Language Selection

நிலாதரன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

ஐயோ.ஐயோ.. ஏன் இந்த வாழ்க்கை…எனக்கு…     கடவுளே இந்த ஊரிலே வந்து வாழ்வதை விட நான் செத்துத் தொலைச்சிருக்கலாம். கேவலம்….  வெட்கம் விட்டு போய்ச் சரணடைந்தேனே..

அப்பவே களுத்திலிருந்த சயினற்றை அடிச்சு கதையை முடிச்சிருக்க வேணும், மாதினியைப் போல் மித்திரா போல் களத்திலேயே உடனே உயிரைத் துறந்திருக்க வேண்டும். மற்றவர்களைப் போல் வாழ வேண்டும் என்ற எண்ணமும் ஆசையும் எனக்கு வந்திருக்கவே கூடாது. ஒரு முறையல்ல, இருமுறையல்ல, பலமுறைகள் தன் தலையில் அடித்தபடியே கதறிக் கதறிக்  அழுதழுது குளறிக் கொண்டிருக்கிறாள்.

ஆறதல்படுத்தி களைச்சுப் போய் இனிமேலும் என்னால் முடியாது என்ற நிலையில் பேத்தி பூரணக்கிழவியும் தாங்க முடியாமல் விக்கி விக்கி அழுது புலம்பிக் கொண்டிருக்கின்றாள்.

 

ஆச்சி என்னைச் சாகவிடு சாகவிடு…செத்தால் ஒரு நாளைக்குத் தானே…. இங்கே இருந்தால்…. ஒவ்வொரு நாளும் செத்தக் கொண்டிருக்க வேண்டும். இங்கே வந்து இந்தச் சமூகத்தோடு சேர்ந்து வாழ வேண்டும் என நினைத்தேனே… எவ்வளவோ முடடாள்தனம் என்பதை இப்ப தானே  உணர்கிறேனே…

நீ ஓருத்தி மட்டும் தனித்துப் போய்விட்டாயே என நினைத்து தான் உன்னைப் பார்க்க ஓடோடி வந்தேன்…, இல்லாவிடில் என்ற வார்த்தைகள் ப+ரணம் கிழவியின் காதுகளில் ஒலியாய்  வலித்துக் கொண்டிருக்கின்றது.

வடமராட்சி முளுவதையும் இராணுவம் சுற்றிவளைத்து குச்சொழுங்கையியிலிருந்து பெரிய தெருக்கள் வரை சென்றிகள் போட்டு வழிமறித்து, வீடு வீடாய்ச் சல்லடை இட்டு நின்ற, இருந்த ஆண்களையெல்லாம் பிடிச்சுக் கொண்டு போய் இராணுவ முகாங்களுக்கென்றும்,  கொஞ்சப் பேரை கொண்டு போய் அந்த ஊரிலுள்ள வேதக்கோயிலுக்குப் பக்கத்திலுள்ள  வாசிகசாலைக்குள்ளேயும் வைச்சு குண்டுவைத்து தகர்த்த போது  இவள் பருவம் அடையாச் சின்னப்பெண்.

பிறகு ஒருநாள் வானிலிருந்து வீசப்பட்ட குண்டுத் தாக்குதல்களினாலும் எறிகணை வீச்சுக்களினாலும் இனி இருக்க முடியாது என்ற நிலை வந்த போது, கிடந்ததையும் கண்ணில் பட்டதையும் எடுத்துக் கொண்டு அப்பாவுக்குத் தெரிந்த ஒரு ஆள் வீட்டில் போய் நின்று விட்டு ஊருக்குத் திரும்பி வந்த வேளை ஊரே சுடுகடாய் எரிந்திருந்ததைக் கண்டும் ஆங்காங்கே வழிகளில் கிடந்த அனாதைப் பிணங்களைப் பார்த்தும் கதிகலங்கிப் போன நிலையிலும் இனிமேல் தமிழர்கள் இங்கே உயிரோடும் நிம்மதியாகவும் வாழ வேண்டுமென்றால் இனி நானும் இயக்கத்துக் போய்  என்னால் இயன்ற பங்களிப்புக்களையும் உதவிகளையும் செய்யத் தான் வேண்டும் என்ற எண்ணம் இவள் மனதில் வேரோடத் தொடங்கி விட்டது.

