08152022தி
Last updateபு, 02 மார் 2022 7pm

மார்க்சியத்தை ஒரு புரட்சிகர தத்துவமாக மீளவும் நிறுவ, நாம் அனைத்தையும் ஈவிரக்கமின்றி விமர்சிப்பதே, ஒரு சரியான திசை வழியாகும்.

சமர் 26 இல் தேசபக்தன் மீதான விமர்சனத்துக்கு, தேசபக்தன் இதழ் 20 (ஆடி-2001) இல் ஒரு தொடர் விமர்சனத்தை எழுதியுள்ளனர். 24 பக்கங்;கள் கொண்ட இந்த விமர்சனம், சமர் எழுப்பிய கோட்பாட்டு பிரச்சனை ஒன்றுக்கும் கூட நேரடியாக பதிலளிக்கவில்லை. மாறாக கோட்பாட்டு விவாதத்துக்கு பதிலளிப்பதை விடுத்து, பொதுவான நிலைமையை கூறுவதன் மூலம் ஜனரஞ்சகமான சமூக அறியவியலுக்குள் வாசகர்களை அழைத்துச் சென்று திசை திருப்புவது நிகழ்கின்றது. இந்த ஜனரஞ்சகமான எல்லைக்குள் புதிய முரண்பாடுகளும், புதிய விமர்சன உள்ளடக்கமும் பிரச்சனையை வேறு திசையில் நகர்த்துகின்றது.

தத்துவ விவாத்ததுக்குப் பதில் கடந்தகால தியாகங்கள் மற்றும் சந்தித்த நெருக்கடிகளை கட்டுரையாக்கி நீண்ட உணர்ச்சியை எழுப்புவதன் மூலம் தீர்த்துவிட முடியாது. எமது போராட்ட வரலாற்றில் கலைப்புவாதம் மனிதர்களையே நிறம் மாறச் செய்து, அது வண்ணம் வண்ணமாக பிரிந்து சிதறிக் கொண்டிருந்த போது, மறு தளத்தில் போராட முனைபவர்களை ஈவிரக்கமற்ற படுகொலைகள் மூலம் அழித்தொழிப்பு நடந்து கொண்டிருந்தது. புரட்சிகர வரலாறு தனது புரட்சிகர சிந்தனையை அதன் போராட்டத்தை படுகொலையிலும், கலைப்பு வாதத்திலும் அழிக்கப்பட்டுக் கொண்டிருந்த போது, அதில் எதிர் நீச்சல் அடித்தவர்கள் கடுமையான பலத்த நெருக்கடிகளை தொடர்ச்சியாக சந்தித்தனர், சந்திக்கின்றனர். இதை யாரும் கொச்சைப்படுத்த முடியாது. ஆனால் ஒரு தத்துவ விவாதத்தில் விவாதத்துக்கு பதிலளிப்பதற்கு பதில், கடந்த வரலாற்றைச் சொல்லி தற்காப்பை பெற முடியாது. இது சொந்த தத்துவத்துக்கு சலுகை கோருவதாகும்;. தனிப்பட்ட சமூக அக்கறையற்ற ஒருவரிடம் இருந்து கூட தற்செயலாக ஒரு அடிப்படையான கோட்பாட்டு விவாதம் எழுப்பப்படின், அதற்கு கோட்பாட்டு ரீதியாக பதிலளிப்பது அவசியமானது. இதற்கு பதிலளிப்பதற்குப் பதில், தமது கடந்தகால தியாகங்கள் மற்றும் கடந்த கால கலைப்பு வாத நடத்தைகளைச் சொல்லி தற்காப்பு எடுப்பது என்பது, கோட்பாட்டு விவாதத்துக்கு சலுகை கோருவதாகும்;. தத்துவ விவாவதத்தில் கடந்தகால நிலைமைகளைச் சொல்லி, விவாதத்தை திசை திருப்புவதை தேசபக்தன் கட்டுரை தொடர்ச்சியாக செய்கின்றது. எனவே மீண்டும் பழைய அடிப்படை தத்துவ விவாதத்தை முன்வைத்து, சுருக்கமாக பார்ப்போம்;.

தமிழீழ புதிய சனநாயக கட்சி தனது விமர்சனத்தில் "... சமரின் முழு விமர்சனத்திலும், ~தமிழீழ புதிய சனநாயக கட்சியை| ஒரு கம்யூனிசக் கட்சியாக கருதிக் கொண்டும், புதிய சனநாயகப் புரட்சிப் போராட்டத்தை ஒரு ~முன்னணியின்| பெயரில் தான் முன்னெடுக்க முடியும், ~கட்சியின்| பெயரில்  செய்யக் கூடாது என தீர்மானித்துக் கொண்டு, அவ்வாறு கட்சியின் பெயரில் முன்னெடுப்பதைக் கூடத் திரிபுக்கான போக்கு என்ற பார்வையில் முழு விமர்சனத்தையும் எழுதித் தள்ளியுள்ளது" எனக் கூறி விவாதத்தை திசை திருப்பி முன்வைக்கின்றனர். அது சரி, சமர் இப்படி எங்கேயாவது ஒரு இடத்தில் தன்னும் சொல்லியுள்ளதா? இல்லை. அவர்கள் எந்த ஒரு ஆதாரத்தையும் காட்ட முடியாது. "தமிழீழ புதிய சனநாயக கட்சி" பற்றிய எமது விமர்சனத்தில், இது கட்சியா முன்னணியா என்ற கேள்வியை எழுப்பியிருந்தோம்;. அதற்கு இக் கட்டுரை பதிலளிக்கவில்லை. இந்தக் கட்சி எந்த வர்க்கத்தின் கட்சி என்று கேள்வியை எழுப்பியிருந்தோம். அதற்கும் பதிலில்லை. நாம் இந்த தமிழீழ புதிய சனநாயக கட்சியை பாட்டாளி வார்க்கமல்லாத, மற்றைய வர்க்;கத்தின் கட்சியாக எமது விவாதம் மூலம் நிறுவினோம். அதற்குப் பதிலில்லை. நாம் புதிய ஜனநாயக புரட்சியில் பல்வேறு வர்க்கத்தின் பங்களிப்பை குறிப்பிட்டு, பங்களிப்புக்கான தலைமை ஒரு முன்னணியாக இருக்க முடியும் என்றோம். அதற்கும் பதிலில்லை. மாறாக கட்சி தலைமை தாங்க முடியாது என்று சொன்னதாக விடையத்தை திசை திருப்புகின்றனர். நீங்கள் பாட்டாளி வர்க்க கட்சியாக பிரகடனம் செய்யாத வரை, விவாதம் இதற்குள் உள்ளடங்கவில்லை. முன்னணி, இராணுவம் போன்றவற்றுக்கு கட்சி எப்படி தலைமை தாங்கும் என்பது, மற்றொரு விவாதமாகும். உங்கள் பிரகடனம் எது என்பதே சமரின் மையமான கேள்வி. அத்துடன் புதிய ஜனநாயக புரட்சியில் பங்கு கொள்ளும் பல்வேறுபட்ட வர்க்க சக்திகளை "தமிழீழ புதிய சனநாயக கட்சி" அணிதிரட்டுமாயின், இதன் வர்க்க அடிப்படை என்ன? என்று கேள்வி எழுப்பியிருந்தோம். இங்கு இந்த தேசிய போராட்டத்தில் முன்னணிக்குரிய பாத்திரம் என்ன? கட்சிக்குரிய பாத்திரம் என்ன? என்ற கோட்பாட்டு அடிப்படையை எழுப்பியிருந்தோம். இதற்கு பதிலளிக்க வக்கற்று பிரச்சனையை திசை திருப்பி, சொல்லாதை சொல்லிவிடுகின்றனர். நாம் முன்வைக்காததை நாம் வைத்தாக கூறுவதன் மூலம், அதன் மீதான விமர்சனத்தை செய்தபடி திசை திருப்ப முடிகின்றது. இனி சமரின் பெயரில் அவர்கள் ~தமிழீழ புதிய சனநாயக கட்சியை| ஒரு கம்யூனிசக் கட்சியாக கருதிக் கொண்டு நாம் கதைப்பதாக கூறுவதன் மூலம், அது ஒரு கட்சி இல்லை என்கின்றனர். அதே நேரம் அடுத்த வரியில் புதிய சனநாயகப் புரட்சிப் போராட்டத்தை ஒரு ~முன்னணியின்| பெயரில் தான் முன்னெடுக்க முடியும் என்று சமர் கூறியதாக கூறி, மறுப்பதன் மூலம் அது முன்னணி இல்லை என்கின்றனர். இந்தத் தொடர் விமர்சனத்தில் வேறு ஒரு இடத்தில் "தமிழீழ புதிய சனநாயக கட்சி ஒரு கொம்யூனிஸ்ட் கட்சியுமல்ல, கொம்யூனிஸ்ட் கட்சிக்கு மாற்றான கட்சியுமல்ல. ஆனால் புரட்சிகர கொம்யூனிஸ்ட் கட்சியின் உலக வரலாற்றுத் தேவையை நிராகரிக்காத கட்சி என்பதில் தெளிவாகவுள்ளது" என்று ஒரு புதியபாணி தத்துவ விவாதத்தை முன்வைக்கின்றனர். இந்தத் தேவை நிராகரிக்காத கட்சியின் வாக்கத் தன்மை என்ன? எந்த வர்க்கம் அல்லது வர்க்கங்கள் அதில் அணிதிரள்வர். ஏன் இக்கட்சி அல்லாத மற்றொரு கட்சி தேவை? ஒரு விடையத்துக்கு வாலும் நுனியும் காட்டும் பாணியில் பதிலளிக்கின்றனர். அது சரி யாராவது ~|தமிழீழ புதிய சனநாயக கட்சி"யின் வாலும் தலையும் காட்டும் தத்துவ வாதங்களில் இருந்து புரிந்து இதை விளக்கிச் சொன்னாலும் கூட, அதை நாமும் புரிந்து கொள்ள முடியும்;. இந்தத் "தேவையை நிராகரிக்காத கட்சி"யின் வர்க்கத் தன்மை என்ன? இந்தக் கட்சி எந்த வர்க்கத்தின் நலனை எப்படி பாதுகாக்கும்;!

