Language Selection

சமர் - 27 : 11 - 2000
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

மார்க்சியத்துக்கு எதிராக திட்டவட்டமாக வெளிப்படுத்தி இயங்க வெளிக்கிட்டுள்ள, பிரான்சில்  இருந்து வெளிவரும் அம்மா புரட்டாதி 2000 இதழில், "வன்முறை எழுத்து" என்ற தலைப்பில் ஜெர்மனிய மார்க்சிய தலைவர் கார்லீப்னெக்ட் பெயரில், அவரை அவமானப்படுத்தும் வகையில், புனைபெயரில் மார்க்சியத்தை கோட்பாட்டில் விட்டோடிய ஓடுகாலி ஒருவர், கட்டுரை ஒன்றை எழுதித் தள்ளியுள்ளார். மொழியில் வன்முறை பற்றி எழுதப் போனவர், என் மீதான தனி நபர் தாக்குதலுக்கு பதில் சொல்வதாக பாசாங்கு செய்யப் போனவர், சாருநிவேதா கடந்து என் மீதான (உதாரணம் சோபாசக்தி, இது போல் பல வன்முறைகள் புலம் பெயர் இலக்கியத்தில் உள்ளது) தனி நபர் தாக்குதலுடன் சமரசம் செய்தபடி, வன்முறைபற்றிய கட்டுரையை இடையில் கைவிட்டு, என் மீதான அரசியலற்ற முத்திரை குத்தலில் இறங்கி விடுகின்றார். சாருநிவேதா எனது கோட்பாட்டுக்கு பதிலளிக்க முடியாமல் கண்மூடித்தனமான அவதூற்றை எதிர்ப்பதாக கூறிக் கொண்டு எழுத வெளிக்கிட்ட இக் கட்டுரையாளர், என் மீது அதே பாணியில் எனது கோட்பாட்டுக்கு பதிலளிக்க முடியாது, முத்திரை குத்தலைச் செய்கின்றார். என் கருத்துகளுக்கு பதிலளிக்காத கட்டுரையின் சாரம், என் மீதான மற்றொரு முத்திரை குத்தலை செய்வதன் மூலம் எனக்கு எதிரான பிரச்சாரத்தை சாருநிவேதாவில் இருந்து, வடிவத்தில் வேறுபட்டு செய்துள்ளார். "வன்முறை எழுத்து" என்று தலைப்புக் கொடுத்து ஏமாற்றியபடி, எனக்கு எதிரான ஒரு முத்திரை குத்தலை திட்டமிட்டுச் செய்துள்ளார்.

 

 

இந்த முத்திரை குத்தும் வடிவிலான அரசியலைத் தாண்டி, கட்டுரை கோட்பாட்டு ரீதியாக ஏதவாது சொல்ல முனைகின்றதா என்பதை கேள்வியாக்குவதே, எனது அடிப்படையான உள்ளடக்கமாகும். இங்கு நீங்கள் கருதும் மார்க்சியத்தை அடிப்படையாக கொண்டு கீழ் உள்ளவைகளை ஆராய சவால் விடுகின்றோம். உங்கள் "மார்க்சியத்துடன்" சம்பந்தமில்லாத "மார்க்சியத்துக்குள்" ஸ்ராலினை இழுத்து காலத்தை ஓட்டுவதை விட்டு, நேர்மையாக விவாதிக்கக் கோருகின்றோம். முத்திரை குத்தும் அரசியல், சம்பவங்கள், நிகழ்ச்சிகளை கொண்டு மட்டும் அரசியலை விளக்குவது குருட்டு வெளவால்த்தனமாகும். நீங்கள் முத்திரை குத்தும் வழியில் மறுக்கும் ஸ்டாலின் மார்க்சியம் பற்றி, தனியாக அதன் கோட்பாடுகள் மீது, மாற்றுக் கோட்பாட்டை முன் வைத்து தனியாக விவாதிக்கவும்;. ஸ்ராலினை சேறடித்து முத்திரை குத்துவதே "மார்க்சியம்" என்றளவுக்கு மார்க்சியத்தை எளிமைப்படுத்தி, சம்பவங்களின் பின் காது மூக்கு வைத்து முத்திரை குத்தி, உயிர்வாழ நினைக்கும் அரசியல், இழிவான நயவஞ்சகத் தன்மை கொண்டவை. அரசியல் ரீதியாக பிரச்சனையை ஆராய்வது அடிப்படையானது. பிரச்சனையை கைவிட்டுச் விவாதிக்காது ஒடுவது பற்றி லெனின் மென்ஷ்விக்குகளுக்கு எதிராக போராடிய போது "கொள்கை ரீதியான பிரச்சனையில் எதிராளியினுடைய ஒரு வாதத்திற்கு பதில் சொல்லாமல் அவன் மீது |இரக்கம்| காட்டுவதாகச் சொல்வது, விவாதிப்பதாகப் பொருளாகாது மாறாக அவதூறு செய்ய முயல்வது ஆகும்." என்று தெளிவுபடவே விளக்குகின்றார். கீழ் உள்ளவைக்கு கொள்கை ரீதியாக விவாதிக்க, எந்த ஸ்டாலின் எதிர்பாளாரும் தயார் இல்லை என்பதே வரலாற்று உண்மையாகும்;. இதை யாரும் இனியும் மீறமுடியாது. மார்க்சியம் தனது ஆய்வை இதன் மீது தெளிவுபடவே முன்வைத்துள்ளது என்பதால், இதை விவாதிப்பதை கைவிடுவதே ஸ்டாலின் எதிர்ப்பு இடதுசாரிகளின் ஒரேயொரு தற்காப்பு ஆயுதமாகும்.

