Language Selection

பரமன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

1

முள்ளிவாய்க்கால் அவலத்தின் பின் வந்த சில மாதங்களின் பின் "வன்னியில் என்ன நடந்தது? களத்திலிருந்து ஓர் அனுபவப் பதிவு" என்ற தலைப்பில் காலச்சுவடு ஒரு கட்டுரையை வெளியிட்டது. அக்கட்டுரை பற்றி எழுதிய தோழர் இரயாகரன் அவர்கள், காலச்சுவட்டில் வெளிவந்த கட்டுரை முள்ளிவாய்க்காலில் இருந்து இறுதி யுத்தத்தின் பின் வெளியேறி அரச இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த அகதிகள் முகாமில் தடுத்து வைக்கப்பட்டவரால் எழுதப்படவில்லை என் விவாதித்தார்.

”பெட்டை” என்ற பெயரில் எழுதும் கனடாவில் உள்ள பெண் ஒருவர், அதற்கு மாறாக கருத்து தெரிவித்தார் தனது பின்னூடத்தில்.

ஆனால் இன்று மூன்று வருடங்களின் பின் பல உண்மைகள் மேற்படி காலச்சுவட்டில் வெளிவந்த கட்டுரை மூலம் வெளிவந்துள்ளது .

அதை எழுதியவர் சிவராசா கருணாகரன் என்பவர் ஆவார். இவர் ஈரோஸ் இயக்கத்தில் இருந்து இலக்கியம் செய்தவர். பின்பு முள்ளிவாய்க்கால் வரை புலிகளின் கருத்தியலைப் பரப்பும், அதன் பிரச்சாரப்பிரிவின் தலைமையிலும், அரசியல் ஆய்வுப்பகுதிலும் செல்வாக்குமிக்கவராக வலம் வந்தவர். இவர் முள்ளிவாய்க்காலில் இருந்து வெளியேறி மிக கொஞ்ச நாட்களே முகாமில் இருந்தவர். இவர் புலிகளின் செல்வாக்குமிக்க பிரச்சார - அரசியல் ஆய்வுப் பகுதியில் தலைமைப்பாத்திரம் வகித்திருந்தாலும், இலங்கை அரச படைகள் இவரை எந்தவித தடுப்புமுகாமுக்கும் அனுப்பவில்லை. இவர் தனது குடும்பத்துடன் இணைக்கப்பட்டு யாழ்ப்பாணம் அனுப்பபட்டார்.

புலிகளால் வற்புறுத்தி கடத்தப்பட்ட 16 வயதுக்குக் குறைந்த பெண்குழந்தைகள் கூட அரசின் தடுப்புமுகாமில் இரு வருடங்களுக்கு மேல் மறுவாழ்வு பயிற்சி என்ற பெயரில் தடுத்து வைக்கப்பட்டனர்.ஆனால் கருணாகரன் போன்றோர் "தப்பித்தனர்”.

கருணாகரனைப் போல அவருடன் புலிகளில் அரசியல் செல்வாக்குமிக்க திருநாவுக்கரசு, நிலாந்தன் போன்றவர்களும் தப்பித்தனர். அவர்கள் மே 18 இற்கு சில நாட்களின் பின்னரே இந்தியாவுக்கு தப்பியதாக தகவல் வந்தது.

ஆனால் இன்று வெளிவந்துள்ள செய்திகளின்படி மேற்கூறிய இருவரும், இன்னும் பலரும் இந்தியாவுக்கு ஏதோ ஒரு சக்தியால் இலங்கை விமான நிலையத்தின் ஊடாகவே அனுப்பபட்டதாக தெரியவந்துள்ளது. அதே போன்று, கருணாகரன் போன்ற சிலரை இலங்கையிலேயே விடுவித்ததும் அதே சக்தி தான். அந்த சக்தி இந்திய  RAW என்ற புலனாய்வு நிறுவனம் ஆகும்.