ஒரு நாட்டின் புரட்சிக்குரிய தலைமை நிச்சயமாக கட்சியை தலைமை தாங்க முடியும். இதை என்றும் சமர் மறுத்துவிடவில்லை. கடந்த காலம் முதல் சமர் இதற்காகவே போராடி வருகின்றது. உங்களுடனான விமர்சனம் அதற்காகவே நடக்கின்றது. ஆனால் புதிய ஜனநாயக புரட்சிக்கு கட்சி நேரடியாக அல்லது மறைமுகமாக முன்னணியூடாக தலைமை தாங்கும் வரலாற்று பாத்திரம், அந்த நாட்டின் குறிப்பான நிலைமையுடன் தொடர்புடையது. முன்னணி தலைமை தாங்கும் ஒரு நிலையிலும், கட்சியே இராணுவத்தை வழிநடத்தும்;. இது குறிப்பான நிலைமையை அடிப்படையாக கொண்டது. ஜனநாயக புரட்சி நடைபெறாத நாடுகளில், ஜனநாயகக் கோரிக்கைகளுடன் ஒன்றுக்கு மேற்பட்ட வர்க்கங்கள் அதற்காக போராடுகின்றன. இந்த நிலையில் அந்த வர்க்கங்களை ஒரு புதிய ஜனநாயக புரட்சிக்கு அணிதிரட்டுகின்ற பாட்டாளி வர்க்கம், ஒரு முன்னணியூடாகவே அவர்களை அணிதிரட்ட முடியும். நேரடியாக கட்சி தனக்குள் அவர்களை அணிதிரட்ட முடியாது. புதிய ஜனநாயகக் கோரிக்கைகள் எப்போதும் ஜனநாயகக் கோரிக்கைகளை உயர்ந்த பட்ச அடிப்படையாக கொண்டது. ஜனநாயக கோரிக்கைகளை முன்வைக்கும் பல்வேறுபட்ட வர்க்கங்களின் நலன்களை அடிப்படையாக கொண்டு இருக்கின்ற நிலையில், அது ஒரு கட்சியாக இருக்காது.

"தமிழீழ புதிய சனநாயக கட்சி" ஒரு கட்சி இல்லை என்கின்றார்கள். "ஆனால் புரட்சிகர கொம்யூனிஸ்ட் கட்சியின் உலக வரலாற்றுத் தேவையை நிராகரிக்காத கட்சி" என்கின்றனர். இங்கு கட்சி என்பது என்ன? உலக வரலாற்றுத் தேவையை நிராகரிக்காத கட்சி என்பது என்ன? இந்த இரண்டுக்மிடையில் வேறுபாடு என்ன என்ற கேள்வி எழுகின்றது? இவை என்ன உள்ளடக்கத்தில், என்ன திட்டத்தில் வேறுபடுகின்றன. இவை இரண்டும் தனித் தனியாக எந்த வர்க்கத்தை பிரதிபலிக்கின்றன? இதற்கிடையில் என்ன வேறுபாடு உண்டு? கட்சியின் பெயரில் ஏன் இரண்டு அமைப்புகள் தேவைப்படுகின்றன?  கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் புதிய ஜனநாயகக் கட்சி என்ற பெயரில் உள்ள கட்சிகளின் அரசியல் மற்றும் வர்க்க உள்ளடக்கம் என்ன? இந்த விவாதம் என்பது தத்துவார்த்த அடிப்படை சார்ந்தது. இதை வரலாறு சொல்லி புலம்புவதன் மூலம், இதற்கு விடை சொல்ல முடியாது. அதுவுமில்லை இதுவுமில்லை என்று சொல்லி, அதுவும் இதுவும் ஒன்று தான் என்று சொல்லி ஓட்டையை அடைக்க முடியாது. புதிய ஜனநாயகக் கட்சி எந்த வர்க்கத்தை? எப்படி? ஏன் பிரபலிக்கின்றது? என்று விளக்க வேண்டும்;. இங்கு கீழிலிருந்து கட்டும் ஒரு முன்னணி அவசியமில்லை, கட்சி தான் தேவை என்ற அடிப்படையை விளக்க வேண்டும்;.

"ஏகாதிபத்திய கொலணிய முறைக்குள் இருந்த ஆசிய, ஆபிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளில் நடந்த தேசிய விடுதலைப் போராட்டத்தில் புதிய சனநாயகப் புரட்சி வெற்றி பெறாத அனைத்து நாடுகளின், தேசிய முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ வர்க்கங்களின் அரசியல் தலைமைகளும் தாங்கள் எதிர்த்துப் போராடிய குறித்த ஏகாதிபத்தியத்துடன் மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலக ஏகாதிபத்திய அமைப்புடனும் சமரசம் செய்து அரசியல் அதிகாரத்தை கைப்பற்றிக் கொண்டன. இத்தகைய நாடுகள் எல்லாவற்றையும், உலக ஏகாதிபத்தியமானது தனது புதிய கொலணிய முறைக்கு இரையாக்கிக் கொண்டது. இதற்கு இரையாகிய நாடுகள் எல்லாவற்றையும் புதுக் கொலணிய (நவ கொலணிய) நாடுகள் என அழைக்கப்படுகிறது" என தமிழீழ புதிய சனநாயக கட்சி வரையறுக்கின்றது. நேரடியான காலனியாதிகத்தை ஏகாதிபத்தியம் கைவிட்டுச் சென்ற அனைத்து நாட்டையும் நவகாலணியம் என்று சொல்லுவதும், அதிலிருந்து விவாதத்தை நடத்துவதும் ஒரு திசை விலகலாகும். ஏகாதிபத்தியம் காலணித்துவத்தை கைவிட்டுச் சென்ற போது, அரைக்காலணி அரை நிலப்பிரபுத்துவ நாடுகளாகவே பெரும்பாலான நாடுகளில் விட்டுச் சென்றன. இந்த அடிப்படை அரசியல் உள்ளடக்கத்தை மறுத்து அனைத்தையும் நவகாலணியாக மதிப்பிடுவதும், அதை இலங்கைக்கு பொருத்துவதும் தத்துவ விலகலாகும். இலங்கை 1948 இல் பெற்ற போலிச் சுதந்திரம், நவகாலணியாக அல்ல, அரைக்காலணி அரைநிலப்பிரபுத்துவமாகவே விட்டுச் சென்றது. ஆனால் தேசபக்தன் இதற்கான காரணகாரியத்தை மறுத்து, நவகாலணியாக கூறுவது ஆச்சரியப்படத்தக்க ஒரு இயங்கியலற்ற முடிவாகும்;. அத்துடன் இதை உலகம் தழுவிய வகையில் காலணிகளில் இருந்து விடுதலை பெற்ற நாடுகளுக்கு பொது முடிவாக வைப்பது, அதை விட கேலிக்குரியதாகும்.

