கூடங்குளம் அணு மின் நிலையத்தை மூடக் கோரி நடைபெற்ற மக்கள் போராட்டத்தை  அலட்சியப்படுத்திப் பணிய வைத்துவிடவே அரசு முயன்றது. ஆளும் வர்க்க ஊடகங்களும் அதற்கு ஒத்துழைத்தன. அண்ணா ஹசாரே என்ற ஒரு கோமாளி நடத்திய சர்க்கஸ் வித்தையையும், அதை வேடிக்கை பார்க்க வந்த கூட்டத்தையும் நேரலை ஒளிபரப்பில் காட்டி, ஊருக்கு ஊர் நாலு ஊழல் ஒழிப்புக் கோமாளிகளை உருவாக்கிய ஊடகங்கள், கூடங்குளம் போராட்டத்தைப் புறக்கணிக்கவே செய்தன என்பதை  விளக்கத் தேவையில்லை. கூடங்குளம் போராட்டத்தை நாடறியச் செய்தால் அது, நாடு முழு வதும் அணுஉலைகளுக்கு எதிரான போராட்டத்தைப் பற்றவைக்கும்  அத்தகைய சூழ்நிலையை தங்களது எசமானர்கள் விரும்பமாட்டார்கள் என்பதையும் ஊடகங்கள் அறியும்.

 

 

ஆயினும் ஊடகங்களின் புறக்கணிப்பையும் மீறி இடிந்தகரையில் நடைபெற்ற மக்கள் போராட்டம் முதல் கட்ட வெற்றியைப் பெற்றிருக்கிறது. "அணு உலையால் ஆபத்தில்லை; சுனாமி தாக்கினாலும், நிலநடுக்கம் வந்தாலும் அணு உலை அசையாது. உங்கள் அச்சம் அடிப்படையற்றது. போராட்டத்தை முடித்துக் கொள்ளுங்கள்' என்று தனது உண்மையான கருத்தை, தனக்குரிய தோரணையில் அறிவித்தார், ஜெயலலிதா. அம்மாவின் "வேண்டுகோள்' ஏற்கப்படாவிட்டால், அடுத்து லத்திக்கோல் வரும் என்பதே மரபு. எனினும், மூவர் தூக்கு பிரச்சினையில் நடந்ததைப் போலவே, மக்கள் போராட்டத்தின் உறுதி, ஜெயலலிதாவின் மீது பெருந்தன்மையைத் திணித்தது;  பிர தமர்  திருவாளர்  கல்லுளிமங்கனின் மவுனம், தலைவியின் மீது "புரட்சி'யைத் திணித்து. விளைவு  "மக்களுடைய அச்சம் அகற்றப்படும் வரையில் கூடங்குளம் அணு மின்நிலையப் பணிகள் நிறுத்தி வைக்கப்படவேண்டும்' என்ற தமிழக அமைச்சரவைத் தீர்மானம்.

சுயமாகச் சிந்திக்கும் மக்களையோ, தொண்டர்களையோ ஜெ. ஒருபோதும்  விரும்புவதில்லை. மொத்த தமிழகத்துக்காகவும் சிந்திக்கும் பொறுப்பைத் தன்னந் தனியாக ஏற்றுக் கொண்டு, மேசையைத் தட்டும் பொறுப்பை மட்டுமே மற்றவர்களுக்கு ஒதுக்கும் தாயுள்ளம் கொண்டவர். இடிந்தகரையிலிருந்து அம்மாவுடன் பேசுவதற்கு வந்த பிரதிநிதிகள், ஊருக்குத் திரும்பிச் சென்று, போராடும் மக்களின் கருத்தையும் கேட்ட பின் தங்களது முடிவை அறிவிப்பதற்கே விரும்பினர். ஆனால், அதற்கு முன் அந்தப் பொறுப்பையும் அம்மாவே ஏற்று, சட்டமன்றத்தில் அறிவிப்பு செய்து, இடிந்தகரை போராட்டத்தை கோட்டையிலிருந்தே வாபஸ் வாங்கிவிடக் கூடும் என்று அஞ்சியதாலோ என்னவோ, கோட்டை வளாகத்திலேயே அவர்கள் அறிவித்துவிட்டனர்.

