சென்னை அடையாறு பகுதியில் இருக்கும் எல்.பி. ரோட்டையும் அதில் அண்ணாவின் தமிழக ஆதரவாளர்கள் குழுமியிருக்கும் கட்டிடத்தையும் கண்டுபிடிப்பதில் சிரமம் ஏதும் இருக்கவில்லை. முகப்பிலேயே, "குழந்தைக்குத் தேவை தாய்ப்பால். மக்களுக்குத் தேவை ஜன் லோக்பால்' என்கிற அரசியல் முழக்கத்தை ப்ளக்ஸ் பேனரில் பிரம்மாண்டமாகக் கட்டி வைத்துப் பீதியூட்டியிருந்தனர். சாலையோர ப்ளக்ஸ்பேனர் களில் அண்ணா ஹசாரே, "இந்தியனே எழுந்து வா' என்று மிரட்டிக் கொண்டிருந்தார்.

 

 

ஐ.டி. துறையில் பணிபுரியும் சில அண்ணா ஆர்வலர்கள் வாயிலில் நின்று கொண்டு தேசியக் கொடியை தேசபக்தியுடன் ஆட்டியபடியே, "கரப்ஷன்.. டவுன் டவுன்' என்று முழக்கமிட்டுக் கொண்டிருந்தனர்.

இந்தியாபாகிஸ்தான் மேட்சைப் பார்க்க வரும் ரசிகர்களைப் போல முகத்தில் மட்டுமின்றி, உடை மறைக்காத பகுதிகளையெல்லாம் தேசியக் கொடி வரைந்து மறைத்திருந்த சிலர், "சார் சார் கரப்ஷனுக்கு எகென்ஸ்ட்டா ஒரே ஒரு சைன்பண்ணிட்டுப் போங்க, சார்' என்று அழைத்துக் கொண்டிருந்தனர். நாங்கள் நுழைந்த நேரமாகப் பார்த்து ட்ரை சைக்கிளில் காய்கறிகளை வைத்து மிதித்துக் கொண்டு சென்ற ஒரு வியாபாரியையும் கையெழுத்திட அழைத்தனர். அவருக்கு ஒன்றும் புரியவில்லை. "இன்னாது இது?' என்று விவசாதித்தார். "சார், ஊழலை ஒழிக்க ஒரு கையெழுத்து..' என்று ஒரு பெண் ஆர்வலர் இழுக்க, "அடப் போம்மே,   வோட்டுப் போட்டே ஒழியல் கையெழுத்துப் போட்டா ஒழியப்போவுது' என்று கூறிவிட்டு சைக்கிளை ஏறி மிதிக்க ஆரம்பித்தார். "இல் லிட்டரேட் மோரோன்' (படிப்பறிவற்ற முட்டாள்) என்று அந்தப் பெண் ஆர்வலர் பக்கத்தில் நின்ற வட இந்திய ஆர்வலரிடம் முனகிக் கொண்டே முகத்தைச் சுளித்துக்கொண்டார்.

கட்டிடத்தின் உள்ளே நுழைந்தோம். "ஊழலுக்கு எதிரான இந்தியா' எனும் தன்னார்வ இயக்கத்தின் தொண்டர்கள் பேஷன் பெரேடுக்கு வந்ததைப் போல் உடையணிந்து கொண்டு, லேப்டாப், ஐ.போன் சகிதம் பரபரப்பாகக் குறுக்கும் நெடுக்கும் ஓடிக் கொண்டிருந்தனர். அவர்களின் கழுத்திலும் இடையிலும் ஐ.டி. துறை ஊழியர்கள் அணிவது போல் புகைப்படத்துடன் கூடிய ஐ.டி.கார்டுகள் (அடையாள அட்டைகள்) தொங்கின.

உள்ளே ஒரு பெரிய ஹால். அதில் ஒரு பக்கம் மேடை போல அமைத்திருந்தனர். அதில் சிலர் அமர்ந்திருந்தனர். அதில் இரண்டு காவியுடைச் சாமியார்களைக் காண முடிந்தது. மூன்று இருபத்தோரு இன்ச் எல்.சி.டி. டிவிக்கள் பொருத்தியிருந்தனர். அதில் "டைம்ஸ் நௌ' செய்திகள் ஓடிக் கொண்டிருந்தன. பக்கத்திலேயே கடந்த ஆறுநாட்களாக சோறு தண்ணீர் உட்கொள்ளாமல் உண்ணாவிரதம் இருப்பவர்களுக்கென்று தனியே கழிப்பறை அமைத்திருந்தனர்.

