எறிந்து தமது ஆதிக்கத்தைக் கொண்டுவருவதற்கான செயற்பாடுகளில் தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) இறங்கினர்.
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் ஜனநாயகத்திற்கான போராட்டங்களையும், ஜனநாயகம் குறித்த கருத்துக்களையும் கண்டு அச்சம் கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகளால் (LTTE) எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன் மாணவர் போராட்டங்களில் ஈடுபடுவோர் மிரட்டல்களுக்கும் உள்ளானார்கள். ஆனால் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் (LTTE) மிரட்டல்களுக்கும் எச்சரிக்கைகளுக்கும் அஞ்சாமல் தமது போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றனர். யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம் தமக்கு விடுக்கப்படும் ஒரு சவாலாகவே தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) கணித்திருந்தனர்,
ராக்கிங்கில் ஈடுபட்டார்கள் என்ற எவ்வித ஆதாரமுமற்ற கூற்றின் அடிப்படையில் மலையக மற்றும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவர்கள் விசாரணைகள் எதுவுமின்றி தமிழீழ விடுதலைப் புலிகளால் மிக மோசமாகத் தாக்கப்பட்டனர். இத்தாக்குதலுக்குள்ளான மலையக மற்றும் கிழக்கு மாகாண மாணவர்கள் தங்களுக்கு பாதுகாப்பு இல்லாத இவ்வாறான சூழலில் கல்வியைத் தொடர முடியாது என்று அஞ்சி, அவர்கள் தாங்கள் வேறு தென்னிலங்கை வளாகங்களுக்கு மாறிச் செல்வதே பாதுகாப்பானது என மற்றைய மாணவர்களோடு தங்களுக்கு நேர்ந்த கதி பற்றி தெரிவித்தனர். குறிப்பிட்ட மலையக மற்றும் கிழக்கிலங்கை மாணவர்களின் மேல் நடாத்தப்பட்ட இத்தாக்குதலின் விளைவாய் மலையக கிழக்கிலங்கை மாணவர்கள் இடம்மாறி செல்ல வேண்டியதில்லை. அவர்களது கல்வியை அவர்கள் எந்த அச்சமுமின்றி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலேயே தொடர வேண்டும். அது அவர்களது உரிமை. இந்த உரிமைக்காக போராடுவோம் என்று ஏனைய சக மாணவர்கள் அமைத்த குழுவுக்கு தலைமை தாங்கியவர் விஜிதரன். இந்த தாக்குதலுக்குள்ளான யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் சார்பில் அதனை எதிர்த்து நிற்பதற்கு அப்போதிருந்த யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் மன்றம் மறுத்தபடியால் அதற்கு வெளியே கூட்டப்பட்ட மாணவர் போராட்டக் குழுவுக்கு தலைமை தாங்கிய வர்த்தகபீட மாணவனான மட்டக்களப்பைச் சேர்ந்த அருணகிரிநாதன் விஜிதரன் எவருக்கும் தெரியாதவாறு கடத்திச் செல்லப்பட்டிருந்தார்.
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவன் அருணகிரிநாதன் விஜிதரன் கடத்திச் செல்லப்பட்டமையை எதிர்த்துக் கிளம்பிய வெகுஜனப் போராட்டங்கள் எழுச்சி கொண்டு யாழ்ப்பாண குடாநாடெங்கும் பரவின. பொதுமக்கள் கண்டன ஊர்வலங்கள், மறியல் போராட்டங்கள் என தமது எதிர்ப்புக்களை காட்டி யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆதரவாக அணிதிரண்டனர். பாடசாலை மாணவர்கள் மறியல் போராட்டம், ஊர்வலம், வகுப்புக்களைப் பகிஸ்கரித்தல் போன்ற போராட்ட வடிவங்களினூடு தமது எதிர்ப்புக்களை வெளிப்படுத்தி யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் போராட்ட முன்னெடுப்புக்கு மிகுந்த எழுச்சியோடு ஆதரவளித்தனர். பொதுமக்கள், மாணவர்கள், பொதுநிறுவனங்கள், சங்கங்கள் என திரண்ட ஆதரவினால் எழுச்சிபெற்ற இப்போராட்டங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளினதும் (LTTE) ஏனைய ஈழ விடுதலைப் போராட்ட இயக்கங்ளினதும் படுகொலைகள், ஜனநாயக மறுப்புக்கள், கடத்தல், கொள்ளைச் சம்பவங்கள், இயக்க அழிப்புக்கள் போன்ற அனைத்து நடவடிக்கைகளுக்கும் எதிராகவே அமைந்திருந்தன. மக்களின் எழுச்சி கண்டு அச்சம் கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் (LTTE) ஆத்திரம் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்தில் முன்னணியில் இருந்த மாணவர்கள் மரணதண்டனைக்குரியவர்கள் என்ற மிரட்டலை நோக்கி சென்றிருந்தது.