+ "ஸ்ரானிசியம்" என்று கட்டுரையில் பல பத்துத் தரம் சொற்களில் முத்திரை குத்தும் அந்த "ஸ்ராலினிசத்தை" நீங்கள் கருதும் "மார்க்சியம்" மூலம் கோட்பாட்டில் மறுத்து எப்போதாவது, எங்காவது வைக்க முடிந்ததா? முடியுமா?

+ ஸ்ராலினை எதிர்ப்பது மட்டுமா மார்க்சியம்?

+ ஸ்ராலினை விவசாய சமூகத்தின் மூர்க்கத்தனத்தின் விளைவாக வகைப்படுத்தும் உங்கள் அரசியலுக்கு, அரசியல் தத்துவார்த்த கோட்பாட்டு விளக்கம் என்ன?

+ அப்படியாயின் விவசாய சமூகங்களைக் கொண்ட நாடுகளில் நீங்கள் கருதும் "மார்க்சியம்" புரட்சிக்கு வரமுடியாதல்லவா? வந்தால் ஸ்டாலின் மார்க்சியம் தான் நிலவும் அப்படித் தானே? அப்படித் தானே உங்கள் கோட்பாட்டு முடிவு?

+ உங்கள் "மார்க்சியம்" வரமுடியும் எனின், ஸ்ராலினில் இருந்து எப்படி வேறுபட்ட வகையில் கட்சி, அரசு, வர்க்கங்கள் இருக்கும். அவைக்கு இடையிலான உறவு என்ன? உங்கள் "மார்க்சியம்" எப்படி அதை நடைமுறையில் கொண்டு வரும்?

+ முதலாளித்துவ சமூகம் தனது சொந்த வர்க்கப் புரட்சியை வன்முறையூடாக நடத்துமா? அல்லது இல்லையா? நடத்தும் எனின் எப்படி? இல்லை எனின் ஏன்?

+  இதில் இருந்து விவசாய சமூகங்கள் உள்ள முதலாளித்துவ புரட்சி நடைபெறாத நாடுகளில், புரட்சி எந்த வகையில் வேறுபடுகின்றது? வேறுபாடு இல்லை எனின் எப்படி? இருக்கின்றது எனின் எப்படி?

+ விவசாய சமூகத்துக்கும், முதலாளித்துவ சமூகத்துக்கும் இடையில் புரட்சியை நடத்துவதில் வேறுபாடு இருக்கிறதா? இல்லையா? ஏன்? எப்படி? இதை உங்கள் "மார்க்சியம்" எப்படி விளக்குகின்றது?

+ பாட்டாளி வர்க்கம் என்;பதன் விளக்கம் என்ன? அதன் வர்க்கத் தலைமை எப்படி கட்டமைக்கப்படும்?

+ தொழிலாளர்களை நேரடியாக கட்சியில் சேர்க்க முடியுமா? முடியாதா? ஏன்?

+ தொழிலாளருக்கும், பாட்டாளி வர்க்கத்துக்கும் இடையில் வேறுபாடு உண்டா? இல்லையா?

+ புரட்சியில் விவசாயிகளின் நிலை என்ன? விவசாயப் புரட்சி எழுச்சி பெறின், அதை பாட்டாளி வாக்கம் என்ன செய்ய வேண்டும்? விவாசயிகள் ஆயுதம் ஏந்திய தளப் பிரதேசத்தை நிறுவின், பாட்டாளி வர்க்கம் என்ன செய்யவேண்டும்? விளக்குவீர்களா? இங்கு தலைமை பாட்டாளி வர்க்கம் அல்லது குட்டிபூர்சுவா வர்க்கம் கொண்டிருப்பின், இதை தனித் தனியாக எப்படிக் கையாள்வது? இந்த நிலைமைகளில் பாசிசம் அரசின் பொது வடிவமாக இருக்கும் போது, தொழிலாளர் போராட்டம் எப்படி இருக்கும்?