இதை முன்மொழிந்தபடி ".... முதலாளித்துவக் குண இயல்புகள் எல்லாம் ஏகாதிபத்திய போக்குடன் சங்கமமாகி வருகின்றது" என்ற வாதம், தேசிய முதலாளித்துவ கூறுகள் (பூர்சுவா வர்க்கம்) ஒரு போராட்ட சக்தியாக இந்த உலகமயமாதலில் இல்லை என்கின்றனர். அதாவது ரொக்சியத்தின் கடைக் கொடியை பிடித்துக் கொண்டு, தொங்குவதில் போய் முடிகின்றது. குண இயல்புகள் எல்லாமே ஏகாதிபத்தியமாக மாறினால், இடைப்பட்ட வர்க்கங்கள் இயல்பில் அற்றுவிடுகின்றன. இந்த நிலையில் புதியஜனநாயக புரட்சி கூட அவசியமற்றதாக அல்லவா இருக்க வேண்டும். புதிய ஜனநாயக புரட்சியை முன்வைக்கும் தமிழீழ புதிய ஜனநாயக கட்சி;, முதலாளித்துவக் குண இயல்புகள் எல்லாம் ஏகாதிபத்திய போக்குடன் சங்கமமாகின்றது என்ற கூற்றுக்கு முரணானது. முதலாளித்துவ தேசியக் கூறுகள் தான், சோசலிசக்கு பதில் புதிய ஜனநாயகப் புரட்சியின் அவசியத்தை நிபந்தனையாக்கின்றது. பாட்டாளி வர்க்கத்துக்கும் ஏகாதிபத்தியத்துக்கும் இடையில காணப்படும்; இடைப்பட்ட வர்க்கங்கள், தமது நலன்களை தக்க வைக்க ஏகாதிபத்தியத்துடன் போராடும் எல்லைக்குள், நிலவும் முதலாளித்துவ தேசியக் கோரிக்கைகள் தான் ஏகாதிபத்தியத்துக்கு எதிராக உள்ளது. இது முதலாளித்துவக் குண இயல்புகள் எல்லாவற்றையும் ஏகாதிபத்திய போக்குடன் சங்கமிப்பதை மறுக்கின்றது. இடைப்பட்ட பூர்சுவா வர்க்கம் ஏகாதிபத்தியத்துக்கு எதிராக சரணடைவையும் மீறி தொடர்ச்சியாக போராட முனைப்புக் கொள்கின்றன. இந்த போராட்ட முனைவை பாட்டாளி வர்க்கம் தனது தலைமையில், ஜனநாயக கோரிக்கையின் எல்லைக்குள் முன்னெடுக்கும் வழியாகவே, புதிய ஜனநாயக புரட்சியை என்ற குறைந்த பட்ச திட்டமாகக் கொண்டு ஐக்கிய முன்னணியை உருவாக்கின்றது. இதை மறுத்துவிடவே நேரடியான காலணியத்தில் இருந்து விடுதலை பெற்ற நாடுகளை "...தேசிய முதலாளித்துவத்தின் போக்கு, புதுக்கொலணிய கட்டத்தில் தரகுமுதலாளித்துவப் போக்காக மாறிவிட்டது" என்று கூறுவதன் மூலம், தேசியக் கோரிக்கைகளை தேசிய முதலாளித்துவம் கைவிட்டுவிட்டது என்கின்றனர். அதாவது தேசிய முதலாளித்துவம் தரகு முதலாளித்துவமாக மாறிவிட்டதால், தேசிய முதலாளித்துவ உற்பத்தியும் அற்று விட்டது என்கின்றனர். இதனால் தேசிய முதலாளித்துவ நலன்களை, குண இயல்புகளை கொண்ட போராட்டம் எதுவுமில்லை. முதலாளித்துவ தேசியம் என்று எதுவும் கிடையாது. இதிலிருந்தே பாட்டாளி வர்க்கமே தேசியமாகவே இருக்கின்றது என்ற தத்துவ விளக்கத்தை முன்வைக்கின்றனர். ஆனால் பாட்டாளி வர்க்கம் ஏன் சர்வதேசியத்துக்கு பதில் தேசியத்தை முன் வைக்க வேண்டும் என்று விளக்குவதில்லை. அத்துடன் தேசிய முதலாளித்துவ தேசிய கோரிக்கைக்கும், பாட்டாளி வர்க்கத்தின் ஜனநாயகக் கோரிக்கைக்கும் உள்ள அடிப்படை வேறுபாட்டை மறுக்கின்றது. இரண்டை ஒன்றாக்க தேசபக்தன் முயல்கின்றது. இதிலிருந்து ஒரு கட்சியின் தலைமையில் தேசியத்தை தலைமை தாங்க முயல்கின்றது. தேசியத்துக்கும், சர்வதேசிய ஜனநாயக கோரிக்கைக்கும் இடையில் வேறுபாடில்லை என்று திரித்துக் காட்ட, புதிய கண்டுபிடிப்பை தேசிய முதலாளித்துவம் சார்ந்து வைக்கின்றனர்.

பாட்டாளி வர்க்க சர்வதேசியத்தின் பெயரில் முதலாளித்துவ தேசியத்தை நியாயப்படுத்த ".. அன்றைய சீன தேசிய முதலாளித்துவம் பற்றிய பண்புகளிலிருந்து இன்றைய புதுக்கொலணிய நாட்டு தேசிய முதலாளித்துவத்தின் பண்புகளை வேறுபடுத்தி பார்க்க வேண்டியுள்ளது." என்கின்றனர். மிக ஆச்சரியகரமான இந்த வாதம் சீன தேசிய முதலாளித்துவம் நிலவிய சம காலத்தில் உருவானதாக கூறும் நவகாலனியம் (இந்த நவகாலணி கூட சீன புரட்சி நடை பெற்ற சம காலத்திலேயே ஏகாதிபத்தியம் உருவாகி விட்டதாக தேசபக்தன் வைக்கின்றது) தேசிய முதலாளிக்கு பொருந்தாது என்பது, தமது எடுகோளையே தலையைச் சுற்றி மறுப்பதாகும். அது காலத்தால் இன்று மாறியுள்ளது என்றால், அதை இந்தக் கட்டுரை உள்ளடக்கம் மறுக்கின்றது. தேசிய முதலாளித்துவ உற்பத்தி பற்றிய அடிப்படை மார்க்சிய கோட்பாட்டையே, தேசபக்தனின் தேசிய முதலாளித்துவம் பற்றிய நிலைப்பாடு திருத்தக் கோருகின்றது. ஒரு தேசிய முதலாளியின் நோக்கம் எப்போதும் தனது தேசிய எல்லைக்குள் தனது உற்பத்தியை சந்தைப்படுத்தக் கோருவதே பொதுவான பண்பாகும்;. இது சீனாவில் இருந்து இன்று வரை இதில் மாற்றம் காணவில்லை. தேசிய முதலாளியாக உயிர் வாழும் வரை, இந்தக் கோரிக்கை மாறிவிடுவதில்லை. இது காலத்தாலும் மாறுவதில்லை. உற்பத்தி மற்றும் அதன் உறவாக்கமே அவனின் குண இயல்பை தீர்மானிக்கின்றன. உள்நாட்டு தேசிய வளத்தை சார்ந்து உள்நாட்டில் தனது உற்பத்தி மற்றும் உற்பத்தி சார்ந்த சந்தையை தக்க வைக்கும் போராட்டத்தில் இருந்தே, தேசியம் என்ற கோசம் எழுகின்றது. தேசிய உற்பத்தி அழிக்கப்பட்டு அல்லது தரகாக மாற்றப்படின் தேசிய முதலாளித்துவ குணாம்சம் இழந்து, அதன் பண்பு மாறுகின்றது. ஆனால் தேசிய முதலாளித்துவம் என்ற குணாம்சம், அதன் உற்பத்தி சார்ந்து மாறிவிடுவதில்லை. இதில் இருந்தே பூர்சுவா வர்க்கம், இதை உயிருள்ள கோசமாக தொடர்ச்சியாக முன்வைக்கின்றது.

