08152022தி
Last updateபு, 02 மார் 2022 7pm

ஒடுக்குமுறையை நேரில் அனுபவிப்பவனே ஒடுக்குமுறையை செய்கின்ற போது அதன் காரணத்தை ஆராய்ந்து விளக்காத படைப்புகள் எதைத் தான் சாதிக்கின்றது.

கொரில்லா என்ற தலைப்பிலான நாட்காட்டி வடிவத்திலான தொகுப்பு ஒன்றை ஷோபாசக்தி அண்மையில் வெளியிட்டுள்ளார். இந்த நூல் பல்வேறு விமர்சனங்களைத் தாண்டி புலிகளின் இயக்க நடத்தைகள் பற்றி பேசுவதால், மிக முக்கியத்துவமானதாகும். கடந்த காலத்தில் புலிகளால்; படுகொலை செய்யப்பட்ட கேசவனின் புதியதோர் உலகம், செழியனின் நாட்குறிப்பு, சக்கரவர்த்தியின் யுத்தத்தின் இரண்டாம் பாகம் சிறுகதை தொகுப்பு, வீரகேசரி (5.5.1996)யில் வெளிவந்த கூடில்லாத நத்தைகள்.. ஒடில்லாத ஆமைகள்... என்ற செங்கை ஆழியன் சிறு கதையின் தொடர்ச்சியில் கொரில்லா  வெளிவந்துள்ளது. இது போன்று இயக்கங்களின் நடவடிக்கைகளைப் பற்றி, பல்வேறு வடிவங்களில் வெளிக் கொண்டு வரப்பட வேண்டிய வரலாற்று கால கட்டத்தில் நாம் உள்ளோம்.

தமிழ் மக்களின் ஆயுதம் எந்திய போராட்டம் தொடங்கியது முதல், ஆயுதங்களை ஏந்தியோர் நேரடியாக ஜனநாயகத்தை மக்களுக்கு மறுப்பதில் முரண்பாடு கடந்து ஒன்றுபட்டு நின்றனர். தமிழ் பேசும் மக்களின் சுயநிர்ணயத்துக்கான தேசிய பொருளாதாரத்துக்கான போராட்டத்தை ஆயுதம் எந்தியவர்கள் மறுத்தது, போராட்டத்தை இயக்கப் போராட்டமாக மாற்றிய காலகட்டம் தொடங்கி, தொடர்ச்சியாக மக்களுக்கு எதிரானதாக பலவழிகளில் செயற்பட்டனர். மக்களின் ஜனநாயக உரிமைகள் மறுக்கப்பட்டு, தேசிய பொருளாதாரம் மிதிக்கப்பட்டு, வர்க்க சாதிய ஆணாதிக்க பிரதேச மற்றும் சிறுபான்மை இனங்கள் மீதான இனவாத ஒடுக்க முறைகளை உள்ளடக்கிய, ஆதிக்க பண்பாட்டு கலாச்சார அடிப்படைகளைக் கொண்டு இயக்கங்கள் கையாண்ட வன்முறைகள் வரைமுறையற்றது. இது சொந்த இயக்கம் முதல் மக்கள் மேலான ஒரு அதிகார வன்முறை அரசியலாக பரிணமித்தது. முதலில் ஆயுதம் எந்திய எல்லா இயக்கங்களும், தொடர்ந்து புலிகளும் இதில் விதிவிலக்கற்ற ஒரே அணுகுமுறையை ஒரேவிதமாக கையாண்டனர், கையாளுகின்றனர். மக்கள் இயக்கங்களின்; எடுபிடிகளாக, இயக்க நலனை சார்ந்து நிற்க கோரும் வன்முறையுடன் கூடிய அடக்குமுறை நிலவும் எமது தேசிய யதார்த்ததை, வெளிக் கொண்டுவரும் முயற்சிகள் அனைத்தும் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும்;.

