அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் தாறுமாறாக உயர்ந்து உழைக்கும் மக்கள் தத்தளிக்கும் நிலையில், பால் விலை மற்றும் அரசுப் பேருந்து, மின்சாரக் கட்டணங்களைக் கிடுகிடுவென உயர்த்தி தமிழகத்தின் ஏழைஎளிய, நடுத்தர வர்க்க மக்கள் மீது பொருளாதார ரீதியிலான அதிரடி பயங்கரவாதத் தாக்குதலை பாசிச ஜெயலலிதா அரசு ஏவிவிட்டுள்ளது. இதுவரை கண்டிராதபடி, ஒரே நேரத்தில் சாதாரணப் பேருந்துக் கட்டணம் கி.மீ.க்கு 28 பைசாவிலிருந்து 42 பைசாவாகவும், ஆவின் பால் விலையை ஒரு லிட்டருக்கு ரூ. 6.25 ஆகவும் உயர்த்தியுள்ள ஜெயா கும்பல், மின் கட்டணத்தை இரு மடங்காக உயர்த்தத் திட்டமிட்டுள்ளது.  இந்தியாவில் எந்தவொரு முதலமைச்சரோ, மாநிலமோ செய்திராத இக்கொடிய தாக்குதலால் சாமானிய மக்கள் நிலைகுலைந்து போயுள்ளனர். ஆட்சிக்கு வந்ததும் வாட் வரி மூலம் ரூ.4000 கோடிக்கு மேலாக வரி விதித்த பாசிச ஜெயலலிதா அரசு, இப்போது விலையேற்றம்  கட்டண உயர்வின் மூலம் ரூ. 11,000 கோடிக்கு மக்கள் மீது பெருஞ் சுமையை ஏற்றியுள்ளது.

 

 

பேருந்துக் கட்டணத்தை எவ்வித முன்னறிவிப்புமின்றி உயர்த்தியுள்ள பாசிச ஜெயா அரசு,  வருவாயைப் பெருக்குவது, நட்டத்தில் இயங்கும் அரசுத் துறைகளை மீட்பது என்ற வக்கிர வாதங்களுடன் மக்களின் கோவணத்தையும் பிடுங்காத குறையாக கொள்ளையடிக்கக்  கிளம்பியுள்ளது. உயர்த்தப்பட்ட பேருந்துக் கட்டணத்தால் அதிர்ச்சியடைந்த சாமானிய மக்கள் வேலைக்குப் போக முடியாமல் வீடு திரும்பிய அவலங்களும், மூன்று ரூபாயுடன் பேருந்தில் ஏறி, ஆறு ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ள கட்டணத்தைச் செலுத்த இயலாமல், ஒரு கி.மீ. தூரத்துக்கு மட்டும் பயணம் செய்து, பின்னர் வழியில் இறங்கிப் பலர் நடந்து சென்ற அவலங்களும் சாமானிய மக்களை வதைக்கும் ஜெயா அரசின் கொடுமையைப் படம் பிடித்துக் காட்டின.

அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் நட்டத்துக்கு அதிகார வர்க்கமும் அதனோடு கூட்டுச் சேர்ந்து ஆதாயமடையும் ஆளும் கட்சியினரும் நடத்திவரும் ஊழலும் கொள்ளையுமே முதன்மையான காரணம் என்பது யாவரும் அறிந்த உண்மை. அதிகார வர்க்க  ஆளும் கட்சி கூட்டுக் கொள்ளையை ஒழிக்க நடவடிக்கை எடுப்பதை விடுத்து, நட்டத்தைக் கட்டண உயர்வின் மூலம் குறைக்கப் போவதாக பாசிச ஜெயா கூறுவது கடைந்தெடுத்த மோசடி. கூடுதல் வசூல்,  கூடுதல் ஊழலுக்கும் முறைகேடுகளுக்கும்தான் வழிவகுக்கப் போகிறது.

மேலும், ஆவின் நிறுவனங்கள் நட்டத்தில் இயங்குவதாக பாசிச ஜெயா கூறுவதே பொய்யானது. "தமிழகத்தில் இயங்கிவரும் 17 ஆவின் ஒன்றியங்களில் ஒரு சிலவற்றைத் தவிர, மற்ற அனைத்தும் நல்ல இலாபத்தில்தான் இயங்குகின்றன. உதாரணமாக, கோவை ஆவின் ஒன்றியம் ஆண்டுக்கு ரூ.15 முதல் 18 கோடிவரை இலாபம் ஈட்டித் தருகிறது. தனியார் நிறுவனங்கள் எல்லாம் கொள்ளை இலாபத்தில் இயங்கும் போது ஆவின் மட்டும் எப்படி நட்டத்தைச் சந்திக்கும்?' 'என்கிறார், கோவை மாவட்டக் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கக் காப்பாளரும், முன்னாள் கோவை ஆவின் தலைவருமான எஸ்.ஆர.ராஜ கோபால்.

