Language Selection

நேசன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

'புரட்சி' பற்றிப் பேச அருகதையற்றுப் போன புளொட்டின் தலைமை

பயிற்சி முகாம்களில் அரசியல் வகுப்புக்கள் மேற்கொள்ளும் செயற்பாடுகளுக்கு உமாமகேஸ்வரன் தடைவிதித்தது மட்டுமல்லாமல் தனது அராஜகத்தை பயிற்சி முகாம்களில் கட்டவிழ்த்துவிட்டிருந்ததுடன், புளொட்டின் வளர்ச்சிக்காக நீண்டகாலமாக முன்னின்றுழைத்து புளொட்டை வளர்த்தெடுத்தவர்களையும் புளொட்டுடன் இணைந்து பயிற்சி பெறுவதற்கென முகாம்களில் தங்கியிருந்தவர்களையும் தனது கொலைக்கரம் கொண்டு அவர்களது குரல்வளையை நெரித்து வந்தார்.

"சந்ததியாரின் சதி" என்ற பெயரில் தானே உருவாக்கி ஊதிப் பெருப்பித்த ஒரு பிரச்சனையை, அந்த "சதி"யின் பேரில் வெளிப்படையாகவே தனக்குச் சாதகமாக்கிச் செயற்பட்டுக் கொண்டிருந்த உமாமகேஸ்வரன், ஈழ விடுதலைப் போராட்டத்திற்காக தம்மை அர்ப்பணித்து புளொட்டுடன் இணைந்து பணியாற்றிவர்கள் மத்தியில் சந்தேகங்களையும், நம்பிக்கையீனங்களையும் ஏற்படுத்திவிட்டிருந்தார்.

அமைப்புக்குள் உள்ளவர்கள் ஒருவரையொருவர் சந்தேகத்துடன் பார்க்கும் ஒருநிலையும், நம்ப மறுக்கும் ஒரு நிலையும் உருவாகி வளர்ந்து கொண்டிருந்தது.உமாமகேஸ்வரனின் செயற்பாடுகள் குறித்தோ அல்லது அவரது உளவுப்படையின் செயற்பாடுகள் குறித்தோ கேள்வி எழுப்புதல், விமர்சனம் செய்தல், கடுமையான தண்டனைக்குரிய ஒரு குற்றமாக கருதப்பட்டது. உமாமகேஸ்வரனின் கருத்துக்களுடனோ, செயற்பாடுகளுடனோ முரண்பட்ட கருத்தைக் கொண்டிருந்தால், சிவனேஸ்வரன், அகிலன், பவான் போன்றோர் போல் மரணத்தைத் தழுவ வேண்டியதாகவோ, மத்தியகுழு உறுப்பினர் கண்ணாடிச்சந்திரன் போல் சித்திரவதை முகாமான "B" காம்பில் சித்திரவதையை அனுபவிக்க வேண்டியதாகவோ அல்லது பயிற்சி முகாம்களில் சித்திரவதைகளை முகம் கொடுத்து மரணத்தை தழுவ வேண்டியவர்களாகவோ இருந்தனர்.

மத்தியகுழு உறுப்பினர்களும் கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினர்களும் கடைப்பிடித்து வந்த நீண்ட மௌனமும் கூட தன்னால் எதையும் சாதிக்க முடியும் என்ற பலத்தை உமாமகேஸ்வரனுக்கு கொடுத்திருந்ததுடன், மத்தியகுழு உறுப்பினர்களையும் கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினர்களையும் தனது ஏவல் பணியாட்களாகவே கருதிச் செயற்பட்டார்.

புளொட்டின் இராணுவப் பிரிவையும், தன்னால் உருவாக்கப்பட்ட உளவுப்படையையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த உமாமகேஸ்வரன் அனைத்து அதிகாரங்களையும் கூட தன் வசமாக்கிக் கொண்டிருந்தார்.

