"எந்த ஒரு முதலமைச்சருமே தங்களுக்குப் பிறகு புகழ்மிக்க பாரம்பரியத்தை விட்டுவிட்டுச் செல்லவே விரும்புகிறார்கள்'' என்று சொல்கிறார் மகாராட்டிர முதலமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக்; அதாவது, மும்பையைச் சுத்தமாக்கி அழகுபடுத்தி வைத்திருப்பதையே தான் விரும்புவதாக அவர் சொல்கிறார். திருவாளர் தேஷ்முக் ஏதோ ஒரு விதத்தில்தான் மக்களால் நினைவு கூறப்படுவதை விரும்புகிறார்.
நிச்சயம் அவர் நினைவில் வைக்கப்படுவார். ஒரே நாளில் 6,300 வீடுகளை அவரது அரசாங்கம் துடைத்து அழித்திருக்கிறது. தாங்கள் அத்துமீறிக் கைப்பற்றி வைத்திருக்கும் எல்லைப்புற நகரங்களின் மீது, பரபரப்பான சந் தடி மிகுந்த ஒரு பிற்பகல் பொழுதில், இசுரேலிய இராணுவம் பெரிய சாதனையாக எண்ணி எடுக்கின்ற நடவடிக்கையை மட்டுமே இதனோடு ஒப்பிட முடியும்; டாங்கிகள் மற்றும் விமானப்படைத் தாக்குதலின் பின்பலத்தோடு அவர்களின் புல்டோசர்கள் இடித்துத் தள்ளக் கூடிய வீடுகளின் எண்ணிக்கை, இன்னமும் கூட இந்த மும்பை எண்ணிக்கையைத் தொட முடியவில்லை.
மும்பையில் கூட்டம் கூட்டமாக மக்கள் வெளியேற்றப்பட்டிருப்பது தற்போது தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கிறது; பிறகு தொடரும்; இது குடிசைப் பகுதிகளை அகற்றுவது என்பதைவிட மிகப் பெரிய விசயம். வாழ்வு மறுக்கப்பட்ட ஏழைகளை எப்படி மேட்டுக்குடியினர் பார்ப்பார்களோ அப்படிப்பட்டப் பார்வையே அவர்களுடையது; அந்தப் பார்வை 1990ஆம் ஆண்டுகளில் தான் முழுதாக வளர்ந்தது. ஏழைகளை எப்படிப் பார்க்கவேண்டும் என்பதே அந்தப் பார்வை; ஏழை எளியவரின் உரிமைகளையும் துயரங்களையும் வெறுப்புடன் பார்க்கும் கண்ணோட்டத்துடன் அது தொடர்பு கொண்டது; அதிலும் கூட, மற்றவர்கள் அத்துயரம் உண்மையானதுதான் என்று அங்கீகரிக்க வேண்டும்.
அப்படிச் "சில' வீடுகள் இடிக்கப்பட்டதுகூட "விபத்து' என்கிறார் தேஷ்முக். அதாவது, வேண்டுமென்றே செய்யப்படவில்லையாம். ஒருவேளை, இவ்வாறான "விபத்து'க்களே கூட இவருடைய அரசாங்கத்தை "இயற்கையின் சீற்றத்'தால் பாதிக்கப்பட்ட மாநிலம் என்ற பட்டியலில் சேர்க்கக் கூடும். எது எப்படி இருந்தாலும், அநேகமாக மும்பையின் எல்லா அழகான நபர்களுமே தங்களின் முதலமைச்சர் பக்கம் வலுவாக நிற்கிறார்கள்; அதிலேயே ஒரு சிலர் "இடிப்புகள்' நடத்தப்படுவதை திருப்தியோடு வரவேற்று நகரின் பல பகுதிகளில் நடந்த "சுனாமி நிதியளிப்பு விருந்துகளிலும்' கலந்து கொண்டார்கள்.