எங்களின் சகலவிதமான அடக்கு முறைகளுக்கு எதிரானதும், பெண்களின் சுதந்திரத்தையும், கௌரவத்தையும்,  பேணிப்பாதுகாக்கக் கூடிய மிகவும் இறுக்கமான கட்டுக்கோப்பான இராணுவப் பலம் பொருந்திய இயக்கம் இது தான் என்றும், தன் மனதிலே நீண்டதொரு வலைப்பின்னலை  தனக்குள்ளேயே பின்னிக் கொண்டிருந்தாள்.

உன்ரை கொக்காவுக்கு படி படி என்று எத்தனை தரம் சொல்லிக் கத்திக் குளறியும், ஒருபிரியோசனமும் இல்லாமல் போய்விட்டது. கடைசியிலே காதல் என்று விழுந்து எல்லாவற்றையும்  அழிச்சுப் போட்டு சும்மா வீட்டுக்கே கிடக்கிறாள். நீயும் அப்படி வராமல் நல்லாப் படிச்சு  யுனிவ சிற்றிக்குப் போய் என்ரை ஆசையை  நிறைவேற்ற வேண்டும் என்றும், எங்களுக்கத் தான் அந்த நேரத்திலே தொடர்ந்து படிக்க  வசதியில்லாமல் போய்விட்டது, நீயாவது படிச்சிடு என்ற தகப்பனின் வார்த்தைகளையும் இவள்  மறக்காமல் இல்லை.

மீண்டும் மீண்டும் ஏற்பட்ட இராணுவச் சுற்றிவளைப்புக்களாலும் கெடுபிடிகளினாலேயும்பள்ளிக்கூடங்கள் எல்லாம் மூடப்பட்டு ஒன்றுமே இயங்காத நிலையில் நாளாந்த சாதாரண வாழ்க்கையும் ஸ்தம்பித்து முடங்கிப் போகவும், தொடர்ந்து அடித்தக் கொண்டிருந்த கெலித் தாக்குதல்கினாலும் எங்கேயோ இருந்து வந்த செல்தாக்குதலினால் மற்றவர்களோடு சேர்த்து தன் தாய் தகப்பனையும் பறிகொடுத்திருந்தாள்.

தப்பிப்போன அக்காவோடும் பூரணக்கிழவியோடும் காலத்தைக் கழித்துக் கொண்டிருந்த வேளையில் தோழிகள் கயல்விழியோடும் மாலினியுடனான சினேகம் தான் இவளை இயக்கத்தினுள் கொண்டு போய்ச் சேர்த்தது.

ஆறு மாத பயிற்சிக் காலம். சொல்லணாத் துயரமும், துன்பங்களையும் கஸ்ரங்களையும் தாங்கிய படியே தன் தாய் தந்தையின் நினைவுகளையும் கனவுகளையும் மனதில் நிறுத்தி எரிந்து கருகிப் போன தன் கிராமத்தையும் இறந்து போன தன் ஊர் மக்களையும் எண்ணி எண்ணிதனது பயிற்சிகளை வலுப்படுத்திக் கொண்டாள்.

ஒரு தரமல்ல இரண்டுதரமல்ல எத்தனையோ நேரடித்தாக்குதல்கள்…நேருக்கு நேர் நின்று அடிபடும் தைரியமும் துணிவும் இருந்ததால் உயிரைச் துச்சமென மதித்து  எதிரிகளை அடித்து அடித்து விரட்டினாள்.