(அரசியற்துறைச் செயலர் வசந்தன் - சந்ததியார்)

இப்பொழுது புளொட்டில் நடைபெற்றுக் கொண்டிருந்த அனைத்தும் அரசியற்துறைச் செயலர் சந்ததியாரின் கைகளுக்கு வெளியே நடைபெற்றுக் கொண்டிருந்தன. சந்ததியார் புளொட்டின் செயற்பாடுகளிலிருந்து ஒதுங்கிக் கொண்டும், புளொட் என்ற அமைப்பிலிருந்து அந்நியமாகிக் கொண்டுமிருந்தார். ஆனால், புளொட்டுக்குள் ஏற்பட்ட தவறான போக்குகளுக்கான அடிப்படைக் காரணங்களையோ அல்லது தவறான போக்குகளை எப்படிக் கையாளுவது என்பது குறித்தோ சந்தததியாரிடம் எந்தத் தெளிவான அரசியல் அணுகுமுறையும் இருந்ததிருக்கவில்லை.

தமிழ் இளைஞர் பேரவையில் முன்னணியில் நின்று பல போராட்டங்களை முன்னெடுத்த சந்ததியார், காந்தீயத்திற்கூடாக வடக்கு-கிழக்கில் பல குடியேற்றத்திட்டங்களை தனது கடின உழைப்பு மூலமாக நிறைவேற்றிய சந்ததியார், புளொட்டின் வளர்ச்சிக்காக முன்னணியில் நின்று செயற்பட்ட சந்ததியார், இப்பொழுது தனது நீண்டகால அரசியல் போராட்ட வாழ்வில் ஒரு நெருக்கடிமிக்க கால கட்டத்துள் பிரவேசித்துக் கொண்டிருந்தார். ஆனால் இந்த நெருக்கடிமிக்க காலகட்டத்தில் நிலைமைகளை எப்படிப் பகுப்பாய்வு செய்வது? தவறான வழிமுறைகளிலிருந்து சரியான வழிமுறைகளை நோக்கி எப்படி முன்னேறுவது என்பதில் சந்ததியாரிடம் சரியான அரசியல்பார்வை காணப்பட்டிருக்கவில்லை. தனது அரசியல் பிரவேசத்தின் ஆரம்பகாலங்களிலிருந்தே நடைமுறைச் செயற்பாடுகளான, அரசியல் மற்றும் வெகுஜனப் போராட்டங்களிலும், காந்தீய குடியேற்றங்களை நிறுவுவதிலும், புளொட்டை வளர்ப்பதிலும் தனது உழைப்பைச் செலுத்திவந்த சந்ததியார் அவர் நோக்கிவந்த, அவரின் தேடலாக இருந்த இடதுசாரி அரசியலை சரிவரக் கற்கத் தவறியிருந்தார்.

இதனால் கடந்த காலங்களில் சந்ததியாரினால் மேற்கொள்ளப்பட்ட ஒடுக்கப்பட்ட கீழ்த்தட்டு மக்கள் மத்தியிலான தீவிர செயற்பாடுகளும், அல்லது அவர்களை அணிதிரட்டுவதற்கான முயற்சிகளும் நடைபெற்றிருந்தபோதும், இவை எவையும் சந்ததியார் ஒரு புரட்சிகர அரசியல்வாதியாக இருப்பதற்கு போதுமான காரணிகளாக அமையவில்லை. சந்ததியாரின் இத்தகையதொரு நிலையையும், அவர் புளொட்டின் செயற்பாடுகளிலிருந்து ஒதுங்கிக் கொண்டிருந்தமையும் தனக்குச் சாதமாக்கிக் கொண்ட உமாமகேஸ்வரன் தனது எதிர்ப்புரட்சிகர அரசியலை முன் கொண்டு சென்றார். உமாமகேஸ்வரனும் அவரது உளவுப்படையும்தான் இப்பொழுது புளொட்டின் தலைவிதியைத் தீர்மானிக்கும் சக்திகளாக மாறிவிட்டிருந்தன.

