Language Selection

புதிய ஜனநாயகம் 2011

ஒரே வணிக முத்திரை கொண்ட பொருளை விற்கும் சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை 51 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாக அதிகரிப்பதெனவும், பல்வேறு வணிக முத்திரைகள் கொண்ட பொருட்களை விற்கும் சில்லறை வியாபாரத்தில் 51 சதவீத அளவிற்கு அந்நிய முதலீட்டை அனுமதிப்பது எனவும் மைய அமைச்சரவை முடிவெடுத்து அறிவித்திருக்கிறது.  இம்முடிவின் மூலம், இந்தியாவெங்கிலும் சில்லறை வர்த்தகத்தை நம்பி வாழ்ந்துவரும் பல இலட்சக்கணக்கான குடும்பங்களை அழிவின் விளிம்பில் கொண்டுபோய் நிறுத்தியிருக்கிறது, மையஅரசு.

 

 

சில்லறை வர்த்தகத்தில் நுழையும் அந்நிய நிறுவனங்கள், தாம் விற்பனை செய்யும் பொருட்களை  இந்தியாவில்தான் கொள்முதல் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.  குறிப்பாக, உலக வர்த்தகக் கழக நிபந்தனைகளின் படி, இந்நிறுவனங்கள் தாம் விற்பனை செய்யும் பொருட்களில் 30 சதவீதத்தை சர்வதேச சந்தையிலிருந்து கொள்முதல் செய்து கொள்ள உரிமையுண்டு. இந்திய அரசும் இந்தச் சலுகையினை சில்லறை வர்த்தகத்தில் நுழையும் அந்நிய நிறுவனங்களுக்கு வழங்கிவிட்டு, அப்படிபட்ட சலுகை வழங்கப்படவில்லை எனப் புளுகி வருகிறது.  எனவே, சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நிறுவனங்கள் நுழைவதால் அண்ணாச்சி கடைகளுக்கு மட்டும் பாதிப்பு ஏற்படப் போவதில்லை.  இதனால் இந்தியாவிலுள்ள சிறுவீத உற்பத்தியாளர்களும் அழிவதற்கான அபாயம் ஏற்பட்டுள்ளது.

"இந்தியாவில் ஏறத்தாழ 10 இலட்சம் மக்கள் தொகை கொண்ட 53 நகரங்களில் மட்டுமே அந்நிய நிறுவனங்கள் சில்லறை வர்த்தகத்தில் நுழைவதற்கு அனுமதி கொடுத்திருக்கிறோம்.  இதனால், சில்லறை வியாபாரத்தை நம்பிவாழும் குடும்பங்களுக்கு பாதிப்பு ஏற்படாது' என வாதாடுகிறது, மைய அரசு. எல்லாத் தொழில்களிலிருந்தும் துரத்தப்படும் பரிதாபத்துக்குரிய மக்கள், ஒரு பெட்டிக் கடையையோ மளிகைக்கடையையோ வைத்துப் பிழைத்துக்கொள்ள இந்தப் பெருநகரங்களில்தான் தஞ்சமடைந்துள்ளனர்; தஞ்சமடைய வருகின்றனர்.  இந்நகர்ப்புறங்களில் இத்தொழிலை நம்பி வாழ்ந்துவரும் 2.6 கோடி பேரின் வயிற்றில் முதலில் அடித்துவிட்டு, பிறகு மற்றவர்களைக் கவனிக்கிறோம் என்பதுதான் மைய அர” விதித்துள்ள கட்டுப்பாட்டின் பொருள்.

இதுவொருபுறமிருக்க, ஏற்கெனவே சில்லறை வர்த்தகத்தில் நுழைந்துள்ள ரிலையன்ஸ் பிரெஷ், ஹெரிடேஜ், மோர் போன்ற நிறுவனங்களுக்கு, இந்தியாவின் சிறு நகரங்களில் தமது சூப்பர் ஸ்டோர்களைத் திறந்து கொள்ள தடை ஏதும் கிடையாது எனும்பொழுது, அவற்றோடு கூட்டுச் சேரவுள்ள அந்நிய நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடு நடைமுறையில் செல்லாக்காசாகத்தான் இருக்கும்.

