தொடர்ந்து கொண்டிருந்த அராஜகமும் மௌனம் காத்த மத்திய குழுவும்
விச்சுவேஸ்வரன் பயிற்சிமுகாமில் பலத்த பாதுபாப்புடன் தடுத்து வைக்கப்பட்டிருந்தமை, பட்டுக்கோட்டையில் பண்ணையார் சுட்டுக்கொலை, பண்ணையார் வீட்டில் கைது செய்யப்பட்ட மதன் சித்திரவதைகளின் பின் சுட்டுக்கொலை செய்யப்பட்டமை அனைத்தும் நடந்து முடிந்திருந்தது. ஆனால் இந்தியாவில் தங்கியிருந்த மத்தியகுழு உறுப்பினர்களோ அல்லது கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினர்களோ இது குறித்து பேசவோ, கேள்வியெழுப்பவோ தவறியிருந்ததுடன் மௌனம் சாதிக்கவும் தொடங்கியிருந்தனர். இலங்கை அரசபடைகளால் ஒரு அப்பாவிப் பொதுமகன் கொல்லப்பட்டால் அல்லது ஈழவிடுதலைப் போராளி கொல்லப்பட்டால் இலங்கை அரசை அம்பலப்படுத்த நாம் எப்போதும் பின் நின்றது கிடையாது. ஆனால் இந்தியாவில் ஒரு அப்பாவி இந்தியக் குடிமகன் எமது அமைப்பால் கொலை செய்யப்பட்ட போது, ஈழவிடுதலைப் போராட்டத்தில் புளொட்டுடன் இணைந்து இந்தியா சென்ற ஒருவன் எமது அமைப்பினால் சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்டபோது மத்தியகுழு உறுப்பினர்களும் கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினர்களும் "ஈழவிடுதலைப் போராட்டத்தில் தவிர்க்க முடியாத" ஒரு செயலாகக் கருதி தமது கண்களை இறுக மூடி மௌனம் காத்துக் கொண்டிருந்தனர்.
பயிற்சி முகாம் பொறுப்பாளர் மதன் கொலை செய்யப்பட்ட சம்பவம் மத்தியகுழு உறுப்பினர்களிடத்திலும், கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினர்களிடத்திலும் உணர்வலைகளையும் தாக்கத்தையும் ஏற்படுத்தியிருந்ததோ இல்லையோ, பயிற்சி முகாம்களில் பயிற்சி பெற்றுக் கொண்டிருந்தவர்களிடத்தில் பெரும் உணர்வலைகளையும் தாக்கத்தையும் ஏற்படுத்தி விட்டிருந்தது. மதனுடைய கொலை மோசமானதொரு தவறு என உணரத்தலைப்பட்டிருந்த பயிற்சி முகாமிலிருந்த பலர், தாம் ஈழவிடுதலைப் போராட்டத்திற்கென புளொட்டுடன் இணைந்ததன் மூலம் சிறைப்படுத்தப்பட்டுவிட்டதையும் ஈழவிடுதலையைக் காண்பதற்கு முன்பு புளொட் பயிற்சி முகாம்களிலிருந்து விடுதலையடைந்தாக வேண்டும் எனவும் கருதத் தொடங்கினர்.
"அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிய" புறப்பட்டவர்கள் புளொட்டினால் ஏவிவிடப்படும் அனைத்து அடக்குமுறைகளுக்கெதிராகவும் பயிற்சி முகாம்களில் போராட வேண்டியவர்களானார்கள். ஈழவிடுதலைப் போராட்ட நலன் கருதியும், தமது எதிர்கால நலன் கருதியும் பயிற்சி முகாம்களில் நடைபெறும் தவறான போக்குகளுக்கெதிராக பயிற்சி முகாம்களில் இருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் போர்க்கொடி தூக்கத் தயாரானார்கள்.