இந்தியாவில் உளவுப்பிரிவின் உதவியுடன் தனது தலைமைக்கு ஏற்படக்கூடிய அனைத்து "ஆபத்து"க்களையும் முளையிலேயே கிள்ளி எறிந்து கொண்டுவிட்டதாக கருதிய உமாமகேஸ்வரனின் பார்வை இப்பொழுது தளத்தின் பக்கம் திரும்பியது. தளத்தில் தனது தலைமைக்கெதிரான "சதி"களை இனங்காணும் பொருட்டும், தன்னை வழிபடும் குழுவினரை ஊக்கப்படுத்தி தனக்கெதிரான "சதி"களை இனங்கண்டு முறியடிக்கவும் உமாமகேஸ்வரன் தளம் வந்து சேர்ந்திருந்தார்.

தளத்தில் செயற்பட்டுக் கொண்டிருந்த அனைவரையும் சந்தேகத்துடன் நோக்கியபடியும், தளத்தில் புளொட்டின் செயற்பாடுகளை சந்தேகக்கண் கொண்டு நோக்கியபடியும், தனது நாட்குறிப்பில் குறிப்பெடுத்த வண்ணம், சந்திப்புக்களை நிகழ்த்திய உமாமகேஸ்வரன், புளொட்டையும், புளொட்டின் தவறான செயற்பாடுகளையும் விமர்சிப்பவர்களையும் தனது நாட்குறிப்பில் பதிந்து கொண்டதோடு மேற்படி விமர்சனம் செய்தோர்களையும் கேள்விகள் எழுப்பியோரையும் தனது தலைமைக்கு எதிரானவர்கள், "சதி"காரர்கள் என உறுதிப்படுத்திக் கொண்டார்.

ஆனால் தளத்தைப் பொறுத்தவரை, இந்தியாவைப் போன்று தனது சித்திரவதை முகாமான "B"காம்ப் போல ஒன்று இல்லாததால் சிறிதுகாலத்துக்கு பொறுமையை கடைப்பிடிக்க வேண்டியவராக உமாமகேஸ்வரன் இருந்தார். இதனால் தளத்திலும் உளவுப்படை ஒன்றை உருவாக்கி தனது தலைமைக்கு எதிராக "சதி" செய்பவர்களை கண்காணிக்க உத்தரவிட்டார். இதேவேளை சுழிபுரம் பகுதியில் சுவரொட்டி ஒட்டச்சென்ற தமிழீழ விடுதலைப் புலிகள்(LTTE) உறுப்பினர்கள் ஆறு பேரைப் பலியெடுத்துக் கொண்டதுடன் தமிழீழ விடுதலை இராணுவத்தை(TELA) அழிப்பதற்கான திட்டங்களையும் உமாமகேஸ்வரன் தளத்தில் நின்றபோதே தீட்டிக் கொண்டதோடு தளத்தில் புளொட்டுக்குள் களையெடுக்கப்பட வேண்டியவர்களின் பட்டியலைத் தயாரித்து முடித்து இந்தியா திரும்பினார்.

தளத்தில் நாம் தொழிற்சங்க அமைப்புக்கள், விவசாயிகள் அமைப்புக்கள் உட்பட சாதிரீதியாக பின்தங்கிய கிராமங்களில் எமது செயற்பாடுகளை தீவிரமாகச் செயற்படுத்திக் கொண்டிருந்த காலகட்டமது. தமிழ்மக்கள் தேசிய இன ஒடுக்குமுறையிலிருந்து மட்டும் விடுதலையடைவதை நோக்கமாகக் கொள்ளாமல், தேசிய இனவிடுதலையுடன் கூடிய ஒரு சமுதாய மாற்றத்திற்கான செயற்திட்டங்களையும் முன்னெடுத்துக் கொண்டிருந்தோம்.

இதன் அடிப்படையில் சாதிரீதியாக மிகவும் ஒடுக்கப்பட்ட பின்தங்கிய மக்கள் மத்தியில் செயற்பட்டுக் கொண்டிருந்ததோடு, சாதிய அமைப்பு முறையால் மிகவும் மோசமாக ஒடுக்கப்பட்ட பொருளாதாரரீதியில் மிகவும் பின்தங்கிய கிராமங்களில் சாதிய அமைப்பு முறையின் அடிப்படைக்களை தகர்க்கப்படக் கூடியதான செயற்பாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தோம். இதன் ஆரம்பக்கட்டமாக சரவணைப் பகுதியில் அமைந்துள்ள சின்னமடு என்ற கிராமத்தில் சாதிரீதியாக ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில் அவர்கள் சாதிரீதியாக ஒடுக்கப்படுவதற்கு காரணமாக அமைந்திருந்த தொழிலிலிருந்து விடுவித்து மாற்றுத் தொழில்களில் ஈடுபடுத்துவதற்காகவும், அதற்காகவேண்டி வேறுபட்ட சமூகங்களுக்கிடையிலான கலந்துரையாடல்களை நடாத்தியதுடன், தொழிற்சங்க அமைப்பில் செயற்பட்ட ஜீவன், றொபேட், ஞானம், சுரேன் போன்றோர் சில திட்டங்களையும் கூட முன்னெடுத்துச் சென்றிருந்தனர்.

