"போர்" அறைகூவலும், எச்சரிக்கையும். இப்படி "போர்" க்கான ஒரு புள்ளியில் இரண்டும் சந்திக்கின்றன. இப்படி ஒரே விடையத்தை பேசுகின்றனர். ஒருதரப்பு அறைகூவலாக விட, மறுதரப்பு எச்சரிக்கையை விடுக்கின்றது. இது உண்மை என்றால், தனிநபர் பயங்கரவாதத்தை நடத்தத் தயராகும் இனியொருவின் அறைகூவல் அல்லவா இது!? இதைத்தானா "புலிகள் இரண்டாவது ஆயுதப் போருக்குத் தயாராவதாக" அரச புலானாய்வுத்துறையை மேற்கோள் காட்டி கொழும்பு ஊடகங்கள் எழுதுகின்றன!?
எது எப்படி இருந்தபோதும், "இன்னொரு போர் தவிர்க்கவியலாதது" என்ற இடதுசாரியத்தின் பெயரிலான இந்த அறைகூவல், இலங்கையில் பாசிசத்துக்கு எதிரான மக்கள் திரள் அமைப்புகள் உருவாக்குகின்ற இன்றைய விழிப்புணர்வு அரிசியலை தடுத்து நிறுத்தும் சதி அரசியலாகும். ஜே.வி.பி பிளவு உட்பட பாசிசத்துக்கு எதிரான பலமுனைப் போராட்டங்கள் இடதுசாரிய முனைப்புடன் இன்று முனைப்புக்கொண்டுள்ள நிலையில், இதற்கு முரணான இடதுசாரியத்தின் பெயரில் "இன்னொரு போர் தவிர்க்கவியலாதது" என்று அழைப்பு விடுவதன் மூலம், அதைக் கருவிலேயே ஒழித்துக்கட்ட முனைகின்றனர். ஜே.பி.யில் இருந்து பிரிந்தவர்கள் உட்பட பலரும் தம்முடன் தொடர்பிலுள்ளதாகக் கூறிக்கொள்ளும் இனியொருவின் வீங்கி வெம்பும் பிரமுகர் தன அரசியலும், (இனியொரு போர்) "இன்னொரு போர் தவிர்க்கவியலாதது" என்ற இனியொருவின் அறைகூவலும், பாசிசத்துக்கு எதிரான இலங்கை மக்களின் அணிதிரள்வு மீதான அரச ஒடுக்குமுறையைக் கோரி அதை தூண்டி விடுகின்றது.
இதன் மறுபக்கத்தில் "இன்னொரு போர் தவிர்க்கவியலாதது" என்று கூறி, குண்டு வைக்க வருமாறு கோருகின்றனர் இந்த திடீர் இடதுசாரிகள். இனியொருவைச் சேர்ந்தவரும், புதியதிசையைச் சேர்ந்தவருமான நாவலன், பௌத்த சிங்கள பேரினவாதத்தின் வரலாற்றை கூறித்தான் போருக்கான அழைப்பு விடுக்கின்றார். ஒட்டுமொத்த இலங்கை மக்களுக்கும் எதிரான பாசிசத்தை எதிர்த்தல்ல. அதுவும் "மீண்டும் போரை முன்னறிவிக்கும் இலங்கை அரசு" என்று கூறி, புலிகள் பாணியில் தமிழ் தேசியத்தின் பெயரில் இதற்கு அழைப்பு விடுகின்றார். ஆம் புலிகள் எப்படி எல்லாம் போருக்கு அழைப்பு விட்டனரோ, அதே பாணியில் மீண்டும் அழைப்பு. போராட்டம் என்பது "போர்" என்று மட்டும் கருதும் புலித்தேசியத்தையே, இடதுசாரிய சொல்லாடல்கள் மூலம் இங்கு மீள முன்வைக்கின்றனர்.
