உள்ளூராட்சி முறையும் தேர்தல்களும், அவற்றுக்குத் தாழ்த்தப்பட்டபழங்குடி மக்கள் மற்றும் மகளிருக்கான இடஒதுக்கீடுகளும் ஜனநாயகத்தைப் பரவலாக்குவதாகவும் ஆழமாக்குவதாகவும், ஒரு பம்மாத்து தொடர்ந்து நடந்து வருகிறது.

 

 

உள்ளூராட்சித் தலைவர் முதல் வட்டப் பிரதிநிதிகள் வரை எங்கெல்லாம் மகளிருக்கான   இட ஒதுக்கீடுகள் செய்யப்பட்டிருக்கின்றனவோ, அங்கெல்லாம் அவர்கள் வெறும் பொம்மைகளாக்கப்பட்டு அவர்களுடைய கணவன்மார்கள் தாம் பதிலிகளாகச் செயல்பட்டு வருகிறார்கள். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்களுக்கான இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள உள்ளூராட்சி அமைப்புகளில் வேறுமாதிரி நடக்கிறது. ஆதிக்க சாதியினர் பெரும்பான்மையாக உள்ள இடங்களில் தங்களுடைய கைப்பொம்மைகளாகவும் தமது ஆதிக்கத்துக்குக் கீழ்படிபவர்களை மட்டும் தேர்தல்களில் நிறுத்தி "வெற்றி' பெறுமாறும் பார்த்துக் கொள்கிறார்கள்; அவர்களிலும் உள்ளூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தாழ்த்தப்பட்ட சாதிகளுக்குள்ளேயே மிகச் சிறுபான்மை, அங்குள்ள ஓரிரு குடும்பங்களைச் சேர்ந்தவர்களைத் தாமே தேர்தல்களில் நிறுத்தி "வெற்றி' பெறுமாறு செய்கின்றனர். இப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தமது இருக்கைகளில் அமர்ந்து பணியாற்றக்கூட அனுமதிக்கப்படுவதில்லை.  ஒரு ஓரத்தில் கைகட்டி நின்று, ஆதிக்க சாதியினரும், அதிகார வர்க்கத்தினரும் நீட்டிய இடங்களில் கையொப்பம் அல்லது கை நாட்டுப் போடுவதுதான் அவர்களுக்குள்ள "அதிகாரமாக' இருக்கிறது. இந்த "விதி'யை மீறுபவர்கள் அடித்துத் துன்புறுத்தப்படுகிறார்கள். கொலை கூடச் செய்யப்படுகிறார்கள். தங்கள் கிராமங்களை இடஒதுக்கீடு செய்வது கூடாதென்று ஆரம்ப நிலையிலேயே ஆதிக்க சாதியினர் நடத்திய அட்டூழியங்கள் பாப்பாபட்டி, கீரிப்பட்டி போன்ற சில கிராமங்களில் பகிரங்கமாகவே நடந்திருக்கின்றன.

இவ்வளவு சிரமங்கள் கூடாதென்று உசிலை, திருமங்கலம் மட்டுமல்ல் பரவலாக பல கிராமங்களில் இட ஒதுக்கீடு செய்யப்பட்ட உள்ளூராட்சித் தலைவர் பதவிகளை ஆதிக்க சாதியினர் ஏலத்தில் விடுகின்றனர். அவர்களில் வசதி படைத்தவர்களே தலைவர் பதவிகளை ஏலத்தில் எடுத்து, தங்களது கைப்பாவைகளையோ, அடியாட்களையோ கிராமக்  கட்டுப்பாட்டின்படி போட்டியின்றித் தேர்ந்தெடுக்கும்படி செய் துவிட்டுத் தாம் துணைத் தலைவர் பதவிக்கு வந்து விடுகிறார்கள். தலைவர் பதவியை ஏலத்தில் எடுத்தவர்களைத்தான் துணைத்தலைவராகத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது கிராமக் கட்டுப்பாடு. பிறகு தாமே தலைவருக்குரிய அதிகாரங்களைப் பறித்துக் கொண்டு செயல்படுகிறார்கள். ஒரு தலைவர் பதவியை ஏலத்தில் எடுத்தால் (இப்போதைய சந்தை நிலவரப்படி அது 5 இலட்சம் ரூபாய்) ஒரு துணைத் தலைவர் பதவி இலவசம். இப்படி ஏலம் போகிறது உள்ளூராட்சி ஜனநாயகம்.

