Language Selection

புதிய கலாச்சாரம் 2005
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

 

 ""சும்மா எறங்கி முங்குங்க, மாடு மடியக் கூட தண்ணி உரசுல, நீங்க என்னடான்னா? படியில நின்னுக்கிட்டே முங்குறீங்க. நடு ஆத்துக்குப் போங்க, கொஞ்சம் தண்ணி தெளிவு காட்டும்''  உரிமையோடு கூறியவரிடம் ""மணலா இருக்குமா?'' என்று கேட்க, கடகடவெனச் சிரித்தார். ""நீங்க வேற, அஞ்சாறு வருசமா ஆத்துல தண்ணியே வரல, கொஞ்ச நஞ்சம் அடி மண்ணையும் ஆளுக்காளு கௌப்பிட்டான். ஒப்புக்குக் கல்யாணம் பண்ணிகிட்டு ஊருக்கு எளச்சவ கதயா மண்ணியாறு கெடந்து மளுமாறுது. எங்க பொண்டுக மண்ணியாத்துல மஞ்சக் குளிச்சு எவ்ளோ நாளாகுது தெரியுங்களா?''  பழுப்பு நிற வேட்டியில் பல வருசத்துக் கதையை முடிந்து வைத்திருந்தவர் போல உதறிக் காட்டினார்.

 

 எதிர்த்த கரையில் மரத்தடியில் வெள்ளை வெளேர் வேட்டியுடன் கூட்டமாக ஆட்களும், தடித்த பூணூலுடன் மூன்று பார்ப்பனர்களும் கூடிக் கிடந்தனர். நான் உற்று நோக்குவதைக் கவனித்தவர், ""தெவசம் கொடுக்குறாங்க தம்பி, கோபால் ராவுன்னு சுத்துப்பட்டு கோவிலு நிலமா கையில வச்சிருந்தான் மனுசன். தூத்துறப்ப காத்துல செதர்ற மணியக் கூட காலால தள்ளி மூட்டக் கட்டுவான். செத்தப்ப ஒரு புள்ள கூடப் பக்கத்துல இல்ல. எல்லாம் பட்டாளத்துல இருக்கானுவ. பெரியவன் வந்துருக்காம்போல'' என்றார். ""பெரியவனா, அவன் அப்பனுக்கு மேல, இந்த வாழச் சருவெல்லாம் புடிச்சிப் பீறாய்ஞ்சு எச்செலை மாறி அத மெட்ராசுக்குக் கடத்திக்கிட்டுப் போறான் பாரு, யாராவது ரெண்டு கேட்டா, இது மெட்ராசுல என்ன வெல தெரியுமாங்குறான்'' — இன்னொருத்தரும் சேர்ந்து கொண்டார்.

 

 எதிர்க்கரை மரத்தடியில் கூடியிருந்த கூட்டம் திடீரென ஆ,ஊ என கலைந்து ஓடினர். திவசம் கொடுக்க குந்தியிருந்தவனும், பார்ப்பனரும் ""அய்யோ... அய்யோ'' என ஒரே அலறலும் ஓட்டமும் பார்க்க கலவரமாய்த் தெரிந்தது, ""ஓடு, ஓடிடு ஏய் ஓடித்தொலடா!'' அலறியபடியே ஓடிய பார்ப்பனர் வேட்டியையும், அவிழ்த்து தலையில் போட்டுக் கொண்டு ஓடி ஆத்துக்குள் பொத், பொத்தென்று விழ, பார்க்கவே பதட்டமானது. எதிர்க்கரை மரத்துக் கிளிகளும் பீதி ஒலி எழுப்பிச் சிதற சூழ்நிலை மோசமாகத் தெரிந்தது. ஆத்துக்குள் விழுந்தவர்களோ வெட்டுப்பட்டது போல விழுந்து புரண்டனர்.

 

 குளித்துக் கொண்டிருந்த அனைவரும் பீதியாகி எதிர்க்கரைக்கு ஓடினோம். ""என்னாங்க? என்னாங்க?'' ரொம்பதூரம் தள்ளி நின்று ஒருத்தர் புலம்பிக் கொண்டிருந்தார்: ""நம்ம கோபால்ராவ் திவசம்னு தெரியும் தம்பி. கொஞ்ச நேரம் முன்னாலதான் அய்யிருங்க தொபீர், தொபீர்னு ஒரே சத்தம், அப்புறம் என்னடான்னா அவனவன் வேட்டிய தலையில போட்டுக்கிட்டு ஓடி ஆத்துல வுழுவுறான், பதில் சொல்லமாட்டேங்குறான், அவனவன் ஓடுறான், ஒரு எளவும் புரியல...''

 

 ""நீ வேறய்யா வௌரம் புரியாம. இவுனுக எளவு பண்ண வந்துதானே இவ்வளவும். மொதல்ல தள்ளிப் போயா, தேனீ புடுங்கிரப் போவுது. மரத்தும் மேலே எத்தோ சோடு தேன் கூடு தொங்குது? மெட்ராஸ்காரனுக்குத்தான் அறிவில்லே. மேல்லோகம், கீழ்லோகங்குறான், மிச்ச வௌரமெல்லாம் உனக்குத் தெரியாதுங்குறான், இந்த உள்ளூர் அய்யருங்களாவது மேல உள்ள தேன்கூட்ட பாக்க வேணாம்? இவனுக பாட்டுக்கும் கீழ சுள்ளியப் போட்டுக் கொளுத்த, தேன்கூடு கலைஞ்சு எல்லாம் கௌம்பிடுச்சுய்யா, போட்டுப் புடுங்குன புடுங்கல்ல அவனவன் அவுத்துப் போத்திக்கிட்டு ஓடுனாம்பாரு, நாங்கூட மொதல்லே அப்பனோட குத்தக பாக்கியே மனசுல வச்சிக்கிட்டு எவனோ பூந்து வெட்றான்னுதான் நெனச்சேன்... ஆத்தாள, கட்ட அய்யிரு கோவணத்தோட, தலயில வேட்டியப் போட்டுக்கிட்டு ஓடுனாம் பாரு, நாயி வேறு தெரத்த ஆரம்பிச்சிருச்சி... பாவம் பெரியவன்தான் சீரியஸாகி கும்மோணம் கொண்டு போயிருக்காங்க... மேல தேன் கூட்ட வச்சிகிட்டு எவனாது செத்தயக் கொளுத்துவானா?.. இவங்களால எல்லாப் பயலும் ஓட வேண்டியதாயிடுச்சு, எளவெடுக்க!''

 

 — விசயத்தைக் கேள்விப்பட்டவுடன் எல்லோரும் ""நல்ல பயலுக'' என்று பரிதாபத்திற்குப் பதில் குலுங்கிக் குலுங்கிச் சிரித்துக் கொண்டிருந்தனர். செய்தி அலைஅலையாய்ப் பரவி பார்ப்பனரின் "ஞானத்தை' அறிந்து ஊரே சிரித்தது. முதல்முறையாக எல்லோருக்கும் புரியும் "அம்மா அய்யோ' என்று மந்திரம்போலப் புலம்பிக் கொண்டே அய்யர்கள் கரையேற, என்னாலும் சிரிப்பை அடக்க முடியவில்லை. உழைப்பதற்குப் பேர்போன தேனீக்கள் உழைக்காத கும்பலை விரட்டியவிதம் நெஞ்சைவிட்டு நீங்கவில்லை.

 

· சுடர்விழி