பத்தாயிரம் மனித உயிர்கள் குப்பையைப் போல் அள்ளி வீசப்பட்டு, அவர்களது சடலத்தை நாயும் நரியும் தின்னும் கோரக் காட்சியைக் கண்டபின்னரும் குற்றவுணர்வு கொள்ளாத இவர்களது இதயம் துப்பாக்கி ரவைகளால் பிய்த்தெறியப்பட வேண்டும். விஞ்ஞானிகள், செயற்கைக் கோள்கள், டஜன் கணக்கிலான ஆய்வு நிலையங்கள்...! அந்தமானில் நிலநடுக்கம், நிகோபார் மூழ்குகிறது எனத் தெரிந்த பின்னரும் 2 மணி நேரம் தகவல் தராத கடற்படை, அலட்சியம் காட்டிய ஆய்வு நிலையங்கள்! யார் முகத்திலும் துயரமில்லை யாருடைய சொல்லிலும் பொறுப்புணர்ச்சி இல்லை. ""கொஞ்சம் கவனக்குறைவாக இருந்து விட்டோம்'' என்று சட்டையில் தேநீர் சிந்தியதற்கு "வருந்தும்' தொனியில் பேசுகிறார்களே, இவர்களுடைய திமிர் எங்கிருந்து வந்தது?
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இடம் பிடிக்க அமெரிக்காவின் காலை நக்கும் அத்வானி முதலான அத்தனைப் பேரில் யாராவது சுனாமி எச்சரிக்கைக் கவுன்சிலில் இந்தியா இடம் பெறுவது குறித்து சிந்தித்ததுண்டா? சுயவிளம்பர மோகி "அக்னி' கலாம் தன்னுடைய அறிவியல் மேதைமையை எந்த ஏவுகணையில் வைத்துப் பறக்க விட்டிருக்கிறார்? ""சுனாமி விசயத்தில் எங்களுக்குப் போதிய முன் அனுபவமில்லை'' என்று பேசிவிட்டு தயாநிதி மாறனும், மணிசங்கர் அய்யரும் தமிழகத்திலிருந்து தப்பித்துச் சென்றதெப்படி? இந்த நாட்டில் முடிவே இல்லாமல் வெள்ளமும் வறட்சியும் மக்களைக் காவு கொள்ளக் காரணம் முன் அனுபவமின்மையா? 5 நாட்களுக்குப் பின்னரும் அகதிகளைத் திரும்பிப் பாராதது அரசு எந்திரத்தின் முன் அனுபவமின்மையா? மரணத்தைத் தம் சொந்த முன் அனுபவத்தில் உணர்ந்து கொள்ள விரும்பும் மந்திரிகள் மக்களிடம் விண்ணப்பிக்கட்டும். பிரிவாற்றாமையின் துயரை, பட்டுத் தெரிந்துகொள்ள விழையும் இந்தப் பதர்கள் தம் சொந்தச் சுற்றத்தை அக்கரைப் பட்டியில் பிணந்தின்ன அலையும் ஓநாய்களிடம் விட்டு ஒத்திகை பார்க்கட்டும்.
ஒரு லட்சம் கொடுத்தால் மரணம் மறந்துவிடுமா? யாருடைய வரிப்பணத்தில் யார் கருணைத் தொகை வழங்குவது? மக்களின் கையை வெட்டி மக்களுக்கே சூப் வழங்குகிறார்களே, இந்த மோசடிக்கு என்ன முடிவு? மறுவாழ்வாம், கடனுதவியாம்! என்ன சொல்ல வருகிறார்கள் தெரிகிறதா? சுனாமி, மீனவனின் சொந்தப் பிரச்சினை என்கிறார்கள். எனில் இந்தக் கடன் மீனவனின் கவனக் குறைவுக்கு வழங்கப்படும் தண்டனையா, மன்னிப்பா? ஒரிசாவைத் தாக்கிய கடல் கொந்தளிப்பில் பாதிக்கப்பட்ட அமெரிக்க மின் நிலையம் 300 கோடி இழப்பீடு அல்லது ஒரு யூனிட் மின்சாரத்திற்கு 10 ரூபாய் என்று அரசிடம் பேரம் பேசியதை யாரும் மறக்க வில்லை. இயற்கையின் சீற்றம் கிடக்கட்டும் செயற்கையின் சீற்றங்களான முதலாளித்துவப் பொருளாதார நெருக்கடி ஒவ்வொன்றுக்கும் மக்களின் தாலியறுத்துச் சேர்த்த வரிப்பணத்தில் முதலாளிகளுக்கு வழங்கப்படும் மானியம் எத்தனை ஆயிரம் கோடி? இந்த அநீதிக்குத் தலைவணங்க மக்கள் ஏமாளிகளல்லர்.
ரிக்டர் அளவுகோலில் 9 புள்ளிகளைத் தாண்டிய இந்தக் கொடிய நிலநடுக்கம் பூமியில் நடந்திருந்தால் இந்தியாவே தரைமட்டமாகியிருக்கும் என்கிறார்களே வல்லுநர்கள், அந்த நடுக்கத்தை எதிர்கொண்டு சுனாமி அலையில் உயிர்விட்ட மீனவ மக்களுக்கு இந்த நாட்டின் 100 கோடி மக்களும் கடமைப்பட்டவர்கள். அவர்கள் வடிக்கும் கண்ணீர் இந்தத் தேசமே வடித்திருக்க வேண்டிய கண்ணீர். இந்த மரணம் நம்மைக் காப்பதற்கு மீனவ மக்கள் தந்த தன்னுணர்வற்ற களப்பலி. பலிகடாக்களைக் கூண்டிலேற்றி, குற்றவாளிகள் விரல் நீட்டுகிறார்கள். நீட்டிய அந்தக் கரம் முறிக்கப்படும் வரை, "அசட்டை, அனுபவமின்மை' என்ற சொற்களில் ஒளிந்து கொண்டு அவர்கள் நமக்கே உபதேசம் செய்ய அனுமதிக்கப்படும் வரை, இந்தக் கொடிய கேலிக்கூத்து முடிவடையாது. மரணத்தின் இந்தக் கோர தாண்டவத்திற்குப் பொறுப்பான ஒவ்வொரு அதிகாரியும், விஞ்ஞானியும், அமைச்சரும் அனைவரும் கூண்டிலேறிப் பதில் சொல்ல வேண்டும்.
இது அரசியலாக்கப்படக் கூடாத மனித குலத் துயரமல்ல குப்பங்கள்தான் மூழ்கியிருக்கின்றன கடலோரம் மாமல்லபுரச் சாலையில் மின்னும் மாளிகைகள் அல்ல. அங்கே ஒரு பிணம் இல்லை. ஒரு சொட்டுக் கண்ணீரில்லை. சுனாமியின் அலைகளைப் போலவே வர்க்க வேறுபாட்டின் கோரதாண்டவத்தை இதோ, கண்முன்னே காண்கிறோம். இயற்கையுடன் போராடிக் களைத்து விட்டார்கள் மீனவ மக்கள். வாழ்வின் போராட்டமனைத்தையும் சில மணித்துளிகளில் நடத்தித் துவண்டு வீழ்ந்திருக்கிறார்கள். அவர்கள் சற்று ஓய்வெடுக்கட்டும். போராட்டத்தை நாம் தொடங்குவோம். சுனாமிப் பேரலை நிலத்திலிருந்தும் எழும் என்ற அனுபவத்தை எதிரிகளுக்குக் கற்றுக் கொடுப்போம்!