Language Selection

பி.இரயாகரன் -2012
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

தூக்கில் போடும் அலுக்கோசு போல்தான், அப்துல்கலாம் என்ற அலுக்கோசும். சமூகத்தையும், மனித உரிமைகளையும் தூக்கில்போடும் "அறிவு"சார் ஆளும் வர்க்க அலட்டல்கள். இந்தியாவின் ஆசியுடன் மகிந்த குடும்பம் நடத்தும் கொலைகார பாசிச ஆட்சியின் வக்கிரத்துக்கு ஏற்ப, அனுமானாக இலங்கையில் ஆட்டம் போட்டது அப்துல்கலாம் என்ற குரங்கு. "தலைசிறந்த விஞ்ஞானி', "அறிவாளி" என்று கூறி, பூனூல் போட்ட கூட்டம் கூடி கும்மியடிக்கும் கூட்டத்தின் துணையுடன் நின்று கூறுகின்றார்

1. இலங்கையில் மும்மொழியைக் கற்றலே, இனப்பிரச்சனைக்கு தீர்வு என்று

2. இலங்கை கடலில் வாரத்தில் (கிழமையில்) மூன்று நாள் வீதம் இலங்கை இந்தியா மீனவர்கள் மீன்பிடிப்பதன் மூலம் பிரச்சனையைத் தீர்க்கலாம்

என்று தன் அறிவால், விஞ்ஞான அறிவால் கண்டுபிடித்து முன்வைக்கின்றார்.

"அறிவாளி" "விஞ்ஞானி" "முன்னாள் ஜனாதிபதி" என்று பூனூல் போட்ட கும்பலில் அங்கீகாரத்துடன், தனது மூடத்தனத்தைக் கொண்டு மக்களை முட்டாளாக்க முனைகின்றார். நேர்மையும், உண்மையும், சமூகப்பற்றுமற்ற ஒரு அலுக்கோசு, மனித உரிமைகளை யாழ்ப்பாணத்து கோமாளிகளுடன் சேர்ந்து தூக்கில் போட அழைக்கின்றது. சமூக அறமோ, சமூக அறிவோ, சமூகப் பற்றோ அற்ற அப்துல்கலாம் போன்ற மூடர்கள், மக்களின் முதுகில் குத்தி பிழைக்கும் அலுக்கோசுத்தனத்தைத் தவிர வேறு எதையும் முன்வைப்பது கிடையாது.

இலங்கையில் இனப்பிரச்சனை பற்றி அப்துல்கலாம்

மும்மொழியைக் கற்றல் மூலம் இனப்பிரச்சனையைத் தீர்க்க முடியும் என்று கூறுகின்ற, அடி முட்டாளை இங்கு காண்கின்றோம். இங்கு பல மொழிகளைக் கற்றல் என்பது வேறு. அதாவது மொழிகளைக் கற்கின்ற தேவையும், அவசியமும் வாழ்வதற்கு என்ற எல்லைக்கு அப்பால் அல்ல. பரஸ்பரம் சேர்ந்து வாழ்வதற்கான இயல்பான சூழல், மாற்றுமொழிக் கற்றலை, இனக்கலப்பை இயல்பானதாக்குகின்றது. இதுவல்வாத மொழிக் கற்றல் பற்றிய குறுகிய கண்ணோட்டம் என்பது, இன ஒடுக்குமுறையில் மற்றொரு பரிணாமம். இன ஓடுக்குமுறை தான், இயல்பான மொழி கற்றலைத் தடுக்கின்றது.

மறுதளத்தில் இனவொடுக்குமுறை மொழியைக் கற்பதை தடுப்பதில் இருந்து உருவாவதில்லை. மொழியைக் கற்பதால் இனவொடுக்குமுறை இல்லாமல் போய்விடுவதுமில்லை. இனத்தின் மீதான் இனவொடுக்குமுறை என்பது, ஒரு இனம் தன் சமூக பொருளாதார பண்பாட்டுடன் வாழ்வதற்கான உரிமையை மறுப்பதில் இருந்து தொடங்குகின்றது.

இங்கு மும்மொழியைக் கற்றல் என்ற கோரிக்கை என்பது, ஒடுக்கும் இனத்தின் ஒடுக்குமுறைக்கு இணங்கிப் போகக் கோருவதுதான். அதாவது இனத்தில் அடையாளத்தை பல முனையில் அழிக்கின்ற இன்றைய அரசின் செயலுக்கு மற்றொரு கம்பளம் தான் அப்துல்கலாம் முன்வைத்த மும்மொழிக் கொள்கை.

அப்துல்கலாம் போன்ற முதுகெலும்பு இல்லாத கூட்டம், சிங்களத்தில் பேசிக் காட்டி முதுகு சொறிவது போல் ஒரு இனத்தை வாழக் கோருவது அலுக்கோசுத்தனமாகும்.

