10022023தி
Last updateபு, 02 மார் 2022 7pm

யாரொடு கூடுவோம்… யாரொடு மோதுவோம்…

பெண்கள் படையணி
எங்கள் மண்ணில் நிமிர்ந்தது
வெந்த உணர்வுகள் வீறுடன் நிமிர்ந்தது
எங்கள் இனத்துப்பெண்
சொந்த நிலத்திற்காய் போராட எழுந்தனள்
கையில் ஏந்திய எறிகணை
காலில் பூட்டிய விலங்கை உடைத்ததோ 
போரிட்ட யுவதிகள்
வீரிட்டு அழும் அவலமாய்
சிங்கத்துக் கூரியவாள் நெஞ்சில் பாய்கிறது
யாரொடு மோதுவோம்

 

புலத்தவர் ஏற்றிய கார்த்திகைதீபமும்
போட்டு ஆடிய கரும்புலி உடைகளும்
சிலமணிநேரம்
தெருக்களில் தூக்கிய புலிக்கொடி வீரரும்
சுருட்டிய சொத்தோடு அடங்கிப்போயினர்
ராஜபக்சகுடும்பம் யானைகள் வீணைகள்
காலம்காலமாய் மேடைபோட்டு
முழங்கியே கழுத்தை திருகுவோர்
யாரொடு மோதுவோம்

மகிந்தகுடும்பத்து துப்பாக்கிக்கு
குண்டுதயாரித்த நிறுவனங்கள் மூடவாபோகிறது?
நந்திக்கடல்வரை குண்டுபோட்ட விமானங்கள்
வானில் கெந்தியா விளையாடும்
மக்கள்பேரவலத்தில் இந்தியா இட்டமுதலீடுகள்
மக்களொடு கொஞ்சியா உறவாடும்
யாரொடு மோதுவோம்

வன்னி வெறிமுடிய
வர்த்தக வலையத்தில் வெடிக்கிறது
புத்தனின் சிலையை எழுப்பியபடியே
வயிற்றுப் பசியால்
எதிர்த்தெழும் மக்களின் குருதிகுடிக்கிறது
யாரொடு கூடுவோம்

வேரொடு வேரடிமண்ணொடு கிடந்துழைத்து
வாழ்வுக்காய் போரிடும் உறவுகள்
சிங்களவர் தமிழர் முஸ்லீம்
மலையகத்துமக்கள் கூடியே சேர்ந்தெழுவோம்
கையொடு கிடக்கும் பலத்தினை பெருக்குவோம்
செங்கொடி அணியாய் உழைப்பவர் கூடுவோம்
இனங்களைப் பிளக்கும் எதிரிகளொடு மோதுவோம்

-கங்கா

 

 

 


கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்