08102022பு
Last updateபு, 02 மார் 2022 7pm

முரணற்ற சிந்தனை மட்டுமே உன்னதமான படைப்பை உருவாக்கும்.

இலக்கியம் ஊடாகவே தத்துவத்தை பேசும் சக்கரவர்த்தியின் சிறுகதை தொகுப்பான "யுத்தத்தின் இரண்டாம் பாகம்" அண்மையில் வந்த முக்கிய படைப்புகளில் ஒன்றாகும்;. தெளிவான உள்ளடக்கம் மேல் கலையையும் பல்வேறு பிரதேச மொழியையும் சிறுகதைகள் மூலம்; வெகு சிறப்பாக கையாளும் இவர், தன்னை நேருக்கு நேர் தயக்கமின்றி ஒளிவுமறைவின்றி அடையாளம் காட்டுகின்றார். இந்த வகையில் இவர் இன்றைய இலக்கியவாதிகளுக்குள், கதை சொல்லும் போக்கில் ஒரு நேர்மையைக் கையாளுகின்றார். இலக்கியம் அருவமானது. உருவம் பற்றி பேசத் தேவை இல்லை என்ற போலியை, இவர் தெளிவாகவே உடைத்துக் காட்டிவிடுகின்றார். ஒரு இலக்கியம் மூலம் மக்களுக்கு வழிகாட்ட, விளக்க முடியும் என்பதை படைப்பின் மூலம் நிறுவுகின்றார். இவரின் தத்துவம் சார்ந்த வழிகாட்டல், அது சார்ந்த உள்ளடக்கத்தை மக்களின் விடுதலை சார்ந்து முன்வைக்கின்றாரா? என்ற கேள்வி எமக்கு அடுத்து முக்கியத்துவமுடையதாகும். இவரின் இந்த சிறுகதை தொகுப்பு இரண்டு முக்கிய விடயங்களை பேசுகின்றது.

1.இயக்கங்கள் மக்கள் மேல் கையாண்ட வன்முறைகள் பற்றி, பல்துறை சார்நது பேசுகின்றது

2.பெண்களின் பாலியலை பற்றி தன் உணர்வு சார்ந்து, பெண்களைப் பற்றி கூறுகின்றார்.

தமிழ் மண்ணில் இருந்து கனடாவரையிலான புலம்பெயர் சமூகத்தின் பல தளத்தில் கதை சொல்லும் இவர், அதன் முரண்களின் மேல் தன்னை அடையாளம் காட்டுகின்றார். யாரும் பேச மறுத்த, பேசுவதே மரண தண்டனைக்குரிய குற்றமாக துரோகமாக கருதிய இயக்கங்களின் வன்முறைகளையும், அது சார்ந்த நடத்தைகள் தொடர்பாகவும் இவரின் சிறுகதைகளின் ஒருபகுதி; பேசுவதால் மட்டுமே, இதன் மீதான விமர்சனம் அவசியமாகின்றது. இயக்கத்தின் உள் மற்றும் வெளி நடத்தைகள், மக்களுக்கும் இயக்கங்களுக்கும் உள்ள உறவாக்கம், எதிரிக்கும் அவர்களுக்குமுள்ள உறவாக்கம் சார்ந்த வன்முறைகள் மீதான இலக்கியங்கள், விமர்சனங்கள் ஒரு மரண தண்டனைக்குரிய குற்றமாக இன்று யதார்த்தத்தில் உள்ளது. இந்த வரலாற்று தொடர்ச்சியில் இதற்கு எதிரான போராட்டங்கள், அதை வெளிக் கொண்டு வந்த எழுத்து முயற்சிகள், பல்துறை சார்ந்த பதிவுகள் என வரலாற்று நிகழ்வாக தொடர் போராட்டமாகவும், மறுதளத்தில் வெறும் பதிவாகவும் மாறுகின்றது.  இந்த பதிவாக்கம் கூட ஒரு அங்கீகாரத்தை படைப்பாளிக்கு கொடுக்கின்ற போது, படைப்பாளியின் பிற்போக்கு கூறுகள் கூட மூடி மறைத்துவிடுவது நிகழ்கின்றது. அந்தளவுக்கு தமிழ் சமூகத்தில் சாதாரண மக்கள் முதல் அறிவுத்துறை ஈறாக, சமூக இயங்கியல் வாழ்வின் மீதான தத்துவத்தின் வறுமை காணப்படுகின்றது. ஒரு காலத்தில் எது பயங்கரமாகவும், அபாயகரமாகவும் இருக்கின்றதோ அதை எதிர்த்து, அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கும் மனித உணர்வுகள் மதிப்புக்குரியவைதான். ஆனால் அவன் இன்னொரு அநீதிக்கு அது சார்ந்து துணை போவானாயின், அதை நாம் விமர்சனக் கண்கொண்டு விமர்சிக்கவும், அதை எதிர்த்து அம்பலம் செய்யும் பணிதான், அநீதிக்கு எதிரான உயர்ந்த புரட்சிகர பண்பாகவுள்ளது. இயக்கத்தின் வன்முறைகளை பற்றி பேசியபடி, அரசுக்கு குண்டி கழுவுவது எவ்வளவு கேவலமானதோ, அது போன்று அரசை எதிர்த்தபடி இயக்கத்தின் மக்கள் விரோத வன்முறைக்கு துணைபோவதும் கேவலம்தான். இது போன்றே அனைத்தும், அனைத்து துறை சார்ந்து அனைத்து இலக்கியத்துக்கும் பொதுவானது. இலக்கியத்தில் முற்போக்காகவும் பிற்போக்காகவும் வௌ;வேறு விடயம் சார்ந்து செயற்பட முடியாது. இரண்டும் ஒரே தளத்தில் இயங்க முடியும் என்பது, அனைத்தையும் எப்படியும் முரணாக நியாயப்படுத்திவிட முடியும்;.

இயக்க மற்றும் அரசு வன்முறைகள் எதிர்ப்பது முதல் சில நிலப்பிரபுத்துவ பண்பாட்டு கலாச்சாரங்களை எதிர்ப்பது ஈறாக, இவரின் மையக் கருவாக உள்ளது. வன்முறை மீதான எதிர்ப்பை ஏகாதிபத்திய சார்ந்த, ஜனநாயகம் சுதந்திரம் என்ற மாமூல் கண்ணோட்டத்தில் நின்றே விமர்சிக்க முனைகின்றார். இந்த எல்லைக்குள் தேசியத்தை எதிர்ப்பதில், தன்னை தெளிவுபடவே அடையாளம் காட்டுகின்றார். மற்றைய கதைகளில் ஆணாதிக்கத்தை ஆதாரமாக கொண்டு பெண்களை இழிவாக்கும் இவர், முதலாளித்துவ ஜனநாயகம் மீது நின்றே இயக்க வன்முறையை எதிர்த்து நிற்கின்றார். முரணற்ற முதலாளித்துவ ஜனநாயக எல்லைக்குள் மட்டுமே முற்போக்காக செயற்படுகின்றது. இவர் குறிப்பிடும் தத்துவமான "வெறும் மயக்கங்கள் மாத்திரம் உள்ள மாமூல் வாழ்க்கையில் மாற்றம் தேவை.. நிஜம் தேவை...." என்ற கண்ணோட்டத்தை அடிப்படையாக கொண்ட இவர், இருக்கும் பிற்போக்கு யதார்த்த மாமூலை நிராகரித்து உண்மையான சமூகத்தை கண்டறிய முயலுகின்றாரா எனப் பார்ப்போம்;.

"யுத்தமும்...." என்ற சிறுகதையை எடுப்பின், யுத்தத்துக்கு எதிரான கண்ணோட்டத்தை அதற்கு காரணமான காரணத்தை இழிவாக காட்டி பிரதிபலிக்க முனைகின்றார். பழைய வரலாற்று கதையூடாக நிகழ்காலத்தை பிரதிபலித்து கருத்துக் கூற முற்படும் போது, யுத்த எதிர்ப்பை தவறான முறையில் விளக்க முனைகின்றார். உலகில் அனைத்து யுத்தங்களுமே வர்க்கப் போராட்டங்களே என்ற உண்மையை இவரின் மாமூல் கண்ணோட்டம் காண மறுக்கின்றது. யுத்தத்தை தலைமை தாங்கும் மக்கள் விரோத பிரதிநிதிகள் நியாயமற்ற வன்முறையையும், மக்களின் நியாயமான கோரிக்கைகளில் எழும் போராட்டமும் சார்ந்து வன்முறையையும் கோடுபிரித்தறிய இவரின் மாமூல் கண்ணோட்டம் மறுக்கின்றது. யுத்த எதிர்ப்பு பிரச்சாரத்தை மக்கள் விரோத ஜனநாயக விரோத கோரிக்கைகளை அடைப்படையாக கொண்டு, எதிர்த்து நிற்பது என்பது உள்ளடக்கத்தில் மக்களின் நியாயமான கோரிக்கைகளை எதிர்து குரல் கொடுப்பதாகும்;. இங்கு ஜனநாயக கோரிக்கையையும், மக்களை அடக்கியாளக் கோரும் கோரிக்கையையும் கோடு பிரித்து பார்க்கத் தவறுகின்ற மாமூல் தனம், யுத்த எதிர்ப்பை தவறாக விளக்க முனைகின்றது. பழைய வரலாற்று கதையூடாக பேசும் படைப்பாளி, ஏன் வன்னியர் சங்கிலியர் ஆட்சியை சதி மூலம் கவிழ்க்க விரும்பினர் என்ற கேள்வியை, அவரின் மாமூல்ததனம் கேட்க மறுத்துவிடுகின்றது. வன்னியர் விரிந்த ஆட்சி பரப்பை விரும்பினர் எனின் ஏன் அது அவசியமாகின்றது. இங்கு விருப்பாமான மாமூல் காரணத்தை அடிப்படையாக கொண்டே விளக்குவது ஏன் என்ற கேள்வியும், யுத்த எதிர்ப்பு உள்நோக்கம் கொண்டவையாகின்றது.

