Language Selection

புதிய ஜனநாயகம் 2011

பரமக்குடியில் தாழ்த்தப்பட்டோர் மீது கொலைவெறியாட்டம் போட்ட போலீசை எதிர்த்தும், பாசிச ஜெயா அரசின் அதிகாரபூர்வ ஆதிக்க சாதிவெறியாட்டத்தை எதிர்த்தும், இப்போலீசு ராஜ்ஜியத்தை முளையிலேயே கிள்ளி எறிய தமிழக மக்களைப் போராட அறைகூவியும் தமிழகமெங்கும் ம.க.இ.க, வி.வி.மு, பு.மா.இ.மு, பு.ஜ.தொ.மு; பெ.வி.மு. ஆகிய புரட்சிகர அமைப்புகள் தாங்கள் செயல்படும் பகுதிகளில் சுவரொட்டிப் பிரச்சாரத்தை மேற்கொண்டன. மதுரை, தஞ்சை, கடலூர், திருவாரூர் ஆகிய இடங்களில் இப்புரட்சிகர அமைப்புகள் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளன. ம.உ.பா.மையத்தின்  உண்மையறியும் குழுபரமக்குடி, மதுரை பகுதிகளில் விரிவாக விசாரணையை மேற்கொண்டு, இது தாழ்த்தப்பட்டோர் மீதான வன்கொடுமை வெறியாட்டம் என்பதை ஆதாரங்களுடன் விசாரணை அறிக்கையாக வெளியிட்டுள்ளது. விருத்தாசலத்தில் இவ்வமைப்பினர் எழுத்தாளர்கள், வழக்குரைஞர்கள் மற்றும் பல்வேறு ஜனநாயக சக்திகளை அணிதிரட்டி ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளனர்.

 

 

தமிழகத்தில் பல்வேறு மனித உரிமை அமைப்புகள் உண்மையறியும் குழுக்கள் மூலம் போலீசு வெறியாட்டைத்தையும் தாழ்த்தப்பட்டோர் மீதான வன்கொடுமைத் தாக்குதலையும் அம்பலப்படுத்தியுள்ளன. பல ஜனநாயக அமைப்புகளும் இயக்கங்களும் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளன. ஜெயலலிதா அரசால் நியமிக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற நீதிபதி சம்பத் கமிசனைப் புறக்கணித்து வருவதோடு, இந்த விசாரணைக் கமிசனுக்குத் தடை வாங்கும் முயற்சிகளையும் பல்வேறு தலித் அமைப்பினரும் மனித உரிமை அமைப்பினரும் சட்டரீதியாக மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஜெயா அரசால் நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி சம்பத் தலைமையிலான ஒரு நபர் விசாரணைக் கமிசன் தனது விசாரணையைத் துவக்குவதற்காக கடந்த செப். 27 அன்று இராமநாதபுரம் வந்தபோது,மஞ்சூர் கிராமத்தில் "கண்துடைப்புக் கமிசனே, வெளியேறு!' என்ற முழக்கத்துடன் கருப்புக் கொடி ஏந்தி  ஊர் எல்லையிலேயே மக்கள் ஆர்ப்பாட்டம் செய்ததாலும், எஞ்சிய கிராமங்களிலும் இதே நிலைமை நீடிப்பதாலும் நீதிபதியின் குழு திரும்பிவிட்டது. இதேபோல, துப்பாக்கிச் சூட்டுக்கு இரு நாட்கள் முன்னதாகக் கொலை செய்யப்பட்ட தலித் மாணவன் பழனிக்குமாரின் பச்சேரி கிராமத்துக்குச் செல்ல முயன்றபோது, அங்கும் ஊர் முழுக்க கருப்புக் கொடி கட்டி, கையிலே கருப்புக் கொடியுடன் மக்கள் போராடி இக்குழுவை விரட்டியுள்ளனர். மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தலித்துகளும் வாயிலே கருப்புத்துணி கட்டிக் கொண்டு, சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்ற முழக்கத் தட்டியுடன் தமது எதிர்ப்பைத் தெரிவித்ததால், இந்த விசாரணைக்குழு மருத்துவ மனைக்குச் செல்லாமலேயே திரும்பிவிட்டது.

அடக்குமுறையின்  அதிகாரபலத்தின் மூலமும் போலீசு வெறியாட்டத்தையும் சாதிவெறித் திமிரையும் மூடிமறைத்து விடலாம் என்று மனப்பால் குடித்த ஜெயா கும்பலின் முகத்தில் குமுறிக் கொண்டிருக்கும் தாழ்த்தப்பட்ட மக்கள் கரிபூசியுள்ளார்கள்.