இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் பவுத்தத்தை வீழ்த்திய பார்ப்பனக் கொடுங்கோன்மையின் புதிய அவதாரத்தை எதிர்த்து இன்று களத்தில் நின்று கொண்டிருப்பவர்கள் கம்யூனிஸ்டு புரட்சியாளர்கள் — நேபாளத்தின் மாவோயிஸ்டுகள். கபிலவாஸ்துவில் செங்கொடி. நேபாளத்தின் பெரும்பான்மையான மாவட்டங்களில் எங்கும் மாவோயிஸ்டுகளின் செல்வாக்கு!
தனது அதிகாரத்தின் நாட்கள் எண்ணப்படுவதைப் புரிந்து கொண்ட நேபாளத்தின் ஆளும் வர்க்கம், தனக்கு அடிமையாக வாழச் சம்மதிக்காத மக்களை வேட்டையாடுகிறது. கபிலவாஸ்துவின் கிராமப்புறங்களில் மட்டும் 800 வீடுகள் எரிகின்றன. நூற்றுக்கணக்கான வீடுகள் இடித்துத் தள்ளப்பட்டிருக்கின்றன என்று அறிவிக்கிறார் மாவோயிஸ்டு மத்தியக் கமிட்டியின் தகவல் தொடர்பாளர் கிருஷ்ணபகதூர்மகாரா.
கபிலவாஸ்து ஒரு உதாரணம். பிரதமர் நீக்கப்படுவதாகவும் அடுத்த 3 ஆண்டுகளுக்கு மன்னராட்சி அமல் செய்யப்படுவதாகவு ம் கடந்த பிப்ரவரி 1ஆம் தேதியன்று நேபாள மன்னர் ஞானேந்திரா தொலைக்காட்சியில் அறிவித்துக் கொண்டிருந்த அந்தக் கணமே வெளிப்படையான இராணுவ அடக்குமுறை தொடங்கிவிட்டது. நேபாளத்தின் எல்லாத் தொலைபேசிகளும், இணையத் தொடர்புகளும் துண்டிக்கப்பட்டன. பத்திரிகைகள், வானொலிகள், தொலைக்காட்சிகள் அனைத்தும் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டன. பேச்சுரிமை, எழுத்துரிமை, அமைதியாகக் கூடும் உரிமை அனைத்தும் தடை செய்யப்பட்டன. ""மன்னரையும், இராணுவத்தையும் நேரடியாகவோ மறைமுகமாகவோ விமர்சிப்பவர்கள் இராணுவத்தால் கைது செய்யப்படுவர்; சொத்துக்கள் உடனே பறிமுதல் செய்யப்படும்'' என்கிறது மன்னரின் அவசரச் சட்டம்.
முன்னாள் பிரதமர்கள் 5 பேர் உள்ளிட்டு எல்லா கட்சித் தலைவர்களும், மனித உரிமை அமைப்பினரும், பத்திரிக்கையாளர் சங்கத் தலைவரும் கைது செய்யப்பட்டு விட்டனர்.
மாவோயிஸ்டுகள் மீதும் அவர்களை ஆதரிக்கின்ற மக்கள் மீதும் நேபாள இராணுவம் செலுத்தும் அடக்குமுறை புதியதல்ல; மாவோயிஸ்டுகளையும் அவர்களது ஆதரவாளர்களையும் கடத்திச் சென்று தடயம் ஏதுமின்றிக் கொன்றொழிப்பதை தனது செயல்தந்திரமாகக் கொண்டிருக்கிறது நேபாள இராணுவம்.
""இனி மன்னருக்கு எதிராகப் பேசுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மாவோயிஸ்டுகள் என்று அழைக்கப்படுவார்கள்; அவ்வாறே நடத்தப்படுவார்கள்'' என்கிறது நியூயார்க் டைம்ஸ். எல்லா முதலாளித்துவக் கட்சிகளும் தடை செய்யப்பட்டிருப்பது இதற்கான சான்று. ""வர்க்க முரண்பாடுகள் கூர்மையடையும்போது இடைநிலை என்பது சாத்தியமற்றதாகும்'' என்ற வரலாற்று உண்மைக்கும் இது இன்னொரு நிரூபணம்.
ஜனநாயகத்தை உருவாக்கமுடியாட்சி!
""மாவோயிஸ்டுகளுடன் மீண்டும் பேச்சு வார்த்தையைத் தொடங்குவதற்கு பிரதமர் தவறி விட்டார்; நிலைமையைக் கையாளும் திறமை அரசியல்வாதிகளுக்கு இல்லை'' என்பதுதான் இந்த மன்னராட்சிப் பிரகடனத்தை நியாயப்படுத்த மன்னர் ஞானேந்திரா முன்வைக்கும் நியாயம்! ""அமைதியும் பாதுகாப்பும் இன்றி தேர்தல் நடத்த முடியாது; தேர்தல் நடத்தாமல் ஜனநாயக அரசை நிறுவ முடியாது; எனவே அமைதியை நிலைநாட்டத்தான் இந்த மன்னராட்சிப் பிரகடனம்'' என்று விளக்கம் தருகிறார் மன்னரால் நியமிக்கப்பட்ட வெளியுறவுத்துறை அமைச்சர் ரமேஷ் நாத் பாண்டே. அதாவது, ஜனநாயகத்தை நிலைநாட்டும் பொருட்டுதான் சர்வாதிகாரத்தைப் பிரகடனம் செய்திருக்கிறாராம் மன்னர்!
இரண்டாவது முறை அதிபராகப் பதவியேற்ற ஜார்ஜ் புஷ் தனது 21 நிமிட தொலைக்காட்சி உரையில் 27 முறை "சுதந்திரம்' என்ற சொல்லை ஜெபித்தாராம். மன்னர் ஞானேந்திரா தனது தொலைக்காட்சி உரையில் "பலகட்சி ஜனநாயகம்' என்ற சொல்லை 11 முறை பயன்படுத்தி ஜனநாயகத்தின் பால் தான் கொண்டிருக்கும் விசுவாசத்தை உறுதி செய்திருக்கிறார்.
நேபாளத்திலிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பித்து டெல்லி வந்திருக்கும் சுஜாதா கொய்ராலாவோ (நேபாள காங்கிரசு கட்சித்தலைவர் கிரிஜா பிரசாத் கொய்ராலாவின் மகள்) ""நேபாள மன்னராட்சியை 60 ஆண்டுகளாக நாங்கள் பாதுகாத்தோம். எங்களுக்கு இந்தக் கதியா?'' என்று புலம்பியிருக்கிறார்.
ஜனநாயகத்தைக் கொண்டு வரத் "துடிக்கும்' மன்னர்! மன்னராட்சியைப் பாதுகாத்ததாக வாக்குமூலம் தரும் "ஜனநாயக வாதி'! குடியரசுக்கும் முடியரசுக்கும் ஓர் எழுத்துதான் வேறுபாடு என்பதென்னவோ உண்மைதான். அதற்காக இப்படியா?
