08152022தி
Last updateபு, 02 மார் 2022 7pm

71 பேர் கையெழுத்திட்ட "வேண்டுகோளின்" பின்னான அரசியல் பின்னணி

"தமிழ் சமூகத்திற்கும் அதனுடைய சிவில், அரசியல் பிரதிநிதிகளுக்கும் ஒரு வேண்டுகோள்" என்ற தலைப்பில், புலம்பெயர்ந்தவர்கள் உள்ளடங்கிய ஒரு அறிக்கை வெளியாகியிருக்கின்றது. பிபிசி தமிழ் சேவை கூட அதை முன்னிறுத்தி பேட்டி கண்டது. குறிப்பாக இந்த அறிக்கை 1990 களில் புலிகள் வடக்கில் வாழ்ந்த முஸ்லீம் மக்களிடம் இருந்த அனைத்தையும் புடுங்கிவிட்டு துரத்திய முஸ்லீம் மக்களைப் பற்றிய கருசனையின் பெயரில் வெளியாகி இருக்கின்றது. முதலில் இதன் அரசியல் பின்னணியையும், அரசியல் அடிப்படையையும் என்ன என்பதைப் பார்ப்போம்.

 

அரசைக் கண்டிக்காத புலியெதிர்ப்பு அரசியல் தான், தமிழரைக் கண்டிக்கும் தமிழின எதிர்ப்பு அரசியலாக மாறியிருக்கின்றது. இப்படி வெளியாகிய அறிக்கை தான் இது. புலிகள் இருந்தபோது புலியெதிர்ப்பு அரசியல் அரசை ஆதரித்தன அல்லது அரசு மேலான மென்மையான கண்டன அணுகுமுறையைக் கையாண்டது. இன்று அது தமிழினவெதிர்ப்பு அரசியலாக இடம் மாறியிருக்கின்றது. தமிழ் சமூகத்தின் பிற்போக்கான சமூகக் குணாம்சத்தை முன்னிறுத்தி, இந்த தமிழினவெதிர்ப்பு அரசியல் அரங்கேறுகின்றது. நேர்மையாக தமிழ் சமூகத்தின் பிற்போக்கை எதிர்த்துப் போராடும் எவரும், அரசுக்கு எதிரான கண்டனம் மற்றும் போராட்டத்தின் ஊடாகத்தான் அணுகுவாhர்கள். தனித்துக் குறுக்கி அணுகுவதன் மூலம் இதற்கு தீர்வைக் காணமுடியாது. இதற்குள் தீர்வை முன்னிறுத்துவது, குறுகிய உள்நோக்கம் கொண்ட அரசியலால் வழிநடத்தப்படுவதாகும். "தமிழ் சமூகத்திற்கும் அதனுடைய சிவில், அரசியல் பிரதிநிதிகளுக்கும் ஒரு வேண்டுகோள்" என்பதில் கையெழுத்திட்டவர்கள், அரசுக்கு எதிராக எந்தவகையான போராட்டத்தையும், கண்டனத்தையும் இவர்கள் கொண்டுள்ளனர்!

புலிகள் இருந்தபோது புலியை எதிர்த்தவர்கள், அரசுக்கு எதிராகவும் போராடியிருக்க வேண்டும். இல்லாத அனைத்தும் உள்நோக்கம் கொண்ட புலியெதிர்ப்பு அரசு சார்பு அரசியலாக இருந்தது. இதுபோல் இன்று தமிழ் மக்களின் பிற்போக்குக் கூறுகளை எதிர்ப்பவர்கள், அரசுக்கு எதிராக போராட வேண்டும். இல்லாதவரை அரசுக்கு சார்பான, தமிழ் மக்களுக்கு எதிரான எதிர்ப்பு அரசியலாகும். இதில் கையெழுத்திட்ட பலர் முன்னாள் புலியெதிர்ப்பு பிரமுகர்கள். இன்று தமிழினவெதிர்ப்புப் பிரமுகராக வெளிப்படுகின்றனர்.