அவள் நின்று நடத்திய அனைத்துச் சண்டைகளிலும் வெற்றிக் கனிகளோடே  திரும்பி வந்தாள் அனைத்துப் பாசறைப் கூடங்களிலும், சகல படையணிப் பிரிவுகளிலும் இவளது வீரமும் சாகசங்களும் காட்டுத் தீ போல் பரவிக் கொண்டது. தலைவர் வரை கூட இவளது ஆற்றலும் வீரமும் அறியப்ப்பட்டது. போராடவே பிறந்த பெருமைக்குரியவள் என்பதால் ஒரு குறிப்பிட்ட குறுகிய கால எல்லைக்குள்ளே பெண்கள் படையணியின் பொறுப்புக்கே தலைமை தாங்கும் தகமையையும் பெற்று விட்டாள்.

ஈழவரலாற்றில் என்றுமே கண்டிராத இரத்தக் கறையையும் எண்ணிலடங்கா இழப்புக்களையும், கணக்கேயற்ற சக தோழர்களையும் பறிகொடுத்த அந்த ஆனையிறவுத் தாக்குதல்களில் முன்னணிப் பொறுப்பில் நின்று வெற்றியைத் தட்டிக் கொண்டு வந்தாலும் வழமைபோலும் சந்தோசத்தையும் அந்த வெற்றிக் களிப்பையும் அவளால் கொண்டாட முடியவில்லை. ஏற்றுக் கொள்ளவும் முடியாமலிருந்தது.

ஆனையிறவுச்சமர் ஐந்து நாட்களுக்கு மேல் தொடர்ந்து கொண்டிருந்தது. இரண்டு பக்கங்களிலிருந்தும் ஆட்டிலறித் தாக்குதல்களும் பீரங்கி குண்டுகளும் மழை மழையாய்ப் பொழிந்து கொண்டிருந்தது. எங்கேயிருந்து வந்த ஏவுகணைக் குண்டொன்று, இவளருகிலே களமாடிக் கொண்டிருந்த சக தோழி கயலின் மேல்வந்து வீழ்ந்து தலை வேறு முண்டம் வேறாய்ச் சிதற… அவளின் இரத்தம் வந்து முகத்தில் அடித்த போது இவளின் இதயக்குலையும் ஒரு கணம் அறுந்து வீழ்ந்தது போல் உணர்ந்து கொண்டாள். முகத்திலிருந்து வழிந்தோடிய இரத்தம் இவள் வாயில் வந்து உப்புக் கரித்தது. பன்னிரண்டு வருடச் சினேகம். தன் கண் முன்னிலையிலே சிதறுண்டு  பிணமாயக் கிடக்கிறாள் சினேகி.

இரண்டு கால்களையும் இழந்து, இரண்டு கைகளும் அறுந்து தொங்கிய நிலையில் நெஞ்செல்லாம் பிழந்து, குற்றுயிராய்க் கிடந்த இன்னொரு சகோதரி அக்கா அக்கா…. என்னை…இப்படியே விட்டிட்டுப் போயிடாதேயுங்கோ…. நீயே என்னைக் கொன்று விடு… எனக்கேட்டுக் கெஞ்சிய வேளை தன் இடது பக்கத்திலிருந்த  கைத்துப்பாக்கியை எடுத்து ஒருகையால் தன் கண்களையே பொத்தியபடி அந்தச் சகோதரியின் நெற்றியிலே  வெடிவைத்து கருணைக் கொலை செய்து விட்டுத் திரும்பிய இவளுக்கு இந்த வெற்றி வெறும் வெற்றுக் காற்றாகவே தென்பட்டது.

