09212023வி
Last updateபு, 02 மார் 2022 7pm

நான் பார்த்த போரும் எனைப் பார்த்த ஊரும்…! – (தொடர் : 02)

பனிப் புகார்
கும்மிய இருளுக்குள்
அதி காலை
கிடக்கின்ற வேளையிலே..,

பனங் கள்ளுச் சிறிதுவிட்டு

கரைத்துப் புளிக்க வைத்த
மாக்கலவை நுரை பொங்கி
பானைக் கழுத்துவரை
எம்பித் ததும்பி எழ..,

இலாந்தர் விளக்கேந்தி ஃ அதை
சுமந்துவரும் செல்லமாச்சி
வாழ்ந்த இடம் சிறு குறிச்சி.

 

ஊரான ஊரிதனின் மத்தியிலே
ஓர் குடிசைக் கொட்டிலிலே
சம பங்காய்
ஐந்து கண்ட கல்லிருத்தி
அதன் மேலே
இரு வட்ட இரும்புக் கல்லேற்றி
அடுப்பெரித்து தோசை சுடும்
ஊரிதுவோ பெருங்குறிச்சி.

இடி சம்பல் அரை சம்பல்
அதனோடு புளிக்குழம்பும்
தொட்டிடச் சுவையான
கம கம தோசைமணம்
ஊரெங்கும் பரவிவர
ஓர் காலை
அளகாக விடிந்துவரும்.

இப்படி..,
காலை உணவாக
அப்பம் தோசை இடியப்பமென
வாய்ருசித்த எந்தனுக்கு..!?

அந்த குடிசைக் கொட்டில்
இருந்த இடங்களிலும்
நீர்தேங்கி குன்றும் குளமுமாக…!?

இதுவா எனது ஊர்..!?
இதுவா எனது மண்..!!?

ஆயினும்…
எனது அங்கலாய்ப்பின் மிகுதியால்
எந்தனின் அங்கதத்தின் விகுதிதேடி
தொடர்ந்தும் என் தெருவில்
நடக்கின்றேன் நான்.

(தொடரும்)

மாணிக்கம்

16/04/2011

தொடரின் முன்னைய பதிவுகளை வாசிக்க:

1.நான் பார்த்த போரும் எனைப் பார்த்த ஊரும்…! – மாணிக்கம் (தொடர் : 01)


கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்