சந்ததியார் பயிற்சிமுகாம்களில் பயிற்சி பெறுபவர்களுக்கு அரசியல் கல்வியளிப்பதன் மூலம் பயிற்சி முகாம்களில் காணப்படும் தவறான போக்குகளைக் களையலாம் என நம்பிக்கை கொண்டு தோழர் தங்கராஜா மூலமாக பயிற்சிமுகாம்களில் அரசியல் கல்வியை துரிதப்படுத்தினார். பயிற்சி முகாம்களில் பயிற்சி பெறுபவர்களிடத்திலிருந்த அரசியல் ஆர்வமுள்ளவர்களைத் தெரிவு செய்து, அவர்களுக்கு அரசியல் கல்வியூட்டி பயிற்சி முகாம்களிலும், மக்கள் மத்தியிலும் பிரச்சாரம் செய்வதற்கென தயாராக்குவதற்கு முடிவு செய்தார்.
ஆனால் ஒரு புரட்சிகர கருத்தைப் பற்றிக் கொண்ட உறுப்பினர்களால் அல்லாமல், ஒரு சரியான கொள்கைத் திட்டம், வேலைத்திட்டத்தின் அடிப்படையில்லாமல் , பல்வேறு அரசியல் பின்னணியிலிருந்தவர்கள் ஒன்றிணைந்த – தமிழர் விடுதலைக்கூட்டணியினரின் வலதுசாரிய சிந்தனைக்குட்பட்ட, குறுந்தேசியவாத அரசியல் பின்னணியைக் கொண்டிருந்தவர்கள் பெரும்பாலானோர் ஒன்றிணைந்த – ஒரு மத்தியகுழுவையோ, கட்டுப்பாட்டுக்குழுவையோ உருவாக்குவதன் மூலம் ஈழ விடுதலைப் போராட்டத்தை புரட்சிகரமாக்க முடியாது என்பதையோ, இத்தகையதொரு மத்திய குழுவோ அல்லது கட்டுப்பாட்டுக் குழுவோ இருக்கும்போது பயிற்சி முகாம்களில் அரசியல் கல்வியையூட்டுவதால் நிலைமைகள் எதுவும் மாற்றம் பெற்றுவிடாது என்பதையோ சந்ததியார் அறிந்திருக்கவில்லை.
சந்ததியாரின் பணிப்பின் பேரில் பயிற்சி முகாம்களில் தோழர் தங்கராஜாவின் அரசியல் வகுப்புக்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளை அரசியல் வகுப்புக்களில் கலந்து கொண்டவர்கள் புளொட்டின் தவறான போக்குகளை வெளிப்படையாக விமர்சனம் செய்ததுடன் பயிற்சி முகாம்களில் தாம் எதிர்நோக்கும் பிரச்சனைகளைச் சுட்டிக்காட்டி அவற்றுக்கு தீர்வு காணும்படி வலியுறுத்த ஆரம்பித்தனர்.
இதனடிப்படையில் பயிற்சி முகாமில் அரசியல் வகுப்புகளில் கலந்து கொண்டவர்களால் அவர்களது பிரச்சனைகளை உள்ளடக்கிய அறிக்கை தோழர் தங்கராஜாவின் உதவியுடன் தயாரிக்கப்பட்டு புளொட் தலைமைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. ஆனால், புரட்சிகர அரசியல் குறித்த எந்தவித அறிவையோ, புரட்சிகர அரசியல் குறித்த எந்தவித சிந்தனையையோ கொண்டிராத, ஈழவிடுதலைப் போராட்டத்தில் தனது தலைமைப் பாத்திரம் ஒன்றையே ஒரே குறியாகக் கொண்டிருந்த உமாமகேஸ்வரன் பயிற்சி முகாமிலிருந்தவர்களால் தயாரிக்கப்பட்டிருந்த புளொட்டின் மீதான விமர்சனத்தையும், பயிற்சி முகாமிலுள்ளவர்கள் முகம் கொடுக்கும் பிரச்சனைகளையும் தனது தலைமைக்கு எதிரான "சதி"என்பதாகவே இனம் கண்டார்.