இந்த வகையில் கொரில்லா என்ற நாட்குறிப்பிலான தொகுப்பை விமர்சனத்துக்குள்ளாக்க வேண்டியுள்ளது. நாட்குறிப்பு போன்று தொகுக்கப்பட்ட வடிவம், எழுத்தாற்றலற்ற பலரை இதன் வழியில், சொந்த அனுபவத்தை இலகுவாக தொகுக்க வழிகாட்டியுள்ளது. இந்த வகையிலும் இந்தத் தொகுப்பின் வடிவம் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இனி இந்த தொகுப்பின் மீதான விமர்சனத்துக்கு வருவோம். இந்தத் தொகுப்பாக்கம் இயக்க நடத்தைகளை வெறும் பதிவாகவும், மறு தளத்தில் வரலாற்றின் குறிப்பின் மீதான திரிப்புகளுடன் நின்று விடுவதை, இதன் யதார்த்தம் நியாயப்படுத்துகின்றது. தொகுப்பு உண்மை மற்றும் பொய்மை மீதான கற்பனையையும் இணைத்து புனையப்பட்ட நிகழ்வு என்பது, உண்மையின் நம்பகத் தன்மையை தகர்த்துவிடுகின்றது. எது உண்மை எது பொய் என்ற ஊகத்துக்கு, வன்முறையிலான ஒரு சமூக உண்மையை சிதைத்துக் காட்டும் ஒரு இயக்கப் போக்கை கொண்டு வருகின்றது. இது கடந்த காலத்திலும் நிகழ்காலத்திலும் ஒரு இயக்க நடைமுறையாக இருந்து வருகின்றது. உண்மையையும் பொய்யையும் கலந்து விடுவதன் மூலம், உண்மையை சிதைப்பதாகும். இந்தத் தொகுப்பில் கூட முதல் தண்டனையை பெற்ற ரொக்கிராஜ் மீதான இயக்கத்தின் மறைமுகமான அவதூறுகள் மீது, உண்மையையும் நேர்மையையும் சிதைக்கும் நோக்கம் தெளிவாகவே வெளிப்படுகின்றது. இங்கு ரொக்கிராஜின் உண்மை நேர்மை மீதே இயக்க அவதூறு சமூகமயமாகின்றது. இது போன்று எம்மண்ணில் இதுவே பலர் மீதான அவதூறாகியதுடன், மரணதண்டனை கூட நடந்த பல கதைகள் உண்டு. உண்மைக்கும் பொய்க்குமிடையில் கட்டமைக்கப்பட்ட கற்பனையாக்கம், பொய்யின் நம்பகத்தன்மையால் அனைத்தையும் பொய்யாக்கின்றது. இங்கு உண்மை மடிந்து விடுகின்றது. கொரில்லா என்ற தலைப்புக்குரிய பாத்திரத்தினைச் சுற்றி இருந்த ஒரு இயக்க சூழலின் பொதுத்தன்மையைத் தாண்டி, கொரில்லாவுக்கு வெளியில் அவர் இல்லாத சூழலில் திட்டமிட்டு கட்டமைக்கப்பட்ட பொய்கள் மீதான திரிபுகள் மூலம், ஒரு சமுதாயத்தின் மேல் உள்ள உண்மையான ஒடுக்குமுறையை சிதைத்து விடுவதே இங்கு இதன் உள்நோக்கமாக உள்ளது.

இந்தத் தொகுப்பு சமுதாயத்தின் சாதாரண யதார்த்த சூழலில் வாழும் மக்களுக்கிடையில் என்ன விளைவை ஏற்படுத்தும். உண்மையில் இயக்க நடத்தைகள் இயல்பானதாக ஏற்றுக் கொள்ளக் கூடியதான ஒரு பூர்சுவா சமூக சூழல் உள்ள யதார்த்தத்தை, மீள ஒப்புவித்த இந்தத் தொகுப்பு அதை நியாப்படுத்துகின்றது. சமுதாயத்தின் மேல் கருத்துச் சொல்லும் முன்னணி சிறுபான்மை நபர்கள் மட்டுமே, இந்த இயக்க நடத்தைகளை இட்டு எதிர் நிலையில் நின்று விமர்சன நோக்கில் அணுகுவர். இன்று கருத்துச் சொல்லும் முன்னணி நபர்கள் இந்தத் தொகுப்பையிட்டு கருத்துச் சொல்லும் போது, தமது முன்னணிக் கருத்து தமக்கு மட்டுமே உரித்தானது என்று கருதும் ஒரு நிலையில், இதை அதன் யதார்த்தத்தை ஏற்படுத்தும் கேவலமான நியாயப்படுத்தலை தாண்டி புகழ்வதே நிகழும். சமுதாய இயக்கத்தில் இருந்து அன்னியமாகி புலியெதிர்ப்பை மட்டும் அடிப்படையாக கொண்ட பிரிவுகளே, தமது அலித்தனத்தில் நின்று விமர்சனமற்ற வழிபாட்டை இது போன்ற தொகுப்புகள் மேல் நடத்துவர். ஆனால் மக்கள் நிலையில் நின்று இந்தத் தொகுப்பை ஆராயின், இதன் மீதான விமர்சனம் கடுமையானவை. ஏனெனின் நிலவும் யதார்த்தம் இயல்பில் பிற்போக்கானவை. அதை அப்படியே மீளத் தொகுக்கும் போது, பிற்போக்கு மேலும் மெருகு ஊட்டப்பட்டு நியாயப்படுத்தப்படுகின்றது.