விவசாயிகளுக்கு பால் கொள்முதல் விலையில் ரூ. 2  மட்டுமே உயர்த்திக் கொடுத்து விட்டு அதே பாலைப் பொதுமக்களுக்கு ரூ. 6.25க்கு உயர்த்தியிருப்பது பகற்கொள்ளையின்றி வேறென்ன? தனியார் பேருந்து முதலாளிகளும், தனியார் பால் நிறுவனங்களும் அரசின் முடிவை வரவேற்று ஆதரிப்பதிலிருந்தே யாருக்காக இந்த விலையேற்றமும் கட்டணக் கொள்ளையும் திணிக்கப்படுகிறது என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

தமிழக அரசுக்குத் தேவையான நிதியை மத்திய அரசு ஒதுக்கவில்லை என்றும், அது மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்து கொள்வதாகவும், இதன் காரணமாகவே பால் விலை, பேருந்துக் கட்டணங்களை உயர்த்துவதாகவும் பாசிச ஜெயா இப்பகற்கொள்ளைக்கு  நியாயம் கற்பிக்கிறார்.  ஆனால்,  திட்டக்குழு விவாதத்தில் கலந்து கொண்டபோது, மாநில அரசு கேட்டதைவிட மத்திய அரசு அதிகமாகக் கொடுத்துள்ளது என்று பாராட்டியவர்தான், இந்தப் புளுகுணி ராணி.

அதேபோல, முந்தைய தி.மு.க. அரசின் நிர்வாகச் சீர்கேடுகளால் ஏற்பட்ட இழப்புகளிலிருந்து அரசு நிறுவனங்களை மீட்கவே இக்கட்டண உயர்வு என்று பாசிச ஜெயா நியாயவாதம் பேசுவதும் பித்தலாட்டமானது. ஜெயா அரசு ஆட்சிக்கு வந்த பின்னர், கடந்த 4.8.2011இல் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்தபோது, மின்ஆளுகை முயற்சிகளில் தமிழகம் முன்னணியில் உள்ளது என்று கூறப்பட்டுள்ளது. இப்படி ஒருபுறம் நிர்வாகம் சீராகவும் சாதகமான நிலையிலும் உள்ளதாக நிதிநிலை அறிக்கையில் தெரிவித்துவிட்டு, மறுபுறம்  முந்தைய தி.மு.க. அரசுதான் கட்டண உயர்வுக்குக் காரணம் என்று பழிபோட்டு தப்பிக்க முயற்சிக்கிறது பாசிச ஜெயா கும்பல்.

சமச்சீர் கல்வித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது பற்றிய வழக்கு நடந்து கொண்டிருந்த போதே, பழையபாடத் திட்டத்தின் கீழ் அவசரமாக ரூ. 200 கோடி செலவில் பாடப்புத்தகங்களை அச் சிட்டு மக்கள் வரிப்பணத்தைப் பாழடித்தும், ஆயிரம் கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலகத்தை இழுத்து மூடிவிட்டு அங்கு சிறப்பு மருத்துவமனையை நிறுவப் போவதாக அறிவித்தும், ஐநூறு கோடி ரூபாய் செலவிட்டுக் கட்டப்பட்ட அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தைக் குழந்தைகள் மருத்துவமனையாக்கப் போவதாகவும் பாசிசத் திமிருடனும் கோமாளித்தனமாகவும் உத்தரவிட்ட "நிர்வாக சூரப்புலி' ஜெயா, நிர்வாகச் சீர்கேட்டைக்களையப் போவதாகக் கூறுவதை ஜெயா ஆதரவு பார்ப்பன ஊடகங்களைத் தவிர, எவரும் நம்பத் தயாராக இல்லை.