இன்று இதையொத்த முன்னாள் இடதுசாரி பிரமுகர்கள், பிற்போக்கான தமிழ் சமூக கூறுகளை எதிர்க்கின்ற அரசு சார்பு பிரிவு ஒன்று இதற்கு சமாந்தரமாக இயங்கி வருகின்றது. அவர்கள் அடியெடுத்துக் கொடுக்க, வலதுமிடதும் கலந்த அறிக்கையாக வெளியாகி இருக்கின்றது.

இங்கு "சமூகத்தின் பன்முகத்தன்மையினை எம்மத்தியில் ஊக்குவிப்பதற்கும், ஜனநாயகம், நீதி, சமத்துவம் என்பவற்றின் நலனை மையமாகக் கொண்ட பல்வேறு சமூகங்களையும் இணைத்துச் செயற்படுகின்ற ஓர் அரசியலினைப் பற்றிக் கொள்ளவும் நாம் எதுவித தயக்கமும் இன்றி உறுதி பூணுவோம்." என்ற அறிக்கையிடும் போது, அரசுக்கு எதிரான ஒட்டுமொத்த சமூகத்தை நோக்கிய ஒரு அறைகூவலாகவே இருக்கவேண்டும். தமிழ் சமூகத்தை நோக்கி மட்டும் கோருவதும், அரசுக்கு எதிராக கோராததும், பேரினவாததுக்கு ஏற்ற சமூகமாக தமிழினத்தை மாறக் கோருவதுதான். இது புலியெதிர்ப்புக்கு பிந்தைய தமிழினவெதிர்ப்பு அரசியலாகும். தமிழினவெதிர்ப்பு என்ற புதிய அரசியல் வரையறைக்குள்ளான, புதிய அரசியல் போக்கு ஓன்று புலியெதிர்ப்பில் இருந்து இடம்மாறி தோன்றி வருவதை இந்த அறிக்கை மூலம் நாம் அரசியல் ரீதியாக இனம் காணமுடியும்.

இன்று முஸ்லீம் மக்களின் துயரங்கள், புறக்கணிப்புகள், தொடரும் இனவொடுக்குமுறைகள் அனைத்தும் எந்த விதிவிலக்குமின்றி தமிழ் சமூகமும், அதற்குள்ளான பிரதேசரீதியாக தமிழ் பிரிவுகளும் கூட அனுபவிக்கின்றன. இதைவிட சாதிப்பிரிவுகளும் ஏன் பெண்களும் கூட இதை வேறு விதத்தில் அனுபவிக்கின்றனர். இதற்கு இந்த சமூக அமைப்பை கட்டிப் பாதுகாக்கும், அரசு தான் தலைமை தாங்குகின்றது. அரசின் மனிதவிரோத செயற்பாடுகளின் பின்னணியில் தான், பிற்போக்கான அனைத்துக் சமூகக் கூறுகளும் இயங்குகின்றன. அரசுக்கு எதிரான போராட்டம் தான், பிற்போக்கான அனைத்துக் சமூகக் கூறுகளுக்கும் எதிரான போராட்டத்தையும் வழிநடத்த முடியும். இல்லாதவரை அவை குறுகிய அரசியல் நோக்கம் கொண்டது. இதைத்தான் இந்த அறிக்கை செய்கின்றது. இது தமிழினவெதிர்ப்பு அரசியலாக பரிணமிக்கின்றது.

இங்கு அறிக்கை இட்டவர்கள் "தமிழ், முஸ்லிம் சமூகங்களின் இடையிலான உறவுகள் துருவப்பட்டுப்போவதற்கு நாம் எவ்வாறு காரணங்களாக இருந்திருக்கிறோம் என்பது பற்றிய ஒரு சுயவிசாரணை முப்பது ஆண்டு காலப் போரின் முடிவின் பின்னரும் கூட எம்மத்தியில் உருவாகவில்லை" என்று கூறி கையெழுத்திட்ட இவர்களில் எத்தனை பேர், இது தொடர்பாக தங்கள் தங்களை சுயவிசாரணையைச் செய்துள்ளனர்? கடந்த காலத்தில் இவர்களின் அரசியல் பாத்திரம் என்ன? மக்களை அணிதிரட்டிப் போராடாத, அதற்கு முயலாத அரசியல் அக்கறை தங்கள் பிரமுகத்தனத்;தைத் தாண்டியதல்ல. மக்களை அணிதிரட்டாத பிரமுக அரசியல், கடந்த காலத்தில் புலியெதிர்ப்பு, நிகழ்காலத்தில் தமிழினவெதிர்ப்பாக வெளிப்படுகின்றது. அரசியல் என்பது மக்களைச் சார்ந்தது என்கின்ற போது, மக்களை அதற்காக அணிதிரட்டுவதை அடிப்படையாகக் கொண்டது. இதைச் செய்யாத அரசியல், தங்கள் பிரமுகத்தனத்தை தக்கவைக்க, மக்களுக்கு எதிரானதாக குறுக்கி வெளிப்படுகின்றது.

