நெடுந்தீவைச் சேர்ந்த 12 வயதேயான சிறுமி, பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு முகம் சிதைக்கப்பட்டு கொடூரமாக கொல்லப்படுகின்றாள். இப்படி நடந்த இந்த அவலத்துக்கு யார் எல்லாம் பொறுப்பாளிகள்? குற்றத்தை இழைத்த குற்றவாளி மீது மட்டும் குற்றம் சாட்டுவதன் மூலம், பொறுப்பேற்கத் தவறுகின்ற அரசியல் பின்னணியில் தான் இந்தக் குற்றங்கள் தொடருகின்றது.

ஈபிடிபியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்திரி அலன்ரின் (உதயன்) பா.உ. குத்துக்கரணமடித்து வெளியிட்ட அறிக்கை இதற்கு நல்ல உதாரணம். அவர்கள் வெளியிட்ட அறிக்கை முதலில் உண்மையை மூடிமறைக்கின்றது. அதன்பின் அறிக்கை திரிக்கப்பட்டு இரண்டு விதமாக வெளிவருகின்றது. அவற்றை நீங்களே ஒப்பிட்டுப் பாருங்கள். யார் குற்றவாளிகளுக்கு உடந்தையாக முன்நின்று தொடர்ந்து அரசியல் செய்கின்றனர் என்பதை இனங்காண, இந்தத் திரிபான வரிகள் போதுமானது. இந்தத் திரிபுக்கு வெளியில் உண்மை என்பது, புதைக்கப்பட்டு இருக்கின்றது.

உண்மையைப் புதைக்க, முதலில் வெளியிட்ட அறிக்கையில் "இந்தச் சம்பவத்தில் கைதாகியுள்ளவர் ஏற்கனவே சில குற்றச் செயல்களில் கைதாகி சிறை சென்றவரெனவும், இப்போதும் குற்றச்சாட்டொன்று தொடர்பில் பொலிசாரின் கண்காணிப்பில் உள்ளவரெனவும் எமக்குத் தெரிய வருகிறது. இது தவிர 2002ம் ஆண்டு சமாதான காலத்திற்கு முன்னர் எமது இயக்கத்துடன் தொடர்பிலிருந்தவர் என்பதைத் தவிர, தீவுப் பகுதியிலுள்ள இதர மக்களைப்போல தனது தினசரி தேவைகள் எவற்றின் நிமித்தம் இவர் எமது அலுவலகத்திற்கு வந்து போயிருப்பாரே ஒழிய எமக்கும் இவருக்கும் எந்தவித இதர தொடர்புகளும் இருந்ததில்லை. என்றுமே இவர் எமது இயக்கத்தின் உறுப்பினரொருவராகவோ, எமது அரசியலுடன் தொடர்புள்ளவராகவோ இருந்ததில்லை என்பதை என்னால் உறுதிப்படுத்த முடியும். இந்த நிலையில், இந் நபர் எமது இயக்கத்தின் உறுப்பினர் என பத்திரிகைகள் கற்பிதம் செய்து செய்திகள் வெளியிடுவது அற்பத்தனமான அரசியல் நோக்கமுள்ளது."

பின் திரித்த அறிக்கையில் "இந்தச் சம்பவத்தில் கைதாகியுள்ளவன் ஏற்கனவே சில சமூக விரோத குற்றச் செயல்களில் கைதாகி சிறை சென்றவன் எனவும் இப்போதும் கூட சமூக விரோத குற்றச்சாட்டொன்று தொடர்பில் பொலிஸாரின் கண்காணிப்பில் உள்ளவன் எனவும் எமக்குத் தெரிய வருகின்றது. இந்நபர் ஆரம்ப காலத்தில் தனது வாழ்வாதாரத்திற்காக எமது கட்சியின் உதவிகளைப் பெற்று வந்தவர். தீவுப் பகுதியிலுள்ள இதர மக்களைப் போல தனது தினசரி தேவைகள் நிமித்தம் இவர் எமது அலுவலகத்திற்கு வந்து போயிருப்பாரே ஒழிய எமக்கும் இவருக்கும் எந்தவித இதர தொடர்புகளும் இருந்ததில்லை. இந்த நிலையில் இந்நபர் எமது கட்சியின் உறுப்பினர் என சில ஊடகங்கள் கற்பிதம் செய்து செய்திகள் வெளியிடுவது அற்பத்தனமான அரசியல் நோக்கமுள்ளதாகும்."

இப்படி இதன் பின்னுள்ள தங்கள் குற்றத்தை மூடிமறைக்க, அறிக்கையை மாற்றி மாற்றி எழுதுகின்றனர். இது போன்ற குற்றங்களின் பின்னணியில் தான் ஈபிடிபி புலி அழிப்பில் ஈடுபட்டது. அரசுடன் சேர்ந்து கடத்துவது, காணாமல் போகப் பண்ணுவது, கொல்லுதல் முதல் பெண்களை பாலியல் வல்லுறவு செய்வது தான் புலிக்கு எதிரான ஈபிடிபி அரசியலாக நடைமுறையாக இருந்தது. புலிக்குப் பின் இவைகள் அங்குமிங்குமாக தொடர்ந்து அரங்கேறுகின்றது. பல ஆயிரக்கணக்கான குற்றங்களை யார் செய்தது என்பது முதல் அதற்காக தண்டனைகள் கோரவும் வழங்கவும் மறுக்கும் அரசியல் பின்னணியில் 12 வயதேயான சிறுமி லக்சினி சிதைக்கப்படுகின்றாள்.

