கிராமப்புறங்களில் வசிக்கும் கூலி ஏழை விவசாயிகளுக்கு இலவச ஆடுமாடு வழங்கும் திட்டத்தைத் "தாயுள்ளம் கொண்ட அம்மா' அரசு அறிவித்துள்ளது. அண்ணா பிறந்த நாளான பெப். 15 அன்று முதற்கட்டமாக 1,600 கலப்பின ஜெர்சி கறவை மாடுகளையும் அதே எண்ணிக்கையிலான ஆடுகளையும் வழங்கப் போவதாகவும், இத்திட்டத்தின் 30 சதப் பயனாளிகள் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினராக இருப்பர் என்றும் ஜெயா அரசு அறிவித்துள்ளது. 1,157 கோடி ரூபாய் செலவில் எதிர்வரும் ஐந்தாண்டுகளுக்குள் இந்தத் திட்டம் முழுமையாகச் செயல்படுத்தப்படும் என்றும், நடப்பு நிதியாண்டில் இத்திட்டத்திற்காக 191 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் தமிழக அரசு அறிவித்திருக்கிறது. தமிழகத்தில் இரண்டாவது வெண்மைப் புரட்சியைக் கொண்டுவரும் திட்டம் என்றும், விவசாயத்துக்கும் விவசாயிகளுக்கும் முன்னுரிமை தரும் திட்டம் என்றும் இதனைப் பார்ப்பன ஊடகங்கள் உச்சி முகர்ந்து பாராட்டுகின்றன.
எதிர்வரும் ஐந்து ஆண்டுகளுக்குள், இலவச ஆடு வழங்கும் திட்டத்தின்படி 7 இலட்சம் குடும்பங்களுக்கு வீட்டுக்கு நாலு ஆடுகள் வீதம் மொத்தம் 28 இலட்சம் ஆடுகளும்; இலவச மாடு வழங்கும் திட்டத்தின்படி 60,000 குடும்பங்களுக்கு வீட்டிற்கு ஒரு கறவை மாடு என்ற வீதம் 60,000 கறவை மாடுகளும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆடு வழங்கும் திட்டத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படும் பயனாளி கிராமப்புறத்தில் வசிக்கும் நிலமற்ற கூலி விவசாயியாக இருக்க வேண்டும்; அவருக்கு ஆடோ, மாடோ சொந்தமாக இருக்கக் கூடாது; இலவச மாடு வழங்கும் திட்டத்தின் பயனாளியாகவும் இருக்கக் கூடாது; பயனாளியின் மனைவியோஃகணவனோ, மாமியார் மாமனாரோ, மகனோ மகளோ, மருமகளோ மருமகனோ மைய அல்லது மாநில அரசு ஊழியராகவோ, உள்ளூராட்சியிலோ, பொதுத்துறை நிறுவனங்களிலோ, கூட்டுறவு நிறுவனங்களிலோ பணியாற்றுபவராக இருக்கக் கூடாது.
மாடு வழங்கும் திட்டத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படும் பயனாளியோ அல்லது அவரது குடும்பத்தினரோ ஒரு ஏக்கருக்கு மிகாமல் நிலம் வைத்திருக்கும் ஏழை விவசாயியாக இருக்க வேண்டும். பயனாளிக்குப் பசு மாடோ, எருமை மாடோ சொந்தமாக இருக்கக் கூடாது; பயனாளியின் மனைவியோஃகணவனோ, மாமியார் மாமனாரோ, மகனோ மகளோ, மருமகளோ மருமகனோ மைய அல்லது மாநில அரசு ஊழியராகவோ, உள்ளூர ஆட்சியிலோ, பொதுத்துறை நிறுவனங்களிலோ, கூட்டுறவு நிறுவனங்களிலோ பணியாற்றுபவராக இருக்கக் கூடாது.
இந்த நிபந்தனைகளின் அடிப்படையில் பயனாளிகளைத் தேர்ந்தெடுப்பதற்கு கிராம கமிட்டிகள் அமைக்கப்படும். கிராம கமிட்டிகளால் தேர்ந்தெடுக்கப்படும் பயனாளிகளின் பட்டியலைக் கால்நடை மருத்துவர், துணை வட்டார வளர்ச்சி அதிகாரி, கிராம நிர்வாக அதிகாரி ஆகிய மூவரைக் கொண்ட கமிட்டி ஆய்வு செய்து இறுதி செய்யும். இறுதிப்பட்டிலுக்குக் கிராம கமிட்டியும், அதன் பின் கிராம சபையும் ஒப்புதல் அளிக்கும்.