தேசிய முதலாளித்துவத்தின் ஊசலாடும் வர்க்க நலன்கள் காலாகாலமாக ஏகாதிபத்தியத்துக்கு தொடர்ச்சியாக சரணடைந்தும், மறுதளத்தில் பாட்டாளி வாக்கத்தை நோக்கி தள்ளப்பட்டு வந்த போதும், தேசியக் கோரிக்கையை முன் நிறுத்தி பூர்சுவா வர்க்கம் மீண்டும் மீண்டும் எழுகின்றன, போராடுகின்றன. இந்த பூர்சுவா வர்க்கத்தின் தேசியக்; கோரிக்கை இடைப்பட்ட வர்க்க நலன்கள் சார்ந்து உயிருள்ள ஒரு போராட்டமாக இருக்க, அதை தேசபக்தன் மறுத்து "தரகுமுதலாளித்துவப் போக்காக மாறிவிட்டது" என்று கூறி அதை முடித்து வைப்பது ஆச்சரியகரமானது. இதை மறுத்தபடி தான், புதிய ஜனநாயக புரட்சியை வேறு முன்வைக்கின்றனர். தேசிய கடமைகளை பாட்டாளி வர்க்கமே முன்னெடுக்க வேண்டும் என்கின்றீர்கள். நீங்கள் குறிப்பிட்டது போல் இடைப்பட்ட வர்க்கம் அதன் கோரிக்கையுடன் ஒரு சமூக உற்பத்தி சக்தியாக இல்லாத ஒரு நிலையில், குண இயல்புகளை ஏகாதிபத்தியத்திடம் இழந்து வரும் நிலையில், ஏன் பாட்டாளி வர்க்கம் புதிய ஜனநாயக புரட்சியை முன் வைக்க வேண்டும்;. பாட்டாளி வர்க்கம் நேரடியாகவே சோசலிச புரட்சியை மேற்கு நாடுகள் போல் கோருவதே சரியானது. இடைப்பட்ட வர்க்கங்கள் தமது உற்பத்தியுடன் முன்வைக்கும் தேசியக் கோரிக்கை தான், புதிய ஜனநாயக புரட்சியை நடத்தும் பொறுப்பை பாட்டாளி வர்க்கத்துக்கு சுட்டிக்காட்டும் சமூக இயங்கியலாகும். இடைப்பட்ட வர்க்கங்கள் தமது உற்பத்தியை அடிப்படையாக கொண்டு, தனது தேசியக் கோரிக்கையை முன்வைத்த தனது வர்க்க நலனுக்காக போராடுவது இயல்பானது இயற்கையானது. இதன் ஒரு பகுதி தொடர்ச்சியாக ஏகாதிபத்தியத்திடம் சரணடைவது அதன் வர்க்க கண்ணோட்டத்தில் இயல்பானது இயற்கையானது. ஆனால் உயிருள்ள ஒரு தேசிய போராட்டத்தை தொடர்ச்சியாக முன்வைத்து, அந்த வர்க்க அழிவு வரை போராடுவது மூன்றாம் உலக நாடுகளின் பொதுப் பண்பாக உள்ளது. இதை மறுத்து அவர்கள் அழிந்து விட்டதாக கூறுவதும், அதை புதிய ஜனநாயக கட்சி ஊடாக தலைமை தாங்கி நிலைநிறுத்தக் கோருவதும் அசட்டுத்தனமாகும். அழிந்து விட்ட, சரணடைந்து விட்ட வர்க்கத்துக்காக, அவர்களின் தேசியக் கோரிக்கைக்காக பாட்டாளி வர்க்கம் போராட வேண்டிய அவசியமில்லை. வெற்றிடத்துக்காக, பாட்டாளி வர்க்கம் புதிய ஜனநாயக கட்சியின் பெயரில் போராட வேண்டிய அவசியமில்லை. இடைப்பட்ட வர்க்கங்கள் இல்லாத ஒரு நிலையில், இடைப்பட்ட உற்பத்திகள் இல்லாத நிலையில் புதிய ஜனநாயகப் புரட்சி என்பது கற்பனையே. இடைப்பட்ட வர்க்கம் தனது உற்பத்தியுடன் போராடுமாயின், அங்கு புதிய ஜனநாயகப் புரட்சியை இடைப்பட்ட வர்க்கம் சார்ந்து பாட்டாளி வாக்கம் தனது ஜனநாயகக் கோரிக்கைக்காக ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போராடுகின்றது. இந்த புதிய ஜனநாயக புரட்சியில் பல்வேறுபட்ட வர்க்கங்கள் தனது நலன்களுடன் போராடும் போது, ஒற்றைப் பரிணாம கட்சி அதை தலைமை தாங்குவது என்பது, அந்தக் கட்சி; வர்க்க மோசடியை அடிப்படையாக கொண்டது.

நவகாலணித்துவ அமைப்பில் "முதலாளித்துவக் குண இயல்புகள் எல்லாம் ஏகாதிபத்திய போக்குடன் சங்கமமாகி" வருகின்றது என்று கூறியபடி, உருவாக்கும் வர்க்க மோசடிக் கட்சியை நியாயப்படுத்த "புதுக் கொலணிய நாடுகளின் தேசியப் பிரச்சனை, தேசிய இனப் பிரச்சனைகளை முதலாளித்துவக் கோரிக்கைகளாக மட்டும் குறுக்கி விடமுடியாது" என்று கூறுவதன் மூலம், லெனின் மற்றும் ஸ்ராலின் தேசியம் பற்றிய மார்க்சிய கோட்பாடுகளை மறுக்கின்றனர். இது சர்வதேசியத்தின் தேசிய ஜனநாயக கோரிக்கைக்கும், முதலாளித்துவத்தின் தேசியக் கோரிக்கைக்கும் இடையில் உள்ள நேர் எதிரான கண்ணோட்டத்தை மறுக்கின்றது. தேசிய முதலாளித்துவ தலைமையின் கீழ் சர்வதேசியத்தை திரிபுகளின் ஊடாக அடிபணிய வைக்கின்றது. இந்தத் திரிபை நியாயப்படுத்த "புதுக் கொலணிய நாடுகளின் தேசியப் பிரச்சினை" முன்னைய தேசியத்தில் இருந்து வேறுபட்டதாக நாமம் இடுகின்றனர். "தேசிய இனப் பிரச்சனைகளை முதலாளித்துவக் கோரிக்கைகளாக மட்டும் குறுக்கி விடமுடியாது" என்று வைப்பதன் மூலம் சுயநிர்ணயம் என்ற அடிப்படை மார்க்சிய வரையறையை மறுக்கின்றனர். சுயநிர்ணயம் இதனால் கோட்பாட்டு ரீதியாகவே காலாவதியாகிவிடுகின்றது. தேசியம் பாட்டாளி வர்க்க கோரிக்கையாக கோட்பாட்டு ரீதியில் மாறும் போது, தொழிலாளிக்கு நாடு இல்லை என்ற மார்க்சின் சர்வதேசிய கோசம் செயல் இழந்து, தொழிலாளிக்கும் தேசியம் சார்ந்த நாடு உள்ளதாக மாறிவிடும் போது, சுயநிர்ணயம் என்பது சர்வதேசிய எல்லைக்குள் அவசியமற்றதாகிவிடுகின்றது. உலக பாட்டாளி வர்க்கத்துக்கு ஒரு நாடு இல்லை என்ற கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கையை மறுத்து, பாட்டாளி வாக்கத்துக்கு நாடு இருக்க முடியும் என்கின்றனர். "தேசிய இனப் பிரச்சனைகளை முதலாளித்துவக் கோரிக்கைகளாக மட்டும் குறுக்கி விடமுடியாது" என்பதன் மூலம், பாட்டாளி வர்க்க கோரிக்கையாகவும் இருக்க முடியும் என்கின்றனர். இது தேசியம் என்ற முதலாளித்துவ அடிப்படை கோரிக்கையையும், அதன் உள்ளடக்கம் தொடர்பாக மார்க்சியம் முன்வைத்த தத்துவ அடிப்படைகளை நிராகரித்து, மறு விளக்கம் கொடுப்பதாகும். பாட்டாளி வர்க்கம் தேசிய பிரச்சனையில் சர்வதேசிய வழியில் ஜனநாயகக் கோரிக்கையை மட்டும் ஆதரித்து, சுயநிர்ணயத்துக்காக மட்டும் பிரச்சாரம் செய்கின்றது, போராடுகின்றது. தேசிய பிரச்சனைக்கான தீர்வை சர்வதேசிய அடிப்படையில் சுயநிர்ணயம் என்ற அடிப்படைக் கோட்பாட்டுக்கு வெளியில், தேசிய அடிப்படையில் தீர்வை முன்வைத்து போராடுவதில்லை. இதுதான் ஒரேயொரு சர்வதேசியமாகும். இந்த சர்வதேசியத்துக்கு புறம்பாக "புதுக் கொலணிய நாடுகளின் தேசியப் பிரச்சனை"யில் சர்வதேசியத்துக்கு புறம்பாக தேசிய கடமை பாட்டாளி வர்க்கத்துக்கு இருக்கு என்பது, உண்மையில் அவர்கள் பாட்டாளி வர்க்க அரசியலை கைவிட்டு சீரழிந்து செல்வதை தாண்டி விளக்கம் பெற மாட்டாது. இங்கு புதுக் கொலணி நாடுகளுக்கு என்று குறித்துக் (ஏகாதிபத்தியம் அல்லாத அதே நேரம் அவற்றிலிருந்து விடுதலை பெற்ற அனைத்து நாடுகளையும், புதுக் கொலணி என்கின்றனர். பார்க்க மேலே)  காட்டு;வதன் மூலம், அந்த நாடுகளில் "முதலாளித்துவக் குண இயல்புகள் எல்லாம் ஏகாதிபத்திய போக்குடன் சங்கமமா"வதால் முதலாளித்துவ தேசியக் கோரிக்கையை தங்களுடையது என்கின்றனர். இதனால் புதிய ஜனநாயகப் புரட்சி அவசியமென்கின்றனர். நகைப்புக்குரிய ஒரு எடுகோள் வாதம். முதலாளித்துவ வர்க்கம் தனது தேசியக் கோரிக்கையை முன்னெடுக்க தயாரற்று ஏகாதிபத்திய மயமாகிவிட்டால், ஏன் பாட்டாளி வர்க்கம் புதிய ஜனநாயகம் ஊடாக இடைப்பட்ட வர்க்கங்களின் கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும்;. இடைப்பட்ட வர்க்கங்கள் தனது குண இயல்புகளை எல்லாம் உற்பத்தி சார்ந்து இழந்து விட்டால், பாட்டாளி வர்க்கத்தின் சர்வதேசியம் ஜனநாயகக் கோரிக்கையும் அற்றுவிடுகின்றது. பாட்டாளி வர்க்க கோரிக்கை மட்டுமே, அங்கு பாட்டாளி வர்க்கத்தின் முன் வருகின்றது. இடைப்பட்ட வர்க்கங்கள்  இருப்பின் அவை போராடுகின்றன. போராடின் அவற்றின் கோரிக்கையாகவே எப்போதும் தேசியம் இருக்கின்றன. இந்த நிலையில் பாட்டாளி வர்க்கம் தேசியத்தை அல்ல அதில் உள்ள ஜனநாயகக் கோரிக்கையை தனதாக்கி, சர்வதேசியத்தை சுயநிர்ணயத்தின் அடிப்படையில் முன் வைத்து போராட வேண்டுமே ஒழிய, தேசியத்தை முன் வைத்து போராடுவதில்லை. சர்வதேசியத்துக்கு பதிலாக தேசியத்தை வைப்பின், அது உண்மையில் முதலாளித்துவத்தையே முன்வைக்கின்றனர். சர்வதேசியமும், தேசியமும் வேறுபாடு அற்றுவிட்டதாக கூறுவது மர்க்சியத்துக்கு எதிரானது. சர்வதேசியத்தை தேசிய மயமாக்குவதாகும். தேசியத்துக்கும், சர்வதேசியத்துக்கும் இடையில் நேர் எதிரான வர்க்க நலன்களை, அடிப்படையாகக் கொண்டே தனது தனித் தனியான போராட்டத்தை நடத்துகின்றன. புதிய ஜனநாயகம் என்பது தேசிய ஜனநாயகக் கோரிக்கையை குறைந்த பட்ச திட்டமாக கொள்கின்றது. இந்த ஜனநாயகக் கோரிக்கை சார்ந்து பாட்டாளி வர்க்கமும் முதலாளித்துவ வர்க்கமும், புதிய ஜனநாயக புரட்சியை தத்தமது வர்க்க நலன் சார்ந்து தனதாக்கும் போது, புதிய ஜனநாயகக் கட்சி என்ற ஒற்றைப் பரிணாம கட்சியால் தலைமை தாங்க முடியாது. முடியும் எனின், பாட்டாளி வர்க்க அரசியலை தேசியத்துக்கு தாரைவார்ப்பதாகும். இதனால் தான் சர்வதேசியத்துக்குப் பதில் தேசிய கடமை பாட்டாளி வர்க்கத்துக்கு உண்டு, என்கின்றனர்.

