தம் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடுவதாக கூறுகின்றவர்கள், தமக்குள்ளான அனைத்து ஒடுக்குமுறையையும் எதிர்த்துப் போராட வேண்டும். அதேநேரம் தமக்கு வெளியில் உள்ள ஒடுக்குமுறைகளையும் கூட, எதிர்த்துப் போராட வேண்டும். இவ்விரண்டையும் செய்யாத போராட்டம், ("தலித்திய") அடையாளம் போலியானது புரட்டுத்தனமானது. ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் மக்களை ஏய்த்துப் பிழைக்கும் குறுகிய அரசியலாகும். இதுபோல் பிறப்பு சார்ந்த ஒடுக்குமுறையை எதிர்கொள்ளும் போது, பிறப்புக் கடந்த மனிதனாக தன்னை மையப்படுத்திப் போராடாத பிறப்பு சார்ந்த குறுகிய அரசியல் படுபிற்போக்கானது.

கடந்தகாலத்தில் இனவொடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் கூட, இப்படி குறுகித்தான் மக்களுக்கு எதிராக மாறி அழிந்தது. இதையொத்த அரசியல் தளத்தில்தான் பிறப்பை மையப்படுத்தி "தலித்தியமும்" தன்னை வெளிப்படுத்தியது, வெளிப்படுத்துகின்றது. இங்கு தங்கள் பிறப்பை மையப்படுத்திய அரசியல், தம்மை மனிதனாக முதன்மைப்படுத்திப் போராடுவதை மறுக்கும் அரசியல், மூடிமறைத்த மக்கள் விரோத அரசியலாகும். இந்த பின்னணியில் இருப்பது பிறப்பை மையப்படுத்திய தான் சார்ந்து கோரும் ஒடுக்குமுறைதான்.

பால், சாதி, இனம், நிறம், மொழி, பண்பாடு, நாடு... என்று பிறப்பை மையப்படுத்திய ஒடுக்குமுறை அரசியல், மனித இனத்தை கருவில் வைத்துப் பிளக்கின்றது. இந்தப் பிளவு சார்ந்த ஒடுக்குமுறை மட்டும்தான் தனக்கு உள்ளது என்று கூறி, எதிர்வினையாற்றும் பிறப்பு சார்ந்த எதிர்ப்பு அரசியல் கூட ஓடுக்குமுறை சார்ந்ததுதான். இது தன் மீது அல்லாத ஒடுக்குமுறையை எதிர்ப்பதில்லை. மறுதளத்தில் தான் ஒடுக்கும் கூறாகவும் இயங்குகின்றது.

பிறப்பு சார்ந்த ஒரு ஒடுக்குமுறை மட்டும் ஒரு மனிதனுக்கு இருப்பதில்லை. பல ஒடுக்குமுறைகள், அக்கபக்கமாக, ஒன்றையொன்று சார்ந்தும் விலகியும் இயங்குகின்றது. இதை மறுத்தபடி, ஒரு ஒடுக்குமுறைக்கு எதிராக பிறப்பை மையப்படுத்திய அரசியல் படுபிற்போக்கானது.

பிறப்பு சார்ந்த ஒடுக்குமுறை மீதான எதிர்வினை என்பது, ஜனநாயகக் கோரிக்கையைத் தாண்டி அதற்கு முற்போக்கான அரசியல் அம்சம் எதுவும் கிடையாது. ஜனநாயக கோரிக்கைக்குள் பிறப்பு குறித்த அரசியல் முடங்கும் போது, அது அதற்குள் ஒடுக்கும் கூறாக மாறிவிடுகின்றது. குறிப்பாக இந்த ஜனநாயகக் கோரிக்கை மூலம், இந்த பிறப்பு சார்ந்த ஒடுக்குமுறையை இல்லாதாக்கி விடமுடியாது. பிறப்பு சார்ந்த ஒடுக்குமுறை, ஒட்டுமொத்த ஒடுக்குமுறையின் ஒரு அங்கமாகும். ஒட்டுமொத்த ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் தான், தனித்தனியான ஒடுக்குமுறைகளை இல்லாதாக்க முடியும்.

இந்தப் பிறப்பு குறித்த ஒடுக்குமுறையும் சரி, ஒடுக்குமுறைக்கு எதிரான கூறும் சரி, பிறப்பை குறித்து அடையாளப்படுத்திய அரசியலாக தொடர்ந்து இருக்கும் வரை, இவ்விரண்டும் மனித இனத்துக்கு எதிரானது. முதலில் பிறப்பைக் கடந்து தன்னை மனிதனாக அடையாளப்படுத்தி நிற்காத பிறப்பு குறித்த அரசியல் படுபிற்போக்கானது. இது ஒடுக்கும் வடிவத்தில் மட்டுமல்ல, அதற்கு எதிரான போராட்டத்தில் கூட ஒரே அரசியல் தன்மையையும் விளைவையும் கொண்டது.