தமிழக அரசின் தீர்மானம் ஒருபுறமிருக்க, டிசம்பரில் இயங்கத் தொடங்குவது என்ற திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட அணு மின்நிலையப் பணிகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. கூடங்குளத்தை மூடநேரிட்டால், இந்தியரசிய கூட்டுத் தொழில் முயற்சிகள் பலவும் பாதிக்கும் என்று ரசியா எச்சரித்திருக்கிறது. கூடங்குளத்தில் அரசு தோற்றுவிட்டால், ஜெய்தாபூர் உள்ளிட்ட எல்லா இடங்களிலும் அணுமின் நிலையங்களுக்கு எதிரான மக்கள் போராட்டம் கிளர்ந்தெழும். மேலும், சிங்குர், நந்திகிராமம் பிரச்சினைகளைப் போலன்றி, இதன் பரிமாணம் மிகவும் பெரிது. இந்தியாவின் அணுசக்தி கனவினால் அமெரிக்க, பிரெஞ்சு பன்னாட்டு முதலாளிகள் அடையவிருக்கும் கொள்ளை இலாபம், அணு மின் உற்பத்தியில் குதிக்க காத்திருக்கும் டாடா, அம்பானி போன்ற தரகு முதலாளிகளின் இலாப வெறி, அணு மின்நிலை

யங்களை பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யத் துடித்துக் கொண்டிருக்கும் இந்திய அணுசக்தி அதிகாரவர்க்கம், அணுசக்திக் கனவுடன் இணைந்த இந்தியாவின் வல்லரசுக் கனவு, அதற்குத் தேவைப்படும் அமெரிக்காவின் தயவு... போன்ற பல விசயங்கள் அணுவுக்குள் புதைந்திருக்கின்றன.

தனியொரு பிரச்சினையாகக் கையாண்டு தீர்வு கண்டு விடக்கூடிய பிரச்சினை அல்ல கூடங்குளம் பிரச்சினை என்ற போதிலும், அதன் குறிப்பான அபாயங்கள் நம் கவனத்துக்குரியவை. ஃபுகுஷிமா விபத்தினைத் தொடர்ந்து ரசிய அணு உலைகளின் பாதுகாப்பு பற்றிய ஒரு ஆய்வறிக்கையை ரசிய அரசு நிறுவனங்கள் அதிபர் மெத்வதேவிடம் அளித்திருக்கின்றன.(டவவணீ:ஃஃதீதீதீ.ஞழூடூடூணிணச்.ணிணூஞ்ஃச்ணூவடிஞிடூழூண்ஃ ச்ணூவடிஞிடூழூண்சு2011ஃணூணிண்ச்வணிட்சுணூழூணீணிணூவ) வெள்ளம், தீ, நில நடுக்கம் முதலான இயற்கைப் பேரழிவுகள் முதல் மனிதத்தவறுகள் வரையிலான காரணங்களால் ஏற்படக்கூடிய விபத்துகளைத் தடுக்கும் ஏற்பாடுகள் ரசிய அணுஉலைகளில் இல்லை என்று கூறுகின்றது அந்த அறிக்கை. "அது நாள் வரை வெளிப்படையாகச் சொல்லப்படாத, உலகம் அறியாத பல குறைபாடுகளை அந்த அறிக்கை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது' என்று நார்வேயின் ஆற்றல் தொழில்நுட்பத்துறையின் தலைமைப் பொறியாளர் ஓலே ரிஸ்தாத் இவ்வறிக்கையைப் பற்றித் தெரிவித்திருக்கிறார்.