"மீண்டும் போரை முன்னறிவிக்கும் இலங்கை அரசு" என்று கூறிக்கொண்டு "இன்னொரு போர் தவிர்க்கவியலாதது" என்று கூறி "…இடதுசாரிகள் மக்கள் முன்வைக்கும் வேலைத் திட்டம் தான் தீர்மானிக்கும். இன்றைக்கு வரை அது பேசாப் பொருள் என்பதை இவர்கள் சுயவிமர்சனமாக முன்வைப்பதிலிருந்தே புதியதை நோக்கிப் பயணிக்க முடியும்." என்கிறார். இடதுசாரிகள் புலிகள் போல் குண்டு வைக்க மறுக்கும் அரசியலை சுயவிமர்சனம் செய்ய வேண்டும் என்கின்றார். இடதுசாரிகள் "இன்றைக்கு வரை அது பேசாப் பொருள்"ளாக, இதுதானே உள்ளது. 1980 களில் புலியில் இருந்து புளொட் பின் புளொட்டிலிருந்து தீப்பொறி தோன்றிய போது, அது இடதுசாரிய பின்னணியில் உருவானது. ஆனால் பழையபடி குண்டு வைக்கும் தனிநபர் பயங்கரவாதத்தைத்தான் இடதுசாரியத்தின் பெயரில் நியாயப்படுத்தி முன்வைத்தது மட்டுமின்றி, அது குண்டையும் வைத்தது. இறைகுமாரன், உமைகுமாரன் கொலை முதல் கிட்டுக்கு குண்டு எறிந்தது வரை இதே அரசியல்தான். புலி அழிவுக்கு பிந்தைய திடீர் இடதுசாரிகள், குண்டு வைக்கும் இடதுசாரியத்தை அடிப்படையாகக் கொண்ட, அரசியல் சதிகளில் நின்றுதான் இன்று அரசியலை முன்தள்ளுகின்றனர். இந்த வகையில் தான் "இன்னொரு போர் தவிர்க்கவியலாதது" என்ற அறிவித்தலும் பொருந்தி வெளிவருகின்றது. "புலிகள் இரண்டாவது ஆயுதப் போருக்குத் தயாராவதாக" கொழும்பு ஊடகத் தகவல்கள் பொருந்திப் போகின்றது.
மக்களை அணிதிரட்டி மக்கள் திரள் அமைப்புகளை கட்டுவது, பாசிசத்துக்கு எதிரான முன்னணிகளை உருவாக்குவதற்கு எதிரானது, "இன்னொரு போர் தவிர்க்கவியலாதது" என்ற அறை கூவல். மக்கள் பாசிசத்துக்கு எதிராக அரசியல் மயப்படாத, அதற்கான அரசியல் விழிப்புணர்ச்சிக்குரிய வேலையைச் செய்யாத சூழலில், இது போன்ற கற்பனையான அழைப்புகள், அனைத்தும் மக்களுக்கும் எதிரானது. இது விசமத்தனமானது. மக்களை ஒடுக்கக் கோருவது.
மக்கள் தமக்காக தாம் போராடும் அமைப்புகளைக் கட்டி, அதனூடான வெகுஜன போராட்டங்கள் தான், போராட்ட வடிவங்களைத் தீர்மானிக்கும். இதை மையப்படுத்தி இயங்குவது தான், இன்றைய அரசியல் அறைகூவலாக இருக்க முடியும். இதற்கு மாறாக "இன்னொரு போர் தவிர்க்கவியலாதது" என்று கூறி "போரைக்" கோருவது, அப்பட்டமான தனிநபர் பயங்கரவாதமாகும். இது மக்கள் அரசியலுக்கு விரோதமானது.
இலங்கைப் பாசிசம் வெறுமனே தமிழ்மக்களுக்கு மட்டும் எதிரானதல்ல. அது இலங்கை வாழ் மக்கள் அனைவருக்கும் எதிரானது. இந்த வகையில் அணுகாத குறுகிய அரசியலை, "இடதுசாரியம்", "மார்க்சியம்" என்பது கேலிக்குரியது. இலங்கையில் பாசிசத்துக்கு எதிரான முன்னணி முதன்மையானது. ஜனநாயகத்துக்கான அறைகூவல் மையக் கோசமாகும்.
இந்த வகையில் பலமுனை கொண்ட மக்கள் திரள் அமைப்புகள் அடிப்படையானது. "இன்னொரு போர் தவிர்க்கவியலாதது" என்ற கூறும் போர் அறைகூவல், பாசிசத்துக்கு எதிரான முன்னணி கோசத்துக்கு எதிரானது. இது மக்கள் திரள் அமைப்பை தடுத்து நிறுத்தும் அறை கூவலாகும்.
பரந்து விரிந்த முன்னணியை உருவாக்கப் போராடாது முன்தள்ளும் "போர்", குறுகிய தனிநபர் பயங்கரவாதத்தை மட்டும் தான் பிரதிபலிக்கும். குறிப்பாக பாசிசத்துக்கு எதிரான மக்கள் திரள் அமைப்புகளிலும், முன்னணிகளிலும் இடதுசாரிய மையக் கோசங்கள் கூட வெளிப்படையாக இருக்கமாட்டாது. அவை கூட சில வேளைகளில் பாசிசத்துக்கு எதிரான அணியை பலவீனமாக்கும். இப்படி இருக்க, மக்கள் திரளற்ற இன்றைய சூழலில், மக்களுக்கு முரணானதும் அவர்கள் கோராததுமான "இன்னொரு போர் தவிர்க்கவியலாதது" என்று மக்கள் பெயரால் கோருவது, எந்த அரசியல் பின்னணியில் நின்று என்ற கேள்வி இங்கு எழுகின்றது. யாருக்காக, எந்த நோக்கத்துக்காக என்ற கேள்வி இங்கு இயல்பாகின்றது.
