சிரியாவின் ஜனநாயகத்துக்கான மக்கள் போராட்டத்தை, முரண்பட்ட ஏகாதிபத்தியங்கள் தங்கள் நலனுக்கான உள்நாட்டு யுத்தமாக மாற்றிவிட்டது. அரபு உலக எழுச்சிகள் அனைத்தும், உலகை மறுபடியும் ஏகாதிபத்தியங்கள் தமக்கு இடையில் மறுபங்கீடு செய்து கொள்ளும் வண்ணம் ஏகாதிபத்தியங்களுக்கே பயன்பட்டது. நிதி மூலதனம் மற்றும் உற்பத்தி மூலதனம் மூலம், அரபுலகம் மீது மேற்கு அல்லாத நாடுகள் பெற்றுக் கொண்டு வந்த செல்வாக்கை, ஜனநாயகப் போராட்டங்கள் மூலம் மேற்கு தனக்கு சார்பாக மறுபங்கீடு செய்து கொண்டது. இதுதான் அரபுலக எழுச்சியின் அரசியல் விளைவு. இந்த வகையில் சிரியாவில் நடைபெறுவதை தடுக்கும் வண்ணம், மேற்கு அல்லாத ஏகாதிபத்தியங்களின் முயற்சி வெளிப்படையான ஏகாதிபத்திய மோதலாக மாறியிருக்கின்றது. அது சிரியாவில் உள்நாட்டு யுத்தமாக மாறியிருக்கின்றது.
அரபுலக ஜனநாயகப் போராட்டங்களை மேற்கு ஏகாதிபத்தியங்கள் தனக்குச் சார்பாக பயன்படுத்திய விதமே, மக்கள் எதை "ஜனநாயகம்" என்று கருதினரோ அதுவே ஏகாதிபத்திய "ஜனநாயகமாகவும்" இருந்தது. இதன் அரசியல் சாரம் வர்க்க சர்வாதிகாரத்தைக் கொண்ட அமைப்பில், அதை ஆளும் கூட்டத்தை தேர்ந்து எடுக்கும் உரிமையைத் தான் இவர்கள் "ஜனநாயகம்" என்கின்றனர். வர்க்க சர்வாதிகாரத்தைக் கொண்ட சமூக அமைப்பை இது மாற்றாது. இதை வழிநடத்தும் பிரிவை தேர்ந்தெடு என்கின்றது. இதையே "ஜனநாயகமாக", ஏகாதிபத்தியங்கள் முன்வைக்கின்றது
.
ஆளும் வர்க்கத்தை அல்ல, அதற்கு தலைமை தாங்கும் பிரிவை தேர்தல் மூலம் தெரியும் உரிமை தான் "ஜனநாயகம்" என்ற அரசியல் வரையறைக்குள், அரபுலக மக்கள் எழுச்சி தோற்கடிப்பட்டது. சட்டம், நிர்வாக அமைப்புகள் முதல் இதைக் கையாளும் அதிகாரிகள், இதை பாதுகாக்கும் இராணுவம், நீதிபதிகள் இங்கு மாற்றப்படுவதில்லை. சுரண்டல் அமைப்பு முறையிலான சர்வாதிகார அமைப்பு மாற்றப்படுவதில்லை.
ஆளும் வர்க்க சர்வாதிகாரம் என்பது, அதிகாரவர்க்கமும், சுரண்டும் வர்க்கமும் ஒருங்கே கொண்ட ஆட்சி அமைப்பு முறையாகும். இதை தேர்தல் மூலம் மக்கள் தெரிவு செய்வதில்லை. இதற்கு சட்டரீதியாக பாதுகாத்து, சட்டங்களை இயற்றும் பிரிவை தேர்ந்தெடுப்பதைத்தான் "ஜனநாயகம்" என்றும், இதை தெரிவு செய்;யும் உரிமை மக்களுக்கு உரியது என்கின்றனர்.
சர்வாதிகார ஆளும் வர்க்கம் தலைமைதாங்கும் சர்வாதிகார வர்க்க அமைப்பு வடிவிலான ஆட்சி அமைப்புக்கு, தலைமை தாங்கும் உறுப்பை மக்கள் தெரிவு செய்கின்ற நிகழ்வையும் உரிமையையும் தான் "ஜனநாயகம்" என்று காட்டுகின்ற, கூறுகின்ற அரசியல் பின்னணியில் வர்க்க சர்வாதிகாரம் மக்களை ஒடுக்கியும் சுரண்டியும் ஆளுகின்றது.
