Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

மக்கள் கூடித் தங்கள் மகிழ்வை வெளிப்படுத்தும் நிகழ்வுகள் தான் கொண்டாட்டங்கள். ஆனால் இன்று கொண்டாட்டங்கள் என்பது, நுகர்வை மையப்படுத்தியதாக சீரழிந்து விட்டது. சுயநலம் கொண்ட தனிமனித வக்கிரங்களே மகிழ்ச்சியாக வெளிப்படுத்தப்படுகின்றது. சமூகம் தான் ஒன்றாகக் கூடி வெளிப்படுத்திய சமூக உணர்வுகள் தான் கொண்டாட்டம் என்ற உணர்வை, இன்று இது மறுதலிக்கின்றது. மனித ஏற்றத்தாழ்வுகளைக் கடந்து, கூடிப் பகிர்ந்து உண்டு வெளிப்படுத்திய கொண்டாட்டங்கள், ஏற்றத்தாழ்வை வெளிப்படுத்தி அதில் பெருமை கொள்ளும் தனிமனித நுகர்வு வக்கிரமாக குறுகி சீரழிந்து விட்டது.

 

இந்த வகையில் மீண்டும் ஒரு புத்தாண்டுக் கொண்டாட்டம். ஆம் காலச்சக்கரம் மீண்டும் ஒரு புத்தாண்டுக்குள் எம்மை அழைத்துச் செல்லுகின்றது. ஆனால் மக்களைச் சுரண்டித் தின்னும் கூட்டத்துக்கே உரிய புத்தாண்டாகின்றது. இந்தப் புத்தாண்டின் பெயரில் நுகர்வுக் கலாச்சார வெறியும், மனிதப் பண்பற்ற தனிமனித வக்கிரமும் திணிக்கப்பட்டு இதை வெளிப்படுத்துவதே புத்தாண்டாகின்றது. இதுதான் மகிழ்ச்சி என்று கற்பிக்கப்படுகின்றது. தின்பதும், குடிப்பதும், களிகொண்டு வக்கிரமாக தம்மை வெளிபடுத்துவதும் தான், புத்தாண்டாக மாற்றப்பட்டு இருக்கின்றது. ஆம் அனைத்துக் கொண்டாட்டங்களும், இன்று நுகர்வுச் சந்தையை மையப்படுத்தியதாக மாற்றி அமைக்கப்பட்டுவிட்டது. இப்படி நுகர்வை மையப்படுத்திய புத்தாண்டு என்பது, மனிதனை மனிதன் ஒடுக்கி அவனை அடிமை கொண்டு இயங்குகின்றது. பணத்தையும், பொருளையும் மையப்படுத்தி, அதைக் கொண்டு களியாட்டமாக மிதப்பதே புத்தாண்டின் ஆன்மாவாகி விட்டது. மனிதப் பண்புகள், அதனடிப்படையிலான சமூகப் பண்புகளைத் துறந்து நிற்றலே கொண்டாட்டம் என்ற அற்ப மனவுணர்வுக்குள் சீரழிக்கப்பட்டு கொண்டாடப்படுகின்றது.

ஒடுக்கப்பட்ட மக்களுக்கோ, வாழ்விழந்த மக்களுக்கோ, வாழ்வுக்கான போராட்டம் தான் புத்தாண்டாகின்றது. மனிதர்களை அடக்கியும், அவர்கள் அடிமையாக அடங்கியும் வாழும் இந்த உலகில், மனிதகுலம் புத்தாண்டு மூலம் புத்துணர்ச்சி பெறுகின்றது. தான் சந்திக்கும் வாழ்வியல் நெருக்கடிகளுக்கு தனித்தனியாக தீர்வைப் பெறமுடியும் என்ற சுயநம்பிக்கையுடன் தான், புத்தாண்டைக் கொண்டாடுகின்றனர். அன்றாவது நாமும் மகிழ்ச்சியாகவும், திருப்தியாகவும் இருப்பதன் மூலம், வருடம் முழுக்க வாழ்ந்துவிட முடியும் என்ற குருட்டு நம்பிக்கையுடன் தான், ஒடுக்கப்பட்ட மக்கள் புத்தாண்டை புத்துணர்ச்சியுடன் கொண்டாடுகின்றனர்.

