முழு இலங்கை மக்கள் மேலான யுத்தம் ஒன்றை அரசு தொடங்கி இருக்கின்றது. இந்த யுத்தத்துக்கு இன அடையாளம் கிடையாது. சாதி அடையாளம் கிடையாது. மத அடையாளம் கிடையாது. ஆண் பெண் பால் அடையாளம் கிடையாது. இப்படி எந்தக் குறுகிய அடையாளமும் கிடையாது. முழு மக்களையும் பாதிக்கும் இந்த யுத்தத்தின் விளைவுகளை அனுபவிப்பதில் மட்டும்தான், இந்த அடையாளங்களும் வேறுபாடு;களும் குறிப்பாக வேறுபடுகின்றது. இப்படி அரசு வர்க்கரீதியான யுத்தத்தை முழு மக்கள் மேலும் நடத்துகின்றது. இனவழிப்பு யுத்தத்தின் பின், அரசு முழு மக்கள் மேலான வர்க்க ரீதியான ஒரு யுத்தத்தை உலக வங்கியின் துணையுடன் தொடங்கி இருக்கின்றது. பிச்சை எடுக்கும் பிச்சைக்காரர்கள் முதல் இது யாரையும் விட்டு வைக்கவில்லை.
இப்படி உலக வங்கியின் அடியாளாக செயல்;படும் அரசு, அதன் கட்டளைக்கு அமைய எரிபொருள் விலையேற்றத்தையும் பணவீக்கத்தையும் இலங்கை மக்கள் மேல் திணிக்கின்றது. இதை அடுத்து அனைத்துப் பொருட்களும் கிடுகிடுவென் விலை ஏறுகின்றது. அரசு இந்த பொருளாதார யுத்தத்தை, இராணுவத்தின் துணையுடன் அமுல்படுத்துகின்றது. மக்களின் வாழ்வில் இதன் தாக்கம் பாரியது. பல எதிர் அரசியல் விளைவுகளைக் கொண்டது.
மண்ணெண்ணெய் விலையை 50 விகிதத்தாலும் (35 ரூபாவினாலும்), டீசல் விலையை 37 விகிதத்தாலும் (31 ரூபாவாலும் அதாவது ஒரு லீட்டர் டீசலின் விலை 76 ரூபாயிலிருந்து 115 ரூபாவாக), பெட்ரோல் விலையை 9 விகிதத்தாலும் (12 ரூபாவினாலும்), உயர்த்தி அரசு, மக்கள் மேல் வெடிகுண்டை வீசியிருக்கின்றது. இதன் மூலம் அனைத்து தொழில் துறைகள்; முதல் மக்களின் அன்றாட வாழ்வாதாரங்களும் அனைத்தும் மரணப்பொறியில் சிக்கியிருக்கின்றது.
எண்ணை விலையேற்றத்தால் எழுந்த போராட்டங்களை அடுத்து, மானிய விலையில் சில துறைக்கு எண்ணை வழங்க ஓப்புக்கொண்டது அரசு. இதன் பின்னணியில் போக்குவரத்து கட்டணம் 20 சதவீதத்தால் உயர்த்தியும், அதிகுறைந்த கட்டணத்தை 9 ரூபாவாக உயர்த்தியது. மின் பாவனையில் இதே அதிகிரிப்பு. 1 – 30 அலகுகளுக்கு 25 சதவீதமும் 31 – 60 அலகுகளுக்கு 35 சதவீதமும் 61க்கு மேற்பட்ட அலகுகளுக்கு 40 சதவீதமும் அதிகரித்துள்ளது. எரிவாயு விலை அதிகரித்துள்ளது. இப்படி பல தளத்தில்.
மொத்தத்தில் உற்பத்திக்கான மூலதனத்தின் அளவு அதிகரிக்கவும், நுகர்வின் அளவு குறைகின்றது. இது தேசிய உற்பத்தியின் அளவைக் குறைக்கும். தேசியம் சார்ந்த உற்பத்திகளின் அழிப்போ, இந்த விலையேற்றம் மூலம் மிகவேகமாக நடந்தேறும்;. அதேநேரம் இந்த விலையேற்றத்தால் சர்வதேச பொருட்களின் உற்பத்திக்கான செலவு குறைவதால், அது சந்தையை ஆக்கிரமித்து தேசியப் பொருட்களை அகற்றும். மொத்தத்தில் மக்களின் நுகர்வின் அளவு குறையும். வாழ்க்கைத் தரம் வீழ்ச்சியுற்று, தேசியத் தன்மையும் குறையும்.
இந்த விலையேற்றத்தை மூன்றாம் உலக நாடுகள் எங்கும் உலக வங்கி திணிக்கின்றது. மேற்கு சார்ந்த ஏகாதிபத்தியங்களில் தோன்றி வளரும் நெருக்கடிகளை கருத்தில்கொண்டு, அதன் உற்பத்தி பொருட்களை மூன்றாம் உலக சந்தையில் மலிவாக திணிக்கவும், அந்த நாடுகளின் மூலதனத்தின் நகர்வை மட்டுப்படுத்தவும் இந்த விலையேற்றங்கள் திட்டமிட்டு அமுலாக்கப்படுகின்றது.
