மக்களைச் சார்ந்து நின்று கூறாத எந்தத் தர்க்கங்களும் எந்த அரசியலும் புரட்டுத்தனமானது. கேட்பவர்களை கேனயனாக்குகின்ற, தம்மை நம்புகின்றவர்களையும் முட்டாளாக்குகின்ற அறிவு சார்ந்த புரட்டுத்தனமான முயற்சியாகும். இப்படித்தான் "வெள்ளாள மார்க்சியம்" என்ற கூற்றும், அது சார்ந்த தர்க்கங்களுமாகும். மறுதளத்தில் இவர்களால் "வெள்ளாள மார்க்சியம்" என்று குற்றச்சாட்டபட்டவர்கள், மார்க்சியத்தை சரியாக முன்வைக்கின்றார் என்று அர்த்தமல்ல. ஒன்றையொன்று சார்ந்து தன்னை நேராக்க முடியாது.

மார்க்சியம் எந்தச் சாதிக்கும், எந்த இனத்துக்கும், எந்த சமூகப் பிரிவுக்கும் சொந்தமானதல்ல. எந்த ஒரு ஒடுக்கும் சமூகப் பிரிவுக்கும், ஒடுக்குமுறைக்கும் சார்பானதல்ல. மாறாக ஒடுக்கும் பிரிவுக்கும், ஒடுக்குமுறைக்கும் எதிரானது. இந்த வகையில் மார்க்சியம் எங்கும் எதிலும் முரண்கொண்டதல்ல. இது தன்னளவில் வெளிப்படையானது. முரணற்ற வகையில், அனைத்தையும் தன்னுள் உள்வாங்கி இயங்குகின்றது. சமூகத்தில் நிலவும் அனைத்து ஒடுக்குமுறைகளுக்கும் எதிராகவும், மார்க்சியம் தன்னளவில் போராடுவதை அடிப்படையாகக் கொண்டது. போராடுவதை மறுப்பதல்ல மார்க்சியம். இதை நிராகரிப்பது மார்க்சியமல்ல. சமூகத்தில் நிலவும் அனைத்து முரண்பாடுகளையும், முரணற்ற வகையில் கையில் எடுத்து போராடும் போதுதான், மாhக்சியத்தால் சமூகத்தை முழுமையாக அணிதிரட்ட முடியும். எந்த ஒரு முரண்பாட்;டுக்கும், புரட்சியின் பின் தான் தீர்வு, போராட்டம் என்று மார்க்சியம் கூறுவது கிடையாது. இது ஒரு திரிபு. எந்த ஒரு முரண்பாட்டுக்கும், அதற்குரிய தீர்வையும் முன்வைத்துதான் மார்க்சியம் போராடுகின்றது. புரட்சிக்கு பின் என்று கூறுவது மார்க்சியத்தை திரிப்பவர்களும், மார்க்சியத்தை எதிர்ப்பவர்களும் ஒன்றையொன்று சார்ந்து நின்று கூறுகின்ற புரட்டு அரசியல்.

உதாரணமாக இனவாதத்தை அடிப்படையாகக் கொண்டு "மார்க்சியம்" பேசிய ஜே.வி.பி, புரட்சியின் பின் தமிழ் மக்களின்; இனப்பிரச்சனை தீர்க்கப்படும் என்று கூறியது மார்க்சியமல்ல. குறுந்தேசியம் பேசிய புலி மார்க்சியத்தை மறுப்பதற்காக, தேசிய இனப் பிரச்சனையை "மார்க்சியம்" கவனத்தில் கொள்வதில்லை என்று கூறி எதிர்க்கின்ற, சேறடிக்கின்ற புரட்டையும் இந்த அடிப்படையைக் கொண்டு தான்; ஒன்றையொன்று சார்ந்து எழுகின்றது. இதை நாம் தொடர்ந்து பல அரசியல் தளத்திலும், போக்கிலும் காணமுடியும். இப்படி இவை ஒன்றையொன்று சார்ந்து இயங்குவதை, பல தளத்தில் காணமுடியும். பெண்ணியம், தலித்தியம், இனம் …. என்று எங்கும், இது தன்னை இப்படித்தான் வெளிப்படுத்துகின்றது.

