அரசியல் - இலக்கிய பிரமுகர்கள்

தம்மை முதன்மைப்படுத்தி தமக்காக வாழத்தெரிந்த அரசியல் இலக்கியப் பிரமுகர்கள், சமூகத்துக்காக தம்மை முதன்மைப்படுத்தி வாழ்ந்தவர்களையும் வாழ்பவர்களையும், இதன் பொருட்டு தம் உயிரை இழந்தவர்கள் எல்லாம் வாழத் தெரியாதவர்களாகக் காட்டுகின்றனர். பிரமுகராக இருப்பதற்கே அரசியல் - இலக்கியம் என்று சொல்லும் அளவுக்கு விளக்கங்கள் வியாக்கியானங்கள். மக்களுக்கான அரசியல் இலக்கிய முயற்சியா? அல்லது பிரமுகராக இருப்பதற்கா அரசியல் இலக்கிய முயற்சியா? என்ற சுய கேள்வியை எம்முன்னும் தள்ளுகின்றனர். மக்களுக்காக இயங்குவதை நிறுத்துங்கள் என்று சொல்லாமல் சொல்லுகின்றனர். இப்படி புலத்தில் இருந்து மண் வரை பிரமுகர்கள் கூடுகின்றனர். மக்களை அணிதிரட்டுவதை மறுத்து, அதற்காக அரசியல் இலக்கிய முயற்சி செய்வதை மறுத்து, நடைமுறையில் தம் கருத்துக்காக போராடுவதை மறுத்து, சமூகத்தையும் சமூக முரண்பாட்டையும் பயன்படுத்தி பிரமுகராக இருக்க முனைகின்றனர்.

வாழ்வுக்கான போராட்டமின்றி எந்த மனிதனும், எந்தச் சமூகமும் வாழ்வதில்லை. அங்கு துன்பம், துயரம், மகிழ்ச்சி.. என்று, வாழ்வுக்கான போராட்டம் தொடர்ந்து நிகழ்கின்றது. அது சில வேளைகளில் அமைதியாகவும், சில வேளைகளில் கொந்தளிப்பாகவும் நிகழ்கின்றது. இவை இன்றி தனி மனிதனோ, சமூகமோ இயங்குவதில்லை. இங்கிருந்து தான், ஒன்று திரட்டப்பட்ட சமூக அறிவு பிறக்கின்றது. இந்த சமூக அறிவு என்னை நான் பிரமுகராக்குவதற்காகவும், சமூகத்தை மேலாண்மை செய்து மேய்ப்பதற்காகவும், தனிப்பட்ட நலனை அடைவதற்காகவும் பயன்படுத்துவது கேடுகெட்டதனம்.

இதற்கு மாறாக சமூகத்தில் இருந்து உள்வாங்கி தொகுத்துக் கொள்ளும் போது, தத்துவம் பிறக்கின்றது. மக்களை வழிநடத்தும் தலைவர்கள் முதல் மக்கள் கலைஞர்கள் வரை உருவாகின்றனர். இதற்கு வெளியில் அல்ல. முரண்பாடுகளை முரணற்ற வகையில் அணுகாத அறிவும், தீர்க்காத நடைமுறையும் ஒருங்கிணைந்து மக்களுக்கு எதிராக மாறுகின்றது. முரணற்ற வகையில் அணுகும் போது மக்களை முன்நின்று வழிநடத்துகின்றது.

பிரமுகர்த்தனம் தனிமனித முரண்பாட்டின் முரணான இழிவான பக்கம்;. அது சமூகத்தில் இருந்து விலகிப் பயணிக்கின்றது. சமூகத்தைப் பற்றி சமூகத்துக்கு முரணாக தனிமனிதனை முதன்மைப்படுத்தி முரணாகவே பயணிக்கின்றது.

முரணற்ற வகையில் அணுகாத அறிவு மக்களுக்கு எதிரானது. அதேபோல் மக்களின் அன்றாட வாழ்வியல் போராட்டத்தில் இருந்து பெற்ற அறிவைக்கொண்டு, அந்த மக்களை ஒருங்கிணைக்க பயன்படுத்தாத அனைத்தும் மக்களுக்கு எதிரானது. இது மக்களின் வாழ்வியலை முறைகேடாக பயன்படுத்துகின்றது. இப்படி மக்களின் அன்றாட வாழ்வியலை, முரண்பாட்டையும் பயன்படுத்தி அறிவு சார்ந்த மேட்டுக்குடி பிரமுகர்கள் உருவாகின்றனர். அது கீழிறங்கி மக்களுடன் சேர்ந்து நிற்பதில்லை. தன்னை ஓத்த அறிவுசார் கூட்டத்துடன் சேர்ந்து மேட்டுக்குடியாக தன்னை வெளிப்படுத்தும்.