அப்படித்தான். நேபாள "ஜனநாயகத்தின்' வரலாறே அப்படித்தான். "அரசியல் நிர்ணய சபை' என்பது 1950இல் அன்றைய நேபாள மன்னர் திரிபுவன் ஷா மக்களுக்கு வழங்கிய வாக்குறுதி. 1990 வரை பலவிதமான பித்தலாட்டங்கள் மற்றும் அடக்குமுறை மூலம் நேபாளத்தின் நிலப்பிரபுத்துவச் சக்திகள் மன்னராட்சியைத் தக்கவைத்துக் கொண்டன. 1990இல் கிளம்பிய ஜனநாயகத்துக்கான மக்கள் இயக்கம், சில சீர்திருத்தங்களுக்கு இணங்குவதைத் தவிர வேறுவழியில்லை என்ற நிலையை மன்னர் பிரேந்திராவுக்கு உருவாக்கியது. அரசியல் நிர்ணய சபை தேர்ந்தெடுக்கப்படவில்லை. ஆனால், அரசியல் சட்டம் இயற்றப்பட்டது. மன்னராட்சி, "அரசியல் சட்டத்திற்குட்பட்ட மன்னராட்சி'யாக அவதாரம் எடுத்தது. தோற்றத்தில் இங்கிலாந்தின் அரசமைப்பை ஒத்திருந்த போதும் உள்ளடக்கத்தில் நாடாளுமன்றத்தை விஞ்சும் அதிகாரத்தை மன்னனுக்கு வழங்குவதாகவே இந்த அரசியல் சட்டம் அமைந்திருந்தது.
1990 அரசியல் சட்டத்தை இயற்றும் குழுவின் உறுப்பினராயிருந்த துங்கனாவின் சொற்களில் கூறுவதானால், ""ஓட்டைகளை அடைக்க நினைத்தோம்; ஆனால் அவை பெரிதாகிவிட்டன.''
முடியாட்சியின் கோவணமாக ஜனநாயகம்!
ஓட்டைகள் தம்மைத்தாமே பெரிதாக்கிக் கொள்வதில்லை. சமூகத்தில் நிலப்பிரபுத்துவச் சுரண்டலும், சாதி ஆதிக்கமும் இம்மியளவும் மாறாமல் பாதுகாத்துக் கொண்டே, முடியாட்சிக் கொடுங்கோன்மையின் அம்மணத்தை மறைக்கும் கோவணத் துணியின் பாத்திரத்தைத்தான் நேபாள ஜனநாயகம் ஆற்றியிருக்கிறது.
1991 தேர்தலில் நேபாளத்தின் போலி கம்யூனிஸ்டு கட்சி பிரதான எதிர்க் கட்சியாக வந்தது. மாவோயிஸ்டுகளோ 9 தொகுதிகளில் வென்றிருந்தனர். ஆளும் கட்சியான நேபாள காங்கிரசை ஆதரித்துக் கொண்டே முடியரசுவாதக் கட்சியையும் ஊட்டி வளர்த்தார் மன்னர் பிரேந்திரா. மாவோயிஸ்டுகள் வென்ற தொகுதிகள் திட்டமிட்டே புறக்கணிக்கப்பட்டன.
1994 தேர்தல் போலி கம்யூனிஸ்டுகள் தனிப்பெரும்பான்மை பெற்று விடுவார்கள் என்ற நிலையில் மன்னரும், நேபாளி காங்கிரசும் இணைந்து வாக்குச்சாவடிகளைக் கைப்பற்றி தனிப்பெரும்பான்மை கிடைக்கவிடாமல் முடக்கினர். போலி கம்யூனிஸ்டுகள் அமைத்த கூட்டணி ஆட்சி ஒன்பதே மாதங்களில் கவிழ்க்கப்பட்டது.
1996இல் மாவோயிஸ்டுகள் இரு குறைந்தபட்சக் கோரிக்கைகளை முன்வைத்தனர். ""1. மன்னராட்சியை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் 2. நேபாளம் ஒரு இந்து தேசம் என்பதை மாற்றி "மதச்சார்பற்ற குடியரசு' என அரசியல் சட்டத்தைத் திருத்த வேண்டும்.'' இந்த இரு கோரிக்கைகளும் கூட ஏற்கப்படாத நிலையில் அவர்கள் ஆயுதப் போராட்டத்தை அறிவித்தனர்.
2001இல் மன்னர் பிரேந்திராவின் குடும்பம் முழுதும் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டபின் கொலைச் சதியில் சந்தேகிக்கப்பட்ட அவரது தம்பி ஞானேந்திரா அடுத்த மன்னரானார். அவருக்கு நற்சான்று வழங்கினார் நேபாளி காங்கிரஸ் தலைவர் கொய்ராலா. 2002இல் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதிலிருந்து நான்கு பிரதமர்களைப் பந்தாடியிருக்கிறார் ஞானேந்திரா. இந்த வெட்கங்கெட்ட கேலிக் கூத்தில் பதவிக்காக முண்டியடித்த நாடாளுமன்றக் கட்சிகளின் தலைவர்கள் மாவோயிஸ்டுகளின் அறைகூவலை மட்டும் வேண்டுமென்றே புறக்கணித்தனர். முடியாட்சி ஒழிப்பு ஐக்கிய முன்னணியில் அவர்களுடன் இணைய மறுத்தனர். மாவோயிஸ்டு அபாயத்தை எதிர்கொள்ள, மன்னருடன் அனுசரித்துப் போகுமாறு அமெரிக்காவும் இந்தியாவும் வழங்கிய ஆலோசனையை சிரமேற்கொண்டு செயல்பட்டனர்.
பேச்சுவார்த்தையின் போது ""வட்டமேசை மாநாடு, இடைக்கால அரசு, அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தல்'' ஆகிய கோரிக்கைகளை மாவோயிஸ்டுகள் முன்வைத்தனர். இந்த மையமான கோரிக்கைகளைப் பற்றிப் பேசவே கூடாது என்று தனது பிரதிநிதிகளுக்குத் தடை விதித்ததன் மூலம் பேச்சுவார்த்தையை முறித்த ஞானேந்திரா, இப்போது தன்னால் நியமிக்கப்பட்ட பொம்மைகளான பிரதமர்களை "லாயக்கற்றவர்கள்' என்று குற்றம் சாட்டுகிறார்.
கிழிந்தது கோவணம்!
தனது கோரத் தோற்றத்தை மறைத்துக் கொள்ளத் தேவைப்பட்ட நாடாளுமன்ற ஜனநாயகக் கோவணம் கிழிந்து கந்தலாகிவிட்டதால் அதைக் கழற்றி வீசிவிட்டு அம்மணமாக நின்று மக்களை அச்சுறுத்துகிறது நேபாளத்தின் முடியாட்சி. மாவோயிஸ்டு கட்சித் தலைவர் தோழர் பிரசண்டாவின் வார்த்தைகளில் சொல்வதெனில், ""இது நிலப்பிரபுத்துவக் கும்பலின் கடைசிக் கிறுக்குத்தனம்.''
முடியாட்சியை ஒழித்து நேபாளத்தில் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதென்ற கோரிக்கையை இன்று உலகமே ஆதரிப்பது போலத்தான் தோன்றுகிறது. தோற்றம் உண்மையல்ல. ஜனநாயகத்தை நிலைநாட்டுவது என்பதன் உண்மையான பொருள் என்ன?