உதாரணமாக இலங்கையின் இனமுரண்பாட்டை எடுப்போம். பிறப்பை மையப்படுத்திய சிங்கள பேரினவாத ஒடுக்குமுறை, தமிழனின் பிறப்பை மையப்படுத்தி வெளிப்பட்டது. இதற்கு எதிரான போராட்டம் தமிழனின் பிறப்பை மையப்படுத்திய எதிர்ப்பு அரசியலாகியது. இதனை மட்டும்தான் தனக்கு மேலான ஒடுக்குமுறையாக அது காட்டிக் குறுக்கிய போது, முஸ்லீம் மக்களுக்கு எதிராக மாறியது. அதேநேரம் பிறப்பு சார்ந்த ஆணாதிக்க ஒடுக்குமுறையையும், சாதி சார்ந்த ஒடுக்குமுறையையும், பிரதேசம் சார்ந்த ஒடுக்குமுறையையும் … என்ற அனைத்தையும் தன்னகத்தே கொண்ட குறுகிய ஒன்றாக வெளிப்பட்டது. ஒடுக்கும் கூறாக வெளிப்பட்டது. மக்களை மற்றொரு வகையில் ஒடுக்குவதை ஆதாரமாகக் கொண்டு, பிற்போக்கான ஒன்றாக தன்னை வெளிப்படுத்தியது. அதேநேரம் எங்கும் நிலவிய சுரண்டல் சார்ந்த ஒடுக்குமுறையை தன்னகத்தே கொண்டு இயங்கியது. சிங்கள பேரினவாத ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம், பிற்போக்கான ஒன்றாக வெளிப்பட்ட அரசியல் அடிப்படை இதுதான்.

இதைத்தான் தங்கள் பிறப்பை மையப்படுத்தி தலித்தியம், பெண்ணியம் பேசுகின்றவர்கள் … தங்கள் அரசியலாக கொண்டு இயங்குகின்றனர். பிறப்பு குறித்த ஒடுக்குமுறையை முன்னிறுத்தி, அதை அடையாளமாக கொண்டு தங்கள் பிறப்பை மையப்படுத்தி நடத்தும் அரசியல் தமிழ்தேசியம் போல் குறுகிக் குதறுகின்றது. தன் பிறப்பு அல்லாத தளத்தில், மனிதனாக தம்மை முன்னிறுத்திய போராட்டத்தை இது மறுக்கின்றது. இந்த வகையில் மார்க்சியத்தை எதிர்ப்பதும், அதற்கு "பார்ப்பனிய" "வெள்ளாள" "ஆணாதிக்க" .. மார்க்சியம் என்ற தங்கள் பிறப்பை மையப்படுத்தி எதிர்ப்பது இதன் அரசியல் சாரமாகின்றது. தன்னையொத்த பிறப்பு குறித்த மற்றைய ஒடுக்குமுறைகளை எதிர்க்காத, தனக்குள்ளான பிறப்பு குறித்த ஒடுக்குமுறையையும் எதிர்க்காத இந்த அரசியல் எங்கும் படுபிற்போக்கானது.

"தலித்தியத்தை" எடுத்தால், அதன் அரசியல் வரைவிலக்கணம்

1. தனக்குள்ளான பிறப்பு குறித்த சாதிய ஒடுக்குமுறையை தக்கவைத்து ஒடுக்கியபடி தான், தலித்தியம் முன்வைக்கப்படுகின்றது. அதேநேரம் ஆணாதிக்க ஒடுக்குமுறை, இனவொடுக்குமுறை, மத ஒடுக்குமுறை, மொழி ஒடுக்குமுறை, பண்பாட்டு ஒடுக்குமுறை …. என அனைத்தையும் தனக்குள் அடிப்படையாகக் கொண்டு இயங்குகின்றது.

2. இது எங்கும், தனக்குள் நிலவும் சுரண்டி ஒடுக்கும் அரசியலை சாராம்சமாகவும் அடிப்படையாகவும் கொண்டதுதான் "தலித்தியம்". பிறப்புக்கு வெளியில் தனக்குள் சுரண்டி ஒடுக்குவதை அது பாதுகாக்கின்றது.

தலித் தனக்குள் சுரண்டுவதை, ஆணாதிக்கத்தை பேணுவதையும், தனக்கு கீழ் உள்ள சாதிகளை ஒடுக்குவதையும், இன்னும் இது போன்றவற்றையும் எதிர்த்து "தலித்தியமாக" தன்னை அரசியல் பிரகடனம் செய்வது கிடையாது. இதைக் கோரும் மார்க்சியத்தையும், இதை முன்வைக்கும் மார்க்சியத்தையும், இதன் அடிப்படையில்தான் "தலித்தியம்" எதிர்க்கின்றது.

இந்த அடிப்படையில் "தலித்தியம்" இவையனைத்தையும் எதிர்த்துப் போராடுவதில்லை. இங்கு பிறப்பு குறித்த மற்றைய ஒடுக்குமுறையை பாதுகாத்துக்கொண்டு, தன் பிறப்புக் குறித்த அடையாளத்தை தக்கவைத்துக் கொண்டு, மற்றவர்களை ஒடுக்குவதுடன் ஒடுக்கவும் முற்படுகின்றது.

