எமது தற்பாதுகாப்புக்கு ஆயுதம் வழங்கிய சிறீ சபாரத்தினம்
இந்திய அரசின் அழுத்தம் காரணமாகவும், இந்திய மத்தியத்துவத்துடனும் இலங்கை அரசுக்கும் ஈழவிடுதலை போராட்ட இயக்கங்களுக்குமிடையில் பூட்டான் தலைநகர் திம்புவில் பேச்சுவார்த்தை ஆரம்பமாவதற்கு முன்னராக இலங்கை அரசு போர்நிறுத்தத்தை அறிவித்திருந்தது. ஜே.ஆர் ஜெயவர்த்தனா தலைமையிலான இலங்கை அரசினால் தமிழ் மற்றும் முஸ்லீம் மக்கள் மீதான பிரகடனப்படுத்தப்படாத ஒரு யுத்தத்தை முகம் கொடுத்து வந்த வடக்கு கிழக்கு மக்கள், அரசின் யுத்தநிறுத்தமும் இந்திய மத்தியத்துடனான திம்புப் பேச்சுவார்த்தையும் இனப்பிரச்சினைக்கொரு நிரந்தரத் தீர்வையும் சமாதானத்தையும் கொண்டுவரும் என எதிர்பார்த்தவர்களாகக் காணப்பட்டனர். 1983ம் ஆண்டு ஜூலை இனக்கலவரங்களுக்குப் பின்னான இந்திய அரசின் இலங்கையின் இனப்பிரச்சனை குறித்த "அக்கறை"யும் "ஆதரவும்", இந்தியாவில் ஈழவிடுதலைப் போராட்ட இயக்கங்களுக்கு வழங்கப்பட்ட இராணுவப் பயிற்சியுடன் ஆயுதங்கள் வழங்கியமையும், ஈழவிடுதலைப் போராட்ட இயக்கங்களுக்கு தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் பகிரங்கமாகவே ஆதரவு வழங்கியமையும் தமிழ்மக்கள் மத்தியில் இந்திய மத்தியத்துவதுடனான பேச்சுவார்த்தை மீது நம்பிக்கை கொள்வதற்கு காரணமாய் அமைந்திருந்தது.
போர்நிறுத்தத்தின் போதே வெளிநாடுகளிலிருந்து போர்த்தளவாடங்களை கொள்வனவு செய்து கொண்டிருந்த ஜே.ஆர் ஜெயவர்த்தனா அரசின் போர்நிறுத்தத்தையும் திம்பு பேச்சுவார்த்தையையும் இரண்டாவது "தீப்பொறி" இதழ் வெளிக்கொணர்ந்திருந்தது. அத்துடன் "சமூகச் சீரழிவுகளை "சக்தி" நியாயப்படுத்துகின்றதா?" என்ற தலைப்பிலும் அத் தீப்பொறி இதழில் ஒரு கட்டுரையை வெளியிட்டிருந்தோம். இக்கட்டுரை காந்தனால்(ரகுமான் ஜான்) எழுதப்பட்டிருந்த போதும், இக்கட்டுரையை வெளியிட்டிருந்ததன் மூலம் எம்முடன் தோழமை கொண்டிருந்த தமிழீழ தேசிய விடுதலை முன்னணியினரிடமிருந்து (NLFT) நாம் விமர்சனங்களை முகம் கொடுக்க வேண்டியவர்களாக இருந்தோம்.
தமிழீழ தேசிய விடுதலை முன்னணியினரால் (NLFT) வெளியிடப்பட்ட "சக்தி" என்ற சஞ்சிகையில் வெளிவந்திருந்த பெண்விடுதலை குறித்த கட்டுரையொன்றின் மீதான விமர்சனமாகவே "சமூகச் சீரழிவுகளை "சக்தி" நியாயப்படுத்துகின்றதா? " என்ற கட்டுரை எம்மால் தீப்பொறி இதழில் வெளியிடப்பட்டிருந்ததால் தமிழீழ தேசிய விடுதலை முன்னணியுடன் (NLFT) "தீப்பொறி"க் குழு உருவாக்கத்தின் ஆரம்பகாலங்களிலிருந்து தோழமையுடன் செயற்பட்ட நாம், எமது விமர்சனங்களை பகிரங்கமாக பத்திரிகையில் வெளியிட முன்பு தம்முடன் விமர்சனங்களை முன்வைத்து பேசியிருக்கமுடியும் என்ற கருத்தை தமிழீழ தேசிய விடுதலை முன்னணியினர் (NLFT) முன்வைத்திருந்தனர்.
