Language Selection

புதிய கலாச்சாரம் 2005
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

 

 அப்புக்களும் ரகசிய செல்பேசிகளும் தேவைப்படாத அமைப்பாக இயங்குவதற்கான சாத்தியங்களைப் பற்றி அவர்கள் யோசித்துப் பார்க்க வேண்டும். இதற்கு, ஜெயேந்திரரையும் அவரது அரசியல் நடவடிக்கைகளையும் தாண்டிச் செல்லும் மனவலிமையை மடமும் அதன் பக்தர்களும் பெறவேண்டும். மடத்தின் நடவடிக்கைகளை வெளிப்படையானதாக ஆக்குவதன் மூலம் பொதுமக்களின் கண்காணிப்பு என்ற பாதுகாப்புக் கவசத்தைப் பெற முடியும்.


 எல்லாவற்றுக்கும் மேலாக, சாதி அமைப்பு மற்றும் பெண்கள் குறித்த பார்வை ஆகியவற்றை மறுபரீசிலனை செய்து காலத்திற்கேற்ப தன்னைப் புதுப்பித்துக் கொள்ளவும் தயாராக வேண்டும். இதன் மூலம் ஒரு குறிப்பிட்ட சாதி சம்பிரதாய வட்டத்தைத் தாண்டிப் பரவலான அளவில் சமூகத்தின் நன்மதிப்பையும் ஆதரவையும் பெற முடியும். இவற்றையெல்லாம் செய்யத் தவறினால் இது போன்ற மடங்கள் விரைவில் அருங்காட்சியகத்தின் ஓர் அங்கமாக மாறுவதைத் தவிர்க்க இயலாது''


 — என்று "பொறுப்புணர்வுடன்' எழுதியிருந்தது.


 காலச்சுவடை பார்ப்பனியத்தின் இலக்கியப் பத்திரிக்கை என்று நாங்கள் அழைப்பதை குறுகிய  தட்டையான  விசமத்தனமான  அவதூறான பார்வை என்று காலச்சுவடு உண்மையாகவே கருதக்கூடும். அது உண்மையானால், உண்மைகள், பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம் என்று மழுப்பாமல், பசப்பாமல், நழுவாமல் கீழ்க்கண்ட கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டும்.


 1. மடம் சந்தி சிரிப்பதைக் கண்டு பலரும் மகிழும்போது, காலச்சுவடு மடத்துப் பக்தர்களின் துக்கத்தில் பங்கெடுத்துக் கொண்டு ஆறுதலும், ஆலோசனையும் சொல்வது ஏன்?


 2. உழைக்கும் மக்களுக்கெதிரான சங்கர மடத்தை இழுத்து மூட வேண்டுமென ஒரு சாரார் பெரும்பான்மை மக்களிடத்தில் பிரச்சாரம் செய்யும்போது, சங்கரமடத்தைப் புனரமைக்குமாறு பார்ப்பனர்களிடம் காலச்சுவடு கோரிக்கை வைப்பது ஏன்?


 3. மடத்தை உண்மையான சமய  ஆன்மீக அமைப்பாக மாற்ற வேண்டும் என்பதன் விளக்கம், இலக்கணம், வழிமுறை, திட்டம் என்ன? இன்று அத்தகைய உண்மை ஆன்மீகம் ஏதேனும் ஒன்று எங்கே என்ன செய்து கொண்டிருக்கிறது என்று எடுத்துக் காட்ட முடியுமா? "2500 ஆண்டு வரலாறு' கொண்ட சங்கர மடம் எப்போது முதல் பொய்மையான ஆன்மீக அமைப்பாக மாறியது என்பதை விளக்க முடியுமா?


 4. பார்ப்பன இந்து மதம்  மடங்களின் உண்மையே அவற்றின் மக்கள் விரோதமும், பொய்மையும்தான் என அம்பேத்கர், பெரியார் முதல் பொதுவுடைமையர் வரை பிரச்சாரம் செய்தனர்; செய்கின்றனர். இது குறித்து காலச்சுவடின் கருத்தென்ன?


 5. அப்பு, ரகசிய செல்பேசி கிடக்கட்டும். அம்பானி, பிர்லா, அப்துல்கலாம், சேஷன் போன்றோர் வருவதும், கோடிகோடியாய் நன்கொடை கொடுப்பதும் பற்றி உங்கள் கருத்தென்ன? நன்கொடை, அரசியல்  தொழில் தரகு பேரங்களின்றி சங்கரமடம் எப்படி இயங்க முடியும்?


 6. அப்புவின் அதே தொழில் நேர்த்தி விரிந்தும், பரந்தும், தேசிய அளவிலும், மனவெளி அளவிலும், ஆரவாரமாகவும், அமைதியாகவும், தட்டையாகவும், நுட்பமாகவும் முதலாளிகள், அதிகாரிகள், ஆளும் வர்க்க அரசியல்வாதிகள்... ஏன் சிறு பத்திரிக்கைச் செயல்பாடுகளிலும் கூட இல்லை என்று சொல்ல முடியுமா?


 7. அப்பு என்ற "லோ கிளாஸ் தாதா' சங்கராச்சாரியின் பக்தராக விரும்பும் உரிமையை மறுப்பதும், கேவலப்படுத்துவதும் உங்கள் கண்ணோட்டத்தின்படி பாசிசமில்லையா?