மன்னராட்சியையும் அதனைப் பதுகாக்கும் நிலப்பிரபுத்துவ சக்திகளையும் ஒழிப்பது, நிலச்சீர்திருத்தத்தை அமல்படுத்துவது, முடியரசு வாதக் கட்சிகளைத் தடை செய்வது, மன்னரின் கட்டுப்பாட்டில் இயங்கும் ராயல் நேபாள இராணுவத்தைக் கலைப்பது, அதன் கொடிய அதிகாரிகளைத் தண்டிப்பது, நேபாளத்தை மதச்சார்பற்ற குடியரசாக அறிவித்து பார்ப்பன இந்துமதத்தின் மேலாதிக்க நிலையை ஒழிப்பது, நிலப்பிரபுத்துவ சாதிதீண்டாமை உறவுகளையும் ஆணாதிக்கக் கொடுமையையும் ஒழித்துக் கட்டுவது, சிறுபான்மை பழங்குடி மக்கள்மீது செலுத்தப்படும் ஒடுக்குமுறைகளைத் தடுத்து நேபாளி தேசிய உணர்வை உருவாக்குவது, தேசியப் பொருளாதாரத்தைக் கட்டியமைத்து ஏகாதிபத்தியங்கள் மற்றும் இந்திய ஆளும் வர்க்கங்களின் மேலாதிக்கத்தையும் சுரண்டலையும் ஒழிப்பது இவை நேபாள ஜனநாயகப் புரட்சியின் அடிப்படைக் கடமைகள்.
மாவோயிஸ்டுகளை ஒடுக்கும் தந்திரமாக ஜனநாயகம்!
இன்று நேபாளத்தில் ஜனநாயகத்தை "மீட்க' விரும்பும் நாடாளுமன்றக் கட்சியெதுவும் மேற்கூறிய முறையில் அந்தச் சமூகத்தையும் அரசமைப்பையும் மாற்றியமைப்பதைத் தம் நோக்கமாகக் கொள்ளவில்லை. பேச்சுரிமை, எழுத்துரிமை, வாக்குரிமை, பல கட்சி ஜனநாயகம் என்ற முதலாளித்துவ ஜனநாயகத்தின் புறத்தோற்றத்தை அதன் ஜிகினா வேலைப்பாட்டை மீட்பதுதான் இவர்களது நோக்கம்.
ஜனநாயகம் என்பது சமூக, அரசியல் புரட்சிக்கான முழக்கமாக அல்லாமல், மாவோயிஸ்டுகளை ஒடுக்குவதற்கான நியாயவுரிமையை வழங்கும் தந்திரமாகவே நேபாளத்தின் "ஜனநாயக'க் கட்சிகளால் முன்வைக்கப்படுகிறது. ஒருபுறம் மன்னரின் இராணுவ ஒடுக்குமுறை; மறுபுறம் அதனை எதிர்த்துப் போர் நடத்தும் மாவோயிஸ்டுகள் என்று இருகூறாகப் பிரிந்து நிற்கும் நேபாளத்தில் இதேநிலை தொடர்ந்தால் தமது சமூக அடித்தளத்தை முற்றிலுமாக இழந்துவிடுவோமென்ற அச்சம் நாடாளுமன்றக் கட்சிகளை வாட்டுகிறது.
அதனால்தான் மாவோயிச "அபாயத்தையும்' மன்னராட்சிக் கொடுமையையும் சமமாகச் சித்தரிக்கிறார்கள். ""மாவோயிச அபாயத்திலிருந்து நாட்டைக் காக்க ஜனநாயகமே முன்நிபந்தனை'' என்று கதறுகிறார்கள். ஞானேந்திராவோ, ""மாவோயிஸ்டுகளை ஒழிப்பதுதான் "ஜனநாயகத்தை' அறிமுகப்படுத்துவதற்கான முன்நிபந்தனை'' என்கிறார். நோக்கத்தில் ஒற்றுமை! வழிமுறையில் வேற்றுமை!
மாவோயிஸ்டுகளை ஒழிப்பது என்பதன் பொருள் சில ஆயிரம் கட்சி ஊழியர்களைக் கொன்றொழிப்பது என்பது மட்டுமல்ல. நேபாளத்தின் ஆகப் பெரும்பான்மையான கிராமப்புறங்களில் நிலப்பிரபுக்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு உழுபவனுக்கு மட்டுமே நிலம் என்ற விதி அமலாக்கப்பட்டுள்ளது. சாதி, தீண்டாமை, பெண்ணடிமைத்தனம், பழங்குடிகள் மீதான ஒடுக்குமுறை அனைத்தும் தண்டனைக்குரிய குற்றங்களாக்கப்பட்டு ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டிருக்கிறது. நிலப்பிரபுத்துவப் பஞ்சாயத்துகள் ஒழிக்கப்பட்டு "விவசாயிகளின் கமிட்டிகள்' அதிகாரம் செலுத்துகின்றன. இவை மாவோயிஸ்டுகளின் சாதனைகள். (பார்க்க: பெட்டிச் செய்தி)
இந்த ஜனநாயகத்தை ஒழிப்பதைத்தான் "மாவோயிஸ்டுகளை ஒழிப்பது' என்று ஒளித்துப் பேசுகிறார்கள். ""சமூகத்தில், உடைமை உறவுகளில் நிலைநாட்டப்பட்டிருக்கும் இந்த ஜனநாயகத்தை ஒழிப்பதுதான் உங்களுக்கு அரசியல் ஜனநாயகம் வழங்குவதற்கான முன்நிபந்தனை'' என்று நாடாளுமன்றக் கட்சிகளிடம் வெளிப்படையாகச் சொல்கிறார் மன்னர். கட்சிகளோ, ""அரசியல் ஜனநாயகம் வழங்குங்கள்; மாவோயிஸ்டுகள் சமூகத்தில் நிறுவியிருக்கும் ஜனநாயகத்தை நாங்கள் ஒழித்துக் கட்டுகிறோம்'' என்று நாசூக்காகத் தெரிவிக்கிறார்கள்.
அலங்காரச் சொல்லாக ஜனநாயகம்!
ஒரு ஜனநாயகப் புரட்சியை தலைமையேற்று நடத்தி நிலப்பிரபுத்துவத்தை ஒழித்துக் கட்டும் தகுதியை முதலாளி வர்க்கம் வரலாற்று ரீதியில் ஏற்கெனவே இழந்துவிட்டது என்ற உண்மை நகைக்கத்தக்க முறையில் இன்னொரு முறை நிரூபிக்கப்படுகிறது.
ஜனநாயகம் என்ற கோரிக்கைக்காக ஒரு வர்க்கம் போராட வேண்டுமானால், நிலப்பிரபுத்துவ ஒழிப்பை அந்த வர்க்கத்தின் நலன் உண்மையிலேயே கோரவேண்டும்.