இதன் மற்றொரு தளத்தில் பாசிசத்துக்கு எதிரான முன்னணியை மறுத்து, குறுகிய இனவாத உணர்வுடன் தமிழ் மக்களை மையப்படுத்தி "முற்போகுத் தேசியவாதமா இல்லை குறுந்தேசிய ஆதிக்கமா" என்று கேட்டு "இன்னொரு போர் தவிர்க்கவியலாதது" என்ற கூறுகின்ற இடதுசாரிய அரசியல் பித்தலாட்டத்தை இங்கு காண்கின்றோம். தமிழ் மக்களாக குறுகிவிட்ட, வெறும் தேசியவாதமாக மாறி, இடதுசாரிய மோசடியாக இது முன்வைக்கப்படுகின்றது.
இதற்கு முரணாக ஜே.வி.பியில் இருந்து பிரிந்த மக்கள் முன்னணி தன் கருத்தில் "பாசிசம் நிலவும் போது, வெகுசன முன்னணிகள், மக்களின் அரசியல், சமூக, அன்றாட தேவைகளின் அடிப்படையில் கட்டப்படவேண்டும். இடதுசாரிகளான நாம் மக்கள் முன்னணிக்கான தேவையை தான் வலியுறுத்த வேண்டும். கையறு நிலையில் உள்ள இலங்கை சமூகத்தை திரும்பவும் உணர்ச்சி வசப்பட வைத்து, மீண்டுமோர் ஆயுத போராட்டத்தை ஆரம்பிக்க தூபம்போடும் குள்ள நரிக் கூட்டமான, இடதுசாரி வேடம் போட்ட சிங்கள இனவாதிகளையும், தமிழ் குறுந்தேசியவாதிகளையும் அம்பலப்படுத்த வேண்டும்" என்கின்றனர். இந்த சரியான தெளிவான கூற்று "இன்னொரு போர் தவிர்க்கவியலாதது" என்பதற்கு நேர் எதிரானது. இலங்கையில் பாசிசத்தை எதிர் கொண்டு போராட வேண்டியது மக்களே ஓழிய, தனிநபர்கள் அல்ல. மக்கள் திரள் அமைப்புகள் தான் தேவையே ஒழிய "இன்னுமொரு போர்" அல்ல.
இதில் வேடிக்கை என்னவென்றால் தனிநபர் ஒருவர் "இன்னொரு போர் தவிர்க்கவியலாதது" என்று கூறிக் கோருவது, சிலர் கூடி சதி செய்வதாகும். இது குண்டு வைத்து புரட்சி நடத்திய, தமிழ் குறுந்தேசிய அரசியலாகும். இங்கு இதற்கு "தலைமை வகிப்பது முற்போக்குத் தேசியவாதமா இல்லை குறுந்தேசிய ஆதிக்கமா என்ற சிக்கலை இடதுசாரிகள் மக்கள் முன்வைக்கும் வேலைத் திட்டம் தான் தீர்மானிக்கும்." என்று கூறுவதன் மூலம், தேசியத்துக்கு தலைமை தாங்கும் பிரிவுதான், முற்போக்கையும் பிற்போக்கையும் தீர்மானிப்பதாக அரசியலையே புரட்டி விடுகின்றனர். இது "தேசியத்தை" வர்க்கம் கடந்த ஒன்றாகவும், "முற்போக்கா" "பிற்போக்கா" என்பதை "இடதுசாரிகள்" குறிப்பாக நபர்கள் முன்வைக்கும் "வேலைத்திட்டம்" தான் தீர்மானிக்கும் என்கின்றார். ஆக இங்கு முற்போக்கை பிற்போக்கை தீர்மானிப்பது "தேசியம்" அல்ல என்ற அரசியல் புரட்டை இங்கு முன்தள்ளித்தான் "இன்னொரு போர் தவிர்க்கவியலாதது" என்று கூறி "முற்போக்காக" குண்டு வைக்க அழைக்கின்றனர். இது புலிக்கு பிந்தைய திடீர் "மார்க்சியவாதி"களின் அரசியல் பித்தலாட்டமாகும்.
அதுவும் "தேசிய"த்துகள் நின்று செய்யும் குதர்க்கமாகும். செருப்பின் அளவுக்கு ஏற்ப காலை வெட்டுமாறு கோருகின்றனர். தேசியத்தை சுயநிர்ணயத்தின் அடிப்படையில் முன்வைத்து, ஐக்கிய முன்னணியை கட்டவும், பாசிசத்துக்கு எதிரான முன்னணியைக் கட்டவும் தவறுகின்ற தமிழ் "தேசிய" அரசியல் இலங்கையின் ஓட்டுமொத்த மக்களுக்கும் எதிரானது. இந்த குறுகிய இன தேசியவாதம்தான் "இலங்கையில் மட்டுமன்றி ஈழப் போராட்டம் குறித்து அக்கறை கொண்ட புலம் பெயர் சமூக உணர்வாளர்கள் மத்தியிலிருந்தும் இதற்கான கருத்துவெளியும், செயற்பாட்டுத் தளமும் உருவாக்கப்பட வேண்டும்." என்ற கோரிக்கையாகின்றது.