இந்த தகவல்கள் திருநாவுக்கரசுடன் "தப்பிய" நிலாந்தன் என்ற புலி கடந்த சில மாதங்களுக்கு முன் இலங்கைக்கு திரும்பி வந்ததன் பின்னணியில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதாவது : நிலாந்தன் சாதாரணமான ஒரு புலி உறுப்பினர் அல்ல. அவர் எண்பதுகளில், கிட்டு யாழ்ப்பாணத்தை ஆட்டிப்படைத்தபோது, யாழ்ப்பாணத்திலும், குறிப்பாக தீவகத்திலும் புலிகளின் பிரமுகராக வலம் வந்தவர். மிகப் பிரபலமான கவிஞருமாவார் அவர்.

இவ்வளவு பிரபலமான அவர் உண்மையிலேயே மன்னார் ஊடாக இந்தியாவுக்குத் தப்பி இருந்தால், எவ்வாறு அவர் திரும்பவும் எந்த பிரச்சனையும் இல்லாமல் கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக இலங்கை பாஸ் போட்டுடன் வந்து இறங்கி இருக்க முடியும் ?

வந்ததும் அல்லாமல் இன்று பகிரங்கமாக எந்தவித தடையும் இல்லாமல் யாழ்ப்பாணத்தில் அரசியல் செய்கிறார். இது எப்படி EPDP யின் கொலை வெறியாட்டமும், இலங்கை அரசின் ஆயுதப்படைகளினதும், அதன் புலனாய்வுத் துறையின் பிரசன்னமும் எங்கும் எதிலும் இருக்கும் யாழ்ப்பாணத்தில் முடிகிறது?

இந்தக் கேள்விகளுக்கு கிடைக்கும் பதில் தான் RAW அல்லது இந்திய உளவு நிறுவனத்தின் ஆசீர்வாதத்தில் இவர்கள் இயங்குவதும், இவர்களை முள்ளிவாய்க்காலின் பின் RAW காப்பாற்றியதென்பதுவுமாகும். இதை மறுப்பவர்களும் உள்ளனர். ஆனால் அவர்கள் "இவர்கள் எப்படி தப்பினார்கள் " என்பதற்கும், இவர்கள் எப்படி யாழ்ப்பாணத்தில் அரசியல் செய்ய முடிகிறது என்பதற்கும் பதில் சொல்லி ஆகவேண்டும்.

ஆகவே இன்று வந்துள்ள தகவல்களின்படி எழுதியவர் முள்ளிவாய்க்கால் வரை களத்தில் நின்றவர்தான். ஆனால் அவர் முகாமுக்குள் இருந்து காலச்சுவட்டில் எழுதியதென்பது உண்மயாகவிருக்க முடியாது. மே 18 இற்குப் பின்னான சில நாட்களிலேயே யாழ்ப்பாணம் சென்ற கருணாகரன் முகாமில் இருந்து எழுதியதென்பது உண்மையாக இருக்க முடியாது.

ஆனால் கருணாகரன் வெளியில் சுதந்திரமாக இருந்து கொண்டு எழுதினார்.

” பொட்டை” பின்னூட்டத்தில் மறைமுகமாக சொல்வது போல ஈரோசுடன் தொடர்புடையவர்தான் எழுதினார்.

மேலும் அவர் தான் எழுதியதை மற்றவர் ஊடாக காலச்சுவட்டுக்கு அனுப்பவில்லை. அவர்களுடன் அவர் நேரடி தொடர்பில் இருந்தே தனது கட்டுரையை அனுப்பினார். சில விடயங்களை மறைப்பதற்காகவும், இந்தியர்கள் விளங்குவதற்கு வசதியாகவும் பல இந்தியச் சொற்களை அந்த கட்டுரையில் கருணாகரன் பாவித்துள்ளார்.