இந்த இழப்புக்கள் பற்றிய உண்மைகளும் சம்பவங்களும் வெளியே வரக்கூடாது என்ற இயக்கக்கட்டுப்பாடுகளும் விதிகளும் அந்தப் கொடும் போரிலே பலியான பல குழந்தைப் போராளிகளின் இழப்பும் இவளை இன்னொரு பக்கச் சிந்தனைக்கும் இட்டுச் சென்றது. உலகமே ஒரு கணம் இலங்கையைத் திருப்பிப் பார்க்கும் அளவிற்கு இந்தப் போர் பற்றியும் அதன் சாகசங்கள் பற்றியுமே எங்கும் பேசப்பட்டது. உலகத்திலேயே தலைசிறந்த இராணுவம் இந்த இயக்கம் தான் என்றும் ஒரு போதுமே அழிக்க முடியாத பலம் பொருந்தியவர்கள் என்றும் இந்தப் போர், வரலாற்றில் தன்னைப் பதிவு செய்து கொண்டது.

காலங்கள் மெல்ல மெல்ல நகர்ந்து கொண்டிருந்தது. ஆங்காங்கே சிறுசிறு தாக்குதல்களும் சண்டைகளும் நடைபெற்றுக் கொண்டிருக்க சமாதானப் பேச்சுக்கள் என்றும் சமரசங்கள் என்றும் நாடு அமைதி நிலைக்குத் திரும்பியது.

எல்லோரும் எல்லா இடங்களுக்கும் போய் வந்தார்கள். எதுவிதக் கட்டுப்பாடுகளுமின்றி எது வித இடைஞ்சல்களுமின்றி எல்லோரும் நிம்மதியாகவே நடமாடினார்கள். இப்படியிருந்தால் கூடப் பரவாயில்லை என்றும் ஒரு நேரச் சோறாவது தின்னவும், நிம்மதியாக நித்திரை கொள்ளவும் முடிகின்றதே என்று இன்பமடைந்தார்கள். இடிந்து கிடந்த வீடுகளும் உடைந்து போன கோவில்களும் புரணத்தானம் செய்யப்பட்டது. கோவில்களின் கொடியேற்றங்களும் கும்பாவிசேகங்களும் திக்குத் திசையெல்லாம் திருவிழாக் கோலம்பூண்டது.

நீண்ட கால இடைவெளிக்குப் பின்னர் புலம்பெயர் தமிழர்களைப் போல் இவளும் தன் இருப்பிடம் தேடி விரும்பி வந்தாள். சமூகம் நிறையவே மாறியிருந்தது. இழப்புக்கள் தான் எல்லாவற்றையும் மாற்றியிருந்தது. புதிதாய்த் தோன்றிய கல்வீடுகளும் சுற்றிவைக்கப்பட்டிருந்த மதிற்சுவர்களும் அந்தக் கிராமத்தையே முளுமையாக மாற்றியிருந்தது. வீட்டுக்கு வீடு நின்ற மோட்டார் சயிக்கிள்களின் வரிசைகள் வெளிநாட்டில் இருந்து காசு வருகின்றது என்பதை காட்டிக்கொடுத்தது.

எங்கேயோ இருந்து அகதிகளாக குடிபெயர்ந்து வந்தவர்கள் இப்பவும்… அப்படியே இருப்பதைக் கண்டும் ஆச்சரியப்பட்டாள். அக்காவையும் இரண்டு குழந்தைகளையும் கண்டவுடன் அவள் அடைந்த ஆனந்தம் சொல்லிலடங்கா… ஆச்சியைக் கண்டு கட்டித்தழுவிய போது கண்களிலிருந்து நீர் தாரைதாரையாய் வழிந்தோடியது.

உங்களையெல்லாம் காணாமல் கண்மூடியிருப்பேனோ என்றும் எத்தனை தரம் செத்துச் செத்துப் பிழைத்திருப்பேன் எனச்சொல்லி முடிக்க முன்னரே அக்காவும் வந்து கட்டிப் பிடித்து ஆரத்தழுவிக் கொண்டாள்.

