இந்திய விவசாயம் பெரும்பாலும் இரசாயன உரங்களையே நம்பியுள்ளது. போதிய அளவு மழை பெய்திருந்தாலும், தற்போது உரத் தட்டுப்பாடு விலையேற்றத்தால்  இந்திய விவசாயிகள் தத்தளிக்கின்றனர். குறிப்பாக, காவிரி டெல்டா மாவட்டங்களின் தற்போதைய சம்பா நெல் சாகுபடி கடுமையான உரத் தட்டுப்பாட்டில் சிக்கியுள்ளது. பயிருக்கு மணிச்சத்தும் தழைச்சத்தும் கிடைக்க சம்பா நெல்நடவுப் பணியின் போது டி.ஏ.பி. உரம் அடியுரமாக இடப்படும். ஆனால் டி.ஏ.பி. உரம் கிடைக்காமலும், உரத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதாலும் பெரும் அவதிக்கு விவசாயிகள் ஆளாகியுள்ளனர். கடந்த ஆண்டு 50 கிலோ   எடை கொண்ட டி.ஏ.பி. உரம் ரூ.585க்கு விற்பனை செய்யப்பட்டது. இது தற்போது ரூ.825 வரை விற்கப்படுகிறது. மேலும் உயரும் என்று கூறப்படுகிறது. டி.ஏ.பி. உரத்தில் ஏற்கெனவே 18:46 என்ற அளவில் இருந்த மணிச்சத்து, தழைச்சத்து விகிதம் தற்போது 16:44 என்ற அளவில் உரக் கம்பெனிகளால் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் ஏற்கெனவே 100 கிலோ பயன்படுத்தப்பட்ட இடத்தில்,  தற்போது 110 கிலோ உரத்தைப் பயன்படுத்த வேண்டியுள்ளது.

 

 

தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து என்ற மூன்று வகையான உரங்கள் விவசாயத்திற்கு அடிப்படையான உரங்களாகும். இதில் முதலிரண்டு வகை உரங்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப்படுகின்றன. சாம்பல் சத்து எனப்படும் பொட்டாஷ் உரம் மட்டும் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இந்தியாவில் தயாரிக்கப்படும் உரங்களுக்கு, ஆண்டுதோறும் பல்லாயிரம் கோடி ரூபாய்களை மானியமாக ஒதுக்கும் இந்திய  அரசு, அவற்றை உர நிறுவன முதலாளிகளிடமே நேரடியாகக் கொடுத்து வருகிறது.

இதுவரை உரங்களின் விலையைக் கட்டுப்படுத்தி வந்த இந்திய அரசு, இந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில், சௌமித்ரா சௌத்திரி கமிட்டியின் பரிந்துரையின் பேரில் உரங்களின் விலைகளை உரக் கம்பெனிகளே தீர்மானித்துக் கொள்ளலாம் என்று  அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து, உர நிறுவன பெருமுதலாளிகள் இணைந்து உருவாக்கியுள்ள தங்களது கூட்டமைப்பின் மூலம் (கார்ட் படல்கள்) உரங்களின் விலையைத் தங்கள் விருப்பத்திற்கு ஏற்றியுள்ளனர். ஒரு மூட்டை டி.ஏ.பி.யின் விலை ரூ. 480 லிருந்து ரூ.900ஆக உயர்த்தப்பட்டுள்ளது. யூரியாவின் விலையும் பத்து சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.

இது மட்டுமின்றி, வெளிநாடுகளிலிருந்து இறக்குமதியாகும் பொட்டாஷை  கள்ளச் சந்தைக்காரர்கள் பதுக்கிக் கொண்டு, செயற்கையாக தட்டுப்பாட்டை ஏற்படுத்தி பொட்டாஷின் விலையை ரூ. 290 இலிருந்து ரூ. 450ஆக உயர்த்தியுள்ளனர். கலப்பு உரம் தயாரிக்க பொட்டாஷ் அத்தியாவசியமென்பதால், கலப்பு உரத்தின் விலை ரூ.320லிருந்து ரூ.720ஆக, அதாவது இருமடங்குக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. இதன் விளைவாக, தமிழ்நாடு முழுவதும் 26 உர நிறுவனங்கள் பொட்டாஷ் சேர்க்காமலேயே கலப்பு உரம் என்று சொல்லி விவசாயிகளிடம் மோசடி செய்து விற்றுள்ளன.

சிமென்ட் கம்பெனிகள் எவ்வாறு கார்டெல் அமைத்துக் கொண்டு அரசையும் மக்களையும் ஆட்டிப் படைக்கின்றனவோ, அதேபோலத்தான் இன்றைக்கு உரக் கம்பெனி கார்டெல்களும் செயல்படுகின்றன. உர நிறுவனங்கள் மட்டுமன்றி, உர விற்பனை ஏஜென்சிகளும் விவசாயிகளைச் சுரண்டிக் கொழுக்கின்றன. இந்தத் திடீர் விலை உயர்வைப் பயன்படுத்தி உரங்களைப் பதுக்கி வைத்துக் கொண்டு, செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்கியும், பதுக்கிய உரங்களை மிக அதிக விலையில் விற்றும் கொள்ளை லாபமடிக்கின்றனர். இவ்வாறு கந்து வட்டிக்காரன் போல உரமுதலாளிகளும், ஏஜென்டுகளும் இந்திய விவசாயிகளை ஒட்டச் சுரண்டுகின்றனர்.

