ரவுடிகளின் அராஜகத்தை எதிர்த்துப் போராடி, கடந்த அக்டோபர் 26ஆம் தேதியன்று ரவுடிகளால் படுகொலை செய்யப்பட்ட பு.ஜ.தொ.மு. தோழர் செந்திலின் தியாகத்தைப் போற்றியும்; அவரது உயரிய இலட்சியங்களை நிறைவேற்ற உறுதியேற்றும் நவம்பர் 6ஆம் தேதியன்று மதுரை  ஒத்தக்கடையில் ம.க.இ.க் பு.ஜ.தொ.மு; ஆகிய புரட்சிகர அமைப்புகள் இணைந்து நினைவேந்தல் கூட்டத்தை நடத்தின.

ம.க.இ.க. மையக்கலைக்குழுவின் தோழர் கோவன், தியாகத் தோழர் செந்திலின் உருவப்படத்தைத் திறந்து வைத்து அஞ்சலி செலுத்திய இக்கூட்டத்தில், நாம் தமிழர், தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம், தமிழ்ப்புலிகள், ஆதித்தமிழர் பேரவை, ம.தி.மு.க் இந்தியக் கம்யூனிஸ்டுக்கட்சி, ஆனைமலை பாதுகாப்பு இயக்கம் ஆகிய அமைப்புகளின் பிரதிநிதிகளும், ம.உ.பா.மையத்தின் மதுரைக்கிளை இணைச் செயலரான வழக்குரைஞர் வாஞ்சிநாதன், ம.க.இ.க. மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் கதிரவன் ஆகியோரும் சிறப்புரையாற்றினர். தனியார்மய  தாராளமயத்தால் ரவுடியிசம் வளர்ந்து வருவதை விளக்கியும், பெருகிவரும் இந்த அபாயத்துக்கு எதிராக உழைக்கும் மக்கள் ஓரணியில் திரண்டு போராட அறைகூவியும், தோழர் செந்திலின் தியாகத்தைப் போற்றியும் நடந்த இந்தக் கூட்டம் தோழர் செந்திலின் நினைவை மக்கள் மனங்களில் ஆழமாக விதைப்பதாகவும், ரவுடியிசத்துக்கு எதிராகப் போராட மக்களை  அறைகூவுவதாகவும் அமைந்தது.

பு.ஜ. செய்தியாளர், மதுரை