அண்மையில் வெளியாகிய அன்ரன் பாலசிங்கத்தின் மணைவி அடேலின் "சுதந்திர வேட்க்கை" என்ற நாவல் பற்றிய விமர்சனத்துக்கு அப்பால் ஒரு சில விடயத்தை அதில் இருந்து ஒப்பிட்டு பார்க்க முடியும். கள்ளுக்கடை ஒன்றில் சாதி கடந்து தாழ்ந்த சாதி வீட்டில் கூடியிருந்து ஒன்றாக குடிக்கும் ஒரு நிகழ்ச்சியை வருணிக்கின்றார். இரண்டாவது வன்னியில் இருந்த போது பக்கத்து வீட்டு வறுமையையும், இரவல் வாங்கும் கோழி முட்டையை அடை வைத்தும், குஞ்சு பொரித்ததும் அதில் வறுமையை ஒழிக்க போராடும் வறுமையின் துயரத்தைப் பற்றி பேசுகின்றார். அது போல் இந்தியாவில் அகதி முகாம் வறுமையின் அவலத்தை கண்டு, பிரபாகரனுடன் சண்டை போட்டு அந்த அகதி முகாமுக்கு கொஞ்சம் உதவ முடிந்ததைப் பற்றி பேசுகின்றார். இங்கு வறுமை, அகதி வாழ்வு, சாதிய ஒடுக்கு முறைக்கு எதிராகவே அடேல் பேசுகின்ற போதும், அவர் சார்ந்து இருக்கும்; இயக்கம் இதை ஒழிக்கப் போராடவில்லை. ஆனால் இங்கு சில மனித துயரங்களை இலக்கிய நயத்தில், சமூக கொடுமையை தத்துரூபமாக கொண்டு வரும் போது, இதனுடன் ஏன் நாம் கொரிலாவை ஒப்பிட முடியாது. சமூகத்தின் எதோ ஒரு அவலத்தையே இரண்டும், நடைமுறை மாற்றம் கடந்து இலக்கிய நயத்துக்காகவே பேசுகின்றது. இங்கு இவற்றுக்கிடையில் வேறுபாடு இருப்பதில்லை.

இதற்;கு கொரில்லாவின் உள்ளடக்கத்தில் இருந்தே நாம் தெளிவாகவே இதைக் காட்டமுடியும். இயக்கத்துக்குப் போன ரொக்கிராஜ் இயக்கமாகவே சிந்திக்கத் தொடங்குகின்றான். சொந்தத் தந்தை கொரில்லா, அவனின் தாய் செனோவா மற்றும் தங்கையான பிரின்ஸயையும் கெட்ட வார்த்தைகளால் தூற்றித் தாக்கும் ரொக்கிராசுவையும், அவனின் இயக்க நடத்தையையும் இந்தத் தொகுப்பு விமர்சனம் செய்யவில்லை. மாறாக பிற்போக்கு சமூக யதார்த்தம் வன்முறை சார்ந்து தாக்குதலை நியாயப்படுத்துகின்றது. இந்தத் தொகுப்பில் இந்தத் கட்டமே மிகவும் மையமான, சமுதாய உறவாக்கம் தொடர்பான, இயக்க வக்கிரம் தொடர்பான விடயமாக உள்ளது. சமூக யதார்த்தம் தந்தையையும், தாயையும், தங்கையையும் சொந்த மகனே இயக்கம் சார்ந்து கேவலப்படுத்தி தாக்கியதை அங்கீகரிக்கின்றது. இதையே படைப்பு மறுபடியும் மீள அங்கீகரிக்கின்றது. இதில் வேடிக்கை என்னவென்றால் அந்தத் தாய் மற்றும் தந்தையின் சொந்த மகள் பிரின்ஸி நிர்மலா (மேஜர் பொற்கொடி) கரும்புலியாக இதன் பின்பு இறப்பது, இங்கு யதார்த்தமாக உள்ளது. சொந்த அண்ணன் ரொக்கிராஜ்; இயக்கம் சார்ந்து சொந்த தாய் தந்தையை தாக்கியதும், அதே அண்ணனை வேறு ஒரு காரணத்துக்காக அதே இயக்கம் சித்திரவதையை செய்த பின்பும், பல அவதூறுகளை சுமத்திய பின்பும், சொந்த தம்பியும் தந்தையும் இயக்கக் குண்டை களவெடுத்து விற்றதையும் தெரிந்து கொண்ட தங்கை தான், பின்னால் கரும்புலியாகி குண்டை வெடிக்க வைத்து இறக்கின்றாள். இதுவே யதார்த்தமாக உள்ளது. இயக்க வன்முறையையும் அதன் வக்கிரத்தையும் நேரில் கண்டும் அனுபவித்த தங்கையே, இதை விமர்சித்து மறுக்கவில்லை. மாறாக அதையே தானும் செய்ய துணிகின்றாள். இதைத் தாண்டி கொரில்லா படைப்பு எதைத்தான் கிழித்துவிடுகின்றது. இந்த நிலையில் படைப்பு இந்த யதார்த்தத்தை மறுபடியும் நியாயப்படுத்துகின்றதே ஒழிய விமர்சிக்கவில்லை.

