Language Selection

நேசன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

தளம் திரும்பவிருந்த சந்ததியார் சென்னையில் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்

உமாமகேஸ்வரனும் அவரால் தலைமை தாங்கி வழிநடத்தப்படும் புளொட்டின் செயற்பாடுகளிலும் உறுப்பினர்களிடையே தோன்றிவிட்டிருந்த அதிருப்தியும் உள்முரண்பாடுகளும் தளமாநாடு ஒன்றைக் கூட்டுவதை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. உமாமகேஸ்வரனின் உண்மையான சொரூபத்தையும் புளொட்டின் உண்மைநிலையையும் உணர்ந்து கொண்ட பலர் புளொட் செயற்பாடுகளிலிருந்து விலகிக் கொண்டிருந்தனர்.

எமது வெளியேற்றத்தின் பின் யாழ்ப்பாண மாவட்டப் பொறுப்பாளராக செயற்பட்டுக் கொண்டிருந்த வனிதா(சாந்தி) யாழ்ப்பாண மாவட்டப் பொறுப்பாளர் பொறுப்பிலிருந்து விலகிக் கொண்டார். வனிதாவின்(சாந்தி) பொறுப்புக்கு இந்தியாவில் இராணுவப்பயிற்சி முடித்து தளம் திரும்பிவந்திருந்த பாலச்சந்திரன் நியமிக்கப்பட்டிருந்தார். இராணுவப் பயிற்சி முடித்தவர்களை பொறுப்பாளர்களாக நியமிப்பதன் மூலம் புளொட்டை மீண்டும் ஒழுங்குபடுத்தி, புத்துயிரளித்து தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும் என உமாமகேஸ்வரனும் அவரது துதிபாடிகளும் நம்பிக்கை கொண்டிருந்தனர்.

ஆனால் புளொட்டினுடைய வளர்ச்சியையோ அல்லது வீழ்ச்சியையோ தீர்மானிக்கும் சக்திகளாக தளத்தில் செயற்பட்டுக்கொண்டிருந்த மக்கள் அமைப்பு, மகளிர் அமைப்பு, மாணவர் அமைப்பு, தொழிற்சங்க அமைப்பு போன்றவையே விளங்கியிருந்தன. ஏனெனில் புளொட் அமைப்பானது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைப் போல் ஒரு தனிமனிதனைச் சுற்றி அமைக்கப்பட்ட ஒரு இயக்கமாகவோ அல்லது அரசியலை புறந்தள்ளிய ஒரு இராணுவக் குழுவாகவோ இருந்திருக்கவில்லை. அரசியலையும், அமைப்பு வடிவங்களையும் முதன்மைப்படுத்திய ஒரு கருத்தின் அடிப்படையிலேயே - அக்கருத்தை தலைமை கடைப் பிடித்திருக்காத போதிலும் - தளத்தில் புளொட் உருவாக்கப்பட்டிருந்ததால் புளொட்டினால் கூறப்பட்ட கருத்துக்களுக்கு மாறாக உமாமகேஸ்வரனும் புளொட் தலைமையும் செல்வதை தளத்தில் செயற்பட்டுக் கொண்டிருந்த பெரும்பாலான புளொட் உறுப்பினர்கள் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கவில்லை.