ஒரு இனத்தின் உரிமைகளையும், இயல்பான மனித வாழ்வையும் அங்கீகரிப்பதனால் தான், மொழியை கற்றலையும், இனம் கடந்த ஜக்கியத்தையும், இனக்கலப்பையும் இயல்பாகவே மக்கள் தேர்ந்தெடுப்பார்கள். அப்துல்கலாம் போன்ற மூடர்களுக்கு இது தெரிவதில்லை. இதனால் "அறிவாளிகளாக" இருக்கின்றனர். ஒரு இனத்தின் உரிமைகளையும், இயல்பான மனித வாழ்வையும் அங்கீகரிக்காத மொழிக் கொள்கை, மொழித் திணிப்பாக, இன அழிப்பின் அங்கமாகத் தான் செயல்படும். அதைத்தான் அப்துல்கலாம் என்ற அலுக்கோசு செய்கின்றது.

மீனவர் பிரச்சனையும் தீர்வும்

முதலில் இலங்கைக் கடலில் மூன்றுநாள் இந்திய மீனவர்கள் மீன் பிடிக்கலாம் என்று கூறுகின்ற, ஒரு நாட்டின் எல்லையை மதிக்கத் தவறுகின்ற, இலங்கை மீனவர்கள் உரிமையை ஏறி மிதிக்கின்ற வக்கிரத்தைப் பார்க்கின்றோம். இந்தியக் கடலில் அத்துமீறி இந்திய மீனவர்களைக் கொன்ற இலங்கை கடற்படையின் அதே அத்துமீறலை ஒத்தது இது.

அடுத்து மீனவர் பிரச்சனை என்ன? அதாவது இந்த "அறிவாளிக்கு" தெரியுமா என்றால் அதுவுமில்லை. மீனவர் பிரச்சனை என்ன?

1. இந்திய மீனவர்களை இலங்கை அரசு கொன்றதும், தாக்குவதும் தொடர்பானது.

2. எல்லை கடந்து மீன்பிடித்தல் தொடர்பானது.

3. தடைசெய்யப்பட்ட வள்ளம், வலை கொண்டு மீன்பிடித்தல் தொடர்பானது.

இப்படித்தான் இலங்கை இந்திய மீனவர்கள் பிரச்சனை உள்ளது. இப்படி இருக்க "அறிவாளி" வைக்கும் தீர்வு என்ன. வாரத்துக்கு மூன்று நாள் மீன்பிடி என்பது முட்டாளாக செயல்படும் அலுக்கோசுத்தனத்தைத் தவிர, இது வேறு எதுவுமல்ல.

கொன்ற மீனவர்கள் பற்றிய அக்கறையற்ற, அதைக் கண்டிக்கத் திறனற்ற, கொன்றவனுடன் கூடி சிங்களத்திலும் பிதற்றல். சமூகக் கண்ணோட்டமற்ற, பிழைப்புக்கேற்ற உளறல். எல்லை கடந்த அத்துமீறலை நியாயப்படுத்தும், இந்திய விஸ்தரிப்புவாத திமிர் கொப்பளிக்க, இலங்கைக் கடல் வளத்தை சூறையாட மூன்று நாள் வழிவிடக் கோருகின்றார்.

இந்த மூன்று நாளும் தடைசெய்யப்பட்ட வள்ளம் வலைப் பயன்பாட்டை இலங்கைக் கடலில் கோருகின்ற ஒரு அலுக்கோசு 'விஞ்ஞானி"தான் இந்த அப்துல்கலாம். தடைசெய்யப்பட்ட வள்ளமும், வலையும் கடல்வளத்தை மீன்வளத்தை அழிக்கும் என்பது கூட தெரியாத முட்டாள் "விஞ்ஞானி". மூன்று நாள் கடலை அழித்த பின், இலங்கை மீனவர்கள் எதைப் பிடிப்பது. தடைசெய்யப்பட்;ட வள்ளம், வலையைக் கொண்டு மீன்பிடியை நிறுத்தக்கோரியும், அதை இந்தியா தடைசெய்யக் கோரியும், அவர்களுக்கு மாற்று வழியில் நிவாரணம் வழங்கக் கோரியும் தான், எல்லை கடத்தலுக்கு இலங்கை மீனவர்களின் எதிர்ப்பு இன்றி தீர்வு காணமுடியும்.