அத்துடன் ஈழவிடுதலைப் போராட்டம் தமிழர் விடுதலைக் கூட்டணியினரின் அரசியலின் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுவதற்கு மாறாக புரட்சிகர அரசியலாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி வந்த சந்ததியாரின் "சதி"யே இதுவாகும் என சந்ததியாருடன் தனக்கிருந்த கருத்து முரண்பாட்டை இதற்கூடாக வெளியரங்குக்கு கொண்டு வரலானார். இதன் மூலம் சந்ததியாரைக் குறிவைத்து செயற்பட உமாமகேஸ்வன் தயாரானார்.
பயிற்சி முகாமிலிருந்தவர்களால் உமாமகேஸ்வரனுக்கு அனுப்பிவைக்கப்பட்ட அறிக்கையை ஒரு விமர்சனமாகவும், பயிற்சி முகாமிலிலுள்ளவர்கள் முகம் கொடுக்கும் ஒரு பிரச்சனையாகவும் கருதி அந்த அறிக்கையிலிருந்த உண்மையைக் கண்டறிவதற்கு மாறாக "சந்ததியாரின் சதி" வேலையாக முத்திரை குத்தப்பட்டு பிரச்சனைகள் அணுகப்பட்டன. பயிற்சி முகாமில் அறிக்கையை தயாரித்து அனுப்பியவர்களுடன் அதற்கு உதவியாக இருந்த தோழர் தங்கராஜாவும் உமாமகேஸ்வரனின் உத்தரவின் பேரில் கைது செய்யப்பட்டனர். பயிற்சிமுகாமில் இருந்தவர்களுக்கும் "சந்ததியாருக்கும் உள்ள தொடர்பு" பற்றியும், "புலிகளுடன் உள்ள உறவு" பற்றியும் விசாரணைகள் ஆரம்பமாயின.
சந்ததியாருக்கும் அறிக்கை தயாரித்தவர்களுக்கும் உள்ள தொடர்பு குறித்தும், புலிகளுக்கும் அறிக்கை தயாரித்தவர்களுக்கும் உள்ள தொடர்பு குறித்தும் கேள்விகள் கேட்கப்பட்டு கடுமையான தாக்குதல்களுக்கும் சித்திரவதைகளுக்கும் உள்ளானார்கள். சிலர் சித்திரவதைகளின் பின் கொலை செய்யப்பட்டனர். "சந்ததியாரின் ஆட்களை"யும், "புலிகளின் உளவாளி"களையும் இனம்கண்டு சுத்திகரிப்புச் செய்து தனது தலைமையை உறுதிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு உமாமகேஸ்வரனின் செயற்பாடுகள் முன்சென்றன.
சந்ததியாரின் முயற்சியால் பயிற்சி முகாம்களில் அரசியல் வகுப்புக்களை மேற்கொள்வதற்கு அனுப்பிவைக்கப்பட்ட தோழர் தங்கராஜா உமாமகேஸ்வரனால் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டதுடன் பயிற்சிமுகாம்களில் அரசியல் வகுப்புக்கள் எடுப்பது நிறுத்தப்பட்டு பயிற்சி முகாம்களில் இராணுவப்பயிற்சி மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வந்தது.
அரசியல் என்றால் என்னவென்று அறிந்திராத, மக்கள் போராட்டம் என்றால் என்னவென்று தெரிந்திராத ஒரு இராணுவம் - உமாமகேஸ்வரனின் தனிநபர் தலைமையை வழிபடும் ஒரு இராணுவம் - உமாமகேஸ்வரனின் தலைமையில் உருவாகிக் கொண்டிருந்தது. அதேவேளை தளத்தில் நாம் புளொட் ஒரு புரட்சிகர அமைப்பு என்று நம்பிக்கை கொண்டவர்களாக இராணுவப் பயிற்சிக்கென இளைஞர்களையும், யுவதிகளையும் இந்தியாவுக்கு அனுப்பிய வண்ணம் இருந்தோம்.