ஒரு ஆட்சியை பிடித்தல் என்பது, சுரண்டும் வர்க்க நலன்களை சார்ந்து அதை விரிவாக்கவேயாகும். இது சொந்த மக்களை அல்லது மற்றைய பிரிவு மக்களை அடக்கியளவும் அவர்களின் உழைப்பை உறிந்து சுரண்டி வாழ்வதுமே நிகழ்கின்றன. இங்கு ஒடுக்கப்பட்ட மக்களின் கோரிக்கைகள் கடந்த வரலாற்றில் ஜனநாயக கோரிக்கையாக, அதன் மீதான ஒடுக்குமுறையை எதிர்த்து அவை புரட்சிகர யுத்தமாகவும் பெரும்பாலும் இருந்துள்ளது. ஆனால் இந்த வர்க்க அமைப்பில் ஒடுக்குவனை வென்று ஆட்சிக்கு வரும் ஒடுக்கப்பட்டவன் கூட புதிய அடக்குமுறையாளனாக சுரண்டுபவனாக மாறிவிடும் சமூக பொருளாதார உள்ளடக்கம் வழிகாட்டிவிடுகின்றது. இந்த மாமூல்த்தனத்தை எதிர்த்தே வர்க்க அமைப்பை ஒழித்துக் கட்டவும், வர்க்க அமைப்புக்கு எதிரான யுத்த ஒழிப்பை நிபந்தனையாக்கின்றது. இந்த பாதை என்பது வன்முறையை ஆதாரமாக அடிப்படையாக கொள்கின்றது. கடந்த நிகழ்கால யுத்த மரபுகளில் இருந்து இது முற்றிலும் வேறுபடுகின்றது. பழைய மற்றும் நிகழ்கால யுத்தத்தின் போது எழும் ஜனநாயகக் கோரிக்கைகளை அங்கீகரிக்க தவறுகின்ற ஒரு படைப்பாளி, உண்மையில் ஒடுக்கமுறையாளனுக்கே உதவி செய்கின்றான்;. இந்த நிலையில் ஒரு படைப்பாளி தனது இலக்கியத்தை விரிந்த மாமூல் தளத்தை கடந்து, உண்மையை அடிப்படையாகவும் ஆதாரமாகவும் கொள்ளவேண்டும்; அதில் உள்ள பிற்போக்கு கோரிக்கைகளை எதிர்த்து ஜனநாயகக் கோரிக்கையை சார்ந்து மக்களின் அதிகாரத்தை கோரவேண்டும்;. இதை மறுத்து பிற்போக்கு கோரிக்கையை மட்டும் காட்டி, ஜனநாயகக் கோரிக்கையையும் எதிர்த்து நிற்பது என்பது சதாரண மாமூலில் இது அல்லது அது, என்பதில் ஒன்றை முன்வைப்பதுதான்.

வன்னியர் ஏன் நல்லுர் ஆட்சியைக் கைப்பற்ற முனைந்தனர்? என்பதை ஆராய மறுக்கின்றார். இதை எதிர்த்து கோழை கூட வீரனாகவும், தளபதியாகவும் மாறியதுடன் மனித நியாயம் பற்றி பேசுபவனாகவும், இறுதியாக பிற்போக்கு கட்டளைக்கு அடிபணிந்து போவதாகவும் காட்டுவதன் ஊடாக, ஒரு மனிதனின் மாற்றத்தை காட்டுகின்றார். ஆனால் ஏன் யுத்தம் அவசியமாகின்றது? மதம் மாறியவர்களை ஏன் கொல்ல விரும்புகின்றனர். அதிகார பீடங்களில் யார் என்ன நோக்கத்துக்காக வீற்று இருக்கின்றனர் என்பதை, மயக்கத்துக்குள் மாமூல் சிந்தனைக்குள் விட்டுச் சென்றதன் மூலம், நிஜத்தை கண்டறியத் தவறிவிடுகின்றனர். இதனால் யுத்தம் பற்றி ஒரு தலைப்பட்சமான விளக்கம் முன்வைப்பது நிகழ்கின்றது. இது சமகாலத்தில் நடக்கு தேசிய போராட்டத்தை எதிர்ப்பதாக மாறுகின்றது. இயக்கத்தின் பிற்போக்கு வன்முறை சார்ந்து, தமிழ் மக்களின் நியாயமான ஜனநாயக கோரிக்கையான சுயநிர்ணயக் கோரிக்கையை எதிர்ப்பது கட்டமைக்கப்படுகின்றது. மக்களின் நியாமான ஜனநாயகக் கோரிக்கைக்கும், இயக்கத்தின் நியாயமற்ற பிற்போக்கு கோரிக்கைக்கும் இடையில் கோடு பிரித்து வெளிபடுத்த வேண்டியது ஒரு படைபாளியின் கடமை. உண்மையை கண்டறியவும் அதை முன்வைப்பதுமே மாமூல் கடந்த ஒரு கண்ணோட்டமும் படைப்பாளியின் கடமையுமாகும்.

"படுவான்கரை" என்ற சிறுகதையை எடுப்பின் தமிழ் குடும்பம் ஒன்று சந்திக்கும் இயக்க மற்றும் இராணுவ வன்முறையை சித்தரிக்கின்றது. ஆனால் மக்களின் நியாயமான கோரிக்கை மேல் இதை அம்பலம் செய்ய படைப்பாளி தவறிவிடுகின்றார். மாமூல் இயல்பு வாழ்க்கை சார்ந்து இந்த வன்முறையை எதிர்த்து நிற்கின்றார். மாமூல் வாழ்விலுள்ள வாழ்வுக்கான நியாயமான உண்மையை இவர் தேடி கண்டறியத் தவறிவிடுகின்றார். இயக்கம் மற்றும் இராணுவம் ஒருவனை கைது செய்கின்ற போது, கையாளும் வேறுபட்ட வன்முறையையும், அதன் மொழியையும் தெளிவான ஒரு இலக்கியமாக கொண்டு வருவதில் இந்த கதை வெற்றி பெறுகின்றது. அதே நேரம் இந்த கதையின் இயல்பான ஒட்டத்தில் "யாழ்ப்பாணத்தில் இருந்து புதுசாய் இந்த ஏரியாவுக்கு பொறுப்பாளரு வாறாரு" அதனால் தான் கைது சித்திரவதை என்பது, யதார்த்ததை திரிக்கின்றது. யாழ் அல்லாத இயக்கத் தலைவர்கள் இது போன்ற வன்முறைகளைச் செய்வதில்லையா? இது இருக்கும் யதார்த்த வடிவத்தை திரிக்கின்றது. வன்முறையை யாழ் சார்ந்தாக மட்டும் காட்டும் போக்கு இக் கதையில் தொங்கிவிடுகின்றது. கிழக்கில் இருக்கும் இயக்ககாரர்கள் சித்தரவதை, கைது என்று எதுவும் செய்வதில்லையா? இங்கு யாழ் தலமை மற்றும் உறுப்பினர் என்றால் அவர்கள் வன்முறையிலும் கூட மோசமானவர்கள், கிழக்கில் இருப்போர் அப்படி அல்ல என்ற கண்ணோட்டத்தை, படைப்பாளி மாமூல் கண்ணோட்டம் சார்ந்து பிரதிபலிக்கின்றார். ஒரு இயக்கத்தின் மக்கள் விரோத கைதுகள் சித்திரவதைகள் பிரதேசம் சார்ந்த தலைமைத்துவம் தீர்மானிப்பதில்லை. மாறாக இயக்கத்தின் வர்க்க அரசியல் தான் தீர்மானிக்கின்றது. இயக்க உறுப்பினர்களின் பிரதேசம் சார்ந்த உணர்வுகள் வன்முறையை பிரதிபலிப்பதில்லை. மாறாக வன்முறை கண்ணோட்டத்தை, எல்லா பிரதேச மக்களுக்கு எதிராகவும் பிரதேசம் கடந்து இயக்க உறுப்பினர்கள் ஒரேவிதமாக கையாளுகின்றனர். அடுத்து இராணுவம் அதிகாரி ஒருவர் கொழும்பில் இருந்து வருவதால் கைது என்பது, படைப்பாளியின் இயல்பற்ற ஒரு இயங்கியலற்ற இணைப்பாகும். இலங்கை அரசுக்கும் எதிரானவன் என்பதை தெளிவுபடுத்த, இணைத்துக் கொண்ட ஒரு தொடர்ச்சியாகும்;.  இது கதையின் கலை இயல்பை அழிக்கின்றது. அதுபோல் மனைவி, மற்றும் மனைவியின் தாய் தேடிப் போகவும், அவர்கள் கொண்டு வந்து விடும் தன்மையும் இலக்கிய இயங்கியலற்ற தன்மையை வெளிப்படுத்துகின்றது. இவை இரண்டும் இயல்பாக இல்லை.