இதை நியாயப்படுத்த கட்சி, ஐக்கிய முன்னணி, கம்யூனிஸ்ட் கட்சி இடையிலான தெளிவான அரசியல் வேறுபாட்டை மறுப்பதில் தொடங்குகின்றனர். "... எதிரிகளுக்கு எதிரான அனைத்து உள்நாட்டு வர்க்க சக்திகளை அய்க்கியப்படுத்தும் ஒரு புதிய ஜனநாயக வேலைத் திட்டத்தை முன்வைத்து, தொழிலாளி வர்க்க சித்தாந்த அரசியல் தலைமையை, சமரசமற்ற, தூர நோக்குள்ள தலைமையை கட்ட வேண்டும். கீழிருந்து கட்டும் இவ் ஐக்கிய முன்னணிக் கொள்கையை முன்னிறுத்தும் வடிவத்தின் பெயர், கொம்யூனிஸ்ட் கட்சியின் பெயரிலா, முன்னணியின் பெயரிலா, புதிய சனநாயகக் கட்சியின் பெயரிலா... என்பதை அந்தந்த அரசியல் இயக்கங்களே தீர்மானித்துக் கொள்ள வேண்டும்." என்று கூறுவதன் மூலம், இந்த மூன்றுக்கும் உள்ள அடிப்படை வேறுபாட்டை மறுத்து, ஒரு அமைப்பின் பெயரை தீர்மானிக்கும் உரிமை பற்றிய பிரச்சனையாக்கின்றனர். உங்கள், தீர்மானிக்கும் சுதந்திர உரிமை என்றும் மறுப்புக்குள்ளாகவில்லை. ஆனால் சர்வதேசிய மார்க்சியம், மார்க்சிய லெனியா மாவோ சிந்தனையிலான அரசியல் விலகலை விமர்சிக்கும் உரிமையை கொண்டுள்ளது. "கீழிருந்து கட்டும் இவ் ஐக்கிய முன்னணிக் கொள்கையை முன்னிறுத்தும் வடிவத்தின் பெயர், கொம்யூனிஸ்ட் கட்சியின் பெயரிலா, முன்னணியின் பெயரிலா, புதிய சனநாயகக் கட்சியின் பெயரிலா... என்பதை அந்தந்த அரசியல் இயக்கங்களே தீர்மானித்துக் கொள்ள வேண்டும்" என்று கூறுவது மார்க்சியத்துக்கு புறம்பாக கூறுவதுடன், மார்க்;சியத்தை மறுப்பதாகும். உதாரணமாக ஐக்கிய முன்னணியை ஒரு கம்யூனிஸ்ட் கட்சியின் பெயரில் கட்ட முடியாது. கம்யூனிஸ்ட் கட்சியை வேறு ஒரு பெயரில் கட்ட முடியாது. ஏனெனின் கம்யூனிஸ்ட் கட்சி என்பது பாட்டாளி வர்க்கத்தின் வர்க்கக் கட்சியாக இருக்க முடியுமே ஒழிய, பல்வேறு வர்க்கத்தின் ஒரு கட்சியாக அல்லது முன்னணியாக இருக்க முடியாது. பல்வேறு வர்க்கத்தின் நலன்களை உள்ளடக்கிய ஒரு முன்னணி நிலவ முடியும்;. இங்கு தமிழீழ புதிய ஜனநாயகக் கட்சி என்பதும் கூட, பல்வேறு வர்க்கத்தின் நலன்களை உள்ளடக்கிய ஒரு கட்சியாக நீடிக்க முடியாது. மாறாக ஒரு வர்க்கத்தின் நலன்களை மட்டுமே பிரதிபலிக்கும். கீழிருந்து கட்டும் குறைந்த பட்ச ஜனநாயகக் கோரிக்கையை உள்ளடக்கிய ஐக்கிய முன்னணி என்பது, அந்த ஐக்கியத்தினுள் பல்வேறுபட்ட வர்க்கத்தின் நலன்களைக் கொண்டே உள்ள போது, இது எப்படி கம்யூனிஸ்ட்; கட்சியாக அல்லது சர்வதேசியத்தை நிராகரிக்காத புதிய ஜனநாயகக் கட்சியாக நீடிக்க முடியும். புதிய ஜனநாயகத்தை அடிப்படையாகக் கொண்ட ஜனநாயகக் கோரிக்கையின் குறைந்த பட்ச திட்டத்தில், வர்க்கங்கள் வர்க்கங்களற்ற கட்சியாக அல்லது பாட்டாளி வர்க்க கட்சியாக சங்கமம் ஆகிவிடுவதில்லை. இந்த வேறுபாட்டை தெளிவுபடுத்தி அணிதிரட்டும் முன்னணியல்லாத ஒரு கட்சி என்பது, பாட்டாளி வாக்கமல்லாத முதலாளித்துவ கட்சியாகவே அது உருவாகும். இதில் தேசியமே பாட்டாளி வர்க்க கோரிக்கையாகும் போது, இதை சொல்லத் தேவையில்லை. இதை தெரிவு செய்யும் உரிமையை நாம் என்றும் மறுக்கவில்லை. ஆனால் மார்க்சியத்தை திரிபாக்கி விடும் அரசியலை, நடைமுறையை விமர்சிக்கும் உரிமை பாட்டாளி வர்க்கத்துக்கு என்றும் உண்டு.