சில அய்யராத்து மாமிகள் தங்கள் குழந்தைகளுக்கு நேரு ட்ரெஸ் போட்டுக் கையில் கொடியோடு அழைத்து வந்திருந்தனர். அந்தக் குழந்தைகளை வரிசாயாக மேடையில் நிற்க வைத்து போட்டோ பிடித்துக் கொண்டனர். இது இரண்டாம் சுதந்திரப் போராட்டமல்லவா? நாளைப்பின்னே நானும் கச்சேரிக்குப் போனேன் என்று பொளந்து கட்ட இது போன்ற ஆவணங்கள் அவசியமாயிற்றே? இதில் யார் குழந்தையை முன்னே நிறுத்தி முழுமையாக கவர் செய்து கொள்வது என்பதில் "சுதந்திரப் போராளி'களின் தாய்மார்களுக்குள் லேசாக முட்டிக் கொண்டது. நாகரீக மனிதர்களல்லவா, தங்கள் உள்ளக்கொதிப்பை "ஷிட்' (எதற்கும் இலாயக்கில்லாத, முட்டாள் எனப் பல பொருள் கொண்ட பயன்பாட்டுக்குத் தகாத ஆங்கிலச் சொல் இது) என்று நாசூக்கான மொழியில் வெளியேற்றிக் கொண்டார்கள்.

மேடைரயை நெருங்கினோம். ஐந்து நாட்களாக உண்ணாவிரதம் இருந்த ஒருவர் காலாற நடக்க எண்ணி எங்களைக் கடந்து சென்றார். ஐந்து நாள் பட்டினிக்குப் பின்னரும் படுஉற்சாகமாக காணப்பட்ட அவரை அணுகிப் பேச்சுக் கொடுத்தோம். "சார், மொதல்லே ஜன்லோக் பால் அப்படிங்கறது ஒரு சமஸ்கிருத வார்த்தை. ஏற்கனவே இருக்கற லோக்பால் வேஸ்டு சார். இப்போ.. நாம ஒத்தர் மேல கம்பளெயின்ட் கொடுக்கறோம்னு வைங்க. ஒருவேள அது ருஜுவாகல்லேன்னா நம்பளயே பிடிச்சு உள்ள போட்ருவான் சார். ஆனா பாருங்க, இந்த ஜன் லோக்பால்ல அப்படியெல்லாம் சிட்டிசன்சுக்கு ப்ராப்ளம் இல்லை' என்று துவங்கியவரை நாம் இடைவெட்டினோம்.

"இப்ப பாத்தீங்கன்னா, ஸ்பெக்ட்ரம் ஊழலையேஎடுத்துக்கங்களேன். டாடா, அம்பானியெல்லாம்தான் இதனாலே பலன் அடைஞ்சிருக்காங்க. அவங்க கிட்ட இருந்து இந்த ஊழலாலே ஏற்பட்ட நட்டத்தை எப்படி வசூலிக்கறதுன்னு ஜன் லோக்பால் ஒன்னும் சொல்லலியே. அதுமட்டுமில்லாம, அண்ணா ஹசாரேவை ப்ரமோட் பண்ற டைம்ஸ் நௌ சானலுக்கு ரிலையன்ஸ்தான் விளம்பரமும் கொடுக்கறாங்க. இதைப் பத்தி என்ன சொல்றீங்க' என்றோம்.

"அதாவது சார்.. ஜன் லோக்பால் வந்தா நாட்டுக்கு நல்லது சார். அப்படி இல்லாட்டா அண்ணா ஹசாரே இவ்வளவு தூரம் போராட மாட்டாரே? வயசானவரு பாஸ் அவரு, புரிஞ்சுக்கங்க. ரிலையன்ஸைப் பொருத்தளவில இது அவங்களுக்கு பிஸினஸ் பாஸ். பொலிடிஷியன்ஸ் தான் இந்த மாதிரி டீலிங்ஸை பத்திரமா பாத்துக்கணும்.. ஏன்னா, அதுக்குத்தானே அவங்களை எலெக்ட் பண்ணிருக்கோம்? அப்படிச் செய்யாதபோது ஜன் லோக்பால் அவங்களை தண்டிக்கும் பாஸ்.'