 

படைப்பாளி மாமூல் கடந்து கைது செய்தவர்களிடம் கேட்கவில்லை, ஏன்? என்ன? சந்தேகம் என்று. மனைவி மற்றும் மனைவின் தாய் இயக்கத்தை எதிர்த்து சொந்த துயரம் ஊடாக பேசுகின்ற போது கூட, இயல்பில் இருந்தே விலகிவிடுகின்றார். மக்கள் மேலான ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தை மக்கள் எதிர்க்கவில்லை என்ற உண்மையை படைப்பாளி காண மறுத்து, எதிர்ப்பதாக தனது விருப்பத்தை வெளிப்படுத்துகின்றார். மக்களின் நியாயமான போராட்டத்தை அடிப்படையாகவும் ஆதாரமாகவும் கொண்டு, இயக்கத்தை நோக்கிய கேள்விகள் எழுப்பப்படவில்லை. ஆனால் மக்கள் இயல்பில் இதை எழுப்புவர். ஏனெனில் சமுதாயம் முன்னோக்கி முன்னேறுகின்ற இயங்கியலில், இருக்கும் யதார்த்த வன்முறையை கடந்து விடுதலை சார்ந்தே மக்கள் சிந்திக்கின்றனர். போராட்டம் மக்களுக்கு எதிராக மாறியபோதும், போராட்டத்தை மக்கள் நிராகரிக்கவில்லை. இதற்கிடையில் உள்ள நேர் எதிர்ப் போக்கினை ஒரு படைப்பாளி இனம் கண்டு கொள்ளாதவரை, ஒரு படைப்பு அரையும் குறையுமாக பிரசுவிக்கப்படுகின்றது. முதலாளித்துவ ஜனநாயகத்தின் சில குறைகளை மட்டும் அடிப்படையாகக் கொண்ட படைப்புகள், அதைத் தாண்டி எதையும் சமூகத்துக்கு முன்வைத்து வழிகாட்டுவதில்லை என்பதை இந்தச் சிறுகதை மீண்டும் காட்டுகின்றது.

"எண்டஅல்லாஹ்!" என்ற சிறுகதையைப் எடுப்போம்;. ஒரு தமிழ் விவசாயியின் வெங்காயத்தை வாங்கிய ஒரு முஸ்லிம் வியாபாரியின் அவலம் சார்ந்த ஒடுக்குமுறை மீது கதை நகர்கின்றது. இயக்கம் இராணுவம் மீது நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, இராணுவத்தின் அக்கிரமங்கள் சார்ந்து ஒரு முஸ்லிம் வியாபாரியின் துயரத்தை பேசுகின்றது. தாக்குதலை அடுத்து வெங்காயத்தை விற்க முடியாத நிலையிலும், முஸ்லீம் வியாபாரியின் நேர்மை பற்றியும்,  முஸ்லீம் வியாபாரி மகன் மூலம் தமிழ் விவசாயிக்கு ஒரு சிறு தொகையை கொடுத்த அனுப்பியருந்தார். இருந்தபோதும், தமிழ் விவாசாயி பணத்துக்கு ஆசைப்பட்ட துரோகத்தால், பணம் கொண்டு வந்தவனை இயக்கம் கொல்ல துனைபோகின்றார். இதுவே கதையின் மையமான செய்தி. சமுதாயத்தின் மேலான இயக்க வன்முறைகள், சந்தேகமே துரோகமாக முத்திரை குத்தவும் படு கொலை செய்யவும் போதுமான காரணமாக உள்ளது. போராட்ட வரலாற்றில் இதுவே ஒரு போக்காக மாறி, பல நூறு பேர் தம் உயிரை இதற்காகவே இழந்துள்ளனர். இதை ஒரு படைப்பாளியாக கொண்டு வரும் போது, அதன் வடிவங்கள், தன்மைகள், அதன் மொழியைக் கூட தெளிவாக புரிந்த கொண்டு இதை அம்பலம் செய்கின்றார். ஆனால் இதை தொகுக்கும் போது யதார்த்த இயல்பை, உழைக்கும் மக்களின் நேர்மையை புரிந்து கொள்ளத் தவறி, கதையின் ஊடாக கொச்சைப்படுத்திவிடுகின்றார். அத்துடன் ஒரு இனங்களின்; குறியீடாக காட்டி, இனங்களை பகை நிலைக்கு கொண்டுவருகின்றார். சொந்த உடல் உழைப்பில் ஈடுபடும் விவசாயி 1500 ரூபா காசுக்கு ஆசைப்பட்டு, முஸ்லிம் மகனொருவனை கொல்ல துணை போனான் என்பது உழைப்பின் வலிமையை நேர்மையை மறுப்பதாகும். இது உழைப்பையும், சுரண்டலையும் புரிந்து கொள்வதில் இருந்து விலகுகின்றது.  முஸ்லீம் மக்களுக்கு எதிராக கையாளப்பட்ட இயக்க வன்முறையின் போது, தமிழ் மக்கள் அதை ஆதாரித்து வன்முறையில் ஈடுபடவில்லை. முஸ்லீம் மக்களின் சொத்தை மிக மலிவாகவும், மறு தளத்தில் ஏலம் விட்ட போதும் வாங்குவாரற்று காணப்பட்டது. முஸ்லீம் மக்களின் உழைப்பை இயக்கங்கள் கொள்ளையடித்து விற்ற போது, தமிழ் மக்கள் வாங்குவதை மறைமுகமாக எதிர்த்தே நின்றனர். உழைப்பின் பரஸ்பரம் நேச உறவுகளை கொண்ட மக்கள், ஐக்கியத்தை கோருவதில், நடப்பை பேணுவதில் இருந்தே, இன்றும் இவ்விரு சமூகங்களும் ஒன்றுபட்டு வாழ முனைப்பு பெறுகின்றான்;. எதிர்பாராத ஒரு விதிவிலக்குகள் நடந்து இருப்பின், அதை பொதுமைப்படுத்தி ஒரு சமூக வன்முறையாக விளக்குவது ஒரு சமூக கண்ணோட்டத்தையே தகர்ப்பதாகும்;. அதாவது ஒரு அப்பாவியை குற்றவாளியாக்கி மண்டையில் போடுவது போல், விதிவிலக்கான பாத்திரத்தை கொண்டு ஒரு சமூகத்துக்கே மண்டையில் போடுவது அபத்தமாகும். ஒரு விவசாயி பணத்துக்கு ஆசைப்பட்டு மற்றொரு சமூகம் என்பதால் கொல்ல துணை போவது என்பது, தமிழ் விவசாய சமூகத்தையும் பொது குறியீட்டாக்கி குற்றவாளியாக்குகின்றது. மறு தளத்தில் ஒரு முஸ்லீமின் வர்த்தக நேர்மை பற்றி பேசி அதை முஸ்லீம் பொது குறியீட்டாக்கும் கதைப் பாங்கு, இரண்டு சமூகங்களை நேர் எதிரில் நிறுத்துவதாகும். இது சமூக பிளவை மேலும் ஆழமாக்கின்றது. இங்கு ஒரு நிகழ்ச்சி நடக்கும் போது, சமூகங்களை நேர் எதிராக நிறுத்துவது சமூக மாற்றத்தில் அக்கறையின்மையில் இருந்து எழும், தனிமனித விருப்பு வெறுப்புக்கு உட்பட்ட மாமூல் தன்மையாகும். இரண்டு சமூகங்களை நேர் எதிராக கொண்டு செல்லும் அரசியல், அதில் குறிப்பான பங்கை தெளிவாக அம்பலம் செய்வதே சமூக நோக்கம் கொண்ட படைப்பின் உள்ளடக்கமாக இருக்க முடியும். இங்கு உழைக்கும் மக்களின் மிக சிறந்த மனித இயல்புகளை படைப்பாளி புரிந்து கொண்டு கதை சொல்லாத வரை, உண்மையான நிகழ்வுகளை கற்பனையின் வளம் சார்ந்து சமூகத்தை திரிவுபடுத்தி அதன் மேல் கதை சொல்வது சமூகத்துக்கு எதிரானதாகும். ஒரு விவசாயிக்கும் இயக்கத்துக்கும் இடையிலான முரண்பாடு என்ன? ஏன் இயக்கம் விவாசயிகளை அடிப்படையாக கொண்டு போராட்டத்தை முன்னெடுக்கவில்லை. ஏன் அதற்கு எதிராக உள்ளனர்? இந்த அடிப்படை முரண்பாட்டை புரிந்து கொண்டே, பாத்திரங்களை சரியாக தெரிவு செய்ய வேண்டும். முஸ்லீம் மக்கள் மேலான இயக்க வன்முறைகளை நியாயமானவையா என தமிழ் மக்களிடம் கேட்பின், அதை எதிர்த்தே மக்கள் கருத்து கூறுவர். அதாவது யுத்தத்துக்கு எதிராக சிங்கள மக்கள் கருத்து கூறுவது போல், முஸ்லீம் மக்கள் மேலான இயக்க வன்முறையையும் எதிhத்தே தமிழ் மக்கள் நிற்கின்றனர். இதற்கு எதிராக தமிழ் மக்கள் என்ன செய்தார்கள் என்று கேட்பின், அதற்கான பொறுப்பை நானும் நீங்களும் ஏற்றுக் கொள்ள வேண்டும்;. இதை விட்டு சமூகத்தை மட்டும் குற்றம் சாட்டுவது அபத்தமானதாகும்.

