புழுத்த அரிசி, அழுகிய காய்கறிகள், வேகாத சோறு, நீர்மோர், பருப்பே இல்லாத சாம்பார், துர்நாற்றமடிக்கும் உணவுக்கூடம் இவைதான் தாழ்த்தப்பட்ட  பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் தங்கிப் பயிலும் அரசு விடுதிகளின் அவலம். தமிழகத்தில் உள்ள 1238 விடுதிகளில் தங்கிப் பயிலும் 74,302 மாணவர்கள் சுகாதாரமற்ற  தரமற்ற இந்த உணவைத்தான் உட்கொள்ள வேண்டியிருக்கிறது. இதனால் மாணவர்கள் அடிக்கடி வாந்தி, வயிற்றுப் போக்கு மற்றும் பிற தொற்று நோய்களால் பாதிக்கப்பட்டு அவதிப்படுகின்றனர்.

திருச்சி  அண்ணா விளையாட்டு அரங்கத்தின் அருகிலுள்ள டாக்டர் அம்பேத்கர் அரசு மாணவர் விடுதியில் தங்கிப் படித்து வரும் 350க்கும் மேற்பட்ட மாணவர்கள் தரமற்ற உணவும் சுகாதாரமற்ற விடுதியும் பற்றி பலமுறை விடுதிக் காப்பாளரிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. குமுறிக் கொண்டிருந்த மாணவர்கள், கடந்த 13.12.2011 அன்று  ஜெகதீசன், சங்கத்தமிழன் உள்ளிட்ட பு.மா.இ.மு.தோழர்களின் தலைமையில், விடுதியின் அருகேயுள்ள ரேஸ்கோர்ஸ் சாலையில் சாப்பாடு தட்டு மற்றும் பாத்திரங்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஒருமணிநேரத்துக்கு போக்குவரத்து பாதிப்புக்குள்ளாகி, மாவட்ட உதவி ஆட்சியர் உள்ளிட்ட அதிகார வர்க்கமும் போலீசாரும் ஓடோடிவந்து பேச்சு வார்த்தை நடத்தினர். விடுதிக் காப்பாளர் தொடங்கி மேலதிகாரிகள் வரை ஊழலில் ஊறித்திளைப்பதை பேச்சு வார்த்தைக்கு வந்த அதிகாரவர்க்கத்திடம் தலைமையேற்ற தோழர்கள் சாடினர். அரண்டுபோன அதிகாரிகள் இந்நிலைமைகளை சீரமைப்பதாகவும், மாணவர்களின் 10க்கும் மேற்பட்ட கோரிக்கைகளை 15 நாட்களுக்குள் நிறைவேற்றுவதாகவும் உறுதியளித்த பிறகே போராட்டம் கைவிடப்பட்டது.

விடுதிகளில் தங்கிப் பயிலும் பிற்படுத்தப்பட்ட  தாழ்த்தப்பட்ட கல்லூரி மாணவ மாணவியருக்கான மாதாந்திர உணவுக் கட்டணத்தை ரூ.750ஆக உயர்த்தி வழங்க உத்தரவிட்டுள்ள பாசிச ஜெயா அரசின் அறிவிப்பு வெறும் பித்தலாட்டம் என்பதையும், அரசின் சலுகைகள் அதிகரிப்பதற்கேற்ப அதிகார வர்க்கத்தின் ஊழலும் கொள்ளையும் மேலும் அதிகரிக்கவே செய்யும் என்பதையும் இப்போராட்டம் அம்பலப்படுத்திக் காட்டியது.  தமிழகமெங்கும் மாணவர்களிடமும் உழைக்கும் மக்களிடமும் இந்நியாயமான போராட்டத்துக்கு ஆதரவைத் திரட்டிவரும் பு.மா.இ.மு., அடுத்தகட்டப் போராட்டத்துக்கு ஆயத்தமாகி வருகிறது.

பு.ஜ.செய்தியாளர், திருச்சி.