ஆனால் தளம் வந்திருந்த உமாமகேஸ்வரனோ, தளத்தில் எம்மால் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருந்த ஒரு சமுதாய மாற்றத்தை நோக்கிய செயற்பாடுகளைப்பற்றியோ அல்லது ஏனைய முற்போக்கு செயற்பாடுகள் குறித்தோ எதுவித அக்கறையும் அற்றவராக இருந்ததோடு அவரை நோக்கி எழுப்பப்பட்டிருந்த அரசியல் ரீதியான கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாதவராகவும் காணப்பட்டார்.

அன்றைய காலகட்டத்தில் இடதுசாரி அரசியலை நாம் மிகவும் சரியாகக் கற்றுத் தேர்ந்தவர்களாக இல்லாதிருந்த போதும் மக்கள் மத்தியில் செயற்பட்டுக் கொண்டிருந்ததால், மக்களுடன் உயிரோட்டமான உறவுகளிக் கொடிருந்ததால், மக்கள் முகம் கொடுக்கும் பிரச்சனைகளை உணர்வுபூர்வமாகப் புரிந்து கொண்டு, மக்கள் முகம் கொடுத்துக் கொண்டிருந்த சமூகப் பிரச்சனைகளுக்காக செயற்பட்டுக் கொண்டிருந்தோம். நாம் மக்கள் முகம் கொடுக்கும் பிரச்சனைகளுக்காகப் போராடியதோடு, அந்த மக்களிடமிருந்து கற்றுக் கொண்டும் இருந்தோம்.

ஆனால் உமாமகேஸ்வரனோ "நாம் பிறவிப் புரட்சியாளர்களோ பிறவி அரசியல்வாதிகளோ அல்ல எமது மக்களே எம்மைப் புரட்சியாளர்களாக ஆக்கினார்கள்" என்று லண்டனில் இருந்து புளொட்டின் பிரித்தானிய செயற்பாட்டளரான மகாஉத்தமன் எழுதிக் கொடுத்திருந்த வரிகளை தனது சுலோகமாக தனது பேட்டிகளிலும் உரைகளும் பகிரங்கப்படுத்தியிருந்தார்.

இந்த சுலோகம் மக்களிடமிருந்து மட்டுமல்லாமல் தனது அமைப்பு உறுப்பினர்களிடமிருந்தும் அந்நியப்பட்டிருந்த உமாமகேஸ்வரனுக்கு எள்ளளவும் பொருத்தமற்றதொன்றாகும்.

உமாமகேஸ்வரன் தளத்திலிருந்து இந்தியா திரும்பி விட்டிருந்தார். உமாமகேஸ்வரனைத் தொடர்ந்து தளத்தில் தங்கியிருந்த கண்ணனும் இந்தியா சென்றிருந்தார். தளத்திலும், இந்தியாவிலும் புளொட்டுக்குள் தீர்வுகாணப்பட வேண்டிய, ஆனால் தீர்வு காணப்பட முடியாத பல பிரச்சனைகள் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தன. பயிற்சி முகாம்கள், சித்திரவதை முகாம்களாக மாறிவிட்டிருந்ததுடன் நிலைமைகள் மோசமடைந்து கொண்டிருந்தன. மதன், சிவனேஸ்வரன், அகிலன், பவான், சதீஸ், சின்னத்தம்பி உட்பட பலர் பயிற்சி முகாம்களில் வைத்தே கொல்லப்பட்டிருந்தனர். சந்ததியார் புளொட் செயற்பாடுகளிலிருந்து ஒதுங்கியிருந்தார். மத்தியகுழு உறுப்பினரான கண்ணாடிச்சந்திரன் ஒரத்தநாடு "B" காம்ப் சித்திரவதையின் பின் கீழச்சேவல்பட்டியிலிருந்த பயிற்சி முகாமுக்கு அனுப்பப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தார்.