குழந்தைகள் இரண்டும் இந்தச் செயல்களை விடுப்பப் பார்த்துக் கொண்டு நின்றன. குண்டுச்சத்தங்களையும் பீரங்கி வேட்டுக்களையும் செல்லடிச் சத்தங்களையும் கேட்டுப் பயந்து போன மக்களுக்கு லவ்ஸ்பீக்கர் சத்தங்களும் மூன்று கால பூசை மணி ஒலிகளும் அவர்கள் மனதிலே பாலை வார்த்தது.

எத்தனையோ வருடங்களின் பின்னர் எத்தனையோ மனிதர்கள் நிம்மதியாய் நித்திரைகொண்டெழும்பினார்கள். நீண்ட கால இடைவெளிக்குப் பின்னர் தமிழர்களுக்குக் கிடைத்த பொற்காலம் இதுவே என்று எல்லோரும் கதைத்துக் கொண்டார்கள்.

இப்படியே இன்பமாய் காலம் கழிந்து கொண்டிருந்த வேளையில் ஒப்ந்தங்கள் கிழித்தெறியப்பட்டு பொல்லாய் போன அந்தக் கொடிய போர் மீண்டும் தனது தாண்டவத்தை ஆடத் தொடங்கியது.

எல்லோர் மனதிலும் இருந்த இன்பமும் மகிழ்ச்சியும் பறிக்கப்பட்டு  அந்த இதயங்களிலெல்லாம் ஆணிகள் அடித்து இறுக்கப்பட்டது. முன்னெப்போதும் இல்லாதவாறு இராணுவம் பல  படைப்பிரிவுகளாய்ப் பிரிக்கப்பட்டு நாலாபக்கமும் புடைசூழ்ந்து தரை வழியாகவும் வான் வழியாகவும் வன்னியில் வந்திறங்கியது.

என்றுமே கொண்டிராத படைப்பலத்துடனும் வெளிநாட்டு உதவிகளுடனும் அதிநவீன புதியரக இராணுவத் தளபாடங்களுடனும் இலங்கை இராணுவம் முன்நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. வன்னிப்பிரதேசம் எங்கும் கொத்துக் குண்டுகள்@ மழை மழையாயப் பொழிந்தது. பனைமரங்களோடு பச்சை மரங்களெல்லாம் பற்றி எரிந்து கொண்டிருக்கின்றது.

 

எங்கும் ஒரே புகைமண்டலம. எங்கும் மரண ஓலங்கள். எதிலுமே இரத்தவெடில்கள் குஞ்சுகள் குழந்தைகள் கூட வழி தெருவெல்வாம் பிணக்குவியலாய் பரந்து கிடந்தார்கள். தாயை இழந்த குழந்தைகளும் தந்தையைப் பறிகொடுத்த பாலகர்களாயும் தலையை இழந்த முண்டங்களுமாய்  ஆங்காங்கே ஆட்களின் அங்கங்கங்களும் தசைகளும் தொங்கித் தூங்கிக் கொண்டிருந்தது. சொல்ல முடியாக் கொடும் துயரம் மெல்ல மெல்ல அரங்கேறிக் கொண்டிருந்தது.

உலகம் எங்குமே கண்டிராத அந்த இனஅழிப்புப் போராட்டமும் வரலாற்றுத் துரோகமும் மிகவும் இலகுவாக நடைபெற்றுக் கொண்டிருந்துது. ஒரு மனித இனத்தை இன்னொரு மனித இனம் மிருகங்களைப் போல் வேட்டையாடி கொன்று குவித்தது.

இவளோ… மற்றப்பொறுப்பாளிகளோ… ஏன் மக்களோ ஒருவருமே இப்படி முடியும் என எதிர்பார்க்கவில்லை. பலத்த சண்டையின் மத்தியிலும் பலத்த இழப்புக்கள் மத்தியிலும் கிளிநொச்சி கைப்பற்றப்படுகின்றது.

எங்கும் சிங்களக் கொடிகள் ஏற்றப்படுகின்றது. எத்தனையோ சண்டைகளையும் சமர்களையும சாதித்த இயக்கம் கொஞ்சம் ஈடாடியே போய்விட்டது. என்ன… எங்கள்…. இயக்கமா இப்படி பின்வாங்குகின்றது…… அவளால் ஏற்றுக் கொள்ள முடியாமல் இருக்கின்றது.