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களால் ஒழுங்கு செய்யப்பட்ட பகிரங்கக் கூட்டத்தில் மட்டக்களப்பிலிருந்து வந்த யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவன் அருணகிரிநாதன் விஜிதரனுடைய பெற்றோர் அனைத்து மாணவர்கள் மத்தியிலும் தமது மகனை விடுவித்துத் தரும்படி மிகவும் தாழ்மையுடனும் மன்றாட்டமாகவும் வேண்டிக் கொண்டனர். யாழ்ப்பாண குடாநாடு முழுவதும் இராணுவப் பிரசன்னமே இல்லாது ஈழ விடுதலைப் போராட்ட இயக்கங்களின் முற்றுமுழுதான கட்டுப்பாட்டில் இருந்தவேளை அருணகிரிநாதன் விஜிதரன் ஈழ விடுதலைப் போராட்ட இயக்கங்களில் ஏதோ ஒன்றினால்தான் கடத்தப்பட்டிருக்க முடியும்.
அருணகிரிநாதன் விஜிதரன், பகிடிவதையில் ஈடுபட்டார்கள் என்ற எவ்வித ஆதாரமுமற்ற கூற்றின் அடிப்படையில், தமிழீழ விடுதலைப் புலிகளால் தாக்கப்பட்ட மாணவர்களுக்கு குரல் கொடுக்கும் முகமாக உருவாக்கப்பட்ட மாணவர் குழுவிற்கு தலைமை தாங்கினார் என்பதற்காக தமிழீழ விடுதலைப் புலிகளே (LTTE) அருணகிரிநாதன் விஜிதரனை கடத்தியிருக்கலாம் என பலத்த சந்தேகம் நிலவியது. எனினும் அருணகிரிநாதன் விஜிதரனை விடுவித்துத் தரும்படி பொதுமக்களினதும் மாணவர்களினதும் கோரிக்கை எல்லா இயக்கங்களையும் நோக்கியே முன்வைக்கப்பட்டது. இந்தக் கோரிக்கைகள் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களால் தயாரிக்கப்பட்டாலும் ஈழ விடுதலைப் போராட்ட இயக்கங்கள் மீதான பொதுமக்களின் அதிருப்திகளையும் வெளிப்படுத்தியதோடு மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கானதாகவே இருந்தது. யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் விசாரிக்கப்படுவதாகவிருப்பின் பல்கலைக்கழக நிர்வாகத்தின் அனுமதியின் அடிப்படையில் விசாரிக்கப்பட வேண்டும், அவர்கள் மேலுள்ள குற்றங்கள் என்னவென்பது அறிவிக்கப்பட வேண்டும் என்பது போன்ற மாணவர்களின் உரிமைகளையும் உள்ளடக்கியிருந்தது. இவைகளை மக்களுக்கும் மாணவர்களுக்கும் உறுதிப்படுத்துமாறு அனைத்து ஈழ விடுதலைப் போராட்ட இயக்கங்களுக்கும் விடுக்கப்பட்ட கோரிக்கையானது தழிழீழ விடுதலைப் புலிகளைப் (LTTE) பொறுத்தவரை சாவுமணியாகவே ஒலித்தது.
இதனால் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவன் அருணகிரிநாதன் விஜிதரன் கடத்திச் செல்லப்பட்டமை யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் முறுகல் நிலையைத் தோற்றுவித்துவிட்டிருந்தது. யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவன் அருணகிரிநாதன் விஜிதரனை விடுதலை செய்யக்கோரி யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் இறங்கினர். யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவன் அருணகிரிநாதன் விஜிதரனை விடுதலை செய்யக்கோரி சாகும்வரை உண்ணாவிரதம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஆரம்பமானது.
