பிரபாகரனின் "பாதச்சுவடு" களை பின்பற்றிய உமாமகேஸ்வரன்
புளொட்டுக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்குமிடையிலான முரண்பாடுகள் துப்பாக்கி வழிமுறை மூலம் தீர்வுகாணப்பட்டுக்கொண்டிருந்தவேளையில், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணிக்கும் புளொட்டுக்குமிடையிலான முரண்பாடுகள் "சுவரொட்டிப் போராட்டமாகவும்" சில சந்தர்ப்பங்களில் வன்முறைவடிவம் கொண்டதாகவும் கூட மாறிவிட்டிருந்தது. ஈழ விடுதலைப் போராட்ட நலன்களை, மக்களின் நலன்களை முதன்மைப்படுத்துவது என்பதற்கு மாறாக, இயக்க நலன்கள், இயக்கத்தலைமையின் நலன்கள் முதன்மைப்பட்டிருந்தன.
மட்டக்களப்பு சிறையுடைப்பின் பின் புளொட் உறுப்பினர்களும், புளொட் ஆதரவாளர்களும் இலங்கை அரசபடைகளின் தேடுதல்களுக்குள்ளானதால் யாழ்ப்பாணம் வந்து இந்தியா சென்றடைந்தனர். அத்துடன் ஏனைய மாவட்டங்களில் "காந்தீயம்" மற்றும் புளொட்டில் செயற்பட்ட முன்னணி உறுப்பினர்களில் சிலர் பயிற்சிக்காக வேண்டியும், சிலர் தமது "சொந்தப்பாதுகாப்பு"க் கருதியும் இந்தியா சென்றிருந்தனர். இந்தியாவுக்கு பயிற்சிக்கென சென்றவர்களுக்கான ஒழுங்குகளை மேற்கொள்ளுதல், பயிற்சி முகாம்களை அமைத்தல் உட்பட புளொட்டின் பிரச்சார நடவடிக்கைகள், இந்திய அரசியல் அமைப்புக்கள், மற்றும் அரசியல் கட்சிகளுடனான தொடர்புகளைப் பேணுதல் என என புளொட்டின் செயற்பாடுகள் விரிவடைந்து சென்று கொண்டிருந்தன. மேற்கு ஐரோப்பாவிலிருந்தும் பல வடஅமெரிக்காவிலிருந்தும் தமிழ் இளைஞர்கள் புளொட்டுடன் இணைவதற்கு இந்தியா வந்திருந்ததுடன் புளொட்டின் கிளை அமைப்புகள் மேற்கு ஜரோப்பாவிலும் வடஅமெரிக்காவிலும் உருவாக்கம் பெற்றன.
தளத்தில் தோழர் தங்கராஜா அரசியல் பாசறைகள், கருத்தரங்குகளில் இடதுசாரிய கருத்துக்கள், புரட்சிகரக் கட்சி, சிங்கள-தமிழ் உழைக்கும் மக்களின் ஜக்கியம், வர்க்கவிடுதலை பற்றிப் பேசிக்கொண்டும் அவற்றை நடைமுறைப்படுத்துவதிலும் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். ஆனால் இந்தியாவில் உமாமகேஸ்வரன் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம், திராவிடர் முன்னேற்றக்கழகம், திராவிடர் கழகம், இந்திய காங்கிரஸ் கட்சி போன்ற வலதுசாரி பாராளுமன்ற கட்சிகளுடன் உறவை ஏற்படுத்திக் கொண்டிருந்த அதேவேளை இந்திய அரச அதிகாரிகளுடனும் மிகவும் நெருங்கிய உறவை ஏற்படுத்திக் கொண்டிருந்தனர்.