குற்றவாளி முன்கூட்டியே ஈபிடிபியுடன் சம்மந்தப்பட்ட பல குற்றங்களுக்காக இனம் காணப்பட்டவர். அந்தக் தொடர் குற்றங்களுக்கு தண்டனை பெறுவதில் இருந்து தப்பித்த அரசியல் பின்னணியில் தான், 12 வயதேயான லக்சினியை கொடூரமான வகையில் பறிகொடுத்து இருக்கின்றோம். இதுதான் எதார்த்தம். இதுதான் எம் முன்னுள்ள உண்மை.

யுத்தத்தின் பின்னணியில் இது போன்ற குற்றங்களோ பல ஆயிரம். இவைகளை இராணுவ அரசியல் பின்னணியில் கேள்விக்கு இடமின்றி அரங்கேற்றி வந்தனர். பல ஆயிரம் காணாமல் போனார்கள். பல ஆயிரம் பிணங்கள் வீதியோரங்களில் கிடந்தது. யாரும் உரிமை கோரவில்லை. யாரும் பொறுப்பேற்கவில்லை. யாரையும் தண்டிக்கவில்லை. இப்படி பல வகையான குற்றங்கள். ஆக குற்றவாளிகள் அரசியல் பின்னணியில் தொடர்ந்து இந்த சமூகத்தினுள் வாழ்வது மட்டுமல்ல, குற்றங்களும் இந்த அரசியல் பின்னணியில் தொடருகின்றது. 12 வயதேயான லக்சினியை இப்படித்தான் நாம் இழந்தோம்.

யுத்தத்தின் பின் இதற்கு தீர்வு காண அரசு தவறியிருக்கின்றது. குற்றவாளிகளை தண்டிக்கத் தவறி இருக்கின்றது. சட்டம் நீதியை நிலைநாட்டத் தவறியிருக்கின்றது. இதன் அர்த்தம் அவர்களை அரசு பாதுகாக்கின்றது. இந்த நிலையில் நெடுந்தீவு, அரசு மற்றும் ஈபிடிபியின் கண் அசைவுக்கு, அதிகாரத்துக்கு உட்பட்ட சூனியப் பிரதேசமாகும்;. அங்குதான் இந்தக் குற்றம் நடந்திருக்கின்றது. அதுவும் ஈபிடிபியின் உறுப்பினரால் இந்தக் குற்றம் இழைக்கப்பட்டு இருக்கின்றது. அவரை முன்னாள் உறுப்பினர் என்று கூறுவதன் மூலம், ஆதரவாளர் என்று கூறுவதன் மூலம், எம்மிடம் வந்;து போனவர் என்று கூறுவதன் மூலம், ஈபிடிபி குற்றத்தின் பின்னான தனது பொறுப்பை தட்டிக் கழிக்கின்றது.

1. இது போன்ற குற்றங்களின் போது முன்னாள் உறுப்பினர் என்று ஈபிடிபி கூறுவதை நிறுத்த வேண்டும். முன்னாள் உறுப்பினர் பட்டியலை பகிரங்கமாக வெளியிட வேண்டும். இந்நாள் உறுப்பினர் பட்டியலை வெளியிட வேண்டும். இல்லாத போது, குற்றங்கள் நடக்கும் போது அதை பொறுப்பேற்க வேண்டும்;.

2. முன்னாள் உறுப்பினர் என்றால் அதற்கான பொறுப்பும் உங்களைத்தான் சாரும்;. இது போன்ற குற்றவாளிகளை உருவாக்கிய, உங்கள் அரசியல் மற்றும் நடத்தை சார்ந்து தான் இவை வெளிப்படுகின்றது.

3. இது போன்று இனம் கண்ட குற்றவாளிகளை மக்கள் முன் அடையாளம் காட்டத் தவறிய பொறுப்பும் உங்களைச் சார்ந்தது. ஏன் அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தத் தவறிய பொறுப்பும் கூட உங்களையே சாரும்.

4. அரசுடன் உள்ள ஒரு கட்சி என்ற வகையில், சட்டம் நீதிக்கு பொறுப்பு ஏற்று, இதற்கான பொறுப்பையும் நீங்கள் ஏற்க வேண்டும்.

இந்த வகையில் மக்களிடம் இதற்காக ஈபிடிபி பொறுப்புக் கூற வேண்டும். வெறும் கண்டனங்கள், கண்ணீர் அஞ்சலிகள், குற்றவாளியை தண்டிக்கும் நடைமுறை வெறும் கண்துடைப்பு. இது போன்ற பல ஆயிரம் குற்றங்கள் தண்டனைக்கும், விசாரணைக்கும் உள்ளாக்காமல் உள்ள சூழலில், குற்றவாளிகளோ உங்கள் அரசியல் தயவில் இருந்தபடி தான் குற்றங்களைத் தொடருகின்றனர்.

இதுதான் மக்களாகிய எம்முன் உள்ள எதார்த்தம். எங்கள் லக்சினியை இப்படித்தான் நாங்கள் இழந்தோம். இது போன்ற குற்றங்கள், எம் சமூகத்தில் அரசியல் பலத்துடன் தொடர்வதை தடுத்து நிறுத்துவதே எம்முன்னுள்ள பாரிய சவாலாகும். இந்த வகையில் இதற்கு எதிராக வீதியில் இறங்கிப் போராடிய மக்களுடன், நாமும் கரம் கோர்க்கின்றோம்.

பி.இரயாகரன்

09.03.2012