எத்தனை சமர்களைத் தனித்து நின்று சாதித்த இவளாலும் தொடர்ந்து போராட முடியாமல் போனது. இனியும் இங்கே நிற்க முடியாது படைவீரர்கள் எல்லோரும் பாதுகாப்புத் தேடி முல்லைத்தீவு நோக்கி நகர்ந்து கொண்டிருந்தார்கள். இயக்கத்தின் பாதுகாப்புக் கருதியும் வேறு வழியுமின்றி ஏதுமற்ற நாதிகளாக அந்த அப்பாவி மக்கள் கூட்டமும் இவர்களுடன் அள்ளுண்டு சென்று கொண்டிருக்கிறது.

வானிலிருந்து குண்டுத் தாக்குதல்கள் தொடர்ந்த வண்ணமே இருந்தது நினைக்க முடியாத பேரிழப்புக்கள். பிணக்குவியல்களின் மத்தியிலே ஆளையாள் முந்தியடித்த படி ஒவ்வொருவரும் தங்கள் உயிரைக் கையில் பிடித்தபடி ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.

இராணுவம் நாலாபக்கமும் சூழ்ந்து விட்டது. இனித் தப்பிக்க முடியாது என்ற எண்ணம் போராளிகளிடத்திலும் மக்களிடத்திலும் உருவாகிவிட்டது. பங்கருக்கள் பதுங்கியிருந்த மக்கள் கூட எழுந்து வந்து இந்தக் கூட்டத்துடன் இணைந்து இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதியை நோக்கி நடக்கத் தொடங்குகின்றார்கள்.

திரும்பியபக்கமெல்லாம் பிணநாற்றவாடைகளோடு கந்தக வாசமும்  காற்றோடு காற்றாய் கலந்து மூக்கைத் துளைத்தது. பீரங்கி வெடிச் சத்தங்களாலும் ஓலக்குரல்களாலும் செவி நிரம்பி வழிந்தது. அழுகையும் விசுப்பல்களோடும் வன்னி நெடுநிலப்பரப்பு சுடுகாடாய் எரிந்து கொண்டிருந்தது.

இனிமேல் போராடுவதில் எந்தப் பிரியோசனமும் இல்லை, தகவல்கள் பரிமாறிக் கொள்ளப்படுகின்றது. இக்கட்டான நிலைக்கு எல்லாப் போராளிகளும் வந்து விட்டார்கள். ஆங்காங்கே சந்தித்த சில போராளிகள் ஒன்றுகூடுகின்றனர். இனிமேல் நாங்கள் எல்லாம் சரணடைவோம் என்று மூத்த போராளிகளில் ஒருவன் விளக்கம் கொடுக்கின்றான். எல்லோரும் சயினற் குப்பிகளைக் களற்றி  எறிந்து விட்டு மக்களோடு மக்களாய்ச் சேர்ந்து கொள்ளுங்கள் எனக் கூறி விட்டு புகையோடு புகையாய் மறைந்து போகிறான்.

இவளால் ஜீரணிக்கவும் முடியாமல் மூச்சு அடைத்துக் கொண்டது. இதையே…யா… நானும்… அவளால் ஏற்றுக் கொள்ள முடியாமல்  இருந்தது. ஒவ்வொரு உறுப்பினர்களுக்கும் உயிரை துச்சமென மதித்து நடக்கப் பழக்கிய அமைப்பின் வழி நடத்தலின் வளர்ந்த இவளுக்கு நினைத்துப் பார்க்கவே….கொஞ்சம் கூட முடியாமல் இருந்தது.