கீழிருந்து கட்டும் ஐக்கிய முன்னணி; "கொம்யூனிஸ்ட் கட்சியின் பெயரிலா, முன்னணியின் பெயரிலா, புதிய சனநாயகக் கட்சியின் பெயரிலா.." என்றதை "பெயரிலிருந்து திரிபுவாதமா - புரட்சியா எனத் தீர்மானிப்பதை விட அவ்வரசியல் இயக்கத்தின் கொள்கை உள்ளடக்கம், புதிய ஜனநாயக வர்க்கங்களின் நலன்களை, அரசியல் கோரிக்கைகளை பிரதிபலிக்கின்றதா..." என்பதிலிருந்து தீர்மானிக்க வேண்டும் என்கின்றனர். பெயர் முக்கியத்துவமற்ற ஒன்று என்கின்றனர். அந்த அமைப்பின் உள்ளடக்கத்தை பார்க்க வேண்டும் என்கின்றனர். வர்க்கங்களின் நலன்களை பெயருக்கு வெளியில் எப்படி பிரதிபலிக்கின்றன என்பது முக்கியமானவை தான்;, இதில் மறுப்பில்லை. உங்கள் தமிழீழ புதிய ஜனநாயகக் கட்சித் திட்டம் வெளிவரும் போது அதைப் பற்றி நாம் மேலும் கருத்துக் கூற முடியும். ஆனால் பெயர் முக்கியமல்ல என்பது, அதன் உள்ளடக்கத்தையும் அதன் அரசியல் அடிப்படையையும் மறுப்பதாகும். பெயரும் கூட ஒரு முக்கியமான விடையமாகும். கம்ய+னிஸ்ட் கட்சியின் பெயர் தற்செயலாக உருவானவை அல்ல. மார்க்ஸ் கம்யூனிசம் என்ற பெயரைச் சொன்ன போது, லெனின் அதை கட்சியின் பெயராக வைத்த போதும், அவற்றுக்கு ஆழ்ந்த அரசியல் அர்த்தங்களை கொண்டிருந்தன. கம்யூனிஸ்ட் கட்சியின் பெயரில் கீழிருந்து பல்வேறு வர்க்கங்களை ஒன்று இணைக்க முடியும் என்பதும், இதில் பெயர் முக்கியத்துவமல்ல என்பதும் ஒரு மார்க்சிய திரிபு தான். இங்கு பெயர் முக்கியத்துவமல்ல என்பதன் மூலம், பெயரில் இருந்தே திரிபு தொடங்குகின்றது. பெயர் சரியாக இருந்தால், ஒரு புரட்சி வந்து விடுவதில்லை தான்;. அது எந்த வர்க்கத்தைச் சார்ந்து, எப்படி எந்த வர்க்கத்துக்காக புரட்சியை செய்கின்றது என்பதுடன் தொடர்பான விடையம் தான். பெயர் சரியாக இல்லாவிட்டாலும் அதன் உள்ளடக்கம் புரட்சிக்கு எதிராக மாறுகின்றது. கட்சிகளின் பெயர்கள் கூட ஆழ்ந்த அரசியல் அர்த்தத்தைக் கொண்டவை. கட்சி மற்றும் முன்னணி என்ற பெயரில் கூட வர்க்கங்களின் தனித்துவம் மற்றும் ஒன்றிணைவை தெளிவாகவே கோடிட்டு காட்டுகின்றது. பாராளுமன்றக் கட்சிகள் தமது பெயரை, கம்யூனிஸ்ட் கட்சியாக மாற்றினால் புரட்சி வந்துவிடுவதில்லை. அதுபோல் இருக்கின்ற முதலாளித்துவக் கட்சிகள், ஒரு புரட்சிகரமான திட்டத்தை வைத்தால் புரட்சி வந்துவிடுவதில்லை. நடைமுறை ரீதியாக சரியான அரசியல் மார்க்கம் அவசியமாகின்றது. ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய வகையில், சர்வதேசிய மா.லெ.மாவோ சிந்தைனையை அடிப்படையாக கொண்டிருக்க வேண்டும்;. பெயர் மற்றும் கட்சியின் திட்டத்தை விட்டு, எமது நடைமுறையை பாருங்கள் என்ற தேசபக்கதன் வழியில், நாளை பலர் சொல்லாலம்;. மூன்றில் ஏதாவது ஒன்றை அல்லது இரண்டை மட்டும் பார்க்கச் சொல்லி, தங்களை சர்வதேசிய வழி வந்தவர்களாக சொல்லின், பாட்டாளி வர்க்கம் அவர்களையிட்டு நகைக்க மட்டுமே செய்யும்.

"..1983 ல் உருவான 25க்கு மேலான இயக்கங்கள் போல், தமிழீழ சமூகத்தில் இருந்த மற்றைய இயக்கங்களின் கொள்கைகளை, திட்டங்களை படிக்காமல், மற்றைய இயக்கத்துக்கும் - தங்களுக்கும் இடையில் அடிப்படையான மூலாபாய விசயங்களில் முரண்பாடு - உடன்பாடு தெரியாமல், தியாகத்துக்கு (சாவதற்கு) தயரான நபர்களும், சில ஆயுதங்களும் கிடைத்தாதல் உருவாக்கப்பட்ட இயக்கங்கள் போல், தமிழீழ புதிய சனநாயக கட்சியோ, ஏன் தமிழீழ மக்கள் கட்சி கூட அப்படி உருவாக்கப்படவில்லை, பிரகடனம் செய்யவில்லை என்பதை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்" என்கின்றனர். தங்களுடைய பிரகடனத்துடன் நிற்பாட்டாது, தமிழீழ மக்கள் கட்சியையும் சேர்த்து அவர்களுக்கும் சேர்த்து வக்காளத்து வாங்குகின்றனர். கடந்த காலத்தை ஆர அமர ஆராய்ந்து தெளிந்தவர்கள், ஏன் இரண்டு கட்சிகளை உருவாக்கினர். இரண்டு பேரும் சோசலிசத்தை தமது கொள்கையாக சொல்லும் போது, இங்கு உங்களுக்கிடையிலான முரண்பாடுகளை விவாதம் மூலம் எங்கே எப்போது செய்தீர்கள்! சமர் இரண்டுக்கும் எதிராக நடத்திய விமர்சனம் மீது, எங்கே எப்போது நீங்கள் இருவரும் விவாதித்தீர்கள்;. சமூகத்தில் உருவான 25க்கு மேற்பட்ட இயக்கத்தில் தொடங்கி சமகாலம் வரை பல்வேறுபட்ட கருத்துப் போக்குகளின் முரண்பாடுகள் மேல், உங்கள் கட்சிப் பிரகடனம் செய்யும் அரசியல் அடிப்படைகளை விவாதம் மூலம் எங்கே எப்போது நடத்தினீர்கள். சமர் எழுப்பிய தத்துவார்த்த கேள்விகளுக்கு இதுவரை இருவருமே பதிலளிக்கமாலேயே, கட்சிப் பிரகடனங்கள் வெளிவந்துள்ளன. இங்கு சமருக்கு பதில் அளித்தும் தான் கட்சிப் பிரகடனம் செய்ய வேண்டுமா!, என நீங்கள் நக்கலாக எழுதி தத்துவ விவாதத்தை முடிக்க முயலாம். ஆனால் கேள்விகள் உயிருடன் மீண்டும் மீண்டும் உங்கள் முன் உலாவுவதை, யாரும் தடுக்க முடியாது. எமது நாட்டின் புரட்சி பற்றியும், அதன் அடிப்படையான வர்க்க ஆய்வுகள் மேல் பாட்டாளி வர்க்க கட்சியை கட்டும் பணி என்பது, அனைத்து தத்துவார்த்த விவாதங்களுகக்கும் முரணற்ற வகையில் பதிலளித்து, அதன் மேல் தான் ஒரு கட்சி அமைக்க முடியும். இந்தப் பணியை செய்யாதவர்கள், கடந்த நிகழ்கால தத்துவார்த்த விடையங்கள் மேலான தெளிந்த தெளிவான முடிவில் பிரகடனம் செய்தோம் என்பது, அப்பட்டமான ஒரு வரலாற்று அபாண்டமாகும். ஒரு திட்டம் சார்ந்த அனைத்து விடையத்தையும் சமுதாயத்தின் முன் வைத்து, அதை முரணற்ற வகையில் தீர்த்துள்ளோம் என்பது கற்பனையே. எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலாளிக்காமலேயே கட்சிப் பிரகடனங்கள் வந்தன, வருகின்றன. உதாரணமாக மூன்றாம் உலகநாடுகள் ஏகாதிபத்திய காலணியவாதிகளிடம் இருந்து சுதந்திரம் பெற்றது முதல், நவகாலணியாக இருப்பதாக உங்கள் தெளிவான முடிவு வரையறுக்கின்றது. கடந்த கால அரைக்காலணிய அரை நிலப்பிரபுத்துவ மதிப்பீடுகளை எப்படி தவறானது என்று, மதிப்பிட்ட ஒரு எழுத்தையும் எங்கும் காணமுடியாது. இலங்கை கம்யூனிச வரலாறு இதை எப்படி தவறாக ஏன் கையாண்டது என்ற விளக்கமின்றி, கட்சிப் பிரகடனம் செய்வது நிகழ்கின்றது. நீங்கள் உங்களுக்குள் விவாதித்தீர்கள் எனின், அதை பரந்துபட்ட விவாதத்தை நடாத்தது பிரகடனம் செய்தது கூட பிரகடனத்தின் முழுமையை கேள்விக்குள்ளாக்கின்றது. சீன தேசிய முதலாளித்துவமும், சமகாலத்தில் நேரடி காலணியத்தில் இருந்து நவகாலணியான மற்றைய நாட்டு தேசிய முதலாளித்துவமும் ஒன்று அல்ல என்பதும், இன்று அது ஒன்று அல்ல என்று கூறி  தேசிய முதலாளித்துவம் பற்றிய அடிப்படைக் கோட்பாட்டை மறுத்து மார்க்சியத்தை திருத்தும் விவாதங்களை எல்லாம் எப்போது எங்கே நடத்தினீர்கள். இது போல் தேசியம் பாட்டாளி வர்க்க கோரிக்கையாகவே இன்று உள்ளது என்ற மார்க்சியத்தை திருத்தும் விளக்கங்கள், இப்படி நிறையவே எழுப்ப முடியும்.