"ஆடு, புலி, புல்லுக்கட்டு" என்ற சிறுகதையை எடுப்போம். ஒரு தற்கொலை தாக்குதலை நடத்தும் ஒருவனின் மனச்சாட்சி ஊடாக கதை சொல்ல முனைகின்றார். தற்கொலையாளி எப்படி தன்னை மறைத்துக் கொண்டு மக்களுக்குள் வாழ்கின்றார், பின்னார் எப்படி அதே மக்களுக்குள் குண்டை வைக்க முனைகின்றார். இதற்குரிய வெடிமருந்துகளையும், வாகனங்களையும், முந்திய குடும்பம் மற்றும் சமூக உறவாக்கத்தை சிதைத்து எப்படி பெறுகின்றனர், என்று தெளிவாக படம்பிடித்து காட்டுகின்றார். தற்கொலை தாக்குதலை நடத்த வரும் ஒருவனின் உணர்வுகள், அவன் அதை செய்ய பழகும் மனிதர்களுடன் நடமாடும் போது ஏற்படும் மனமாற்றம், அதை மனச்சாட்சி ஊடாக விமர்சிக்கும் சமூக இணைவின் கண்ணோட்டம, இதை மீறி சமூகத்துக்கு வெளியில் இருந்து வரும் இராணுவ உத்தரவுகள் எப்படி சமூகத்துக்கு எதிராக இயங்க வைக்கின்றது என்பதை, கதை தெளிவபடவே வெளிக் கொண்டு வருகின்றது. இங்கு விமர்சனம் என்பது ஏன் அப்பாவி மக்கள் கூடும் இடங்களை தெரிவு செய்கின்றனர் என்ற குறுந்தேசிய அரசியலை கேள்விக்குள்ளாக்கவில்லை. ஏன் இராணுவ இலக்குகளை செய்வது தானே போராட்டம் என்று, படைப்பாளி ஏன் சொல்ல முற்படவில்லை. அதாவது ஒரு போராட்டத்தின் அவசியம், அது எதிரிக்கு எதிராக இருப்பதற்கு பதில் எப்படி அப்பாவி மற்றும் மற்றைய இன மக்கள் மேல் மாறிச் செல்கின்றது என்ற விடையத்தை கேட்க படைப்பு மறுக்கின்றது. மாறாக இவர் இயக்கங்கள் இழைக்கும் மக்கள் மேலான மக்கள் விரோத வன்முறை சார்ந்து, போராடுவதே பிழை என்ற கருத்தை தொங்கவிட்டுவிடுகின்றார். அதாவது ஏகாதிபத்தியம் மக்கள் விரோத தனிநபர் பயங்கரவாதத்தை காட்டி, உலக ஆக்கிரமிப்பையும் மக்களை ஒடுக்குவதை மேல் இருந்து நியப்படுத்துவது போன்று, கதை அதையே கீழ் இருந்து சொல்லப்படுகின்றது.

அடுத்து "பிசாசுகளின் வாக்குமூலம்" என்ற கதை மூலம் ஒரு இயக்கக்காரன் மரணத்தை அடைந்த பின்பு, மரணம் அடைந்தவர்கள் தமது கால இயக்க வன்முறைகளையும், அதை வளர்த்தெடுத்த வடிவங்களையும் பேசிக் கொள்ளும் வடிவில் இயக்க வன்முறைகளை பேசுகின்றது இக்கதை. எப்படி என்ன காரணத்துக்காக இனப் படுகொலைகளை ரசித்துச் செய்தோம், அதன் மூலம் எப்படி புகழையும் இயக்க தலைமைக்கு வந்தோம், தலைமைக்கு இடையிலான அதிகார போட்டியை எப்படி துரோகமாக்கி கொன்றோம், என்று பல தளத்தில் கதை நகருகின்றது. மிக தெளிவாக இதை கதையாக சொல்ல முனையும் இவர், மக்களுக்கான போராட்டத்தின் அவசியத்தை இதன் ஊடாக சொல்ல மறுக்கின்றார். இயக்கம் இழைக்கும் தவறுக்கு அந்த போராட்டமே வேண்டாம் என்கின்ற எதிர் நிலைக்குள், சதாரண மாமூல் எல்லைக்குள் கதை சொல்லும் தன்மையே, இவரின் அனைத்து கதைகளையும் வலுவிழக்கச் செய்கின்றது. ஜனநாயக எல்லைக்குள் ஏற்றுக் கொள்ளக் கூடிய இந்தக் கதைகள், அதைத் தாண்டி கடுவிமர்சனத்துக்குரியதாகின்றது. "போரின் பகைப்புலம் அறியாது போர்ப்பரணி பாடும் பாட்டுக்காரர்கள் எவரோ - அவரே ஈழம் இன்னமும் எரிந்துகொண்டிருக்க முதற்காரணி என்பேன்" என்று கூறுவதன் மூலம், இலங்கையின் இன ஒடுக்குமுறையை மறுக்கின்றார். இலங்கையில் சிங்கள இனவாத அரசின் ஒடுக்குமுறை தான் இன்னமும் ஈழம் எரியக் காரணமாக இருக்கிறது. அதை இவர் மறுக்கின்றார். அதை தமிழர் தலைப்பில் ஒரு தலைப்பட்சமாக குற்றம் சாட்டுகின்றார். ஒரு யுத்தமற்ற முதாலாளித்துவ ஜனநாயகம் உன்னதமானதா? யுத்தம் எங்கிருந்து எப்படித் தோன்றுகின்றன? சமதானம் என்பது என்ன? எந்த சமூக அமைப்பில் யுத்தமற்ற சமாதனம் நிலவும்;? இதை கேள்வியாகத்தன்னும் எழுப்பாத இலக்கியவாதி படைப்புகளை உருவாக்கும் போது அவை வலது குறைந்தனவாகிவிடுகின்றன.

இலங்கையில் யுத்தம் தொடர என்ன காரணம்? சமாதனம் எதன் வழிகளில் எப்படி தோன்றும்;? இனங்களுக்கிடையிலான அமைதி எந்த உள்ளடக்கத்தில் சாத்தியமானது? மக்களுக்கு எதிரான இயக்க வன்முறைகள் எங்கிருந்து தோன்றின? ஏன் அவை நிகழ்கின்றன? மக்களுக்கு எதிரான வன்முறையற்ற போராட்டம் சாத்தியமில்லையா? போராட்டம் எதை எப்படி சாதிக்க வேண்டும்? இது போன்று பலவற்றை படைப்பின் கரு மீது ஒரு படைப்பாளி கேட்டு தெளிவாக மக்கள் சார்ந்து விடை தெரிந்திராத வரை, அந்த படைப்புகள் குறைபாடு கொண்டே பிறக்கின்றது.

அடுத்து இந்த கதையில் ஒரு இனத்துக்கு எதிரான படுகொலைகள், தற்செயலாக சில காரண காரியங்கள் மேல் நிகழ்ந்தாக காட்டுவது தவறானவை. உதாரணமாக பாதை தெரிந்துவிடும் என்ற காரணமே, படு கொலை நடத்தத் தூண்டியது என்பது தவறானது. இது படுகொலை செய்வதை நியாயப்படுத்த முன்வைக்கும், ஒரு எடுகோள் மட்டுமே. மாறாக இனங்கள் பற்றியும், மக்கள் பற்றியும் கொண்டுள்ள கண்ணோட்டம் சார்ந்து, முன்கூட்டியே திட்டமிட்டே படு கொலைகள் நிகழ்ந்தன, நிகழ்கின்றன. இந்த உள்ளடக்கத்தை தனிமனித புகழ் மற்றும் முடிவு சார்ந்தாக, சிந்தனையாகவே இந்த கதை பேசுகின்றது. இது ஒரு படுகொலை வரலாற்றின் மேலான ஒரு திரிபாகும். அவரின் பெண்ணியம் பற்றிய கண்ணோட்டம் முதல் அவரின் சிறுகதை முழுக்க, இந்த திரிபே அரசியல் சாரமாக உள்ளது. தனிமனித நடத்தைகள் சார்ந்த விருப்பு வெறுப்பகவும், பிரதேசம் சார்ந்த முடிவாக இனப்படுகொலைகள் விளக்குவது, அதன் ஸ்தாபான ரீதியான வர்க்க அரசியல் கண்ணோட்டத்தை பூசிமொழுகுவதாக உள்ளது. தனிமனித நடத்தைகள் அந்த இயக்கத்தில் அராசியல் கண்ணோட்த்தில் இருந்தே பிறக்கின்றது என்பதை, இந்த படைப்பாளி புரிந்து கொள்ளவேயில்லை. தனிமனிதனைச் சுற்றி கதை சொல்லும் போது, தனிமனிதனின் தோற்றுவாயை தெளிவாக புரிந்த கொண்டே அதை விமர்சிக்க வேண்டும். தனிமனிதர்கள் ஒரு இயக்க போக்கில் ஒரு பாத்திரத்தை சில விருப்பு வெறுப்புக்கு எற்ப நடித்துக் காட்டுகின்றார்கள் என்பதை, தெளிவாக வேறுபடுத்தியும் காட்டவேண்டும்;.