ஆனால், அவர்களில் ஒரே ஒரு ஆள் கூட இடிக்கப்பட்ட எந்த ஒரு குடிசைப் பகுதியையும் தத்து எடுக்க முன்வரவில்லை; ஒளி உமிழும் கேமராக்களின் முன்னால் "போஸ்' அடிக்கவும் முன்வரவில்லை; வீடிழந்த மக்களுக்கு உதவி செய்யவோ, மிகமோசமான பனிக்குளிரில் உறைந்துபோய் ஒண்டக் குடிசை இல்லாமல் நடுங்கித் தவித்த சின்னஞ்சிறு பிஞ்சுக் குழந்தைகளுக்குக் கூட உதவி செய்யவோ அவர்களில் யாருமே முன்வரவில்லை.
மும்பையின் மேட்டுக்குடி வேறுவிதமாகத்தான் யோசித்தது; நகரை அழகுபடுத்தும் திட்டத்தை வேகமாக முன்னெடுத்துச் செல்ல வேண்டிய அவசரத் தேவை இருப்பதாகக் கருதியது. கடந்த ஆண்டு, 11 மகாராட்டிர முக்கியப் பிரமுகர்கள் ""சேரி மக்கள் ஓட்டுப் போடுவதைத் தடுக்க வேண்டும்'' என்று மும்பை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தார்கள். இந்த ஆண்டு இடிக்கப்பட்ட குடிசைப் பகுதிகளின் மக்களை ஓட்டுப் பட்டியலிலிருந்து நீக்கிவிட வேண்டுமென்று நகராட்சி நிர்வாகமே தலைமைத் தேர்தல் அதிகாரியை வேண்டிக் கேட்டுக் கொண்டிருக்கிறது. (குடியுரிமை அற்ற அயல்நாடு வாழ் இந்தியர்களுக்கும், அதாவது, என்.ஆர்.ஐகளுக்கும் அயல்நாடுகளில் உள்ள இந்திய மரபுவழியினருக்கும் அதாவது, பி.ஐ.ஓக்களுக்கும் ஓட்டுரிமை வழங்குவது பற்றிப் பரிசீலிக்கும் ஒரு சமுதாயத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவது விந்தைதானே?) ஆனால் ஓட்டுப் போடும் தகுதியிலிருந்து நீக்குவது வாக்குரிமையைப் பறிப்பது என்ற உண்மையான சொல்லை யாருமே பயன்படுத்துவதில்லை; உண்மையில், இதைத்தான் அவர்கள் சொல்ல வருகிறார்கள்: ""எப்படியாவது அவர்களிடமிருந்து ஓட்டுக்களைப் பறித்துவிடுங்கள்; "நம்மிடையே அவர்கள் வாழக் கூடாதென்பதை' அதுவே அவர்களுக்குக் கற்றுக் கொடுக்கும்.''
இது ஏழை இந்தியரிடம் உள்ள, ஏழை இந்தியர் பயன்படுத்தும் ஒரே ஒரு ஆயுதத்தையும் கூர் மழுங்கச் செய்யும். அமெரிக்காவில் உள்ள ஏழைகள் போல அல்லாமல், ஏழை இந்தியர்கள் தங்கள் ஓட்டுக்களால் பல மாற்றங்களைச் செய்ய முடியுமென நம்புகின்ற துணிச்சலை தங்கள் வசம் வைத்திருக்கிறார்கள்; இங்கே இதைச் செய்தும் காட்டியிருக்கிறார்கள். 2004 சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி சிவசேனைக் கூட்டணியை மண்ணைக் கவ்வச் செய்ததில் இவர்களுக்குப் பெரும்பங்குண்டு.
