இந்திய மீனவர்கள் இந்திய "எல்லை தாண்டுவது தான்", அவர்கள் மேலான வன்முறைக்கு காரணம் என்று இந்திய மத்திய அரசு மதுரை நீதிமன்றத்தில் கூறியுள்ளது. இப்படி இலங்கைக் கடற்படையின் தொடர்ச்சியான குற்றங்களுக்கு, நீதிமன்றத்தில் விளக்கம் கொடுத்து இருக்கின்றது இந்திய மத்திய அரசு. இந்த வகையில் இந்தக் குற்றத்தை செய்வதற்கான தனது பக்கத் தர்க்கத்தை முன்வைத்ததன் மூலம், இதற்கான தனது ஓத்துழைப்பை நியாயப்படுத்தி இருக்கின்றது. இலங்கைக்கடற்படை எல்லை கடந்து இனப்படுகொலைக் குற்றத்தில் ஈடுபடவில்லை என்றும், எல்லை தாண்டிய குற்றத்தில் ஈடுபடவில்லை என்றும், சுயவிளக்கம் ஒன்றை இந்திய அரசு வழங்கி இருக்கின்றது. மறுதளத்தில் எல்லை தாண்டியதால் தான் இந்த நிலையென்று எடுத்துக் கொண்டால்;, அவர்கள் கொல்வதும் தாக்குவதும் சரியென்ற தர்க்கத்தையும், நியாயப்படுத்தலையும் வழங்கி இருக்கின்றது. எல்லை தாண்டினால் இதுதான் தீர்வா? சர்வதேச சட்டங்கள், மனிதவுரிமை கோட்பாடுகள் அனைத்தையும், மத்திய அரசு தன் காலில் போட்டு மிதித்திருக்கின்றது. அனைத்துக்கும் "எல்லை கடத்தல்" மற்றும் "தடைசெய்யபட்ட வலை"யைத்தான் காரணமாக காட்டியிருக்கின்றது.

இதன் பின்னணியில் இந்திய இலங்கை சர்வதேச கடற்பரப்பில் "இந்திய மீனவர்கள் மீன்பிடிப்பதை தடை செய்ய வேண்டும்" என்று கோரி இருக்கின்றது. இப்படி தன் சொந்த நாட்டு மீனவர்களை தனது பிராந்திய மேலாதிக்க நலன் சார்ந்து நின்று குற்றம் சாட்டி இருக்கின்றது.

இதன் பின்னணியில்

1. "எல்லைகடத்தல்", மற்றும் "தடை செய்யப்பட்ட வலையை" பாவிப்பதற்கு அனுமதித்தது யார்? தொடர்ந்து அனுமதிப்பது யார்? மத்திய - மாநில அரசுகள் தானே. எப்படிக் குற்றம்சாட்ட முடியும்?

2. எல்லை கடந்துதான் மீனவர்கள் மீன்பிடித்து வாழவேண்டிய நிலைக்கு, கடல் வளத்தை அழிக்கும் மீன்பிடி முறைமையை புகுத்தியது யார்? நிச்சயமாக இந்திய மத்திய - மாநில அரசுகள் தான்.

3. மீனவர் நலன் சார்ந்து கடல்வளத்தை பாதுகாத்து மீட்டு எடுக்கும் கொள்கையை தொடர்ந்து மறுப்பது யார்? நிச்சயமாக இந்திய மத்திய மாநில அரசுகள் தான்.

இப்படி இருக்க "எல்லை தாண்டுவதாலும்" "தடைசெய்யப்பட்ட வலையை" பயன்படுத்துவதாலும் தான் இந்திய மீனவர்களைக் கொன்றனர், தாக்கினர் என்பது அப்பட்டமான மற்றொரு பொய்.

இதே கடலில் பல ஆயிரம் இலங்கை தமிழ்மக்களை இதே கடற்படை கொன்று இருக்கிறது. அரசின் பயணிகள் கப்பலான குமிதினிப் படகில் சென்ற 36 பயணிகள் முதல் அகதிகளாக சென்றவர்கள், மீனவர்கள், இயக்கப் போராளிகள் என்று பல ஆயிரக்கணக்கானவர்களைக் கொன்று குவித்து இருக்கின்றது. இவை எல்லாம் இனப்படுகொலையாகவே இலங்கை அரசு அரங்கேற்றியது. இதில் இருந்து வேறுபட்டதல்ல இந்திய மீனவர்கள் படுகொலை. ஒரே அடிப்படையையும், ஒரே நோக்கையும் கொண்டது இது. இங்கு மத்திய அரசு இந்த உண்மையைத் திரிக்க, "எல்லை தாண்டுவதாலும்" "தடைசெய்யப்பட்ட வலையை" பற்றியும் பேசுகின்றது.

இங்கு இலங்கை மீனவர்களின் கோரிக்கையை தனக்கு சாதகமாகத் திரித்து, தனக்கு ஏற்ற சுயவிளக்கத்தை வழங்கி இருக்கின்றது. இலங்கை மீனவர்கள் தங்கள் சொந்தக் கடலில் தடைசெய்யப்பட்ட வலை மூலமான றோலர் வகை மீன்பிடியை மட்டும்தான் "எல்லை தாண்டும்" பிரச்சனையாக முன்வைத்து எதிர்க்கின்றனர். மற்றும்படி எல்லை தாண்டி இந்திய மீனவர்கள் தங்கள் கடலில் மீன் பிடிப்பது தொடர்பான, இணக்கமான ஒரு நடைமுறைக்கு தயாராகவே அவர்கள் உள்ளனர். இலங்கை மீனவப் பிரதிநிதிகள் இதை இந்தியாவில் வைத்துக் கூட, இந்திய மீனவர்கள் சங்கத்தின் முன் தெளிவுபடுத்தி வந்துள்ளனர்.