தமிழீழ தேசிய விடுதலை முன்னணியினரால் (NLFT) எம்மீது முன்வைக்கப்பட்டிருந்த விமர்சனம் மிகவும் சரியானதொன்றாகவே இருந்தது. தமிழீழ தேசிய விடுதலை முன்னணி (NLFT) ஒரு தோழமை அமைப்பு என்பதால் இத்தகைய அவர்களின் எதிர்பார்ப்பு நியாயத்தன்மை வாய்ந்ததுமாகும். ஏனெனில் புளொடடிலிருந்து வெளியேறியிருந்த நாம் எம்மை இடதுசாரி அரசியலுடன் வெளிப்படையாகவே இனம்காட்டியிருந்தோம். இந்தியாவில் புளொட்டிலிருந்து வெளியேறிய அனைவரும் பாதுகாப்பாகத் தங்குவதற்கான இடங்களை சந்ததியார் தமிழீழ தேசிய விடுதலை முன்னணி (NLFT) யினருடன் செயற்பட்டுக் கொண்டிருந்த ஜயர் (கணேசன்) மூலமாகவே மேற்கொண்டிருந்தார். தமிழீழ தேசிய விடுதலை முன்னணி (NLFT) அமைப்புரீதியாக இந்தியாவில் புளொட்டிலிருந்து வெளியேறிய எம்மவர்களுக்கு உதவி புரிந்ததுடன், அவர்களது பாதுகாப்பு, தங்குமிட வசதிகள், பாதுகாப்புக்கான ஆயுதங்கள், எமது அமைப்பின் செயற்பாடுகளை முன்கொண்டு செல்வதற்கும் "புதியதோர் உலகம்" நாவல், "தீப்பொறி" பத்திரிகை போன்றவற்றை அச்சிட்டு வெளிக்கொணர்வதற்கும் நிதியுதவியை செய்திருந்ததோடு, தளத்தில் புளொட்டிலிருந்து வெளியேறிய எமக்கு பாதுகாப்புக்கென கைக்குண்டுகளையும் தந்துதவியிருந்தனர்.
புளொட்டிலிருந்து நாம் வெளியேறும் போதும் அதற்குப் பின்பும் கூட தம்மை முற்போக்கு அணியினர், புரட்சிகர அமைப்பினர் எனக் கூறிக்கொண்டு சொல்லளவில் மட்டுமே முற்போக்காளர்களாக தம்மை இனங்காட்டிக் கொண்ட பலர் எமக்கு உதவி செய்ய முன்வராது தயக்கம் காட்டியபோது, அல்லது உதவி செய்ய விரும்பியிராதபோது தமிழீழ தேசிய விடுதலை முன்னணி (NLFT) எந்தவித நிபந்தனையுமின்றி எமக்கு பலவழிகளிலும் முழுமையாக உதவியதன் மூலம் நடைமுறையில் உண்மையான புரட்சிகரவாதிகள் என்பதை எமக்கு எடுத்துக் காட்டியிருந்தனர். இத்தகையதொரு நிலையில் தமிழ் மக்கள் விடுதலை முன்னணியினருடன் தோழமையுணர்வுடனும், பொறுப்புணர்வுடனும், பரஸ்பர புரிந்துணர்வுடனும் செயற்பட வேண்டியவர்களாக இருந்திருக்க வேண்டிய நாம் அதிலிருந்து தவறியிருந்தோம். இந்த எமது தவறு குறித்து பின்னர் தமிழீழ தேசிய விடுதலை முன்னணியினருடன் (NLFT) பேசிய நாம், இத்தகைய தவறுகள் எதிர்காலத்தில் நடைபெறாவண்ணம் செயற்படுவோம் எனக் கூறியதோடு, தமிழீழ தேசிய விடுதலை முன்னணியினருடனான (NLFT)எமது சந்திப்புக்கள் தொடர்ந்தன.