ஆனால் உமாமகேஸ்வரனோ தனது இலக்கை வைத்து, அந்த இலக்கை அடைவதற்காகச் செயற்பட்டுக் கொண்டிருந்தார். "ஈழப் பிரச்சனையில் இந்தியாவின் தலையீடு தவிர்க்க முடியாதது" என்ற கருத்தைக் கொண்டிருந்த உமாமகேஸ்வரன் "எந்த அமைப்பிடம் கூடுதலான உறுப்பினர்கள் உள்ளனரோ அவர்களிடம் தான் இந்தியா ஆட்சியைக் கையளிக்கும்" என்ற தனது கற்பனையை தன்னுடன் நெருக்கமானவர்களுக்கு தெரிவித்திருந்தார். இதனால் தான் தளத்திலிருந்து முடிந்தவரை இளைஞர்களையும், யுவதிகளையும் இந்தியாவுக்கு பயிற்சிக்கு அனுப்பி வைக்கும்படி எம்மை ஊக்கப்படுத்தியிருந்தார். இந்தியாவின் தலையீட்டையும் தனது தலைமையிலான ஆட்சியையும் மட்டுமே குறிக்கோளாய்க் கொண்டு தனது தலைமையைப் பாதுகாத்து உறுதிப்படுத்திக் கொள்ளவும், இந்தியத் தலையீட்டால் ஈழம் கிடைக்கப்பெற்றால் அந்த ஆட்சியை தன்வசமாக்கிக் கொள்வதையும் இலட்சியமாகக் கொண்டு உமாமகேஸ்வரன் "காய்களை" நகர்த்திக் கொண்டிருந்தார்.
லெபனானில் இராணுவப்பயிற்சி முடித்து கண்ணன், மாணிக்கம் தாசன், கந்தசாமி, காந்தன் (ரகுமான்ஜான்) உட்பட ஒரு பகுதியினர் இந்தியா வந்து சேர்ந்திருந்தனர். பரந்தன் ராஜன் உட்பட மற்றொரு பகுதியினர் லெபனானில் இராணுவப் பயிற்சிக்கென புறப்பட்டுச் சென்றிருந்தனர். இந்தச் சூழலைப் பயன்படுத்தி உமாமகேஸ்வரன் தனது நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்களை பொறுப்புகளுக்கு நியமித்தார். காந்தன்(ரகுமான்ஜான்) உபசெயலதிபராகவும் முகாம்களுக்கான நிர்வாக ஆலோசகராகவும், கண்ணன் படைத்துறைச் செயலராகவும், கந்தசாமி உளவுப்படைப் பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டனர். புளொட்டை தனது இரும்புப்பிடிக்குள் வைத்திருப்பதை ஒரே நோக்கமாகக் கொண்டு உமாமகேஸ்வரனின் செயற்பாடுகள் ஆரம்பமாயின.
உளவுப்படைப் பொறுப்பாளர் கந்தசாமி தலைமையில் புளொட்டுக்குள் "சந்ததியாரின் ஆட்கள்", "புலி உளவாளிகள்" சுத்திகரிப்பு வேலைகள் தொடங்கின. அரசியல் பேசுபவர்கள், தலைமையை விமர்சிப்பவர்கள் அனைவரும் "சந்ததியாரின் ஆட்கள்", "புலி உளவாளிகள்" என முத்திரையிடப்பட்டு சித்திரவதை முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டு விசாரணைக்குள்ளானார்கள் அல்லது சித்திரவதைகளின் பின் கொலை செய்யப்பட்டனர். பயிற்ச்சி முகாம்களில் அரசியல் பேசக் கூடாது, தோழர் என விழிக்கக் கூடாது எனப் பகிரங்கமாகத் தடை விதிக்கப்பட்டதுடன் அத் தடையை மீறுபவர்கள் புளொட்டின் தலைமைக்கு எதிரானவர்கள், "சதி"காரர்கள் என பகிரங்கமாக அறிவிக்கப்பட்டனர்.
பயிற்சி முகாம்களில் மட்டுமல்லாது புளொட்டுக்குள்ளும் பீதியை ஏற்படுத்தும் வண்ணம் உமாமகேஸ்வரனினதும் அவரது உளவுப்படையினதும் நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டிருந்தன. இவையனைத்தும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுது பயிற்சி முகாம்களில் இருந்த கீழணி உறுப்பினர்கள் போராடத் தொடங்கி விட்டிருந்தனர். ஆனால் மத்தியகுழு உறுப்பினர்களும், கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினர்களும் தமது கண்களை இறுகமூடி மௌனம் காத்துக்கொண்டிருந்தனர்.