+ உலகளவில் ஆயுதப் போராட்ட வடிவங்களின் அனுபவங்களை, ஏற்றுக் கொள்கின்றீர்களா? இல்லையா? கொரில்லாப் போராட்டம் முதல் அரசின் பலவீனமான பிரதேசத்தில் இருந்து பலமான பிரதேசத்தை சுற்றி வளைக்கும் வடிவங்களை, ஒரு பாட்டாளி வர்க்க புரட்சியில் பயன்படுத்த முடியுமா? இல்லையா? ஏன்?

+ பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்றால் என்ன? இது யாரை ஒடுக்கும்? எப்படி ஒடுக்கும்? இங்கு அழிக்கப்பட்ட வர்க்கம் புதிதாக உருவாகுமா?, உருவாகாதா? எப்படி? என்?

+ புரட்சியில் ஒடுக்கப்படும் வர்க்கம் புரட்சிக்கு பின்பு என்ன செய்யும்? அவ்வர்க்கம் புரட்சி செய்த கட்சியில் ஊடுருவுமா? இல்லையா? இல்லை எனின் ஏன்? இந்த வர்க்கங்கள் தனது நலனை அடைய கட்சியை எப்படி எல்லாம், எந்த வடிவங்களை எல்லாம் கையாளும்? விளக்குவீர்களா?

+  எப்படி, எதன் வழியில் அரசு மற்றும் வர்க்கங்கள் ஒழிக்கப்படும்? இதற்கு தலைமை தாங்குவது யார்? தலைமை பல கட்சி சார்ந்து இருக்குமா? எப்படி?, ஏன்? இதன் வர்க்கம் என்ன?

+ புரட்சிக்கு பிந்திய கம்யூனிச சமூகம் வரையிலான சமுதாயத்தில் எதிர் புரட்சி நடக்கும் வாய்ப்பு உண்டா, இல்லையா? இல்லை எனின் ஏன்? எப்படி?

+ எதிர்ப் புரட்சி நடக்கும் வாய்ப்பு இருப்பின் எதன் வழியில் நடக்கும்.? எப்படி? ஏன்? இதை பாட்டாளி வர்க்கம் எப்படி எதிர் கொள்ளும்?

+ சோவியத்திலும், சீனாவிலும் 1950 மற்றும் 1970 களின் இறுதியில் எதிர்ப்புரட்சி நடைபெற்றதை ஏற்றுக் கொள்கின்றீர்களா? இல்லையா? இல்லை எனின் எதிர்ப்புரட்சி இந்த நாடுகளில் எப்போது ஏற்பட்டது. அக்கால கட்டம் எது? அதற்கு பிந்திய அவ்வரசுகள் முதலாளித்துவமா? அல்லது எது? இதை விளக்குவீர்களா?

+ கட்சிக்குள் எதிர்ப் புரட்சி அணிகள் இருப்பார்களா, இல்லையா? இல்லை எனின் முரண்பாடுகள் எதன் அடிப்படையிலானவை? முரண்பாடுகள் புரட்சிகரமானவை எனின் கட்சி உருவான காலம் முதல் அது ஒரு நியதியா? பகை முரண்பாடாக இவை மாறியதில்லையா? சர்வதேச திரிபுகள் கட்சிக்கு வெளியில் உருவானதா அல்லது உள்ளும் உருவாகுமா? இது புரட்சிக்குப் பின் விதிவிலக்கா?

+ புரட்சிக்கு முந்திய பிந்திய கட்சியில் வேறுபாடு உண்டா? புரட்சிக்கு முந்தி கட்சிகளில் புரட்சிக்கு எதிரான கோட்பாடு உருவாகும்  எல்லாக் கட்சியிலும், வரலாற்றிலும் காணப்படும் போது, புரட்சிக்கு பிந்திய கட்சியில் அது அதிகமாகவே இருக்குமல்லவா? இதை மறுக்கின்றீர்களா? எப்படி? ஏன்?

+ புரட்சியில் பங்கு பற்றும் ஒருவர், வாழ் நாள் முழுக்க சரியான புரட்சிக்காரனாக இருக்க முடியுமா? இருக்க முடியும் எனின் இயங்கியலா? எப்படி? புதிய சமூக முரண்பாடுகள் ஏற்படாதா?