நாம் செயற்குழுக் கூட்டத்தில் எடுத்த முடிவின்படி ஏனைய இயக்கங்களுடனான சந்திப்புக்களையும் தொடர்ந்த வண்ணமிருந்தோம். தமிழீழ வீடுதலை இயக்கத் (TELO) தலைவர் சிறீசபாரத்தினத்தை சந்தித்துப் பேசுவதற்கு மீண்டும் காந்தனும் (ரகுமான் ஜான்) நானும் சென்றிருந்தோம். தமிழீழ வீடுதலை இயக்கத்தால் (TELO) வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட இராணுவத் தாக்குதல்கள் பற்றியே அவரது பேச்சுக்கள் அமைந்திருந்ததுடன் எம்மையும் உடனடியாக இராணுவத் தாக்குதல்களை ஆரம்பிக்கும்படி கேட்டுக்கொண்டதோடு, அத்தகைய இராணுவத் தாக்குதல்களை நாம் செய்வதாயின் தன்னாலான அனைத்து உதவிகளையும் செய்வதாகவும் உறுதியளித்திருந்தார். கூடவே எமது முதற்சந்திப்பில் கூறியபடி எமது பாதுகாப்புக்கென தானியங்கித் துப்பாக்கியும் (SMG) கைக்குண்டுகளும் கொடுத்திருந்தார்.
தமிழீழ விடுதலை இயக்கத்திடமிருந்து (TELO) எமது பாதுகாப்புக்கென இயந்திரத் துப்பாக்கியையும் கைக்குண்டுகளையும் பெற்றுக்கொள்வதில் எமக்குள் எந்தவித கருத்து முரண்பாடுகளும் இருந்திருக்கவில்லை. ஏனெனில், அன்றைய சூழலில் எமது பாதுகாப்புக்கான நேரடி அச்சுறுத்தல் இலங்கை அரசபடைகளிமிருந்து வந்திருக்கவில்லை. இலங்கை அரசபடைகள் இராணுவ முகாம்களுக்குள் முடக்கப்பட்டிருந்த சூழ்நிலையே காணப்பட்டது. ஆனால், நாம் வீதியில் இறங்கும்போதெல்லாம், எமது அரசியல் கருத்துக்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல முனையும் போதெல்லாம் உமாமகேஸ்வரனை விசுவாசிக்கும் புளொட் இராணுவப்பிரிவினரின் ஒரு பகுதியினரிடமிருந்து எமது உயிர்களுக்கு அச்சுறுத்தலை எதிர்நோக்கிக் கொண்டிருந்தோம். இந்த நிலையில் தமிழீழ விடுதலை இயக்கத் (TELO) தலைவர் சிறீசபாரத்தினம் எமக்குக் கொடுத்த இயந்திரத்துப்பாக்கியும் கைக்குண்டுகளும் எமது தற்பாதுகாப்புக்கு – தாக்குதலுக்கு அல்ல - பெரிதும் உதவி புரியும் என எண்ணினோம்.