அப்படி ஏராளமான பேரை ஓட்டுப் போட விடாமல் செய்துவிட்டாலும் அது அடிப்படை அரசியல் உரிமைகள் பற்றி குறைந்தபட்ச அளவே பிரச்சினைகளை எழுப்பும். ஆனால், அதைச் சமாளிப்பதற்கும் மேட்டுக்குடியின் முன்னணிப் படை வழி வைத்திருக்கிறது. அதாவது, அப்படிப்பட்டவர்களைக் கிரிமினல்மயமாக்கி விடுவது; அடுத்தது, ""பொதுச் சொத்தைக் கொள்ளையடிக்க முயற்சி செய்தார்கள் என்று ஜெயிலுக்குள்ளே பிடித்துப் போடுவது''. இடித்துத் தள்ளப்பட்ட தங்கள் வீடுகளின் முன்னால் செய்வதறியாது திகைத்து முழித்துக் கொண்டிருப்பவர் மீது, அத்துமீறி அந்த இடங்களில் சுற்றிக் கொண்டிருந்ததாகச் சொல்லி கிரிமினல் வழக்குகள் போட்டு உள்ளே தள்ளிவிடலாம் என்று மும்பை போலீசு உடனே தயாராக வாக்குறுதியும் கொடுத்தது. மேட்டுக்குடியினருக்கு இது திருப்திதான்; ஆனால், அந்த மக்களிடம் ஓட்டுப் போடும் உரிமை இன்னமும் மீதமிருக்கிறதே அதையும் தீர்த்துக் கட்ட மூன்றாவது வழிமுறையும் அவர்களுக்குத் தேவைப்பட்டது.
ஒருவேளை, அதைச் சமாளிக்க, இந்தியா மற்றெல்லா விசயங்களிலும் செய்வதைப் போலவே அமெரிக்க மாதிரியைப் பின்பற்றக் கூடும். மனித உரிமைகள் கண்காணிப்புத் தீர்ப்பாய ஆய்வறிக்கை ஒன்றின்படி, மொத்த அமெரிக்க வாக்காளர்களில் 13 சதவீதமான ஆப்பிரிக்க மரபுவழி அமெரிக்கர்களுக்கு (அதாவது, 14 லட்சம் பேருக்கு), அவர்கள் மீது கிரிமினல் வழக்குகள் இருந்ததால், ஓட்டுரிமை மறுக்கப்பட்டுள்ளது; கிட்டத்தட்ட 15 அமெரிக்க மாகாணங்களில், அப்படிப்பட்ட கிரிமினல் வழக்குகளில் சிக்கியவர்கள் தண்டனைகளை அனுபவித்து முடித்த பின்னரும் கூட அவர்களுக்கு ஓட்டுரிமை மறுக்கப்பட்டது.
அமெரிக்கா ஏறக்குறைய 20 லட்சம் மனித உயிர்களை சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் அடைத்து வைத்திருக்கிறது. உலகில் எந்த ஒரு நாட்டில் இருப்பதையும்விட அதிகமான எண்ணிக்கை இது. அவர்களில் 63 சதவீதம் பேர் ஆப்பிரிக்க மரபுவழி அமெரிக்கர்களும், லத்தீன் அமெரிக்க அல்லது ஸ்பானிய மரபுவழி சேர்ந்தவர்களும் ஆவர். மனதில் வைத்துக் கொள்ளுங்கள் இந்த இரு பகுதியினரும் சேர்ந்து மொத்த மக்கள் தொகையில் 25 சதவீதம் பேர் தேறுவார்கள். வேறுவிதமாகச் சொல்வதானால், நீங்கள் ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் என்றால் எந்த வகையிலாவது சிறைக்குப் போவீர்கள்; ஓட்டுக்களையும் இழப்பீர்கள். ஆப்பிரிக்க மரபுவழி அமெரிக்கர்கள் என்ற இடத்தில் ஏழைகளை வைத்துப் பாருங்கள்; இதுதான் இந்திய மும்பை மேட்டுக்குடியினர் வருங்காலத்தில் செயல்படுத்தப் போகும் திட்டம்.
பாதிக்கப்பட்டவர்களுக்கும் ஓர் எதிர்காலம் உண்டு என்பதையே கூடப் பார்க்காத அலட்சியம் இது அந்த மேட்டுக்குடி மனோபாவத்தின் மற்றோர் அம்சம். ஐ.நா.வின் மக்கள் குடியிருப்புப் பிரச்சினை குறித்த ஓர் ஆய்வறிக்கையின்படி, 2030க்குள் உலக மக்கள் தொகையில் மூன்று நபருக்கு ஒருவர் வீதம் சேரிகளில் வாழும்படி விரட்டப்படுவார்கள்; அவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியராக இருப்பார்கள். சேரியில் வசிக்கப் போகும் அம்மக்கள் கிரிமினல்மயப்படுத்தப்படுவார்களானால், எத்தனையோ கோடி இந்தியர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து தூக்கி எறியப்படுவார்கள். முதலில் அதற்கான சட்டச் சீர்திருத்தங்கள் வரும்; மும்பை மாதிரியை நாடு முழுக்க அமல்படுத்துவார்கள்; பிறகு, இந்தியா, தான் இதுவரை கட்டிய வீடுகளை விட இடித்துத் தரைமட்டமான வீடுகளே அதிகமாக இருக்கும்.