இங்கு மற்றொரு உதாரணத்தை எனது வாழ்க்கை சார்ந்து குறிப்பிடமுடியும்;. நான் புலிகளால் கடத்தப்பட்டு உரிமை கோராது காணாமல் போன நிலையில், எனது அம்மா முதன் முதலாக வீட்டைவிட்டு வெளியேறி போகாத இடம் இல்லை, தேடாத இடமில்லை. அப்போது புலித் தலைவர்களின் காலில் ஒரு தாயாக விழுந்து கையால் அவர்களின் காலைத் தொட்டுக் கும்பிட்டு கால்களை கட்டிப் பிடித்து தாய்மைப் பிச்சையைக் கோரிய நிகழ்வுகளின் போதும், அவர்களின் காலால் தூசாக எத்தப்பட்ட சம்பவத்தின் போதும், எனது தம்பி அம்மா அருகிலேயே இருந்தான்;. ஆனால் அவனே பின்னால் அதே இயக்கத்துக்கு அதையே செய்யச் செல்லுகின்றான். இங்கு யதார்த்தம் அதுவாக உள்ளது. இந்தக் கேவலமான நிகழ்ச்சிகள் சொந்தத் தாய்க்கு நிகழ்ந்த போதும், அண்ணன் சந்தித்த சித்திரவதைகளையும் கொல்லப்பட இருந்தமையையும் தெரிந்து கொண்டவனுக்கு ஏற்படாத விமர்சன சமூக உணர்வுகளைத் தாண்டி, தொகுப்பு யதார்த்தத்தில் எதைத்தான் சொல்லுகின்றது. இது ஏன் மீண்டும் மீண்டும் நிகழ்கின்றது என்பதே இங்கு மையமான விடயம். வாழ்க்கை விமர்சனமற்ற வரட்டு ப+ர்சுவா கண்ணோட்டம் கொண்ட பாசங்குத் தனத்தில் தமிழ் சமூகம் தித்திக்கும் போது, பிற்போக்குகள் மீண்டும் மீண்டும் அரங்கு ஏறுகின்றன. பல்கலைக்கழக பகிடி வதை எப்படி ஒரு வதையாக தொடர்ச்சியான செய்முறையாக, பாதிக்கப்பட்டவனே முன் நின்று செய்யும் வக்கிரம் விமர்சனமற்ற பூர்சுவா சமூக போக்கே அச்சாக உள்ளது. நடைமுறை வாழ்க்கையில் நேரடியாக அனுபவிப்பவனே, செம்மறியாக சமூக பிற்போக்கு யதார்த்தத்தில் பின்னால் செல்லுகின்ற போது, அதை ஒப்புவிக்கும் படைப்புகள் எதையும் செய்துவிடுவதில்லை. மாறாக அதையே பிற்போக்கு யதார்த்தம் சார்ந்து நியாயப்படுத்துகின்றது. இங்கு ரொக்கிராஜ்க்கும் இயக்கத்துக்கும் இடையிலான முரண்பாடு மட்டுமே பிற்போக்கு சமூக யதார்த்த எல்லைக்குள் விமர்சனத்துக்குள்ளாகின்றது. ஒரு அப்பாவி மேல் தண்டனை வழங்கியதாக கூறி தன்னை பாதுகாக்கும் ரொக்கிராஜ், தந்தை தாயை அதே போன்று தானும் தனது இயக்கமும் தாக்கியதை விமர்சனத்துக்குள்ளாக்கவில்லை. அவர் தனது தொடர்ச்சியான தொகுப்பில் இயக்கத்தில் உள்ள சிலர் தவறு இழைப்பதாகவும், தலைமை சரியாக உள்ளதாகவும் காட்டி விட்டுச்; செல்லும் படிமானம் இந்த தொகுப்பில் மையான மற்றொரு செய்தியாகும். இதையே புலிகள் பற்றிய இன்றைய விமர்சனத்துக்கு பதிலளிக்கும் போது, புலிகளும் முரண்பாடின்றி ஒப்புவிக்கின்றனர்.