+ புரட்சிக்கு பிந்திய சமுதாயத்தில் பல கட்சி ஆட்சி இருக்க முடியுமா? புரட்சிக்கு வரும் போது ஏற்படும் பல கட்சிகளின் ஐக்கிய முன்னணி தொடர்ச்சியாக நீடிக்க முடியுமா? எது வரை நீடிக்க முடியும்? இந்த நீட்சி தகர்கின்ற போது முரண்பாடு வன்முறையாக வளர்ச்சி பெறுமா? பெறாதா? ஏன்? எப்படி? இதை பாட்டாளி வர்க்கம் எப்படி கையாளும்?

+ பாட்டாளி வர்க்கம் பல கட்சியை கொண்டிருக்க முடியுமா? முடியாதா? முடியும் எனின் வர்க்கத்தின் கட்சி என்பது என்ன? வர்க்கம் வேறுபட்ட கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்த முடியுமா? கட்சி என்பது ஒரு வர்க்கத்தின் கட்சியாக இருக்கும் போது, வர்க்கம் பல கட்சியை பிரதிநிதித்துவம் செய்ய முடியுமா? எப்படி? ஏன்? இங்கு கட்சி வர்க்கத்தை பிரதிபலிப்பதில்லையா?

+ புரட்சிக்கு பிந்திய சமுதாயத்தில் பல கட்சி முறை இருப்பின் தேர்தலும், அதன் ஜனநாயகமும் எப்படி இருக்கும்; அதாவது பல கட்சிகள் மக்களிடம் சென்று வாக்கு கேட்கும் முறை (முதலாளித்துவ பராளுமன்ற முறை வடிவில்) இருக்குமா? இல்லை எனின் ஜனநாயகம் எப்படி பாதுகாக்கப்படும்;? அப்படியெனின் பாட்டாளி வாக்க சாவாதிகாரம் என்றால் என்ன?

+ பல கட்சியை யார் ஏற்றுக் கொள்வது? அதன் வரையறையை யார் தீர்மானிப்பது? இது புரட்சிகர கட்சி அல்லது பிற்போக்கு கட்சி என்பதை எது, எவை வரையறுத்து, யார் கட்டுப்படுத்துவது?

+ பல கட்சி முறையில், பல கட்சிகள் காலத்துக்கு காலம் தமது பொருளாதார அடிப்படையை வைத்து போராடுமா? அது எப்படி என்ன பொருளாதாரமாக (வர்க்க அடிப்படையில்) பொதுவாக வகைப்படுத்துவீர்களா? இதன் அடிப்படையிலா தேர்தலில் நிற்க்கின்றது? வாக்குறுதியைக் கொடுக்கின்றது?. விளக்குவீர்களா?

+ ஜனநாயகம் என்றால் என்ன? சோசலிச சமூகத்தில் ஜனநாயகம் எப்படி இருக்கும்? யார் கட்டுப்படுத்துவார்கள்? பல கட்சியின் ஜனநாயக எல்லை என்ன? அதை யார் தீர்மானிப்பது?

+ இலக்கியம், கலை... போன்ற துறைகள் எப்படி இருக்கும்? இங்கு பாட்டாளி வர்க்க தலையீடு இருக்குமா? இருக்காதா? அல்லது இவை வர்க்க வகைப்படுத்தலுக்கு அப்பாற்பட்டதா? விளக்குவீர்களா?

+ கோட்பாட்டு விவாதம் என்று எதை கருதுகின்றீர்கள்? சம்பவங்கள், நிகழ்ச்சிகளை தொகுப்பது கோட்பாட்டு விவாதமா? சம்பவங்களும், நிகழ்ச்சிகளும் ஒரு கோட்பாட்டு வடிவத்தில் அல்லவா இருக்கின்றது. இல்லையா? எப்படி? அதை உங்களால் விவாதிக்க முடியுமா?

+ ஏகாதிபத்தியம் தேசங்களின் தேசியத்தை அழிக்கின்றதா? இல்லையா? இதற்கு எதிராக பாட்டாளி வர்க்கம் போராடுவது சரியானதா? இல்லையா? இல்லை எனின் எப்படி? சரியெனின் எப்படி போராடுவது?

+ தேசிய முதலாளித்துவத்தை, ஏகாதிபத்திய தரகு முதலாளித்துவமும், தேசம் கடந்த பன்நாட்டு நிறுவனங்களும் அழிக்கின்றதா இல்லையா? அப்படியெனின் பாட்டாளி வர்க்க நிலை தேசிய முதலாளித்துவத்தின் பால் என்ன? இதை எதிர்ப்பதா? ஆதரிப்பதா? எதிர்ப்பது எனின் ஏன்? ஆதரிப்பது எனின் எப்படி?

