Language Selection

புதிய ஜனநாயகம் 2012

சிங்கள இனவெறி பிடித்த இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டு வரும் தமிழக மீனவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கக் கோரி, ஸ்டாலின் என்ற வழக்குரைஞர் மதுரை உயர்நீதி மன்றக் கிளையில் தொடுத்த வழக்கில், "தமிழக மீனவர்கள் இந்தியக் கடல் பரப்பிலும், அதைத் தாண்டிய சர்வதேசக் கடல் பரப்பிலும் அச்சமின்றி பாதுகாப்புடன் மீன் பிடிப்பதற்குக் கடலோரக் காவல் படையினர் உரிய பாதுகாப்பு கொடுக்க வேண்டும்.  அதை இந்தியக் கடற்படை கண்காணிக்க வேண்டும்.  இந்த உத்தரவைப் பத்து நாட்களுக்குள் அமல்படுத்த வேண்டும்.' என அந்நீதிமன்றம் அக்டோபர் 14 அன்று இடைக்காலத் தீர்ப்பளித்தது.  இந்தத் தீர்ப்பு வெளிவந்த அடுத்த இரண்டு வாரங்களுக்குள் தமிழக மீனவர்கள் மீது 13  தாக்குதல் சம்பவங்கள் நடந்தன.  இதனால், நீதிமன்றத் தீர்ப்பின் படி உரிய நடவடிக்கை எடுக்கத் தவறிய கடலோரக் காவல்படை மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்குரைஞர் ஸ்டாலின் மனு தாக்கல் செய்தார்.

 

 

இதனையடுத்து இந்தியக் கடலோரக் காவல்படை இவ்வழக்கு தொடர்பாக கடந்த நவம்பர் மாதம் பிரமாண வாக்குமூலப் பத்திரமொன்றை (ச்ழூழூடிஞீச்திடிவ) மதுரை உயர் நீதி மன்றத்தில் தாக்கல் செய்தது.  அதில், "சிங்களக் கடற்படையினர் ஒருபோதும் எல்லை தாண்டி வந்து தமிழக மீனவர்களைத் தாக்கியதில்லை. தமிழக மீனவர்கள் எல்லை தாண்டிச் சென்று இலங்கை கடற்பரப்பில் மீன் பிடிப்பதும், தடை செய்யப்பட்ட வலைகளை மீன்பிடிக்கப் பயன்படுத்துவதும்தான் இப்பிரச்சினைக்கு'க் காரணமெனத் தெரிவித்திருப்பதோடு, இப்பிரச்சினைக்குத் தீர்வாக, "தமிழகத்தை ஒட்டியுள்ள இந்திய இலங்கை சர்வதேச கடற்பரப்பில் தமிழக மீனவர்கள் மீன் பிடிப்பதைத் தடை செய்ய வேண்டும்; இதனை மீறும் மீனவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றும் குறிப்பிட்டிருந்தது.

கொலைகார சிங்களக் கடற்படையை உத்தமர்களாகவும், தமிழக மீனவர்களை கிரிமனல் குற்றவாளிகளாகவும் காட்டும் அயோக்கியத்தனம் ஒருபுறமிருக்க, பாக். நீரிணையிலும் கச்சத் தீவையொட்டியுள்ள கடற்பகுதியிலும் காலங்காலமாக மீன் பிடித்துவரும் தமிழக மீனவர்களின் பாரம்பரியமிக்க உரிமையை மறுப்பதன் மூலம், அவர்களின் வாழ்வாதாரத்தையே நசுக்கிவிட இந்திய அரசு விரும்புகிறது என்பதைத்தான் இவ்வாக்கு மூலம் எடுத்துக் காட்டுகிறது.  சிங்களக் கடற்படை இந்தியாவைப் பார்த்து, "நண்பேன்டா' எனக் குத்தாட்டம் போடுவது நமது மனக்கண் முன் விரிகிறது.

தமிழக  மீனவர்கள் இந்த வாக்குமூலத்தைத் திரும்பப் பெறக் கோரித் தமிழகக் கடலோரப் பகுதியெங்கும் ஆர்ப்பாட்டங்களை நடத்தியதையடுத்தும்; தமிழக அரசு இந்த வாக்குமூலத்திற்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்ததையடுத்தும் கடலோரக் காவல் படை இவ்வழக்கு தொடர்பாக புதிய வாக்குமூலமொன்றை டிசம்பர் மாதத்தில் தாக்கல் செய்தது.

கடலோரக் காவல்படை உண்மையை உணர்ந்து, தனது தவறைத் திருத்திக் கொண்டு புதிய வாக்குமூலப் பத்திரத்தைத் தாக்கல் செய்யவில்லை.  தமிழகத்தையொட்டியுள்ள இந்திய  இலங்கை சர்வதேசக் கடற்பரப்பில் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்வதைத் தடை செய்ய வேண்டும் என்ற அதனின் அடா வடித்தனமான ஆலோசனையை மட்டும் நீக்கிவிட்டு, தமிழக மீனவர்களை கிரிமினல் குற்றவாளிகளாகச் சித்தரிக்கும் தீய எண்ணத்தோடுதான் அப்படையின் புதிய வாக்குமூலப் பத்திரமும் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