உள்ளூராட்சிப் பதவிகளை ஏலத்தில் விடுவது உள்ளூர் அளவுக்கு சாதிய அமைப்புகளால் நடத்தப்படுவது மட்டுமல்ல் மிகப் பெருமளவுக்கு பெரும்பாலான அரசியல் கட்சிகளால்  விலைக்கு விற்கப்படுவதும் நடக்கிறது. இது முக்கியமாக ஆளும் ஜெயலலிதா கும்பலாலும் எதிர்க்கட்சியான விஜயகாந்த் கட்சியாலும் பெரும்பாலும் நடத்தப்படுகிறது. முதல் சுற்று வசூலாக, தேர்தல்களில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களுக்கான விண்ணப்பங்களே ஏராளமாக விற்கப்பட்டு, பல கோடி ரூபாய் வசூலிக்கப்படுகிறது. அடுத்து, சீட்டு வாங்கிக் கொடுப்பதாக கட்சி நிர்வாகிகள் ஒரு வசூல் வேட்டை நடத்துகிறார்கள். அப்புறம், சீட்டுக் கொடுப்பதற்கு முன்பு, தொகுதியில் இல்லாவிட்டால் கூட கூடுதலான தொகை கொடுப்பவர்களே வேட்பாளர்களாக நிறுத்தப்படுகிறார்கள். இப்படி, வசூல் நடத்தி ஏமாற்றிவிட்டதாக அந்தந்த நிர்வாகிகளுக்கும் தலைமைக்கும் எதிராக சம்பந்தப்பட்ட கட்சிக்காரர்களே புகார் கொடுப்பதும், முற்றுகைப் போராட்டங்கள், உண்ணாவிரதங்கள் இருப்பதும், ஒருபடி மேலே போய் உட்கட்சி விவகாரத்துக்காக சாலை மறியலில் ஈடுபடுவதும் கூட நடக்கிறது.

தேர்தல்களில் போட்டியிடுவதற்கான தகுதிகளாகத் தலைமைக்கு விசுவாசத்தைக்கூடப் பார்ப்பதில்லை. சாதிபலம்,  பணபலம் மட்டுமல்ல் அடியாள்குண்டர் பலம், இதற்கு ஆதாரமாக கிரிமினல் குற்ற நடவடிக்கைகள்  வழக்குகளும் பார்க்கப்படுகின்றன. ஆளும் கட்சிகள், முக்கிய எதிர்க்கட்சிகளில் மட்டுமல்ல் விடுதலைச் சிறுத்தைகள் முதலான சிறு கட்சிகளிலும்கூட இதுதான் நிலைமை; பலகோடி ரூபாய்க்கு நிலமோசடி செய்த வேலாயுதம் என்பவர் விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதிக்கு அக்கட்சியால் நிறுத்தப்பட்டதும், செல்வப்பெருந்தகை என்பவர்  தான் கட்சிமாறிப் போகும் எல்லா தலித் அமைப்புகளிலும் தலைவராக்கப்படுவதுமே இதற்குச் சான்றாகும்.

தேர்தல் ஜனநாயகம் இந்த அளவுக்கு நாறிப் போயிருக்கையில், சிறிய கட்சிகளுடன் ஜனநாயக முறையில் கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக வேட்பாளர்களை ஜெயலலிதா அறிவித்ததையும், தனித்துப் போட்டியிடப் போவதாக  கருணாநிதி அறிவித்ததையும் தொடர்ந்து, கூட்டணி தர்மத்தை மீறிவிட்டதாக விஜயகாந்த்தும், போலி கம்யூனிஸ்டுகளும் திருமாவளவனும் கிருஷ்ணசாமியும் ஒப்பாரி வைக்கிறார்கள். காங்கிரசு மீதான கோபத்தால் கூட்டணியைக் கலைத்து விட்டார் என்று கருணாநிதியைக் குறைகூறும் திருமாவளவன், தேசிய இனப் பிரச்சினை அடிப்படையில் கூட்டணி அமைப்போமென்று கடைவிரிக்கிறார்; ஆனால், அதைக் கைக்கொள்வார் எவரும் இல்லை. சாதியைத் தாண்டி அரசியல் நடத்தத் துணியாத இராமதாசு, அதிலும் சாதியரீதியில் முக்கியமான உள்ளூராட்சித் தேர்தல்களில் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்து, திருமாவளவனின் அழைப்பை நிராகரித்து விட்டார்.