மகாராட்டிர முதலமைச்சர் சொல்கிறார்: "மும்பை நகரம் வளர வேண்டுமானால் மக்கள் சிரமங்களைத் தாங்க வேண்டும்; தியாகங்கள் செய்துதான் தீரவேண்டும்!'' நகரின் கட்டுமானக் கம்பெனிகளோ அல்லது ரியல் எஸ்டேட் மாஃபியாக் கும்பலோ இதனால் சிரமத்துக்குள்ளாகப் போவதில்லை. எல்லாத் தியாகங்களையும் ஏழைகள் தான் செய்யவேண்டும். அந்த நிலைமைக்கு ஏழைகளை விரட்டுகிற சக்தி லேசுப்பட்டதல்ல, அது அதிகாரம் படைத்த சக்தி. குடிசைப் பகுதியில் வாழும் மக்கள் தெரிவிக்கின்ற எல்லா எதிர்ப்புக்களும், எல்லாக் கோரிக்கைகளும் கால் விரல் நுனியால் ஒதுக்கித் தள்ளப்படுகின்றன; குடிசைவாழ் மக்களின் சங்கங்கள், வீட்டுவசதி உரிமை மற்றும் மனித உரிமை அமைப்புகள், அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் என்று 28 அமைப்புக்கள் அடக்கி வாசிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கின்றன. மக்களிடையே கட்சிக்குள்ள ஆதரவு எங்கே சரிந்துவிடுமோ என்ற பீதி (குறிப்பாக, புதுடெல்லி உயர்மட்ட காங்கிரஸ் தலைவர்களிடையே உள்ள பீதி) காரணமாக "இடிப்பு வேலைகளின்' வேகம் கொஞ்சம் மட்டுப்பட்டிருக்கிறது; மேலும் நடந்ததே கூட "ஒன்றிரண்டு இடங்களில் தற்செயலான விபத்து போல் நடந்திருக்கலாம்' என்பதாக திருவாளர் தேஷ்முக்கைப் பேச வைத்தது.
இங்கேயுள்ள பெரிய கட்சிகளின் வர்க்க நலன்கள் கட்சிகளுக்கு அப்பாற்பட்டு உறுதியாகச் சேர்ந்து கொண்டன. காங்கிரஸ் கட்சியின் மேட்டுக்குடி உறுப்பினர்கள், பீதியடைந்துள்ள தங்கள் தொண்டர்களோடு நிற்பதைவிட பால்தாக்கரேவோடுதான் அதிக நெருக்கமாக இருக்கிறார்கள். குடிசைப்பகுதி மக்கள் மீது நடத்தப்படும் பகிரங்க பயங்கரவாத ஆக்கிரமிப்பை சிவசேனைத் தலைவன் தாக்கரே வெளிப்படையாகவே புகழ்ந்து தள்ளுகிறான். ஓயாத நாய்ச் சண்டையிலிருக்கும் காங்கிரஸ் தேசியவாத காங்கிரசு கட்சிகளிடையே கூட இவ்விசயத்தில் அவ்வளவு நெருக்கம். இந்த நடவடிக்கையை எதிர்க்கும் பல அமைப்புக்கள் ஒரு குடையின்கீழ் ஐக்கியப்பட்டுள்ளன பாதிப்புக்குள்ளான குடிசைப்பகுதி மக்களுக்கு நிவாரணம் கிடைக்க, போராட்ட வேகம் கிடைக்க அந்த ஐக்கியமே ஒரு அடிப்படையாக அமையலாம்; இதுதான் தற்போதுள்ள நம்பிக்கை.