தமிழீழ விடுதலைப் புலிகளால் அனுராதபுரத்தில் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளால் நெருக்கடிக்குள்ளான ஜே.ஆர்.ஜெயவர்த்தனா அரசினதும், இந்திய அரசின் அழுத்தங்களாலும் ஆரம்பிக்கப்பட்ட "திம்புப்" பேச்சுவார்த்தையையும், அதில் இலங்கை அரசின் கபடத்தனத்தையும் பகிரங்கப்படுத்தி "தீப்பொறி" பத்திரிகையின் இரண்டாவது இதழ் வெளிவந்திருந்தது. இவ் இதழை யாழ்ப்பாணக் குடாநாட்டின் பெரும்பாலான பகுதிகளில் விநியோகித்திருந்தோம். "தீப்பொறி" பத்திரிகையையும் "புதியதோர் உலகம்" நாவலையும் யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கு வெளியே எடுத்துச் செல்வதென்பது இன்னமும் கேள்விக்குரியதொன்றாகவே இருந்தது. ஏனெனில் யாழ்குடா நாட்டுக்கு வெளியே மக்கள் செறிந்து வாழாத, மக்கள் நடமாட்டம் குறைந்த, காடுகளும் மணற்தரை வெளிகளும் நிறைந்த பகுதியாக காணப்படுவதால் எவருக்கும் தெரியாமலேயே புளொட் இராணுவப் பிரிவினரால் எம்மை இலகுவாக கைது செய்யவோ அல்லது கொலைசெய்யவோ முடியும் என எண்ணியிருந்தோம்.
ஆனால் யாழ்ப்பாணத்துக்குள் மட்டுமே எமது செயற்பாடுகளை குறுக்கிக் கொள்வதும் கூட புளொட்டை முழுமையாக அம்பலப்படுத்துவதாக அமையாது என்பதையும் உணர்ந்தோம். இந்நிலையில் ஏற்கனவே யாழ்ப்பாணத்திலிருந்து ஏனைய மாவட்டங்களுக்கு பிரதான வீதிகள் வழியாக அல்லாமல் தரைவழியாகவும் கடல்வழியாகவும் சென்று நன்கு அனுபவம் பெற்றிருந்த கண்ணாடிச்சந்திரன் அப்பாதைகள் வழியாகச் சென்று ஏனைய மாவட்டங்களில் "தீப்பொறி" பத்திரிகை", " புதியதோர் உலகம்" நாவல் என்பனவற்றை மக்கள் மத்தியில் விநியோகிக்க முடியும் எனத் நம்பிக்கை தெரிவித்ததை அடுத்து நாம் குடாநாட்டுக்கு வெளியே சென்று எமது வெளியீடுகளை மக்கள் மத்தியில் விநியோகிப்பது என்று முடிவெடுத்தோம்.
"தீப்பொறி" பத்திரிகை, "புதியதோர் உலகம்" நாவல் என்பனவற்றை பெரும் தொகையாக எடுத்து எமது சைக்கிள்களின் பின்புறத்தில் கட்டிக்கொண்டு காசி (ரகு), தர்மலிங்கம், சண்முகநாதன், விஜயன், பாலா, ரஞ்சன், மனோஜி, மைக்கல், நிசாகரன் (தயா), திருமலை சிறி, கண்ணாடிச்சந்திரன், ஆகியோருடன் நானும் பருத்தித்துறையிலிருந்து கரையோரப்பாதை வழியாக முல்லைத்தீவு வரை சென்று எமது பத்திரிகையையும் நாவலையும் மக்கள் மத்தியில் விநியோகித்தோம். மணற்காடு, மற்றும் மருதங்கேணி பகுதிகளில் புளொட் அராஜகவாதிகளை எதிர்கொள்ள நேரிட்ட போதிலும் தற்பாதுகாப்புக்கென எம்மால் எடுத்துச் செல்லப்பட்டிருந்த ஆயுதங்களால் எம்முடன் மோதுவதற்கு புளொட் அராஜகவாதிகள் முன்வந்திருக்கவில்லை.
பருத்தித்துறையிலிருந்து முல்லைத்தீவு வரை வீடு வீடாகச் சென்று "தீப்பொறி" பத்திரிகை, "புதியதோர் உலகம்" நாவல் என்பனவற்றை விநியோகித்து முடித்த பின்னர் நாம் பூநகரியிலிருந்து மன்னார் வரை செல்வதற்குத் தயாரானோம். பூநகரியில் இலங்கை இராணுவமுகாம் இருந்த காரணத்தால் கடல்வழியாக யாழ்ப்பாணத்திலிருந்து கல்முனை(பூநகரி)க்கும் நாச்சிக்குடாவுக்கும் சென்று அங்கிருந்து எமது சைக்கிள்களில் பத்திரிகையையும் நாவலையும் மக்கள் மத்தியில் விநியோகிக்கத் தொடங்கினோம். மண்ணித்தலை, வன்னேரிக்குளம், துணுக்காய், முழங்காவில், நாச்சிக்குடா, விடத்தல்தீவு, அடம்பன், இரணைதீவு போன்ற இடங்களில் புளொட் அராஜகவாதிகள் எம்மை எதிர்கொண்டபோதும் அவர்களால் எம்முடன் வாக்குவாதத்தில் ஈடுபட மட்டுமே முடிந்தது.