இங்கு கேள்விகள் மிகத் தெளிவானவை. ஒரு படைப்பாளி கேட்க மற்றும் தெரிந்து கொள்ள மறுக்கும் விடயத்தில்;, யாரும் மக்களை குற்றவாளியாக்க முடியாது. படைப்பவன் இதைச் சொல்லாத செம்மறி இலக்கியம் பேசும் போது, படிக்கும் மக்கள் அந்த மக்களின் இயல்பான யதார்த்தத்தில் இணைகின்றார்கள். உள்ளடக்கம் மீது கட்டமைக்கப்படும் வடிவத்தை விட்டு, வடிவத்துக்கு ஏற்ப உள்ளடக்கத்தை செருகும் படைப்புகள் யதார்த்தத்தை கேள்விக்குள்ளாக்கின்றதா எனப் பார்ப்போம். ஒவ்வொரு நிகழ்வும், ஒவ்வொரு சம்பவமும் ஏன், எப்படி, எதற்காக நிகழ்கின்றன என்ற கேள்வியை, அதன் தொடர்வரிசைகளில் கேட்டுத் தெரிந்து கொள்ள தெரிந்திராத யதார்த்த செம்மறித்தனம், பிற்போக்கை மறுபடியும் நியாயப்படுத்துகின்றது. இதை படைப்பாளியே கேட்டுத் தெரிந்து கொள்ளவும் அதை விளக்கவும் தெரிந்திராத ஒரு நிலையில், படைப்புகள் விபச்சாரத்தை ஆதாரமாக கொள்கின்றது.

கொரில்லா என்ற சமூகப் பாத்திரம் எப்படி இந்த சமுதாயத்தில் உருவானது? அதன் சமூக பொருளாதார கூறுகள் என்ன? அவனின் ஒவ்வொரு நடத்தையும் ஏன், எதனால், எப்படி, எங்கிருந்து நிகழ்கின்றது. சமூகம் எப்படி பார்க்கின்றது? இயக்கம் எப்படி பார்க்கின்றது? நாம் எப்படி பார்க்க வேண்டும்? சமூகத்தின் நடத்தைகள,; எதை ஆதாரமாக கொண்டு நாம் முரண்படுகின்றோம்?

இயக்கங்களின் மக்கள் விரோத நடத்தைகள் எங்கிருந்து எப்படி உருவானது? இயக்க குணாம்சங்களை எது உருவாக்கியது? ஏன் உருவானது? எப்படி உருவானது? இந்த இயக்கம் மக்களை எப்படி அணுகியது? ஏன் அப்படி கையாண்டது? இதனால் எதை அடைய முயன்றது? முயலுகின்றது? இயக்கமாகிவிடும் ஒருவன் சொந்தத் தாய் தந்தையை எப்படி தாக்க முடிந்தது? இந்தத் தாக்குதலில் என்ன தர்க்க நியாயம் உண்டு? தாய் தந்தையை இயக்கமாக நின்று அடித்தவனை, பின்னால் வேறு ஒரு காரணத்துக்காக அவனையே தாக்கி விசாரித்த இயக்கம் என்ற எல்லா நிலையிலும், எப்படி தங்கை இயக்கத்தில் இணைய முடிந்தது? இது ஏன் நிகழ்கின்றது? இந்த சமூக யதார்த்தம் எப்படி நிகழ்கின்றது?  இயற்கையின் நிலத்துக்கு பாதுகாப்பாக இருந்த மணலை அள்ளிச் செல்ல இருந்த தடையை மீறியும், இயக்க துணையுடன் ஒரு சில புள்ளுரூவிகள், அதே இயக்க அடிமட்ட உறுப்பினர்களை மிரட்டி எப்படி அள்ள முடிகின்றது. முதலாளியை ஏன் இயக்கம் பாதுகாக்கின்றது? சொந்த இயக்க உறுப்பினர்களை அவனுக்காக ஏன் தாக்கி கேவலப்படுத்துகின்றனர்? இதன் சமூக பொருளாதார உறவாக்கம் என்ன?