மிகவும் சூக்குமமாகவே சமூகத்தில் தன்னை நிலைநிறுத்துகின்றது. சமூகத்தை அணிதிரட்ட முனையாத இந்தப் பிரமுகர்கள், சமூகத்தின் முரண்பாடுகளை முன்வைத்துதான் தம்மை முன்னிறுத்துகின்றனர். இதனால்தான் இது இனம்காண முடியாத வண்ணம் தன்னை மறைத்துக்கொண்டு இயங்குகின்றது. சமூகத்தை அணிதிரட்டுபவர்களும் கூட இதே எல்லைக்குள் தான் இயங்குகின்றனர். இதில் சமூகத்தை மையப்படுத்தி இயங்குபவர்களுக்கு முரணாக, தம்மை மையப்படுத்தி முதன்மைப்படுத்தி இயங்குபவர்கள் தான் பிரமுகர்களாகின்றனர்.

இந்த வகையில் இரண்டினது நோக்கமும், உள்ளடக்கமும் வேறானது. இதன் பார்வை, சொல்லும் விதம் வேறானது. ஆக இது ஒன்றுக்கு ஒன்று எதிரானது. ஒன்று போல் எப்போதும் வெளிப்படும். பிரமுகர்தனம் சமூக அறிவு சார்ந்த மேலாண்மை மூலம், சமூகத்தின் உயிர்ப்பை நலமடித்து தம்மை முன்னிறுத்துகின்றது. சமூகத்தை வழிநடத்தும் செயல்பூர்வமாக களத்தில் அது இயங்குவதில்லை. அதற்காக தம்மை அமைப்பாக்கிக் கொள்வது கிடையாது. மாறாக பிரமுகர் வட்டத்தில் பரஸ்பரம் இணக்கமான மையத்தை உருவாக்கிக் கொள்கின்றது. பரஸ்பரம் விமர்சனம் செய்வதை தவிர்க்கிறது. ஏற்கனவே சமூக மேலாண்மை பெற்றுவிட்ட பிரமுகர்களின் அங்கீகாரத்தைப் பெறும் முயற்சி, தம்மை த்தவர்களுக்கு இடையில் பரஸ்பரம் அங்கீகாரமும் அறிமுகப்படுத்தலும், சமூகத்தின் பொதுக் குறியீடுகள் மேல் தம்மை முனனிறுத்தி முத்திரை பதிப்பவர்களாகவும், தம் வெளியீடுகளை வெளியிடும் வண்ணம் வெளியீட்டகங்களை மையப்படுத்தியும், தம்மைத்தாம் முன்னிறுத்துகின்றனர். அறிவுசார்ந்த புகழ், அறிவு மூலம் கிடைக்கும் மேட்டுக்குரிக்குரிய சமூக அந்தஸ்து தொடங்கி வர்த்தகம் வரை இதன் ஆன்மாவாக இயங்குகின்றது.

இங்கு தம்மை மேன்மைப்படுத்திக் கொள்ளும் வண்ணம், எல்லா ஒழுக்கக்கேடும் புரையோடி தன்னை வெளிப்படுத்தும். தாம் பேசுகின்ற விடையம் மனித முரண்பாடுகள் மேலானதாக இருக்கும் போது, அதை அந்த மக்களுடன் சேர்ந்து நின்று அணுகுவது கிடையாது. இது இயல்பில் மக்களை பயன்படுத்திப் பிழைக்கும் ஓட்டுண்ணித்தனமே இதன் அடையாளம் மட்டுமின்றி இதன் குணமுமாகும்.

தத்துவம், கலை இலக்கியம்… என்று பரந்த தளத்தில் இவர்கள் முடிச்சுமாற்றிகளாக இயங்குகின்றனர். சமூகம் தன்னைத்தான் ஓருங்கிணைத்த வாழ்வியல் கூறுகள் சிதைகின்ற போது, பிரமுகர்கள் ஒருங்கிணைவை சிதைக்கின்ற புள்ளியில் உச்சத்தில் ஏறி அமர்கின்றனர். சமூகம் தன்னை ஒருங்கிணைக்க உதவுவதும், அதில் தன்னை பங்காளியாக்காத போது, சமூகம் பற்றி இவர்கள் பேசுவது எதற்காக? ஆம் அதை கொண்டு தங்களைத் தாங்கள் முதன்மைப்படுத்தி வாழ்தல் தான் இதன் குறிக்கோள். இதற்கு வெளியில் அவர்களுக்கு எந்த சமூகப் பற்றோ, சமூக நோக்கோ கிடையாது.