அதன் அடிப்படையில் தோழர் இரயாகரன் கூறியது தவறுதான். தோழர் இரயாகரன் முள்ளிவாய்க்கால் பேரழிவில் RAW போன்ற உளவு நிறுவனங்களின் பங்களிப்பை சரியாக கணிப்பிடாமல் விட்டதன் விளைவுதான் அவரின் மேற்படி தவறுக்குக் காரணம். மேற்படி கட்டுரைகளும், இந்திய பத்திரிகைகளில் திருநாவுக்கரசின் பேட்டியும் வந்த உடனேயே, புலத்து புலிகளும், இலங்கை அரசு சார்ந்த தமிழ் சேவகர்களும் கூறினார்கள், இவர்கள் RAW இன் கண்ணசைவில் இயங்குபவர்கள் என.

தோழர் இரயாகரன் மேற்படி புலிகளையும், அரச அடிவருடிகளையும் நம்பாததனால் காலச்சுவட்டில் யார் எழுதியதென்பதை சரியாக கணிப்பிடத் தவறி விட்டார் என்பதே சரியானதாகும் .

2

அவரின் தவறான கணிப்புப் போல பல முற்போக்கு சக்திகள், இந்திய சார்பு சக்திகளை கவனத்தில் கொள்ளாமல் விட்டதன் விளைவு இன்று இந்த இந்திய சார்பு சக்திகள் இலங்கை அரசியலை, குறிப்பாக இலங்கை தமிழர் சார் அரசியலை இந்திய சார்புநிலைக்கு தள்ளும் பாரிய முயற்சியில் ஈடுபடுதானது பகிரங்கமாக நடைபெறுகிறது. சில வருடங்களுக்கு முன் ENDLF மட்டுமே பகிரங்கமாக இந்திய சார்பு அரசியலை பிரச்சாரம் செய்தது. இன்றுள்ள தகவல்களின்படி ENDLF உடன் இணைந்து பலர் இந்திய அடிவருடி அரசியலை இன்று தமிழ் மக்கள் மத்தியில் செய்கின்றனர் .

இந்தியா சார்ந்த அரசியல். புலிகளின் தொலைக்காட்சி எனச் சொல்லப்படும் GTV தொடக்கம், மே 18 இயக்கம் , மற்றும் இடதுசாரிகளின் தொடர்பில் உள்ளவர் என கூறப்படும் யதீந்திரா போன்றவர்களாலும் முன்னெடுக்கப்படுகிறது.

இன்று யதீந்திரா, நிலாந்தன், திருநாவுக்கரசு போன்றோரின் பேட்டிகளும் கட்டுரைகளும் ENDLF ஊடகங்களாலும், அவர்களின் மத்திய கொமிட்டியின் மிக முக்கிய உறுப்பினர்களாலும் பரவல்படுத்தப்படுகிறது. சாம்பல் இலக்கியம் என்ற பெயரில் இந்த இந்திய சார்பு கைக்கூலிகளின் எழுத்துக்கள் யாழ்ப்பாணத்திலும், புலத்திலும் பெருமெடுப்பில் மக்கள் மத்தியில் புகுத்தப்படுகிறது.

இன்று தேசத்தில் உள்ள அரசியல் மற்றும் இலக்கிய வெற்றிடத்தை நிரப்பும் முயற்சியில் மேற்படி சக்திகள் முழுமூச்சில் ஈடுபட்டிருப்பதானது, இன்னும் சில வருடங்களில் இந்த கைக்கூலிகளின் இலக்கியமும், சிந்தனையும் இலங்கை தமிழ் பகுதிகளில் செல்வாக்கு மிகுந்ததாக மாறும் நிலைக்கு கொண்டு செல்லும்.

இன்றுள்ள நிலையில் இடதுசாரி சக்திகள் ஒன்று திரண்டு தேசத்தில் இருக்கும் இடது சக்திகளை வலுவூட்டுவதன் மூலமே தேசத்தில் நடக்க போகும் இன்னுமொரு சமுதாய அழிவை தடுக்க முடியும்.