பிரஞ்சு மக்களுக்கு புத்தாண்டுப் பரிசு வழங்கிய பிரஞ்சு மூலதனம்

புத்தாண்டு முதற்திகதி முதல், பிரஞ்சு மக்கள் மீதான புதிய வரிகள். மக்களின் கூலி உழைப்பில் இருந்து, உற்பத்தியில் ஈடுபடாத மூலதனம் 180 கோடி ஈரோவை மேலதிகமாக பிடுங்கும் புதிய அறிவித்தலுடன், மூலதனத்தின் நுகர்வுப் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் பிறக்கின்றது. உணவகங்கள், குளிர்பானங்கள், கட்டிட வேலைகள், புத்தகங்கள், களியாட்ட நிகழ்வுகள், தொலைக்காட்சி, போக்குவரத்து ரிக்கற், தங்குவிடுதிகள் ….. என்ற பல சேவைத்துறை மற்றும் பொருட்கள் மீதான வரி 1.5 சதவீதத்தால் அதிகரிக்கின்றது. இதன் மூலம் வட்டிக்காரர்களுக்கு வட்டியைக் கொடுக்க புதிய வரிகள். பொருளாதார நெருக்கடியின் அரசியல்சாரமே இதுதான்.

உணவு உட்பட பல பொருட்களுக்கு ஐரோப்பிய நாடுகள் சிலவற்றில் வரிகள் கிடையாது. இதனால் பிரிட்டனோடு ஒப்பிடும்போது, பிரான்சில் உணவுப் பொருட்களின் விலை அதிகமாகும். இப்படியிருக்க பிரான்சின் வரி அதிகரிப்பு மேலும் இதன் விலையை உயர்த்தும். பொதுவில் மற்றைய ஐரோப்பிய நாடுகளை விட பொருள் மற்றும் சேவை வரி பிரான்சில் அதிகமாகும்;. மேலும் புதிய வரி அதிகரிப்பு மூலம் 180 கோடி ஈரோக்களை மூலதனத்துக்கு மக்களிடம் கறந்து கொடுக்க உள்ளது. இதை விட காஸ், மின்சாரத்தின் விலை அதிகரிப்பு தனியாக வெளிவந்துள்ளது.

பிரஞ்சு மக்களுக்கு புத்தாண்டுப் பரிசாக மூலதனம் இதைத்தான் வழங்கியிருக்கின்றது. இதுதான் உலகெங்குமான பொதுவான வெட்டுமுகம். மக்களின் நன்மைக்காகத் தான் இவை அனைத்தும் என்று, பசப்ப இவர்கள் தயங்குவது கிடையாது. இப்படி மோசடி செய்து மக்களுக்கு கூறும் தங்களின் உரிமையைத் தான், தங்கள் ஜனநாயக உரிமை என்கின்றனர் அறிவுத்துறையினர்.

மக்களிள் நன்மைக்குத்தான் வரி என்று கூறி, குளிர்பானங்கள் மீதான வரி அதிகரிப்புக்கு விளக்கம் கொடுக்கின்றது உற்பத்தியில் ஈடுபடாத மூலதனம். மக்கள் குண்டாக எடை அதிகரித்து வருவதால், மக்களின் நன்மை கருதியே இந்தப் புதிய வரி என்ற அலுக்கோசுர் தனமான விளக்கம் கொடுக்கின்றனர். இப்படி உற்பத்தி மூலதனத்தை, உற்பத்தியில் ஈடுபடாத நிதிமூலதனம் தூக்கில் போட்டு கறக்க முனைகின்றது. மக்கள் நுகராது மெலிவார்கள் என்று கதை சொல்லுகின்றது சதி மூலதனம். பிராஞ்சு நிதிமூலதனத்தின் இந்த விளக்கத்தை கொண்டு, உலகெங்கும் இனி புதிய வரியை நிதிமூலதனம் மக்கள் மேல் திணிக்கும். குளிர்பானம் மீதான இந்தப் புதிய வரியால், பிரான்சில் குளிர்பானங்களின்; விலை 20 சதவீதத்தால் விலை அதிகரிப்புக்கு உள்ளாகின்றது. குளிர்பானம் மீதான இந்தப் புதிய வரி மூலம் 28 கோடி ஈரோக்களை வரியாக மக்களிடம் இருந்து நிதிமூலதனத்துக்காக அரசு அறவிட உள்ளது.