உள்நாட்டுத் தொழில்வளர்ச்சியே இல்லாத ஒரு நாட்டில், மன்னராட்சியுடன் பல்வேறு இழைகளால் பிணைக்கப்பட்டிருக்கும் வணிகர்களும் வர்த்தகச் சூதாடிகளும் தரகர்களுமே முதலாளி வர்க்கமாக நிலவும் நாட்டில், நிலப்பிரபுத்துவக் கோமான்களே முதலாளிகளாகவும் அறிவுத்துறையினராகவும் முதலாளித்துவ அரசியல்வாதிகளாகவும் மாறுவேடத்தில் தோன்றும் நாட்டில், மன்னர் குடும்பத்தின் ஒரு பிரிவுக்கு எதிராக இன்னொரு பிரிவிடம் தன்னை விற்றுக் கொள்வதையே "முடியாட்சி எதிர்ப்பு நடவடிக்கை' யாகக் காட்டிக் கொள்ளும் நாடாளுமன்றக் கட்சிகள் நிறைந்த நாட்டில் முதலாளித்துவ வர்க்கத்தைப் பொறுத்தவரை "ஜனநாயகம்' என்பது ஒரு அலங்காரச் சொல்லாக மட்டுமே இருக்க முடியும். அல்லது படித்த நடுத்தரவர்க்கத்தின் கருத்தியல் ரீதியான ஆவேசமாக மிதக்கத்தான் முடியும்.
ஏகாதிபத்திய எதிர்ப்பு தேசியம் நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு ஜனநாயகம் என்ற பிரிக்கவொண்ணாத இரண்டு இலட்சியங்களை எதிரெதிராக நிறுத்தி சித்து விளையாடுகின்றன நேபாள ஆளும் வர்க்கங்கள். ஏகாதிபத்தியத்தை நத்திப் பிழைக்கும் தரகு முதலாளித்துவ வர்க்கம் தன்னை மன்னருக்கெதிரான ஜனநாயக சக்தியாகச் சித்தரித்துக் கொள்கிறது. ஜனநாயகத்தை மறுக்கும் நிலப்பிரபுத்துவக் கும்பலோ தேசத்தின் இறையாண்மையைக் காப்பாற்றும் ஒரே நோக்கத்துக்காகத்தான் அரியணையில் அமர்ந்திருப்பதாகக் கூறிக் கொள்கிறது.
புரட்சிப் பாதையில் முன்னேறிவரும் மாவோயிஸ்டுகள் இந்த நாடகத்தை அதன் கடைசிக் காட்சிக்கு இழுத்து வந்துவிட்டார்கள். ""வட்டமேசை மாநாடு, இடைக்காலப் புரட்சிகரக் கவுன்சில், அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தல்'' என்ற மூன்று கோரிக்கைகளை முன்வைத்து ஐக்கிய முன்னணிக்கு அறைகூவல் விடுத்திருக்கிறார்கள்.
"பழைய' ஜனநாயகம் இனி சாத்தியமா?
நாடெங்கும் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ள இந்தக் கோரிக்கைகள், போலி கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட நாடாளுமன்றக் கட்சிகளை நடுங்கச் செய்துள்ளன. பெரும்பான்மையான கிராமப்புறங்களில் நிலப்பிரபுத்துவ ஆதிக்கம் வீழ்த்தப்பட்டு, மக்கள் அதிகாரம் நிலைநாட்டப்பட்டுள்ள சூழலில், வர்க்க ரீதியாகவும் சாதி ரீதியாகவும் ஒடுக்கப்பட்ட விவசாயிகளும், பெண்களும் ஆயிரக்கணக்கில் ஆயுதமேந்தி நிற்கும் சூழலில் உருவாக்கப்படும் ஜனநாயக அரசு பழைய வகைப்பட்ட ஜனநாயக அரசாக இருக்கவோ, நிலைக்கவோ முடியாது. அது ஆளும் வர்க்கங்களைத் தூக்கியெறியும் புதிய ஜனநாயகப் புரட்சியாக முன்னேறியே தீரும் என்ற உண்மை அந்தக் கட்சிகளை அச்சுறுத்துகிறது.
மன்னராட்சிக்கும் மாவோயிஸ்டு புரட்சிக்குமிடையில், கருதப்பட்ட முதலாளித்துவ ஜனநாயகம் ஒரு கானல்நீர் என்பது இதோ, நிரூபணமாகி விட்டது.
மூன்று நூற்றாண்டுகள் முன்னரே முதலாளித்துவப் புரட்சியைத் தொடங்கி மன்னராட்சியøத் துடைத்தெறிந்த மேற்குலக நாடுகளிலேயே ஜனநாயகம் என்பது இன்று பாசிசமாகவும் மேன்மக்கள் ஆட்சியாகவும் நிலைமறுப்படைந்து வருகிறது.
வரலாற்றில் பின்தங்கிப்போய் மன்னராட்சி என்னும் மலத்தை இன்னமும் தலையில் சுமந்து கொண்டிருக்கும் நேபாளத்தின் நாடாளுமன்றக் கட்சிகளோ "ஜனநாயகம் ஜனநாயகம்' என்று இமயத்தின் மீது நின்று கூவுகிறார்கள்.
ஜனநாயகமா, காலனியாதிக்கமா?
புனித புஷ் அவர்களின் வேத வசனத்தில் ஜனநாயகம் என்ற சொல் காலனியாதிக்கம் என்பதற்கான இடக்கரடக்கல். ""மாவோயிஸ்டுகளுடன் கூட்டணி சேராதீர்கள். நேபாளத்தில் ஜனநாயகத்தை இறக்க வேண்டியது எங்கள் பொறுப்பு'' என்கிறது அமெரிக்கா.
""இறங்குமய்யா'' என்று விசுவாசிகள் யாரும் ஜெபிக்காதபோதிலும், காட்மண்டுவில் உடனே வந்து இறங்குகிறார் காலின் பாவெல். அமெரிக்க இராணுவ விமானங்களோ கடந்த இரண்டாண்டுகளாக நேபாளத்தில் தரையிறங்கிய வண்ணமுள்ளன. அதி நவீன ஆயுதங்கள் வந்திறங்குகின்றன. அமெரிக்கா 22 மில்லியன் டாலர், பிரிட்டன் 40 மில்லியன் டாலர் என்று மன்னருக்கு மொய் எழுதுகின்றனர். ஒரு டஜன் அமெரிக்க இராணுவ அதிகாரிகள் நேபாள மன்னரின் இராணுவத்திற்குப் பயிற்சியளிக்கின்றனர்; இராணுவத்தைக் களத்தில் நின்று வழி நடத்துகின்றனர்.
இரண்டாண்டுகளுக்கு முன் மாவோயிஸ்டுகளை நசுக்க முயன்று தோற்று, அவர்களை அழைத்து மன்னர் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும் போதே, ""உங்கள் சார்பில் நாங்களே பேச்சுவார்த்தை நடத்தித் தருகிறோமே; உங்கள் ஆட்களுக்குப் பேசத் தெரியவில்லை'' என்று பகிரங்கமாக அறிக்கை விட்டார் நேபாளத்துக்கான பிரிட்டிஷ் தூதர் ஜெஃப்ரி ஜேம்ஸ். ""பேச்சுவார்த்தை நடத்தாதே'' என்று மறைமுகமாக மிரட்டும் நோக்கில் மாவோயிஸ்டுகளை ""சர்வதேச பயங்கரவாதிகள்'' என்று அறிவித்தது அமெரிக்க அரசு. அதைத் தொடர்ந்து அமெரிக்க நேபாள பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது.
""நேபாளத்தில் கம்யூனிஸ்டு புரட்சியைத் தடுப்பது எப்படி?'' என்ற தலைப்பில் வாஷிங்டனில் மாநாடு நடத்துகிறது அமெரிக்க அரசு.