"... அதன் இரண்டாம் பாகமும்" என்று புத்தக தலைப்பு சார்ந்த வெளியான இக்கதை, முஸ்லீம் சமூகத்துக்கு இழைக்கபட்ட கொடூமையைப்பற்றி பேசுகின்றது. அந்த கொடூமையில் ஈடுபட கோரும் ஒருவனின் ஊடாக, அவனின் எதிர்வாதமாகவும் மறுதளத்தில் இயக்க சத்தியப் பிரமானத்தினுடாக இதை செய்ய நிர்ப்பந்திக்கும் நிலையை, இந்த கதை சிறப்பாகவே வெளிக் கொண்டு வந்துள்ளது. இங்கும் யுத்தத்துக்கு எதிரான தத்துவத்தை பேசுகின்றார். "ஆயுதம் மானிடத்தை மீட்கும் என்பது முட்டாள்தனம்" "துப்பாக்கி முனையில்தான் சுபீட்சம் பிறக்கும்" என்பதை எதிர்த்து இந்த கதை தொடங்குகின்றது. இது இயங்கியலில் தன்மை மறுக்கின்றது. ஒரு பொருள் நேர் மற்றம் எதிர் தளத்தில் இயங்குகின்ற பன்மை மறுக்கின்றது. ஒரு அறிவியல் மற்றும் கண்டுபிடிப்புகள் இரண்டு தளத்தில் செயற்படுகின்றன. மனிதன் தன் உழைப்பை அடிப்படையாக கொண்டு கண்டறியும் அறிவியல், அவனுக்கு எதிராகவே பயன்படுத்தப்படும் சமூகத்தில் நாம் உள்ளோம்;. ஆகவே உழைப்பையும் அதன் அறிவியலையும் நிராகரிக்க முடியுமா? ஒரு அறிவியல் சார்ந்த பொருளை மனித இனத்துக்கு எதிரகவே கையாளும் மற்றொரு மனிதன், எப்படி? எந்த? சமூக அமைப்பில் எது சார்ந்து? ஏன் உருவாகின்றான்? இந்தக் கேள்விகளை விடுத்து மாமூல் கண்ணோட்த்தில் ஆயுதத்தை விமர்சிக்கும் போது, மனித அடிமைத்தனத்தை நியாப்படுத்திவிடுகின்றது. மனிதன் தன் மேல் போடப்பட்டுள்ள விலங்குகளை எப்படிக் களைவது? ஆயுதம் ஏந்திய ஒடுக்கமுறைகளை எதிர்த்துப் போராட வேண்டுமா? அல்லது இல்லையா? எப்படி? அதில் ஆயுதத்தின் பங்கு என்ன?  இந்த கேள்விகளை படைப்பாளி கேட்டு தெளிவு படுத்துவதற்கு பதில், அதை எதிர் நிலையில் மறுத்துவிடுகின்றார். ஏகாதிபத்தியம் உலக பயங்கரவாத்தை ஒழிக்க, உலகு எங்கும் ஆயுதங்களை களையப் போவதாக கூறுவதற்கு நிகரானது. இந்த கதையிலும் கிழக்கு இயக்காரர்கள் இந்த குற்றத்தை இழைக்கவில்லை, மாறாக யாழ்ப்பாணத்து இயக்ககாரர்கள் தான் இதைச் செய்கின்றனர் அல்லது யாழ் சென்று திரும்புபவர்களே செய்கின்றனர் என்ற வாதங்கள், யாழ் மையவாதம் மீதான எதிர்ப்பை பொருத்தமற்ற வகையில் முன்வைத்து, வன்முறை சார்ந்த அரசியல் வடிவத்தை திரித்துவிடுகின்றார். இயக்கத்தில் யாழ் மையவாதம் என்பது, அதன் அரசியல் சமூக கூறுகள் மேல் இனங்காணக் கூடியவையே. அது அரசியல் கோரிக்கையில் இருந்து சமூகத்தின் அடிப்படைக் கோரிக்கைகளை நிராகரிப்பது வரையிலான உள்ளடக்கத்தில் காணமுடியும்;. யாழ் முஸ்லீம் மக்கள் வெளியேற்றிய நிகழ்வு, கிழக்கு தலைமையால் முன் நின்ற நடத்தப்பட்டது. இதை மறுக்கும் இவர் கிழக்கு முஸ்லீம் மீதான வன்முறைகு யாழ் பிரதேசவாதம் சார்ந்து, கருத்து வைப்பது ஒருதலைபட்சமானவை.  அத்துடன் வடக்கில் இருந்த தான் இயக்கம் இங்கு வந்தது என்பது ஒரு தலைபட்சமானவை. ஒரு சமூகம் மீதான ஒடுக்குமுறையை மறுத்து ஒரு பிரதேசம் சார்ந்து கற்பனையில் திணிக்கப்பட்டதாக காட்டுவது ஒரு திரிபாகும். ஒரு பிரேதேசம் முன்னேறிய விழிப்புணர்ச்சியை பெறலாம்;. ஆனால் அதை மற்றைய சமூகத்துக்கு, பிரதேசத்தக்கு யாரும் திணிக்க முடியாது. வன்முறையை ஒரு பிரதேசம் சார்ந்த மொழியாக நடத்தையாக வருணிப்பது, சொந்த பிரதேசத்தின் வன்முறையையும் அதன் மொழியையும் மறப்பதாகும்;. இவர் வன்முறையையும், அதன் கொடூரங்களையும் யாழ் பிரதேசவாதத்தில் இருந்தே உருவாகுவதாக கூறி, வன்முறையின் உள்ளடக்கத்தை திரித்து புரட்டுகின்றார். அனைத்தையும் அதன் அரசியலில், அதன் வர்க்க முரணில் கண்டுபிடிக்க தவறுகின்ற போக்கு, இலக்கியத்தின் தனிமனித வாத சுயட்சையைக் கொண்டே அவதாரிக்கின்றது.

பெண்கள் பற்றிய சக்கரவர்த்தியின் பார்வை அவரின் படைப்புளின் மீதான விமர்சனத்தை தெளிவாக்க மேலும் உதவுகின்றது. ஒரு படைப்பாளி சமூகம் மேலான அனைத்து ஒடுக்குமுறையையும் முரணற்ற வகையில் புரிந்த கொள்ள வேண்டும்;. இதற்கு முரணற்ற தத்துவத்தை ஆதாரமாக கொள்ள வேண்டும்;. இங்கு ஒன்றில் முற்போக்கு என்பதும் மற்றதில் பிற்போக்கு என்பது சில நியாப்படுத்தலுக்கு உதவலாம.;; ஆனால் அந்த முற்போக்கிலும் எங்கோ ஒரு குறைபாடு ஒளித்திருப்தை, ஒரு முரணற்ற தத்துவார்த்ததால் தெளிவாக கண்டு கொள்ள முடியும். இது தான் சக்ரவர்த்தியின் யுத்தின் இரண்டாம் பாகம் என்ற நூலின், இரண்டு பிரதான அடிப்படை உள்ளடக்கத்திலும் பிரதிபலிக்க தவறவில்லை. பெண்கள் பற்றி கண்ணதாசனின் கொச்சை வடிவிலான தத்துவ விரச எழுத்துப் போன்று, சக்கரவர்த்தியும் பெண்கள் பற்றிய கொச்சை தத்துவத்தை முன்வைக்கின்றார்.

