விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகிலுள்ள மண்டபம் கிராமத்தைச் சேர்ந்த நான்கு இருளர் பழங்குடியினப் பெண்கள் மீது பாலியல் வன்முறை ஏவிய கிரிமினல் போலீசாரைக் கைது செய்து தண்டிக்கக் கோரி, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக 5.12.2011 அன்று மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் கடலூர்  திருவண்ணாமலை மாவட்டக் கிளைகள் இணைந்து ஆர்ப்பாட்டத்தை நடத்தின. திருவண்ணாமலை மாவட்ட ம.உ.பா.மையத்தின் செயலரான வழக்குரைஞர் கண்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், பாதிக்கப்பட்ட பெண்களை உடனடியாக மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தாமல் விசாரணை என்ற பெயரில் இரு நாட்கள் இழுத்தடித்ததை அம்பலப்படுத்தியும், குற்றம் சாட்டப்பட்ட போலீசாரை அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தி தண்டிக்காமல், தற்காலிகப் பணிநீக்கம் மட்டும் செய்துள்ளதை எதிர்த்தும் ம.உ.பா. மையத்தின் முன்னணியாளர்களும், ம.உ.பா. மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் ராஜு, விழுப்புரம் பு.மா.இ.மு. தோழர் செல்வகுமார், வி.வி.மு. தோழர் தங்கராசு ஆகியோரும் கண்டன உரையாற்றினர்.

 

 

போலீசின் காமவெறி பயங்கரவாதத்தை எதிர்த்து சேலம் போஸ் மைதானத்தில் 15.12.2011 அன்று  பெண்கள் விடுதலை முன்னணி ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. போலீசு பயங்கரத்துக்கு எதிராகவும் போலீசின் யோக்கியதையை அம்பலப்படுத்தியும் முழக்கங்கள் எங்கும் எதிரொலிக்க, மாவட்டச் செயலர் தோழர் கந்தம்மாளின் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், வாச்சாத்தி தீர்ப்பு வந்து போலீசின் பயங்கரவாத அட்டூழியங்கள் அம்பலமாகியுள்ள நிலையில், போலீசின் எந்த அட்டூழியத்தையும் அம்மா தனது முந்தானையில் மூடிமறைத்து விடுவார் என்ற தைரியத்தில் தான் போலீசார் இப்படி வெறியாட்டம் போட்டுள்ளனர் என்பதைத் தோலுரித்துக் காட்டியும், இப்படியே விட்டால் போலீசு நாய்கள் நம் வீட்டுப் பெண்களையும் கடித்துக் குதறத் தயங்காது என்பதை உணர்த்தியும் முன்னணியாளர்கள் எழுச்சி யுரையாற்றினர்.

காமவெறி பயங்கரவாதப் போலீசாரை முற்றாக வேலை நீக்கம் செய்து, அவர்களின் வாக்குரிமை உள்ளிட்ட அனைத்து உரிமைகளையும் பறித்து தண்டிக்கக் கோரியும், அவர்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்து அத்தொகையிலிருந்து பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் வழங்கக் கோரியும், உழைக்கும் மக்கள் புரட்சிகர அமைப்புகளில் திரண்டு போராட அறைகூவியும் நடந்த இந்த ஆர்ப்பாட்டங்கள் உழைக்கும் மக்களிடம் பெருத்த வரவேற்பைப் பெற்றன.

பு.ஜ.செய்தியாளர்கள்