இப்படி அடுக்கடுக்காக விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் இத்திட்டத்தில் மோசடிகள் நடைபெறுவதைத் தடுக்குமா அல்லது ஊழலுக்கு வழிவகுக்குமா என்பதும், இத்திட்டம் கலைஞரின் இலவச இரண்டு ஏக்கர் நிலத்திட்டம் போல கண்துடைப்பாக முடிந்துவிடுமா என்பதும் போகபோகத் தெரிந்துவிடும்.
…
கால்நடை வளர்ப்பு தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரங்களுள் ஒன்றாகும். கால்நடைச் செல்வங்கள், விவசாயிகளுக்கு நடமாடும் வங்கி; அவர்களது அவசரச் செலவுக்கு எப்பொழுதும் கைகொடுப்பது கால்நடைகள்தான். ஒட்டுமொத்த மாநில உற்பத்தியில் 6 சத பங்களிப்பை கொடுக்கும் கால்நடை வளர்ப்பிற்கு பட்ஜெட்டில் 1 முதல் 2 சதவீத தொகை மட்டுமே ஒதுக்கப்படுகிறது.
தனியார்மய தாராளமயக் கொள்கை தீவிரமாக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஆவினுக்கு இணையாக தனியார் மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் பால் உற்பத்தியில் பங்கேற்பு; இறைச்சி வியாபாரத்தில் பெருந்தொழில் நிறுவனங்கள் ஈடுபடுதல்; கால்நடை மருத்துவம் மற்றும் உற்பத்திப் பெருக்க சேவையில் தனியார்மயம்; ஆவின் பால்கூட்டுறவு நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட்ட சலுகைகள் மற்றும் மானியங்கள் வெட்டப்படுதல் முதலானவை நடைமுறைக்கு வந்தன. இதனால், ஒரு காலத்தில் பால் உற்பத்தியாளர்களுக்கு வாராவாரம் பணப் பட்டுவாடா செய்து வந்த ஆவின், இப்பொழுது மாதக் கணக்கில் இழுத்தடிக்கிறது. பாலுக்குக் கிடைக்கும் விலையும் விவசாயிகளுக்குக் கட்டுப்படியாவதில்லை.
அதேநேரத்தில் ஹட்சன், ஹெரிடேஜ், ஏபிடி, விஜய், ரிலையன்ஸ், திருமலா போன்ற தனியார் நிறுவனங்கள் கிராமங்களில் பால் சேகரிப்பு நிலையங்களை உருவாக்கி, சிறு விவசாயிகளிடம் பாலைக் கொள்முதல் செய்து வருவதோடு, பெரும் பண்ணைகளையும் உருவாக்கி வருகின்றன. உதாரணமாக, ஏபிடி நிறுவனத்தின் மேற்பார்வையில் பொள்ளாச்சியில் ஆயிரத்திற்கும் அதிகமான மாடுகளை கொண்ட பண்ணை அமைக்கப்பட்டு வருகிறது.
இன்னொரு பக்கம் பெரும் முதலீட்டை கொண்ட புதிய வகையான பெரும் பண்ணை விவசாயிகள் பால் உற்பத்தியில் களம் இறங்கியுள்ளனர். உயர்தர மாடுகள், பல ஏக்கரில் தீவனப்பயிர் விவசாயம், பால் கறவை இயந்திரம், தீவன புல் அறுவடை கருவிகள் போன்ற நவீன இயந்திரங்களுடன் நாளொன்றுக்கு குறைந்தபட்சம் 100 முதல் 400 லிட்டர்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட இப்பண்ணையாளர்களை முகவர்களாகக் கொண்டு கவின் கேர், ஹட்சன் போன்ற தனியார் நிறுவனங்கள் இப்பண்ணையாளர்களிடமிருந்து பாலைக் கொள்முதல் செய்ய ஆரம்பித்துள்ளன.