தளத்தில் செயற்பட்டுக் கொண்டிருந்த முன்னணி உறுப்பினர்களின் அரசியல் கருத்துக்கள், அரசியல் செயற்பாடுகளும், இந்தியாவில் செயற்பட்டுக் கொண்டிருந்தவர்களின் அரசியல் கருத்துக்கள், செயற்பாடுகளும் நடைமுறையில் வெவ்வேறு திசைகளில் சென்ற வண்ணமிருந்தன. ஈழவிடுதலைப் போராட்டம் குறித்த புளொட்டின் கருத்துக்கள் மக்களைச் சென்றடையுமாக தளத்தில் "புதியபாதை" பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்ததுடன் இலக்கியச் சஞ்சிகை ஒன்றையும் வெளிக்கொணர்வதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன.
இத்தகைய இலக்கிய சஞ்சிகையை வெளிக்கொணர்வதற்கான முழுமையான பணச்செலவுகளும் புளொட்டினால் வழங்கப்படும் என உறுதியளித்திருந்த காந்தன்(ரகுமான் ஜான்) இலக்கிய சஞ்சிகைக்குழு முழுமையான சுதந்திரத்துடன் இயங்க முடியும் எனவும் தெரிவித்திருந்தார். இதனடிப்படையில் புளொட் உறுப்பினர்களான கேதீஸ்வரன், ஜீவன் உட்பட செல்லத்துரை("வழி" சஞ்சிகையின் ஆசிரியர்), ரவி("புதுசு" சஞ்சிகையின் ஆசிரியர்), சபேசன் ஆகியோர் அடங்கிய குழு உருவாக்கப்பட்டது. இந்த ஐவர் அடங்கிய குழுவின் முன்முயற்சியால் "சுவர்" என்ற இலக்கிய சஞ்சிகையின் முதலாவது இதழ் வெளிவந்திருந்தது.
யமன்
காற்று வீசவும் அஞ்சும்
ஓர் இரவில் நட்சத்திரங்களுக்கிடையே இருக்கிற
அமைதியின் அர்த்தம்
என்ன
என்று நான் திகைத்த ஓர் கணம்,
கதவருகே யாருடைய நிழல் அது ?
நான் அறியேன் ;
அவர்களும் அறியார்.
உணர்வதன் முன்பு
அதுவும் நிகழ்ந்தது....
மரணம்.
காரணம் அற்றது,
நியாயம் அற்றது,
கோட்பாடுகளும் விழுமியங்களும்
அவ்வவ்விடத்தே உறைந்து போக
முடிவிலா அமைதி.
மூடப்பட்ட கதவு முகப்பில்,
இருளில்,
திசை தெரியாது
மோதி மோதிச் செட்டையடிக்கிற
புறாக்களை,
தாங்கும் வலுவை என்
இதயம் இழந்தது.
இளைய வயதில்
உலகை வெறுத்தா
நிறங்களை உதிர்த்தன,
வண்ணத்துப் பூச்சிகள் ?
புழுதி படாது
பொன் இதழ் விரிந்த
சூரிய காந்தியாய்,
நீர் தொடச்
சூரிய இதழ்கள் விரியும்
தாமரைக் கதிராய்,
நட்சத்திரங்களாய்
மறுபடி அவைகள் பிறக்கும்.
அதுவரை,
பொய்கைக் கரையில்
அலைகளைப் பார்த்திரு !
கண் விழித்திருப்போம்
நண்பர்களே !
சோகம் படர்ந்த
தேசப் படமும்,
இதுவரைகாலம்
சிந்திய இரத்தமும்,
இதுவரைகால
இழப்பும்,
நெருப்பும்,
எரியும் மனமும்
இன்னொருவனுக்கு அடிமையாகவா ?
இரவல் படையில்
புரட்சி எதற்கு?
எங்கள் நிலத்தில்
எங்கள் பலத்தில்
எங்கள் கால்களில்
தங்கி நில்லுங்கள்.
வெல்வோமாயின் வாழ்வோம் ;
வீழ்வோமாயினும் வாழ்வோம் !
நமது பரம்பரை
போர் புரியட்டும்.