உமாமகேஸ்வரன் தனது திட்டங்களை விரைவாக செயற்படுத்திக் கொண்டிருந்தார். தனது வலதுசாரி அரசியல் பார்வையுடன் கைகோர்த்து செயற்படக்கூடியவரும், தனது ஆரம்பகால அரசியலில் "ஆசான்" ஆகக் கருதப்பட்டவருமான அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணியினருடன் இணைவதற்கான இரகசிய முயற்சிகளை உமாமகேஸ்வரன் மேற்கொண்டார்.
தமிழர் விடுதலைக் கூட்டணியினருடனான சந்திப்பை நிகழ்த்த தனது வலதுசாரி அரசியலின் மிக நெருங்கிய கூட்டாளியாகத் திகழ்ந்த வாசுதேவாவையும், தன்னால் படைத்துறைச் செயலராக நியமிக்கப்பட்ட, ஆனால் படைத்துறைச் செயலருக்குரிய எந்தவித தகுதியுமற்ற கண்ணனையும் அனுப்பிவைக்க முடிவு செய்தார். ஆனால் இறுதிநேரத்தில் கண்ணன் மட்டுமே தமிழர் விடுதலைக் கூட்டணியினரைச் சந்திக்கவென சென்றிருந்தார். ஐப்பசி 04, 1984 தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தை சென்னையில் கண்ணன் சந்தித்ததையடுத்து தமிழர் விடுதலைக்கூட்டணியினரும் புளொட்டும் இணைந்து செயற்படுவதென ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது.
கண்ணன் செயலதிபர் உமாமகேஸ்வரனுக்கு எழுதிய கடிதம் பார்க்க தீப்பொறி 1 பக்கம் 6
1984 நடுப்பகுதியில் டொமினிக் தளநிர்வாகப் பொறுப்பாளராக பொறுப்பேற்றிருந்தபோது இயக்கங்களுக்கிடையிலான இணைவு குறித்தும் தமிழர் விடுதலைக் கூட்டணியினருடன் இணைவு குறித்தும் எமது கருத்தைக் கேட்டறிந்திருந்தார். இடதுசாரிப் பின்னணியைக் கொண்ட இயக்கங்களுடனான இணைவை எம்மில் பலர் வலியுறுத்தி, ஆதரித்த அதேவேளை பாராளுமன்ற ஆசனங்களை மட்டும் குறியாகக் கொண்டு செயற்படும் வலதுசாரிக்கட்சியான தமிழர் விடுதலைக் கூட்டணியுடனான இணைவை நாம் எதிர்த்திருந்தோம்.
"தமிழீழத்தின் குரல்" வானொலியும், "புதிய பாதை" பத்திரிகையும் இடதுசாரிக்கருத்துக்களை வெளியிட்டுக் கொண்டிருந்ததோடு புளொட்டை ஒரு புரட்சிகர அமைப்பென்றும் பறைசாற்றிய வண்ணமிருந்தன. உமாமகேஸ்வரனோ தமிழர் விடுதலைக்கூட்டணியினருடன் இணைந்து "கூட்டாட்சி" நடாத்தத் தயாராகிக் கொண்டிருந்தார். தளத்தில் செயற்பட்டுக் கொண்டிருந்த கீழணி உறுப்பினர்கள் இடதுசாரி கருத்தை முன்னிறுத்தி இடதுசாரி இயக்கங்களுடனான உறவை வலுப்படுத்த வேண்டும் என கருத்துக்களை முன்வைத்தவண்ணம் இருந்தனர். ஆனால் இந்தியாவிலிருந்த மத்தியகுழு உறுப்பினர்களும், கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினர்களும் தமது கண்களை இறுக மூடி மௌனம் காத்தனர்.
