05312023பு
Last updateபு, 02 மார் 2022 7pm

வீரவணக்கம், தோழர் மாசானம்!

தேனி மாவட்டம், போடியில் இயங்கிவரும் விவசாயிகள் விடுதலை முன்னணியின் மூத்த தோழர்களில் ஒருவரும், கடந்த 20 ஆண்டுகளாக வி.வி.மு.வின் அடையாளமாகத் திகழ்ந்தவரும், புதிய ஜனநாயம் இதழின் தொடக்க கால முகவருமான தோழர் மாசானம், இதய நோயினால் பாதிக்கப்பட்டு கடந்த 27.7.2011 அன்று  தனது  51வது வயதில் மரண மடைந்து விட்டார்.

 

 

நக்சல்பாரி புரட்சிகர அமைப்புகளின் சார்பாக, போடியில் நடைபெற்ற அனைத்து போராட்டங்களிலும், குறிப்பாக, போடியின் ராணிப்பண்ணை ஜமீன்தாரை எதிர்த்த குத்தகை விவசாயிகளின் போராட்டத்திலும் வர்க்க உணர்வோடும் நெஞ்சுறுதியோடும் களத்தில் நின்று போராடியவர்  தோழர் மாசானம்.  தனது குடும்பம் வறுமையில் உழன்ற போதிலும், இப்பகுதிவாழ் உழைக்கும் மக்களின் எந்தவொரு பிரச்சினைக்கும் ஓடோடிச் சென்று உதவும் உயர்ந்த பண்பாளராக அவர் இருந்தார். தளராமல் புரட்சிப் பணி யாற்றிய தோழரை நோயும் இறப்புமே ஓய்வுக் கொள்ளச்செய்தது.

தோழரின் மறைவையொட்டி அவரது இல்லத்தில் நடைபெற்ற இரங்கற்கூட்டத்திலும், அதன் பின்னர் நடைபெற்ற இறுதி ஊர்வலத்திலும் தோழர் மாசானத்துக்குச் சிவப்பஞ்சலி செலுத்திய தோழர்களும் நண்பர்களும், அவரது உயர்ந்த கம்யூனிசப் பண்புகளையும் வர்க்கப் போராட்ட உறுதியையும் நேர்மையையும் பின்பற்றி புரட்சிப் பாதையில் தொடர்ந்து முன்னேற உறுதியேற்றனர். தோழர் மாசானத்துக்கு எமது வீரவணக்கம்!

விவசாயிகள் விடுதலை முன்னணி,

போடி.