பூநகரியைச் சேர்ந்த யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவன் விமலேஸ்வரன் தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட இப்போராட்டத்தில் குகன்,செல்வநாயகம், அவ்வை, விஜயகுமாரி உட்பட ஜனநாயகத்துக்காகக் குரல்கொடுக்கும் பல்கலைக்கழக மாணவர்கள் அனைவரும் இணைந்து கொண்டிருந்தனர். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் ஆரம்பிக்கப்பட்ட ஜனநாயகத்திற்கான மாணவர் போராட்டம் முல்லைத்தீவு உட்பட ஏனைய மாவட்டங்களுக்கும் பரவத் தொடங்கியது. இலங்கை அரசின் ஜனநாயக மறுப்புக்கும் இனவொடுக்குமுறைக்குமெதிரான போராட்டத்தில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் எப்படி முன்னணிப்பாத்திரம் வகித்திருந்தனரோ அதேபோல் இப்பொழுது தமிழீழ விடுதலைப் புலிகளினதும் (LTTE) அனைத்து ஈழ விடுதலைப் போராட்ட இயக்கங்களினதும் ஜனநாயக மறுப்புக்கும் எதிரான போராட்டத்தில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் முன்னணிப் பாத்திரம் வகிக்கலானார்கள்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் (LTTE) ஜனநாயக மறுப்புக்கும், பாசிசப் போக்குக்கும் எதிராக வெகுஜனப் போராட்டங்களும் மாணவர் போராட்டங்களும் நடைபெற்றுக் கொண்டிருந்தவேளையில் "தீப்பொறி" செயற்குழு கூடியது. தமிழீழ விடுதலைப் புலிகளால் (LTTE) தமிழீழ விடுதலை இயக்கம் (TELO) அழிக்கப்பட்டமை, யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவன் அருணகிரிநாதன் விஜிதரன் கடத்தல், யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் ஜனநாயகத்துக்கான போராட்டம் என்பன குறித்து "தீப்பொறி" செயற்குழுவுக்குள் விவாதம் ஆரம்பமானது. குறிப்பாக, ஈழவிடுதலைப் போராட்டத்தின் எதிர்காலத்தில் முற்போக்கு, ஜனநாயக சக்திகள் தமிழீழ விடுதலைப் புலிகளை (LTTE) எப்படி முகம் கொடுத்து முன்னேறுவது என்பது குறித்து கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
தமிழீழ விடுதலை இயக்கப் போராளிகளைக் (TELO) கொன்றொழித்து அவர்களை தெருக்களில் எரியூட்டி கொலைவெறித்தனம் புரிந்தமை, தமது கருத்துக்கு மாற்றான கருத்தாளர்களையும் ஜனநாயக உரிமைகளுக்காகப் போராடுபவர்களையும் கொலைசெய்தல் போன்ற அனைத்தும் தமிழீழ விடுதலைப் புலிகளின் (LTTE) பாசிசப் போக்கின் வெளிப்பாடே என "தீப்பொறி" செயற்குழுவில் அனவைரும் கருத்துத் தெரிவித்திருந்தனர். இத்தகைய பாசிசப் போக்கு ஈழவிடுதலைப் போராட்டத்தில் ஏனைய ஈழ விடுதலைப் போராட்ட இயக்கங்களை அழிப்பதை நோக்கியதான ஆபத்தானதொன்று எனவும், இப்பாசிசப் போக்கை முற்போக்கு சக்திகளாகிய நாம் முகம் கொடுத்து முன்னேறவேண்டியதொன்றென்றும் "தீப்பொறி" செயற்குழு இனம்கண்டது.
இப்பொழுது எம்முன் எழுந்த கேள்வி என்னவெனில் தமிழீழ விடுதலைப் புலிகளின் (LTTE) பாசிசப் போக்கை எப்படி எதிர்கொண்டு முன்னேறுவது என்பதாக இருந்தது. தமிழீழ விடுதலைப் புலிகளின் (LTTE) ஜனநாயக விரோத, பாசிசப் போக்கை அம்பலப்படுத்த வேண்டும் என்ற கருத்தை "தீப்பொறி" செயற்குழுவில் அங்கம் வகித்த அனைவரும் முன்வைத்தபோதும் அத்தகையதொரு செயற்பாட்டை பகிரங்கமாக முன்னெடுத்க முடியாது என்பதையும் நாம் உணர்ந்திருந்தோம். ஏனெனில், தமிழீழ விடுதலைப் புலிகளின் (LTTE) கொலைக்கரங்களின் முன் பகிரங்கமாக அவர்களை விமர்சிப்பது நாம் தற்கொலை செய்வதற்கு ஒப்பான செயலே.