சுழிபுரத்தில் ஆறு தமிழீழ விடுதலைப் புலிகள்(LTTE) உறுப்பினர்களை புளொட் உளவுப்பிரிவு கொன்று புதைத்திருந்தது. தமிழீழ விடுதலை இராணுவத்தைச்(TELA) சேர்ந்த பலர் கொலை செய்யப்பட்டு அவ்வியக்கம் புளொட்டால் அழிக்கப்பட்டிருந்தது. இத்தகைய ஒரு நெருக்கடி நிலையை கருத்தில் கொண்டு புளொட்டின் மத்தியகுழுவை – எந்தவித அதிகாரமுமற்ற, மத்தியகுழு என்று சொல்வதற்கே தகுதியற்ற, வாய்மூடி மௌனம் காப்பவர்களைக் கொண்ட மத்தியகுழுவை - கூட்டுவதற்கு உமாமகேஸ்வரன் முன்வந்தார்.

1985 மாசிமாதம் 13, 14 திகதிகளில் சென்னையில் மத்தியகுழுக் கூட்டம் நடைபெற்றது. உமாமகேஸ்வரன் மத்தியகுழுவைக் கூட்டியதன் நோக்கம் என்னவென்பது மத்தியகுழுவில் அங்கம் வகித்திருந்த தளத்தில் செயற்பட்டு வந்த டொமினிக்(கேசவன்), பொன்னுத்துரை(குமரன்), பெரியமுரளி போன்ற சிலரால் ஊகிக்க முடிந்திருந்தது.

உமாமகேஸ்வரனின் உளவுப்படையின் தீவிர கண்காணிப்புக்கு மத்தியில் ஆரம்பித்த மத்தியகுழுக் கூட்டத்தில் அரசியல் செயலர் சந்ததியார் அமைப்புச் செயற்பாடுகளிலிருந்து ஒதுங்கியிருப்பது உமாமகேஸ்வரனால் பிரஸ்தாபிக்கப்பட்டிருந்ததோடு அமைப்புறுப்பினர்களுக்கு மரணதண்டனை வழங்குவது குறித்து மத்தியகுழு உறுப்பினர்கள் என்ன கருத்தைக் கொண்டிருக்கின்றனர் என்பதையும் அறிந்துகொள்ள முற்பட்டார்.

உமாமகேஸ்வரனின் இந்தக் கேள்வியின் உள்நோக்கம் மத்தியகுழுவில் அங்கம் வகிப்பவர்களின் "ஒருமித்த கருத்துடன்" பலராலும் அறியப்பட்ட அரசியல் செல்வாக்கு மிக்க சந்ததியாருக்கு மரணதண்டனை வழங்குவதேயாகும். ஆனால் மதன், சிவனேஸ்வரன், அகிலன், பவான், சதீஸ், சின்னத்தம்பி உட்பட பலரை மரணதண்டனை விதித்துக் கொன்று புதைத்ததை உமாமகேஸ்வரன் அக்கூட்டத்தில் தெரிவிக்கத் தவறியதுடன், உமாமகேஸ்வரனால் தன்னிச்சையாக மேற்கொள்ளப்பட்ட இந்த மரண தண்டனைகள் குறித்து ஏற்கனவே அறிந்திருந்த மத்தியகுழு உறுப்பினர்களும் கூட கேள்வியெதுவும் எழுப்பியிருக்கவில்லை.