இப்பொருளாதாரத் தாக்குதலுக்கு எதிராக மக்களின் அதிருப்தி பெருகுவதைக் கண்டு, அதிகாரிகள் செய்த தவறுக்கு முதல்வரும் அரசும் பொறுப்பேற்க வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளதாக அங்கலாய்க்கிறது, பார்ப்பன தினமணி. ஆனால் இந்தப் பார்ப்பனத் துரோகக் கூட்டத்தைவிட, இந்த அரசு அமைவதற்குத் தோள்கொடுத்த போலி கம்யூனிஸ்டுகள் அதற்கான பொறுப்பேற்காமல், பாசிச ஜெயா கும்பலின் வழிப்பறிக் கொள்ளையை எதிர்ப்பதைப் போல பம்மாத்து செய்வதைத் தமிழக மக்கள் இனியும் சகித்துக் கொண்டிருக்கவே முடியாது.

உலக வங்கி, ஐ.எம்.எப்; உலக வர்த்தகக் கழகம் ஆகிய ஏகாதிபத்திய மேலாதிக்கவாதிகளின் கட்டளைகளை ஏற்று தனியார்மயம்  தாராளமயம் திணிக்கப்பட்டதிலிருந்து, மத்தியிலும் மாநிலங்களிலும் ஆளும் கட்சிகள் எவையானாலும், அவை உழைக்கும் மக்கள் மீது கடுமையான பொருளாதாரத் தாக்குதல்களைத் தொடுக்கின்றன. இப்போது இரண்டாம் கட்ட சீர்திருத்தங்கள் என்ற பெயரில் எந்த ஆட்சியானாலும், தனியார்மய  தாராளமயத் தாக்குதலை முன்னைவிடத் தீவிரமாகவும் மூர்க்கமாகவும் செயல்படுத்துவதையே நோக்கமாகக் கொண்டுள்ளன. இதற்கான வெள்ளோட்டமாகவே மக்கள் மீது இக்கொடிய தாக்குதலை பாசிச ஜெயா கும்பல் நடத்தியுள்ளது.

அரசு வருவாயைப் பெருக்குவது, சிக்கன சீரமைப்பு நடவடிக்கை என்று சொல்லிக் கொண்டு பிற துறைகளில் ஆட்குறைப்பு  வேலைநீக்கம் செய்த போதிலும், ஜெயா ஆட்சியில் போலீசுத் துறையில் ஆளெடுப்பும் அத்துறைகளுக்கான செலவுகளும் மானியங்களும் தொடர்ந்து அதிகரிக்கப்படுகின்றன. ஏற்கெனவே போலீசு காவலரிலிருந்து ஆய்வாளர்கள் வரை அரிசி, சர்க்கரை முதலானவற்றை ரேஷன் கடைகளில் 50 சதவீத மானியத்தில் வாங்கிக் கொண்டிருப்பது போதாதென்று, தமிழ்நாடு போலீசாருக்கு மலிவு விலையில் பலவிதமான நுகர்

பொருட்களை வழங்க இராணுவத்தினருக்கு இருப்பதைப் போன்ற சிறப்பு கேன்டீன்களை நிறுவ ஜெயலலிதா உத்தரவிட்டு, இதற்காக ஒரு கோடி ரூபாய் மானியமும் ஒதுக்கியுள்ளார். ஜெயலலிதா ஆட்சி என்றாலே அது போலீசாரின் ஆட்சிதான் என்பதோடு, மக்களின் சாதாரண எதிர்ப்பைக் கூட ஒடுக்குவதற்குத்தான் இந்த ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. மறுபுறம், பேருந்துத் தொழிலாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வை இலஞ்சம் போலக் கொடுத்து, அவர்களை மக்களிடமிருந்து அந்நியப்படுத்தும் ஜெயா கும்பலின் சதியை முறியடிக்க முன்வராமல் தொழிற்சங்கங்கள் முடங்கிக் கிடக்கின்றன.

ஆகவே, வழக்கமான கண்டனங்கள், அறப் போராட்டங்கள் மூலமாகவோ, இந்தக் கட்சிக்குப் பதிலாக அந்தக் கட்சி என்று மாறி மாறி ஓட்டுக் கட்சிக்குள்ளேயே தீர்வைத் தேடுவதன் மூலமாகவோ தீவிரமாகிவரும் பொருளாதாரத்  தாக்குதல்களை முறியடிக்க முடியாது. கட்டண அதிகரிப்பு, விலையேற்றம், வரி விதிப்புகளை ஏற்க மறுத்து, தீவிரமாக்கப்படும் தனியார்மயம் தாராளமயம் உலகமயம் எனும் மறுகாலனியத் தாக்குதலுக்கு எதிராக அனைத்து உழைக்கும் மக்களும் எதிர்த்தாக்குதல் தொடுப்பதுதான் பாசிச ஜெயா கும்பலைப் பின்வாங்கச் செய்யும்.

. மனோகரன