+ ஸ்டாலின் கால ஆட்சி, அதிகார வர்க்க ஆட்சி என்றால், எப்படி நீங்கள் வேறுபடுகின்றீர்கள்? அதாவது அதன் கோட்பாட்டு உள்ளடக்கம் என்ன? அரசு வடிவத்தில் எப்படி, எதனூடாக எப்படி அரசை மாற்றியிருக்க வேண்டும்? நீங்கள் ஆட்சியில் இருந்தால் எப்படி எதைச் ஸ்ராலினில் இருந்து வேறுபட்டுச் செய்திருப்பீர்கள்? ஸ்டாலின் ஒரு போராட்டத்தை செய்திருப்பின் எப்படி இதை கையாளுவீர்கள்? அதிகாரத்தை கைப்பற்றும் வடிவமாக மாறின் என்ன செய்திருப்பீர்கள்?

+ சோவியத்யூனியனில் 1930 களில் விசாரணைக்கு உள்ளான போல்சுவிக் தலைவர்கள், எப்படியான போராட்டத்தை கட்சியில் நடத்தினர்? கட்சிக்கு வெளியில் எப்படியான போராட்டத்தை நடத்தினர்? கட்சிக்குள்ளும், வெளியிலும் நடத்திய போராட்டம் ஜனநாயக மத்தியத்துவத்தை அடிப்படையாக கொண்டிருந்ததா? எப்படி? அவர்கள் வன்முறை சார்ந்த வடிவங்களை கையாண்டார்களா? அல்லது இல்லையா? வன்முறையை தயார் செய்ததாகவும், அதில் பங்கு பற்றியதாகவும், அதில் ஈடுபட்டதாகவும் கொடுக்கும் இன்றைய வாக்கு மூலம் பற்றி என்ன நினைக்கின்றீர்கள்? ஏன்?  அவர்கள் கட்சியில் வைத்து போராடியவை என்ன? கட்சியில் தோற்ற போது, அதை எப்படி தொடர்ந்து கையாண்டனர்.

+ புரட்சி எல்லா நாடுகளிலும் ஒரே நேரத்தில் ஏற்படுமா? எப்படி? இல்லாத பட்சத்தில் ஒரு நாட்டில் உருவாகும் புரட்சியை முன்னெடுப்பதா இல்லையா? எப்படி? ஏன்?

+ அடுத்து "பின்நவீனத்துவம்" மூன்றாம் உலக நாடுகளின் பொருளாதார வடிவத்துக்கு பொருத்தமில்லை என்பது, ஒரு தத்துவ விளக்கமா? எப்படி? பின்நவீனத்துவம் ஒரு வர்க்கத்தினை பிரதிபலிக்கின்றது எனின், அதன் வர்க்க மூலம் என்ன? அதன் மீதான கோட்பாட்டு விவாதங்கள் என்ன?

+ பின்நவீனத்துவம் ஐரோப்பாவில் "ஒரு பகுதியின் வர்க்கப் பிரிவின் |முரண்பாடுகளை| இயல்புகளை சொல்ல எழுந்த சிந்தனை.." என்று சமரில் தமிழரசன் முன்வைத்த விளக்கம் ஒரு பகுதி மக்களின் வர்க்க முரண்பாட்டை விளக்கி விடுகின்றதா? எப்படி? ஒரு பகுதி வர்க்க முரண்பாட்டை எப்படி விளக்கியது? அது எந்த வர்க்கத்தை எப்படி பிரதிநிதித்துவம் செய்தது? அது எந்த வர்க்கத்தை எதிர்த்து எப்படி விளக்கியது? பின்நவீனத்துவம் மார்க்சியத்துக்கு எதிராக உருவானதா? இல்லையா? பின்நவீனத்துவத்துக்கும், ஏகாதிபத்தியத்துக்கும் இடையில் என்ன உறவு? எப்படி? என்ன வேறுபாடு? ஒரு பகுதி வர்க்கப் பிரிவின் பின்நவீனத்துவம் விளக்கியது எனின், விளக்கிய வர்க்கத்துக்கும் ஏகாதிபத்தியத்துக்கும் என்ன உறவு இருந்தது? இது மூன்றாம் உலக நாட்டுக்கு ஏன் பொருந்தாது?

+ பின்நவீனத்துவம் ஒரு கோட்பாடாக, கலவையாக வைக்கப்படும் போது, அது எப்படி ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக முன்வைக்கப்படுகின்றது என்பதன் தத்துவார்த்த ஆய்வுகளை வைக்க முடியுமா?