ஆக இந்த வகையான மீன்பிடி இணக்கத்தை இலங்கை அரசும் விரும்பவில்லை. இந்திய மத்திய அரசும் விரும்பவில்லை. தமிழக அரசும் கூட இதை விரும்பவில்லை. இந்த வகையில் தமிழினவாதிகளும் கூட விரும்பவில்லை. தடைசெய்யப்பட்ட வலை மற்றும் வள்ளத்தை அனுமதிக்காது, எல்லைதாண்டி மீன்பிடிக்கும் வகையில் இந்தப் பிரச்சனைக்கு இலகுவாக தீர்வு காணமுடியும். இதை முன்வைத்து தீர்வு காணத் தயாரற்ற போக்குத்தான் அரசுகள் நிலை என்றால், இதன் அடிப்படையில் போராட தயாரற்ற அரசியல்வாதிகளின்; குறுகிய போக்கும்தான் பொதுவில் வெளிப்படுகின்றது. இது இந்திய மீனவர்கள் வாழ்வையும், வாழ்வுரிமையையும் மறுக்கும் அடிப்படையில், இந்திய இலங்கைக் கடல் எல்லையில் மீன்பிடியை "தடைசெய்வதை" மத்திய அரசின் கோரிக்கையாக மாறுகின்றது. இந்த பின்னணியில் தான் "எல்லைதாண்டு" விவகாரமாக இதை திரித்துக் காட்டுவதன் மூலம், இந்த கடற்பரப்பை இந்திய - இலங்கை அரசு சூனியப் பிரதேசமாக்க முனைகின்றது. இதன் மூலம் இக் கடலை பெரு மூலதனத்தின் மீன்பிடி உரிமையாக்க மறைமுகமாக முனைகின்றது.

"எல்லை தாண்டுதல்" மற்றும் "தடைசெய்யபட்ட" வலையை காரணம் காட்டி கடல் மீதான மீனவர்கள் உரிமையை பறித்துவிடக் கோரும் மத்திய - தமிழக அரசின் சதிகளை முறியடிக்கும் வண்ணம் போராட்டத்தின் கோரிக்கைகள் அமைய வேண்டும்.

இந்த வகையில் தடைசெய்யப்பட்ட வலை மற்றும் றோலர்களை முற்றாக தடைசெய்யக் கோருவதன் மூலமும், இலங்கை மீனவர்கள் முன்வைக்கும் இணக்கமான சர்வதேச மீன்பிடிக்கும் உரிமையை அங்கீகரித்து, அதை அமுல்படுத்துமாறும் கோர வேண்டும். தடைசெய்யப்பட்ட வலையை தொடர்ந்து அனுமதிப்பதை எதிர்த்துப் போராட வேண்டும்;. மற்றும் இந்திய மீன் வளத்தை அழிக்கும் மந்திய மாநில அரசுகளின் மீன்பிடிக் கொள்கைக்கு எதிராகப் போராட வேண்டும். இதற்குப் பொறுப்பான அரசு, இதன் பின்னணியிலான விளைவுகளை காரணமாகக் காட்டி இலங்கை அரசின் குற்றத்தை மூடிமறைப்பதை எதிர்த்துப் போராட வேண்டும். இந்த குற்றங்களுக்கு "எல்லை தாண்டுவதோ" "தடை செய்யப்பட்ட வலையோ" காரணமல்ல. இனவழிப்புக் கொள்கை தான் காரணம். இதன் மூலம் இரண்டு நாட்டு மீனவர்களும் ஒன்றிணைந்து வாழ்வதை தடை செய்ய விரும்புகின்றனர். இதன் பின்னணியில் இக்கடலை தங்கள் பெருமூலதனக் கொள்கைக்கு ஏற்ப, சிறு மீன்பிடியை தடை செய்து அதை பெருமூலதனத்;திடம் தாரைவார்க்க முனைகின்றனர்.

இனவாத எல்லைக்குள் நின்று கொண்டு, தடை செய்யப்பட்ட வலையைக் கொண்டு மீன்பிடிப்பவர்களை மீனவர்களாக ஏற்றுக்கொண்டு முன்வைக்கும் அரசியல் கோசங்களையும், அரசியலையும் தான், மத்திய அரசு தனக்கு சாதமாகக்கொண்டு இக்கடல் மீதான மீன்பிடியை தடை செய்யமாறு நீதிமன்றத்தில் கோரியிருக்கின்றது. தடைசெய்யப்படாத வலை கொண்டு மின்பிடிக்கும் மீனவர்கள் உரிமையை கோரியும், இதற்கு இலங்கை மீனவர்களின் இணக்கமான எல்லை தாண்டி மீன்பிடிக்கும் உரிமையை முன்வைத்தும் போராட வேண்டும்.

பி.இரயாகரன்

10.01.2012