நாம் கடல்வழியாகச் சென்றுவர எமக்கு நண்பர் தாசன் அவர்களும், கோயிலாக்கண்டியைச் சேர்ந்த வன்னியசிங்கமும் பெரும் உதவி புரிந்திருந்தனர். யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கு வெளியிலும் புளொட்டை அம்பலப்படுத்துவதை ஆரம்பித்துவிட்டிருந்த நாம் தொடர்ச்சியான எமது செயற்பாடுகள் குறித்து பேசுவதை நோக்கமாகக் கொண்டு செயற்குழுவை கூட்டினோம். புளொட்டிலிருந்து வெளியேறிய நாம் புளொட்டை அம்பலப்படுத்தும் செயற்பாடுகளுடன் கூடவே போராட்டம் பற்றிய எமது பார்வையைத் தொகுத்து கொள்கை மற்றும் வேலைத்திட்டத்தை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்தோம்.
நாம் கடந்துவந்த ஈழ விடுதலைப் போராட்டம் என்ற பாதையில் அனைத்தையும் கேள்விக்குள்ளாக்க வேண்டும் என்றும், குறிப்பாக தமிழீழ வீடுதலைப் போராட்டம் என்று நாம் புளொட்டில் முன்வைத்த கருத்து –சிங்கள மக்களுடன் முழுமையான ஜக்கியத்தை வேண்டி நின்ற கருத்து - சரியானதா என்ற கேள்வியும் கூடவே எழுப்பப்பட வேண்டும் என செயற்குழுவில் பெரும்பான்மையானவர்களால் கருத்து முன் வைக்கப்பட்டிருந்தது. எமது கொள்கை, வேலைத்திட்டத்தை முன்வைப்பதற்கும் அவைகுறித்த விவாதிப்பதற்கும் முன் எம்மை அரசியல் ரீதியில் வளர்த்துக் கொள்ளவேண்டும் என்றும் அதற்கூடாகவே ஒரு ஆரோக்கியமான விவாதத்தை நடாத்தி சரியான கொள்கையையும் வேலைத்திட்டத்தையும் உருவாக்க முடியும் என்றும் செயற்குழுவில் பலர் கருத்துத் தெரிவித்திருந்தனர்.
ஈழவிடுதலைப் போராட்டம் அதன் மற்றொரு பரிமாணத்தை எட்டியிருந்தது. இலங்கை அரசின் போர்நிறுத்தமும் ஈழவிடுதலை போராட்ட இயக்கங்களுடனான "திம்பு" பேச்சுவார்த்தையும் மக்கள் மத்தியில் சமாதானம் பற்றிய எதிர்பார்ப்புக்களும் நம்பிக்கைகளும் கூட காணப்பட்டுக் கொண்டிருக்க நாமோ புதிய அமைப்பை உருவாக்குதல், அதற்காக வேண்டி அரசியலைக் - இடதுசாரி அரசியலை – கற்றல், கொள்கை வேலைத்திட்டம் எனப் பேசிக் கொண்டிருந்தோம். ஈழவிடுதலைப் போராட்டம் பற்றிய புதிய தேடல், புதிய அமைப்பு, ஒரு சரியான கொள்கைத்திட்டத்துடன் கூடிய நடைமுறை என்பன தேவை என்பதில் இரண்டு கருத்துக்களுக்கு இடமில்லைத்தான். ஆனால் அதற்காக நாம் நிறையவே அரசியலைக் கற்கவேண்டியது முன்நிபந்தனையாய் இருந்தது. ஆக, ஈழவிடுதலைப் போராட்டத்தில் தோன்றி வளர்ந்து வரும் தவறான போக்குகளையும், குறிப்பாக புளொட்டினுடைய அராஜகங்களையும் அம்பலப்படுத்துவதோடு இடதுசாரி நூல்ககைக் கற்க ஆரம்பித்தோம்.