பயிற்சி முகாம்களில் நடந்த, நடைபெற்றுக் கொண்டிருந்த கொடூரங்களோ, அல்லது பயிற்சிமுகாமில் இருந்தவர்களால் தமது பிரச்சனைகளை முன்வைத்து தயாரிக்கப்பட்ட அறிக்கை (பார்க்க) குறித்தோ மத்தியகுழு உறுப்பினர் கண்ணாடிச்சந்திரன் கைது செய்யப்பட்டுச் சித்திரவதை செய்யப்பட்டதோ, சுழிபுரம் ஆறு இளைஞர்கள் படுகொலைகளோ, தமிழீழ விடுதலை இராணுவ அழிப்பு நடவடிக்கைகளோ மத்தியகுழு கூட்டத்தில் எழுப்பப்படாத கேள்விகளாகவே இருந்தன.

இது தவிர, பெருமளவில் ஆயதங்கள் வாங்கப்பட்டு சென்னைக்கு கொண்டுவரப்படுவது குறித்தோ அல்லது தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் வழங்கிய நிதி உதவிகள் குறித்தோ உமாமகேஸ்வரன் மத்தியகுழுக் கூட்டத்தில் எதுவும் தெரிவித்திருக்கவில்லை. மத்தியகுழுக் கூட்டத்தை தனது உளவுப்படையின் பலத்த கண்காணிப்பில் நிகழ்த்தி மத்தியகுழு உறுப்பினர்கள் மத்தியில் ஒரு பீதியை ஏற்படுத்திவிட்டிருந்த உமாமகேஸ்வரன், மத்தியகுழு அங்கத்தவர்களின் மௌனம்தான் தனது "வெற்றி" எனக் கணித்துக் கொண்டார்.

கண்ணன் தளத்திலிருந்து இந்தியா செல்லும்போது தளத்தில் எம்மால் முன்வைக்கப்பட்டிருந்த பிரச்சனைகளையும் விமர்சனங்களையும் மத்தியகுழுக் கூட்டத்தில் பேசி முடிவை தெரியப்படுத்துவேன் என உறுதியளித்துச் சென்றிருந்தார். ஆனால் மத்தியகுழுக் கூட்டத்தில் அதுபற்றி வாய்திறக்கத் தவறியிருந்த கண்ணன் உமாமகேஸ்வரனின் சதித்திட்டங்களின் பங்காளியாகவும் விளங்கியிருந்தார்.

(கண்ணன் - சோதீஸ்வரன்)

டொமினிக் மத்தியகுழுக் கூட்டத்தில் கலந்துகொள்ள இந்தியா சென்றபோது தளத்தில் நாம் முன்வைத்த அனைத்துப் பிரச்சனைகளையும் மத்தியகுழுக் கூட்டத்தில் பேசி ஒரு நல்லமுடிவுடன் திரும்புவேன் என்று கூறிச் சென்றிருந்தார். ஆனால் இந்தியா சென்ற டொமினிக் மத்தியகுழு உறுப்பினர் கண்ணாடிச்சந்திரனுக்கு ஏற்பட்ட நிலையையும், புளொட்டின் அராஜகம் அதன் உச்சவடிவில் கோரத்தாண்டவம் ஆடுவதையும் கண்டதும் வாயடைத்தவரானார். "புரட்சிகர" என்ற சொல்லுக்கும் - குறைந்தபட்சம் "ஜனநாயகம்" என்ற சொல்லுக்கும் - புளொட்டின் தலைமைக்கும், அதன் மத்தியகுழு உறுப்பினர்களில் பெரும்பான்மையானவர்களுக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது என்பதை இந்த மத்தியகுழுக் கூட்டம் எமக்கு வெளிப்படுத்தி நின்றது.

(டொமினிக் - தீப்பொறி ஆசிரியர் கேசவன் - நோபட்)

 

(தொடரும்)


1. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 1

2. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 2

3. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 3

4. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 4

5. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 5

6. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 6

7. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 7

8. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 8

9. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 9

10. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 10

11. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 11

12. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 12

13. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 13

14. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 14

15. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 15

16. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 16

17. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 17

18. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 18

19. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 19

20. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 20

21. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 21

22. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 22

23. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 23

24.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 24

25.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 25

26.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 26

27.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 27

28.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 28

29. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 29

30 .புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 30

31.  புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 31

32. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 32

33. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 33

34. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 34

35.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 35

36.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 36

37.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 37

38.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 38

39.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 39