இவ்விதழில் இறைகுமாரன், உமைகுமாரன் படுகொலை செய்யப்பட்டபின் கவிஞர் சேரனால் எழுதப்பட்டு, இறைகுமாரன், உமைகுமாரன் நினைவுதினத்தில் படிக்கப்பட்ட "யமன்" என்ற கவிதையும் பிரசுரிக்கப்பட்டிருந்தது. "யமன்" கவிதையை "சுவர்" சஞ்சிகையில் பிரசுரிப்பதற்கான தெரிவை ரவியே("புதுசு" சஞ்சிகையின் ஆசிரியர்) மேற்கொண்டிருந்த போதும் அக்குழுவில் இடம்பெற்ற அனைவரினதும் ஏகோபித்த முடிவின் அடிப்படையிலேயே "யமன்" கவிதை "சுவர்" சஞ்சிகையில் பிரசுரமாகியிருந்தது.
"யமன்" கவிதை "சுவர்" சஞ்சிகையில் பிரசுரிக்கப்பட்டதனால் அக்குழுவில் இடம்பெற்றிருந்த புளொட் உறுப்பினர் கேதீஸ்வரன் புளொட் தலைமையிலிருந்து கேள்விகளையும் விமர்சனங்களையும் முகம் கொடுக்க நேர்ந்ததுடன், புளொட்டினால் "சுவர்" சஞ்சிகைக்கு வழங்கப்பட்ட நிதியுதவியை நிறுத்தியதன் மூலம் "சுவர்" சஞ்சிகை முதலாவது இதழுடன் நிறுத்தப்பட்டது.
இறைகுமாரன், உமைகுமாரன் கொலை பற்றி எதுவுமே குறிப்பிட்டிராத கவிஞர் சேரனால் எழுதப்பட்ட "யமன்" கவிதை, இறைகுமாரன், உமைகுமாரன் நினைவுதினத்தில் படிக்கப்பட்டது என்ற ஒரே காரணத்துக்காக "சுவர்" சஞ்சிகையில் பிரசுரித்ததை ஜீரணித்துக்கொள்ள முடியாமல் கேதீஸ்வரன் மீது விமர்சனங்களை முன்வைத்ததுடன், "சுவர்" சஞ்சிகைக்கான நிதியுதவி நிறுத்தப்பட்ட சம்பவமானது புளொட்டின் தலைமையில் இருந்தவர்களிடத்தில் காணப்பட்ட குறுகிய பார்வையையும் குரோத மனப்பான்மையையும் கூட எடுத்துக்காட்டி நிற்கின்றது.
வடக்கு-கிழக்கில் தோன்றியிருந்த "போராட்ட அலையால்" ஈழவிடுதலை போராட்ட இயக்கங்களை நோக்கி இளைஞர்களும் யுவதிகளும் அணிதிரளத் தொடங்கியிருந்ததோடு குழுவடிவிலும், தனிநபர் தொடர்களுக்கூடாகவும், முறையான அமைப்பு வடிவமற்றும் இயங்கிவந்த புளொட் திடீர் வீக்கத்தைக் காணத் தொடங்கியிருந்தது.
இதனால் புளொட்டுக்குள் ஏற்பட்ட நெருக்கடிகளையும், புளொட் உறுப்பினர்களின் வேலைச் சுமைகளையும் கருத்திற்கெடுத்து புளொட்டை முறையான அமைப்பு வடிவம் கொண்டதாக மாற்றம் பெறவேண்டியதன் அவசியத்தை முற்போக்கு கருத்துக்களைக் கொண்டிருந்த முன்னணி உறுப்பினர்கள் உணர்ந்திருந்தனர். இதனடிப்படையில் 1983 இறுதிப்பகுதியில் தளத்திலிருந்து இந்தியா சென்ற முன்னணி உறுப்பினர்கள் மற்றும் இந்தியாவிலிருந்த முன்னணி உறுப்பினர்களுடன் இணைந்த கூட்டத்தில் புளொட்டின் மத்தியகுழு உருவாக்கப்பட்டது.