அரபுலகில் ஆளும் வர்க்க சர்வாதிகாரத்தை ஆளுகின்ற உறுப்பைத் தெரிவு செய்வதற்கான உரிமையை முன்னிறுத்தி, அரபுலக எழுச்சியை மேற்கு தனக்கு ஏற்ற பொம்மை ஆட்சியாக மீண்டும் மாற்றியது. ஆளும் வர்க்க சர்வாதிகாரத்தை தூக்கி எறியாத, அதைப் பாதுகாக்கின்ற ஆளும் வர்க்க உறுப்பை, மாற்றீடாகக் காட்டி அதை அரபுலகப் புரட்சியாகக் காட்டினர். இப்படி அரபுலக மக்கள் மீண்டும் ஏகாதிபத்தியத்தின் கீழ் அடிமைப்படுத்தப்பட்டனர். இங்கு ஏகாதிபத்திய முரண்பாடுகளும், மறுபங்கீடும் கூர்மையாக நடந்தேறியது.
இந்த அரசியல் பின்னணியில் மக்கள் கையில் அதிகாரம் செல்லாத வண்ணம், ஆளும் வர்க்க சர்வாதிகாரம் தொடரும் வண்ணம், ஆட்சிகளை தூக்கி எறியும் வண்ணம், ஏகாதிபத்திய ஆதரவும் வழிகாட்டலும் அதற்குக் கிடைத்தது. இதன் பின்னணியில், ஏகாதிபத்திய சமநிலை அங்கு குலைந்து, ஏகாதிபத்திய முரண்பாடுகள் கூர்மையாகியுள்ளது. இந்த நிலையில்தான் சிரியாவில் உள்நாட்டு யுத்தம் மூலம், முரண்பட்ட ஏகாதிபத்தியங்கள் தீர்வுகளைக் காண முற்பட்டு இருக்கின்றது.
சிரிய மக்கள் போராட்டங்கள் தனக்காக சொந்த அரசியல் வழியை முன்வைத்து போராடாததால், அவை ஏகாதிபத்தியத்துக்கு சேவை செய்வனவாக மாறிவிட்டது. இந்த வகையில் தான் முரண்பட்ட ஏகாதிபத்தியங்களின் போராட்டக் களமாக சிரியா மாறிவிட்டது. ஐ.நா தலையீடு மூலம், மேற்கு ஏகாதிபத்தியங்கள் இராணுவத் தலையீட்டை நடத்த முனைந்தது இந்த வகையில் தான். லிபிய விவகாரத்தை அடுத்து, மேற்குக்கு எதிரான ஏகாதிபத்தியங்கள் "வீடோ" அதிகாரத்தை மேற்குக்கு எதிராகப் பயன்படுத்தின. இதன் பின்னணியில் உள்நாட்டு யுத்தம் ஒன்றை, ஏகாதிபத்தியங்கள் சிரியாவில் தீவிரமாக்கியுள்ளது. இப்படி அங்கு நடக்கும் யுத்தம் ஜனநாயகத்துக்கானதல்ல. மாறாக ஏகாதிபத்திய நலன் சார்ந்த கூலிப்படை யுத்தமாக மாறிவிட்டது.
ஐ.நா தீர்மானத்தை மோசடியாகப் பயன்படுத்தி லிபியாவில் மேற்கு நடத்திய யுத்தம் மூலம், லிபிய எண்ணை வயல்களை மேற்கு கொள்ளையிட்டது. இந்த பின்னணியில் தான் "வீட்டோ"வை, சிரிய விவகாரத்தில் ருசியாவும் சீனாவும் பயன்படுத்தியது. மீண்டும் உலகம் வெளிப்படையான ஏகாதிபத்திய கெடுபிடி யுத்தத்துக்குள் நுழைந்து இருக்கின்றது. மேற்கில் அதிகரித்து வரும் பொருளாதார நெருக்கடியும், அந்த நாடுகளே திவலாகும் நிலையில் உலகை மறுபங்கீடு செய்வதன் மூலம் நெருக்கடிகளுக்கு தீர்வு காணமுனைகின்றனர்.