இப்படி இந்தத் தொகுப்பில் நிகழும் பல்வேறு சம்பவங்கள் மேல், அது நிகழ்வதற்கான காரண காரியத்தையும், அதன் தொடர்பில் தொடர்ச்சியான கேள்விகளை கேட்டு விடை தெரியாத அல்லது கேட்காத படைப்பாளியின் படைப்பாக்கம், எப்போதும் சமூக பிற்போக்கு யதார்த்தத்தை அப்படி படைத்து பாதுகாக்கின்றனர். ஒரு எழுத்தாளன், ஒரு தொகுப்பாளன் சமூக யதார்த்தத்தை அப்படியே தொகுப்பின், சமுதாய பிற்போக்கு சிந்தனைத் தளத்துக்கும் தொகுப்புக்குமிடையில் வித்தியாசம் இருப்பதில்லை. அது அந்தப் படைப்பின் மேல் செழித்து வாழ்கின்றது. படைப்பாளியே சமூக பிற்போக்கு தளத்தில் இருந்து முன்னேறிவிடுவதில்லை. அந்த பிற்போக்கு சமூக வட்டத்துக்குள் ஒரு துரும்பைப் பிடித்துக் கொண்டு தொங்குவதற்கு அப்பால், எதையும் சொல்ல லாயக்கற்றவராகிவிடுகின்றனர். ஆனால் காலம் கடந்த ஒரு நிலையில் அல்லது சமூகத்தை மாற்றி அமைப்பவன் மட்டுமே, இதன் மேலான குறித்த கண்ணோட்டத்தை விமர்சன நோக்கில் படைப்புகளில் இருந்து தரவுகளை எடுக்கின்றனர்.

இந்தத் தொகுப்பு அடுத்த தளத்தில் வரலாற்றை திரிப்பதில் கவனமாக செயற்படுகின்றது. யதார்த்தத்தில் வன்முறை சார்ந்த பிற்போக்கு இயக்க நடத்தையாக உள்ள நிலையில், அந்த உண்மைகளை பொய்களுடன் இணைத்து படைப்பாக்கும் செயல் என்பது, திட்டமிட்டே உண்மைகளை அதன் வரலாற்று வேர்களியிருந்து வெட்டி விடுவதாகும். எல்லோருக்கும் தெரிந்த உண்மைகளை அப்பட்டமான பொய்களின் மேல் கோபுரமாக்கி, அதன் அடித்தளத்தை அதன் சமூக வேரில் இருந்து அகற்றிவிடும் நடத்தைகள், மீண்டும் ஒரு முறை அதே வன்முறையை எவி அதை அழிப்பதாகும். இந்தத் தொகுப்பில் உண்மை மற்றும் பொய்களை இனம் காண முடியாத வகையில் குழப்பியடித்ததுடன், குறித்த காலகட்டத்தை கடந்து மற்றொரு காலகட்டத்து பொய்ச் சம்பவத்துடன் இணைத்த கரடித்தனம், இயக்க அரசியல் பணியிலானது. சிவத்தம்பி முஸ்லிம் மக்கள் பற்றி அண்மையில் தெரிவித்த கருத்துக்கும், இதற்கும் வேறுபாடு இருப்பதில்லை. அதாவது முஸ்லீம் மக்களுக்கு புலிகள் ஒரு ஆரொக்கியமான தீர்வை கொடுத்துவிட்டனர், என்ற பொய்யின் மேல் முஸ்லீம் மக்களின் மேலான கொடூரத்தை நலிவடையச் செய்த செயல் எந்தளவு பிற்போக்கானதோ, அதே போன்றதே இந்த கொரில்லாவும்;. இயக்க வன்முறை சார்ந்த கேவலமான உண்மைகளை படைப்பாக்கும் போது, அதற்கு பொய்யுடன் கூடிய கற்பனை இணைப்புகள் ஏன் அவசியமாகின்றன. கற்பனையான கொலைகள், பொய்கள் உண்மையின் வீரியத்தை இழக்கச் செய்கின்றது. நம்பகத் தன்மையை, பொய்களின் மேல் கட்டமைப்பது படைப்பாளியின் திட்டவட்டமான நோக்கமாக உள்ளது.

