05302023செ
Last updateபு, 02 மார் 2022 7pm

சமச்சீர் கல்வி- போராட்டத்தால் விளைந்த வெற்றி!

நீண்ட போராட்டத்துக்குப் பிறகு, பாசிச பார்ப்பன ஜெயா கும்பலின் ஆணவத்துக்கு ஆப்பு வைத்து தமிழகத்தில் சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்துமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வெற்றி அவ்வளவு எளிதில் கிடைத்துவிடவில்லை. உயர் நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் வழக்குரைஞர்களின் வாதத் திறமையால் மட்டுமின்றி, புரட்சிகர அமைப்புகளின் தலைமையிலான  மாணவர்கள் மற்றும் உழைக்கும் மக்களின் போராட்ட அலையின் காரணமாகவே உச்சநீதிமன்றம் சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளது.

 

குறிப்பாக, உச்ச நீதிமன்றத்தில் இறுதிக்கட்ட விசாரணை நடந்த போது, பொதுக்கல்வித்திட்டத்தை முடக்க எத்தணிக்கும் பாசிச ஜெயா அரசுக்கு எதிராக சென்னை தாசப்பிரகாஷ் ஓட்டல் அருகே, பூந்தமல்லி நெடுஞ்சாலையில் 1.8.2011 அன்று மாணவர்களையும் பெற்றோரையும் திரட்டி போர்க்குணமிக்க மறியல் போராட்டத்தை பு.மா.இ.மு. நடத்தியது. போராட்டம் நடந்த இடத்திற்கு அருகிலுள்ள சந்தோஷ் நகர் பகுதியில் வீச்சாகப் பிரச்சாரம் செய்து மாணவர்களையும் பெற்றோரையும் பு.மா.இ.மு.வினர் போராட்டத்துக்கு அணிதிரட்டத் தொடங்கியதும், முதல் நாளிலிருந்தே அந்நகரின் நுழைவாயிலில் போலீசைக் குவித்து அச்சுறுத்தியதோடு, யாரும் போராட்டத்தில் கலந்து கொள்ளக் கூடாது என்று பாசிச ஜெயா அரசு மிரட்டியது.

போலீசின் அச்சுறுத்தலைத் துச்சமாக மதித்து போராட்ட நாளன்று காலை 10.30 மணியளவில்  அணிதிரண்ட பு.மா.இமு.வினர், "போராட்டம் வேண்டாமா' என்ற பாடலை மதில்சுவர் மீதேறி செங்கொடியுடன் பாட,  அதை உழைக்கும் மக்களும் உற்சாகத்துடன்  திரும்பப் பாடினர். பேரணியாக தோழர்கள் முழக்கமிட்டுக் கொண்டு நெடுஞ்சாலையை நோக்கி முன்னேறி, வட்டமாக அரண் அமைத்துக் கொண்டு தாசப்பிரகாஷ் ஓட்டல் அருகே சாலை மறியல் போராட்டத்தைத் தொடங்கினர். சந்தோஷ் நகரிலுள்ள மாணவர்கள் இளைஞர்கள் மட்டுமின்றி, நகரின் பல்வேறு பகுதிகளிலிருந்து பள்ளி கல்லூரி மாணவர்கள் பேருந்துகளில் திரண்டு வந்து செங்கொடிகளுன் முழக்கமிட்டபடியே சாலை மறியல் போராட்டத்தில் இறங்கினர். உடனே, போலீசு சுற்றிவளைத்து தடியடித் தாக்குதலை நடத்தி, மாணவர்களைப் பிடித்து இழுத்து அடித்து வாகனத்தில் ஏற்ற முற்பட்டதும், சந்தோஷ் நகரைச் சேர்ந்த பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை போலீசார் தாக்குவதைக் கண்டு திரண்டு வந்து போலீசாரைத் தடுத்ததோடு, அவர்களும் சேர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னணியாளர்களான  சிவப்புச் சட்டை அணிந்தவர்களைப் பிடித்து வாகனத்தில் ஏற்ற போலீசு முயற்சிக்கவும், பெற்றோர்கள் வாகனத்தை மறித்து முழக்கமிட்டனர். சில பெண்கள் போலீசின் சட்டையைப் பிடித்து "எதுக்குடா அடிக்கிறே?, புத்தகம் கேட்டா தப்பாடா?, உங்க அம்மாவ புத்தகம் கொடுக்கச் சொல்லுடா' என்று எதிர்வாதம் செய்தனர். போலீசு தாக்கிய போதிலும் அவர்கள் சிதறி ஓடாமல், துணிவோடு போலீசை எதிர்த்து நின்றார்கள். சில பெற்றோர்கள் போலீசு மீது மண்ணைவாரித் தூற்றினர். இன்னும் சிலர் தோழர்கள் தாக்கப்படுவதைக் கண்டு விம்மியழுதார்கள். போக்குவரத்து முடங்கிப் போனதால் போலீசு திகைத்தது. மாணவர்கள் மட்டுமின்றி உழைக்கும் மக்களும் திரண்டு போராடுவதைக் கண்டு, வாகனங்களை நிறுத்திவிட்டு மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து இந்நியாயமான போராட்டத்தை ஆதரித்தனர். மாணவர்கள், இளைஞர்கள், பெற்றோர்கள், உழைக்கும் மக்கள் என ஏறத்தாழ 600 பேரே அடித்து இழுத்துச் சென்று கைது செய்து  மண்டபங்களில் அடைத்து வைத்த போலீசு, பின்னர் பு.மா.இ.மு.வின் 63 தோழர்கள் மீது பொய்வழக்கு சோடித்து சிறையில் அடைத்தது.

