10022023தி
Last updateபு, 02 மார் 2022 7pm

"மீண்டும் போரை முன்னறிவிக்கும் இலங்கை அரசு" என்ற புரட்சிகரமான வாய்ச்சொல் பற்றி லெனின்

"மீண்டும் போரை முன்னறிவிக்கும் இலங்கை அரசு" என்ற தீங்கானதும், காட்டிக்கொடுப்பதுமான அரசியல், திடீர் மார்க்சிய அரசியல் பேசும்; நாவலனால் இனியொருவில் முன்வைக்கப்பட்டது. அதேநேரம் மீண்டும் ஆயுதப்போராட்டம் பற்றி அரசின் எச்சரிக்கைகள் மூலம் பொது அடக்குமுறைகள் ஏவப்படுகின்றது. மக்கள் போராட்டங்களைக் கூட, இந்த "மீண்டும் போர்" ஆயுதம் என்ற அரசியல் பின்னணியில் அரசு ஒடுக்குகின்றது. இதற்கு அரசியல்ரீதியாக உதவும் வண்ணம் "மீண்டும் போரை முன்னறிவிக்கும் இலங்கை அரசு" என்று பௌத்த பேரினவாத வரலாற்றைச் சொல்லி புரட்சிகரமான வாய்ச்சொல் மூலம் யுத்தம் முன்வைக்கப்படுகின்றது. பிரபாகரனின் மாவீரர்தின உரைகள் முதல் புலிகள் நடத்திய யுத்தம் வரை, இப்படி பௌத்த பேரினவாதத்தைக் கூறித்தான் போரை மட்டுமே நடத்தி அழிந்தனர். "மீண்டும் போரை முன்னறிவிக்கும் இலங்கை அரசு" என்றதன் பின்னான அரசியல் சித்தாந்தத்தின் உள்ளடக்கத்தை குறிப்பாக ஆராய்வோம்.

லெனின் "கொரிலாப் போர்" என்ற தனது கட்டுரையில் கூறுகின்றார் "..மார்க்சியம் வெகுஜன நடைமுறையிடமிருந்து கற்றுக் கொள்கின்றது. படிப்பறைகளில் தனிமையிலே "திட்ட ஓழுங்கு செய்பவர்கள்" புனைகின்ற போராட்ட வடிவங்களைக் கொண்டுபோய் மக்களுக்குக் கற்பிக்க மார்க்சியம் எந்தவிதமான பாத்தியத்தையும் கோரவில்லை." என்றார். கற்பனையில் மீண்டும் போர் பற்றியும், போர் தயாரிப்புப் பற்றியும் புரட்சிகரமான வாய்சொல்லால் எழுதி முன்வைக்கின்றனர். வெகுஜன அரசியல் நடைமுறையை நிராகரிக்கின்ற, "புரட்சிகர" வாய்வீச்சு அரசியலை மக்களுக்கு கற்பிக்க முனைகின்ற, தனிமைப்படுத்தப்பட்ட அறிவு சார்ந்த கற்பனை சார்ந்த கற்பிதங்கள் தான் இவை. அரசியல் சதியை தவிர, குண்டு வைப்பதைத் தவிர, இது மக்களை அணிதிரட்டாது. அதற்கு எதிரானது இந்தப் "புரட்சிகர" வாய்வீச்சு. புலிகளின் குண்டு வைத்த தனிநபர் பயங்கரவாத அதே அரசியலுக்கு, "மார்க்சியம" கலந்த "புரட்சிகர" வாய்வீச்சு மூலம் கொம்பு சீவி விடுவதாகும்.

இதையொட்டி லெனின் "வினோதமானதும் உருமுரணானதும்" என்ற தனது கட்டுரையில் "உலகப் புரட்சியின் நலனுக்கு அது உந்தப்படுவது தேவையாயிருக்கின்றது…. உந்தப்படுவது யுத்தத்தால் மட்டுமே முடியும் … புரட்சிகளை "உந்துவதை" எப்போதும் மார்க்ஸீயம் எதிர்த்து வந்திருக்கின்றது. புரட்சிகள் அவற்றை உற்பத்தி செய்கின்ற வர்க்க முரண்பாடுகளின் மிகுந்துகொண்டே போகும் கூர்மையிலிருந்து வளர்கின்றன. அப்படிப்பட்ட தத்துவம், ஆயுதமேந்திய எழுச்சி என்கிற போராட்ட வடிவம் எப்போதும் எல்லா நிலைகளிலும் கட்டாயமாகப் பின்பற்றப்பட வேண்டிய ஓன்று என்கிற கருத்துக்குச் சமமாகும்" என்றார். புரட்சியை உந்துவது, திணிப்பது, கற்பனையில் கற்பிப்பது முதல்கொண்டு போரைப் பற்றி கூறுவது வெகுஜன அரசியலை நிராகரிக்கின்ற, அங்கிருந்து கற்றுக்கொள்ள மறுக்கின்ற அரசியல் சாரமாகும். இது மக்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது. கற்பனையான போர்ப் பிரகடனங்கள், காட்டிக் கொடுக்கும் அரசியலைத்தான் செய்கின்றது. பௌத்த சிங்கள பேரினவாதத்தின் ஊடாக முன்வைக்கும் போர் பற்றிய கற்பனைகள், சமூகத்தின் மற்றைய சமூகக் கூறுகளை நிராகரிக்கின்ற குறுகிய தமிழினவாதத்தால் ஆனாது. இன்று இலங்கை மக்கள் பொதுவாக அனுபவிக்கின்ற ஒடுக்குமுறையை மறுத்து, ஒன்றை மட்டும் முதன்மைப்படுத்துகின்ற அரசியல் கற்பனைகள் புரட்சிகர வாய்சொல்லூடாக முன்தள்ளப்படுகின்றது.