ஜெயலலிதா கட்சியுடன் கூட்டணி, பங்கீடு என்று கனவு கண்டிருந்த விஜயகாந்த் மற்றும் போலி கம்யூனிஸ்டு கட்சிகள் உள்ளிட்ட உதிரிக் கட்சிகளை ஜெயலலிதா தனக்கே உரிய பாணியில் அவமானப்படுத்தி விரட்டியடித்தார். விஜயகாந்தையும் அவரது அரசியல் சகுனி பண்ருட்டி ராமச்சந்திரனையும் போயசு தோட்டத்துக்குள்ளேயே நுழைய விடவில்லை. ஒருபுறம் வேட்பாளர் பட்டியலை அறிவித்துக் கொண்டிருந்த ஜெயலலிதா, மறுபுறம் தனது எடுபிடிகளிடம் தொகுதி கேட்டு மன்றாடி மனுக் கொடுப்பதற்கு மட்டுமே போலி கம்யூனிஸ்டு கட்சிகளை அனுமதித்தார். சட்டப் பேரவை தேர்தல்களுக்கான சந்திப்பின்போது நட்சத்திரவிருந்து போட்ட ஜெயலலிதா கட்சி, இந்த முறை போலி கம்யூனிஸ்டுகள் வெட்கத்தை விட்டுக் கேட்டும் குடிக்கத் தண்ணீர்கூடக் கொடுக்கவில்லை என்று புலம்புகிறார்கள். சோரம் போய்விட்டு, அதற்குரிய ஊதியத்தையும் பெற்றுக் கொண்டு விட்டு, பின்னர் தாம் பாலியல் வன்முறைக்குப் பலியாக்கப்பட்டதாகக் கூப்பாடு வேறு போடுகிறார்கள் இந்த அரசியல் விபச்சாரிகள். போயசு மாளிகையில் அரசியல் போதையில் கிடக்கும் "அம்மா' இவை பற்றி எதுவும் கூறாதபோது, அவரது துதிபாடிகளான பத்திரிக்கைகள், தமது ஊகங்கள், வதந்திகள், கிசுகிசுக்களை எழுதி வியாபாரம் பார்க்கின்றன.

ஜெயலலிதாவோ வழக்கம்போல ஏறிய ஏணியை எட்டி உதைக்கிறார். எட்டி உதைத்தாலும் அந்தக் கால்களைப் பிடித்துக் கெஞ்சுவதை இந்த முறை தவறாமல் செய்தவர்கள், போலி கம்யூனிஸ்டுகள். கூட்டணி இல்லாவிட்டாலும் ஜெயலலிதாவுக்குச் சேவை செய்வதற்கு சௌந்தரராஜன், ரங்கராஜன் மற்றும் தா.பாண்டியன் மகேந்திரன் ஆகிய இரண்டு போலி கம்யூனிஸ்டு கட்சிகளின் "ரத்தத்தின் ரத்தங்கள்' தயாராய் உள்ளனர் என்பதை இந்த முறையும் காட்டிவிட்டனர். கட்சி அணிகளே இல்லாமல், சினிமா கவர்ச்சி, அரசியலற்ற கூட்டத்தின் ஆதரவோடு கட்சிப் பதவிகள் முதல் வேட்பாளர்கள் சீட்டு  உள்ளிட்டு எல்லாவற்றையும் விற்பனை செய்து ஆதாயம் அடையும் விஜயகாந்த் மற்றும் பிழைப்புவாத தொழிற்சங்கவாதத்தில் மூழ்கிப் போன அணிகளை வைத்து அரசியல் நடத்தும் போலி கம்யூனிஸ்டுகளின் பார்வையில் உள்ளூராட்சித் தேர்தல்கள் வேறு; ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோரின் பார்வையில் வேறு.

நாடாளுமன்ற, சட்டப் பேரவை மற்றும் அமைச்சர் பதவிகளை ஜெயலலிதா, கருணாநிதி வகையறாக்களுக்குப் பாடுபட்டுப் பெற்றுத்தருகிறார்கள், அணிகள். அவர்கள் அரசு பதவிகளையும் ஆதாயங்களையும் கீழ்மட்ட நிலைகளில் பெற்றுத் தருவதற்கான வாய்ப்புகளை வழங்குபவை உள்ளூராட்சித் தேர்தல்கள்தாம். இதன்மூலம் பெறும் பல ஆயிரக்கணக்கான பதவிகளை எலும்புத் துண்டுகளாகப் போட்டுத்தான் தமது அணிகளின் விசுவாசத்தை இவர்கள் தக்கவைத்துக் கொள்ள முடிகிறது. ஜெயலலிதா, கருணாநிதியின் அரசியல் சவடால்களுக்கும் பேரணிகளுக்கும் கூட்டம் சேர்ப்பது முதல் சாவடிகளுக்கு வாக்காளர்களைக் கொண்டு வந்து சேர்ப்பது வரை அடிமட்டப் பணிகளை செய்து தருபவர்கள் "உடன்பிறப்புகளும்', "ரத்தத்தின் ரத்தங்களும்'தாம். அதற்கு நன்றிக் கடனாக வீசப்படுபவை தாம் உள்ளூராட்சிப் பதவிகள். ஆனால் அணிகளோ, தாம் சட்டப்பேரவை, நாடாளுமன்ற மற்றும் அமைச்சர் பதவிக்குப்  போவதற்கான படிக்கட்டாகவே உள்ளூராட்சிப் பதவிகளைக் காண்கிறார்கள். அதற்காக அம்மாவின் காலில் விழுந்து கும்பிடுவதற்கும், சொறிந்து விடுவதற்கும் காத்துக் கிடக்கிறார்கள். இவ்வாறுதான் ஜனநாயகம் பரவலாக்கப்படுகிறது! ஆழமாக்கப்படுகிறது!

. ஆர்.கே.