இங்கு தங்கள் மேலான அரசியல் விமர்சனத்தை தடுக்க, இதன் மேல் முரணற்ற வகையில் போராடும் மார்க்சியத்தை கொச்சைப்படுத்த கையாளும் தர்க்கங்கள் வாதங்கள் இவை. மார்க்சியத்தை இப்படி குற்றஞ்சாட்டும் எந்தத் தரப்பும், அதன் போதாமை பற்றி கூறும் எந்த தரப்பும், மார்க்சியத்தை முரணற்ற வகையில் கையில் எடுத்து போராடுவதை எவரும் தடுக்கவில்லை. குற்றம்சாட்டுபவர்கள் அதை சரியாக தங்கள் கையில் எடுத்து போராட முடியும். மார்க்சியம் யாருடைய தனிப்பட்ட சொத்துமல்ல. ஆக இதைச் செய்யாது மார்க்சியத்தை குற்றஞ்சாட்டுபவர்கள், குற்றஞ்சாட்டுவதன் மூலம் என்னதான் செய்கின்றனர்? அவர்களின் அரசியல் உள்நோக்கம் என்பது இங்கு வெளிப்படையானதாகின்றது.

மார்க்சியம் பற்றிய தவறான திட்டமிட்ட விளக்கங்களுக்கு அப்பால். சமூகத்தின் முரண்பாடுகளை முரணற்ற வகையில் மார்க்சியம் அணுகுகின்றது. சமூகத்தில் நிலவும் முரண்பாட்டில் ஒன்று பிரதான முரண்பாடாக முதன்மையானதாக இயங்கும் போது, பிரதானமல்லாத மற்றைய முரண்பாடுகள் பிரதான முரண்பாட்டின் ஊடாக தீர்க்கப்படும் வண்ணம் முரணற்ற வகையில் அதற்கான தீர்வையும் உள்ளடக்கித்தான் மார்க்சியம் போராடுகின்றது. இதை மற்றவர்கள் மறுக்கின்றனர். இதை மூடிமறைக்க மார்க்சியம் தான் இப்படி இருப்பதாக குற்றஞ்சாட்டுகின்றனர்.

மார்க்சியம் அடிப்படை முரண்பாடான வர்க்க முரண்பாட்டை அடிப்படையாகக் கொண்டு, அனைத்து முரண்பாட்;டையும் முரணற்ற வகையில் ஒருங்கிணைத்து போராடுகின்றது. இங்கு அனைத்து முரண்பாட்டிலும் நிலவும் அடிப்படை முரண்பாடான வர்க்க முரண்பாட்டை, முரணற்ற வகையில் முன்வைத்தே முரண்பாடுகளை கையாளுகின்றது. இதற்கு அப்பால் அடிப்படை முரண்பாடு பிரதான முரண்பாடாக இயங்குகின்ற சூழலும் கூட காணப்படுகின்றது.

இப்படி எல்லா அரசியல் நிலையிலும், சமூக முரண்பாடுகளை முரணற்ற வகையில் ஒருங்கிணைத்து வழிகாட்டுகின்றது. இந்த வகையில் மார்க்சியம் யாருக்கும், எந்த பிரிவுக்கும் சொந்தமானதல்ல. யாரெல்லாம் போராடுகின்றனரோ, யாரெல்லாம் மக்களுடன் சேர்ந்து நிற்கின்றனரோ, அவர்களுக்கு இயல்பில் மார்க்சியம் சொந்தமானதாகின்றது. அவர்களை அது வழிகாட்டுகின்றது. இந்த வகையில் யாருக்கும், எந்தச் சமூகப் பிரிவுக்கும் எதிரானதல்ல. மார்க்சியம் எதை தன்னளவில் அடிப்படையாகக் கொண்டு இருக்கின்றதோ, அதைத் தாண்டி மார்க்சியத்தை விளக்கவோ குறுக்கிக் காட்டவோ முடியாது. மார்க்சியம் அனைத்து முரண்பாடுகள் மீதும் முரணற்ற வகையில் செயல்படுத்துவதைக் கோருகின்றது, அதை நிபந்தனையாக்குகின்றது.

இங்கு இதற்கு எதிரான இரு உதாரணத்தை எடுப்போம்;.