இதைக் கண்காணிக்கவும், இதை அமுல்படுத்தும் பொறுப்பும் இலங்கை மீனவர்களின் உரிமையாக இருக்கவேண்டும். இதை மீறி தடைசெய்யப்பட்ட வள்ளம், வலையைக் கொண்டு இலங்கைக் கடலில் மீன் பிடித்தால், அதைப் பறிமுதல் செய்து அழிக்கும் உரிமை இலங்கை மீனவர்களுக்கு இருக்கவேண்டும். இலங்கை மீனவர்கள் எந்த வள்ளம் கொண்டு, எந்த வலை கொண்டு மீன்பிடிக்கின்றனரோ, அதையே இந்திய மீனவர்கள் இலங்கைக் கடலில் பயன்படுத்த வேண்டும்;

தடைசெய்யப்பட்ட வலை மற்றும் வள்ளமற்ற எந்தச் சூழலிலும், 7 நாளும் தங்களுடன் சேர்ந்து மீன்பிடிப்பதை இலங்கை மீனவர்கள் எதிர்க்கவில்லை. அதை அவர்களுடன் பேசித் தீர்க்க முடியும். இந்த அடிப்படையில் அரசுகள் மற்றும் எல்லைகள் பற்றிய மீனவர்கள் கூட்டாக கூடி அணுகவும் முடியும்.

இப்படி எதார்த்தம் இருக்க அப்துல்கலாம் என்ற அலுக்கோசு பிழைப்புக்கேற்ற கடல் அழிவுக் கொள்கையை முன்வைப்பது அதன் அலுக்கோசுத்தனத்தையே எடுத்துக் காட்டுகின்றது.

தமிழகத்தில் கூடங்குளம் அணு மின்நிலையத்துக்கு எதிரான போராட்டத்தை நடத்தும் மக்களுக்கு எதிராக இதே அலுக்கோசுதனத்தைத்தான் அங்கு முன்வைக்கின்றது. "இரவு 1.30க்கு நுழைந்து அதிகாலை 4 மணி வரை ஆய்வு நடத்தி விட்டு, "கூடங்குளம் அணு உலை பாதுகாப்பானது' என்று 40 பக்க அறிக்கையை உடனே வெளியிட்டிருக்கிறார். "கலாம்தான் இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி' என்று நம்பும் பழ.நெடுமாறனால் கூட, அக்னி ஏவுகணையை விஞ்சும் வேகத்தில் கலாம் தயாரித்திருக்கும் இந்த அறிக்கையை நம்ப முடியவில்லை. ரசிய நிறுவனமான "ஆட்டம் ஸ்ட்ராய் எக்ஸ்போர்ட்' டின் இணையதளத்தில் கம்பெனி விளம்பரத்துக்காக அவர்கள் வெளியிட்டுள்ள விவரங்களையே சுட்டுத் தயாரிக்கப்பட்டிருப்பதுதான் கலாமின் அறிக்கை." என்று பு.ஜ இதழ் அம்பலப்படுத்துகின்றது.

இதே அப்துல்கலாம் தன் புலமைமிக்க கண்டுபிடிப்பாக "செர்னோபில் விபத்தில் இறந்தவர்கள் வெறும் 57பேர் மட்டும்தான் எனகின்றார்" ஆனால் அமெரிக்காவின் நியுயார்க் அகாடமி ஆஃப் சயின்ஸ் கூறுகிறது, செர்னோபில் விபத்தால் புற்றுநோய் வந்து 70,000 பேர் உயிரிழந்ததாகவும், இன்றும் பல்லாயிரம் பேர் அதன் பாதிப்பினால் புற்றுநோய்க்கு ஆளாகியிருப்பதாகவும் கூறியது. அத்துடன் உலகில் உள்ள 136 அணு உலைகளைச் சுற்றி வாழும் மக்கள் மத்தியில் செய்யப்பட்ட மருத்துவ ஆய்வில், அவர்களிடையே புற்றுநோயும், ஊனமும் மிக அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. இப்படி இருக்க "கூடங்குளம் அணு உலை பாதுகாப்பானது' என்ற கூறுகின்ற "விஞ்ஞானி"யை, சமூகத்தை கொல்லும் அலுக்கோசாகவே நாம் பார்க்க முடியும். மேற்கில் உள்ள அணு உலைகளை மூடவும், புதிதாக கட்டுவதில்லை என்ற முடிவும் இன்று எடுக்கும் நிலையில், "அணு உலை பாதுகாப்பானது' என்று கூறுகின்ற "அறிவாளியைப்" பார்க்கின்றோம். இப்படி மக்களின் வாழ்வின் உரிமை மீது பிழைப்பு நடத்துகின்ற அலுகோசுத்தனத்தைப் பார்க்கின்றோம். இதே அடிப்படையில் தமிழ் மக்களின் உரிமை மீதும், மீனவர்களின் வாழ்வு மீதும் குதறுகின்ற வக்கிரத்தை காண்கின்றோம்.

 

பி.இரயாகரன்

28.01.2012