வவுனியா எஸ் பீ ஹேரத் மீதான தாக்குதலை நடாத்தியவரான வவுனியா தம்பி உட்பட பலர் இந்தியாவில் இராணுவப்பயிற்சி பெற்று தளம் வந்து சேர்ந்திருந்தனர். தளம் வந்திருந்த வவுனியா தம்பி இந்தியாவில் உமாமகேஸ்வரனினாலும் அவரது உளவுப்படையினராலும் பயிற்சிமுகாம்களில் மேற்கொள்ளப்படும் சித்திரவதைகளையும் கொலைகளையும் புளொட் உறுப்பினர்கள் மத்தியில் வெளிக்கொணர்ந்ததுடன் புளொட் பற்றிய விமர்சனங்களையும் கூட முன்வைக்க தொடங்கியிருந்தார். புளொட்டை ஒரு விடுதலைப் போராட்ட இயக்கமென்றோ அல்லது புரட்சிகர இயக்கமென்றோ நம்பிக்கொண்டிருக்க வேண்டாம் என வெளிப்படையாக புளொட் உறுப்பினர்கள் மத்தியில் பேசத் தொடங்கியதுடன் தனது சொந்த இடமான வவுனியா சென்று வவுனியா மாவட்டத்தில் அமைப்பில் செயற்பட்டுக் கொண்டிருந்தவர்களிடத்தில் புளொட்டின் தலைமையை நம்பி செயற்படவேண்டாம் என அமைப்பிலுள்ளவர்களை கேட்டுக்கொண்டார். வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் வந்து எம்மைச் சந்தித்திப் பேசிய வவுனியா தம்பி எம்முடன் இணைந்து புளொட்டின் தலைமையை அம்பலப்படுத்துவதற்கு முன்வந்ததுடன் வவுனியாவில் புளொட்டில் செயற்பட்டுக் கொண்டிருந்தவர்களான வண்ணன், கபிலன், தவராசா, யோகன், கல்மடு ராஜன், ரமேஸ், சண்முகம், அந்து, சோதி, பெரியண்ணை, யப்பான் உட்பட பலரை எம்முடன் தொடர்புபடுத்தியிருந்தார். இதே காலப்பகுதியில் மன்னார் மாவட்டத்தில் பொறுப்பாக செயற்பட்டுக்கொண்டிருந்த பாபு, மகளீர் அமைப்பில் செயற்பட்டுக் கொண்டிருந்த சந்தியா போன்றோர் எம்முடன் தொடர்புகொண்டு பேசியிருந்ததுடன் தொடர்ச்சியான சந்திப்புக்களை மேற்கொண்டிருந்தனர்.

"தீப்பொறி" பத்திரிகையின் தொடர்ச்சியான வருகை, மக்கள் மத்தியிலான எமது செயற்பாடுகள் போன்றன தொடர்ந்த வண்ணமிருந்ததோடு புளொட்டில் அங்கம் வகித்த பலரும் எம்முடனான சந்திப்புக்களை மேற்கொண்டு வந்த அதேநேரம், தளம் வரும்படி எம்மால் அனுப்பி வைத்திருந்த கடிதத்துக்கு பதிலளித்திருந்த சந்ததியார், தமிழீழ தேசிய விடுதலை முன்னணியினரின் (NLFT) படகுமூலம் தளம் வருவதற்கான முயற்சியில் இறங்கியுள்ளதாகவும் ஒரு சில வாரங்களுக்குள் தளம் வந்து சேர்ந்துவிடுவதாகவும் எமக்கு அறியத் தந்திருந்தார்.

ஆனால், சந்ததியார் தளம் வந்து அரசியலில் ஈடுபடப்போவதான செய்தி உமாமகேஸ்வரனுக்குக் கூட சென்றுவிட்டிருந்தது. "புதியதோர் உலகம்" நாவல் மூலமும், "தீப்பொறி" பத்திரிகை மூலமும் தனது அரசியல் எதிர்காலமும், முப்பத்தைந்து இலட்சம் மக்களுக்கு தலைமை தாங்கும் கனவும் - அதற்கான தகுதியை கொண்டிராத உமாமகேஸ்வரனும், யதார்த்தத்தில் நிறைவேற முடியாத அவரது கனவும் - தனது கண்முன்னே தகர்ந்துகொண்டிருப்பதை கண்டுகொண்ட உமாமகேஸ்வரன், சந்ததியார் தளம் சென்று அரசியலில் ஈடுபட்டால் அதுவே தனது தனது அரசியலின் அஸ்தமனமாக இருக்கும் என்பதையும் அறிந்திருந்தார்.