தமிழீழ விடுதலைப் புலிகளை (LTTE) அம்பலப்படுத்துவது அவர்களது ஜனநாயக விரோத, பாசிசப் போக்கை அம்பலப்படுத்துவது குறித்து இரண்டுவிதமான கருத்துக்கள் "தீப்பொறி" செயற்குழுவுக்குள் முன்வைக்கப்பட்டன. நாம் தளத்திலேயே தங்கியிருந்து, குறிப்பாக யாழ்ப்பாணத்திலேயே தங்கியிருந்து இரகசிய செயற்பாடுகள் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகளை (LTTE) அரசியல்ரீதியாக அம்பலப்படுத்துவதென்றும், தமிழீழ விடுதலைப் புலிகளின் (LTTE) ஜனநாயக விரோத, பாசிசப் போக்குகளை அம்பலப்படுத்தும் துண்டுப்பிரசுரங்களை யாழ்ப்பாணதிலேயே றோனியோ இயந்திரத்தின் உதவியுடன் அச்சிட்டு இரகசியமாக மக்கள் மத்தியில் விநியோகிப்பதென்றும் ஒரு கருத்து முன்வைக்கப்பட்டிருந்தது. நாம் தளத்திலேயே தங்கி நிற்கவேண்டும் என்பதற்கு ஆதரவாக, கடந்தகாலத்தில் ஈழ விடுதலைப் போராட்ட இயக்கங்கள் தவறான போக்கில் சென்றமைக்கு மக்களிலிருந்து அந்நியப்பட்டு இந்தியாவில் தங்கியிருந்தது தான் காரணம் என்று வாதிக்கப்பட்டது.
எமது அமைப்பின் உறுப்பினர்கள் சிலரையும் எமது செயற்பாடுகள் சிலவற்றையும் வடக்கு-கிழக்குக்கு வெளியே, குறிப்பாக தென்னிலங்கைக்கு அல்லது இந்தியாவுக்கு நகர்த்துவதன் மூலம் ஒரு பத்திரிகையை வெளிக்கொண்டு வருவதுடன் தமிழீழ விடுதலைப் புலிகளின் (LTTE) ஜனநாயக விரோத, பாசிசப் போக்குகளை அரசியல் ரீதியாக அம்பலப்படுத்தி துண்டுப்பிரசுரங்களை வெளிக்கொணர்வது அவசியம் என்ற கருத்து என்னால் முன்வைக்கப்பட்டிருந்தது. காரணம், நாம் புளொட்டில் செயற்பட்ட காலங்களிலும் சரி, "தீப்பொறி"க் குழுவாகச் செயற்பட்ட காலங்களிலும் சரி, மக்களாலும் தமிழீழ விடுதலைப் புலிகளாலும் (LTTE) நன்கு அறியப்பட்டவர்களாக இருந்தோம். இதனால் நாம் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து இரகசிய செயற்பாடுகளில் ஈடுபடுவதென்பது தமிழீழ விடுதலைப் புலிகளால் (LTTE) இலகுவாக இனம்காணப்படுவதற்கும், எம்மை அழித்தொழிப்பதற்குமே ஏதுவாக அமையும். எனவே, நாம் மக்களிடமிருந்து அந்தியப்படாமல் மக்கள் மத்தியிலேயே இருக்கவேண்டும் எனக் கூறிக்கொண்டு, யாழ்ப்பாணத்துக்குள்ளேயே எமது செயற்பாடுகளை குறுக்கிக் கொண்டவர்களாய் திட்டமிடுவதானது உண்மையிலேயே ஒரு இரகசிய செயற்பாடாக இருக்கமுடியாது என்பதோடு ஆபத்து நிறைந்ததொன்றுமாகும்.
ஏனைய ஈழ விடுதலைப் போராட்ட இயக்கங்கள் மக்கள் மத்தியிலிருந்து அந்நியப்பட்டு இந்தியாவில் தமது செயற்பாடுகளை குறுக்கிக் கொண்டதால்தான் தவறான போக்குக் கொண்டவையாக விளங்கின என்ற வாதமும் கூட முழுமையாக ஏற்றுக்கொள்ளக் கூடியதொன்றல்ல. ஏனெனில் அனைத்து ஈழ விடுதலைப் போராட்ட இயக்கங்களின் தவறானது வெறுமனே மக்களிலிருந்து அந்நியப்பட்டு இந்தியாவில் தங்கியிருந்ததால் மட்டும் ஏற்பட்டதொன்றல்ல. மாறாக, அனைத்து ஈழ விடுதலைப் போராட்ட இயக்கங்கள் மத்தியிலும் காணப்பட்ட அரசியல் வறுமையே அவற்றின் தவறான போக்குகளுக்கான பிரதான காரணியாக விளங்கியிருந்தது.