இப்படி ஒரு அறிக்கையை தயாரித்தவர்கள், முதலில் இதை பரந்தளவிலான ஒரு விவாதம் மூலம் இதை தயாரிக்க முன்வரவில்லை, இந்த அடிப்படையில் இருந்து முன் வைக்கவுமில்லை. இன்று இந்த விவகாரத்தை முன்வைப்பது, இன்றைய அரசியல் சூழலில் உள் நோக்கம் கொண்டவை. அத்துடன் குறுகிய பார்வை கொண்டது.

அரசு - கூட்டணி பேச்சுவார்த்தையில், கூட்டணிக்கு எதிரான, அரசு மீதான பொது நிர்ப்பந்தத்தைக் குறைக்கும் வண்ணமே இந்த அறிக்கை வெளியாகி இருக்கின்றது. இதன் பின்னான அரசியல் தமிழினவெதிர்ப்பை, புலியெதிர்ப்பு அரசியல் பின்னணி ஊடாக கையில் எடுத்து இருக்கின்றது.

இலங்கையில் மக்கள் மீதான ஒடுக்குமுறை, சிறுபான்மை இனங்கள் மீதான வன்முறை, பெரும்பான்மை மக்கள் மீதான எதிர் வன்முறை யாவற்றையும் பரந்த தளத்தில் நாம் இனம் காணமுடியும். இன்று வரை அதை ஒட்டுமொத்த சுயவிசாரணைக்கு உள்ளாக்கவில்லை. அதை ஓட்டிய சமூகப் பார்வை கொண்ட சமூகமாக, எந்தச் சமூக பிரிவுகளும் தம்மை மீள் பார்வை செய்யவில்லை. இப்படி இருக்க ஓட்டுமொத்த சமூகப் பார்வையை மையப்படுத்திக் கோராத, குறுகிய ஓன்றை மையப்படுத்திய கோரிக்கை குறுகிய அரசியல் உள்நோக்கம் கொண்டவை.

இப்படி அறிக்கையிட்டவர்கள் தமிழினத்தையும் மையப்படுத்தி அரசியல் செய்பவர்கள் அல்ல. குறிப்பாக தமிழ் மக்களின் இனப்பிரச்சனைக்கு அரசியல் ரீதியான தீர்வை முன்வைக்காதவர்கள், அதை எதிர்க்கின்ற பிரிவை உள்ளடக்கியவர்களைக் கொண்டு வெளியானதே இந்த அறிக்கை. இது, இதன் அரசியல் பின்னணியை அம்பலமாக்குகின்றது.

இன்றைய அரசியல் சூழலில், திசைதிருப்புகின்ற அரசியல் பின்னணியைக் கொண்டது. இன்று இலங்கையில் பாசிசமும், இனவொடுக்குமுறையும் ஒருமுகமாக ஒரு புள்ளியில் சந்தித்து பயணிக்கின்றது. இது சிங்கள மக்களை ஒடுக்க, தமிழ்மக்களை அடக்கி தன்னை சிங்கள அரசாக முன்னிறுத்துகின்றது. இதற்கு எதிரான அரசியல் அறைகூவல் மூலம் தான், முஸ்லீம் மக்களின் நலன்களை மட்டுமல்ல, இணக்கமாக சமூக போராட்டங்களை கூட முன்னெடுக்க முடியும். ஒடுக்கப்பட்ட மக்கள் ஒன்றிணைந்து வாழவும், போராடவும் முடியும்.

 

பி.இரயாகரன்

01.07.2011


பி.இரயாகரன் - சமர்