அடுத்து கட்சியின் பிரகடனம் ஏன் அவசியமாகின்றது. இதை அவர்கள் விளக்கவில்லை. இதை எழுப்பும் போது தங்களுக்குள் ஏற்றுக் கொண்ட 10 பேருக்குள் குசுகுசுக்கும் அரசியல் செய்வதாகக் கூறியே பதிலளிக்கின்றனர். இங்கு மீண்டும் ஒரு கட்சிப் பிரகடனம் ஏன் அவசியமாகின்றது. கட்சி இல்லாத நிலையில் கருத்துகள் மட்டும் எதைச் சாதிக்கின்றன. கட்சி பகிரங்கமாக இருப்பது ஏன் அவசியமாகின்றது. குறிப்பான இலங்கை நிலைமையில், இதன் அவசியம் என்ன. இலங்கையில் மக்கள் திரள் வழி கட்சியோ அல்லது அதன் சார்பு அமைப்புக்கள் நடைமுறையில், மக்களின் அன்றாட பிரச்சனைகளில் நேரடியாக அல்லது மறைமுகமாக முன்னெடுத்து செயற்படத ஒரு நிலையில், கட்சி மக்களை அணிதிரட்ட உதவும் என்று சொல்வது கட்சியின் பிரகடனத்தின் நோக்கத்தை மூடிமறைப்பதாகும்;. இலங்கையில் தமிழ் மக்கள் மத்தியில் தமிழீழ புதிய ஜனநாயகக் கட்சி எந்த மக்கள் திரள் அமைப்பையும் அடிப்படையாகக் கொண்டு நடைமுறையில் போராடவில்லை. அது தனது பெயரில் எங்கேயும் எந்த இடத்திலும் மக்களை அணிதிரட்டவில்லை. திரட்டும் புறநிலை கூட அங்கு பகிரங்கமாக இல்லை. அப்படி யாராவது தமிழீழ புதிய ஜனநாயகக் கட்சி நபர்கள் இருப்பின், அவர்கள் கூட கட்சியின் இரகசிய பிரதிநிதிகள் தான். அவர்கள் கட்சியின் பகிரங்கமான நபராக இருப்பதில்லை. அத்துடன் அவர்களின் கருத்துகளும், அவர்கள் அல்;லாத ஒரு பகிரங்கத்தில் இதுவரை இல்லை. அதே நேரம் கட்சியின் நிலைப்பாடு சார்ந்து, குறித்த மக்களின் முரண்பாடுகள் மேல் அங்கு இரகசியமாகத் தன்னும் முன் வைக்கப்படுவதில்லை. கனடா நாட்டின் முகவரியுடன் சில முகவரிகளுக்கு கட்சியின் பெயரிலான இதழ்கள் செல்வதற்கு அப்பால், கட்சின் பெயரில் எதையும் மக்களுக்குள் செய்வதில்லை. இதை யாரும் எந்தத் தனிநபரும் செய்யலாம்;. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி என்று ஒரு மாநில நக்சல்பாரிகள் அறிவித்தால், அதன் குறுங்குழுத் தன்மை எப்படி பிரதிபலிக்குமோ, அதுபோல்தான் இந்தக் கட்சி பிரகடனமும்;. பரந்துபட்ட மக்கள் முன் எந்த அடிப்படையான செயல் ரீதியான மக்கள் திரளைக் கொண்டிராத நிலையில், கட்சியை பகிரங்கமாக வைக்க வேண்டும் என்பது சுத்த அபத்தமாகும். பரந்துபட்ட மக்கள் முன் எந்த மக்கள் திரள் முன்முயற்சியுமற்ற நிலையில், இதழ் வழியாக கருத்துகளைக் கொண்டு செல்லும் நிலையில், கட்சிப் பிரகடனம் என்பது குறுங்குழுவாத எண்ணமே எஞ்சி நிற்கின்றது. கட்சிப் பிரகடனம் உண்மையில் வெளிநாட்டுக் கட்சிகளிடம் சலுகை பெறும் ஒரு எல்லைக்குள் தான், குறுகிய நலனில் இருந்து பிறந்ததாகும். இதை மறுக்க முடியாது. மக்கள் என்பது எல்லாம் ஒரு வாதப் பொருளுக்கே உபயோகமாக உள்ளது.

இந்த நிலையில் கட்சி ஊழியர்களை வென்று எடுப்பதே முதற்பணி என்று நான் எழுதிய போது, அவர்கள் அதை கொச்சைத்தனமாக விளக்கி பதிலளிக்கின்றனர். எத்தனை கட்சி ஊழியர்கள் வந்தால் கட்சியை பிரகடனம் செய்யலாம், இதற்கு சர்வதேச விதி உண்டா என பலவேறாக கூறி தம்மை மெச்சுகின்றனர். பொதுவான பாசிச சூழல் நிலவும் எம் நாட்டில், கலைப்புவாதத்தில் அனைத்தையும் கைவிட்டுச் செல்லும் நிலையில், கட்சிக்கான ஊழியர்களை உருவாக்கவதே பிரதனமான பணியாகும். இதை திட்டவட்டமாகவும் கொச்சைத்தனமாக்கி மறுக்கின்றனர். சர்வதேச அளவில் தாம் பல ஊழியர்களை கொண்டு, இலங்கை வரை புரட்சியில் பங்களிப்பதாக கதை சொல்லுகின்றனர். அரசியல் மற்றும் ஸ்தாபன வடிவத்தை எதிர்த்து, கலைப்புவாதத்தை அரசியலாக கொண்ட தனிநபர்களுடனும் குழுக்களுடனும் சமரசவாதத்தை அடிப்படையாக கொண்டு, உறவுகளை பேணுவது ஊழியர் கொள்கையாகாது. ஒரு சிலரைச் சுற்றி சமரசவாதத்துடன் கூடிய ஆதரவுக் கூட்டத்தை அடிப்படையாக கொண்டு, யாரும் புரட்சி செய்ய முடியாது. கட்சி என்பது ஒரு கட்சியாக இயங்க நடைமுறையில் சொந்த மக்கள் மத்தியில் செயற்படவும், சொந்த பலத்தில் சார்ந்திருக்கவும் வேண்டும். அனைத்து நெருக்கடியையும் கட்சி தனது சொந்த பலம் சார்ந்து, தீர்க்கவேண்டும். அது சொந்த ஊழியர்களைச் சார்ந்து, அதை சுற்றி உருவாகியுள்ள மக்கள் திரளைச் சார்ந்து போராட வேண்டும். எமது சொந்த மண்ணில் கிராமப்புற வேலைகளில் தொடங்கி நடைமுறை ரீதியாக தனது கருத்தை இரகசியமாவோ, பகிரங்கமாகவோ முன் வைத்து போராடும் பலத்தைச் சார்ந்தே, கட்சி உருவாகின்றது. அத்துடன் கட்சி சொந்த மக்கள் மத்தியில் இருந்து, பிரகடனப்படுத்த வேண்டும்;. தமிழீழ புதிய ஜனநாயக கட்சி மற்றும் தமிழீழ மக்கள் கட்சி போன்று, வெளி நாடுகளில் இருந்து கட்சிப் பிரகடனம் செய்ய முடியாது. விரல் விட்டு எண்ணக் கூடிய முன்னணி நபர்களை அடிப்படையாகக் கொண்டு, கட்சியை பிரகடனம் செய்ய முடியும் என்றால், இது தனிநபர் பிரகடனங்களைக் கூட அங்கீகரிக்கக் கோரும். கட்சி என்பது மக்களுடன் உயிருள்ள பிணைப்பைக் கொண்டது. அந்த உயிர் சமூகத் தளத்தில் எங்கோ ஒரு மூலையில் பிரதிபலிக்க வேண்டும். இல்லாத நிலையில் சில நபர்கள் செய்யும் கட்சிப் பிரகடனங்கள், ஒரு புரட்சிகர போராட்டத்தின் தேவையைக் கூட அது வெளிவந்த வடிவத்தில் இருந்தே கேலி செய்துவிடும்;. இயக்க வரலாறு போல் இது நீண்ட பின் விளைவுகளை ஏற்படுத்தும்.