தளத்தில் இருந்தவாறே தமிழீழ விடுதலைப் புலிகளை (LTTE) அரசியல்ரீதியில் அம்பலப்படுத்துவது என "தீப்பொறி" செயற்குழுவின் பெரும்பான்மை முடிவெடுத்தது. அத்துடன் தமிழீழ விடுதலை இயக்க (TELO) போராளிகளை யாழ்ப்பாணத்தில் கொன்றழிக்க தலைமை தாங்கிய தமிழீழ வீடுதலைப் புலிகள் (LTTE) இயக்கத்தின் யாழ்ப்பாண மாவட்ட பொறுப்பாளர் கிட்டுவை (சதாசிவம் கிருஸ்ணகுமார்) தொடர்ந்தும் இத்தகைய நடவடிக்கைகளை செய்ய அனுமதிக்கப்போகின்றோமா என்ற கேள்வி காந்தனால் (ரகுமான் ஜான்) "தீப்பொறி" செயற்குழுவில் எழுப்பப்பட்டது.
தமிழீழ விடுதலை இயக்க (TELO) போராளிகள் மீது கொடூரம் புரிந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் (LTTE) யாழ்ப்பாண மாவட்ட பொறுப்பாளர் கிட்டுவை (சதாசிவம் கிருஸ்ணகுமார்) நாம் விட்டுவைப்பது எதிர்காலத்தில் எமக்கும் கூட ஆபத்தானது என்று கருத்து முன்வைக்கப்பட்டது. எனவே கிட்டுவை (சதாசிவம் கிருஸ்ணகுமார்) கொலை செய்வதுதான் எமக்கிருக்கும் ஒரேவழி என வாதிக்கப்பட்டது. காந்தனின் (ரகுமான் ஜான்) இக்கருத்தை செயற்குழுவில் சிலர் ஆதரித்துப் பேசியதுடன் சிலர் இத்தகையதோர் நடவடிக்கை தேவையானதுதானா எனக் கேள்விகள் எழுப்பினர். காந்தனால் (ரகுமான் ஜான்) முன்வைக்கப்பட்ட கருத்துடன் இது குறித்து "தீப்பொறி" செயற்குழுவுக்குள் விவாதம் சூடுபிடிக்கத் தொடங்கியது.
தமிழீழ விடுதலை இயக்கத்தை (TELO) அழிப்பதில் தலைமை வகித்த தமிழீழ விடுதலைப் புலிகளின் (LTTE) யாழ்ப்பாண மாவட்ட பொறுப்பாளர் கிட்டுவை (சதாசிவம் கிருஸ்ணகுமார்) கொலை செய்வதுதான் எதிர்காலத்தில் எமக்கு வரவிருக்கும் ஆபத்தைத் தவிர்ப்பதற்கான ஒரே வழி என்ற கருத்தானது "தீப்பொறி" செயற்குழுவில் அங்கம் வகிப்பவர்கள் பலர் பிரச்சனைகளை அரசியல் ரீதியாக ஆரோக்கியமாகப் பார்க்கத் தவறுகின்றனர் என்பதை எடுத்துக் காட்டியது.
நாம் புளொட்டிலிருந்து (PLOTE) வெளியேறிய பின் உமாமகேஸ்வரனைக் கொலை செய்வதற்கான திட்டமும், உமாமகேஸ்வரனைக் கொலை செய்வதற்கு தலைமைதாங்கிச் செல்வதற்கு "தீப்பொறி" செயற்குழுவால் நியமிக்கப்பட்ட கண்ணாடிச்சந்திரன் "தீப்பொறி"க் குழுவிலிருந்து வெளியேறியபோது கண்ணாடிச்சந்திரன் உமாமகேஸ்வரனைக் கொலைசெய்வது குறித்த இரகசியத்தைப் பகிரங்கப்படுத்தினால் கண்ணாடிச்சந்திரனை என்ன செய்வது என்று செயற்குழுவில் எழுப்பப்பட்ட கேள்வியும், இப்பொழுது தமிழீழ விடுதலைப் புலிகளின் (LTTE) யாழ்ப்பாண மாவட்ட பொறுப்பாளர் கிட்டுவை (சதாசிவம் கிருஸ்ணகுமார்) கொலை செய்வது குறித்த செயற்குழு அங்கத்தவர்களின் கருத்துக்கள் என்பனவெல்லாம் நாம் எத்தகையதொரு அமைப்பை உருவாக்க முற்படுகிறோம், எத்தகையதொரு அரசியல் கண்ணோட்டத்தை நடைமுறையில் கொண்டவர்களாக இருக்கிறோம் என்பதை ஐயத்திற்கிடமின்றி எடுத்துக் காட்டியிருந்தன.