அத்துடன் புளொட்டின் மத்தியகுழுவுக்கு தெரியாமலே தமிழர் விடுதலைக் கூட்டணித் (TULF) தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்துடன் செய்துகொண்டிருந்த இரகசிய ஒப்பந்தமும், அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்துடனான அரசியல் நெருக்கமும் கூட 1977க்குப் பின் தமிழர் விடுதலைக் கூட்டணியினரின் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்து தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்ட சந்ததியாரால் மீண்டும் உமாமகேஸ்வரனுக்கு எதிராகவும் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் "அகிம்சை" அரசியலுக்கு எதிராகவும் பிரச்சாரம் மேற்கொள்ளப்படலாம் என அச்சம் கொள்ளத் தொடங்கினார்.

உமாமகேஸ்வரனினதும் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தினதும் பொதுஎதிரியாக - இல்லை, "துரோகி" யாக சந்ததியார் இப்பொழுது இனம் காணப்பட்டிருந்தார். "அகிம்சை" வாதியான அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தால் செய்யப்பட முடியாத "துரோகி" ஒழிப்பை யாழ்ப்பாண மேயர் அல்பிரட் துரையப்பாவில் தொடங்கி "புதிய பாதை" ஆசிரியர் சிவசண்முகமூர்த்தி (சுந்தரம்) வரை "தம்பி" மாரை ஏவிவிட்டு கொலை செய்து தனது அரசியலில் வந்த அனைத்துத் தடைகளையும் கடந்துவந்த அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தினதும் உமாமகேஸ்வரனினதும் கூட்டுச்சதிக்கு சந்ததியார் இலக்கானார்.

உமாமகேஸ்வரனின் உளவுப்படை மூலம் சந்ததியாரின் நடமாட்டங்கள் அவதானிக்கப்பட்டன. புரட்டாதி மாதம் 18, 1985 புளொட் உளவுப்படையால் சென்னையில் வைத்து சந்ததியார் கடத்திச் செல்லப்பட்டார். உமாமகேஸ்வரனின் கொலைவெறிச் செயல்கள் தொடர்ந்தவண்ணமிருந்தன. தனது இளமைப்பருவத்திலிருந்தே சாதீயத்திற்கெதிரான போராட்டங்களிலும், தமிழ்மக்களின் உரிமைககளுக்கான போராட்டங்களிலும் தீவிரமாக ஈடுபட்டுவந்த சந்ததியார், 1975ம் ஆண்டு யாழ்ப்பாண மேயர் அல்பிரட் துரையப்பா கொலையில் சந்தேகநபராக கைது செய்யப்பட்டு சிறைவாசம் அனுபவித்தபின் இலங்கை அரசால் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.

ஆனால் இப்பொழுதோ தமிழ்மக்களின் உரிமைகளுக்காக போராடுவதாக சொல்லளவில் மட்டும் கூறிக்கொண்ட உமாமகேஸ்வரன், "புதிய பாதை" குழுவினருடன் இணைந்து புளொட்டை உருவாக்குவதில் முன்னின்றுழைத்தவரும், புளொட்டின் வளர்ச்சியில் முன்னணிப் பாத்திரம் வகித்தவருமான சந்ததியாரைக் கடத்திச் சென்றதன் மூலம் தான் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்துக்கும் இனவாத இலங்கை அரசுக்கும் சேவகனாக மாறிவிட்டார் என்பதை வெளிப்படுத்தியிருந்தார்.

சந்ததியாரை நிபந்தனையின்றி விடுதலை செய்யக்கோரி சென்னையில் மாணவர் அமைப்புக்கள் உட்பட பல அமைப்புக்கள் வேண்டுகோள் விடுத்திருந்தனர். தளத்தில் "சந்ததியார் கடத்தப்பட்டார்" என்ற தலைப்பில் டொமினிக்கால் எழுதப்பட்டு துண்டுப்பிரசுரத்தை வெளியிட்டு உமாமகேஸ்வரனால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுக்கொண்டிருந்த அராஜகச் செயல்களை நாம் அம்பலப்படுத்தினோம். ஆனால் யாருடைய வேண்டுகோள்களும் அம்பலப்படுத்தல்களும் சந்ததியார் கடத்தலின் பின்னணியிலிருந்தவர்களுக்கு பொருட்டாக இருக்கவில்லை.

(அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம்) (உமாமகேஸ்வரன்)

தமிழ்நாட்டுப் பொலிசார் சந்ததியார் கடத்தல் தொடர்பாக எட்டுப் பேரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். ஏற்கனவே உமாமகேஸ்வரனுக்கும் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்துக்குமிடையில் செய்துகொள்ளப்பட்ட இரகசிய ஒப்பந்தத்தின் காரணமாக வர்க்க அரசியலால் உமாமகேஸ்வரனுடன் நண்பராகிவிட்ட அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் தமிழ்நாடு மாநில அமைச்சர் ஒருவரின் உதவியுடன் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுக் கொண்டிருந்த எட்டுப்பேரையும் விடுவித்ததோடு சந்ததியார் கடத்தப்பட்டது குறித்து பொலிஸ்விசாரணையையும் கைவிடச் செய்தார். இதன் மூலம் தனது நீண்டநாள் அரசியல் எதிரியும் தனது வலையிலிருந்து நீண்டநாட்களாக தப்பியிருந்தவருமான சந்ததியாரை அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் பழி தீர்த்துக் கொண்டார்.

உமாமகேஸ்வரனின் உத்தரவின் பேரில் புளொட் உளவுப்படையினரால் கடத்திச் செல்லப்பட்ட சந்ததியாரை கொடூரமாக சித்திரவதை செய்து கொலை செய்ததன் மூலம் புளொட்டின் உளவுப்படையினர் சந்ததியார் மீதான வன்மத்தைத் தீர்த்துக் கொண்டனர்.

தனது இளமைப் பருவம் முழுவதுதையுமே சமூகத்தின் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும், ஏதிலிகளான மலையக மக்களுக்காகவும், இலங்கை அரசின் இனவொடுக்குமுறைக்கெதிராகவும் போராடிய காரணத்தால் இலங்கை அரசபடைகளால் தேடப்பட்டு வந்த சந்ததியார், இலங்கை அரசபடைகளால் அல்ல, அவரால் வளர்த்துவிடப்பட்ட புளொட் இயக்கத்தினராலேயே படுகொலை செய்யப்பட்டார்.

(தோழர் சந்ததியார்)

சந்ததியாரின் படுகொலையை கேள்வியுற்ற நாம் "தோழர் சந்ததியார் படுகொலை" என்ற டொமினிக்கால் எழுதப்பட்ட துண்டுப்பிரசுரத்தை வெளியிட்டிருந்தோம். காந்தீய இயக்கத்தின் தலைவரான அருளானந்தம் டேவிட் (டேவிட் ஐயா) தன்னுடன் காந்தீய இயக்கத்தில் முழுமூச்சாக இயங்கிய சந்ததியாரின் கொலை குறித்து "கொலைகாரன் உமாமகேஸ்வரன் கூட்டாளி வாசுதேவா" என்ற துண்டுப்பிரசுரத்தை சென்னையில் வெளியிட்டு உமாமகேஸ்வரனை அம்பலப்படுத்தியிருந்தார். ஆனால் சந்ததியார் படுகொலை எம்மை எந்தவிதத்திலும் பீதிகொள்ளச் செய்யவில்லை. மாறாக, புளொட்டின் அராஜகத்திற்கெதிராக இறுதிவரை போராடுவதென்று உறுதிகொண்டோம்.

இரண்டாவது "தீப்பொறி" இதழின் வெளியீட்டுக்குப் பின்னரான காலகட்டத்தில் எம்முடன் இணைந்து செயற்பட்டுக்கொண்டிருந்தவர்களை குழுக்களாக உருவாக்கி அரசியல் கற்றலுக்கு முன்னுரிமை கொடுத்து அதை ஊக்குவித்ததோடு, குழுரீதியாக விவாதங்களை நடத்தவும், அங்கத்தவர்கள் அமைப்புக்குள் முகம் கொடுக்கும் பிரச்சனைகளை விமர்சனம் சுயவிமர்சனத்துக்கூடாக தீர்வுகாணுவதை நோக்கியும் நகர்த்திக்கொண்டிருந்தோம்.