ஜனநாயகத்திற்காகக் கூப்பாடு போடும் நேபாளத்தின் நாடாளுமன்றக் கட்சியெதுவும் இந்த அமெரிக்க, பிரிட்டிஷ் தலையீட்டை எதிர்க்கவில்லை. தமது உள்நாட்டு விவகாரத்தில் தலையிட்டு தேசத்தின் இறையாண்மையையும் கவுரவத்தையும் கேலிப் பொருளாக்கும் ஏகாதிபத்தியங்களைக் கண்டிக்கவில்லை.
நிலப்பிரபுத்துவக் கொடுங்கோன்மையை நிலைநாட்டுகின்ற முடியரசின் அடியாட்படைக்கு நேபாள இராணுவத்திற்கு ஆயுதமும் பயிற்சியும் அளித்து ஜனநாயகத்தை நசுக்குவதற்குத் துணை நிற்கும் அமெரிக்காவை எதிர்த்துப் போராடவில்லை. மாறாக, அமெரிக்கத் தூதருக்குத் தனது அலுவலகத்தில் வரவேற்பு கொடுத்திருக்கிறது நேபாளத்தின் நாடாளுமன்ற கம்யூனிஸ்டு கட்சியான சி.பி.என். (யு.எம்.எல்). மற்ற முதலாளித்துவக் கட்சிகளைப் பற்றி சொல்லத் தேவையில்லை.
இந்திய ஜனநாயகக் குருகுலம்!
நேபாளத்தின் இந்த நாடாளுமன்றக் கட்சிகளை ஜனநாயகக் கலையில் பயிற்றுவிக்கும் குருகுலம் இந்தியா. இந்திய ஓட்டுக்கட்சிகள்தான் அவர்களது குருநாதர்கள். ஏகாதிபத்திய அடிமைத்தனத்தையும் நிலப்பிரபுத்துவக் கும்பலுடன் நல்லிணக்கத்தையும் பேணிக் கொண்டே "ஜனநாயகம் பேசுவது' எப்படி என்ற கலையை இவர்கள் தில்லியிடமிருந்துதான் கற்றுக் கொள்கிறார்கள்.
பிப்ரவரி முதல் தேதியன்று மன்னர் ஞானேந்திராவின் இராணுவ ஆட்சி அறிவிப்பைத் தொடர்ந்து இந்திய அரசின் அதிகாரபூர்வ அறிக்கை கீழ்க்கண்டவாறு கூறியது: ""மன்னராட்சியும் ஜனநாயகமும் நேபாளத்தைத் தாங்கி நிற்கும் தூண்கள். எனவே ஜனநாயக உரிமைகளை மீண்டும் வழங்கவேண்டும்.''
இதன் பொருள் என்ன? ""மாவோயிஸ்டுகளின் தாக்குதலிலிருந்து மன்னராட்சியை அரசியல் ரீதியாகக் காப்பாற்றிக் கொண்டிருந்த இடிதாங்கிகளான நாடாளுமன்றக் கட்சிகளைத் தடை செய்ததன் மூலம் முதலுக்கே மோசமாகி விட்டதே'' என்ற கவலைதான் இந்த அறிக்கையின் உட்கிடக்கை.
""நேபாளத்தில் முடியாட்சி அகற்றப்பட்டு (பலகட்சி) ஜனநாயகம் நிறுவப்படுவதை இந்தியா ஆதரிக்கிறதா?'' என்ற கேள்விக்கு இந்திய அரசின் வெளியுறவுத்துறைச் செயலர் அளித்துள்ள பதில் இதனைத் தெளிவுபடுத்துகிறது. ""மன்னராட்சியா, ஜனநாயகமா என்பது அவர்களுடைய உள்நாட்டு விவகாரம். ஜனநாயகத்தை யாரும் ஏற்றுமதி செய்ய முடியாது'' என்கிறார் வெளியுறவுத்துறைச் செயலர்.
முடியரசுக்கு ஆயுதம் குடியரசுக்கு "ஆதரவு'!
ஆனால் ஆயுதங்களை ஏற்றுமதி செய்யலாமாம். நேபாள மன்னரின் இராணுவத்துக்கு 4 பில்லியன் டாலர் (சுமார் 20,000 கோடி ரூபாய்) மதிப்புள்ள அதிநவீன ஆயுதங்களை வழங்கியிருக்கிறது இந்திய அரசு (பிரண்ட்லைன், 20.6.03). நேபாள இராணுவமே இந்திய இராணுவத்தால்தான் பயிற்றுவிக்கப்படுகிறது. மாவோயிஸ்டுகளையும் இதர ஜனநாயக சக்திகளையும் ஒடுக்குவதற்காகவே வழங்கப்படும் இந்த உதவி, ஞானேந்திராவின் முடியாட்சியைக் காப்பாற்றுவதற்காகச் செய்யப்படும் உதவியேயன்றி வேறென்ன?
நிராயுதபாணிகளான மக்களை ஆயிரக்கணக்கில் கொலை செய்தது, ஆள்கடத்தல், கற்பழிப்புகள் போன்ற நேபாள இராணுவத்தின் கிரிமினல் குற்றங்களை ஆதாரபூர்வமாகப் பட்டியலிட்டு ஜெனிவாவில் உள்ள மனித உரிமைக் கமிஷன், மார்ச் 2004இல் நேபாள அரசின்மீது கண்டனம் தெரிவிக்க முயன்றபோது, அதைத் தடுத்து நிறுத்திய நாடுகள் இந்தியாவும் அமெரிக்காவும்!
தனது மேலாதிக்கப் பிராந்தியத்துக்குள் அமெரிக்கா நேரடியாக நுழைவது இந்திய ஆளும் வர்க்கங்களுக்கு ஒரு உறுத்தலாக இருந்தபோதிலும் இதற்காக இந்திய அரசு அமெரிக்காவுடன் முரண்படப் போவதில்லை. "கம்யூனிச அபாயம்' அவர்களை ஒன்றுபடுத்தும்.
இதுதான் இந்திய அரசின் யோக்கியதை. தற்போது ஞானேந்திரா அரசுக்கான இராணுவ உதவிகளை நிறுத்தியிருப்பதாக இந்திய அரசு கொடுத்திருக்கும் அறிவிப்பும், ஜனநாயகத்திற்கு வழங்கப்படும் ஆதரவல்ல; தன்னுடைய ஆணைக்குக் கட்டுப்பட மறுக்கும் மன்னனுக்கு ஒரு பிராந்தியத் துணை வல்லரசு விடுக்கும் மிரட்டல் அவ்வளவுதான்.
இறையாண்மையும் தற்சார்பும் கொண்ட ஒரு ஜனநாயக நாடாக நேபாளம் மாறுவதை இந்திய ஆளும் வர்க்கங்கள் ஒருபோதும் சகித்துக் கொள்ளாது. 1990இல் நேபாளத்தில் நடந்த ஜனநாயகத்திற்கான இயக்கத்திற்கு இந்தியா வழங்கிய ஆதரவும், இன்று நேபாள நாடாளுமன்றக் கட்சிகளுக்கு வழங்கிவரும் ஆதரவும் அன்று ஈழப் போராளிகளுக்கு இந்தியா வழங்கிய "ஆதரவுக்கு' ஒப்பானது. நேபாள நாடாளுமன்றக் கட்சிகளிலேயே தனது கையாட்களை உருவாக்கிக் கொள்வதும், "ஜனநாயகக் கட்சிகளை'க் காட்டி முடியாட்சியை மிரட்டிப் பணியவைப்பதும்தான் இந்திய ஆளும் வர்க்கங்களின் நோக்கம்.