இந்த மத்தியகுழு செயலதிபர் உமாமகேஸ்வரனையும் அரசியல் செயலர் சந்ததியாரையும் உள்ளடக்கியதாக பரந்தன்ராஜன், பார்த்தன், கேதீஸ்வரன், சத்தியமூர்த்தி, வாசுதேவா, காந்தன்(ரகுமான் ஜான்), கண்ணன், சதானந்தன், பொன்னுத்துரை, பெரியமுரளி, சீசர், சேகர், கண்ணாடிச்சந்திரன், சலீம், டொமினிக், ராமதாஸ், வவுனியா முத்து, யக்கடையா ராமசாமி, உஷா, பாபுஜி, மாணிக்கம்தாசன், ஈஸ்வரன், மாறன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இம் மத்தியகுழுவுடன் கூடவே உமாமகேஸ்வரன், சந்ததியார், கண்ணன், காந்தன்(ரகுமான் ஜான்), சலீம் ஆகியோர் உள்ளடங்கிய கட்டுப்பாட்டுக்குழுவும் உருவாக்கப்பட்டிருந்தது. புளொட்டின் மத்தியகுழுவே அமைப்பின் அனைத்து செயற்பாடுகளையும் வழிநடத்தும் எனவும், அரசியல் மற்றும் நடைமுறை சம்பந்தமான முடிவுகளையும் மேற்கொள்ளும் எனவும், கட்டுப்பாட்டுக்குழு மத்தியகுழு கூடுவதற்கு இடைப்பட்ட காலங்களில், அவசரகால நிலைமைகளில் முடிவுகளையெடுத்து செயற்படுத்தும் உயர்ந்த அதிகாரம் கொண்ட குழுவாக இருக்குமெனவும் கூறப்பட்டிருந்தது.
இத்தகைய தனிநபர் தலைமையல்லாத ஜனநாயக மத்தியத்துவப்படுத்தப்பட்ட ஒரு புரட்சிகர அமைப்பாக தன்னை வெளிப்படுத்திக் கொண்ட புளொட்டின் மத்தியகுழுவில் பல்வேறு வர்க்கச் சிந்தனை கொண்ட, பல்வேறு சமூகப்பார்வை கொண்ட, பல்வேறு அரசியல் பின்னணியைக் கொண்டவர்கள் இடம் பெறலானார்கள். இவ்வாறாக பல வேறுபட்ட நலன்களைக் கொண்டோரின் கலவையாக புளொட்டின் மத்தியகுழு உருவாக்கம் பெற்றிருந்தது.
ஓய்வுநேரம் கிடைக்கும் போதெல்லாம் அரசியல் நூல்களையோ அல்லது போராட்ட வரலாறுகளையோ கற்பதில் ஆர்வமற்ற, ஆனால் கல்கியின் பொன்னியின் செல்வனை விரும்பிப் படிக்கும் செயலதிபர் உமாமகேஸ்வரனின் தலைமையில், தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ் இளைஞர் பேரவை அரசியலுக்கூடாக இடதுசாரி அரசியலை நோக்கி வந்தவரான சந்ததியார்; நீண்ட கால இடதுசாரிய அரசியல்வாதியும் இலக்கியவாதியுமான டொமினிக்; தமிழ் இளைஞர் பேரவை அரசியலுக்கூடாக புளொட்டுடன் இணைந்த வாசுதேவா; இராணுவ நடவடிக்கைகளிலேயே பங்குபற்றியவர்களான கண்ணன், பாபுஜி, யக்கடயா ராமசாமி, மாணிக்கம்தாசன், மாறன்; தமிழ் மாணவர் பேரவைக்கூடாக இராணுவ நடவடிக்கைகளிலும், காந்தீயம் செயற்பாடுகளிலும் ஈடுபட்டிருந்த பரந்தன் ராஜன்; தோழர் தங்கராஜா மற்றும் சந்ததியாரின் கருத்துக்களின் செல்வாக்குகளுக்குட்பட்டிருந்த பெரிய முரளி; இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் பிரமுகர் வீ.