ஏதிரியின் முன்னால் சயினற் அடியாமல் எப்படிப் போய்ச் சரணடைவது…..? எமது எத்தனையோ உறுப்பினர்கள் சயினற் அடித்துச் செத்ததெல்லாம்…. கண்ணை மூடியபடியே தன் களுத்திலிருந்த சயினற் குப்பியைப் பிடிக்க என்னக்கா இப்படியென்றால் நாங்கள் எல்லோரும் இதை முன்பே செய்திருந்து சரணடைந்திருந்தால் இந்த ஆயிரக்கணக்கான மக்களையும் அநியாயமான இந்த இழப்புக்களையும் காப்பாற்றியிருக்கலாம் அல்லவா. .?

கொஞ்ச மாதங்களுக்கு முன்னர் தானே என்னையும்  வலுக்கட்டாயமாக இழுத்து வந்து சேர்த்தனீங்கள். சின்னப் பிள்ளையவள் அவளை விட்டிட்டுப் போhங்கோ என்று அம்மாவும் அப்பாவும் கத்திக் குளறிய போது என்னையும் விட்டிட்டு வந்திருந்தால்…. ? என்ற அந்தக் குழந்தைப் போராளி மைதிலியின் கேள்விகள் இவளின் இதயத்தில் ஈட்டி போல் வந்திறங்கிறங்கியது.

அவளை ஒருதரம் இறுக்கி அணைத்துக் கொண்டாள். தன் களுத்திலிருந்த சயினற் குப்பியையும் அவள் களுத்திலிருந்த குப்பியையும் சடக்கென இழுத்து அறுத்து வீசியெறிந்தாள். அவளுடன் தோளோடு தோள் நின்ற மற்றச் சக போராளிகளும் களற்றி எறிகின்றார்கள்.இந்தச் சயினற் குப்பிகளுக்கு இப்படி ஒரு மதிப்பு வரும் என்று அவள் கனவிலும் கூட நினைத்திருக்கவேயில்லை.

எப்போவோ தூக்கிய துப்பாக்கிகளையும் இன்று தான் கீழே இறக்கி வைக்கின்றனர். எதிரியிடம் மண்டியிடுவதற்குப் பதிலாக உயிரையே மாய்த்துக் கொள்ளும் மறவர் மரபு அன்றுடன் முற்றுக்கு வந்தது. தனியொரு தமிழ்வீரன் இருக்கும் வரை போராடிக் கொண்டே இருப்பான் என்ற பசப்பு வார்த்தைகள் எல்லாம் பொய்ப்பித்துப் போனது.

பல புதிர்களும் கட்டுக்கோப்புகளும் விடைகளே தெரியாத பல கேள்விகளுடனும் வீழ்ந்தே தகர்ந்து சுக்குநூறாய்ப் போனது. ஆயிரக்கணக்கான மக்கள் சாப்பிடாமலும் தண்ணிகூடக் குடியாமல் காய்ந்து, வற்றுப் போன உடல்களோடு நடைப்பிணங்களாகவும் தொங்கிய தலைகளோடு, குற்ற உணர்ச்சிகளோடும் கொந்தளித்த இதயங்களோடு எங்கே போய் சேருகின்றோம் எனத்தெரியாமல் சிங்கள இராணுவத்தினர் காலடியிலே போய்ச் சரணடைய, அவர்களோடு சேர்ந்து இவளும் சரணடைந்தாள்.

சிறையென்றும் சித்திரவதைகளென்றும் உடலுள.. அனைத்துச் சித்திரவதைகளையும் அனுபவித்தவளாய் புனர் வாழ்வென்றும் புதிய அத்தியாயங்கள் என முடித்து இவள் திரும்பி வந்து தான் இப்போது அழுது கொண்டிருக்கிறாள்.

தான் இங்கே வந்து வாரங்கள் பல கடந்து விட்டாலும் இன்னமும் தன் சகோதரியும் அத்தானும் வந்து பாhத்துவிட்டுப்  போகவில்லையே என்ற வலி அவளை வதைத்துக் கொண்டிருக்கின்றது.