1950 இந்திய நேபாள நட்புறவு ஒப்பந்தம் என்பது அந்நாட்டின் நெற்றியில் இந்தியா பொறித்திருக்கும் அடிமைச்சாசனம். இந்த ஒப்பந்தத்தின்படி இரு நாடுகளுக்கும் இடையில் கடவுச்சீட்டு தேவையில்லையென்று இந்த ஒப்பந்தம் வழங்கும் "சுதந்திரம்', ஆயிரக்கணக்கான ஏழை நேபாளிப் பெண்களை பம்பாய் சிவப்பு விளக்குப் பகுதிக்குக் கடத்துவதற்குப் பயன்பட்டிருக்கிறது; நேபாள இளைஞர்களை இந்தியப் பணக்காரர்களின் வீட்டு வாயிலில் அற்பக்கூலிக்குக் காவல் காக்க வைத்திருக்கிறது.
"சுங்கவரி இல்லை' எனும் சுதந்திரமோ இந்தியத் தரகுமுதலாளிகள் நேபாளத்தின் சந்தை முழுவதையும் கைப்பற்றிக் கொண்டு அதை இந்தியாவின் இன்னொரு மாநிலமாகவே நடத்துவதற்கும், நேபாளத்தின் தொழில் வளர்ச்சியை நிரந்தரமாக முடக்குவதற்கும் பயன்பட்டு வருகிறது.
நேபாள மக்களைப் பொருத்தவரை இந்தியா, சிந்துபாத்தின் தோளில் ஏறிய கடற்கரைக் கிழவன். மூன்று புறமும் நேபாளத்தைச் சூழ்ந்திருக்கும் இந்திய நிலப்பரப்பையே தனது மேலாதிக்கக் கிடுக்கிப் பிடியாக மாற்றியிருக்கிறது இந்திய ஆளும் வர்க்கம்.
முடியாட்சிக்குப் பெண் கொடுத்த "ஜனநாயகம்'!
குவாலியர், மேவார் முதலான இந்திய அரச பரம்பரைகளுக்கும் நேபாள மன்னர் பரம்பரைக்கும் இடையிலான இரத்த உறவின் அடிப்படையில் பார்த்தால் இது ஒரு பாசப்பிணைப்பு. (செத்துப் போன இளவரசன் தீபேந்திராவுக்கும் குவாலியர் அரச வம்சத்தின் தேவயானிக்குமிடையிலான காதல், வாசகர் அறிந்ததே. தற்போதைய இளவரசன் பராஸ் ஷாவின் மனைவி ஹமானி, மேவார் இளவரசி.)
அரியணை இழந்த மேற்படி மன்னர்களையும் இளவரசிகளையும், முதல்வர்களாகவும் மத்திய அமைச்சர்களாகவும் வாழ வைத்திருக்கும் காங்கிரசு, பாரதிய ஜனதா போன்ற கட்சிகளுக்கும் நேபாள மன்னர் பரம்பரைக்குமிடையிலான உறவு — சம்பந்தி உறவு. (விஜயராஜே சிந்தியா, வசுந்தரா ராஜே சிந்தியா, மாதவராவ் சிந்தியா, இன்ன பிறர்; மற்றும் குவாலியர் மன்னன் சோறு போட்டு வளர்த்த வாஜ்பாயி.)
சங்கரராமன் கொலையில் குற்றம் சாட்டப்பட்ட ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள், சகோதரனின் குடும்பத்தையே கொன்றொழித்ததாகக் குற்றம் சாட்டப்படும் நேபாள மன்னன் "ஞானேந்திர சரஸ்வதி' சுவாமிகளிடம் தஞ்சம் புகத் திட்டமிட்டதைக் கணக்கில் கொண்டால் இது ஒரு ஆன்மீகப் பிணைப்பு! (அசோக் சிங்கால் நேபாளம் சென்று, உலகின் ஒரே ஹிந்து நாட்டை அழிக்கும் மாவோயிஸ்டுகளைக் கண்டித்துவிட்டு, மன்னர் ஞானேந்திராவுக்கு உலக ஹிந்துக்களின் ஆதரவைத் தெரிவித்துவிட்டு உயிரோடு திரும்பி விட்டார்.)
நேபாளத்துடன் இத்தகைய எண்ணிறந்த பிணைப்புகளைக் கொண்டிருக்கும் இந்திய ஆளும் வர்க்கம், இந்திய நேபாள பாட்டாளி வர்க்க அமைப்புகளுக்கிடையிலான பிணைப்பைக் கண்டு பதறுகிறது. மாவோயிஸ்டுகளின் வெற்றி நேபாள ஜனநாயகத்துக்கு மட்டுமல்ல, இந்திய ஜனநாயகத்துக்கே ஆபத்தானதென்று அலறுகிறது.
நேபாளத்தில் புரட்சி இந்திய ஜனநாயகத்துக்கு ஆபத்து!
வெறும் இரண்டேகால் கோடி மக்கள்தொகை கொண்ட சின்னஞ்சிறு நாட்டில் முன்னேறும் புரட்சி, உலகிலேயே "மிகப் பெரிய ஜனநாயகத்தை அச்சுறுத்துகிறதாம்! விந்தை, எனினும் உண்மை.
இராணுவ உதவியை நிறுத்துவதாக இந்திய அரசு அறிவித்த மறுகணமே நேபாள வெளியுறவுத்துறை அமைச்சர் அறிவித்தார், ""மன்னராட்சி அல்லது மாவேõயிஸ்டு புரட்சி இதுதான் நேபாளத்தின் நிலை'' என்றார். இது வீழ்ச்சியின் விளிம்பில் நிற்கும் மன்னராட்சியின் அலறல் மட்டுமல்ல; இந்தியாவுக்கும் உலக முதலாளித்துவ வர்க்கத்துக்கும் ஞானேந்திரா விடும் மிரட்டல்! உளுத்து உதிர்ந்து கொண்டிருக்கும் நேபாளத்தின் நிலப்பிரபுத்துவக் கும்பல் ஒரு ஏளனப் புன்னகையுடன் உலக முதலாளித்துவத்தைப் பார்த்துக் கேட்கிறது ""ஒரு கம்யூனிசப் புரட்சியைச் சகித்துக் கொள்ள நீங்கள் தயாரா?''
மாவோயிஸ்டுகளுக்கெதிராகத் தன்னுடைய கரத்தை ஏகாதிபத்தியங்கள் வலுப்படுத்தியே தீரும் என்பது ஞானேந்திராவுக்குத் தெரியும். மாட்சிமை தங்கிய மன்னனின் இராணுவத்திடம் உதைவாங்கி ஒத்தடம் கொடுத்துக் கொண்டிருக்கும் நேபாளத்தின் நாடாளுமன்ற ஜனநாயகவாதிகளை அமெரிக்கா நாளை சொடக்குப் போட்டு அழைக்கலாம்; ""மன்னரின் பின்னால் அணிவகுத்து நின்று ஜனநாயகத்தைக் காப்பாற்றுங்கள்!'' என்று அவர்களுக்கு ஆணையிடலாம்; இந்திய அரசும் இதையே கொஞ்சம் பக்குவமாக எடுத்துச் சொல்லும். இப்படியாக, மன்னரால் கழற்றியெறியப்பட்ட "ஜனநாயகக் கோவணம்' தனக்குரிய இடத்தில் தானே வலியச் சென்று ஒட்டிக் கொள்ளும்.