 

நுகர்வு சார்ந்த பண்பாட்டிலான இந்த ஒரு நாள் “மகிழ்ச்சியை”, வாழ்நாள் “மகிழ்ச்சியாக்க”  முனைகின்றான். இந்த ஒரு நாள் மகிழ்ச்சியையும், அவனின் உணர்வையும் சந்தையாக்கி அவனின் உணர்வையே கொள்ளையடிக்கின்றது மூலதனம். இதற்குள் மனிதனை அடிமைப்படுத்துகின்றது.  நுகர்வுப் பொருட்கள் மனித உணர்வை தீர்மானிக்க, மனித உணர்வுகள் பொருட்கள் சார்ந்ததாக வடிகின்றது. இப்படி எதிர்கால மகிழ்ச்சி என்பது, பொருளாக வடிய வைக்கப்படுகின்றது.

குடும்பம் என்ற சமூக எச்சம், இன்று பொருள் சார்ந்த சந்தை சார்ந்த ஒன்றாகி விட்டது. பொருட்களை கொடுப்பது மட்டும் தான், மனித உறவாகின்றது. “காதல்”, “பாசம்”, “அன்பு”, “கடமை”,  “உணர்வு” என்று எல்லாம், பொருட்களைக் கொடுப்பதைக் கொண்டு தான் வெளிப்படுகின்றது.  இந்த எல்லைக்குள் தான் புத்தாண்டும்.

இப்படி மகிழ்ச்சியாக காட்டும் புத்தாண்டின் முன்னும் பின்னும், உழைப்பின் மேலான சுரண்டல் என்பது ஒரு கணம் கூட நின்று விடுவதில்லை. இனவொடுக்குமுறை, நிறவொடுக்குமுறை, சாதி ஒடுக்குமுறை, பால் ஒடுக்குமுறை, பிரதேச ஒடுக்குமுறை, மத ஒடுக்குமுறை….. என அனைத்தும் புத்தாண்டில் இல்லாமல் போய் விடுவதில்லை. இப்படி அனைத்தும், மனித வாழ்வின் மேலான எதார்த்தத்தில் மீளமீள பிரதிபலிக்கின்றது. மகிழ்ச்சியாக நம்பிக் கொண்டாடும் புத்தாண்டின் பின், இவை என்னவோ மறைந்து விடுவதில்லை, குறைந்தபட்சம் அதை மறக்க முனைகின்றனர் அவ்வளவுதான்.

எதார்த்தம் சார்ந்த வாழ்க்கை என்னவோ இதுதான். மனித அடிமைத்தனத்தை மனிதன் மேல் திணிப்பவனின் புத்தாண்டு தான் இது. இதுவே மீண்டும் மீண்டும் புத்தாண்டாகின்றது. இதைத் தான் மூலதனம், தனது புத்தாண்டுப் பரிசாகத் மனிதனுக்கு தருகின்றது. முடிந்து போன ஆண்டில் மக்கள் தமக்கான போராட்டங்களில் தோற்றுப்போனார்கள்.

யுத்தத்திற்கு பிந்தைய இலங்கையில் தமிழ் மக்கள் திறந்த வெளிச் சிறையில், எந்த நம்பிக்கையுமற்ற நிலையில் வாழ்விழந்து கிடக்கின்றனர். முழு இலங்கையுமே இராணுவமயமாகி வருகின்றது. அடக்குமுறையும், அடிமைத்தனமும் தான் இலங்கை மக்களின் புத்தாண்டு வாழ்வாகின்றது.