அவ்வறிக்கை பட்டியலிட்டுள்ள எல்லா குறைபாடுகளையும் ஆராயத் தேவையில்லை. ஒன்றை மட்டும் எடுத்துக் கொள்வோம். நில நடுக்கம் வந்தால் அணு உலையைப் பாதுகாப்பதெப்படி என்ற பிரச்சினை, ரசிய அணுஉலைகளின் வடிவமைப்பின்போது கணக்கில் கொள்ளப்படவே இல்லை என்று கூறுகிறது இவ்வறிக்கை. ஆனால், இந்திய அணுசக்தித் துறை இந்த உண்மையை வெளியில் சொல்லவேயில்லை. அணுமின் நிலையத்தின் 1.6 கி.மீ. சுற்றெல்லையில் மக்கள் குடியிருப்பு இருக்கக் கூடாது என்பது மிகவும் அடிப்படையான உலகறிந்த ஒரு விதி. ஆனால், கூடங்குளம் அணுமின்நிலையத்திலிருந்து ஒரு கி.மீ. சுற்றளவுக்குள் சுனாமி குடியிருப்புகளை அரசே கட்டிக் கொடுத்திருக்கிறது. மக்களின் பாதுகாப்பு குறித்த இந்திய அரசின் அக்கறையைப் புரிந்து கொள்ள இவ்விரு எடுத்துக் காட்டுகளே போதுமானவை.

சுனாமியோ, நிலநடுக்கமோ வந்தால்தான் அணுலைகளுக்குப் பிரச்சினை என்ற பார்வையே பிழையானது. அமெரிக்கா, கனடா, பிரான்சு ஆகிய நாடுகளில் இதுவரை நடந்துள்ள விபத்துகள் இயற்கை சீற்றத்தினால் ஏற்பட்டவை அல்ல. வடிவமைப்பு தவறு மற்றும் இயக்குபவரின் தவறினால் விளைந்தவை. சமீபத்திய சில பத்தாண்டுகளில் 17 முறை விபத்தின் விளிம்பிலிருந்து அமெரிக்க அணுஉலைகள் காப்பாற்றப்பட்டிருக்கின்றன. உயர் வெப்பமும் உயர் அழுத்தமும் மிகவும் சிக்கலான தொழில் நுட்பமும் கொண்ட அணு உலைகளில், ஏதேனும் ஒரு இடத்தில் நேரும் சிறு பிழை, சங்கிலித்தொடர் போல முற்றிலும் எதிர்பாராத விளைவுகளைத் தோற்றுவிக்கும். அந்த வகையில் ஃபுகுஷிமா விபத்தைக்கூட எதிர்பாராதது என்று கூறுவது ஏமாற்றுவேலை. தீவிர நிலநடுக்கப் பகுதி என்று அறியப்பட்ட இடத்தில் 6 அணு உலைகளை வரிசையாக அமைக்கப்பட்டிருந்தன. அமெரிக்காவின் ஜெனரல் எலெக்ட்ரிக் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட அந்த கொதிநீர்  உலைகளின் வடிவமைப்பிலும் பிரச்சினைகள் இருந்திருக்கின்றன.