+ இலக்கியம் பற்றி உங்கள் கருத்தை எனது கட்டுரை மீது முன்வைக்கலாமே? அதை விட்டு விட்டு முத்திரை குத்துவதில் அரசியல் பிழைப்பு அவசியம் தானா?

+ இலக்கியம் வர்க்கம் கடந்ததா? இல்லையா? ஏன்? எப்படி? வர்க்க அடிப்படை கொண்டது எனின் வர்க்கப் போராட்டத்துக்கும், வர்க்க சர்வாதிகாரத்துக்கும் உட்ப்பட்டதல்லவா? இல்லை எனின் நாசிய, ஆணாதிக்க..... இலக்கியங்களை எப்படி, எந்த சர்வாதிகாரம் கட்டுப்படுத்தும்? இதை நீங்கள் கருதும் மார்க்சிய வழியில் முன் வைக்கவும். நீங்கள் கருதும் மார்க்சியத்துடன் சம்பந்தம் இல்லாத ஸ்ராலினை இழுத்து, அதை வைத்து காலத்தையும், கதையையும் ஓட்ட வேண்டாம்.

+ மறு வாசிப்பு என்பது மார்க்சியமா? பின்நவீனத்துவமா? மார்க்சியம் முன்வைக்கும் விமர்சனம், சுயவிமர்சனத்துக்கு பதில் பின்நவீனத்துவ வாசிப்பு, மறுவாசிப்பை உங்கள் மார்க்சியம் எப்படி ஏற்றுக் கொள்கின்றது.? விமர்சனம், சுயவிமர்சனம் எப்படி உங்கள் மார்க்சியத்தில் தவறாகி மறுவாசிப்பு மார்க்சியமானது? விளக்க முடியுமா?

1.5 மில்லியன் (15 லட்சம்) போல்சவிக்குகள், இலக்கியவாதிகள், புத்திஜீவிகளை ஸ்டாலின் கொன்றார் என்று அடித்து சத்தியம் செய்கின்றீர்கள். நல்லது. 15 லட்சம் பேரைக் கொன்றார் என்ற தரவுக்கு உங்கள் அடி மூல ஆதாரம் என்ன? போல்சவிக் கட்சியில் நீங்கள் குறிப்பிடும் கொலை நடந்த காலத்தில், எத்தனை லட்சம் பேர் கட்சி உறுப்பினராக இருந்தனர்? எத்தனை லட்சம் புத்திஜீவிகள், இலக்கியவாதிகள் இருந்தனர்? தனித்தனியாக எத்தனை பேர் கொல்லப்பட்டனர் என்பதை அந்த மூல ஆய்வு கொண்டிருக்குமல்லவா? அதை அலட்டாமல் கொல்லாமல், யார் எங்கே? எப்போது? சோவியத் ஆவணக் காப்பகத்தில் ஆய்வு செய்து, எப்போது? முன்வைத்தனர் என்பதை முன்வைக்கவும்? கடந்த கால நிகழ்ச்சிகள் அனைத்தும் ஆவணமாக இருப்பதால், அதை அடிப்படையாக கொண்டே நீங்கள் தரவுகளை தொகுக்கின்றீர்கள் எனின், அதை நேர்மையாக வைக்கவும்? இல்லை உத்தேசம் எனின் அது ஏகாதிபத்திய எச்சில் தெறிப்பில் இருந்து தொகுப்பது அல்லவா? கொல்லப்பட்டோர் ஆவணம் அழிக்கப்பட்டுள்ளது என்று நீங்கள் கூறுவீர்கள் எனின், அதன் ஆதாரம் என்ன?

+  ஸ்டாலின் கால கட்டத்தை எப்படி வரையறுக்கின்றீர்கள்? அது சோசலிசம் இல்லை என்றால் அது சுரண்டல் அரசல்லவா? சுரண்டல் அல்லாத, சோசலிசமல்லாத ஒரு வர்க்க சமுதாயம் நிலவ, நீடிக்க முடியுமா?  நிலவ முடியும் எனின் அதன் வர்க்க ஆய்வு என்ன? சீனா பற்றிய நிலைப்பாடு என்ன? ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நின்றதா? இல்லையா? எப்படி? சம்பவங்கள் அல்ல இங்கு கோட்பாடுகளைக் கோருகின்றேன்? முன்வைக்க முடியுமா?

+ ஸ்டாலின் கால கட்டத்தில் நன்மைகள் இருக்கவில்லை. இராண்டாம் உலகப் போரில் நாசிகளை தோற்கடித்த நிகழ்ச்சிகளை எல்லாம் ஏற்றுக் கொள்ளவில்லை. அல்லது  சோவியத் தீமைகள் எல்லாம் ஸ்டாலின் மீதும், நன்மைகள் எல்லாம் ஸ்ராலினுக்கு தொடர்பு இல்லை என்கின்றீர்களா? இதன் தத்துவார்த்த விளக்கம் மற்றும் அடிப்படை என்ன?