சென்னை மட்டுமின்றி, தமிழகத்தின் பல பகுதிகளில் புரட்சிகர அமைப்புகளின் தலைமையில் மாணவர்கள் பெற்றோர்களின் போராட்டங்கள் தொடர்ந்தன. 27.7.2011 அன்று சிதம்பரத்தில் நந்தனார்  அரசு மேல் நிலைப்பள்ளி மாணவர்களைத் திரட்டி ம.உ.பா. மையம் ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. 29.7.2011 அன்று உசிலம்பட்டியில் ம.உ.பா.மையமும், மாணவர் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கமும் இணைந்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்களைத் திரட்டி  ஆர்ப்பாட்டத்தை நடத்தின. இப்போராட்டத்தில் ஈடுபட்ட 34 பேரை ஜெயா அரசு கைது செய்து

சிறையிலடைத்தது. அரசியல் கைதிகளாகிய எங்களை மொத்தமாக தனி அறையில் அடைக்க வேண்டும், சட்டப்படி அரசியல் கைதிகளுக்கான உரிமைகள் வசதிகள் அனைத்தும் தரப்பட வேண்டுமெனக் கோரி சிறையிலும் தோழர்கள் தர்ணா போராட்டத்தை நடத்தினர். 1.8.2011 அன்று பாகலூர் அரசு மேல்நிலைப் பள்ளிமுன்பாக  மாணவர்கள் பெற்றோரைத் திரட்டி பு.ஜ.தொ.மு. ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. 5.8.2011 அன்று விருத்தாசலத்தில் மாணவர் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கத்தின் சார்பில் ஊர்வலமும் மாவட்ட கல்வி அதிகாரி அலுவலத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தி 100க்கும் மேற்பட்டோர் கைதாகினர். சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்தக் கோரியும் பாசிச ஜெயாவின் ஆணவத்தை எதிர்த்தும்  5.8.2011 அன்று தஞ்சையில் பு.மா.இ.மு. தலைமையில் மன்னர் சரபோஜி அரசு கலைக் கல்லூரியில் வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டம் நடத்துவதற்கான ஏற்பாடுகளில் பு.மா.இ.மு. வினர் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது போலீசும் கல்லூரி நிர்வாகமும் அதைத் தடுக்கும் முயற்சியில் இறங்கின. இதற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமையிலுள்ள இந்திய மாணவர் சங்கத்தினர் (எஸ்.எப்.ஐ.) ஐந்தாம்படையாகச் செயல்பட்ட னர். அந்தப் பெயர்ப்பலகை அமைப்பின் மாநிலத் துணைத்தலைவர் கரிகாலன், ஆயிரத்துக்கும் மேலாகத் திரண்டிருந்த மாணவர்களிடம் "கல்லூரிக்குள் செல்லுங்கள், இவர்கள் தலைமையில் போராட்டம் நடத்தினால் பிரச்சினை வரும்' என்று பீதியூட்டி போராட்டத்தைச் சிதைக்கும் கருங்காலித்தனத்தில் இறங்கினார். இத்து ரோகத்தனத்தைப் புரிந்து கொண்ட மாணவர்கள், கரிகாலன் வகையறாக்களை எள்ளிநகையாடிவிட்டு விண்ணதிரும் முழக்கங்களுடன் பு.மா.இ.மு. தலைமையில் போராட்டத்தை நடத்தினர்.