இந்த விலை அதிகரிப்புக்கு முன்னமே, உலக வங்கியின் கட்டளைக்கு அமைய இலங்கை நாணயத்தை பண இறக்கம் செய்தனர். அதாவது இலங்கையில் "சுதந்திர" தினத்துக்கு இரண்டு நாட்களுக்கு முன்னம், இலங்கை நாணயத்தை 20 சதவீதத்தால் பணவிறக்கம் செய்தனர். இந்தப் பணவீக்கம் இறக்குமதி பொருளின் விலையை, 20 சதவீதத்தால் திடீரென அதிகரிக்க வைத்துள்ளது. அதேநேரம் உற்பத்திக்கான செலவில் அதிகரிப்பு இதற்கு இருப்பதில்லை என்பதால், உள்ளுர் சந்தையை தீர்மானிக்கும் சக்தியாக, இது மாறுகின்றது. பணவீக்கத்தின் மற்றொரு விளைவு, சர்வதேச நாணயத்தில் உள்ள கடன் மற்றும் வட்டிக் கொடுப்பனவு பணவீக்கத்துக்கு அமைய 20 சதவீதத்தால் திடீரென அதிகரிக்கின்றது. பணத்தை கடனாக வாங்காமல், அதன் தொகை 20 சதவீதத்தால் அதிகரிக்கின்றது. இதற்கான வட்டி உட்பட அனைத்தையும், மக்களிடம் புடுங்கிக் கொடுக்கும் அளவு 20 சதவீதத்தால் அதிகரிக்கும்;. இப்படி நாட்டை உலக வங்கியின் கட்டளைக்கு ஏற்ப திவலாக்கி விற்கின்ற அரசு, மக்களை ஒடுக்க இராணுவத்தை பலப்படுத்துகின்றது.
இத்துடன் உலக வங்கி விடவில்லை. தனது புதிய கடனுக்கான வட்டி வீதத்தை மூன்று மடங்கால் அதிகரித்துள்ளது. முந்தைய கடன் கொடுப்பனவிற்கு 1.1 சதவீதமாக இருந்த வட்டி வீதத்தை, புதிய கடன் கொடுப்பனவுக்கு 3.1 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இப்படி பல உண்மைகள் இருக்க, அரசோ இதை மூடிமறைக்க சர்வதேச சந்தையில் எண்ணை விலையேற்றம் பற்றி பேசுகின்றது. உலக வங்கியின் கட்டளைக்கு ஏற்ப 20 சதவீத பண இறக்கம் செய்ததன் மூலம், சர்வதேச சந்தையில் எண்ணைக்கு 20 சதவீதம் அதிக விலை கொடுக்க வேண்டிய மற்றொரு நிலையை உருவாக்கியபடி, சர்வதேச எண்ணை விலையேற்றம் என்ற மகுடியை ஊதி மக்களை ஏய்க்க முனைகின்றனர். சர்வதேச எண்ணை விலை என்ன?, அதற்கான வரி என்ன, என்று எதையும் மக்களுக்கு சொல்வது கிடையாது. அரச படைகளுக்கு வாரிக்கொடுக்கும் அரசு, சலுகைகள் பல கொடுத்து மக்களை ஒடுக்கவே வழிகாட்டுகின்றது.
தான் ஆடம்பரமாக இருப்பதை தனது கொள்கையாகக் கொண்டு, மக்களை சூறையாடுகின்றது. தன்னை ஆடம்பரமாக விளம்பரம் செய்யவும், இராணுவத்தை பலப்படுத்தவும், தன்னை உலகெங்கம் சென்று நியாயப்படுத்தவும் கோடிகோடியாக இந்த அரசுதான் செலவு செய்கின்றது. தேசத்தின் மகுடம் என்ற தனது விளம்பரக் கண்காட்சிக்காக மட்டும் 2100 கோடி ரூபாவை செலவு செய்தது. சொகுசாக மக்கள் மேல் சவாரி செய்யும் அமைச்சர்களுக்கு 1454 கோடி ரூபா செலவில் சுகபோக ஆடம்பர வாகனங்கள் கொள்வனவு செய்தது. ஜனாதிபதியின் பாதுகாப்புத் தொடரணிக்காக 24 கோடி ரூபாவுக்கு வாகனங்கள் கொள்வனவு செய்தது. இப்படி அரசு சொகுசாக கவர்ச்சி காட்டி மக்களை ஏய்க்க செலவு செய்யும் அரசு, மக்களை ஒடுக்க இராணுவத்தைப் பலப்படுத்துகின்றது. இந்த சொகுசுத்தனங்கள் முதல் விலையேற்;றம் வரையான அனைத்துக்கும், மக்கள் தான் உழைத்துக் கொடுக்க வேண்டும். வானத்தில் இருந்து இதற்கு பணம் வருவது கிடையாது.
இப்படி மக்கள்விரோத அரசாக தன்னை முன்னிறுத்திக் கொண்டு, மக்களை ஒடுக்கி உலக மூலதனத்தை பெருக்க உதவுகின்றது. இந்த வகையில் இலங்கை மக்கள் மேல் இந்த விலையேற்றத்தை, உலக வங்கியின் துணையுடன் அரசு திணித்துள்ளது
பி.இரயாகரன்
18.02.2012