இந்திய அரசு, விவசாயிகளின் நலனைக் காப்பதாகக் கூறிக் கொண்டு  ஆண்டுதோறும் ஒரு இலட்சம் கோடி ரூபாய் வரை உர மானியமாக உரக் கம்பெனிகளுக்குக் கொடுக்கிறது. இதுவும் போதாதென்று, மோசடியான கணக்குகளைக் காட்டி உரக் கம்பெனிகள் கோடிகோடியாக ஊழல் செய்திருப்பதை மத்திய தணிக்கைக் கட்டுப்பாட்டு அறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது. ஆனாலும், உர முதலாளிகளின் கொள்ளைக்குக் கூட்டாளியாக உள்ள அரசு, இவர்கள் மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

"கடந்த இரண்டு ஆண்டுகளாக உரம் தொடர்பாக மத்திய அரசு எடுத்து வரும் கொள்கை முடிவுகள் அரசுக்கும் உர உற்பத்தியாளர்கள் மற்றும் கள்ளச்சந்தைக்கும் உள்ள இரகசிய தொடர்பைக் காட்டுவதாக உள்ளது' என்று சி.பி.எம். கட்சியின் விவசாய சங்கத் தலைவர் வரதராஜன் கூறுகிறார்.

உற்பத்திச் செலவைவிடக் கூடுதலாக 50 சதவீத விலையை வேளாண் உற்பத்திப் பொருட்களுக்குக் கொடுக்க வேண்டும் என்று தேசிய விவசாயிகள் ஆணையம் அரசுக்குப் பரிந்துரைத்தது. அதன்படி பார்த்தால், ஒரு குவிண்டால் நெல்லுக்கு 2,000 ரூபாய் வரை அரசு தர வேண்டும். ஆனால், தற்போது நெல்லுக்குக் கிடைப்பதோ குவிண்டாலுக்கு ரூ. 1,100 மட்டும்தான். நெல்லுக்கும் வேளாண் உற்பத்திப் பொருட்களுக்கும் உரிய விலை நிர்ணயம் செய்ய மறுக்கும் அரசு, உர முதலாளிகளின் பரிந்துரைகளை மட்டும் உடனே ஏற்றுச் செயல்படுத்துகிறது.

விவசாயத்திற்கு வழங்கப்பட்டுவரும் மானியங்களைப் படிப்படியாகக் கைவிடுவது என்ற தனியார்மயக் கொள்கையை ஏற்று நடத்திவரும்  அரசு, இப்போது உரவிலையை முதலாளிகளே தீர்மானித்துக் கொள்ளையடித்துக் கொள்ள தாராளமாக அனுமதித்துள்ளது. இந்நிலையில்,  சில விவசாய சங்கங்கள் உரத்திற்கான மானியத்தை விவசாயிகளிடமே கொடுக்க வேண்டும் என  கோரிக்கை வைக்கின்றன. முதலாளிகளுக்குக் கொள்ளையடிக்க சுதந்திரம் கொடுத்துவிட்டு, மானியத்தை விவசாயிகளிடம் கொடு என்பது, தும்பை விட்டு விட்டு வாலைப் பிடிப்பதைப் போலத்தான்.

ஏற்கெனவே தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் (100 நாள் வேலைத் திட்டம்) காரணமாக விவசாய வேலைகள் செய்ய ஆட்கள் கிடைப்பது அரிதாகி வருவதால், சிறு விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் விளைபொருளுக்கு உரிய விலை கிடைக்காமலும், விலை வீழ்ச்சியாலும் கடுமையான நெருக்கடியைச் சந்தித்து வருகின்றனர். சென்ற ஆண்டு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.14 ஆயிரம் விற்ற மஞ்சளின் விலை இந்த ஆண்டு ரூ.4 ஆயிரம்தான். இவ்வாறு பல்வேறு நெருக்கடிகளைச் சுமந்து கொண்டிருக்கும் விவசாயிகளின் முதுகில் பாறாங்கல்லை ஏற்றி வைத்தது போல, வரைமுறையற்ற உர விலைக் கொள்ளை எனும் புதிய தாக்குதலை விவசாயிகளின் மீது இந்திய அரசு தொடுத்துள்ளது. விவசாயிகள் விவசாயத்தை விட்டு ஓட்டம்பிடிக்கும் வண்ணம் தனியார்மயமும் தாராளமயமும் சேர்ந்து தொடுத்திருக்கும் இத்தாக்குதலை முறியடிக்காமல்,  இந்தியாவின் ஆகப் பெரும்பான்மையான விவசாயிகளையோ, விவசாயத்தையோ  காப்பாற்ற முடியாது.

. அழகு