நாம் புளொட்டில் (PLOTE) செயற்படும்போது தமிழீழ விடுதலைப் புலிகளின் (LTTE) தனிநபர் பயங்கரவாத நடவடிக்கைகள் ஒவ்வொன்றையும் ஈவிரக்கமின்றி விமர்சித்து வந்ததோடு அத்தனிநபர் பயங்கரவாதம் ஒரு புரட்சிகரப் போராட்டவழிமுறைக்கு எதிரானதென்பதையும், தனிநபர் பயங்கரவாத போராட்ட வழிமுறைகள் ஒரு போராட்டத்தின் வெற்றிக்கு வழிகோலாது என்பதுடன் சமுதாயத்தில் எந்தவிதமான மாற்றத்தையும் ஏற்படுத்தப்போவதில்லை என்றும் கூறி வந்தோம். இதே தனிநபர் பயங்கரவாதத்தையும் அராஜகத்தையும் புளொட்டின் (PLOTE) செயலதிபர் உமாமகேஸ்வரன் தனது அரசியலாகக் கொண்டபோது புளொட்டிலிருந்து (PLOTE) வெளியேறி உமாமகேஸ்வரனின் எதிர்ப்புரட்சிகர அரசியலை விமர்சித்த நாம் புரட்சிகர அரசியலை மேற்கொள்ளப் போவதாகவும் புரட்சிகர அமைப்பை உருவாக்கப் போவதாகவும் கூறினோம். ஈழவிடுதலைப் போராட்ட வரலாற்றின் ஆரம்ப காலத்திலிருந்து ஈழ விடுதலைப் போராட்ட இயக்கங்களுக்குள் தொடர்ந்துவந்து கொண்டிருந்த தனிநபர் பயங்கரவாதத்தையும், சுத்த இராணுவக் கண்ணோட்டத்தையும், எதிர்ப்புரட்சி அரசியலையும் கடந்து சென்று ஒரு புரட்சிகர அமைப்பை உருவாக்குவதற்காகவே எமது கடந்தகாலத தவறுகளை நாம் சுயவிமர்சனம் செய்திருந்தோம். ஈழவிடுதலைப் போராட்ட இயக்கங்களின் எதிர்ப்புரட்சிகர அரசியலை விமர்சித்த நாம் புரட்சிகர அரசியலை நோக்கி முன்னேற முயன்றோம். இதனடிப்படையில் நாம் அனைவரும் அரசியல் நூல்களைக் கற்கத் தொடங்கி அரசியல்ரீதியில் எம்மை வளர்த்துக் கொண்டிருந்த அதேவேளை "அரசியலும் இராணுவமும்" என்று சிறு கையடக்க தொகுப்பையும் கூட வெளியிட்டிருந்தோம்.
ஆனால் இபபொழுதோ "தீப்பொறி" செயற்குழுவில் அங்கம் வகித்தவர்கள் பலரின் கருத்துக்களும் "தீப்பொறி" செயற்குழுவின் தொடர்ச்சியான முடிவுகளும் நடைமுறையில் நாம் தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) மற்றும் புளொட்டினால் (PLOTE) பின்பற்றப்பட்டு வந்த தனிநபர் பயங்கரவாதம் என்கின்ற அதே பாதையில் கால்பதிக்கத் தொடங்கிவிட்டதையே காட்டி நின்றது. உமாமகேஸ்வரனைக் கொலை செய்வதற்கான செயற்குழுவின் திட்டம், கண்ணாடிச் சந்திரன் உமாமகேஸ்வரன் கொலைத்திட்டம் பற்றிய இரகசியத்தை வெளியிட்டால் கண்ணாடிச்சந்திரனை என்ன செய்வதென்ற கேள்வி என்பனவற்றுக்கூடாக இப்பொழுது தமிழீழ விடுதலைப் புலிகளின் (LTTE) யாழ்ப்பாண மாவட்ட பொறுப்பாளர் கிட்டுவைக் (சதாசிவம் கிருஸ்ணகுமார்) கொலைசெய்வதற்கான திட்டம் என நாமும் கூட தனிநபர் பயங்கரவாதம் என்ற சகதிக்குள் அல்லவா கால்பதித்து நிற்கின்றோம். ஆம், நாம் வரலாற்றில் மீண்டும் தவறிழைக்கின்றோம் என்பது மட்டும் தெளிவாகத் தெரிந்தது.