மத்திய கிழக்கில் மக்கள் நடத்திய போராட்டங்கள், மீண்டும் ஏகாதிபத்திய பொம்மை ஆட்சியாக மாறியிருக்கின்றது. அதேபோல் தன் கூலிப்படையைக் கொண்டும், வான் வழி ஆக்கிரமிப்பு மூலமும், தனக்கேற்ற ஆட்சி மாற்றத்தை நடத்தி இருக்கின்றது.

திவாலாகிப் போன கிரிஸ் பொருளாதாரம் முதல், சர்வதேசப் பொருளாதார நெருக்கடி வரை மக்களுக்கு எதிரான ஒன்றாக, மக்களிடம் பிடுங்கி கடன்காரனுக்கு கொடுப்பதன் மூலம் நெருக்கடிக்கான தீர்வைக் காண முனைகின்றது. இதனால் மக்கள் தம் உரிமைகள் பலவற்றை இழந்திருக்கின்றனர், இழந்து வருகின்றனர்.

இப்படி உலகமயமாதல் மூலம் உற்பத்தில் ஈடுபடாது நிதி மூலதனம் கொழுக்கின்றது. ஒவ்வொரு நாட்டு வரவு செலவிலும் முதன்மையான ஒதுக்கீட்டை தனதாக்கி குவிக்கின்றது. மக்களின் வரிப்பணத்தில் இருந்து நிதிமூலதனத்துக்கு கொடுப்பது, உலக பொது நெருக்கடியாகின்றது. தங்கள் நெருக்கடியை மக்கள் மேல் திணிக்கின்றது மூலதனம். முடிந்து போன ஆண்டு மட்டுமல்ல, வரப்போகும் ஆண்டையும் கூட, மக்களின் வாழ்வை சுரண்டிக் குவிக்கும் புத்தாண்டாகவே நிதி மூலதனம் மாற்றி இருக்கின்றது.

வால் ஸ்டிரீட் முதல் ருசியா வரை நடக்கும் மக்கள் போராட்டங்கள், ஒரு எல்லையைத் தாண்ட முடியாது முடங்கி விடுகின்றது.

இப்படி உலகெங்கும் மக்கள் போராடுகின்றனர். வாழ்வுக்கான நம்பிக்கையுடன் புத்தாண்டை எதிர்கொள்கின்றனர். ஆனால் ஒரு எல்லையைத் தாண்டி முன்னேற முடிவதில்லை. மாற்றங்கள் பழையபடி ஒரு பொம்மை ஆட்சி தான். பாராளுமன்றம் போன்று வீதிப்போராட்டங்களும் இதில் தான் முடிகின்றது. இந்தப் பொம்மை மாற்றங்கள் மேல் மக்கள் நம்பிக்கையை இழந்து வருகின்றனர்.ஜனநாயகம் மீதான பிரமைகளைக் கடந்து மக்கள் சிந்திக்கின்றனர். ஆம் இது உலகெங்கும் பிரதிபலிக்கின்றது. அது வர்க்கப்போராட்டத்தை நோக்கிய ஒன்றாக, அதை மையப்படுத்திய அணித்திரள்வாக பிரதிபலிக்கின்றது. மீண்டும் கம்யூனிசம் என்று ஏகாதிபத்தியம் அலறுகின்றது. இந்த அச்சத்துடன் மூலதனம் இந்தப் புத்தாண்டில் காலடி எடுத்து வைக்கின்றது. தமக்கு எதிரான மூலதனத்தை வீழ்த்தும் போராட்டமே, மக்களின் புத்தாண்டாகின்றது. ஜனநாயகத்தின் மேலான பிரமையைக் கடந்து, நுகர்வுச் சந்தையைக் கடந்து, போராடும் மக்களுடன் எம்மை இணைத்துக் கொள்வதே எமது புத்தாண்டு உறுதி மொழியாகட்டும். எமக்காக நாம் போராடுவதே எமது உணர்வாகட்டும்.

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
01.01.2012