விவசாயிகளிடமிருந்து தானியங்களைக் கொள்முதல் செய்யவும், அவற்றைப் பாதுகாப்பதற்கான கிடங்குகளைக் கட்டிக் கொள்ளவும் அந்நிய நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் அனுமதி என்பது நடைமுறையில் உணவுப் பொருட்களைச் சட்டபூர்வமாக பதுக்கி வைத்துக் கொள்ள கொடுக்கப்பட்டுள்ள அனுமதி தவிர வேறெதுவும் கிடையாது.  இதன்மூலம் இந்த அந்நிய நிறுவனங்கள் ஒருபுறம் இடைத்த ர கர் களை ஒழிப்பது என்ற போர்வையில் உள்ளூர் வியாபாரிகள் முதல் தள்ளுவண்டிக்காரர்கள் ஈறாக இலட்சக்கணக்கான சிறு வியாபாரிகளைச் சந்தையிலிருந்து சிறுகச்சிறுக அப்புறப்படுத்தும்; இன்னொருபுறம், சிறு மற்றும் நடுத்தர விவசாயிகளைக் குத்தகை விவசாயிகள் என்ற பெயரில் தமது கொத்தடிமைகளாக மாற்றும். உணவுப் பொருள் கொள்முதலிலும், விற்பனையிலும் இந்த நிறுவனங்களின் ஆதிக்கம் நிலைநாட்டப்பட்டபின், அவர்கள் வைத்ததுதான் விலை என்ற நிலை ஏற்படும்.

அரிசியையும், கோதுமையையும், கத்திரிக்காயையும், வெண்டைக்காயையும் விவசாயிகளிடமிருந்து நியாயமான விலையில் வாங்கி, அவற்றை நியாயமான விலையில் விற்பதற்கா அமெரிக்காவின் வால் மார்டும் இன்னபிற பன்னாட்டு சில்லறை வர்த்தகக் கழகங்களும் ரூ.500 கோடி ரூபாய் மூலதனத்துடன் இந்தியாவிற்கு வரக் காத்திருக்கிறார்கள்? எனவே, சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு நுழைந்தால் விலைவாசி குறையும், விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்கும், ஒரு கோடிக்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்ற மைய அரசின் நியாயவாதமெல்லாம் கடைந்தெடுத்த பொய்,பித்தலாட்டம் தவிர வேறில்லை.

விருப்பமில்லாத மாநிலங்களில் அந்நிய முதலீட்டை அனுமதிக்கத் தேவையில்லை என்று மத்திய அரசு வழங்கும் சலுகை, ஒட்டகம் தலை நுழைப்பதற்கான அனுமதியைப் பெறுவதற்கானதே. பா.ஜ.க., இடதுசாரிகள், ஜெயா, மாயாவதி, மம்தா உள்ளிட்ட கட்சிகள், தங்கள் மாநிலங்களில் சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு நுழைவதற்கு அனுமதிக்கமாட்டோமென்று முழங்குவதும் இப்போதைக்கு மக்களை ஏமாற்றுவதற்கான இரட்டை வேடம் மட்டுமே.

சில்லறை வர்த்தகத் துறையில் பன்னாட்டு நிறுவனங்கள் அனுமதிக்கப்படுவதென்பது, மன்மோகன் சிங் நடைமுறைப்படுத்தி வரும் இரண்டாம் கட்ட பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளின் ஒரு பகுதி; பிற மறுகாலனியாக்க நடவடிக்கைகளைக் காட்டிலும், வேகமாகவும், ஆழமாகவும் விவசாயம் சிறுதொழில் உள்ளிட்ட அனைத்தையும் அழிக்கவல்லது இந்த நடவடிக்கை. அடிப்படையில் தனியார்மய, தாராளமயக் கொள்கைகளை ஏற்றுக் கொண்டிருக்கும் ஓட்டுப்பொறுக்கிகள் மூலம் இதனை முறியடிக்க முடியாது. இப்பிரச்சினையில் எதிர்க்கட்சிகளை நம்புவது மண் குதிரையை நம்புவதற்குச் சமமாகும் என்பதை உணர்ந்து, வணிகர்கள், விவசாயிகள் மற்றும் பிற பகுதி மக்கள் ஓரணியில் இணைந்து போராடவேண்டிய தருணம் இது.