பொன்னம்பலத்துடன் செயற்பட்டிருந்த பொன்னுத்துரை; காந்தீயத்தின் செயற்பாடுகளுக்கூடாக புளொட்டுடன் இணைந்து கொண்ட ராமதாஸ், சதானந்தன், ஈஸ்வரன், உஷா, வவுனியா முத்து; தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் அங்கம் வகித்து பயஸ் மாஸ்டரின் இடதுசாரி அரசியல் கருத்துக்களின் செல்வாக்குகளுக்குட்பட்டிருந்த, காந்தீயம் செயற்பாடுகளிலும் பின்னர் புளொட்டின் இராணுவ நடவடிக்கைகளிலும் ஈடுபட்டிருந்த பார்த்தன்; காந்தீயத்தின் செயற்பாடுகளுக்கூடாக புளொட்டுடன் இணைந்து இடதுசாரி அரசியலுக்குள் வந்த சத்தியமூர்த்தி; ஈரோஸ் அமைப்பில் செயற்பட்டு அதன் தொடர்ச்சியாக காந்தீயம் செயற்பாடுகளுக்கூடாக புளொட்டுடன் இணைந்த கண்ணாடிச்சந்திரன்; பயஸ் மாஸ்டரின் இடதுசாரி அரசியல் கருத்துக்களின் செல்வாக்குகளுக்குட்பட்டு புளொட்டுடன் இணைந்துகொண்ட காந்தன்(ரகுமான்ஜான்), கேதீஸ்வரன்; காந்தனின்(ரகுமான்ஜான்) அரசியல் தொடர்புகளுக்கூடாக புளொட்டுடன் இணைந்துகொண்ட சலீம்; இந்திய இராணுவத்தில் பணியாற்றி ஒய்வு பெற்ற சேகர்; இந்திய முற்போக்குவாதியான சீசர்; போன்றோர் அடங்கிய புளொட்டின் மத்திய குழு 1983 பிற்பகுதியில் தீவிரமாக செயற்பட ஆரம்பித்திருந்தது.
இந்திய அரசினால் புளொட் உறுப்பினர்களுக்கு இராணுவப்பயிற்சி ஆரம்பமாகிவிட்டிருந்தது. மத்தியகுழு உறுப்பினர்களான கண்ணன், பாபுஜி, மாணிக்கம்தாசன், காந்தன்(ரகுமான்ஜான்) ஆகியோருடன் ஒரு குழுவினர் லெபனானுக்கு இராணுவப்பயிற்சிக்கென சென்றிருந்தனர். தமிழ்நாட்டில் இராணுவப்பயிற்சி முகாம்கள் ஆரம்பிக்கப்பட்டன. சென்னையில் ஆரம்பிக்கப்பட்ட தமிழர் தகவல் நிலையம் முழுமூச்சுடன் இயங்க ஆரம்பித்திருந்தது.
இந்திய அரசின் இராணுவப்பயிற்சி, லெபனானில் இராணுவப்பயிற்சி, தமிழ் நாட்டில் முகாம்களில் இராணுவப்பயிற்சி, தமிழர் தகவல் நிலையத்துக்கூடாக புளொட்டின் பிரச்சாரங்கள் என்பவற்றுடன் உமாமகேஸ்வரன் மொரிசியஸ் நாட்டுக்கான தனது வெற்றிகரமான வெளிநாட்டுப் பயணத்தை முடித்து சென்னை திரும்பினார்.