இந்தத் தொகுப்பில் அவர் இதை மேலும் தெளிவாக செய்கின்றார். புலி தவிர்ந்த மற்றைய இயக்கங்களை பெயர் குறிப்பிட்டும், இராணுவம் மற்றும் இந்திய இராணுவம் என்று எல்லாம் எழுதும் இவர், புலியின் பெயரைக் குறித்து எழுதுவதை திட்டமிட்டே தவிர்க்கின்றார். இயக்கமென்று பொதுவாகவே கூறுகின்றார். அதாவது மிக அதிகமான தொடர்ச்சியான வன்முறையில் ஈடுபடும் புலிகள் பற்றி இவரின் கருத்துகள் பூசி மெழுகப்படுகின்றன. அடிவாங்கிய பின்பும் சரி, கொழும்பில் தலைமைக்கு எழுதிய கடிதத்தை அனுப்பக் கொண்டு திரிந்த போதும் சரி, இந்தத் தொகுப்பை தொகுத்த நிலையிலும், புலியின் அரசியலை அச்சொட்டாக அப்படியே பிரதிபலிக்கின்றார். சொந்தப் பயிற்சி முதல் தன் மீதான தண்டனை பற்றிய விளக்கம் கூட இயல்பானதாகவும், தன் மீதான ஒரு சம்பவத்தை சொல்வதற்கு அப்பால், அதை அங்கீகரிப்பதையே செய்கின்றார்.

இதை மேலும் ஆழமாக பார்ப்பின் இயக்க பயிற்சி மற்றும் வகுப்பு பற்றி பேசும் இவர், திட்டமிட்டே மற்றைய இயக்கங்கள பற்றிய புலி இயக்கத்தின் ஜனநாயக விரோத அரசியல் அபிப்பிராயத்தை மூடிமறைக்கின்றார். ரெலோ அழிப்பில் ஒரு சம்பவத்தை சொல்ல வரும் இவர், ரெலோ அழிப்பு பற்றிய தமது அபிப்பிராயம் மற்றும் இவருடன் இருந்தவர்களின் அபிராயத்தை மூடிமறைக்கின்றார்? அந்த படுகொலை அழிப்பில் துடிப்புடன் எப்படி? என்ன காரணகாரியத்துடன் செய்தோம்? என்பதை சொல்ல மறுத்து எதை பாதுகாக்க முனைகின்றார்.

கடைசியாக இயக்கம் எனக்கு கள்ளப் பட்டம் கட்டிப் போட்டுது என்று குறிப்பிடும் சம்பவத்தை தொடர்ந்து, தந்தையும் தனது சகோதரனுமே வெடி குண்டை களவு எடுத்தனர் என்று தங்கை சொன்ன நிகழ்வு மூலம், கள்ளப் பட்டம் என்பது சமநிலைக்கு கொண்டு வரப்படுகின்றது. முதலில் இயக்கத்தில் இருந்து விலக்கிய போது கள்ளப் பட்டம் கட்டியிருந்ததை, இது மறைமுகமாக மறுக்கின்றது. பொதுவாக இயக்க முரண்பாட்டுக்கு கள்ளப் பட்டம் கட்டுவது இயக்க மரபாக இன்றுவரை உள்ளது. இதை வேறுவிதமாக காட்ட முனைவது ஏன்?