1.தேசிய இனப்பிரச்சனையிலான இன முரண்பாட்டில், ஒடுக்கப்பட்ட இனம் ஜக்கியத்தையும், அவர்கள் சுயநிர்ணய அடிப்படையில் பிரிந்து செல்வதை ஒடுக்கும் இனம்; முன்வைக்காத அரசியலும் இங்கு மார்க்சியமல்ல. இந்த வகையில் மார்க்சியமல்லாத இந்தப் போக்கு விமர்சனத்துக்கு உள்ளாகின்றது. இந்த வகையில் மார்க்சியமல்லாத இனியொரு-புதியதிசை அரசியலை, நாம் மார்க்சியமல்லாத குறுந்தேசிய இனவாதமாக பார்க்கின்றோம். இங்கு அரசு சார்பு "தலித்திய"வாதிகள் வேறு ஒரு தர்க்கத்தில் கூறுவது போல், இதை "வெள்ளாள மார்க்சியம்" என்று கூறமுடியாது. இதற்கு அப்பால் இதை "தமிழ் மார்க்சியம்" என்றோ, "ஆணாதிக்க மார்க்சியம்" என்றோ, "புலம்பெயர் மார்க்சியம்" என்றும் கூறமுடியாது. இப்படி இங்கு "வெள்ளாள மார்க்சியம்" என்று கூறும் கூற்றின் அரசியல் சாரம், தனிப்பட்ட நபரின் சாதி அடையாளம் மூலம் கூறுகின்ற குறுகிய வக்கிரமான சாதி அரசியலாகும்;. புலிப் பினாமிகளும் புலிப் புத்திஜீவிகளும் கருத்துக்களை எதிர்கொள்ள முடியாத போது, "சிங்களவனுக்குப் பிறந்தவன்" என்ற கூறுகின்ற அதே அரசியல்;தான் இதுவும்.

2. அரசுசார்பு "தலித்திய" தை எடு;த்தால், அரச எதிர்ப்பு தலித்தியத்தில் இருந்து இது முற்றிலும் நேர்மாறானது. அரசுசார்பு தலித்தியத்தை முற்றாக எதிர்க்கும் மார்க்சியம், அரசு எதிர்ப்பு தலித்தியத்தை விமர்சனத்துடன் தன் அணியாகவே இனம் காண்கின்றது. இங்கு இந்த வேறுபாட்டை இனம்கண்டு கொண்டு அணுகுவது மிக முக்கியமானதும், அடிப்படையானதுமாகும். அனைத்து சமூக முரண்பாடுகளிலும், இந்த அளவுகோல் மிக முக்கியமானது.

வர்க்க அமைப்பை எதிர்க்காத, மார்க்சியத்தில் இருந்து விலகியது இந்த அரசியல் போக்கு. இந்த வகையில் மார்க்சியத்துடன் விலகி நின்று செயல்படுகின்ற அணி. குறித்த முரண்பாட்டை மட்டும் அடிப்படையாகக் கொண்டு அரசை எதிர்க்கும் பிரிவுகளை மார்க்சியம் முரணற்ற வகையில் ஆதரிக்கின்ற போது, அதன் முரணான போக்கு மீதான விமர்சனத்துடன் தான் அதை அணுகுகின்றது.

இதற்கு மாறான அரசு சார்பு தலித்தியத்தை மார்க்சியம் எதிரியாகத்தான் காண்கின்றது. புலியை முன்னிறுத்திக் கொண்டு, புலியல்லாத அனைவரையும் நட்பு சக்தியாக இனம் காண்பது கிடையாது. இதை அரசியல்ரீதியாக இனம் காண முடியாதவர்கள் அரசியலில் தற்குறிகளாகவே தொடர்ந்தும் இருக்கின்றனர். மறுதளத்தில் இதைப் புரிந்து கொண்டு பிழைத்துக் கொள்ளும் பிரமுகராக பலர் இருக்கின்றனர். இது தான் அவர்களின் அரசியல் இருப்பிடமாகும். 71 பேர் கையெழுத்திட்ட அறிக்கையின் பின்னாலும், இது தான் பிரதான போக்காக குணாம்சமாக இயங்குகின்றது. புலியை மையப்படுத்தி வெளிப்படும் இந்தக் குறுகிய அரசியல் கூட்டுகள் மற்றும் அரசியல் செயல்பாடுகள், மக்களைச் சார்ந்து நிற்பதை அரசியல் ரீதியாகவே குழிபறிக்கின்றது.

இந்த அரசியல் பின்னணியில் செயல்படுபவர்கள், மார்க்சியத்தை சுருக்கியும் குறுக்கியும் அடையாளப்படுத்தும் அரசியல் என்பது, குறுகிய மக்கள்விரோத அரசியலாகும். இதை மார்க்சியத்தின் பெயரிலும், மார்க்சியத்தை மறுப்போரும் எந்த வேறுபாடுமின்றி தொடர்ந்து செய்கின்றனர்.