ஈழவிடுதலையை வென்றெடுப்பதற்காக சர்வதேசரீதியாக நிதிதிரட்டும் நடவடிக்கையில் இறங்கிய உமாமகேஸ்வரன் ஈழவிடுதலைக்காகப் புளொட்டுடன் இணைந்து போராட முன்வந்த இளைஞர்கள் பலரை சர்வதேச போதைவஸ்து வியாபாரத்தில் இறக்கியதன் மூலம் இலட்சக்கணக்கான ரூபாய்களை பெற்றுக் கொண்டதுடன், போதைவஸ்துக்கடத்தும் ஒரு கூட்டத்தை உருவாக்கி அதற்குத் தலைமை தாங்கினார்.
ஆயிரக் கணக்கான இளைஞர்களையும், யுவதிகளையும் போதைவஸ்துக்கு அடிமையாக்கிப் பெறப்படும் பணத்தின் மூலம் ஈழவிடுதலைப் போராட்டம் வெல்லப்படவேண்டும் என்ற கொள்கையை பின்பற்றினார். ஆனால் இந்தியாவிலிருந்த மத்தியகுழு உறுப்பினர்களும் கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினர்களும் தமது கண்களை இறுகமூடி மௌனம் காத்துக் கொண்டிருந்தனர்.
உமாமகேஸ்வரனால் புளொட்டுக்குள் மேற்கொள்ளப்பட்ட "சுத்திகரிப்பு" நடவடிக்கை தொடர்ந்துகொண்டிருந்தது. புளொட்டின் ஆரம்பகால உறுப்பினர்களான உடுவில் சிவனேஸ்வரன், சுண்ணாகம் அகிலன், கந்தரோடை பவான்(சோதி) ஆகியோர் உமாமகேஸ்வரனின் உத்தரவின் பேரில் கடத்தப்பட்டு சித்திரவதை முகாமான "B"காம்புக்குக் கொண்டு செல்லப்பட்டு நீண்ட நாட்கள் சித்திரவதையின் பின் கொலை செய்யப்பட்டனர்.
உடுவில் சிவனேஸ்வரனுக்கும் உமாமகேஸ்வரனுக்கும் எந்தவித அரசியல் முரண்பாடுகளும் இருந்திருக்கவில்லை. சிவனேஸ்வரன் எந்தவித "சதி" நடவடிக்கைகளிலும் ஈடுபட்டவரும் அல்ல. ஆனால் திருமணமாகிவிட்டிருந்த உமாமகேஸ்வரனின் வேறு நபர்களுடனான தொடர்புகளையிட்டு உமாமகேஸ்வரனை நோக்கி சிவனேஸ்வரன் கேள்விகளை எழுப்பியிருந்தார். எங்கே தனது "அந்தரங்க" வாழ்க்கை அம்பலத்துக்கு வந்துவிடுமோ எனப் பயந்த உமாமகேஸ்வரன் சிவனேஸ்வரனையும் அவரது நெருங்கிய நண்பர்களும் தோழர்களுமாகிய அகிலனையும் பவானையும் கடத்திப் படுகொலை செய்தார்.
புளொட்டின் ஆரம்பகாலங்களில் அதன் வளர்ச்சிக்காக தமிழீழ விடுதலைப் புலிகளின் மிரட்டல்களுக்கு அடிபணியாது செயற்பட்டவர்களில் சிவனேஸ்வரன், அகிலன், பவான் ஆகியோரும் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்களை "B"காம்பில் நீண்டகாலமாக சித்திரவதை செய்து பின் இவர்கள் கொலைசெய்யப்பட்ட போதும் மத்தியகுழு உறுப்பினர்களும், கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினர்களும் தமது கண்களை இறுகமூடி மௌனம் காத்துக் கொண்டிருந்தனர்
இந்தியாவில் புளொட்டுக்குள் மேற்கொள்ளப்பட்டுக்கொண்டிருந்த "சந்ததியாரின் ஆட்கள்" சுத்திகரிப்பு நடவடிக்கையை தளத்திற்கு விஸ்தரிக்க முடிவெடுத்து தனது நம்பிக்கைக்கு பாத்திரமான படைத்துறைச் செயலர் கண்ணனை உமாமகேஸ்வரன் தளத்துக்கு அனுப்பி வைத்தார்.