இந்தியாவுக்கு பயிற்சிக்கென சென்றவர்களுக்கு பயிற்சி முகாம்களில் இராணுவப்பயிற்சி ஆரம்பமாகியபின் பயிற்சிக்கென சென்றவர்களில் பலர் பயிற்சிமுகாம் நடாத்தப்படும் முறை, பயிற்சிமுகாம்களில் நடைபெறும் முறைகேடுகள் பற்றி தமது அதிருப்தியை வெளியிட்டிருந்தனர். அரசியல் தெளிவின்மையும் பக்குவமின்மையும் தான் பயிற்சி முகாம்களில் முறைகேடுகளுக்கும் பயிற்சிமுகாம்களில் இருந்தோரின் அதிருப்திக்கும் ஒரு காரணம் என்பதையும், இராணுவப்பிரிவினருக்கு அரசியல் அறிவின் அவசியம் இன்றியமையாதது என்பதையும் உணர்ந்து கொண்ட சந்ததியார், தளத்தில் அரசியல்பாசறைகளையும், அரசியல் கருத்தரங்குகளையும் நடாத்தி வந்த தோழர் தங்கராஜாவை இந்தியாவுக்கு அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொண்டதுக்கிணங்க தோழர் தங்கராஜா இந்தியா சென்று பயிற்சி முகாம்களில் அரசியல் வகுப்புக்களை ஆரம்பித்திருந்தார். இராணுவப்பயிற்சி முகாம்களில் இருந்த புளொட் உறுப்பினர்கள் இராணுவப்பயிற்சியுடன் தோழர் தங்கராஜாவின் அரசியல் வகுப்புகளிலும் கலந்து கொண்டிருந்தனர்.
ஈழ விடுதலைப் போராட்ட இயக்கத் தலைவர்கள் எவருக்குமே கிடைத்திராத வெளிநாட்டு(மொரிசியஸ்) பயணத்தையும் அப்பயணத்தில் அவருக்கு கிடைத்த வரவேற்பையும் கண்டு மிகவும் திருப்தியடைந்திருந்த உமாமகேஸ்வரன் தனது தலைமையினால் மட்டுமே ஈழ விடுதலைப் போராட்டம் வெற்றிபெற முடியும் என எண்ணத் தலைப்பட்டார்.
பல வருடங்களாகத் தான்சார்ந்திருந்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் வலதுசாரி அரசியல் பார்வைக்குட்பட்டும், தமிழ்நாட்டில் தமிழினவாத அரசியல்வாதிகளோடு ஏற்படுத்திக் கொண்ட உறவின் காரணமாக அவர்களின் கருத்தியலுக்குட்பட்டும், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆரம்பகால தலைவராக விளங்கியதால் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கே உரித்தான தனிநபர் பயங்கரவாத கண்ணோட்டத்துடனும், சதிவேலைகளுடனும் தனது தலைமையை பலப்படுத்தி அதனைப் பாதுகாக்க உமாமகேஸ்வரன் முன்வந்தார்.
தன்னை ஒரு தூய தமிழ்தேசியவாதி என்று வெளிக்காட்ட குமுகாயம்(சமுதாயம்) போன்ற வழக்கத்தில் இல்லாத தமிழ் சொற்களை வலிந்து உபயோகிக்க உமாமகேஸ்வரன் தொடங்கியிருந்தார். தனது தலைமைக்கு அமைப்புக்குள்ளேயும், அமைப்புக்கு வெளியேயும் இருந்து ஆபத்துக்கள் ஏற்படலாம் எனக் கலக்கமடைந்தவராக தன்னைச் சுற்றி இருப்பவர்களையும், தன்னைச் சுற்றி நடப்பவற்றையும் சந்தேகக்கண்ணோடு அவதானிக்கத் தொடங்கியிருந்தார்.
இது ஒட்டுமொத்தத்தில் வேலுப்பிள்ளை பிரபாகரனின் கண்ணோட்டத்தை ஒத்ததாகவே காணப்பட்டிருந்தது. உமாமகேஸ்வரனின் பார்வையில் தனது தலைமைக்கு தலையிடி கொடுப்பவராக முதலில் இனங்காணப்பட்டவர் உமாமகேஸ்வரனுடன் ஒன்றாக லெபனானில் பயிற்சி பெற்ற விச்சுவேஸ்வரன் என்பவராவார்.