"அது சரிங்க, ஆனா நீங்க சொல்றாப்ல பார்த்தா, ஆ.ராசா வாங்கின லஞ்சத்தை மட்டும் ரெக்கவர் பண்ணித் தர்றது தான் ஜன் லோக்பாலோட வேலை. ஆனா, அந்த ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடில வர்ற மத்த அமௌன்டெல்லாம் பிஸினஸ்தானா?'

"நான் கொஞ்சம் பிஸி. நீங்க எங்க வாலண்டியர்ஸ் (தொண்டர்கள்) யார்ட்டயாவது பேசிப்பாருங்களேன்' என்றவாறே தப்பித்தார்.

தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்வதாக அறிமுகப்படுத்திக் கொண்ட இன்னொருவர், "பாஸ் இந்த நாட்டை ஆள்றது யார் தெரியுமா?' என்று கேட்டு எங்களை உற்றுப் பார்த்தவர் எங்களிடம் இருந்து எந்த மறுமொழியும் வராதது கண்டு திருப்தியுற்றவராகத் தொடர்ந்தார். "ரோமன் கத்தோலிக்கக் கும்பல்தான் சார் இந்த நாட்டையே ஆள்றாங்க. முதல்ல இந்த சோனியா காந்திய நாட்டை விட்டுத் துரத்தினாலே ஊழல் ஒழிஞ்சுடும் சார். க்றிஸ்டியன் மிஷனரிஸோட சதி தான் சார் இப்ப நம்ம நாட்ல இத்தன ஊழல் நடக்கறதுக்கே காரணம்' என்று சொல்லி விட்டு ஏதோ பெரிய சதியைக் கண்டுபிடித்து விட்டவர் போல் பெருமையாகப் பார்த்தார்.

"அப்ப கர்நாடகாவில் எடியூரப்பா செய்த ஊழலுக்கும் ரோமன் கத்தோலிக் தான் காரணமா?' என்று சிரிக்காமல் முகத்தை வைத்துக்கொண்டே கேட்டோம்.

"ஆங்.. அது வேற பாஸ். நீங்க மொத்தமா பார்க்கணும் பாஸ்..'

"அப்படியர் ஆனா, ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு அடிப்படையாக அமைந்த சட்டங்களைப் போட்டதே பாரதிய ஜனதா ஆட்சியில தானே. அதுக்கும் ரோமன் கத்தோலிக் சதிதான் காரணமா?' என்று மீண்டும் அதே இடத்துக்கு வந்தோம்.

"சார்.. நீங்க கேட்டதையே கேட்கறீங்க.. முதல்ல ஒன்னு புரிஞ்சுக்கங்க. ஜன் லோக்பால எதிர்க்கறது யாரு? சோனியா தானே? அப்ப இது ரோமன் கத்தோலிக் சதி தானே? ரிசர்வேஷன் கொண்டாந்ததிலேர்ந்து எல்லா பிரச்சினைக்கும் காங்கிரஸ் தானே காரணம்.'

சரி, இதற்குமேல் முறுக்கினால் அறுந்து விடும் என்று நைசாக கேள்வியை மாற்றினோம். "லோக்கல் ஆளுங்க யாரும் வரலியே.. அதிகமா நார்த் இண்டியன் ஐ.டி. வொர்க்கர்ஸா தெரியறாங்களே?' என்றோம்.

"மொழியெல்லாம் பார்க்காதீங்க சார். இப்படிப் பாத்துப்பாத்துதான் தமிழ்காரன்னாலே நார்த்ல கேவலமா பாக்கறான். லோக்கல் சேனல்ல பெரியளவில கவரேஜ் பண்ண மாட்றான்.. இதே சன் டி.வி.யில ஒரு கவரேஜ் கிடச்சிருந்தா, ஒரு பத்தாயிரம் பேராவது வந்திருப்பான். ஆனா, இங்க வந்திருக்கவங்கெல்லாம் குவாலிட்டிபீபிள்.. தீஸ் பீபிள் கேன் மேக் சேஞ்சஸ்.. யு நோ (தரமான மனிதர்கள்...இந்த மனுசங்க மாற்றத்தக் கொண்டு வந்துடுவாங்க, தெரியுமா)' என்றார்.