இடதுசாரி அரசியலைக் கற்றல் என்பது கூட என்னைப் பொறுத்தவரை அவ்வளவு இலகுவானதொன்றான இருந்திருக்கவில்லை. "ஏடறிந்த மனிதவரலாறென்பது வர்க்கப் போராட்டங்களின் வரலாறே" என்று கூறும் கார்ல் மார்க்சின் "கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை"யிலிருந்து ஏங்கெல்ஸ், பிளக்னேவ், லெனின் போன்றோரின் நூல்கள் அவர்களிடம் காணப்பட்டிருந்த பரந்த அரசியல், பொருளாதார, தத்துவார்த்த அறிவின் காரணமாக அவற்றைப் புரிந்து கொள்வது இலகுவானதாக இருந்திருக்கவில்லை. இதன் காரணத்தால் இடதுசாரி அரசியலின் அடிப்படைகளை புரிந்துகொள்ளக் கூடிய எளிமையான நூல்களிலிருந்து அரசியல் கற்றலை ஆரம்பிக்க வேண்டியிருந்தது.
மார்க்சிய ரீதியிலான தமிழ் எழுத்தாளராக விளங்கியிருந்தவரான செ.கணேசலிங்கத்தினால் எழுதப்பட்ட "குமரனுக்குக் கடிதங்கள்", "குந்தவிக்குக் கடிதங்கள்", "மான்விழிக்குக் கடிதங்கள்" போன்ற எளிமைப்படுத்தப்பட்ட சிறுநூல்களைக் கற்கத் தொடங்கிய நான் இந்தியத் தத்துவவியலாளரான ராகுல் சாங்கிருத்தியாயனின் "வோல்காவிலிருந்து கங்கைவரை", "ஜரோப்பியத் தத்துவவியல்", "இந்துத் தத்துவவியல்", "இஸ்லாமியத் தத்துவவியல்", "பௌத்த தத்துவவியல்" போன்ற நூல்களையும், நவசீனத்தின் தலைவர் மாசேதுங்கால் எழுதப்பட்ட சிறுநூல்கள் மற்றும் சீனப்பரட்சியாளர்களான சூ என் லாய், சென் யுன் போன்றவர்களால் எழுதப்பட்ட சிறுநூல்களையும் கற்க வேண்டியிருந்தது.
இந்நூல்களிலிருந்து பெறப்பட்ட அறிவின் வெளிச்சத்திலிருந்து கார்ல் மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்சின் "கனதியான" நூல்களையும், ரசிய கம்யூனிஸ்ட் கட்சியை ஸ்தாபித்தவர்களில் ஒருவரும், ரசியாவுக்குள் மார்க்சியத்தை அறிமுகப்படுத்தி ரசியக் கம்யூனிஸ்ட்டுக்களுக்கு முன்னோடியாகத் திகழ்ந்தவருமான பிளக்னேவின் "மார்க்சியத்தின் அடிப்படைப் பிரச்சனைகள்" என்ற நூலையும் லெனினின் நூல் திரட்டுக்களையும் கற்கத் தொடங்கினேன். இடதுசாரி நூல்களை மட்டுமின்றி உலக இலக்கியங்களிலே தனிச் சிறப்புமிக்கதாகத் திகழ்ந்த - பிரெஞ்சுப் புரட்சியினால் விளைந்த இலக்கியங்களை உள்வாங்கித் தனிச் சிறப்பு மிக்கதாகத் திகழ்ந்த - ருசிய இலக்கியங்களிலும் சோவியத் இலக்கியங்களிலும் இருந்து தெரிவுசெய்து வாசித்ததன் மூலம் இலக்கிய அறிவை வளர்த்துக் கொள்ள வாய்ப்பளித்ததுடன், ஒரு படைப்பாளி சமூகத்திலுள்ள பிரச்சனைகளை எப்படி இலக்கியத்துக்கூடாக மக்கள் மத்தியில் கொண்டு செல்ல முடியும் என்பதையும், ஒரு சமூகமாற்றத்திற்கான போராட்டத்தில், ஒரு இலக்கியவாதியின் பங்கு என்ன என்பதையும், இலக்கியத்துக்கூடாக மக்களின் மனங்களில் எப்படி மாற்றத்தை ஏற்படுத்துவது, மக்களை எப்படி போராட்டத்திற்கு அணி திரட்டிச் செல்வது என்பதையும் அறிய முடிந்தது.