இத்தனியார் நிறுவனங்களும் பெரும் பண்ணையாளர்களுமே பால் உற்பத்தித் தொழிலில் ஏகபோகமாக ஆதிக்கம் செலுத்தி வருவதால், ஓரிரு மாடுகளை வைத்துள்ள சிறு விவசாயிகள் தீவன விலையேற்றத்தாலும், பால் கொள்முதல் விலை கட்டுபடியாகாததாலும் படிப்படியாக இத்தொழிலிலிருந்தே வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
இன்றைய சூழலில் இரண்டு மூன்று மாடுகள் வைத்துக் கொண்டு, வரப்புகளில் புல் சேகரித்தும் தீவனம் போட்டும் பராமரித்து பாலை விற்கும் பொழுது அதன் விலை 1617 ரூபாயை தாண்டவே தடுமாறுகிறது. மேலும் மாட்டுத் தீவன நிறுவனங்கள் தீவனத்தின் விலையைத் தொடர்ந்து உயர்த்திக் கொண்டே போகின்றன. உயர்தர மாடுகளான ஜெர்சி மாடுகளின் தீவனச் செலவு குறைந்தது நாளொன்றுக்கு 50 முதல் 60 ரூபாய் ஆகிறது. ஆடுவளர்ப்பைப் போன்றதல்ல மாடு வளர்ப்பு. மாடுகளுக்கு முறையாகத் தீவனம் கொடுக்க வேண்டும். ஒழுங்காகப் பராமரிக்காவிட்டால் ஒரு ஈத்துதான் ஒழுங்காகப் பால்கறக்கும். அப்புறம் 10 லிட்டர் பால் கொடுத்த மாடு 4 லிட்டர்தான் தரும்.
இதேநிலைமைதான் ஆடு வளர்ப்புத் தொழிலிலும் நிலவுகிறது. சங்கிலித்தொடர் கறிக்கடைகளைத் திறந்து வரும் ரிலையன்ஸ் டிலைட், கென்டுகி, சுகுணா டெய்லி பிரஷ் முதலான நிறுவனங்கள், ஒப்பந்த முறையிலான ஆடு வளர்ப்பில் விவசாயிகளை ஈடுபடுத்தி வருவதோடு, பெரும் பண்ணைகளையும் உருவாக்கி வருகின்றன. உதாரணமாக, அஷ்யூர் அக்ரோ டெக் என்ற நிறுவனம் 1500 ஆடுகளை கொண்ட பண்ணையை சேலம் மாவட்டத்தில் உருவாக்கியுள்ளது. இந்நிறுவனம் ரெட் பிரெஷ் என்ற சங்கிலித் தொடர் கறிக்கடையும் நடத்தி வருகிறது. மெட்ரோ என்ற பன்னாட்டு சில்லறை வர்த்தக நிறுவனம், கொள்முதல் ஒப்பந்தகாரர்களை அமர்த்தி அவர்கள் மூலம் விவசாயிகளிடம் ஒப்பந்தம் போட்டு இறைச்சிக்கான ஆடுகளைக் கொள்முதல் செய்கிறது. தனியார் நிறுவனங்கள் கறி வியாபாரத்தில் பங்கேற்க மத்திய அரசு ஏராளமான சலுகைகளை வழங்கியுள்ளதன் விளைவாக, இத்தனியார் நிறுவனங்கள் 2007ஆம் ஆண்டில் மட்டும் கோழி மற்றும் இறைச்சி உற்பத்தியில் ஏறத்தாழ 1000 கோடி ரூபாய் முதலீடு செய்து கொழுத்த ஆதாயமடைந்துள்ளன.
கடந்த 20 ஆண்டுகளாக தரிசு மற்றும் மேய்ச்சல் நிலங்களைப் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கும் அரசு தாரை வார்த்து வருவதால், மேய்ச்சல் நிலப்பரப்பு சுருங்கி ஆடுமாடு மேய்ப்பதற்கான வாய்ப்புகள் அருகி விட்டன. மேலும், ஒரு விவசாயி தனது நிலத்தில் பயிர் உற்பத்தியில் வரும் கழிவுகளை கொண்டு ஆடுமாடு வளர்ப்பது; ஆடுமாடுகளின் கழிவுகளைக் கொண்டு நிலத்தை உரமூட்டுவது; மாடுகளைப் பயன்படுத்தி நிலத்தைச் செம்மைப்படுத்துவது என்ற பயிர் உற்பத்திக்கும் கால்நடை வளர்ப்புக்கும் இடையிலான உறவுகள் தனியார்மய தாராளமயத்தால் அறுக்கப்பட்டு வருகிறது. கோடிக்கணக்கில் முதலீடு, அதீத உரம் பூச்சிமருந்துகள், நவீன எந்திரங்கள் என ஐரோப்பிய பாணியிலான பெரும் பண்ணைகளே அரசின் ஆதரவோடு பெருகி வருகின்றன. இவற்றின் விளைவாக, ஆடு வளர்ப்புத் தொழிலில் சிறு உடமையாளர்கள் நீடிப்பதற்கான வாய்ப்புகள் குறைந்து வருகின்றன. இதனால் விவசாயிகள் தங்களது கால்நடைகளை வேண்டாத சுமையாகக் கருதி விற்றுத் தொலைத்துவிட்டு, நகரங்களில் கூலித் தொழிலாளிகளாகக் குவியும் போக்கு அதிகரித்து வருகிறது.