இத்தனை வருடகால ஈழவிடுதலைப் போராட்டத்தின் கொடிய, கசப்பான அனுபவங்களுக்கும் இழப்புக்களுக்கும் பின்பும் மீண்டும் தவறானதொரு பாதையை - அழிவுப் பாதையை - தேர்ந்தெடுக்கப்போகின்றோமா அல்லது சரியானதொரு பாதையை – புரட்சிகரப் பாதையை – தேர்ந்தெடுக்கப் போகின்றோமா என்பதை நாம் தீர்மானிக்க வேண்டியவாகளாக இருந்தோம்.
உமாமகேஸ்வரனைக் கொலை செய்வதற்கான திட்டத்தின் போதும், அத்திட்டத்தை "தீப்பொறி" குழுவிலிருந்து வெளியேறிவிட்டிருந்த கண்ணாடிச்சந்திரன் பகிரங்கப்படுத்தினால் என்னசெய்வது என்று செயற்குழுவில் கேள்வி எழுப்பப்பட்ட போதும் நாம் தவறுவிடுகிறோம் என்பதை உணர்ந்திருந்தும் "தீப்பொறி" செயற்குழுவில் எனது கருத்தை தெரிவிக்காமல் மௌனமாக இருந்ததன் மூலம் பெரும் தவறிழைத்திருந்தேன்.
ஆனால் இப்பொழுது "தீப்பொறி" செயற்குழுவுக்குள் தொடர்ந்து கொண்டிருக்கும் தவறான போக்குகளை நிறுத்தவேண்டி செயற்குழுவுக்குள் காந்தனால் (ரகுமான் ஜான்) முன்வைக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் (LTTE)யாழ்ப்பாண மாவட்ட பொறுப்பாளர் கிட்டுவை (சதாசிவம் கிருஸ்ணகுமார்) கொலை செய்ய வேண்டும் என்ற தவறான ஒரு கருத்துக்கெதிராக, தவறானதொரு அரசியலுக்கெதிராகப் பேசவேண்டியவனாக இருந்தேன்.
தமிழீழ விடுதலை இயக்கப் (TELO)போராளிகளைக் கொன்றழிக்கத் தலைமை தாங்கிய தமிழீழ விடுதலைப் புலிகளின் (LTTE) யாழ்ப்பாண மாவட்ட பொறுப்பாளர் கிட்டு (சதாசிவம் கிருஸ்ணகுமார்) எதிர்காலத்தில் எம்மைக் கொன்றழிக்கலாம் என்பதற்காக கொலை செய்யவேண்டும் என்ற கருத்து தவறானது என்று "தீப்பொறி" செயற்குழுவில் வாதிட்டேன். எம்மை முற்போக்காளர்களாகக் இனம்காட்டிக்கொண்டு, புரட்சிகர அமைப்பொன்றை உருவாக்கப் போவதாகக் கூறிக்கொண்டு தனிநபர்களை கொலை செய்வதன் மூலம் ஈழவிடுதலைப் போராட்டத்திலோ அல்லது சமுதாயத்திலோ மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்று கருதுவதானது தனிநபர் பயங்கரவாதமேதான் என்றேன். தமிழீழ விடுதலைப் புலிகளால் (LTTE) மேற்கொள்ளப்பட்ட தமிழீழ விடுதலை இயக்க (TELO) அழிப்பானது கிட்டு (சதாசிவம் கிருஸ்ணகுமார்) என்ற தனி நபரின் முடிவோ அல்லது நடவடிக்கையோ அல்ல, தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) என்ற ஒரு இயக்கத்தின் அரசியல் போக்காகவே இது இனம் காணப்பட வேண்டும். எனவே, நாம் செய்ய வேண்டியது தமிழீழ விடுதலைப் புலிகளின் (LTTE) அரசியலை - தனிநபர் பயங்கரவாதமும், சுத்த இராணுவக் கண்ணோட்டமும், பாசிசப் போக்குக்ம் கொண்ட அரசியலை - மக்கள் மத்தியில் அம்பலப்படுத்த வேண்டும், மக்களை அணி திரட்டி அதற்கு எதிராகப் போராட வைக்க வேண்டும். இதன் மூலமே தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) என்ற இயக்கத்தை அரசியல் ரீதியில் பலம்மற்றதாகச் செய்வதுடன் அவர்களது ஜனநாயக விரோத பாசிசப் போக்கை முடிவுக்குக் கொண்டுவர முடியுமே தவிர ஒரு இயக்கத்தின் தனியொரு நபரை - கிட்டுவை - அல்லது நபர்களை படுகொலை செய்வதன் மூலமாக அல்ல. அத்துடன் புளொட்டிலிருந்து (PLOTE) வெளியேறி "தீப்பொறி"க் குழுவாக செயற்பட ஆரம்பித்த நாம், எமது கொள்கையை உருவாக்காமல், அந்தக் கொள்கையின் அடிப்படையில் ஒரு வேலைத்திட்டத்தை முன்வைக்காமல், எதிர்காலம் பற்றிய திட்டம் எதுவும் எம்மிடமில்லாமல் இருக்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் (LTTE) யாழ்ப்பாண மாவட்ட பொறுப்பாளர் கிட்டுவைக் (சதாசிவம் கிருஸ்ணகுமார்) கொலை செய்வதான கருத்து தவறானது மட்டுமல்ல எம்மால் முன்னெடுக்கப்படக் கூடாதது என்று வாதிட்டேன்.
