நீங்கள் ஆணியே புடுங்க வேண்டாம்.
இந்தியாவே எல்லாத்தையும் புடுங்கி விடும்!
எது தேவையான ஆணி, எது தேவையில்லாத ஆணி எண்டு எப்பிடி கண்டுபிடிக்கிறது?
நீ ஆணியே புடுங்க வேண்டாம், அப்பிடியே ஓடிப்போயிடு – வடிவேலு, தத்துவாசிரியர்
காலச்சுவட்டில் யதீந்திரா பின்னாலேயோ, முன்னாலேயோ உடைத்து கண்டுபிடித்திருக்கும் தத்துவம் மேலே உள்ள வடிவேலுவின் மேற்கோள் தான். மக்கள் போராடத் தேவையில்லை, மீட்பர்களை சரணடைந்தால் அதிக பலன் பெறலாம் என்பது தான் அவரது விஞ்ஞான விளக்கம். பின்நவீனத்துவம், கட்டுடைப்பு, சர்வதேச அரசியலென்று எழுதும் இவர் புலியிலே இருந்தவராம்.(எங்கேயோ இடிக்குதே). இந்தக்கட்டுரை மூலம் அவர் இரண்டு விடயங்களை சொல்லுகிறார். முதலாவது புலிகளிடம் இந்தியா, சர்வதேசம் சார்ந்த பிழையான கணிப்புகள், ராஜிவ் கொலை போன்ற நடவடிக்கைகளை தவிர வேறு எந்த விதமான பிழைகளும் இல்லை. பின்புலிக்காலத்தில் இந்தியாவே தமிழ் மக்களின் கண்கண்ட தெய்வம்.
இரண்டுமே பச்சைப்பொய்கள். மக்கள் மயப்படாத இராணுவ சாகசத்தன்மை, ஜனநாயகமறுப்பு, போராளிகளை அரசியல் நீக்கம் செய்து வன்முறையாளர்களாக மாற்றியது போன்ற புலிகளின் பாசிச அரசியலை மறைத்து அவர் தனது செஞ்சோற்றுக் கடனை தீர்க்கிறார்.
இந்தியா தனது நலன்களின் அடிப்படையில் தமிழ் மக்களிற்கு உதவும் என்று இவர் காதிலே பூ இல்லை ஒரு பூமரத்தையே வைக்கப்பார்க்கிறார். இந்திய சுதந்திரத்திற்கு முன்பு கைதராபாத் நிஜாமின் கொடுங்கோல் ஆட்சியையும், பெரும்பண்ணையார்களையும் எதிர்த்துப் போராடிய தெலுங்கானா விவசாயிகளை காங்கிரசு கள்ளர் கூட்டம் ஆதரித்தது. சுதந்திரத்திற்கு பின்பு அதே விவசாயிகளை ஜனநாயககொழுந்து, இந்தியாவின் கவர்னர் மவுன்ட் பேட்டனின் மனிசியின் ஆசைநாயகன் நேருவின் அரசு படுகொலை செய்தது. பெரும்பண்ணையார்களிடம் இருந்து நிலத்தை பறித்து, நிலப்பங்கீடு செய்ததன் மூலம் வாழ்க்கையில் முதன்முதலாக மூன்று முறை சாப்பாடு சாப்பிட முடிந்தது என்று ஒரு ஏழைவிவசாயி தெலுங்கானா புரட்சியின் அனுபவங்களை வாழும் ஆவணமாக சொல்கிறார். மூன்று வேளைச்சாப்பாட்டிற்காக போராடிய ஏழை மனிதர்களை, தனது சொந்த நாட்டு மக்களை கொன்ற இந்திய அரசு ஈழமக்களை காக்கப்போகிறதாம். நல்லாச் சொல்லுறாரைய்யா விளக்கம்.