மேற்கில் அதிகரிக்கும் வேலையில்லாத் திண்டாட்டம், சமூக நலத்திட்ட வெட்டுகள், கொந்தளிப்பான நிலைக்குள் மேற்கை தள்ளிச் செல்லுகின்றது. மேற்கில் மக்களின் கிளர்ச்சிகள் தவிர்க்க முடியாததாகிவிட்டது.
உலகைச் சூறையாடுவதன் மூலம், உலகை மறுபங்கீடு செய்வதன் மூலம், மேற்கு தன் உள்நாட்டு நெருக்கடிக்கு தீர்வு காணமுனைகின்றது. இந்த வகையில் ஏகாதிபத்திய எதிர்ப்பைக் கொண்டிராத அரபுலக மக்கள் எழுச்சிகள் அனைத்தையும், தனக்கு ஏற்ற ஏகாதிபத்திய பொம்மை ஆட்சிகளாக உருவாக்கியது. இது முன்னைய சர்வாதிகாரிகளுக்கு எதிரானதான அரசியல் அடிப்படையில் இருந்தல்ல. கடந்தகாலத்தில் அரபுலக எண்ணை வயல்களை மேற்கு சூறையாடிய பின்னணியில், அரபுலக சர்வாதிகாரிகள் அனைவரும் ஏகாதிபத்தியத்துக்கு சேவை செய்தபடியே தங்களை தக்கவைத்துக் கொண்டனர்.
இதற்கு அப்பால் இஸ்ரேலுக்கு எதிரான அரபு மக்கள் போராட்டம் சார்ந்த சவடால்கள் மற்றும் யுத்தங்கள், அரபு தேசியம் பேசியபடி நடந்த ஆட்சிக் கவிழ்ப்புகள், தேசியவாதம் மூலமான ஆட்சிகள், இஸ்லாமிய தேசியவாத ஆட்சிகள் அனைத்தும் மக்களை ஏய்த்து, தங்கள் சொந்த சர்வாதிகாரத்தையே பலப்படுத்தவே பயன்படுத்தினர். அதேநேரம் முரண்பட்ட ஏகாதிபத்திய முகாமைச் சார்ந்து தங்களை தக்கவைத்துக் கொண்டனர்.
உண்மையில் ஏகாதிபத்திய எதிர்ப்பை முன்வைத்து, அரபுலக தேசிய அரசுகள் உருவாகவில்லை. அரபு எழுச்சியும் இந்தவகையில் உருவாகவில்லை. சர்வதேச ஏகாதிபத்திய முரண்பாட்டுக்குள் தான், அரபுலக தேசியவாதங்கள் முதல் எழுச்சிகள் வரை வேஷம் கட்டியாடின.
காலத்துக்குக் காலம் கொடுமையான கொடூரமான ஏகாதிபத்திய ஆட்சியாளராகவே, அரபுலக சர்வாதிகாரிகள் முதல் மக்கள் தேர்ந்தெடுத்த ஆட்சிகள் வரை நீடித்தன. இந்தப் பின்னணியில் ஏகாதிபத்தியங்கள் அரபுலக எண்ணை வயல்களையும், மக்களையும் ஓட்டச் சுரண்டினர்.
ஏகாதிபத்தியம் தொடர்ந்து சூறையாடும் அமைப்பை யார் தேர்ந்தெடுப்பது என்பதை "ஜனநாயகமாக" காட்டி, அந்த உரிமையை மக்களுக்கு கொடுப்பதுதான் "ஜனநாயகம்" என்ற எல்லைக்குள், அரபு மக்களை மீண்டும் ஏகாதிபத்தியம் தோற்கடித்திருக்கின்றது. சிரியாவில் அதைக் கூறி, மேற்கு அல்லாத ஏகாதிபத்தியத்துக்கு எதிரான உள்நாட்டு யுத்தத்தை மேற்கு நடத்துகின்றது. இதுதான் இன்று அரபுலகில் நடந்தேறியது, நடந்தேறுகின்றது.
பி.இரயாகரன்
10.02.2012