"தீப்பொறி" க்குழுவின் ஒட்டுமொத்த செயற்பாடுகளை, முடிவுகளை செயற்குழு மட்டுமே மேற்கொண்டுவந்த போதிலும் ஏனைய குழுக்களில் ஈழவிடுதலைப் போராட்டம் குறித்த கருத்துக்களும் எமது எதிர்கால வேலைத்திட்டங்கள் என்பனவும் விவாதத்திற்கான கருப்பொருளாக எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தன.

இந்நிலையில் எம்முடன் செயற்பட்டுக்கொண்டிருந்த விசுவப்பா "தீப்பொறி"க் குழுவின் செயற்பாடுகள் குறித்து அவநம்பிக்கை கொடுக்கும் வகையில் கண்ணாடிச் சந்திரன் தன்னுடன் பேசியதாகவும் ஒரு செயற்குழு உறுப்பினர் இத்தகையதொரு கருத்தை வெளியிடும்போது தன்னால் எப்படி "தீப்பொறி" குழுவில் தொடர்ந்தும் நம்பிக்கையுடன் செயற்பட முடியும் என்ற விமர்சனத்தை முன்வைத்திருந்தார்.

இதுபற்றிக் கருத்து தெரிவித்திருந்த கண்ணாடிச்சந்திரன் தான் மேற்படி கருத்தை தெரிவிக்கவில்லை என்று கூறியதோடு, இச்சம்பவம் நடைபெற்று ஒரு சில நாட்களுக்குள்ளாகவே கண்ணாடிச்சந்திரன் "தீப்பொறி"க் குழுவில் இருந்து வெளியேறிவிட்டிருந்தார். கண்ணாடிச்சந்திரனின் வெளியேற்றத்துடன் ரஞ்சன், விசுவப்பா ஆகியோரும் கூட "தீப்பொறி"க் குழுவிலிருந்து வெளியேறிவிட்டிருந்தனர்.

கண்ணாடிச்சந்திரனின் வெளியேற்றத்தால் "தீப்பொறி" குழுவுக்குள் பல பிரச்சனைகளை நாம் முகம் கொடுக்கவேண்டியவர்களாயிருந்தோம். நாம் புளொட்டிலிருந்து வெளியேறியதிலிருந்து "புதியதோர் உலகம்" நாவல், "தீப்பொறி" பத்திரிகை என்பனவற்றை அச்சிட்டு வெளிக்கொணர்வதில் முன்னின்றுழைத்தவரும், "தீப்பொறி" பத்திரிகையையும் "புதியதோர் உலகம்" நாவலையும் யாழ்ப்பாண மாவட்டத்துக்கு வெளியே கொண்டுசென்று விநியோகிப்பதற்கான வழிகாட்டியாக இருந்தவருமான கண்ணாடிச்சந்திரன், உமாமகேஸ்வரனைக் கொலை செய்வதற்கு தலைமை தாங்கி செல்லவென செயற்குழுவால் நியமிக்கப்பட்டவராகவும் இருந்தார்.

உமாமகேஸ்வரனைக் கொலை செய்வதற்கான "தீப்பொறி"க் குழுவின் இரகசிய திட்டத்தை அறிந்திருந்தவராக கண்ணாடிச்சந்திரன் இருந்ததால், அவரின் வெளியேற்றமும் அவரால் உமாமகேஸ்வரனைக் கொலை செய்வது பற்றிய இரகசியத் திட்டம் வெளிவிடப்பட்டால் அது எமக்கு ஆபத்தை விளைவிக்கும் என்றும் செயற்குழு உறுப்பினர்களாகிய நாம் கருதினோம். கண்ணாடிச்சந்திரனின் திடீர் வெளியேற்றம் குறித்துப் பேசுவதற்கென செயற்குழுக் கூட்டம் கூட்டப்பட்டது.

"தீப்பொறி" குழுவிலிருந்து வெளியேறுவதற்கான உரிமை கண்ணாடிச்சந்திரனுக்கு உண்டு என செயற்குழு உறுப்பினர்கள் கருத்துத் தெரிவித்திருந்தனர்.