நீண்ட விவாதம் தொடர்ந்து கொண்டிருந்தது. "தீப்பொறி" செயற்குழுவில் அங்கம் வகித்தவர்கள் தமது கருத்துக்களையும் வாதங்களையும் முன்வைத்துக் கொண்டிருந்தனர். "தீப்பொறி" செயற்குழுவில் பெரும்பான்மையானவர்களின் கருத்து தமிழீழ விடுதலைப் புலிகளின் (LTTE) யாழ்ப்பாண மாவட்ட பொறுப்பாளர் கிட்டு (சதாசிவம் கிருஸ்ணகுமார்) கொல்லப்பட வேண்டும் என்பதற்கு ஆதரவாகவே இருந்தது.
ஈழ விடுதலைப் போராட்ட இயக்கங்களுக்குள்ளும், ஈழவிடுதலைப் போராளிகள் மத்தியிலும் காணப்பட்ட அரசியல் வறுமை தனிநபர் பயங்கரவாதத்தையும், சுத்த இராணுவக கண்ணோட்டத்தையும் நோக்கி இட்டுச்சென்றது என்பதுதான் உண்மை. ஆனால் புரட்சிகர அரசியலைக் கற்றுக்கொண்டிருந்த நாம், அரசியல் ரீதியாக வளர்ச்சியடைந்து கொண்டிருந்த நாம், எம்மை முற்போக்காளர்கள் என்று கூறிக்கொண்டு இப்பொழுது தனிநபர் பயஙகரவாதம் என்ற பாதையை நோக்கி சென்று கொண்டிருந்தோம். நாம் சொல்லளவில் தனிநபர் பயங்கரவாதத்தை எதிர்ப்பவர்களாகவும், நடைமுறையில் தனிநபர் பயங்கரவாதத்தைப் பின்பற்றுபவர்களாகவும் காணப்பட்டோம். "தீப்பொறி" செயற்குழுவின் விவாதத்தின் முடிவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் (LTTE) யாழ்ப்பாண மாவட்ட பொறுப்பாளர் கிட்டுவை (சதாசிவம் கிருஸ்ணகுமார்) கொலை செய்வது என்ற திட்டம் செயற்குழுவில் பெரும்பான்மை அங்கத்தவர்களால் முடிவானது. ஆனால் இத்திட்டமானது "தீப்பொறி" செயற்குழு அங்கத்தவர்கள் தவிர்ந்த கீழணி அங்கத்தவர்கள் எவருக்கும் தெரிவிக்கப்பட்டிருக்கவில்லை.
(தொடரும்)
1. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 1
2. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 2
3. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 3
4. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 4
5. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 5
6. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 6
7. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 7
8. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 8
9. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 9
10. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 10
11. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 11
12. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 12
13. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 13
14. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 14
15. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 15
16. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 16
17. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 17
18. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 18
19. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 19
20. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 20
21. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 21
22. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 22
23. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 23
24.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 24
25.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 25
26.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 26
27.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 27
28.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 28
29. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 29
30 .புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 30
31. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 31
32. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 32
33. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 33
34. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 34
35.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 35
36.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 36
37.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 37
38.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 38
39.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 39
40. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 40
41.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 41
42. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 42
43. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 43
44.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 44
45. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 45
46. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 46