"இன்னொரு போர் தவிர்க்கவியலாதது என்பதை இலங்கை அரசு மறுபடி மறுபடி கூறுகிறது." என்ற கூற்று, போருக்கு வெளியில் மக்கள் போராட்டங்களை போராட்ட வடிவமாக ஏற்றுக்கொள்வதை மறுக்கின்றது. இலங்கை மற்றைய இன மக்களின் போராட்டத்தையும், அதன் இன்றைய யதார்த்தத்தையும் மூடிமறைக்கின்றது. மக்களின் போராட்டங்கள் தான், எந்த வகையான போராட்ட வடிவங்கள் என்பதை தீர்மானிக்கின்றது என்பதை இது மறுதலிக்கின்றது. தனிமையில், தன் அறிவுசார் புலமையில் நின்று "மீண்டும் போரை முன்னறிவிக்கும் இலங்கை அரசு" என்ற கூறி, திடீர் போர் பிரகடனத்தை "புரட்சிகர"மான வாய்ச்சொல்லூடாக முன்வைக்கின்றனர். முட்டாள் பிரபாகரன் கூட இப்படி யுத்தப் பிரகடனம் செய்து தான் சரணடைந்தான். ஆனால் முட்டாள் பிரபாகரனிடம் பெரிய படையாவது இருந்தது. திடீர் அரசியல் பேசும் இவர்களிடம் படை கூட கிடையாது.

லெனின் "இடதுசாரிச்" சிறுபிள்ளைத்தனம்" என்ற தனது கட்டுரையில் "அரசியல் தலைமைக்கு விரும்புகின்றவர்கள் அரசியல் பிரச்சனைகளைப் பற்றி தீர்க்கமாகச் சிந்திக்கத் திறன் பெற்றிருக்க வேண்டும்." என்றார். சிறுபிள்ளைத்தனமான இடதுசாரிய அறிவுசார் பித்தலாட்டங்கள் மூலம், சமூகத்தை அதன் சொந்த நடைமுறைக்குள் செல்வதை தடுக்கும் கற்பனைவாத கோட்பாடுகளை "புட்சிகர" வாய்ச் சொல் மூலம் முன்தள்ளுவது, திடீர் அரசியலின் பின்னான மற்றொரு அரசியல் வெளிப்பாடு.

முள்ளிவாய்க்காலின் பின்னான திடீர் ("மார்க்சிய") அரசியல், திடுதிடுப்பான சமூக அக்கறைகள், பழைய பெருச்சாளிகளின் திடீர் அரசியல் செயற்பாடுகள், அக்கறைகள் சமூகத்தின் உள்ளார்ந்த அரசியல் நீட்சியல்ல. இவை சந்தர்ப்பவாதங்கள், பி;த்தலாட்டங்கள், மோசடிகளாலானது. சமூகத்தின் பலவீனமான இருப்பையும், சூழலையும் பயன்படுத்தி "புரட்சிகர" கோசங்கள், "புரட்சிகர" வாய்வீச்சுகள் மூலம் சமூகத்தை அதற்குள் மூழ்கடிக்க முனையும் அரசியல் மோசடிகளாலானது. இந்த எல்லைக்குள் தான் "மீண்டும் போரை முன்னறிவிக்கும் இலங்கை அரசு" என்று கூறி, போர்ப் பிரகடனம் செய்கின்றனர்.

லெனின் புரட்சிகரமான வாய்ச்சொல் என்ற தனது கட்டுரையில் கூறுகின்றார் "…. பாட்டாளி வர்க்க நபர்களும் குட்டிபூர்ஷவா நபர்களும் இணைந்த ஒரு சேர்க்கையாக, அல்லது கூட்டணியாக, அல்லது பரஸ்பரக் கலவையாக அமைகின்ற காலங்களிலும் ……. பெரும்பாலாக அனுபவிக்கின்ற ஒரு வியாதியே புரட்சிகரமான வாய்ச்சொல்வீச்சு என்பது, …. கோஷங்கள் நேர்த்தியானவை, வசீகரமானவை, போதையூட்டுபவை ஆனால் அவற்றுக்கு ஆதாரம் எதுவும் கிடையாது. புரட்சிகரமான வாய்ச்சொல்லின் இயல்பு இப்படிப்பட்டது."