அமெரிக்கா, ஜப்பான் போன்ற கல்வியறிவு பெற்ற மக்களைக் கொண்ட நாட்டிலேயே இவை தொடர்பான உண்மைகள் இரகசியமாகவே வைக்கப்படுகின்றன. ஃபுகுஷிமா விபத்து நேர்ந்தபோது 30 கி.மீ. சுற்றளவு கொண்ட பகுதியிலிருந்து வெளியேறினால் போதும் என்றனர்; அமெரிக்கா தனது குடிமக்களை 90 கி.மீ. சுற்றெல்லைக்குள் இருக்கவேண்டாம் என்றது. பிறகு 220கி.மீ தூரத்தில் உள்ள டோக்கியோ நகரில் குழாய்த் தண்ணீரில் கதிர்வீச்சு இருப்பது தெரிந்தது. பின்னர், அமெரிக்காவின் மேற்குக் கடற்கரை, தென்கிழக்கு ஆசியாவின் கடற்பரப்புகளில் கதிர்வீச்சு கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், இந்திய அணுசக்தி துறையின் செயலர் ஸ்ரீகுமார் பானர்ஜி, புகுஷிமாவில் நடந்தது அணுஉலை விபத்து என்று ஒப்புக்கொள்வதற்கே பத்து நாள் ஆனது. "இது விபத்தெல்லாம் இல்லை. விபத்தைத் தடுப்பதற்கு நடக்கும் ஒத்திகைப் பயிற்சி' என ஜப்பான்காரனே யோசித்துப் பார்த்திருக்க முடியாத கோணத்தில் ஃபுகுஷிமா வுக்கு அன்று விளக்கம் அளித்தார், இந்திய அணுசக்தி கழகத்தின் தலைவர் எஸ்.கே.ஜெயின்.

ஹிரோஷிமாவில் இலட்சக்கணக்கில் மக்கள் செத்து விழுந்ததைப் போல ஃபுகுஷிமாவில் சாகவில்லைதான். இதை வைத்து இந்த அபாயத்தை குறைத்து மதிப்பிட்டுவிட க்கூடாது. செர்னோஃபில் விபத்தில் கூட 32 தீயணைப்பு வீரர்கள்தான் உடனே இறந்தனர். ஆனால், அதன்பின் புற்றுநோய், ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் 1,40,000 பேர். இறந்தவர்கள் 70,000 பேர். உண்மையான எண்ணிக்கை இதைப் போல 10 மடங்கு என்று கூறுகிறது நியூயார்க் அகாதமி ஆஃப் சயின்சஸ் என்ற ஆய்வு நிறுவனம்.

அணு மின்ஆற்றலின் பிரச்சினைகள் குறித்து பல அறிவியலாளர்கள், ஆய்வாளர்கள் போதுமான அளவு எழுதியிருக்கிறார்கள். அணுமின் நிலையம் இயங்கும்போது நேரும் விபத்து என்பது அதன் பிரச்சினைகளில் ஒரு அம்சம் மட்டுமே. விபத்து நேராமல் கூடப் போகலாம். ஆனால், இயங்கி முடித்தபின் அந்த மின்நிலையமும், அணுக்கழிவுகளும் தோற்றுவிக்கும் பிரச்சினையிலிருந்து தப்பவே முடியாது.

அணு ஆற்றலின் அபாயம் குறித்த கேள்விகளுக்குப் பதிலளிக்க இயலாதபோது, அதன் தவிர்க்க இயலாமை குறித்து அரசும் ஆளும் வர்க்கமும் பேசத் தொடங்குகின்றன. அதிகரித்து வரும் தொழிற்சாலைகள், நகரங்கள், பெருகி வரும் மின்சார சாதனங்கள், நுகர்பொருட்கள் ஆகியவற்றைக் காட்டி, இந்த மின்சாரத் தேவையை ஈடுசெய்ய வேறு என்ன வழி என்பதை நீங்கள் கூறுங்கள் என்று நம்மைக் கேட்கிறார்கள். அந்நியச் சந்தைக்காக உற்பத்தி செய்யும் பன்னாட்டு நிறுவனத் தொழிற்சாலைகள், அவர்களுக்கான தடையில்லா மின்விநியோகம், உலகமயம் தோற்றுவிக்கும் நகரமயம், நுகர்பொருள் கலாச்சாரம், அதற்கான கேளிக்கை விடுதிகள், மால்கள், ஒளிவெள்ளத்தில் திளைக்கும் நகர்ப்புறக் கடைவீதிகள் ... என்று பெரும்பான்மை மக்களைச் சுரண்டுகின்ற, ஒதுக்குகின்ற ஒரு வளர்ச்சிப் பாதையைத் தீர்மானித்துக் கொண்டு, அதற்கு மின் விநியோகம் செய்வதற்கு மட்டும் ஆலோசனை கூறுமாறு அவர்கள் நம்மிடம் கோருவது அயோக்கியத்தனம். காற்றாலை, சூரிய ஒளி என்று மாற்றுகள் குறித்து நாம் அவர்களுக்கு விளக்கிக் கொண்டிருப்பது இளிச்ச வாய்த்தனம்.