மாவோயிஸ்டுகளுடன் ஐக்கிய முன்னணியா மன்னரின் கூலிப்படையணியா என்பதை ஒவ்வொரு "ஜனநாயக'வாதியும் அங்கே முடிவு செய்துதான் ஆகவேண்டும். ""மூன்றாவது அணி, முற்போக்கு ஜனநாயகக் கூட்டணி'' போன்ற அரசியல் பித்தலாட்டங்களுக்கோ, ""தீர்ப்புகளைத் தள்ளிப் போடுதல், அதிருப்தியைப் பதிவு செய்தல், மையத்திலிருந்து தப்பியோடுதல்'' போன்ற தத்துவார்த்தச் சொல்விளையாட்டுகளுக்கோ அங்கே இடமுமில்லை; "வெளி'யுமில்லை.
நேபாளம் சிவப்பதை ஏகாதிபத்தியவாதிகளாலும், இந்திய ஆளும் வர்க்கங்களாலும் சகித்துக் கொள்ளவே முடியாது. தெற்காசிய மேலாதிக்கம், நேபாளத்தின் சந்தை போன்ற தனது உடனடி நலன்களை மாவோயிஸ்டுகளின் வெற்றியானது கேள்விக்குள்ளாக்கி விடும் என்ற அச்சத்தினால் மட்டுமல்ல, அத்தகைய வெற்றி இந்தியப் புரட்சிகர இயக்கத்திற்கு வழங்கக் கூடிய உந்துதலை எண்ணித்தான் இந்திய ஆளும் வர்க்கம் நடுங்குகிறது. நேபாளம், பீகார், ஒரிசா, ஆந்திரம் என்று ஒரு பிச்சுவாக்கத்தியைப் போல, தனது இதயத்தில் இறங்கும் சிவப்புப் பிராந்தியம் இந்திய அரசின் இரத்தத்தை உறையச் செய்கிறது.
தனியார்மயச் சுரண்டலால் வெடித்துக் கிளம்பும் வர்க்க முரண்பாடுகளின் மீது ஒரு அசட்டு இறுமாப்புடன் அமர்ந்திருக்கிறது சீனத்தின் போலி கம்யூனிச அதிகார வர்க்கம். சீனத்தின் இளந்தலைமுறையை மாவோ இன்னொருமுறை வென்றெடுத்து விடுவாரோ என்ற கவலை அவர்களைப் பிடித்தாட்டும்.
பாசிச இராணுவச் சர்வாதிகாரிகளின் படுகொலைகள் மூலமும், தன்னார்வக் குழுக்களின் ஐந்தாம்படைச் சேவை மூலமும் லத்தீன் அமெரிக்க விடுதலை இயக்கங்களைக் கருக்கியும் நமத்துப் போகவும் வைத்த அமெரிக்கா, அடுத்த எரிமலை தெற்காசியாதான் என்பதை ஏற்கெனவே அடையாளம் கண்டிருக்கிறது. அதனைத் தணிக்க ஏராளமான தொண்டு நிறுவனங்களை ஏவியும் விட்டிருக்கிறது.
மீண்டும் கம்யூனிச பூதம்!
அதற்குப் பிறகும் வெடித்துக் கிளம்புகிறது நேபாளப் புரட்சி. இங்கே இராக்கைப் போல எண்ணெய் வயல்களில்லை. ஆனால் அதனினும் எளிதில் தீப்பற்றக் கூடிய கம்யூனிசம் எனும் எரிபொருள் இருக்கிறது. உலகமயமாக்கத்தால் தீவிரமடைந்திருக்கும் வர்க்க முரண்பாடுகள் தன்னெழுச்சியான முதலாளித்துவ எதிர்ப்புப் போராட்டங்களாக மேற்குலகமெங்கும் தலையெடுத்து வரும் வேளையில், கண்டம் விட்டுக் கண்டம் தாவக் கூடிய இந்தத் தீ அமெரிக்க மேலாதிக்கவாதிகளை அச்சம் கொள்ள வைக்கிறது.
என்ன செய்வார்கள் எதிரிகள்? இனவாத இயக்கங்களையோ, மதவாத இயக்கங்களையோ விலைக்கு வாங்குவதைப் போல மாவோயிஸ்டுகளை விலைக்கு வாங்க முடியாது. இராணுவத்தை அனுப்ப இந்தியா முனையலாம். ஆனால் அதற்கு முன் ஈழத்திலும் காசுமீரிலும் வாங்கிய அடியைக் கனவென்று கருதி மறக்கும் மனப்பக்குவம் இந்திய அரசுக்கு வேண்டும்.
""நேபாள அரசு, ஒரேயொரு மாவட்டத்தைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதற்கே நேபாளத்தின் மொத்த இராணுவமும் தேவைப்படும்'' என்கிறார் நேபாள மனித உரிமை அமைப்பின் சர்மா.
நேபாளத்தின் ஆகப் பெரும்பான்மையான பகுதி மாவட்டங்கள் மாவோயிஸ்டுகளின் செல்வாக்கில் இருக்கிறது என்கிறார் அண்டை நாடான பூடானின் மன்னர்.
""அரசியல் தீர்வுக்குப் பதிலாக இராணுவத் தீர்வுதான் என்று முடிவு செய்துவிட்டால், மாவோயிஸ்டுகளைத் தோற்கடித்தாக வேண்டுமென்றால் ஒரு முழுமையான உள்நாட்டுப் போருக்கு நேபாளம் தயாராக வேண்டும்'' என்கிறார் நேபாளத்திற்கான முன்னாள் இந்தியத் தூதர் அர்விந்த் தியோ.
""மாவோயிஸ்டுகள் நேபாளத்தின் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றும் அபாயம் உண்மைதான்'' என்கிறது மார்ச் 3ஆம் தேதி வெளியிடப்பட்ட அமெரிக்க அரசின் அறிக்கை.
இந்த "அபாய அறிவிப்பு', தெற்காசியாவில் கால் வைக்கத் துடித்துக் கொண்டிருக்கும் அமெரிக்காவின் ஒரு உபாயமும் கூட. வியத்நாமின் காடுகளுக்கும் இராக்கின் பாலைவனத்திற்கும் தீ வைத்த அமெரிக்கக் குண்டுகள் இமயத்தின் மீதும் இறங்கலாம். அதிநவீன ஆயுதங்கள், விதம் விதமான கூலிப்படைகள், மதுப்புட்டிகள், டாலர் நோட்டுகள், ஆணுறைகள் ஆகியவற்றின் துணையுடன் உலகின் ஒரே ஹிந்து தேசத்தைக் காப்பாற்ற புனித புஷ் காட்மண்டுவில் கால் வைக்கலாம்.