இந்த இயல்பு தான், இன்று எம்மைச் சுற்றிய அரசியலாக வாய்வீச்சாக இன்று வெளிப்;படுகின்றது. சமூகத்தில் இருந்து இது தொடங்குவது கிடையாது. சமூக எதார்த்தத்தில் இருந்து இது அணுகுவது கிடையாது. தனிமையில், கற்பனையில் புரட்சிகர வாய்ச்சொல் மூலம் புரட்சி பற்றி பேசுகின்றது. கற்பனையில் அறிவு மூலம் போரை முன்னறிவிக்கின்றது.

இந்த வாய் வீச்சு மக்களின் சொந்த அரசியல் நடத்தைகளில் இருந்து எழுவதில்லை. இதை மேலும் லெனின் "புரட்சிகரமான வாய்ச்சொல்" என்ற கட்டுரையில் "வெகுஜனச் சக்திகளைப் பற்றிய, வர்க்க உறவுகள் பற்றிய, ஒரு நுட்பதிட்பமான கணக்கைக் கொண்டு எந்த ஒரு போராட்ட வடிவத்தின் சந்தர்ப்ப பயனையும் நாம் நிர்ணயித்தோம் என்பதிலே எப்போதுமே மார்க்ஸீய வாதிகளாகிய நாம் பெருமைப்பட்டு வந்திருகின்றோம். ஒரு புரட்சியெழுச்சி எப்போதுமே சந்தர்ப்பப் பயனுள்ளது அல்ல என்று சொல்லியிருக்கின்றோம். மக்களிடையே முன்தேவைகள் அதற்கு இருந்தாலொழிய அது ஒரு சூதாட்டமே, புரட்சியின் பார்வை நிலையிருந்து, தனிநபர்களின் மிகவும் வீரம் செறிந்த எதிர்ப்பு வடிவங்களைச் சந்தர்ப்பப் பயனற்றது, தீங்கானது.." என்றார். "மீண்டும் போரை முன்னறிவிக்கும் இலங்கை அரசு" என்று கூறுகின்ற கூற்று எவ்வளவு தீங்கானது என்பதையும், காட்டிக்கொடுக்கும் அரசியலானது என்பதையுமே இது எடுத்துக் காட்டுகின்றது. அரசியலை அறிவு மூலம், புரட்கர வாய்வீச்சு மூலம் சூதாட்டமாக்குகின்றனர். மக்களின் தம் சொந்த நடத்தையில் இருந்து தோன்றாத அனைத்தும் சூதாட்டம் தான்.

லெனின் அதே தனது கட்டுரையில் "தமக்குச் சக்திகள் இல்லை என்று தெரிந்திருந்தும், நம்மிடம் இராணுவம் இல்லை என்று தெரிந்திருந்தும், ஒரு தீவிரமான புரட்சிக் கலக அல்லது இராணுவ மோதலை மேற்கொள்வது ஒரு சூதாட்டமே… நமது எதிரிக்கும் விவகாரங்களை மேலும் சுலபமாக்கிக் கொடுக்கும் என்பதும் எல்லோருக்கும் (வெற்றுச் சொற்களால் போதையேறிப் போயிருப்பவர்களைத் தவிர) தெளிவாகத் தெரியும்" என்றார். இதை "இன்னொரு போர் தவிர்க்கவியலாதது என்பதை இலங்கை அரசு மறுபடி மறுபடி கூறுகிறது." என்று கூறிக்கொண்டு, "மீண்டும் போரை முன்னறிவிக்கும் இலங்கை அரசு" என்ற போர்ப் பிரகடனம் செய்யும் "மார்க்சிய" வாய்ச்சொல்; அரசியல் பித்தலாட்டங்கள் சமூகத்துக்கு தீங்கானவை, ஆபத்தானவை. இதுவொரு காட்டிக் கொடுப்பு அரசியலாகும். இந்தப் புரட்சிகர வாய்வீச்சு சமூகத்தின் சொந்த நடைமுறைக்கு எதிரானது. அதை முடக்குகின்ற, அதை சீரழிக்கின்ற, அதை காட்டிக் கொடுத்து ஒடுக்க உதவுகின்ற, தன்மையில் கற்பனையில் வெளிவரும் புரட்சிகர வாய்வீச்சாகும். "நமது எதிரிக்கும் விவகாரங்களை மேலும் சுலபமாக்கிக் கொடுக்கும்" அரசியலாகும். இந்தப் புரட்சிகர வாய்வீச்சை நாம் அம்பலப்படுத்தி முறியடிக்கமால், மக்கள் அரசியலை முன்னெடுக்க முடியாது.

பி.இரயாகரன்

25.01.2012

 


பி.இரயாகரன் - சமர்