+ 1960 களின் குருசேவ்வின் திரிபு வாதம் தொடர்பாக சர்வதேச கம்யூனிஸ் கட்சிகளுக்கிடையில் நடந்த கோட்பாட்டு விவாதம் மீதான, உங்கள் மார்க்சிய விவாதம் என்ன? இதன் மீதான உங்கள் கோட்பாட்டு விரிவாக்கம் என்ன?

+ புரட்சிக்கு பின்பு புரட்சியின் வடிவம் என்ன? அது எப்படி, எதன் வழியில் நிகழும்? புரட்சிக்கு பின்பு புரட்சியை பாதுகாப்பது, புரட்சியை நடத்துவதை விட கடினமானது என்ற மார்க்சிய விதியை எப்படி? நீங்கள் விளக்குகின்றீர்கள்? இங்கு பண்பாட்டு, கலாச்சார புரட்சி அவசியமா, இல்லையா. இல்லை எனின் ஏன்? எப்படி புரட்சியை தொடர்வது?

+ புத்தக புத்திஜீவி மாhக்சிய வாதிக்கும், நடைமுறை மார்க்சியவாதிக்கும் உள்ள வேறுபாடு என்ன? எப்படி இதை வகைப்படுத்துகின்றீர்கள்?

+ மார்க்சியம் என்றால் என்ன? அதன் வரையறை என்ன? யார் மார்க்சியவாதி? அதன் வரையறை என்ன? ஒரு மார்க்சியவாதி எதை அடிப்படையாக ஏற்றுக் கொண்டு எதைச் செய்ய வேண்டும்?

+ பின்நவீனத்துவத்தை எதிர்க்க வெளிக்கிட்டு, அதுவாக மாறி விளக்க வெளிக்கிட்ட பரிதாபம் வேடிக்கையானது. விளிம்பு மனிதன் பற்றி கோட்பாட்டில் அல்ல, நடைமுறை விளக்கத்தில் எதிர்க்க கிளம்பி, பின்பு விளிம்புக்கு உதாரணம் கொடுக்க பின்நிற்கவில்லை. கிட்லர், ஸ்டாலின் கூட விளிம்பு மனிதர்கள் என்று அவரின் மார்க்சியம் கூறத் தயங்கவில்லை? விளிம்பை புதிய மார்க்சிய அகராதியில் இணைத்த பெருமை அவரைச் சாருக! விளிம்பு என்பது என்ன? விளிம்பு ஒரு பொருளாக சுயமாக இருக்க முடியுமா? ஒரு பொருளில் விளிம்பு இருக்க முடியுமே ஒழிய, விளிம்பு சுயமாக இருப்பதில்லை அல்லவா! நீங்கள் ஸ்டாலின் அல்லாத மார்க்சிய அகராதியில் இணைத்த விளிம்பு மனிதன், எதன் விளிம்பு மனிதன்? வர்க்கத்தின் விளிம்பு மனிதனா? இனத்தின் விளிம்பு மனிதனா? சாதியின் விளிம்பு மனிதனா? ... எதன் விளிம்பு மனிதன்? எப்படி? இங்கு வர்க்க பகுப்பாய்வை பின்நவீனத்துவத்துக்கு தாரைவார்த்துக் கொடுப்பது அல்லவா இவரின் மார்க்சியமாகி விடுகின்றது.