" .....நேர்மையாய் வாழ வேண்டுமாயின் வதைபடுதலும் குழம்பிக்கலங்குதலும், முட்டிமோதுவதும், பிழைபுரிதலும், தொடங்குதலும், தூக்கியெறிதலும், மறுபடியும் தொடங்குதலும் மறுபடியும் தூக்கியெறிதலும், எந்நேரமும் போராடுதலும் இழப்புக்குள்ளாதலும் இன்றியமையாதவை. மனநிம்மதி – அது ஆன்மாவின் இழிநிலை" என்று தனது "புத்துயிர்ப்பு" நாவலில் எழுதிய மாபெரும் ருசிய எழுத்தாளர் நிக்கலாயெவிச் டால்ஸ்டாய் இல் தொடங்கி, அன்டன் செக்கோவ், தூர்க்கேனிவ், மைக்கேல் ஷோலக்கோவ் போன்றோரின் நாவல்களையும், சோவியத் புரட்சிக்கு பெரும் உந்துசக்தியாக விளங்கிய மார்க்சிம் கார்க்கியின் "தாய்" நாவல், சோவியத் புரட்சியை நேரடியாக கண்டு அவற்றைத் தொகுத்து எழுதிய அமெரிக்க எழுத்தாளர் ஜான் ரீட்டின் "உலகைக் குலுக்கிய பத்து நாட்கள்" போன்ற பல நூல்களையும் படித்ததோடு, கிட்லரின் நாஜிப்படைகளுக்கெதிரான போராட்டத்தில் நிக்கலாய் ஒஸ்திரோவ்ஸ்க்கியால் படைக்கப்பட்ட "வீரம் விளைந்தது", போரில் தனது ஒரு காலை இழந்த சோவியத் போர் வீரனின் மனஉறுதியைச் சித்தரிக்கும் பரீஸ் பொலெவோயால் எழுதப்பட்ட "உண்மை மனிதனின் கதை", ஹிட்லரின் படைகள் சோவியத் யூனியனை ஆக்கிரமித்த போது தாய்நாட்டைப் பாதுகாப்பதற்காக தனது நான்கு புதல்வர்களை போர்முனைக்கு அனுப்பி வைத்து போர் முடிவுற்ற பின்னும் தனது புதல்வர்கள் வீடு திரும்பாததால் அவர்களின் நினைவுகளுடன் காத்திருக்கும் ஒரு தாயின் கதையான சிங்கிஸ் ஐத்மதேவின் "அன்னைவயல்", மற்றும் "முதல் ஆசிரியர்", "குல்சாரி", "ஜமீலா", "லாரி டிரைவரின் கதை" போன்ற பல அரும் பெரும் படைப்புக்களையும் படிக்க முடிந்தது. ஆம். இடதுசாரி நூல்களையும், மனிதனின் ஆன்மா புத்துயிர்ப்பு அடைதலையையும், சமூக ஏற்றத் தாழ்வுகளால் வஞ்சிக்கப்படுவது வறிய மக்களே என்பதையும், இத்தகைய சமூக ஏற்றத் தாழ்வுகளுக்கெதிராக போராட வேண்டியது மனிதநேயம் கொண்ட ஒவ்வொரு மனிதனதும் கடமை என்பதையும் தாங்கிய இலக்கியங்களையும் படித்தபோதுதான் ஈழவிடுதலை போராட்டத்தில் நான் ஈடுபட்டதையிட்டும், அந்நேரத்தில் எனக்கிருந்த அரசியல் அறிவையிட்டும் வெட்கப்பட வேண்டியவனாக இருந்தேன்.
