மார்க்சியம் முன்னேறிய பிரிவைக் கடந்து நடைமுறை இயக்கமாக மாறாத இலங்கைச் சூழலை பயன்படுத்திக் கொண்டு, பலர் மார்க்சியத்தின் பெயரில் பலவிதமாக பிழைக்கின்றனர். தங்கள் அறிவுசார்ந்த மேலாண்மையைக் கொண்டு, இந்த அரசியல் பொதுவில் அரங்கேறுகின்றது. புலிக்கு பிந்தைய திடீர் இடதுசாரிகளின் ஒரு பிரிவினர் மார்க்சிய சொற்றொடர் மூலமான மூடிமறைத்த சந்தர்ப்பவாதத்தைக் கொண்டு, சர்வதேச புரட்சியாளர்களை ஏமாற்றி மோசடி செய்கின்றனர்.
இப்படி மூடிமறைத்த அபாயகரமான எதிர்ப்புரட்சி பற்றி லெனின் கூறும் போது "உழைக்கும் மக்களுக்கு உடனடியாக வெறுப்பூட்டும், அப்பட்டமான சந்தர்ப்பவாதம் மூடிமறைக்கப்பட்ட சந்தர்ப்பவாதத்தைப் போன்று அபாயகரமானதும் ஊறு விளைவிக்கக் கூடியதும் அல்ல. மூடிமறைக்கப்பட்ட சந்தர்ப்பவாதம் தனது சந்தர்ப்பவாத நடைமுறைக்கு உரிய தருணம் வரவில்லை என்றும் இன்ன பிறவாகும் நிரூபிக்க அடுக்கடுக்காக மார்க்சிய சொற்றொடர்களைப் பயன்படுத்துகிறது" என்றார்.
சொந்த மக்கள் முன் அவியாத தங்கள் திடீர் இடதுசாரிய சந்தர்ப்பவாத அரசியலை மூடிமறைத்துக் கொண்டு, சர்வதேச மற்றும், மாற்று மொழி புரட்சியாளர்களை ஏமாற்றுவதற்கு தொடங்கியிருக்கின்றனர். தங்கள் சந்தர்ப்பவாத எதிர்ப்புரட்சி அரசியலையும், தன் சொந்த நடைமுறையையும், புரட்சியின் பெயரில் முன்தள்ளுவது புலிக்கு பிந்தைய திடீர் இடதுசாரிகளின் அரசியல் நடைமுறையாக மாறியுள்ளது. முதலில் அது தன்னைத்தான் மூடிமறைத்துக் கொள்கின்றது. மார்க்சியம் சமூக அரசியல் இயக்கமாக இலங்கையில் உருவாகாத சூழலை பயன்படுத்திக்கொண்டு, அறிவுசார்ந்த மேலாண்மை மூலம் மோசடி செய்கின்றனர்.
இந்த அரசியல் நுகர்வு சந்தையைக் கைப்பற்றும், அதே அரசியல் அடிப்படையில் முன்தள்ளப்படுகின்றது. மூலதனம் நுகர்வு சந்தையைக் கைப்பற்ற மோசடிகளைச் செய்வதும், ஏமாற்றுவதும், பொருள் பற்றிய பிரமையை ஏற்படுத்துவதும், மிதமிஞ்சி விளம்பரம் செய்வதும் என்ற எல்லாவிதமான அற்பத்தனமான மூலதனத்தின் உணர்வுடன்தான் நுகர்வுச் சந்தை கைப்பற்றப்படுகின்றது. இதே அடிப்படையில் தங்கள் பிரமுகத்தனத்தை சர்வதேச புரட்சியாளர்கள் முன் முன்னிறுத்தி மோசடியுடன் விளம்பரம் செய்கின்றனர். மக்களின் விடுதலைக்கு வழிகாட்டும் இடதுசாரிய அரசியலை, தங்கள் பிழைப்புக்கு ஏற்ப விளம்பரப்படுத்தி முன்தள்ளுகின்றனர்
சொந்த மக்கள் முன் தங்கள் அரசியல் நேர்மையை மெய்ப்பிக்க முடியாதவர்கள், நேர்மையான புரட்சிகர அரசியலை முன்னெடுக்க முடியாதவர்கள், மற்றைய நாட்டு புரட்சியாளர்களையும், வேறு மொழி பேசும் புரட்சிகரப் பிரிவினரையும் ஏமாற்றிப் பிழைக்கும் எதிர்ப்புரட்சி அரசியலை முன்தள்ளி வருகின்றனர்.
இலங்கையிலும், புலத்திலும் புரட்சிகர மக்கள் அமைப்புகளை உருவாக்கி தாம் போராடுவதான ஒரு அரசியல் பிரமையை உருவாக்கி, போலியான விம்பத்தின் பின்னணியில் தான் "மார்க்சிய" பிரமுகத்தனங்கள் அரங்கேறுகின்றது.
மார்க்சியத்தையும் அதன் அடிப்படையிலான புரட்சிகர அரசியலையும், தங்கள் மூடிமறைத்த சந்தப்பவாதத்துடன் கூடிய, தங்கள் பிரமுகர் தன அரசியலுக்கு அமைவாக இதை முன் தள்ளுகின்றனர். சர்வதேச புரட்சியாளர்களையும், மாற்று மொழி புரட்சியார்களையும் மோசடி செய்கின்ற, திட்டமிட்ட மூடிமறைத்த அபாயகரமான எதிர்ப்புரட்சி அரசியல் இது.