இங்கு தேசியம் பற்றி மார்க்சியம், சுயநிர்ணயத்தை அடிப்படையாகக் கொண்டுதான் அணுகுகின்றது. ஒடுக்கப்பட்ட மற்றும் ஒடுக்குமினத்தைச் சேர்ந்த பாட்டாளி வர்க்கம், தேசிய இன முரண்பாட்டின் மேல் கையாள வேண்டிய முரணற்ற அணுகுமுறையை மார்க்சியம் மிகத் தெளிவாகவே முன்வைக்கின்றது. அதை ஒடுக்கும் மற்றும் ஒடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்த மார்க்சியவாதிகளின் ஒரே வேலைத்திட்டத்தால் ஆனது. இரண்டு வேலைத்திட்டத்தால் ஆனதல்ல. தமிழ் "இடதுசாரிகள்" வைக்கும் "வேலைத்திட்டம்", சிங்கள இடதுசாரிகளுக்கு முரணாக இருந்தால், அது என்றும் எங்கும் முற்போக்காக இருக்காது. இரண்டு வேலைத்திட்டம் இருக்காது, இருக்கவும் முடியாது.
இதற்குரிய அரசியல் சூழல் கனியாத எந்தந் சூழலிலும், பொது வேலைத்திட்டதுக்கு முரணாக, எதையும் தாமாக முன்வைக்க முடியாது. அப்படி முன்வைத்தால் அது மார்க்சியமல்ல. இப்படியிருக்க "இடதுசாரிகள் மக்கள் முன்வைக்கும் வேலைத் திட்டம் தான் தீர்மானிக்கும்." என்று இதைக் கூறி, "இன்னொரு போர் தவிர்க்கவியலாதது" என்று கூறி, அழைப்புவிடும் அரசியல் கேலிக்கூத்தை இங்கு நாம் பார்க்கின்றோம்.
வடகிழக்கில் மக்கள் தங்கள் வாழ்வை இழந்து பரிதவிக்கின்ற சூழலில், லும்பன் வாழ்வே சமூக உணர்வாகி வரும் சூழலில், புலத்தில் தன் சமூகம் மீதான சமூக அக்கறையற்ற போக்கு மேலெழுந்து வரும் இன்றைய பொதுச்சூழலில் "இன்னொரு போர் தவிர்க்கவியலாதது" என்று கூறுகின்ற "மார்க்சிய" முலாம் பூசிய பித்தளையை பார்க்கின்றோம். தனிநபர்கள் "மார்க்சிய" சொல்லாடல்கள் மூலம், சமூகத்தையே மோசடி செய்து பிழைக்கின்ற பிழைப்புத்தனமான பிரமுகர் அரசியல் இது. சர்வதேச கம்யூனிச இயக்கம் வரை சென்று "மார்க்சிய" சொல்லாடல் மூலம் மோசடி செய்கின்ற பிரமுகர் பாணியில் "இன்னொரு போர் தவிர்க்கவியலாதது" என்று கூறுகின்ற மற்றொரு அரசியல் மோசடியைத்தான் இங்கு பார்க்கின்றோம்.
பாசித்துக்கு எதிரான போராட்டம், வெறும் தமிழ் மக்கள் சார்ந்ததாக கூறுகின்ற குறுந்தேசியத்தைக் காண்கின்றோம். ஒடுக்கப்பட்ட சிங்கள மக்கள், ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் இணைந்து போராட வேண்டிய அடிப்படையான அரசியல் கண்ணோட்டத்துக்கு முரணான அனைத்தும் மக்கள் விரோதமானது. "மீண்டும் போரை முன்னறிவிக்கும் இலங்கை அரசு" என்று கூறுகின்றதன் மூலமான எதிர்மறையான அழைப்பான "இன்னொரு போர் தவிர்க்கவியலாதது" என்ற அரசியல், ஒன்றையொன்று சார்ந்தது. இது சாராம்சத்தில் "புலிகள் இரண்டாவது ஆயுதப் போருக்குத் தயாராவதாக" கூறுகின்றதன் பின்னணியிலானது. இந்த அரசியல், அரச பயங்கரவாதத்துக்கு எதிரான தனிநபர் பயங்கரவாதம் தான். இது சினிமா பாணியிலானது. வன்முறையை எதிர் கொள்ளும் கதாநாயகத்தனமான அரசியல் சினிமாவாகும்.
பி.இரயாகரன்
08.01.2012