புலிப் பாசிசம், தான் அல்லாத அனைத்தையும் அழித்தபோது, அதில் தப்பிப் பிழைத்து சுதந்திரமாக இருந்த பிரிவினர், மக்களுடன் தமக்கு இருந்த குறைந்தபட்ச அரசியல் உறவையும் அக்கறையையும் படிப்படியாக துறந்தபோது, அதை நியாயப்படுத்தும் வகையில், மார்க்சியத்துக்கு எதிரான திரிபுகளையும் வசைபாடல்களையும் கொண்டதே அவர்களது அரசியலானது. இதற்கு உதவும் வண்ணம் இந்தியாவில் மக்களை சார்ந்து செயல்படாத பிழைப்புவாத பிரமுகர்களின் மார்க்சிய விரோத கோட்பாடுகள், இவர்களுக்கு வழிகாட்டியது.

இப்படித்தான் மக்களுக்கு வழிகாட்ட வக்கற்றுப் போனவர்கள் மார்க்சியத்தைத் தூற்றினர். அரசியல் மாற்று எதுவுமற்ற அரசியல் வெளியை மக்கள் மத்தியில் புலிக்கு நிகராக உருவாக்கி, புலிப் பாசிசத்துக்குப் பின்னால் மக்களை அணிதிரளுமாறு வழிகாட்டினர். புலிகளிடம் இவர்கள் கோரிய "ஜனநாயகம்" மக்களுக்காக போராடுவதற்காக அல்ல, தங்கள் பிரமுகத்தனத்தை தக்கவைக்கும் மக்கள்விரோத அரசியலாக அவை மாறியது. இயல்பில் அரசு சார்பாகவே மாறியது.

அரசு-புலி பேச்சுவார்த்தை, அதைத் தொடர்ந்து யுத்தம், யுத்தத்தின் பின், மிகத் தெளிவாக அரசு ஆதரவு "ஜனநாயகமாக" இது தன்னை குறுக்கி வெளிப்படுத்தியது. மக்களைக் கொல்லவும், புலியை அழிக்கவும்; துணை நின்ற இவர்களது "ஜனநாயகம்" அரசுக்கு ஆதரவாக வெளிப்பட்டது. மக்களுக்காக போராடுவதற்காக அல்ல, மக்களை ஒடுக்கவே ஜனநாயகம் என்பதை நடைமுறையில் இவர்கள் வெளிப்படுத்துகின்றனர். இன்று அரசை ஆதரிக்கின்ற, அதற்கு அமைவான கோட்பாடுகளைக் கொண்டு, தங்களை வெளிப்படுத்தும் பிரிவுகள் தான், மார்க்சியத்தை கோணல் மாணல் கொண்ட ஒன்றாக இட்டுக்கட்டிக் காட்ட முற்படுகின்றனர். இந்த அரசியல் பின்னணியிலான அரசு ஆதரவுத் தலித்தியம், அரசு எதிர்ப்புத் தலித்தியத்தில் இருந்து வேறுபடுகின்றது. குறுந் தமிழ் தேசியம் முஸ்லிம் மக்களுக்கு இழைத்த கொடுமை மீதான அக்கறையிலும், அரசு ஆதரவுப் பிரிவின் அக்கறையில் இருந்து அரசு எதிர்ப்புப் பிரிவுகளின் அக்கறை முற்றிலும் நேர்மாறானது. இதற்கு மாறாக இரண்டையும் ஒன்றாகக் காண்பதுவும், காட்டுவதும் அரசின் இன்றைய அரசியலாக இருக்க, அரசியல் தற்குறிகளின் பலிபீடமாக இது இயங்குகின்றது. இங்கு மக்களை ஏய்த்துப் பிழைக்கும் பிரமுகர்களின் வாழ்விடமாக இது இருக்கின்றது.

இந்த அரசியல் பின்னணியில் அரசு ஆதரவுக் கோட்பாடுகள் இயங்குகின்றது. அரசுக்கு எதிராக மக்களைச் சார்ந்து நின்று போராடும் மார்க்சியத்தை, அரசுக்குச் சார்பான நிலையில் நின்று கொச்சைப்படுத்துவதும், கோணல்மாணலாக கொண்ட ஒன்றாகக் காட்டுவது தொடர்ச்சியாக அரங்கேறுகின்றது. இதற்கு மார்க்சியத்தின் பெயரில் இயங்கும், மார்க்சியமல்லாத போக்கையும், புலிக்கு எதிரான புலியெதிர்ப்பு அணிச்சேர்க்கையையும் பயன்படுத்தி, அரசுக்கு ஆதரவான அரசியல் அங்குமிங்குமாக கொப்பளிக்கின்றது. அது தத்துவார்த்தம் சார்ந்த ஒன்றாக தன்னை வெளிப்படுத்தி நிறுவனப்படுவதை அம்பலப்படுத்தி போராடுவது, இன்று அவசரமானதும் அவசியமானதானதுமாகின்றது.

பி.இரயாகரன்

02.02.2012