இவர்; பெண்கள் பற்றி கூறுவதைப் பார்ப்போம். "நம்ம தமிழிச்சிகளுக்கு ஆண் என்றால் எப்படித் தெரியுமா இருக்க வேண்டும் என்று நினைக்கின்றார்கள்... கூந்தலை சுற்றி தலையை சுவரில் மோதவைக்க வேண்டும். எதிர்த்தால் பிடறி வீங்க விளாச வேண்டும். தூசன வார்த்தை பேச வேண்டும். வீதியில் போகும் போது இடையையோ மார்பையோ தீண்ட வேண்டும்." என்று இவர் குறிப்பிடுகின்றார். பாரிசில் வேறு சில பாலியல் வக்கிரம் பிடித்த மனநோயாளர்கள் பெண் பற்றி கூறும் போது இதே பாணியில், பெண்கள் மார்பை இந்தா பிடி இந்தா பிடி என்று சொல்லி நடப்பதாகவும், மூன்று ஆண்களுடன் ஒரே நேரத்தில் உறவு கொள்ள பெண் விரும்புவதாகவும் கூறுகின்றனர். இப்படிப் பல. ஆனால் அனைத்தும் இலக்கியமாக இலக்கிய சுதந்திரத்தில் குளிர்காய்கின்றது. ஒரு பெண் தனது மார்பை அல்லது இடையை உரசி நடக்க விரும்புகின்றாள் என்பது, எவ்வளவு கேவலமான பெண் பற்றிய ஆணாதிக்க விளக்கமும் பார்வையாகும். இது ஆணின்  எண்ணமாக இருக்க, அதை பெண்ணுக்கு மகுடம் சூட்டுவது ஆணாதிக்கத்தின் பண்பாகும்;. வன்முறையைச் செய்யும் ஆணை பெண் விரும்புகின்றாள் என்பது, பெண் ஒரு உயிரியல் தொகுதி என்பதையே ஆணாதிக்கம் மறுக்கின்ற உள்ளடக்கத்தை அடைப்படையாகவும் ஆதாரமாகவும் கொண்டது. ஒரு பெண் அடிமையாகவும், இத்தகைய துன்ப துயரங்களை சகித்த படி இந்த வாழ்க்கையை தேர்ந்த எடுக்கின்றாள் எனின், அது தனிப்பட்ட ஒரு பெண்ணின் குற்றமல்ல. மாறாக ஆணாதிக்க சமூக அமைப்பின் ஒரு அடக்குமுறை வடிவமாக பெண் மேல் திணிக்கப்டுகின்றது. இது அனைத்து வன்முறைகள் போன்றதே. சாதரணமாக பெண்கள் மேல் உரசி நடத்தல், நிற்றல் போன்ற ஆணாதிக்க சமூக வன்முறை நிகழும் போது, பெண்ணை அப்படி செய்வதாக தூற்றுவதும் ஒடுங்கி நடக்க நிற்;க கோரும் அடக்குமுறையில் இருந்தே பெண் பற்றிய கொச்சை இலக்கியம் பிறக்கின்றது.

குடும்பத்தில் ஆணும் பெண்ணும் வீதிகளில் நடக்கும் போது, ஆணுக்கு பின்பாக பெண்; பத்தடி வித்தியசத்தில் நடக்கும் பராம்பரியம் எமது சமூகத்தில் காணப்படுகின்றது. இது மூன்றாம் உலக நாடுகளுக்கே பொதுவானது. நிலப்பிரபுத்துவ பெண் அடிமைத்தனத்தை அடிப்படையாக கொண்ட பெண்ணின் பின்தாங்கிய நிலைக்கு, ஆணாதிக்க கண்ணோட்டம் தெளிவாக ஆணுக்கும் பெண்ணுக்கும் போதிக்கின்றது. இந்த வரலாற்று போக்கில் பெண் ஆணுடன் சமத்துவமாக அருகில் நடக்க விருபும் ஒரு முயற்சியை, ஏகாதிபத்திய கண்ணோட்டத்தில் சிந்திக்கும் நிலப்பிரபுத்துவ ஆண், பெண் தனது இடுப்பையும், மார்பையும் உரசி நடக்க விரும்புவதாக கூறுவது இங்கு நிகழ்கின்றது. இங்கு இந்த விடயத்தில் ஏகாதிபத்திய ஆணாதிக்கம் உரசி நடப்பதை கோருகின்றது. நிலப்பிரபுத்துவ ஆணாதிக்கம் உரசி நடப்பதாகவும் கொச்சைப்படுத்தவது நிகழ்கின்றது. பெண் அருகில் சமத்துவமாக நடக்க விரும்பும் விருப்பம், இயல்பானது இயற்கையானது. அதை மறுக்கும் ஆணாதிக்கம் இதற்கு கொடுக்கும் விளக்கம் தான் உரசி நடக்க விரும்பவதாக கூறி கொச்சைப்டுத்துவதாகும்;.

"நானும் ஒகஸ்டீனாவும் ஒரு பந்தயக்குதிரையும்" என்ற சிறு கதை, படைப்பாளியின் ஆணாதிக்க சமூக கண்ணோட்டத்தை வெளிப்படுத்துகின்றார். ஏகாதிபத்திய கொலிவூட் ஆணாதிக்க சினிமா உள்ளடக்கத்தை இவர் மீளவும் முன்வைக்கின்றார். மிக குறைந்த வயதுடைய ஒரு பணக்கார அழகிய செல்லப் பெண் மீது ஆசை கொள்கின்றான். (உண்மையில் அவள் அழகிய அகதிப் பெண்ணாக இருப்பதும், அவனின் வயது முதிர்ந்த முதலாளி தனது பாலியல் தேவைக்கு வைப்பாட்டியாக பயன்படுத்துவதும் பின்னால்தான் அறிகின்றான்.) இந்நிலையில் அவன் வீட்டில் கூலி வேலை செய்தவன், அந்த பெண்ணுடன் இரகசியமாக உறவு கொள்கின்றான்;. இதைச் சுற்றியே நகரும் கதை. இங்கு பெண்ணின் அழகு, கவர்ச்சி, அதிகாரம், அந்தஸ்த்து, வெள்ளை நிறம் சார்ந்து அவளை அனுபவிக்க துடிக்கும் மனநிலை, பின்னால் அதை நியாயப்படுத்த பெண்ணின் துயரம் பற்றி பேசி உடல் உறவை கொள்கின்றான்;. ".. கறுப்பன். நான் கனவு காணலாம். ஒரு வெள்ளைக்காறிய நினச்சு, அதுவும் இந்தப் பெரிய பண்ணைக்கும் முப்பத்தேழு குதிரைக்கும் சொந்தக்காரியை..." இங்கு அந்த பெண்ணுடன் ஆன உறவை எங்கிருந்து தொடங்குகின்றார். "முக்கால் தொடை தெரியிற மாதிரி காச்சட்டை போட்டிருந்தாள். அதக் கூட மேல்பக்கமா சுருட்டி விட்டிருந்தாள். உள்ளுக்கு கறுப்பு ~பிறா| போட்டிருக்காள் போல... வெள்ளை வெனியனுக்கு மேலால லேசா தெரிந்து. எனக்கு சங்கடமாயும் இருந்திச்சு. சந்தோசமாயும் இருந்திச்சு" இதற்கு பின்தான் அவளின் வைப்பாட்டி வாழ்க்கை தெரியவருகின்றது. இங்கு தமிழ் கலாச்சார ஆணாதிக்கம் சார்ந்து அவளின் உடுப்பு சங்கடமாகின்றது. அது ஏகாதிபத்திய ஆணாதிக்க கலச்சாரமாக மாறும் போது சந்தோசமாக வெளிப்படுகின்றது. ஒரு பெண்ணின் நடை உடை முதல் அவளின் உயிருள்ள அம்சங்கள் மேலான உயிருள்ள நடத்தைகளை எல்லாம், மூலதனம் தனது வர்த்தக விளம்பர எல்லைக்குள் தீர்மானிக்கின்றது. இந்த விளம்பரம் எல்லாம் உலகமயமாதல் என்ற ஆணாதிக்க எல்லைக்குள் நின்று, பெண் பற்றிய ஆணின் ரசனைக்குள் கட்டமைக்கப்படுகின்றது. ஒரு பெண்ணை அவன் பார்க்கும் பார்வை, நிறம் சார்ந்த பாலியல் வக்கிரம் இந்த கதையில் வெளிப்படுகின்றது. இங்கு அவன் அல்ல, ஆணாதிக்க சமூகமே அப்படியே தான் பார்க்கின்றது. இது கொலிவூட் வகைப்பட்ட சமூக யதார்த்தமாகும்;. இங்கு அதை நியாப்படுத்தவே பெண்ணின் துயரம் பற்றி அதே வடிவில் புகுத்தப்படுகின்றது. இந்த துயரம் சார்ந்தே ".. காப்பத்த வேணும் எண்டு என்ர மனசில எண்ணம் வரத் தொடங்கியது"  ஒரு தமிழனாக "பரிவான புள்ள இவள்" என்று சிந்தனை, நிலப்பிரபுத்துவ அடிமைத்தனத்தை மரபை சார்ந்து வெளிப்படுத்துகிறார். அதைத் தொடர்ந்தே பாலியல் ரீதியாக உறவை கொள்கின்றார். கொலிவூட் கதாநாயகர்கள் எல்லாம் சினிமாவில் இப்படித் தான் உறவு கொள்பவர்கள்;. அந்த பெண்ணின் அசைவுகளை தமிழ் சினிமா மற்றும் கொலிவூட் வகையில் சித்தரிக்கவும் தவறவில்லை. கள்ள உறவை அவன் தெரிந்து கொண்ட போது, "..இதெல்லாம் சகஐம் தானே எண்டு லேசா எடுத்துக் கொள்வானா? டானியல் வெள்ளக்காறன் தானே"  என்று கூறுவதன் மூலம், ஐரோப்பிய சமூகத்தையே கொச்சைப்படுத்துகின்றார். ஐரோப்பிய பெண்களை புரிந்து கொண்ட விதம் ஆபாசமானது. இப்படி இந்த சிறுகதை தனது வெட்டு முகத்தை காட்டும் போது மற்றைய கதைகளை கேள்விக்குள்ளாக்கின்றது.

"ரூபம்" என்ற சிறுகதை தத்துவம் தொடர்பாக தொடங்கி ஏகாதிபத்திய பாலியல் நுகர்வை நியாப்படுத்துவதில் முடிகின்றது. "வெறும் மயக்கங்கள் மாத்திரம் உள்ள மாமூல் வாழ்க்கையில் மாற்றம் தேவை...