இப்படி தலித்தியம், பெண்ணியம் மட்டுமல்ல இனவொடுக்குமுறைக்கு எதிரான போராட்டம், நிறவாதிக்கத்துக்கு எதிரான … போராட்டங்கள் எங்கும் முரணற்ற போராட்டத்துக்கு பதில், பிற்போக்கான முரண்கொண்ட போராட்டங்களாக குக்றுகி ஒடுக்கும் கூறாக இதற்குள் இருந்து பல போக்குகள் வெளிப்படுகின்றது. தன்னை முரணற்ற வகையில் வெளிப்படுத்தாத அனைத்தும், அதன் உட்கூறுகளும் இங்கு பிற்போக்கான அரசியல் பாத்திரத்தை வெளிப்படுத்துகின்றது. உதாரணமாக ஒரு பெண் தன் மீதான ஒடுக்குமுறையை எதிர்த்து போராடும் போது, அனைத்து ஒடுக்குமுறையையும் எதிர்த்துப் போராட வேண்டும். இப்படித்தான் தான் பெண்ணியத்தை வெளிப்படுத்த வேண்டும். இதுவல்லாத அனைத்தும் படுபிற்போக்கானது.

இங்கு தலித்தியத்தை எடுத்தால் "தலித்" என்ற அரசியல் பதமே தவறானது. குறுகிய அடையாள அரசியலைக்கொண்டு தனக்குள் ஒடுக்கும் சாதியக் கூறுகளை கொண்டது தலித்தியம். அது தனக்குள் பிறப்பு குறித்த சாதியத்தை தக்கவைத்தபடி தான், தனக்குள் மற்றைய பிறப்பு குறித்த ஒடுக்குமுறையை பேணியபடி தான் இருக்கத்தான் தன்னை "தலித்" என்று கவசமிடுகின்றது.

இதன் சாராம்சம் இது மற்றைய ஒடுக்குமுறைகளை எதிர்ப்பதையும், எதிர்த்துப் போராடுவதையும் மறுக்கின்றது. இதை அவரவர் பிரச்சனையாக, இதை அவரவர் தனிதனிப் போராட்டமாக காட்டி தனக்குள் ஒடுக்க உதவுகின்றனர். தனக்குள் அதை நீக்கும் அரசியல் வரையறையையும், தனக்குள் அதை கொண்டு இருப்பதையும் மறுப்பதுதான் தலித்தியம். சுரண்டலை தலித்தியத்துக்குள் கொண்டிருப்பதை அடிப்படையாகக் கொண்டுதான், தலித்தியம்; தன்னை முன்னிறுத்கின்றது.

ஆக மார்க்சியத்தை தலித்தியம் எதிர்ப்பதன் அரசில் சாரம் இதுதான். தான் சுரண்ட, தனக்குள் சாதியைப் பேண, தனக்குள் மற்றைய சமூக ஒடுக்குமுறைகளை தக்கவைத்து ஒடுக்க உதவும் பிரிவுதான் "தலித்" என்ற அடையாள அரசியல் மூலம் தன் மீதான ஒடுக்குமுறையைக் காட்டி முன்தள்ளுகின்றது.

சிங்களப் பேரினவாதத்தைக் காட்டி "தமிழ் தேசியம்" எப்படி முரணுள்ளதாக மாறி மக்களை ஒடுக்கியதோ, அதைப்போல்தான் தன் மீதான சாதிய ஒடுக்குமுறையைக் காட்டி "தலித்தியம்" தன்னை முரணுள்ளதாக வெளிப்படுத்துகின்றது.

இதன் அரசியல் நோக்கம் பிறப்பு சார்ந்த ஒடுக்குமுறை மூலமான பார்ப்பனிய இருப்பு போல், ஒரு பிரிவை தான் ஒடுக்கி தனக்கும் ஒரு சமூக இடத்தை உருவாக்குவதுதான். பிறப்பு குறித்த ஒடுக்குமுறைகள் நீக்க, மனிதனாக தன்னை முன்னிறுத்தி இணைந்து போராடுவதல்ல இதன் அரசியல் நோக்கம். மாறாக பிறப்பை தக்கவைத்து, சிறிய பிரிவுக்குள் சிலர் பிழைத்துக் கொள்ளும் அடையாள அரசியல்தான் இது. "தமிழ்தேசியம்" குறுகிய அடிப்படையைக் கொண்டு இயங்கியது போல், பிறப்பை மையப்படுத்திய "தலித்தியமும்".

இந்த "தலித்தியத்தின்" பின் சிலர் தாம் பிழைத்துக்கொள்ள, பேரினவாத ஒடுக்குமுறையை ஆதரித்தபடி மார்க்சியத்தை கொச்சைப்படுத்தியபடி அங்குமிங்குமாக இட்டுக்கட்டியும் வசைபாடியும் எதிர்க்கின்றது.

 

பி.இரயாகரன்

06.02.2012