உமாமகேஸ்வரனின் உத்தரவின் பேரில் விச்சுவேஸ்வரன் புளொட் உறுப்பினர்களால் ஒரத்தநாடு பயிற்சி முகாமில் விசாரணை என்ற பெயரில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். லெபனானில் பயிற்சிக்கு ஒன்றாகச் சென்றிருந்தவேளை உமாமகேஸ்வரனுடன் முரண்பட்டிருந்தவரும், பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளில் இருந்தபோது உமாமகேஸ்வரனுடன் முரண்பட்டு தமிழீழ விடுதலைப் புலிகளிலிருந்து வெளியேறியவருமான விச்சுவேஸ்வரன் எதற்காக முகாமில் தடுத்து வைக்கப்பட்டார் என்பது உமாமகேஸ்வரனுக்கு மட்டுமே வெளிச்சமான ஒரு விடயமாக இருந்ததோடு, விச்சுவேஸ்வரனை பயிற்சிமுகாமில் பாதுகாப்புடன் தடுத்து வைத்திருக்கும் முடிவு மத்தியகுழுவினதோ அல்லது கட்டுப்பாட்டுக்குழுவினதோ முடிவாக இருக்கவில்லை.
பயிற்சிமுகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த விச்சுவேஸ்வரன் முகாம் பொறுப்பாளர் மதன் என்பவருடன் தப்பி வெளியேறி இருந்தார். விச்சுவேஸ்வரனைத் தேடியலைந்திருந்த புளொட் உறுப்பினர்கள் பட்டுக்கோட்டையில் பண்ணையார் ஒருவரின் வீட்டில் விச்சுவேஸ்வரனும் மதனும் ஒளித்திருப்பதாக அறிந்து அவர்களை கைது செய்ய முயற்சிக்கையில் விச்சுவேஸ்வரன் தப்பியோடிவிட்ட அதேவேளை மதன் புளொட் உறுப்பினர்களால் கைதுசெய்யப்பட்டு கடுமையான சித்திரவதைகளின் பின் கொலை செய்யப்பட்டார். விச்சுவேஸ்வரனுக்கும் மதனுக்கும் அடைக்கலம் கொடுத்த பண்ணையாரும் மதனைக் கைது செய்யும்போது சுட்டுக் கொல்லப்பட்டார்.
விச்சுவேஸ்வரன் பயிற்சிமுகாமில் தடுத்து வைக்கப்பட்ட சம்பவம், பட்டுக்கோட்டை பண்ணையார் கொலை, சித்திரவதைகளின் பின் பயிற்சிமுகாமில் மதன் கொலை என்பவற்றின் மூலம் புரட்சிகர அமைப்பு என்று கூறப்பட்ட புளொட்டின் செயலதிபரான உமாமகேஸ்வரன், பிரபாகரன் தலைமையிலான தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியலுடனும் நடைமுறையுடனும் முழுமையான உடன்பாடு கொண்ட ஒருவர் என்பதை நடைமுறையில் அனைவருக்கும் வெளிப்படுத்தியிருந்தார்.
(தொடரும்)
பாபுஜி லெபனானில் பயிற்சி பெறவில்லை உத்தரப்பிரதேசத்தில் தான் பயிற்சி பெற்றார் என்பதே சரியானது. இதனை தனது பின்னூட்டம் மூலம் சுட்டிக்காட்டிய திருமலை அசோக்குக்கு நன்றிகள். இந்த தவறுக்கு வாசகர்களிடம் மனம் வருந்துகிறேன். – நேசன்
1. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 1
2. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 2
3. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 3
4. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 4
5. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 5
6. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 6
7. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 7
8. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 8
9. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 9
10. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 10
11. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 11
12. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 12
13. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 13
14. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 14
15. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 15
16. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 16
17. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 17
18. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 18
19. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 19
20. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 20
21. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 21
22. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 22
23. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 23
24.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 24
25.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 25
26.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 26
27.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 27
28.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 28
29. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 29
30 .புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 30
31. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 31
32. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 32
33. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 33
34. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 34
35.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 35
36.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 36
37.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 37