அடுத்து எனது கட்டுரையில் குறிப்பிடப்பட்ட சில பதங்களைப் பிரித்தெடுத்து, அது முத்திரை குத்துவதாக கூறுவது ஒரு விவாதம் அல்ல. சிறுபிள்ளைத்தனம் அல்லது திரிபுவாதம் என்று ஒரு சொல்லை பயன்படுத்தியிருப்பின், அது எதன் மீது நாம் ஏன் சொன்னோம் என்பதைக் கூறி, அது எப்படி தவறாக உள்ளது என விளக்கி அதை மறுக்க வேண்டும்;. இல்லாமல் அந்த சொற்களை கட்டுரையின் அரசியல் உள்ளடக்கத்தில் இருந்து பிரித்தெடுத்து, அதை முத்திரை குத்துவதாக காட்டுவது, அரசியல் ரீதியாக தத்துவ விவாதத்தை கைவிடுவதாகும்;. திரிபுவாதம், கலைப்புவாதம், சிறு பிள்ளைத்தனம் போன்ற அரசியல் தத்துவார்த்த அர்த்தமுள்ள சொற்களை யாரும் பயன்படுத்துவதே தவறு என்ற நிலைக்கு, தேசபக்தன் தனது சந்தர்ப்பவாத அரசியலுடன் சரிந்து செல்லுகின்றது. கட்சியின் பெயரில் இருந்து பார்க்கக் கூடாது என்று பெயரையே மறுத்துரைப்பது போல், இந்த சொற்களையும் மறுத்துரைக்கின்றனர். இந்த சொற்களின் அரசியல் உள்ளடக்கத்தை நாம் கட்டுரையில் பொருத்திக் காட்டியது தவறானது என்றால், அதை தத்துவ ரீதியாக விளக்கி நிறுவவேண்டும். இந்த சொற்களை நாம் கையாண்ட போது, நீங்கள் கட்டுரையில் குறிப்பிட்டது போல் பொறுப்பு உணர்வுடன் தான் கையாண்டோம்;. குறிப்பாக உங்கள் அரசியல் நிலைப்பாட்டுக்கு சரியாகவே பொருத்தியுள்ளோம்;. இது தவறு என்றால், அதை நிறுவும் உங்கள் தத்துவ விவாதத்தை நாம் கூர்ந்து அவதானிக்க தயாராக உள்ளோம்;. இல்லாது எழுந்தமானமாக சொற்களை பிரித்தெடுத்து, இதை முத்திரை குத்தல் என்றால் அதை எந்தவிதமான நிபந்தனையின்றியும் நிராகரிக்கின்றோம்;;.

".. சமர் தங்களைத் தவிர மற்றைய சக்திகள் எல்லாவற்றையும் நீங்களா புரட்சிகர சக்திகள், கட்சிகள்? எனக் கேலி செய்கின்ற அரசியல் போக்கு, பக்குவமற்ற பொறுப்புணர்வற்ற விமர்சனப் போக்கு, விடையங்களை ஆழமாக விளக்கி வென்றெடுப்பதற்குப் பதில் முத்திரை குத்தி அன்னியப்படுத்தும் போக்கு" என்று எம்மைப் பற்றி ஒரு மதிப்பீட்டை தருகின்றனர். நல்லது, அப்படி நாங்கள் அன்னியப்படுத்திய புரட்சிகரமான அந்த சக்திகளை, பொறுப்புணர்வுடன் சுட்டிக் காட்டுவீர்களா? குறைந்த பட்சம் தேசிய முதலாளித்துவ ஜனநாயகக் கூறுகளை கூட நீங்கள் பொறுபுணர்வுடன் நாம் முத்திரை குத்திய வடிவில் இருந்து எடுத்துக் காட்ட அழைக்கின்றோம். நாம் மிக மோசமாக முத்திரை குத்திய அந்த மற்றைய சக்திகள் யார்? எடுத்துக் காட்டுங்கள். சும்மா சொல்வதை ஒரு அரசியலாக்க முடியுமா! இழிந்து போன பிழைப்புவாத இலக்கிய தனிநபர்கள், சமருக்கு பதிலளிக்க முடியாத தமது அப்பட்டமான அரசியல் வறுமையை இருந்து, இப்படிச் சமர் பற்றி சொல்லி ஆற்றுவது நீண்ட காலமாக நாம் அறிந்ததே. எங்கே எம்முடன் விவாதம் நடத்த முடியாது தோல்வியடைகின்றார்களோ, அங்கே இது ஒரு அவதூறாக அரசியலாக மாறிவிடுகின்றது. ஆனால் யார் அந்த சமுதாயம் மீது அக்கறை கொண்ட அந்த புரட்சி நபர்கள் என்று கேட்டால், அதற்கு மௌனம் தான் பதில். முதுகுக்கு பின் உலாவும் அவதூறை கவணமாக பிரித்தெடுத்து தேசபக்தன் எழுத்தில் வைக்கின்றது. நல்லது நாம் முத்திரை குத்திய அந்த புரட்சிகர நபர்கள் யார்? என்பதே எமது கேள்வி.

இங்கு அடுத்த விவாதம்  "சமர் தங்களைத் தவிர மற்றைய சக்திகள் எல்லாவற்றையும் நீங்களா புரட்சிகர சக்திகள், கட்சிகள்?" என்று கேட்டு இதை மறுப்பதன் மூலம், மா.லெ.மாவோ சிந்தனையை அடிப்படையாகக் கொண்ட பல கட்சிகள் இருக்க முடியும் என்கின்றனர். நாம் மா.லெ.மாவோ சிந்தனையை ஏற்றுக் கொண்ட பல கட்சிகள் ஒருக்காலும் இருக்க முடியாது என்கின்றோம்.. ஒரு விடையத்தை மா.லெ.மாவோ சிந்தனையின் பார்வையில் பல விதமாக விளக்க முடியாது. ஆப்கான் போரை பலவிதமாக சர்வதேசியம் விளக்க முடியாது. பலவாக ஒன்றுக்கு மேற்பட்ட கட்சிகள் விளக்கின், அங்கு அதன் புரட்சிகர தன்மையே கேள்விக்கு உள்ளாகின்றது. இன்று சமர் மற்றையவற்றை விமர்சிக்கின்றது என்றால், மா.லெ.மாவோ சிந்தனையின் சரியான தன்மையை அனைவக்கும் வந்தடைவதற்காகவே. இதில் சமர் தவறு இழைத்தால் அதை தத்துவார்த்த ரீதியாக நிறுவ வேண்டும்;. அதைவிடுத்து ஒன்றுக்கு மேற்பட்ட புரட்சிகர சக்தி இருக்க முடியும் என்றால், அது மார்க்சியத்துக்கு எதிரானது. இங்கு மற்றைய ஒடுக்கப்பட்ட வர்க்கங்களின் கட்சிகளை இது உள்ளடக்கியது அல்ல. அவை மீதான எமது விமர்சனம் தெளிவானவை.

அடுத்து சமர் பற்றி மேலும் "சில கட்சிகள், அதன் உறுப்பினர்கள், தங்கள் கட்சியின் கொள்கை, வேலைகள், போராட்டங்கள் பற்றிப் பேசுவதை, எழுதுவதை விட மற்றைய கட்சிகளின் குறைகளை விமர்சிப்பதையும், ஏளனம் செய்வதையும் தங்களின் முக்கிய கொள்கைகளாக கொண்டிருக்கிறார்கள். சமர் இந்தப் போக்குக்கு பலியாகிவிடக் கூடாது என விரும்புகின்றோம்." நல்லது. ஆனால் நாம் இதைச் செய்வதே எங்கள் பணியெனக் கருதுகின்றோம். இதை நீங்கள் மறுப்பின், மார்க்சியத்தையே மறுக்கின்றீர்கள்! மார்க்ஸ் மற்றைய அனைத்தையும் விமர்சித்தே, மார்க்சியத்தை நிறுவினார். லெனினின் எழுத்துகள் பெரும்பாலானவை, சர்வதேச ரீதியாக சமகாலத்தில் நிலவிய மற்றைய அரசியல் கட்சிகளின் தத்துவார்த்த அடிப்படை மீதான விமர்சனமாக முன்வைத்தே, மார்க்சியத்தை வளர்த்தெடுத்தார். மார்க்சியம் பலமான தளத்தில் நிறுவப்பட்ட நிலையில், மாவோவுக்கு இந்தப் பணி மிக குறைவாக இருந்தது. ஆனால் இன்று மார்க்சியத்தை நிறுவும் பணி எமது மையமான பணியாக மீள உள்ளது. இது நடைமுறை போராட்டத்துக்கு வெளியில் அல்ல. மார்க்சியம் அல்லாத அனைத்து தத்துவ இயலையும் மறுத்து, அதை அம்பலம் செய்து மார்க்சியத்தை நிறுவ வேண்டிய புதிய வரலாற்றில் நாம் உள்ளோம்;. ஈவிரக்கமற்ற வகையில் சலுகைகளை வழங்காது மார்க்சியமல்லாத அனைத்து கோட்பாடுகளையும் மார்க்சிய விலகல்களையும் எதிர்த்து, யார் தத்துவார்த்த துறையில் சமகாலத்தில் யார் போராடவில்லையோ அவர்கள் மார்க்சியவாதிகள் அல்ல. இந்த வகையில் நாங்கள் அந்த பணியை தெளிவுபடவே யாருக்கும் சலுகை வழங்காது, தத்துவத்துறையில் போராடுகின்றோம்;;. நீங்கள் எமது இந்த புரட்சிகர பணிக்கு எதிராக உங்கள் சமரசவாத வழியை முன்வைத்து சுட்டிக் காட்டியதன் மூலம், அந்தப் புரட்சிகர பெருமைக்குரிய பண்பை மேலும் வளர்தெடுக்க முனைவதே, எமது தலையாய பணி என்பதை மீளவும் சுட்டிக் காட்டுகின்றோம்.


பி.இரயாகரன் - சமர்