இது நேர்மையான வெளிப்படையான அரசியல் முன்னெடுப்பையும், சரியான புரட்சிகரமான போக்கையும் மறுதலிக்கின்றது. இரகசியமான மூடிமறைத்த சதிகளில் இறங்குகின்றது. லெனின் கூறுவது போல் சரியான அரசியல் "போதனைகளை சமூகத்திற்கு விரோதமானது என்கிறது. ஆத்திரத்தால் துவேஷிக்கிறது. கருத்து திரிபுவாதம் செய்ய பொய்ப் பிரசாரம் செய்ய முற்படுகிறது. அவதூறு செய்வதற்காக இயக்கங்கள் நடத்துகிறது. ஒடுக்கப்பட்டவர்களுக்கு திருப்தியளிக்கும் பொருட்டு, ஒடுக்கப்பட்டவர்களை ஏமாற்றும் பொருட்டு, புரட்சி வீரர்கள் இறந்த பின் அவர்களை பூஜிக்கத்தக்க விக்கிரகங்களாக்கி, அவர்கள் பெயரிலேயே புனிப்படுத்தப்படும் கருத்து திரிபுவாதகளை முன்னெடுக்கின்றனர். இதன் மூலம் புரட்சிகரமான சித்தாந்தங்களின் உண்மையான கொள்கைகளின் கூர்முனையை மழுங்கடித்து, ஆண்மையை அழித்து கொச்சைப்படுத்துகின்றனர். நிகழ்காலத்தில் மார்க்ஸியத்தை களங்கப்படுத்தி இழிவுபடுத்தும் வேலையில் பூர்ஷீவா வர்க்கமும், தொழிலாளி இயக்கத்திலுள்ள சந்தர்ப்பவாதிகளும் சேர்ந்து முனைந்திருக்கின்றனர். மார்க்ஸிஸ்ட் போதனைகளின் புரட்சிகரமான அம்சத்தையும், புரட்சிகரமான ஜீவனையும் போலிகள் புறக்கணிக்கின்றனர், திரித்துவிடுகின்றனர். பூர்ஷீவா வர்க்கம் ஒப்புக்கொள்ளக் கூடியதாய் இருப்பதை அல்லது ஒப்புக்கொள்ளக் கூடியதாய் தோன்றுவதை அவர்கள் முன்னணிக்கு கொண்டு வந்து போற்றிப் புகழ்கின்றனர். பின்புறமோ அவர்களுக்கு குழிபறிக்கின்றனர்." இப்படி போலிகள் பற்றி கூறுகின்றார் லெனின். இந்தப் போலியான புரட்டுப் பேர்வழிகள், திடீர் இடதுசாரிய வாய்ப்பந்தல் அரசியல்வாதிகளின் குழிபறிப்பு அரசியல் இரகசியமானது சதித்தனமானது.
கடந்த காலத்தில் சீரழிந்த கம்யூனிசக் கட்சிகள், திரிபுவாத்தை முன்னெடுத்த சர்வதேச கம்யூனிச போக்குகள், மார்க்சியத்தின் பெயரில் மூடிமறைத்த சந்தர்ப்பவாதம் மூலம் புரட்சிகர அரசியலைச் சிதைத்தது. மார்க்சியத்தையும், புரட்சிகர நடைமுறை அரசியலையும் பயன்படுத்திக் கொண்டுதான், அனைத்து எதிர்ப்புரட்சியும் மார்க்சியத்தை குழிதோண்டி புதைத்தது. புலிக்கு பிந்தைய திடீர் இடதுசாரிகள், புலி இருந்த காலத்தில் என்ன அரசியலைச் செய்தனர், என்ன பிழைப்பை நடத்தினர் என்பதைத் தோண்டினால், அவர்கள் எப்படிப்பட்ட மோசடிப் பேர்வழிகள் என்பது வெளிப்படையானது.
புலிகள் கால தங்கள் வாழ்வியல் மற்றும் அரசியல் உள்ளடக்கத்தில் சொந்த மக்கள் மத்தியில் எதிர்ப்புரட்சி அரசியலை முன்தள்ளி, அதை புரட்சிகர அரசியலாக காட்டி மோசடி செய்யமுடியாது போனவர்கள், இன்று பிறநாட்டு புரட்சியாளர்களை பிற மொழி புரட்சியாளர்களையும் ஏமாற்றி மோசடி செய்யத் தொடங்கியுள்ளனர்.
இது புலிக்கு பிந்தைய திடீர் இடதுசாரிய பிரமுகர்களின் எதிர்ப்புரட்சி அரசியல் வெளிப்பாடுகளில் மற்றொரு அரசியல் முகமாகும். மூடிமறைத்த இந்த எதிர்ப்புரட்சி சந்தர்ப்பவாத அரசியலை, சர்வதேசரீதியாக அம்பலப்படுத்தி, எமது புரட்சிகர அரசியலை பாதுகாக்க வேண்டிய போராட்டமும் ஒருங்கே நடத்தவேண்டியுள்ளது. இந்த எதிர்ப்புரட்சி அரசியலை முறியடிக்கும் போராட்டமும், இலங்கை புரட்சியாளர்களுக்கு மேலதிகமான வரலாற்றுச் சுமையாக மாறியிருக்கின்றது.
பி.இரயாகரன்
01.01.2012