ஜெயா அரசு கொடுக்கும் இலவச ஆடு, மாடுகளைப் பெறும் கூலி, ஏழை விவசாயிகள் அனைவரும் அவற்றை வளர்த்து ஆளாக்கி, அம்பானி ரேஞ்சுக்கு வாழ்க்கையில் உயரப் போகிறார்கள் என்பதைப் போல இத்திட்டங்களின் பின்னே ஒளிவட்டம் போடப்படுகிறது. ஆடுகளைப் பெறும் ஏழையிலும் ஏழையான கூலி விவசாயிகள், அந்த நான்கு ஆடுகளையும் முதல் ஒன்றரை ஆண்டுகளுக்குத் தங்கள் கைக்காசைப் போட்டுத்தான் பராமரிக்க வேண்டும். அந்த ஆடுகள் நோய் நொடியில் விழாதபட்சத்தில் ஒன்றரை ஆண்டுகள் கழித்து முதல் குட்டிபோடும். ஆரோக்கியமாக இருக்கும் ஆடு ஆறு ஆண்டு வரை இனப்பெருக்க உற்பத்தியில் இருக்கும்.
ஆறு ஆண்டுகளில் போடப்படும் குட்டிகளும் முதிர்ந்த ஆடுகளும் சந்தையில் நல்ல விலைக்குப் போனால், இலவச ஆடு வளர்க்கும் கூலி விவசாயிக்கு சராசரியாக மாத வருமானம் ரூ.1,700 கிடைக்கக்கூடும். எனினும், ஆடு வளர்ப்புக்கான செலவையும் மேய்ப்பதற்கான கூலியையும் இதிலிருந்து கழித்துவிட்டால், வெறும்கைதான் மிஞ்சும்; சந்தையில் குட்டி ஆட்டின் விலைசரிந்து விழுந்துவிட்டால், அல்லது ஆடுகள் நோய்நொடியெனப் படுத்து பொசுக்கெனப் போய்விட்டால், ஆட்டை வளர்க்கச் செலவிடப்பட்ட கைக்காசும் விவசாயியின் உழைப்பும் பைசாவுக்குப் புண்ணியமில்லாமல் வீணாகிப் போகும். இப்படிக் கைக்காசையும் போட்டு, உழைப்பையும் செலுத்த வேண்டிய இத்திட்டத்தில் மாட்டிக் கொள்வதைவிட, கூலி விவசாயிகளுக்கு நூறுநாள் வேலை வாய்ப்புத் திட்டம் இலாபகரமானதல்லவா?
விதர்பா பகுதியில் விவசாய நெருக்கடியைத் தீர்க்க மகாராஷ்டிர மாநில அரசு உயர்தர மாடுகளை மானிய விலையில் விவசாயிகளுக்குக் கொடுத்தது. இம்மாடுகளைப் பெற்ற விவசாயிகள் தீனி போட்டே மேலும் கடனாளியானார்கள் என்று கூறுகிறார், பத்திரிக்கையாளர் சாய்நாத். தற்போது ஜெயா அரசால் வழங்கப்படும் இலவச ஜெர்சி கறவை மாடுகளுக்குக் கூடுதல் தீவனச் செலவு ஏற்படும் என்பதால், வறுமையிலுள்ள ஏழை விவசாயிகள் அம்மாட்டை வைத்துப் பராமரிக்க முடியாமல் கடனாளியாகக்கூடும். இந்நிலையில், தனியார் ஏகபோக நிறுவனங்களின் ஆதிக்கத்தை ஒழித்து, தீவனச் செலவுக்கு மானியம் கொடுத்து, கட்டுபடியாகும் விலையில் பாலைக் கொள்முதல் செய்ய முன்வராமல் விவசாயிகளுக்கு மாடு கொடுப்பதும் யானையைக் கொடுப்பதும் ஒன்றுதான்.
. சுடர்