இதன் போது அவர்களின் சமூக மேலாண்மை சார்ந்த அறிவு சார்ந்து, அவர்களின் தனிப்பட்ட நோக்குக்கு முரணாக சமூகம் பற்றிய அறிவியல் கூறுகள் கிடைப்பது உண்டு. இது அவர்களின் நேர்மையான நோக்கு நடைமுறையில் இருந்து கிடைப்பதல்ல. இதை நாம் நுட்பமாகவும், தெளிவாகவும் புரிந்துகொள்வது அவசியம். உதாரணமாக இந்த ஆணாதிக்க, சாதிய, இனவாத, முதலாளித்துவ, நிறவாத, காலனிய, அரை காலனிய, நவகானிய … அமைப்புகளை நாம் முற்றாக எதிர்க்கின்ற போது, அதற்குள் உருவான சமூக நலக் கூறுகளை எதிர்ப்பதல்ல. அதை உள்வாங்கிக் கொண்டு தான் எதிர்க்க வேண்டும். நகர் மயமாக்கல், சுற்றுச் சூழல், விஞ்ஞானம், மருத்துவம், கல்வி .. என்று எதை எடுத்தாலும், இது இங்கு பொருந்தும்;. சமூகத்தில், சமூக முரண்பாட்டில் இது இயங்குவதால் இது எங்கும் தழுவியது.

இது போல் தான் பிரமுகர் அறிவு சார்ந்த படைப்பிலக்கியமும். இது மாற்றத்தை முன்வைத்து தானான முன்னின்று இயங்குவதில்லை. சமூகத்தின் மேல் ஒரு ஓட்டுண்ணியாக ஓட்டிக்கொண்டு பயணிக்கின்றது.

மக்களை சொல்லி புலிகள், அரசு, இயக்கங்;கள் எல்லாம் மக்களுக்கு எதிராக எப்படி இயங்கியதோ, அதேபோல் தான் இதுவும் இயங்குகின்றது. அது வன்முறை மூலம் இயங்க, இது அறிவு மூலம் இயங்குகின்றது.

உண்மையில் தன்னில் இருந்து வேறுபட்ட வகையில் மக்களை அணிதிரட்டும் அரசியல் கலை இலக்கிய முயற்சியை எதிர்க்கின்றது. இதன் இருப்பு, இதில்தான் தங்கி இருக்கின்றது. மக்களை அணிதிரட்டும் செயல்பாடுதான், இவர்களை தனிமைப்படுத்தி அரசியல் ரீதியாக வேறுபடுத்துகின்றது, அன்னியப்படுத்துகின்றது. இதனால் இதை மூடிமறைத்தபடி கடுமையாக எதிர்க்கின்றனர்.

ஆக இந்த வேறுபாட்டை இல்லாததாக காட்ட முனைகின்றனர். சமரசம் செய்த வண்ணம் அக்கம்பக்கமாக பயணிக்க முனைகின்றனர். அணிதிரட்டக் கோரும் அரசியலை, தம் பிரமுகர் அடித்தளத்தில் இருட்டடிப்பு செய்ய முனைகின்றனர். அர்ப்பணிப்புள்ள நேர்மையையும், உண்மையையும் தமது நேர்மையற்ற நடத்தைகள் மூலம் பொய்கள் மூலம் புதைக்க முனைகின்றனர்.

இதுதான் இன்று மூடிமறைத்து செயல்படும் அபாயகரமான மக்கள் விரோத அரசியலாகும். கடந்தகால பாசிச அரசியல் பின்புலத்தில் அனாதையாக்கப்பட்ட மக்களின் அவலங்கள் துயரங்கள், இன்று அறிவு சார்ந்த பிரமுகர்களின் பிழைப்புக்கேற்ற விளைநிலமாகின்றது. தம்மை நடுநிலையாளராக, சார்பற்றவராக, கருத்தை மையப்படுத்துவதாக காட்டிக்கொண்டு, தாம் மக்களுடன் நிற்பதான பிரமையை ஏற்படுத்த முனைகின்றனர். இதன் மூலம் பிரமுகராக இருக்கவும், தம் பிரமுகர் இருப்பை தொடர்ந்து தக்க வைக்கவும் முனையும் அரசியல் வெளி இன்று கூர்மையாகி, முனைப்புப்பெற்று வருவது மக்களுக்கு எதிரான மற்றொரு புதைகுழிதான். இன்றைய அரசியல் சூழலில் அபாயகரமான பிழைப்புவாதம் இதுதான்.

பி.இரயாகரன்

08.03.2012