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு வெளியானதும் பகல் 12 மணியளவில் பு.ஜ.தொ.மு.; பெ.வி.மு. அமைப்புகள் இணைந்து சேலத்தில் பெரியார் சிலைக்கு மாலையணிவித்து பட்டாசுகள் வெடித்து பறையொலிக்க முழக்கமிட்டு அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி இந்த வெற்றியைக் கொண்டாடியதோடு, நகரின் பல இடங்களில் மாணவர்களைத் திரட்டி பட்டாசுகள் வெடித்து இந்த வெற்றியை இனிப்புகள் வழங்கிக் கொண்டாடி தெருமுனைப் பிரச்சாரத்தை மேற்கொண்டனர்.  உச்ச நீதி மன்றத் தீர்ப்பு வெளியானதும், பட்டாசுகளை வெடித்து இனிப்புகளை வழங்கி "பார்ப்பன ஜெயா கும்பலுக்கு செருப்படி!' என்ற தலைப்பில் சென்னையில் சுவரொட்டிப் பிரச்சாரத்தை பு.மா.இ.மு.வினர்மேற்கொண்டனர். முதல்வரை இழிவுபடுத்தியும் சாதிவெறியைத் தூண்டியும் சுவரொட்டிகளை ஒட்டியதாகக் குற்றம் சாட்டி பு.மா.இ.மு.வின் இரு முன்னணியாளர்கள் மீது பிணையில் வெளிவர முடியாத வழக்கு தொடுத்து சிறையிலடைத்துள்ளது, ஜெயா அரசின் போலீசு.  உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வெளியானதும், திருச்சியில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து, பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கி வெற்றியைக் கொண்டாடிய புரட்சிகர அமைப்புகள், உழைக்கும் மக்களின் பேராதரவோடு நடத்தப்பட்ட போராட்டத்தின் வெற்றியைப் பறைசாற்றி 18.8.2011 அன்று மாலை காந்தி மார்க்கெட்  மீனாட்சி திருமண மண்டபத்தில் வெற்றிவிழா கூட்டத்தை நடத்தின. ம.க.இ.க. திருச்சி மாவட்டச் செயலர் தோழர் சீனிவாசன் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில், திருச்சி மாவட்ட பு.மா.இ.மு. அமைப்பாளர் தோழர் கிளர்ச்சியாளன், சமச்சீர் பாடத்திட்டக் குழு உறுப்பினரான கல்வியாளர் பேரா.கருணாநந்தன், ம.உ.பா. மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு ஆகியோர் இப்போராட்ட வெற்றியைத்   தக்கவைக்கவும் அடுத்தகட்ட போராட்டத்துக்கு முன்னேறவும் உழைக்கும் மக்கள் அணிதிரள வேண்டிய அவசியத்தை உணர்த்தினர். இறுதியாக, ம.க.இ.க. மையக்கலைக்குழுவினர் நடத்திய புரட்சிகர கலைநிகழ்ச்சியும் புரட்சிகர அமைப்புகளின் போராட்டத்தை விளக்கிய "அம்மா வுக்கு ஆப்பு!' என்ற நாடகமும் பார்வையாளர்களிடம் பெருத்த வரவேற்பைப் பெற்றன.

உழைக்கும் மக்களின் போராட்டத்தால், தனது எத்தணிப்புகள் மூன்று மாதத்திலேயே வீழ்த்தப்பட்டுள்ளதைக் கண்டு பார்ப்பன பாசிச கும்பல் குமுறிக் கொண்டிருக்கிறது. அடிபட்ட மிருகம் அமைதியாக இருக்காது. அது மீண்டும் வெறியோடு தாக்குதலைத் தொடுக்கும்.    அதை எதிர் கொண்டு முறியடிக்கவும், இன்றைய போராட்ட வெற்றியைத் தக்கவைத்துக் கொண்டு நளைய வெற்றியே அறுவடை செய்யவும் உழைக்கும் மக்கள் தயாராக இருக்க வேண்டும்.

பு.ஜ. செய்தியாளர்கள்