06292022பு
Last updateபு, 02 மார் 2022 7pm

பேச்சுவார்த்தை என்ற பேரினவாத நாடகத்தில் கூட்டமைப்பின் ஒப்பாரி

இனப்பிரச்சனை இலங்கையில் கிடையாது என்பதே அரசின் கொள்கை. அதனால் அரசிடமும், ஆளும் கட்சியிடமும் பேசுவதற்கு எதுவுமில்லை. ஆக தமிழ்மக்களை ஒடுக்குவதைத் தவிர, அதனிடம் வேறு எந்தத் தீர்வும் கிடையாது. இதுதான் உண்மை.

இலங்கையின் பிரதான முரண்பாடான இன முரண்பாட்டை பேசித் தீர்க்க தயாரற்ற அரசு, தானாக முன்வந்து ஒரு தீர்வை முன்வைக்க தயாரற்ற அரசு, ஒடுக்கித் தீர்வு காணமுனைகின்றது. யுத்தம் மூலம் புலியை வென்ற அரசு, அதேபாணியில் தமிழ் மக்களை ஒடுக்கியே வெல்ல முனைகின்றது. இதற்கு ஒரு நாடகம். அதில் ஒப்பாரி வேஷம் கூட்டமைப்புக்கு. இன முரண்பாட்டையும், இனப் பதற்றத்தையும் உருவாக்கி, இராணுவ ஆட்சியைத் தொடர்ந்து தமிழ் பிரதேசத்தில் தக்கவைப்பதன் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வெல்வதே அரசின் கொள்கை.

அரசு, தீர்வு என்பது இதைத்தான். இப்படி நாம் தருவதை, வாய்பொத்தி ஏற்றுக்கொள்வது தான் தீர்வு. இப்படி நாட்டை ஆளும் கட்சி இனப்பிரச்சனைக்கு வேறு எந்தத் தீர்வையும் முன்வைக்கவில்லை. இதற்கு வெளியில் 1987 இலிருந்து நடைமுறையில் உள்ள மாகாண சபையை தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர். அதைப் பற்றியே பேசுகின்றனர். ஆக தொடர்ந்து ஒடுக்குவது இயல்பான தீர்வாகின்றது.

இது இப்படி இருக்க, யூ.என்.பி உட்பட இலங்கையின் எந்தக் கட்சிகளும் இலங்கை இனப்பிரச்சனைக்கு தங்கள் சொந்தத் தீர்வு எதையும் முன்வைக்கவில்லை. ஜே.வி.பியும், ஏன் ஜே.வி.பியில் இருந்து பிரிந்தவர்கள் கூட தமிழ்மக்களின் இனப் பிரச்சனைக்கு தங்கள் சொந்தத் தீர்வை முன்வைக்கவில்லை. இவர்கள் அரச ஒடுக்குமுறையை முன்னிறுத்தி தமிழ் மக்களுக்குள் ஆள்பிடிக்கும் அரசியலை தான் முன்நின்று நடத்துகின்றனர்.

 

அரசு தன் அதிகாரம் மூலம் சலுகைகள் கொடுத்து ஆள்பிடிக்கின்றது என்றால், ஜே.வி.பியும், ஜே.வி.பியில் இருந்து பிரிந்தவர்களும் அரச ஒடுக்குமுறையை முன்வைத்து ஆள்பிடிக்கின்றனர். முரணற்ற வெளிப்படையான தங்கள் அரசியல் வேலைத்திட்டத்தை முன்வைத்து மக்களை அணிதிரட்டவில்லை.

இப்படி இலங்கையின் பிரதான இனமுரண்பாடு மீதான அரசியல் மோசடிகள் அங்குமிங்குமாக அரங்கேறுகின்றது. இந்தப் பொது அரசியல் விளைவால் தன்னியல்பாகவே தமிழினவாத கட்சிகள் செல்வாக்கு பெறுகின்றது. தானாக வெற்றி பெறுகின்றது.

பேச்சுவார்த்தை நடத்திய அரசு, தன் பேச்சுவார்த்தையில் இருந்து வெளியேறுவதை கூட யுத்தமுனையில் கொன்ற அதே பாணியில்தான் செய்கின்றது. இதற்கு முன் பேசி உடன்பாடு கண்ட எந்த விடையங்களையும், தன் வாக்குறுதிகள் எதையும் அமுல்படுத்தியது கிடையாது. தானாக வாக்குறுதி அளித்த எந்த விடையமும் தீர்வு கண்டது கூட கிடையாது.

பேச வேண்டிய விடையங்களுக்குள், இது பேச முடியாது என்று தன்னியல்பாக முன்கூட்டி அறிவிக்கின்றது. பிறகு பேச அழைப்பது வேடிக்கை. இங்கு பேச என்னதான் இருக்கின்றது? இதைப் பற்றி பேச முடியாது, தரமுடியாது, என்ற கூறும் அரசுதான், பாராளுமன்ற தெரிவுக் குழு மற்றும் செனட்டில் பிரச்சனையைத் தீர்க்க முடியுமென்கின்றது.

தரமுடியாது, பேச முடியாது என்று முன்கூட்டியே முடிவெடுக்கும் அரசு, அதைப் பாராளுமன்ற தெரிவுக்குழுவில் பேசுவதற்கு கூட இடமில்லை. இப்படித்தான் அனைத்து உண்மையும் இருக்கின்றது.

இந்த நாடகத்தில் நடிக்கும் கூட்டமைப்போ சர்வதேச மத்தியஸ்தம் வேண்டும் என்று ஒப்பாரி வைக்கின்றது. வேடிக்கையாக இல்லை. புலிகள் மூன்றாம் தரப்பு தங்களை மீட்கும் என்று காத்துக் கிடந்த அதே வக்கற்ற அரசியல். சொந்த மக்களை நம்பாத அரசியல்.

அரச ஒடுக்குமுறையால் தன்னியல்பாகவே இனவாக்குகளை பெற்று நிற்கும் கூட்டமைப்பு இப்படித்தான் அரசியல் நடத்துகின்றது. குறைந்தபட்சம் அரசின் எதிர்க்கட்சிகளுடன் கூட தீர்வு விடையத்தில் இணக்கப்பாட்டுக்கு வரமுனையவில்லை.

அரசுக்கு எதிராக தன் சொந்த மக்களை அணிதிரட்டவில்லை. சொந்த மக்களை அணிதிரட்டுவதன் மூலம், மக்களின் அன்றாட பிரச்சனைகள் ஊடாக போராடுவதன் மூலம், மக்கள் தீர்வு காணும் வண்ணம் அணுகப்படவில்லை. சிங்கள மக்களிடம் தங்கள் நியாயத்தை எடுத்துச் செல்லவில்லை. இதற்குள்தான், இந்த நடைமுறை வழிகளில் தமிழ்மக்கள் பிரச்சனைக்கு நியாயமான தீர்வைக் காணமுடியும்.

அரசு இனவொடுக்குமுறையை தீர்வாக கொண்டு செயல்படும் நிலையில், கூட்டமைப்பு ஒப்பாரி மூலம் தமிழ் மக்களுக்கு தீர்வைக் காட்ட முனைகின்றனர்.

 

பி.இரயாகரன்

30.01.2012


பி.இரயாகரன் - சமர்