புலியெதிர்ப்பு புலியழிப்பைக் கோரியது போல், இனவெதிர்ப்பு இனவழிப்பைக் கோருகின்றது. புலியெதிரிப்பு அரசியல், புலியில்லாத வெற்றிடத்தில் இன்று இனவெதிர்ப்பு அரசியலாக மாறியிருக்கின்றது. இதை மூடிமறைக்க, குறித்த இனத்தின் உள்ளார்ந்த சமூக முரண்பாடுகளை முன்னிலைப்படுத்தி நிற்கின்றது. இதன் மூலம் தன்னை முற்போக்காகவும், மக்கள் சார்பாகவும் காட்டிக் கொள்ள முனைகின்றது. இனத்தின் இருப்பும், இன அடையாளமும் தான், சமூகத்துக்குள்ளான சமூக ஒடுக்குமுறைக்கு எல்லாம் காரணம் என்று கூறி, தாம் போராடத் தடையாக இதுதான் இருப்பதாகக் கூறியும், இனவழிப்பைக் கோருகின்றது. அந்த வகையில் இனவொடுக்குமுறைக்கு உதவுகின்றது.

புலிகள் இருந்தவரை புலிகள்தான் இனத் தீர்வுக்கும், தாம் மக்களுக்காக போராடுவதற்கு தடையும் என்றவர்கள், புலியழிப்பைக் கோரி அதற்கு உதவினர். இதன் பின், அவர்கள் மக்களுக்காக போராடியது கிடையாது. இன்று இனவெதிர்ப்பு மூலம், இனவழிப்பைக் கோருகின்றனர். இனவழிப்புக்கு உதவும் வண்ணம், இனத்தின் உள்ளார்ந்த முரண்பாடுகளை முன்னிறுத்திய அரசியலை மீள முன்தள்ளுகின்றனர்.

இந்த மக்கள் விரோத அரசியல் சாரம், மக்களை சார்ந்தது நிற்பதல்ல. மக்களை சார்ந்து நின்று செயல்படுவதற்கு எதிராக, தங்களைத் தாங்கள் பிரமுகராக தக்கவைத்துக் கொள்வதில் இருந்துதான், இது தொடங்குகின்றது.

இந்த வர்க்க சமூக அமைப்பில் எல்லா இனமும், தன் சொந்த இன அடையாளத்துக்குள் சமூகரீதியான ஒடுக்குமுறைகளைக் கொண்டுதான் இயங்குகின்றது. இது எந்த இனத்துக்கும் விதிவிலக்கல்ல. இனரீதியான ஒடுக்குமுறை இனம் மீது நிலவும் போது, அதுவும் ஒரு ஓடுக்குமுறைதான். எல்லா ஒடுக்குமுறையையும் போல், இது எந்த விதத்திலும் வேறுபட்டதல்ல. இது இந்த வர்க்க சமூக அமைப்பில் தனித்துவம் கொண்டதல்ல. இப்படி பிரித்த புலி அரசியல் முதல் புலியெதிர்ப்பு அரசியல் வரை ஒரே விதமானதும், படுபிற்போக்கானதுமாகும்.

இங்கு ஒரு ஒடுக்குமுறையை முன்னிறுத்தி மற்றைய ஒடுக்குமுறையை மறுப்பது அல்லது மற்றைய ஒடுக்குமுறைகளை முன்னிறுத்தி இன்னொரு ஒடுக்குமுறையை மறுப்பது, சாராம்சத்தில் படுபிற்போக்கானது. குறுகிய எல்லைக்குள் நின்று, ஒடுக்க உதவுவது தான்.

தமிழினவாதிகள் இனவொடுக்குமுறையை முன்னிறுத்தியபடி, தன் சமூகத்தின் உள்ளான மற்றைய ஒடுக்குமுறைகளை பாதுகாக்கின்றனர். இப்படித்தான் மற்றைய முரண்பாடுகளை முன்னிறுத்தி, இனமுரண்பாட்டை மறுக்கின்றவர்கள் அரசியலும். இது ஒரே அடிப்படையைக் கொண்டது. இரண்டும் படுபிற்போக்கானது.

தேசியம் பேசினாலும் சரி, தலித்தியம் பேசினாலும் சரி, ஜனநாயகம் பேசினாலும் சரி, பெண்ணியம் பேசினாலும் சரி, இடதுசாரியம் பேசினாலும் சரி, மொத்த ஒடுக்குமுறையையும் பேசத்தவறினால், அதில் ஒன்று இல்லை என்று மறுத்தால், அதைக் கண்டுகொள்ள தவறினால், விளைவு படுபிற்போக்கானதாகவே இருக்கும். புலிகள் நேரடியான உதாரணம் என்றால், எதிர்மறையில் புலியெதிர்ப்பு இனவெதிர்ப்பு தளத்திலும் இதுதான் நடக்கின்றது.

அதாவது இனவொடுக்குமுறைக்கு எதிரான தேசியம், தன்ளுள்ளான மற்றைய சமூக ஒடுக்குமுறைகளைத் தக்கவைத்தபடி தான் குறுந்தேசியமாக மாறியது. இதனால் அது படுபிற்போக்கான ஒன்றாக மாறித் தன்னை வெளிப்படுத்தியது. இதை ஒத்ததுதான், தேசிய ஒடுக்குமுறையை மறுக்கும் எந்த சமூக கூறுக்கும் கூட பொருந்தும். இதில் எந்த விதிவிலக்கும் கிடையாது.