 8. 120 டிரஸ்டுகள், நாடு முழுவதும் கிளை மடங்கள், பல்லாயிரம் ஏக்கர் விளைநிலங்கள், பலகோடி மதிப்புள்ள ரியல் எஸ்டேட் நிலங்கள், நட்சத்திர மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகள் மொத்தத்தில் 6000 கோடி முதலாளியான காஞ்சி மடம் வெளிப்படையாக இயங்குவதும், பொதுமக்களின் கண்காணிப்புக்கு உட்படுவதும் எப்படி என்ற அந்தச் சாணக்கிய தந்திரத்தை விளக்க முடியுமா?


 9. ஜெயேந்திரரின் கைதை எதிர்த்து வெறிகொண்டு எழுதும் தினமலருக்கும், காஞ்சி மட நடவடிக்கைகளுக்கு பல்வேறு விதங்களில் ஸ்பான்சர் செய்யும் ஸ்ரீராம் சிட் பண்ட் நிறுவனத்திற்கும் காலச்சுவடுடன் உள்ள விளம்பரம் அல்லது புரவலர் தொடர்பை வெளிப்டுத்த முடியுமா? குறைந்த பட்சம் காலச்சுவடின் வாசகர் கண்காணிப்புக்கு உட்படுத்த முடியுமா?


 10. ""சாதி அமைப்பு, பெண்கள் குறித்து மறுபரிசீலனை செய்து காலத்திற்கேற்றவாறு காஞ்சி மடம் புதுப்பித்துக் கொள்வது'' என்பதை ஒரு தலித் சங்கராச்சாரியாக்கப்பட வேண்டும், ஒரு பெண் ஸ்ரீ காரியத்திற்கும், ஒரு சூத்திரர் மடமேலாளர் பதவிக்கும் நியமிக்கப்பட வேண்டும் என்பதாக நாங்கள் அர்த்தப்படுத்தலாமா?


 11. இவை நடைமுறை சாத்தியமற்ற மிகக் கடுமையான கோரிக்கைகள், ஏதோ கொஞ்சம் தலித்துக்கள், விளிம்பு நிலை மக்கள் பெண்களோடு மடம் நெருக்கமாக்கிக் கொள்ள வேண்டுமெனில், ஜெயேந்திரர் இப்போதே அதைச் செய்யவில்லையா? என்ன, தற்போது பெண்கள் தொடர்பில் பார்ப்பனப் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள், இதில் ஏனைய சாதிப் பெண்களையும் சேர்க்கச் சொல்லி கேட்க வேண்டுமா?


 12. வேத காலந்தொட்டு இன்றைய சங்க  பரிவார காலம் வரை பார்ப்பனியம் தனது அடிப்படைக் கொள்கைகளைக் கைவிடாமலே பார்ப்பன எதிர் மரபுகளை உள்வாங்கியும், அழித்தும் தன்னைப் புதுப்பித்துக் கொண்டுதானே வருகிறது? சங்கரமடத்தின் பன்முக நடவடிக்கைகளும் இந்தப் பரிணாமத்தில் வளர்ந்தவைதானே?


 13. பார்ப்பனியத்தின் வருண  சாதி எனும் மக்கள் விரோத தர்மத்தைக் கைவிடாமலேயே, சங்கர மடம் தனது நிழல்உலக, அரசியல் தொடர்புகளைக் கைவிட்டு எளிய உண்மையான சமய அமைப்பாக மாறவேண்டும் என்று கூறும் கல்கி  குருமூர்த்தி  காலச்சுவடு ஆகிய மூவருக்கும் உள்ள தொப்புள் கொடி உறவென்ன?


 14. ஜெயேந்திரர் கைது மூலம் பிராமண  பிராமணரல்லாத இந்துக்களைப் பிளவுபடுத்த சதி நடக்கிறது என்று ஆர்.எஸ்.எஸ். கூறுவதற்கும், சங்கர மடம் குறிப்பிட்ட சாதி சம்பிரதாய வட்டத்தைத் தாண்டி பரவலான அளவில் சமூகத்தின் நன்மதிப்பைப் பெற முடியும் என்று காலச்சுவடு கூறுவதற்கும், ஆறு வேண்டாம், ஒரே ஒரு வித்தியாசத்தையாவது காட்ட முடியுமா?


 15. வரலாற்றின் குப்பைத் தொட்டிக்குள் தற்போது ஓரளவும் எதிர்காலத்தில் முழுவதுமாகவும் வீசப்பட இருக்கின்ற சங்கரமடத்தை அருங்காட்சியகத்தில் வைத்து (அதுவும் தொன்மையற்ற 160 ஆண்டு புரோக்கர் தொழில் செய்து வந்த மடம்) அழகு பார்க்க நினைப்பதை காலச்சுவடின் அழகியல் கோட்பாடு என்று கொள்ளலாமா?


பின்குறிப்பு:


 இவ்விடத்து நோட்டீஸ் கண்ட 60 தினங்களுக்குள் கலையுலக பிரம்ம ஸ்ரீ காலச்சுவடு கம்பெனியார் உரிய ஆன்சரை அனுப்பாத பக்ஷத்தில் ""பிராமணியத்தின் லேட்டஸ்ட் சாஹித்ய பத்ரிகா'' என்ற எமது விருதினை எவ்வித ஆ÷க்ஷபணையோ எதிர்வாதமோ இன்றி அவாளே ஸ்வீகரித்துக் கொண்டதாக ப்ரகடனம் செய்யப்படுகிறது.


ஆ இளநம்பி