அணு மின்நிலையம் என்ற வழிமுறை நமது மின் தேவை குறித்த பொருளாதார ரீதியான கணக்கீட்டிலிருந்து எட்டப்பட்ட முடிவு அல்ல. பொருளாதாரரீதியிலும் இது பெரும் செலவு பிடிப்பது சுயசார்பானது அல்ல உடனே ஆகக்கூடியதும் அல்ல. அணுமின்சாரம் குறித்த இந்தசாமியாட்டம், இந்திய அமெரிக்க இராணுவ ஒப்பந்தம், இந்தியஅமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம், அமெரிக்க, பிரெஞ்சு அணு உலை உற்பத்தியாளர்களின் வர்த்தகத் தேவை ஆகியவற்றால்தான் தீர்மானிக்கப்படுகிறது.

அணு மின்நிலையம் என்பது தேவதைகள் உலவும் சொர்க்கமாகவே இருக்கட்டும். அந்தச் சொர்க்கம் வேண்டாம் என்று சொல்லும் உரிமை மக்களுக்குக் கிடையாதா? அது சொர்க்கமல்ல, நரகம்தான் என்பதை திருவாளர் மன்மோகன் சிங்கிற்கு நாம் புரிய வைத்து விட்டால், இந்தியஅமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை ரத்து செய்து விடுவாரா? அறிவும் அறமும்தான் நாட்டை நடத்துகின்றனவா? "இல்லை.. இல்லை' என்று திகார் சிறையிலிருந்து கத்துகிறார், அமர்சிங்.

ஃபுகுஷிமா விபத்துக்கு மேல் புரியவைப்பதற்கு வேறென்ன பொழிப்புரை வேண்டும்?  இன்று அணு உலைகள் அமைப்பதை எல்லா  நாடுகளும் இடைநிறுத்தம் செய்து விட்டன. மன்மோகன் சிங்கோ "சுயேச்சையான "அணு ஆற்றல் ஒழுங்குமுறை ஆணையம்' ஒன்றை அமைப்பதன் மூலம் அணு உலைகளின் பாதுகாப்பை உத்திரவாதப்படுத்துவோம்' என்று அறிவித்திருக்கிறார்.

முதலில் அணுஉலைகளை விற்கும் அமெரிக்க முதலாளிகளின் பாதுகாப்பை உத்திரவாதப்படுத்துங்கள் என்று இந்திய அரசை நெருக்குகிறார், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஹிலாரி கிளின்டன். மன்மோகன் அரசு ஏற்கெனவே நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியிருக்கும் அணுசக்தி கடப்பாடு சட்டத்தின் 17பி பிரிவு, "அணு உலையின் வடிவமைப்பில் தவறு இருந்து, அதனால் விபத்து நேரும் பட்சத்தில், அந்த உலையை விற்பனை செய்த நிறுவனத்திடம் இழப்பீடு கேட்பதற்கு வழிவகுக்கிறது. பிரிவு 46 பாதிக்கப்பட்ட மக்கள் அணு உலை தயாரித்த கம்பெனியிடம் நட்ட ஈடு கோர மறைமுகமாக வழி செய்கிறது.' எனவே இவ்விரண்டு பிரிவுகளையும் சட்டத்திலிருந்தே  நீக்க வேண்டும் என்கிறார் ஹிலாரி. (தி இந்து, ஜூலை,19, 2011)

அணு உலைகளையே நீக்க வேண்டும் என்று கோருவதற்கு இதைக் காட்டிலும் வலிமையான காரணம் தேவையா என்ன?

. தொரட்டி