சத்தியமூர்த்தி, சலீம் ஆகியோரின் கைதுக்குப் பின்னும் கேதீஸ், பார்த்தன் ஆகியோரின் மறைவுக்குப் பின்னும் தள நிர்வாகப் பொறுப்பையும் தள இராணுவப் பொறுப்பையும் தற்காலிகமாகக் கவனித்துக் கொண்டிருந்த கண்ணாடிச்சந்திரன் உமாமகேஸ்வரனின் உத்தரவின்பேரில் கண்ணனினால் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அதன் தொடர்ச்சியாக தளத்தில் இராணுவத்துறையில் செயற்பட்டுக் கொண்டிருந்த முல்லைத்தீவு பயிற்சி முகாம் பொறுப்பாளர் மல்லாவிச்சந்திரன், வவுனியா இராணுவப் பொறுப்பாளர் வவுனியாதம்பி, நேரு, சுகுணன் போன்றோரும் கண்ணனின் நேரடிக் கவனிப்பில் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்ட கண்ணாடிச்சந்திரனை ஒரத்தநாட்டில் இருந்த சித்திரவதை முகாமான "B"காம்புக்கு கொண்டுசென்று "சந்ததியாருடனான தொடர்பு" பற்றி சித்திரவதை செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டார். இதே காலப் பகுதியில் மல்லாவிச்சந்திரனும் "B"காம்பில் சித்திரவதை செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டார். அதேவேளை வவுனியா இராணுவப் பொறுப்பாளர் வவுனியா தம்பி, நேரு, சுகுணன் போன்றோர் பயிற்சிமுகாம்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
மத்திய குழு உறுப்பினரான கண்ணாடிச்சந்திரனை உமாமகேஸ்வரன் தனது உளவுப்படையைக் கொண்டு கைதுசெய்து சித்திரவதை முகாமான "B"காம்பில் மாதக்கணக்கில் சித்திரவதை செய்தபோதும் கூட, சக மத்திய குழு உறுப்பினர் மீதான சித்திரவதை குறித்து பேசுவதற்கோ அல்லது அது குறித்து கேள்வி எழுப்பவோ எந்த மத்தியகுழு உறுப்பினர்களோ அல்லது கட்டுப்பாட்டு குழு உறுப்பினர்களோ முன்வந்திருக்கவில்லை.
தளத்தைப் பொறுத்தவரை புளொட்டின் கீழணி உறுப்பினர்கள் அமைப்பு குழுக் கூட்டங்களிலும் சரி, தனிநபர் சந்திப்புக்களிலும் சரி பிரச்சனைகளை வெளிப்படையாக முன்வைத்து விவாதித்து வந்தனர். புளொட்டின் தவறான போக்குகளை தவறென்றும் அத்தவறான போக்குகளுக்கெதிராக வெளிப்படையாகவும் விட்டுக்கொடுப்பின்றியும் போராடிக் கொண்டிருந்தனர்.
ஆனால் இந்தியாவில் இருந்த மத்தியகுழு உறுப்பினர்களும் கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினர்களும் தமது கண் முன்னே நடந்த, நடைபெற்றுக் கொண்டிருந்த சம்பவங்களை அறிந்து கொண்டிருந்த போதும் அதற்கெதிராக போராட முன்வந்திருக்காததுடன் உமாமகேஸ்வரனின் அராஜகங்களுக்கு துணைபோனவர்களாயும் விளங்கியிருந்தனர் .
1. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 1
2. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 2
3. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 3
4. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 4
5. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 5
6. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 6
7. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 7
8. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 8
9. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 9
10. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 10
11. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 11
12. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 12
13. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 13
14. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 14
15. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 15
16. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 16
17. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 17
18. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 18
19. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 19
20. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 20
21. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 21
22. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 22
23. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 23
24.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 24
25.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 25
26.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 26
27.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 27
28.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 28
29. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 29
30 .புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 30
31. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 31
32. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 32
33. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 33
34. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 34
35.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 35
36.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 36
37.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 37
38.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 38