"ஹசாரே புகழ் பாடும் டைம்ஸ் நௌ சேனல், பர்க்காதத் உள்ளிட்டுப் பலரின் மேலும் குற்றச்சாட்டு உள்ளதே? பாரதிய ஜனதாவே பல்வேறு ஊழல்களில் ஈடுபட்ட கட்சியாயிற்றே? இங்கும்கூடப் பல பாரதிய ஜனதா கட்சியினரையும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினரையும் காண முடிகிறதே?'

"அதாவதுங்க நல்லவனோ கெட்டவனோ, ஒரு பொதுக்காரியம்னு வரும் போது சப்போர்ட் பண்ணா அதை ஏத்துக்கறதுதானே புத்திசாலித்தனம்?' என்று கூறிய படியே எங்களைக் கடந்து சென்றார் அவர்.

மொத்தக் கூட்டத்தில் சுண்டினால் சிவக்கும் வெள்ளை நிறம் கொண்டோர் சுமார் 80 சதவீதம். அவ்வகையில் சராசரி தமிழர்கள் யாரும் கண்ணில் தென்படவில்லை. எங்களுடன் பேசிய அனைவருமே சமச்சீர் கல்வியைக் கடுமையாக எதிர்த்தார்கள். இட ஒதுக்கீட்டை இகழ்ச்சியுடன் எதிர்க்கும் மனநிலையே பலருக்கும் இருந்தது. இதைத்தாண்டி, ஈழம், மூவர் தூக்கு, விலைவாசி உயர்வு போன்ற பிரச்சினைகள் குறித்து அவர்கள் அறிந்திருக்கவில்லை அல்லது கவலைப்படவில்லை. முக்கியமாக ஜன் லோக்பால் என்றால் என்ன என்று அநேகமாக யாருக்கும் தெரியவில்லை.

முகத்தில் தேசியக்கொடி பெயிண்ட் அடிக்க ரூ.20, பதிவுக் கட்டணம் ரூ.20, ஸ்டிக்கர் ரூ.10 என்று உள்ளே நுழைபவர்கள் கட்டாயமாக மொய் எழுதவேண்டும். இதைத்தாண்டி நன்கொடை தனி. டைம்ஸ் நௌ நேரடி ஒளிபரப்பிற்காக அவ்வப்போது ஒருவர் இயக்குநர் போல ஷாட்டை ரெடி செய்தார். காமரா முன்னர் அழகானவர்களை நிற்க வைத்து, காமரா பின்னால் இருவரை முழக்க மிட வைத்து, காமராவை கொஞ்சம் ஷேக் செய்து எடுப்பதன் மூலம் ஏதோ பெரிய கூட்டம் இருப்பது போன்ற ஸ்பெசல் எஃபெக்டை உருவாக்கிக் கொண்டிருந்தார்கள். "ரோமன் கத்தோலிக்க சதி' என்ற ஆர்.எஸ்.எஸ்.  இன்பிரச்சாரத்தை அம்பிகள் தொடங்கி மாமிகள் வரை அனைவரும் பேசினார்கள்.

இதற்கிடையே பாரத் மாதா கீ ஜே, வந்தே மாதரம் என்கிற கூச்சல்கள் காதைக் கிழித்துக் கொண்டு கிளம்பின. அண்ணாவின் ஆதரவாளர்கள் சிலர் பைக்கில் இந்நிகழ்வு நடக்கும் இடத்தைக் கடந்து சென்று கொண்டிருந்தனர். சில கார்களும் அந்த பவனியில் வந்தன. காரின் பின் சீட்டில் ஒரு இளைஞர் வலது கையை சன்னலுக்கு வெளியே நீட்டியிருந்ததர். அதில் ஒரு   தேசியக் கொடியைப் பிடித்து ஆட்டிக் கொண்டிருந்தார். இடது கையில் பாதி குடித்திருந்த நிலையில் ஒரு கிங் பிஷர் பாட்டில்! காரின் உள்ளே ஏர். ஆர். ரகுமான் உச்சஸ்தாயில் கத்திக் கொண்டிருந்தார்  வண்ட்டே ஏ ஏஏ ஏமாத்தரம்ம்ம்ம்ம்.