முன்பெல்லாம் பின்னாலேயும் முன்னாலேயும் கலைச்சுக் கொண்டிருந்த இவளின் சொந்த மச்சான் ஒருவன், எங்கேயோ வெளிநாட்டிலிருந்து கலியாணம் முடிக்கவென்று வந்தவேளை இவளைப்போய் பார்க்கக் கூடாது என்ற அவனது தாய் தகப்பனின் வார்த்தைகளும் கட்டளைகளும் இவள் காதுக்கெட்டியிருந்தது.

இது எல்லாவற்றையும் விட இவள் இயக்கத்துக்கு போவதற்கு முன்னர் இவள் பாடம் சொல்லிக் கொடுத்த பக்கத்து வீட்டு விஜயா அன்ரியின் மகளைக் கண்டு கதைத்த போது விஜயாவும் அவள் புரிசன் லிங்கமும் சேர்ந்து பிள்ளை இந்தப் பக்கம் வந்து கிந்து…. போய்….பழகி.. பிள்ளைகளுடனும் கதைச்சு… எங்கடை நிம்மதியைக் குலைச்சப் போடாதே… இனிமேலாவது நாங்கள் கொஞ்சம் சந்தோசயாய் வாழ வேண்டும் என்று  ஆசைப்படுகிறோம் என்ற வார்த்தைகள் இவள் இதயத்தையே எரித்துச் சாம்பலாக்கி விட்டது.

இவளின் உறவினர்களும் அயலவர்களும் கூட செய்க் கூடாத ஒரு பெரும்பாவத்தைச் செய்துவிட்டு வந்திருக்கின்றாள் என்றே பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நாங்கள் எல்லாம் அப்போது வரும்போது ஏதோ சாகசம் செய்ய வந்தவர்கள் என்றும், நாங்களே தமிழீழத்தின் கண்கள் என்றும் தலையிலே தூக்கிக் கொண்டாடி, சோத்துப் பார்சலும் தந்து தூக்கி விட்ட இதே சமூகம்….? என்னை ஏன் ஒதுக்க வேண்டும?


அரசியலற்ற வெறும் இராணுப்பலமே தான் எல்லாம் என்ற மாயைக்குள் மயங்கி நம்பிவளர்ந்ததால், மக்களை வென்றெடுக்காமல் அவர்களிடமிருந்து அந்நியப்பட்டு விட்டோமா…? தனக்குள்ளேயே கேள்விகளைக் கேட்டுக் கேட்டு பதில்களைத் தேடிக்கொண்டிருந்தாள்.

அந்த அமைதிச் சூழலில் கிழவியின் முனகல் மட்டுமே தெளிவாய்க் கேட்கிறது. மூலையின் ஒதுக்குப்புறமாய் சாய்ந்திருந்தவள் குனிந்த தலையை நிமிர்த்திய வாறு தனது இரண்டு கண்களிலிருந்த வழிந்த நீரைத் துடைத்துக் கொண்டாள்.

ஆச்சி அழாதே… ஏன் நீ அழ வேண்டும். அல்லது நான் அழ வேண்டும். மீண்டும் இந்தச் சமூகத்தில் வாழ்ந்து காட்டுவேன். பாழாய்ப் போன இந்தச் தமிழ்ச் சமூகம் யாருக்கு என்ன நடந்தால் என்ன…. தான் மட்டும் நல்லாயிருந்தால் காணும் என்று   நினைக்கும் இவர்கள் மத்தியில் எதிர்த்து வாழ்ந்து காட்டுவேன் என எழுந்து இறுமாப்பாய் நின்றாள்.

அவள் நின்ற வேகத்தையும் ஆவேசத்தையும் கண்டு இப்போதாவது இந்தச் சனத்தைப் புரிந்து கொண்டாயே என்று அவளை இறுக அணைத்தக் கொண்டாள் கிழவி.

நிலாதரன்

முன்னணி இதழ் -2