ஏற்கனவே பிரான்சில் வேலை இழத்தல் என்பது, 2011 இல் என்றுமில்லாத அளவில் உயர்ந்து இருக்கின்றது. கடந்த 8 மாதத்தில் வேலையில்லாதவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு 1,76 இலட்சத்தால் அதிகரித்து இருக்கின்றது. இது மொத்த வேலையில்லாதவர் தொகையை 45.1 இலட்சமாக மாற்றியிருக்கின்றது. இதை விட வேலையில்லாத நிலையில், சமூக நிதியைப் (பிச்சைப் பணத்தைப்) பெறுவோர் எண்ணிக்கை 18000 ஆல் அதிகரித்து இருக்கின்றது. இந்த பணத்தை பெறுபவர் தொகை 7,05 இலட்சமாக அதிகரித்து இருக்கின்றது.

இந்தநிலையில் புதிய வரி, ஆள்குறைப்பை செய்யுமாறு மேலும் திணித்திருக்கின்றது. வேலை இழப்பை இது துரிதமாக்கும். மக்கள் வாங்கும் பொருட்கள் மற்றும் சேவைத்துறை விலை அதிகரிப்பால் நுகர்வு குறைந்து, மேலும் வேலை இழப்பை உருவாக்கும்.

வேலை இழந்தவர்களும்;, புதிதாக வேலையை இழப்பவர்கள் நுகர முடியாத புதிய நிலைமை, சந்தையில் தேக்கத்தை அதிகரிக்கும்;. இதைவிட வரி அதிகரிப்பை மடங்காக்கி இலாபம் காணும் மூலதனத்தின் கனவு, சுழற்சியான பலமுனை நெருக்கடியை பிரஞ்சு மக்கள் முன் திணித்திருக்கின்றது.

நிதிமூலதனத்தின் நலன் சார்ந்த இந்த வரி மூலம் மக்களைக் கறந்து கிடைக்கும் ஓவ்வொரு சதத்தையும், வட்டிக்காரனுக்கே அரசுகள் கொடுக்கின்றது. கடன் பெயரில் நிதிமூலதனத்தை உருவாக்கி, அதைப் பாதுகாக்கும் உலகமயமாதல் கொள்கைக்கு அமைவாக, உற்பத்தியில் ஈடுபடாது மக்கள் உழைப்பை சுரண்டிக் கொடுப்பதுதான் அரசின் பொதுக் கொள்கையாகும். இதுதான் இன்று உலக நெருக்கடியாகின்றது.

மூலதனத்தைக் குவிக்கும் வெறியும், அது உருவாக்கும் நெருக்கடியும், பிரஞ்சு மக்களை விழிப்புற வைக்கின்றது. அவர்களை கிளர்ந்தெழ வழிகாட்டுகின்றது. இந்த ஆண்டு நடக்க இருக்கும் தேர்தல்கள், அது மாற்றத்தைத் தரும் என்ற அப்பாவித்தனமான ஜனநாயகக் கண்ணோட்டத்தை தகர்த்து, மக்கள் விழிப்புற்றுப் போராடுவதை மூலதனத்தின் முடிவில்லாத சூறையாடல் வழிகாட்டுகின்றது. தேர்தல் மூலமான ஆட்சி மாற்றங்களும், ஜனநாயகம் மீதான அப்பாவித்தனமான பிரமைகளும், தன் வாழ்வில் மாற்றத்தை தராது என்பதை அனுபவம் தன் பங்குக்கு கற்றுக் கொடுக்கின்றது.

பி.இரயாகரன்

04.01.2011