பத்துவிரல்களால் பத்து ஈக்களைப் பிடிக்க விரும்பும் அமெரிக்காவின் ஆசையை, மரணத்தை முத்தமிடத் துடிக்கும் அதன் இயல்பான உந்துணர்வை எந்த புத்தனால் தெளிவிக்க முடியும்?
தோண்டிப் புதைத்துவிட்டதாக இறுமாந்திருந்த தருணத்தில், கம்யூனிசப் பூதம் எவரெஸ்டின் மீது ஏறி நின்று எக்காளம் செய்யும்போது ஏகாதிபத்தியவாதிகளால் அதை எங்ஙனம் சகித்துக் கொள்ள முடியும்?
எதையும் செய்வார்கள் எதிரிகள். நாம் என்ன செய்யப் போகிறோம்?
இது ஏதோவொரு நாட்டின் மன்னனுக்கு எதிராக யாரோ நடத்திக் கொண்டிருக்கும் போராட்டமல்ல; போராடிக் கொண்டிருப்பது நமது வர்க்கம். தொழிலாளர்கள், ஏழை விவசாயிகள், பார்ப்பனியத்தால் ஒடுக்கப்படும் தலித் மக்கள், பழங்குடியினர், பெண்கள்! எதிரணியில் மன்னன், பர்ப்பன மதவெறியர்கள், இந்திய ஆளும் வர்க்கம், அமெரிக்க மேலாதிக்கம், இவர்களனைவரையும் நத்திப் பிழைக்கும் நாடாளுமன்றக் கட்சிகள்!
அமெரிக்க இராணுவமும் இந்திய ஆயுதமும் இறங்குவதைத் தடுக்காத தேசிய எல்லை நம்மை மட்டும் எப்படித் தடுக்க முடியும்? வெற்றியை நோக்கி நேபாள மக்கள் ஓரடி எடுத்து வைத்தால் ஒரு வர்க்கம் என்ற முறையில் உலகப் பாட்டாளி வர்க்கம் ஓரடி முன்னே செல்கிறது வெற்றியை நோக்கி.
ஜனநாயகம் என்பது ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை தகரப் பெட்டியில் இரகசியமாய்த் திணிக்கும் காகிதமாகவோ, அறிவாளிகளின் வாயில் உருளும் பொருள் விளங்கா உருண்டையாகவோ இல்லாமல் மக்கள் தம் சொந்தக் கரங்களில் ஏந்திச் சுழற்றும் அதிகாரமாக மாற வேண்டும்; நாம் மாற்ற வேண்டும்.
இந்திய ஆளும் வர்க்கங்களுக்கு எதிராக நாம் தொடுக்கும் போராட்டம், இமயத்தின் உச்சியில் செங்கொடி உயர்வதற்கு நாம் செலுத்தும் பங்களிப்பு. எவரெஸ்டின் உச்சியில் செங்கொடி உயரும். உலகத்தின் கூரைமீது தம் பாதங்களைப் பதித்துப் பழகிய நேபாள மக்கள் இதுகாறும் அங்கே பலவண்ணக் கொடிகளையும் நட்டு வைத்திருக்கிறார்கள். இந்த முறை அங்கே செங்கொடியை நாட்டுவார்கள்.
உயர்ந்த செங்கொடி தாழாமல் தாங்கிப் பிடித்து நிறுத்த வேண்டியது உலகப் பாட்டாளி வர்க்கத்தின் கடமை. நம் கடமை.
தலித் இளைஞர்களின் கையில் துப்பாக்கி!
உழுபவனுக்கு மட்டுமே நிலம்!
சோமாலியாவுக்கு நிகரான வறுமை; எழுத்தறிவின்மையோ 50 சதவீதம்; கிராமப்புறத்தில் சாதிய ஒடுக்குமுறைக்கு ஆளாகும் 25 சதவீத மக்கள் அவர்களில் தீண்டாமைக்கு ஆட்படுத்தப்படும் தலித்துகள் 7 சதவீதம்; 13 வயதில் சிறுமிகள் மணமுடித்துக் கொடுக்கப்படும் இளம்பருவத் திருமணக் கொடுமை; இவையன்றி சிறுபான்மை பழங்குடி மக்கள் மீதான ஒடுக்குமுறைகள் இதுதான் "உலகின் ஒரே இந்து அரசான' நேபாளத்தின் யோக்கியதை!
1990இல் இயற்றப்பட்ட அரசியல் சட்டம் தீண்டாமையை சட்டப்படிக் கூட குற்றமாக அறிவிக்கவில்லை. 205 பாராளுமன்ற உறுப்பினர்களில் சுவாஷ் தர்னால் மட்டும்தான் தலித். ""மாவோயிஸ்டுகள் தீண்டாமை மற்றும் எல்லாச் சாதி ஒடுக்குமுறைகளையும் தண்டனைக்குரிய குற்றமாக்கியிருக்கிறார்கள். சாதி ஒடுக்குமுறை செய்வோரை உண்மையிலேயே தண்டிக்கிறார்கள். தலித் மக்களுக்கு நிலம் வழங்கியிருக்கிறார்கள். அவர்களுடைய செல்வாக்கிற்குக் காரணம் இதுதான்'' என்கிறார் தர்னால்.
""நகரங்களில் மன்னரின் அரசு, மாவோயிஸ்டுகள் என இரண்டு அதிகார மையங்கள் உள்ளன. கிராமங்களில் மாவோயிஸ்டுகள் மட்டும்தான்'' என்கிறார் நேபாள் கஞ்ச் நகரின் ஒரு பத்திரிக்கையாளர். முதலாளித்துவ ஊடகங்களின் மதிப்பீட்டின்படியே மாவோயிஸ்டு படையின் எண்ணிக்கை 29,000. கிராமப்புறங்கள் முழுவதிலும் மக்கள் கமிட்டிகள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றன. பலதார மணம், சாராய உற்பத்தி, கந்துவட்டி, குத்தகை விவசாயம் ஆகிய அனைத்தும் ஒழிக்கப்பட்டு விட்டன. செம்படையின் வீரர்களில் கணிசமானோர் பெண்கள். கிராமங்கள் தலைகீழாகப் புரட்டிப் போடப்பட்டுவிட்டன.
""மாவோயிஸ்டு இராணுவத்தின் வீரர்கள் பெரும்பாலும் ஒடுக்கப்பட்ட சாதியினர்தான். ஒரு தலித் இளைஞனின் கையில் துப்பாக்கி! கிராமப்புறத்தின் அதிகார உறவுகளில் இது ஏற்படுத்தும் மாற்றத்தைக் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியவில்லை'' என்கிறார் தர்னால்.
""மாவோயிச எழுச்சி பழைய சமூகக் கட்டுமானங்கள் அனைத்தையும் தகர்த்து விட்டது. கிராமப்புறங்களில் இனி நிலப்பிரபுத்துவ அதிகாரம் திரும்பவே முடியாது'' என்கிறார், நாடாளுமன்ற கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்த ஹரி ரோக்கா.
இதுதான் ஜனநாயகப் புரட்சி! இந்தப் புரட்சியை ஒழித்து "ஜனநாயகத்தை' நிலைநாட்டத்தான் இந்தியாவும் அமெரிக்காவும் அரும்பாடுபடுகின்றன.
மருதையன்