சிங்களக் கடற்படை தங்களைத் தாக்கும்பொழுது, அது பற்றி உடனடியாகத் தங்களிடமுள்ள வீ.எச்.எஃப். என்ற தகவல் தொடர்புக் கருவி மூலம் கடலோரக் காவல் படைக்குத் தமிழக மீனவர்கள் தகவல் கொடுப்பதில்லை. ஆனால், சிங்களக் கடற்படை தமிழக மீனவர்கள் எல்லை தாண்டிச் செல்லும் ஒவ்வொரு முறையும் எங்களுக்குத் தகவல் தருகிறார்கள் எனக் கூறும் காவல்படை, கடந்த ஜூன் மாதம் தொடங்கி அக்டோபருக்குள் தமிழகத்தைச் சேர்ந்த 17,102 படகுகள் எல்லைதாண்டி வந்து இலங்கை கடற்பரப்பில் மீன் பிடித்திருப்பதாக சிங்கள அரசு கூறி வருவதையே தமிழக மீனவர்கள் எல்லைதாண்டிச் செல்கிறார்கள் என்ற தனது குற்றச்சாட்டுக்கு ஆதாரமாகக் காட்டியிருக்கிறது.

தமிழக மீனவர்கள் எல்லை தாண்டிச் செல்வதாகவே ஒப்புக்கொள்வோம். இக்"குற்றம்' பற்றி கடலோரக் காவல்படைக்குத் தகவல் கொடுக்கும் சிங்களக் கடற்படை, அம்மீனவர்களைக் கையும்களவுமாகப் பிடித்து கடலோரக் காவல்படையிடம் ஒப்படைக்காமல், அடித்துத் துரத்துவதையும் சுட்டுக் கொல்வதையும் எந்தச் சட்டம் நியாயமென்று கூறுகிறது?  இந்திய  இலங்கை கடல் எல்லையில் 24 மணி நேரமும் ரோந்து வந்து கொண்டிருப்பதாகக் கூறும் கடலோரக் காவல் படை, சிங்களக் கடற்படை தகவல் கொடுத்தவுடனேயே விரைந்து சென்று தமிழக மீனவர்களைக் கையும் களவுமாக இது வரை ஒருமுறைகூடப் பிடித்ததில்லையே?  தமிழக மீனவர்களுக்கு எதிராக கடலோரக் காவல்படை காட்டும் "ஆதாரங்கள்' குறித்து இவை போல பல கேள்விகளை நீதிமன்றத்தில் எழுப்பினால், அப்படை அசடு வழிய நிற்கத்தான் முடியும்.

சிங்களக் கடற்படை எல்லை தாண்டிவந்து தமிழக மீனவர்களைத் தாக்கியிருக்கும் சம்பவங்கள் ஏராளம் உண்டு.  சிங்களக் கடற்படையினரின் அக்கிரிமினல் குற்றங்களை மூடிமறைக்கும் நோக்கத்தோடுதான் தமிழக மீனவர்கள் எல்லைதாண்டிச் செல்வதாக ஊதிப் பெருக்குகிறது, கடலோரக் காவல் படை. 1974  இல் செய்துகொண்ட ஒப்பந்தப்படி கச்சத் தீவு பகுதியில் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்வதற்குத் தடையேதும் கிடையாது என ஒருபுறம் சொல்லிக் கொண்டு, இன்னொருபுறம் அந்தப்பகுதியில் மீன் பிடிப்பதை எல்லைத் தாண்டிச் செல்லும் கிரிமினல் குற்றமாகக் காட்ட முயலுவது கடைந்தெடுத்த பித்தலாட்டத்தனமாகும்.

தமிழக மீனவர்கள் தாக்கப்படும் ஒவ்வொரு முறையும் அது பற்றி தமிழக போலீசிடம் புகார் அளிக்கப்பட்டு, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படுகிறது.  இந்திய அரசு இப்புகார்கள் பற்றி எந்தவிதமான மேல்நடவடிக்கையும் எடுக்காமல் குப்பையாகப் போட்டு வைத்திருப்பதை மறைத்துவிட்டு,  தமிழக மீனவர்கள் தம் மீதான தாக்குதல் பற்றி புகார் கொடுக்காமல், ஊடகங்களின் மூலம் ஊதிப் பெருக்கி விளம்பரம் தேடிக் கொள்கிறார்கள் என அபாண்டமாகப் பழிபோடுகிறது, கடலோரக் காவல்படை. தமிழக மீனவர்கள் தாங்கள் தாக்கப்படுவதையும், சகோதர மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதையும், தமது படகுகளும், வலைகளும், பிடித்து வைத்திருந்த மீன்களும் நாசப்படுத்தப்பட்டதையும் ஊடகங்களின் மூலம் வெளிச்சத்துக்குக் கொண்டு வரவில்லையென்றால், இந்திய அரசு இது போன்ற சம்பவமே நடக்கவில்லை என்றல்லவா சாதித்திருக்கும்?

500  க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் சிங்கள இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டு, அது குறித்த விசாரணைகூட நடக்காத நிலையில், அவ்வாறு கொல்லப்படுவதற்குத் தமிழக மீனவர்கள் எல்லைதாண்டுவதுதான் காரணமென்றும், எனவே அதனைத் தடுப்பதன் மூலம்தான், அதாவது தமிழக மீனவர்களின் வாழ்வாதார உரிமையைப் பறிப்பதன் மூலம்தான் இப்படுகொலைகளைத் தடுக்க முடியும் என்ற இந்திய அரசின் வாதம், அதன் நயவஞ்சகத்தை மட்டுமல்ல, இந்திய ஆளும் கும்பலின் தமிழின வெறுப்பையும் எடுத்துக் காட்டி விட்டது.

. ரஹீம்