இந்த மேட்டுக்குடி மனோபாவத்தின் முக்கியமான மையப்பகுதி ""ஏழைகளுக்கு வாக்குறுதிகள் கொடுப்பதில் எந்தப் பொருளும் இல்லை'' என்ற வாதம். யாருடைய ஓட்டுக்கள் இல்லாது போயிருந்தால் காங்கிரஸ் சர்வ நிச்சயமாக மண்ணைக் கவ்வி அழிந்து போயிருக்குமோ, அப்படிப்பட்ட பல லட்சம் மக்களின் பங்களிப்பு அவ்வளவு இளக்காரமாகப் போய்விட்டது. மத்தியிலே கூட தேசிய ஜனநாயகக் கூட்டணி மீதான வெகுமக்களின் கோப அலைகளின் மீது சவாரி செய்து தான் காங்கிரஸ் ஆட்சி அதிகாரத்துக்கு வந்தது. அதேவீச்சிலேயே "இந்தியா ஒளிர்கிறது' என்ற பாரதிய ஜனதா கட்சியின் முழக்கத்தை எதிர்த்த தன் பிரச்சாரத்தையும் காங்கிரஸ் குழி தோண்டிப் புதைத்தது. இன்று, ஒரு மான்டேக்சிங் ஆகூலிவாலியா கொஞ்சமும் தயக்கமில்லாமல் தண்ணீர் தனியார்மயமாவதை ஆதரிக்க முடிகிறது; ""நலிந்தவர்களின் வாழ்க்கை மோசமாகி விடாதபடி நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்'' என்று முன்பு அவர்கள் பேசியதெல்லாம் வெற்றுவாய்ச் சவடால்கள். அது, ஒரு தேர்தல் காலம்; இது, ஒரு நடைமுறை எதார்த்தம்.
அதனால்தான் குறைந்த அளவேயான பங்களாவாசிகள், பணக்காரர்கள் ஒட்டுப் போடுவதேயில்லை; அவர்கள் வேறு வழிகளில் அரசாங்கத்தை நடத்திக் கொள்கிறார்கள் தேர்தல் மூலம் தேர்ந்தெடுத்து அல்ல. கடந்த 15 ஆண்டுகளாக மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்வதாக வாக்குறுதியளித்த அரசாங்கங்கள் அதிலிருந்து நழுவி ஓடியபோது, அதையே ""சாத்தியமான செயல்பாடு'' என்று ஊடகங்கள் மெச்சிப் புகழ்ந்தன. ஏழைகளிடம் பொய் சொல்வதும் கதைவிடுவதும்தான் இவர்களது நடைமுறைச் சாத்தியமான செயல்பாடு; அதேபோல, குடிசைகளை வலிய அப்புறப்படுத்துவது ""மனித உரிமைகளை அப்பட்டமாக மீறுவதாகும்'' என்ற 1993 ஐ.நா. தீர்மானத்தை உறுதியாகக் காப்பாற்றுவதாகச் சொன்னதைக் காலில் போட்டு மிதிப்பதுதான் அவர்களது நடைமுறைச் சாத்தியமான செயல்பாடு போலும்!
அவர்கள் கூற்றுப்படியே சாத்தியமான புதிய உலகத்தின் பளிச்சென்ற தெளிவான அடையாளம் சுனாமிதாக்கிப் பேரழிவு நடந்து கொண்டிருந்த போது "சென்செக்ஸ்' பங்குச் சந்தை எப்போதுமில்லாத அளவு பெரிய சீற்றத்தோடு உச்சத்துக்கு ஏறியதுதான். எந்தெந்த நாடுகளிலெல்லாம் சுனாமி மிக மோசமாகத் தாக்கியதோ அங்கெல்லாம் சந்தை உச்சத்துக்குப் போனது. என்ன காரணம்? அந்த இடங்களிலெல்லாம் மறு கட்டுமானப் பணிகளில் கிடைக்கக் கூடிய கொள்ளை லாபத்தை "சந்தை' "ஊகித்து'க் கொண்டது.
சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களை மீனவரை நாம் நடத்துகின்ற விதத்தில் அந்த மனோபாவம் பச்சையாக வெளிப்பட்டுவிட்டது. அந்த மக்களுக்கு என்னென்னவெல்லாம் உரிமைகளாகப் போய்ச் சேர வேண்டுமோ, அவை அத்தனையுமே நமது கருணைப் பண்டங்களாக உருமாற்றப்பட்டு அவர்களிடமே வீசப்படுகின்றன; சுகாதாரம், சுத்தமான குடிநீர், துப்புரவு கழிப்பிடங்கள், பள்ளிக்கூடங்கள் அனைத்துமே நமது தயாள குணங்களின் காரணமாக நடக்கின்றன; மனிதனாய்ப் பிறந்தவனுக்கு இவற்றைப் பெற உரிமை உண்டு என்பதனால் அல்ல. உனக்கு ஒரு வீடு கூடக் கிடைக்கலாம், எதனால்? உன் குடும்பத்தில் பாதிப்பேர் சுனாமியால் கொல்லப்பட்டதால்; ஒரு பண்பாடுள்ள தேசத்தின், கண்ணியமான சமூகத்தின் குடிமகனாக அங்கீகரிக்கப்பட்டுக் கிடைக்கின்ற உரிமையால் அல்ல.
திருவாளர் தேஷ்முக்கினுடைய புல்டோசரைவிட வலிய பெரிய விஷயம் ஒன்றுண்டு; அதுதான் புதிய செயல்திட்டம் — கிராமத்திலிருந்து பல லட்சம் மக்கள் வேரோடு பிடுங்கி எடுக்கப்பட்டு அருகில் உள்ள நகரங்களுக்கு விரட்டப்படும் செயல்திட்டம். இந்தியா கட்டியமைத்து வளர்ப்பது வேலை வாய்ப்பு உறுதித் திட்டம் அல்ல; வேலை பறிப்பு உறுதித் திட்டம். விவசாயம் சுருண்டு படுத்துவிட்டது; மக்கள் தங்கள் கோபத்தையும் கொந்தளிப்பையும் — ஏராளமாக ஓட்டுப் போடுவதன் மூலமோ அல்லது ஒரேயடியாகப் புறக்கணிப்பதன் மூலமோ — அதாவது, தங்கள் கருத்துக்களை வெளிப்படையாக முன்வைக்கிறார்கள். இப்படிப்பட்ட காலத்துக்கு ஏற்ற ஒரே அற்புதம் "தேஷ்முக்கின் தத்துவம்'தான் அது, தண்ணீர்க் குழாய்களை முழுவதுமாகத் திறந்துவிட்டு தொடர்ந்து தரையைத் துடைத்துக் கொண்டேயிருப்பது.
எப்போதோ, என்றோ வரப்போகிற, ஊகித்துச் சொல்லக் கடினமான நிகழ்ச்சிகளை எதிர்கொள்ள மிகச் சரியான, முன்கூட்டிய திட்டங்களை வகுக்க நாம் துடிக்கிறோம். ஆனால், "சந்தைக்கு'ச் சலாம் போடுகிறோம்; உடனடி எதிர்காலத்துக்காகத் திட்டமிடுவதை ஒதுக்கி விடுகிறோம்.
இயற்கையிலேயே செழித்து வளரக்கூடிய சதுப்புநிலக் காடுகளையும், மணற்குன்றுகளையும் சிதைத்து அழித்துவிட்டு, கடற்கரை நெடுகிலும் கடலுக்கு எதிராகச் சுவர்களைக் கட்டி எழுப்பத் திட்டம் தீட்டுகிறோம்.
அடுத்ததாக, மும்பையைச் சுற்றிச் சுவர்கள் எழுப்பத் திட்டம் போடலாம் நாகரிகமில்லாத, நலிந்து போன ஏழைகளை வெளியே துரத்துவதற்காக. அப்போது தேஷ்முக்கின் மரபுரிமைச் செல்வமும், நினைவுகளும் பாரம்பரியம் மிகுந்த பாதுகாப்போடு காப்பாற்றப்பட்டுவிடும்.
"இந்து' நாளேட்டில் (5.2.05)
திரு. சாய்நாத் எழுதிய கட்டுரை.
தமிழில்: புதூர் இராசவேல், திலீபன்.