நிஜம் தேவை...." என்று குறிப்பிடும் இவர், அதை தமிழ் பண்பாடு கடந்து ஏகாதிபத்திய பண்பாட்டு கலாச்சாரத்துக்குள்ளேயே நிஜத்தைத் தேடுகின்றார். தமிழ் நிலப்பிரபுத்துவ மதவாத பெண் அடிமைத்தனத்தை கேள்விக்குள்ளாக்கும் இவர், அதற்கு பதிலாக ஏகாதிபத்திய நுகர்வை முன் தாள்ளுகின்றார். "அப்படி எண்டால் உண்மைதான் தத்துவமா?" "ஏறக்குறைய... ஆனால் உண்மைய விட உண்மை" என்கின்றார். அந்த உண்மை என்ன. உண்மை என்பது இருக்கின்ற வேறுபட்ட சமூக பண்பாட்டு கலாச்சாரக் குறைகள் அல்ல. இருக்கின்ற சமூக பண்பாட்டு கலாச்சார கூறுகள் ஏன், எப்படி, எங்கிருந்து, எதற்காக உருவாகி வளர்கின்றது என்ற கேள்வி மீதான உண்மையே, அனைத்தையும் விட அடிப்படையானது. இதை இந்த சிறுகதை தொகுப்பு முற்றாக மறுக்கின்றது. மாறாக ஏகாதிபத்திய போலி ஜனநாயகம், கட்டற்ற  பாலியல் சுதந்திரம் மீது காதல் கொள்கின்றார். அதையே சிறு கதை பிரதிபலிக்கின்றது. இயக்க வன்முறையில் கூட இந்த சுதந்திரம், ஜனநாயகம் என்ற எல்லைக்கள் நின்றே படைப்பு பேசுகின்றது. இது சில வரையறைக்குள் மட்டும் முற்போக்காக உள்ளது.

தொடர்ந்து இந்தச் சிறுகதையில் "ஒரு நாள் அதுவும் ரெண்டோ மூணு மணித்தியாலமோ தான் கதைக்க ஒருத்திக்காக இன்னொருத்தி தன் புருஷனை பங்கு போட ஓம் எண்டு சொல்றது.... சே... ஏற்றுக் கொள்ள முடியாது... எவ்வளவு அசிங்கமாக இருக்கு" என்று பெண் சொல்ல, படைப்பாளி "நாறிப் போன மீனைப் பார்ப்பதுபோல் அவள் முகம் அஷ்ட கோணலாய் நெளிந்தது. இது தமிழ் பெண்களுக்கு மாத்திரமே உரிய அருவருப்பு நெளிப்பு. மற்றவர்களும் நெளிகின்றார்களே என்று தானும் நெளிக்கிற பம்மாத்து நெளிப்பு. நெளிக்காது போனால் தூரத்தில் வீசப்படுவோமோ என்கின்ற பயத்தில் எல்லாப் பெண்களும் போலியாகவே போனார்கள்" என்று எழுதும் சக்கரவர்த்தி, தனது உண்மை இது என்கின்றார். இது மாமூல் கடந்த விளக்கம் என்கின்றார். ஒரு பெண் பற்றி இவரின் பார்வை இப்படிபட்டதே. ஒரு எழுத்தளான் தனது இலக்கியம் மீதான நேர்மை போன்றே, பெண்ணின் உடல் மேலான உரிமையும். ஒரு சில மணித்தியாளத்தில்; இன்னுமொருவனுடன் உறவு கொள்கின்றாள் என்பது, படைப்பாளியான ஆணின் கற்பனை. இது கொலிவுட் இரண்டு மணி சினிமாவில் மட்டும் நடப்பவை. அல்லது பாலியல் வக்கிர இசையும் மதுவும் இணைந்த போதையில் நடப்பவை. அல்லது பாலியல் நுகர்வின் விளம்பர மோகத்தில் உந்தப்பட்டு சுய அறிவிழந்து நடப்பவை. இவை எல்லாம் விதிவிலக்குகள். சுய அறிவுள்ள எந்த பெண்ணும் இப்படிச் செய்வதில்லை. தமிழன் எப்போதும் ஐரோப்பிய சமூகத்தின் விதிவிலக்கை தூக்கிபிடித்தே, தூற்றுவதும் போற்றுவதும் நிகழ்கின்றது.

"முதிர்க்கன்னி" என்ற கதை ஒரு பெண் சீதனம் இன்றி திருமணம் செய்யாது வாழும் வாழ்க்கை பற்றி பேசுகின்றது. இந்த கதையில் அந்த பெண் மீதான ஒன்றுக்கு மேற்பட்ட பாலியல் பலாத்காரத்தை, பாலியல் சுகம் சார்ந்து ரசிப்பதாக அல்லது மறைமுகமாக இணங்கிப்போகும் வடிவில் கதை சொல்லி பெண்ணை இழிவாக்கின்றது. அவளுக்கு படிப்பித்தவன் அத்து மீறி உடலில் கைவைத்தது, இந்திய இராணுவம் கற்பழித்தது, மேற்கு நாடுகளுக்கு ஆள் கடத்துபவன் அவளை கற்பழித்தது, விக்கிரமித்தன் அவளை கற்பழிக்க தூக்கிச் செல்வது ஈறாக நடக்கும் வன்முறை மற்றும் பலாத்காரத்தை, பெண் ஏற்று இணங்கி போவதாக கதை சொல்வது, பெண்ணின் இயங்கியல் எதிர்ப்பை கொச்சைப்படுத்தி அவள் அப்படித்தான் என்று ஒரு ஆணாதிக்கவாதியாக கதை சொல்லுகின்றார்.

மற்றொரு கதையில் "எவனோ இளநீரைக் குடிக்க அப்புறம் நான் கோம்பை சுமக்க வேண்டி வந்துவிடும்..." என்ற கூற்று தந்தை வழி சமூகத்தின் வாரிசு நோக்கத்தை அடிப்படையாக கொண்டது. அந்த அடிப்படையில் நின்றே சக்கரவர்த்தி பெண்ணின் தாய்மையை எதிர்க்கின்றார். குழந்தை தனது சொந்த விந்து சார்ந்தாக, பெண்ணின் கற்பின் மீது சொந்த உரிமை சார்ந்தாக இருக்க வேண்டும் என்ற, ஆணாதிக்க சமூகத் தொடர்ச்சியை பிரதிபலித்தபடியே பெண்ணின் கற்பொழுக்கத்தை இதன் அடிப்படையில் முன்வைக்கின்றார். இங்கு அவர் கற்பை பெண்ணிடம் கோருகின்றார். குழந்தையின் தந்தை வழியுரிமை மட்டுமே ஏற்றுக் கொள்ள முடியும் என்பதையே, பிரகடனம் செய்கின்றார். இங்கு தாய் வழி உரிமையை கொச்சைப்படுத்துகின்றார். இங்கு பெண்ணின் நடத்தை தொடர்ப்பான விவாதம் இரண்டாம் பட்சமாகவே உள்ளது. இங்கு ஆணின் நடத்தை தொடர்பான பிரச்சனையே முதன்மையானது. இங்கு பெண் பேசவில்லை. ஆண்தான் பெண்ணாக பேசி, ஆணின் ஆணாதிக்க சுகத்தை நியாப்படுத்துகின்றார்.

"பலமான ஆணிண் குறுக்கிடல் இல்லாத வரைக்கும் எல்லா பெண்ணும் இடுப்புக்கு கீழே சுத்தமாகத்தான் இருக்க முடியும்;. பத்தினியாகவும் கற்புடனும் பத்திரமாகவும் இருக்க முடியும்தான்." என்ற பெண் பற்றிய கொச்சைப் பார்வை ஆணாதிக்கத்தின் திமிராகும். கற்பை பெண்ணின் இடுப்புக்கு கீழ் மட்டும் காணும் இந்த ஆணாதிக்க சமூகத்தைப்பற்றி விமர்சித்தபடி, இவரும் அதையே செய்வதுதான் வேடிக்கை. ஒரு ஆணுடன் பெண் உறவு கொள்வது என்ற எல்லைக்குள் அவளின் பத்தினித்தனம் மற்றம் கற்பு எல்லாம் முடிவடைகின்றது என்ற விளக்கவுரை, ஆணாதிக்க வரையறைக்கு உட்பட்டது. இது பற்றி விபரமாக புரிந்து கொள்ள எனது பெண்ணிய நூலைப் பார்க்கவும்.