ஆனால் "தீப்பொறி"க் குழுவின் இரகசியங்களை வெளியிட்டு எமது பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்தினால் நாம் கண்ணாடிச்சந்திரனை என்ன செய்வது? என்ற கேள்வியை காந்தன் (ரகுமான் ஜான்) எழுப்பியிருந்தார்.

அராஜகத்திற்கெதிரான போராட்டமே புளொட்டிலிருந்து வெளியேறிய எம்மை ஒன்றிணைத்திருந்ததே தவிர புளொட்டுக்குள் நடைபெற்ற கருத்துரீதியான போராட்டத்தில் ஒரு அரசியல் கருத்தின் அடிப்படையில் நாம் ஒன்றிணைந்தவர்களாய் இருந்திருக்கவில்லை. இதனால் புளொட்டிலிருந்து வெளியேறியிருந்த எம்மத்தியிலும் கூட மாறுபட்ட அரசியல் கருத்துக்களும், மாறுபட்ட அரசியல் பார்வைகளும் இருக்கவே செய்தன. உமாமகேஸ்வரனைக் கொலைசெய்வது என்ற தவறான "ஒரு புள்ளி"யில் தொடங்கிய "தீப்பொறி"க் குழு தவிர்க்க முடியாமல் அந்தத் தவறான அரசியல் பார்வையிலிருந்தும், தவறான முடிவிலிருந்தும் அதனுடன் பின்னிப்பிணைந்ததுமான அடுத்த தவறான கேள்விகளையும், தவறான முடிவுகளையும் நோக்கி செல்வதாக இருந்தது.

இரகசியங்களை பாதுகாக்கவென்றும் தமது இயக்கத்தை பாதுகாக்கவென்றும் தமிழீழ விடுதலைப் புலிககளின் தலைவர் பிரபாகரனும் அவரின் வழியை பின் பற்றிய உமாமகேஸ்வரனும் சென்று கொண்டிருந்த பாதையில்தான் நாமும் செல்ல முனைவதை காணக் கூடியதாகவிருந்தது.

ஒரு தவறான முடிவு மற்றொரு தவறுக்கு வழிகாட்டிக் கொண்டிருந்தது. "இரகசியம்" பேணுதல், "பாதுகாப்பு" என்ற பிரச்சனைகள் குறித்தே செயற்குழு கூட்டத்தில் விவாதித்துக் கொண்டிருந்தோம். கண்ணாடிச்சந்திரன் "தீப்பொறி"க் குழுவின் உமாமகேஸ்வரனைக் கொலை செய்வது குறித்த இரகசியத்தை வெளியிட்டால் என்ன செய்வது என்பதை விட்டு உமாமகேஸ்வரனைக் கொலை செய்யும் திட்டத்தை கண்ணாடிச் சந்திரன் எக்காரணம் கொண்டும் வெளியிடவேண்டாம் எனக் கேட்டுக்கொள்வது என செயற்குழு பெரும்பான்மையாக முடிவெடுத்தது.

இதனடிப்படையில் தர்மலிங்கமும் நானும் கண்ணாடிச் சந்திரனைச் சந்தித்து உமாமகேஸ்வரனைக் கொலை செய்யும் திட்டத்தை எக்காரணம் கொண்டும் வெளியிட வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டோம். "தீப்பொறி"க் குழுவிலிருந்து கண்ணாடிச்சந்திரன் வெளியேறியதால் உமாமகேஸ்வரனைக் கொலை செய்வதற்கான திட்டமும் கைவிடப்பட்டது.

(தொடரும்)


1. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 1

2. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 2

3. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 3

4. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 4

5. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 5

6. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 6

7. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 7

8. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 8

9. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 9

10. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 10

11. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 11

12. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 12

13. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 13

14. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 14

15. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 15

16. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 16

17. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 17

18. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 18

19. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 19

20. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 20

21. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 21

22. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 22

23. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 23

24.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 24

25.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 25

26.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 26

27.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 27

28.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 28

29. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 29

30 .புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 30

31.  புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 31

32. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 32

33. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 33

34. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 34

35.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 35

36.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 36

37.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 37

38.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 38

39.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 39

40. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 40

41.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 41

42. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 42

43. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 43