எழுபதுகளின் முதலாவது ஜே.வி.பி எழுச்சியினை சமாளிக்க முடியாமல் இலங்கை அரசு திணறிய போது இந்தியா தான் எழுச்சியினை ஒடுக்குவதற்கு கைகொடுத்தது. எத்தனையோ தவறுகள் இருந்த போதிலும் ஏழைச்சிங்கள இளைஞர்களினதும், யுவதிகளினதும் போராட்டமாக இருந்தது அந்த எழுச்சி. ஜனநாயக, முற்போக்கு அமைப்புக்களை எந்த ஒரு முதலாளித்துவ அரசும் தனது நாட்டிலோ அல்லது பிற நாட்டிலோ அனுமதிக்காது என்பதற்கு இதை விட வேறென்ன உதாரணம் வேண்டும்.
இந்தியாவிற்கு புலிகளை அழிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கவில்லையாம். கடைசி நேரத்திலும் ஆயுதங்களை களையுங்கள் உதவி செய்கிறோம் என்று சிதம்பரம் சொன்னாராம். சுரங்க முதலாளிகளிற்காக எத்தனையோ ஆயிரம் பழங்குடிமக்களை கொன்று குவிக்கும், எவ்வளவு அழிவுகள் வந்தாலும் கூடங்குளத்தில் அணு ஆலையை கட்டியே தீருவோம் என்று அடம் பிடிக்கும் சிதம்பரமும், தாடிக்குள் கடவுளை தேடும் சிங்குவும் புலிகளை காப்பாற்ற முன்வந்தார்களாம். புலிகளால் தான் எல்லாம் கெட்டது என்கிறார். இதற்கு இரண்டாம் புலிகேசி கே.பி யை சாட்சிக்கு கூப்பிடுகிறார். போற போக்கிலே மகிந்து கூட புலிகளை காப்பற்ற முயற்சி எடுத்தான், இவங்க தான் சந்தர்ப்பங்களை விட்டுவிட்டாங்க என்று கூட ஒரு கட்டுடைப்பு வந்தாலும் வரலாம்.
இவரின் இந்தியா காப்பாற்ற வந்த கதையை உண்மை என்றே வைத்துக்கொள்வோம். அப்படி என்றால் புலிகளின் பிழைகளிற்காகத் தான், ஒன்றுமே அறியாத நாற்பதினாயிரத்திற்கு மேற்பட்ட அப்பாவி மக்களை கொலைகாரன் மகிந்துவுடன் சேர்ந்து கொன்று குவித்தார்களா? அந்த மக்கள் சிந்திய இரத்தம் காய முதலே இப்படி எல்லாம் சொல்லுவதற்கு எப்படித்தான் இவர்களிற்கு மனச்சாட்சி இடம் கொடுக்கிறது. ராஜீவின் அழிவுப்படை ஆடிய வெறியாட்டங்களையே சில தவறுகள் என்பவரிற்கு இதெல்லாம் சாதாரணமான நிகழ்வுகள் தான்.
நாடு கடந்த தமிழீழக்காரர்கள், மேற்கு நாடுகள் எல்லாம் தருவார்கள் என்கிறார்கள். இவர்கள் இந்தியாவே கதி என்கிறார்கள். டக்கிளசு, கருணா, பிள்ளையான், கே.பி மகிந்து தான் கடவுள் என்கிறார்கள். அன்று ஆயுதங்கள் இருந்தால் ஈழம் வந்து விடும் என்றார்கள், இன்று ரட்சகர்கள் எம்மை விடுவிப்பார்கள் என்கிறார்கள். மக்கள் தமக்கான போராட்டத்தை தமது கையிலே எடுக்க கூடாது என்பதற்காகத் தான் இவ்வளவு பேய்க்காட்டல்களும். ஆனால் மரம் சும்மா நிற்க நினைத்தாலும் காற்று நிற்க விடாது என்பது தான் என்றும் எப்பொழுதும் யதார்த்தமாக இருந்து வருகிறது.
-விஜயகுமாரன்
30/01/2012