"அவுத்துப் போடாத வரைக்கும் தான் பொம்பள சுவாரஸ்யம், ஆச்சரியம் எல்லாம். அவுத்துட்டா அப்பறம் ஒரு மண்ணும் கிடையாது" என்று யாரோ ஒரு பன்றியின் பெயரில் சொல்லியே, அதை அங்கீகரிக்கின்றார். ஆணாதிக்க ஆண்கள் பெண் பற்றி புரிந்து கொண்ட எல்லைக்குள் தத்துவம் பேசுகின்றார். ஆண் பற்றிய பெண்ணின் ஆர்வம் எதனுடன் முடிகின்றது. ஒரு பெண்ணை அவுத்துப் போட வைப்பதை தனிப்பட்ட ஆண் முதல் உலகமயமாதல் மூலதனம் வரை தீவிரமாக கோரும் போது, அதையே இந்த சிறுகதை ஊடாக சக்கரவர்த்தியும் கோருகின்றார். பின்பு அவளை சலித்துப் போன தனிமனித நுகர்வு எல்லைக்குள் இழிவுபடுத்துவது நிகழ்கின்றது. தனிச் சொத்துரிமை சார்ந்து அதுவே நுகர்வு வெறியாக பண்பாடாக மாறிய பின்பு, ஆணின் அடிமையான பெண்ணை நுகர்வு எல்லைக்குள் ரசிக்கவும் தூக்கியெறியவும் முடிகின்றது. இந்த நுகர்வை அவுத்துப் போடக் கோரும் ஆணாதிக்க நுகர்வு எல்லைக்குள் தான், பெண்ணைப் பற்றிய மதிப்பீட்டை கொடுக்கின்றார்.

"... வெள்ளைக்காரிச்சிகள் யோக்கியம்! நம்மவளுகள் ஒழுங்காக அனுபவித்ததும் இல்லை." என்று கூறுவதன் மூலம், வெள்ளையினப் பெண்கள் பாலியலை அனுபவிப்பதாகவும், தமிழ்ப் பெண்கள் பாலியலை அனுபவிக்கவில்லை என்கின்றார். அதாவது நிலப்பிரபுத்துவ கட்டப்பாடு கொண்ட பாலியலையும், ஏகாதிபத்திய நுகர்வை அடிப்படையாக கொண்ட விபச்சார பாலியலையும் எதிர் எதிரே நிறுத்தி, தமிழனாக ஏகாதிபத்திய பண்பாட்டுக்குள் விபச்சார பாலியலை அனுபவிக்க கோருகின்றார். அதாவது ஏகாதிபத்திய நிலப்பிரபுத்துவ சமூக முரண்பாட்டுக்குள் சிக்கி தவிக்கும் ஒரு அழுமூஞ்சியாக, இரண்டு தளத்துக்குள்ளும் அலை பாய்ந்தபடி புலம்பவது நிகழ்கின்றது. ஒரு வெள்ளையின பெண் அனுபவிக்கும் துயரத்தையிட்டு எதையும் தெரிந்து கொள்ள முடியாத ஏகாதிபத்திய ஆணாதிக்க நாயகனாக நின்று, நிலப்பிரபுத்துவ பெண்ணை அவளின் அடிமை வாழ்வின் மேல் கொச்சைப்படுத்தும் வக்கிரம் நிகழ்கின்றது. உண்மையில் தமிழ் பெண்களை விபச்சார எல்லைக்குள் ஆணாதிக்க தமிழர்கள் அனுபவிக்க துடிக்கும் ஆவல், கோட்பாட்ட ரீதியாக பெண்ணை விபாச்சரியாக்க கோருகின்றார். அதுவே இவர் உருவாக்கிய காத பத்திரங்களான பெண்கள் செய்யத் தொடங்குகின்றனர்.

"இருட்டில் யாரோ ஒருவனுடன் சல்லாபித்து விட்டு, பகலில் எவனோ ஒருவனுக்கு மனைவியாவதுதானா தமிழியல்?" என்ற இவரின் மற்றொரு முரண்பட்ட மதிப்பீடு, ஒரு சமுதாயம் பற்றி இழிவு செய்கின்ற பார்வையாகும்;. பெண்கள் பற்றிய கொச்சைத் தனமான, அவளின் சுயநிர்ணயம் மீது  காறி உமிழ்கின்ற இந்த இலக்கியம், ஏகாதிபத்திய விபச்சார நுகர்வு எல்லைக்குள் பெண்ணை வரக் கோருவதாகும்;. பெண்களை விரும்பியபடி எந்த நேரமும் யாருடனும் உறவு கொள்ளக் கோரும் கண்ணோட்டத்தை திணிக்கவே, பெண் இரட்டை தளத்தில் சுயமிளந்து இரகசியமாக வாழ்வதாக பறை சாற்றுகின்றார். ஒரு ஆணாதிக்க அமைப்பில் பெண்ணின் நிலை என்பது ஆணின் வருணைக்குட்பட்ட எல்லைக்குள் தான், அவளின் நடத்தைகள் தீர்மானிக்கப்படுகின்றன. இங்கு அவளின் சுயம் கூட கொச்சைப்படுத்தப்படுகின்றது. ஆண் ஒரு பெண்ணைப்பற்றி எதை நினைக்கின்றானோ, அதுவே பெண்ணின் இயல்பாக இலக்கியம் ஊடாக முத்திரை குத்தப்படுகின்றது. ஒவ்வொரு ஆணும் பெண்பற்றிய தனது அபிப்பிராயத்தை கொண்டே, ஒவ்வொரு பெண்ணின் அடிமைவாழ்வும் அதன் எல்லைக்குள் வரையறுக்கப்படுகின்றது. இதில் இருந்து கொண்டு மொத்த பெண்களை அடிப்படையாக கொண்ட சமூகத்தை பற்றி, கொச்சையான சிந்தனையையும் கண்ணோட்டத்தையும் பொதுமைப்படுத்துகின்றனர்.

இவர் மேலும் பெண்ணைப்பற்றி குறிப்பிடும் போது "முதலாவது கை எடுத்துக் கும்பிட எண்ணம் வரும். ரெண்டாவது உடனேயே சாய்ச்சிட எண்ணம் வரும்!" என்று பெண்ணை இரண்டாக வகுத்து தனது ஆணாதிக்கத்தை வெளிப்படுத்துகின்றார். பெண்ணை கையெடுத்துக் கும்பிடக் கோரும் எல்லை என்பது ஆணாதிக்க அடிமைத்தனத்தில் அடங்கிவாழும் பெண்ணை அதன் அடிமைத்தனத்தை மெச்சி பெண்மையின் மேல் வழிபடுவதாகும்;. இரண்டாவது அடங்கி நடக்க மறுக்கும் பெண்ணை, அவளுடன் படுத்து விட நினைக்கும் ஆணாதிக்க வக்கிரத்தை வெளிப்படுத்தி நிற்கின்றது. இவ்விரண்டும் உள்ளடக்கத்தில் ஒன்றுதான். அதாவது இந்த இரண்டு பெண்ணையும் அவர் ஏகாதிபத்திய, நிலப்பிரபுத்துவ எல்லைக்குள் நின்றே வரையறுக்கின்றார். அத்துடன் படுத்துவிட நினைக்கும் பெண்ணை இவர் குறிப்பிட்டது போல், அவித்துவிடும் வரைக்கும் தான் ஏகாதிபத்திய ஆணின் வக்கிர நோக்கமும் மதிப்பீடுகளும் அமைகின்றன. ஆணாதிக்க சமுதாயத்தில் நுகர்வின் பண்பாடு, பெண்ணையும் கூட நுகர்வின் எல்லைக்குள் இருக்கவும், இருப்பதாகவும் கூறி கோருகின்றது. பொருட்களைப் போல் பெண்ணையும் கைகூப்பி கூம்பிடும் ஒரு பதுமையாகவும், மறுதளத்தில் நுகர்வாகவும் அக்கம் பக்கமாகவும் செயற்படுகின்றது. இது வாழ்வின் நுகர்வு நெறியில் தெளிவாக எல்லா துறையிலும் காணமுடியும்;.

ஒரு பெண் தனது வாழ்வில் அத்து மீறி வாழ்கின்ற போது "கோழைகளின் திருட்டு மீறல்தான் நம் தமிழ்ச்சிகளிடம்..." என்கின்றார். இது பெண்களின் குணமா? இல்லை. அத்துடன் இது தமிழ் பெண்களின் குணமா? இல்லை. ஆண் பெண் வேறுபாடு இன்றி, நிற வேறுபாடு இன்றி சமுதாயத்தில் பண்பாட்ட கலாச்சார மற்றும் சட்டங்கள் என அனைத்தையும், திருட்டுத்தனமாக மீறுவது வாழ்வின் யதார்த்தில் உள்ளது. இதை கோழைத்தனம் என்று கூறுவது முழுமையற்றது. மாறாக அதை திருட்டுத்தனமாக ஏன் மீறுகின்றனர். இந்த சமுதாயத்தின் அடக்குமுறைகள் சுரண்டலாகவும், ஆணாதிக்கமாகவும், சாதி ஒடுக்கமுறையாகவும் என சமுதாயத்தில் புரையோடியுள்ள பலவேறு ஒடுக்குமுறையால் திருட்டு மீறல்கள் நிகழ்கின்றன. இதுவே சமுதாய மாற்றமாக நிகழ்கின்ற போது, அந்த திருட்டாக இருப்பதில்லை. தனிமனித செய்கின்ற போது, அங்கு திருட்டுத்தனம் உள்ளடக்கமாக இயல்பாக உள்ளது. இதை தமிழ் பெண்களின் பாலியல் மேல் கொச்சைப்படுத்தி காட்டுவது, தமிழ் ஆண்களின் திருட்டுத்தனத்தையும் கோழைத் தனத்தையும் ஆணாதிக்க மூகமுடியின் கீழ் மூடிமறைப்தாகும்.


பி.இரயாகரன் - சமர்