+ கிட்லரையும், ஸ்ராலினையும் ஒப்பிடும் சாருநிவேதாவை எதிர்த்து கட்டுரைக் குறிப்பு எழுத வெளிக்கிட்டவர், அதையே மீளச் செய்வது ஸ்டாலின் எதிர்ப்பின் அரசியல் முடிவாகும். அதை அவர் "சாருநிவேதா மட்டுமல்ல றயாகரன் கூட பேசுவது கிடையாது" என்று ஸ்டாலின் கால நடவடிக்கைகளை சுட்டிக் காட்டி, சாருநிவேதா ஸ்ராலினையும் கிட்லரையும் ஒப்பிட்ட அதே பாணியில் மீள ஒப்பிட்டு ஒப்புவிக்கின்றார். நீங்கள் கருதும் ஸ்டாலின் கால விடயங்களை சாருநிவேதா பலமுறை உங்களைவிட அதிகமாக பேசியிருக்க, அதை என்னுடன் சேர்த்து ஒப்பிட்டு பூச் சுற்றுவது ஏன்? இதைத் தான் இந்த மார்க்சிய விரோத கும்பல் எனக்கு எதிராக முன்னிறுத்த, அதையே நீங்கள் மீள எனக்கு எதிராக முன்வைக்கின்றீர்கள். ஏகாதிபத்திய ஸ்டாலின் எதிர்ப்புக்கும், உங்கள் எதிர்ப்புக்கும் இடையில் வேறுபாடு இல்லாத போது, ஸ்ராலினை எதிர்ப்பதில் சாருநிவேதாவுடன் நீங்கள் ஒன்றுபட்டு நிற்கின்றீர்கள். இப்படி இருந்தபடி, சாருநிவேதா ஸ்டாலின் பற்றிய உங்கள் பார்வை சார்ந்து, ஸ்டாலின் கொடுமைகளை பேசவில்லை (அவர் ஏகாதிபத்திய எல்லையில் முழுமையை பேசுகின்றார் அல்லவா!) என்றவுடன், என்னுடன் இட்டுக் கட்டுவது மகா மோசடித்தனமாகும். என்னுடன் எந்த விதத்திலும் நெருங்கி வர முடியாத, ஏகாதிபத்திய கழிசடை பண்பாட்டு இலக்கியவாதியான சாருநிவேதாவை, என்னுடன் இணைத்து காட்டுவதும், உங்களுடன் ஸ்ராலினை எதிர்ப்பதில் உடன்படும் அவரை மூடித் திரித்துக் காட்டுவது ஏன்? உங்களுக்கும் அவருக்கும் உள்ள வேறுபாடு, சொல்லுகின்ற வடிவத்திலேயே ஒழிய  உள்ளடக்கத்தில் அல்ல.

+ நீங்கள் குறிப்பிடும் 15 லட்சம் படுகொலை முதல் ஏகாதிபத்தியம் சொல்லும் கம்யூனிச பத்து கோடி படுகொலை வரை |இரயாகரன் பேசவில்லை| என்பது தவறானது. நாங்கள் அதைப் பற்றி பேசுகின்றோம். ஆனால், அதை நாங்கள் உங்கள் மார்க்சியத்தை விட்டோடும் ஓடுகாலி அரசியலில் இருந்தல்ல? நாங்கள் மார்க்சிய கோட்பாட்டின் அடிப்படையில்  நடைமுறைகளை ஆய்வு செய்து சுயவிமர்சனம், விமர்சனம் என்ற அடிப்படையில் எல்லாவற்றையும் ஆய்வு செய்கின்றோம். இந்த வகையில் எமது ஆய்வு சர்வதேசிய மயமானவை. இதற்கு யாரும் இது வரை கோட்பாட்டு ரீதியாக பதிலாளித்ததில்லை. மாறாக அவதூறுகள் மூலம் தூற்றுவதே அதன் வக்கிரமாகவும், அதன் உள்ளடக்கமாகவும், அதன் அரசியலாகவும்; வெளிப்படுகின்றது.

இக் கட்டுரை எழுத உதவிய நூல்கள்

1.L'économie mondiale 1820 - 1992 -analyse et statistiques

2.புதிய கலாச்சாரம்

3.L' union soviétique - Denis Brand -1987

4.L'EVENEMENT DU JEUDI - staline... ஸ்ராலினுக்கு எதிரான சிறப்பு இதழ்

5.L'HISTOIRE - october 1917 - la revolution russe - le communisme ebranle le monde -இலக்கம் 206- சோவியத் புரட்சிக்கு எதிரான சிறப்பு இதழ்

6.L'HISTOIRE -les crimes du communisme -cent millions du morts? -இலக்கம் 247 கம்யூனிசத்துக்கு எதிரான சிறப்பு இதழ்

7.L'ECONOMIE DE L'URSS - PIERRE Carriere -1984

8.ஸ்டாலின் -எஸ்.இராமகிருஷ்ணன்

9.ஸ்டாலின் பிரச்சினை -பரிமானம்

10.மாபெரும் விவாதம்

11.டிராக்ஸ்கி வாழ்க்கை வரலாறு - கதிர் ராமசாமி

12.ரஷ்யப் புரட்சி இலக்கிய சாட்சியம் -எஸ்.வி.ராஜதுரை

13.இரு முக்கிய முடிவுகள் -த.மா.அ.க.இ.பொ.க (மா.லெ) தமிழ்நாடு

14.சோவியத் யூனியனின் உடைவு -றெஜிசிறிவர்தனா

15.மார்க்ஸ் முதல் மாசேதுங் வரை -ஜார்ஜ் தாம்சன