ஒரு சமூக முரண்பாட்டுக் கூறை முன்னிலைப்படுத்தி, அதன் மூலம் முற்போக்காக காட்டிக்கொள்ளும் அதே தளத்தில், மற்றைய கூறுகளில் படுபிற்போக்கான கூறாகவே தன்னை வெளிப்படுத்தி நிற்பது மூடிமறைபட்ட மக்கள் விரோத அரசியலாகும்;. இதுதான் எங்கும் அரங்கேறுகின்றது.

தேசியம், தலித்தியம், பெண்ணியம்… என்று சமூக ஒடுக்குமுறைகளில் ஒன்றை அல்லது இதில் ஒன்றை விட்டுவிட்டு நடத்துகின்ற அரசியல் படுபிற்போக்கானது. ஒடுக்குமுறைக்கு எதிரான இந்தக் குறுகிய கண்ணோட்டம் முரணுள்ளது மட்டுமின்றி படுபிற்போக்கானதும் கூட.

ஒட்டுமொத்த சமூக ஒடுக்குமுறையை முரணற்ற வகையில் எதிர்த்துப் போராடாத அனைத்தும் படுபிற்போக்கானது. அது மனிதவிரோதத் தன்மை கொண்டது. ஒடுக்குமுறைக்கு மறைமுகமாக உதவுவதாகும்.

இந்த வகையில் புலியெதிர்ப்பு அரசியல் தன்னை முற்போக்காகக் காட்ட, புலித்தேசியம் ஒடுக்கிப் பாதுகாத்த சமூக முரண்பாடுகளை முன்னிலைப்படுத்தினர். அதேநேரம் தேசிய ஒடுக்குமுறையை மறுதலித்தனர். இப்படி குறுந்தேசிய புலி அரசியல் போல், புலியெதிர்ப்பு அரசியலும் குறுகியது. இந்த அடிப்படையில் தான் புலியெதிர்ப்பு அரசியல் என்ற அரசியல் வரையறையை, ஆரம்பம் முதலாக நாங்கள் வரையறுத்தது மட்டுமின்றி அதை அம்பலப்படுத்தியும் வந்தோம்.

இந்தப் புலியெதிர்ப்பு புலியழிப்பு அரசியல் மக்களுக்காகப் போராடுவதற்காக அல்ல என்ற உண்மையின் அடிப்படையில், இதை நாம் கடந்தகாலத்தில் தொடர்ச்சியாக அம்பலப்படுத்தி தனிமைப் படுத்தினோம்.

இன்று புலிகள் இல்லாத நிலையில், இனவெதிர்ப்பு அரசியலாக இது வெளிப்படுகின்றது. இதன் அரசியல் வரையறை என்பது, இனவொடுக்குமுறையை மறுப்பதுதான். சாராம்சத்தில் இனத்துக்குள்ளான ஒடுக்குமுறையை முன்னிறுத்தி, இனவொடுக்குமுறையைக் கண்டுகொள்ள மறுப்பதாகும் அல்லது கண்டுகொள்ளாது இருக்கக் கோருவதாகும். இது இனவொடுக்குமுறைக்கு உதவுவதே ஓழிய, மக்களுக்காக போராடுவதல்ல இதன் அரசியல் சாரம். இது தன்னை மூடிமறைக்க, மீண்டும் இனத்துக்குள்ளான முரண்பாடுகளை முன்னிறுத்தியே வெளிவருகின்றது.

இலங்கையில் பிரதான முரண்பாடு இன்னமும் இனமுரண்பாடாகவே நீடிக்கின்ற நிலையில், அதை மையப்படுத்திப் பேசாத அரசியல் இனவொடுக்குமுறைக்கு உதவுவது தான். அதைத்தான் இனவெதிர்ப்பு அரசியல், தன் அரசியல் அடிப்படையாகக் கொண்டு இன்று இயங்குகின்றது. ஒரு நாட்டின் ஓட்டுமொத்த ஒடுக்குமுறைக்கும் எதிராக, அனைத்து மக்களையும் முரணற்ற வகையில் ஒன்றிணைக்காத அரசியல் கூட படுபிற்போக்கானது. அதாவது ஒடுக்கப்பட்ட ஒரு இனத்தின் அனைத்து சமூக ஒடுக்குமுறையையும் முரணற்ற வகையில் எதிர்த்துப் போராடாத, ஓடுக்கும் இன மக்களுடன் முரணற்ற வகையில் ஓன்றிணையாத ஓன்றிணைக்க முனையாத அரசியலும் கூட இங்கு படுபிற்போக்கானது.

இந்த வகையில் புலியெதிர்ப்பு, இனயெதிர்ப்பு அரசியல் மட்டுமின்றி இனத்தை மையப்படுத்திய குறுகிய இனவரசியலும், இனத்தை மையப்படுத்திய "இடது" அரசியலும் கூட படுபிற்போக்கானது. இவை அனைத்தும் மக்கள் விரோதமானது.

 

பி.இரயாகரன்

14.01.2012