இந்தத் தொகுப்பில் குறிப்பான சம்பவத்தையே அனைத்து வடிவமாக காட்டுவதன் மூலம், ஒரு வரலாற்று திரிபு நிகழ்கின்றது. இயக்கத்தின் மனித விரோத வரலாறு என்பது, குறிப்பான உதிரிச் சம்பவங்களை மட்டும் கொண்டவையல்ல. இந்த உதிரிச் சம்பவங்கள் பொதுவானதில் இருந்து உருவானவையே. இந்தத் தொகுப்பு இயக்கம் சார்ந்து தனிப்பட்ட சில்லறை நடத்தைகளை உள்ளடக்கிய காலத்தில் தான், எமது மண்ணில் பாரிய மனிதவிரோதங்கள் நடந்தன. இந்த மனிதவிரோதம் அனைத்து மக்களையும் ஏதோ ஒரு விதத்தில் பாதித்தது. ஆனால் இந்த தொகுப்பாளர் அவற்றை எல்லாம் மூட்டைகட்டி மூடிமறைக்கும் வகையில், தனிப்பட்ட நபர்களுக்கிடையிலான சில்லறை இயக்க வன்முறைக்குள் மூடிச்சப் போட்டுக் காட்டுகின்றார். தனிப்பட்ட சில்லறை உதிரிச் சம்பவங்களுக்கு மேலாக, சமகாலத்தில் ஒட்டுமொத்தமாக மனித இனத்தையே சிதைக்கும் பல நூறு சம்பவங்கள் நிகழ்ந்தன. அதை மூடிமறைத்து அதன் மேல் தொகுத்து விடும் நிகழ்வு, கேவலமாக மீள ஒருமுறை கையாளும் இலக்கிய வன்முறையாகும். தெரிந்த சம்பவத்தை மட்டும் ஒருவன் தொகுப்பதாக இருந்தால், அதன் மேலான விமர்சனம் வேறானவை. ஆனால் தொகுப்பு அதைத் தாண்டி பொய்கள் மேல் கட்டமைக்கும் கற்பனைகள், வரலாற்றை மூடிமறைக்க முனையும் உள்நோக்கம் கொண்டவையாகும். ஒட்டுமொத்த மக்களுக்கு எதிரான பல நூறு சம்பவங்களை தனிப்பட்ட நபர்களே தொகுக்க முடியும். சமகாலத்தில் இவற்றையெல்லாம் கையாண்ட இவர்கள், அதையே நளாந்த சொந்த இயக்க வரலாற்றில் பேசியும் நடைமுறைப்படுத்தியவற்றை மூடிமறைப்பது ஏன்?

இவர்களும், இவர்களின் இலக்கிய நீட்சைகளும் இலக்கியவாதிகள் தீர்ப்புச் சொல்ல வேண்டியதில்லை, அதை தெரிந்து கொள்ள வேண்டியதில்லை, எல்லாவற்றையும் சொல்ல வேண்டியதில்லை என்று பொச்சடிப்பார்கள். ஆனால் தொகுப்பு பல தீர்வுகளை பேசுகின்றது. உதாரணமாக ராஜீவை கொன்றாலும் சரி, பிரபாகரனை கொன்றாலும் சரி என்று தீர்ப்புக் கூறும் போது, இவர்கள் தம்முடைய சொந்த இலக்கிய மரபை மீறுகின்றனர். இது போன்று பல நூறு தீர்ப்புகளை இந்தத் தொகுப்பில் வழங்கும் இவர், மற்றவர்கள் என்ன நினைக்கின்றனர் என பேசும் இவர்கள், முக்கியமான பலவற்றில் மௌனமாகிவிடுகின்றார். மற்றவன் என்ன நினைக்கின்றான் என்று யோசித்து தீர்பை வழங்கும் இவர்கள், இயக்க நடத்தைகளை குறித்து மக்களின் மனநிலை சார்ந்தும் மௌனமாகிவிடுகின்றார். அத்துடன் "தொடரும்" என்ற குறிப்பின் மூலம், தனது விபச்சாரத்தை பாதுகாக்க முனைகின்றார். இந்த விபச்சாரம் மீண்டும் தொகுப்பின் காலத்துக்குள் தொடரும் என வாதிடின், அதைப் போல் மோசடி எதுவும் எம் மண்ணில் இருக்காது.

ஒட்டுமொத்தமாக தனிப்பட்ட சில்லறை சம்பவங்களை இயக்க வரலாறாக காட்டி, இயக்க மனித விரோத வரலாற்றை மூடிமறைப்பதில் இந்தத் தொகுப்பு தெளிவாக தன்னை தொகுப்பாக்கின்றது. அத்துடன் இந்தத் தொகுப்பின் கால வரையறைக்குள்ளான இயக்க வரலாற்றை இவரின் சில்லறை நடத்தைகளுக்குள் சுருக்கிக்காட்டி மௌனமாகிவிடுவதன் மூலம், ஒரு வரலாற்று திரிபை அழகாக உள்நோக்கத்துடன் இந்தத் தொகுப்பு தன்னை அலங்கரிக்கின்றது.


பி.இரயாகரன் - சமர்