தோழர் தங்கராஜாவிடம் கற்றுக் கொண்டதைத் தவிர்ந்த வேறு எதுவித அடிப்படை அரசியல் அறிவுமின்றி ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தோம் என்பதை உணர முடிந்தது. தமிழர் விடுதலைக் கூட்டணியினரின் குறுகிய நலன் கொண்ட இனவாத மேடைப் பேச்சையே அரசியலாக கருதி அதற்கு ஆட்பட்டுப்போன இளைஞர்களும் மக்களும்; தமிழர் விடுதலைக் கூட்டணியினரின் பாராளுமன்ற அரசியல் அபிலாசைகளுக்காக கூட்டப்பட்ட வட்டுக்கோட்டை தீர்மானமும் அதில் முன்வைக்கப்பட்ட "தமிழீழம்" என்ற கோரிக்கையும்; தமிழர் விடுதலைக் கூட்டணியினரின் குறுகிய இனவாதம் கொண்ட தமிழீழக் கோரிக்கையை சரியான அடிப்படை அரசியல் அறிவுமற்று ஆயத வழிமுறையில் முன்னெடுக்க களத்தில் இறங்கிய இளைஞர்களும் அவர்களால் உருவாக்கப்பட்ட இயக்கங்களுமென தமிழ்மக்கள் தவறான ஒரு பாதையில் விடுதலை போராட்டம் என்ற பெயரில் அழைத்துச் செல்லப்பட்டனர், செல்லப்பட்டுக் கொண்டிருந்தனர்.
ஒரு விடுதலைப் போராட்டம் என்பது, அதிலும் குறிப்பாக சமூக மாற்றத்தை உள்ளடக்கமாகக் கொண்ட விடுதலைப் போராட்டமென்பது, அடிப்படை அரசியல் அறிவற்ற உணர்ச்சி மிக்க வெற்று மேடைப் பேச்சுக்களாலோ, "கவர்ச்சி"கரமான பிரச்சாரங்களாலோ, பாதை மறிப்பு போராட்டங்களாலோ அல்லது அரசியலற்ற ஒரு இராணுவத்தை கட்டமைப்பதனாலோ, சதி நடவடிக்கைகளாலோ, தற்கொலைத் தாக்குதல்களாலோ வெற்றி பெற முடியாது என்பதையும், புரட்சிகர அரசியலையும் உலகப் புரட்சிகரப் போராட்ட இயக்கங்களின் அனுபவங்களையும் சுவீகரித்துக் கொண்ட ஒரு புரட்சிகரத் தலைமையினால் பரந்துபட்ட மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வூட்டி அவர்களை அணிதிரட்டி நடாத்தப்படும் ஒரு போராட்டமே வெற்றியளிக்கும் என்பதோடு மக்களுக்கு உண்மையான விடுதலையையும் நீடித்த, நிரந்தரமான சமாதானத்தையும் கொண்டு வர முடியும் என்பதை இப்பொழுது காணக்கூடியதாக இருந்தது.
(தொடரும்)
1. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 1
2. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 2
3. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 3
4. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 4
5. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 5
6. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 6
7. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 7
8. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 8
9. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 9
10. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 10
11. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 11
12. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 12
13. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 13
14. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 14
15. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 15
16. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 16
17. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 17
18. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 18
19. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 19
20. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 20
21. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 21
22. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 22
23. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 23
24.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 24
25.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 25
26.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 26
27.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 27
28.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 28
29. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 29
30 .புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 30
31. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 31
32. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 32
33. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 33
34. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 34
35.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 35
36.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 36
37.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 37
38.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 38
39.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 39
40. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 40
41.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 41
42. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 42